, தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com
மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல் வேண்டும். தொழிலின் மூலம் உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கை உயரும். வாழ்வாதாரத்திற்காக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து வருகின்றனர். சீவகசிந்தாமணிக் காப்பியமானது கட்டடத் தொழில், நகைத் தொழில்,தச்சுத் தொழில், வேட்டையாடுதல், மருத்துவம், ஆநிரை காத்தல் ஆகிய தொழில்களைப் பற்றி குறிப்பிடுகின்றது.
கட்டடத்தொழில்
கட்டடங் கட்டுபவர் ஒன்று கூடி கட்டடங்களைக் கட்டினர். பதினாறாயிரம் கட்டடத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மண்டபத்தைக் கட்டியதாகச் சிந்தாமணி குறிப்பிடுகின்றது(591). மண்டபம் பட்டுவதற்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது(590). அடிக்கல் நாட்டுதல் எனும் பணியை நல்லநாள் பார்த்துச் செய்தனர்(590). உத்திரட்டாதி நாளும் சிம்மராசுயுடன் கூடிய உதய நாழிகையையும் கட்டடம் கட்டுவதற்குரிய சிறந்த நாளாக மக்கள் கருதினர்(590).
நல்ல நாளையும் நட்சத்திரத்தையும் கணிதத்தில் தேர்ச்சி பெற்ற நிமித்திகனைக் கொண்டு குறித்துக் கொண்டு அந்நாளில் கட்டடத்தைக் கட்டினர்(590). அடிக்கல் நாட்டிய பின்னர் கண்டக்குந்தாலி என்ற கருவியால் நிலத்தைத் தோண்டினர்(592). தோண்டிய நிலத்தில் எட்டுத் திசைகளிலும் இருந்து மக்கள் பார்க்கும் வகையில் கட்டடத்தை உயர்த்திக் கட்டினர்(592). கட்டடத்தைத் தகுந்தளவு உயர்த்திப் பொன்னை உருக்கி ஊற்றி அழகு செய்தனர்(593). பளிங்குக் கற்களைக் கொண்டு சுவர்களை அமைத்தனர்(593). அதில் மான், யானை ஆகிய விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டன(596). அவை உட்புறம் தீட்டப்படடதா வெளிப்புறம் தீட்டப்பட்டதா என்பதை அறியமுடியாத அளவிற்குத் தொழில் நுட்பத்துடன் விளங்கின(596). மேலும் அதன்மீது தூண்களை நட்டுப் பவள உத்திரத்தைப் பொருத்தி பளிங்குக் கழிகளைப் பரப்பினர். அதன் பின்னர் கழிகளின் மீது வெள்ளித் தகட்டைக் கூரையாக வேய்ந்து கூரையின் ஓரங்களை முத்துமாலை, பூமாலை, பொன்மாலை, மாணிக்க மாலை முதலியவற்றைக் கொண்டு அழகுபடுத்தினர்(593, 594). அதன்பின்னர் மண்டபத்தின் மீது அழகிய கொடிகளைப் பறக்கவிட்டனர்(597).
மண்டபத்தின் முன்னர் ஆற்றுமணலைக் கொண்டு நிரப்பினர்(595). மண்டபத்திற்குச் செல்லும் வழியைப் பொன்னை உருக்கி ஒரு விரலளவு பருமன் கொண்டதாகச் செய்தனர்(616). அதன்மீது வெள்ளைத் துணியை விரித்து ஒரு முழம் அளவிற்கு அனிச்ச மலர்களைப் பரப்பி(617) மண்டபத்தைக் கட்டினர்.
மாடங்கள், மண்டபங்கள், கன்னி மாடங்கள், கடைவீதிகள், மதகுகள் ஆகியவற்றையும் கட்டடத் தொழிலாளர்கள் கட்டினர். அரண்மனை அமைப்பதில் வலிமை கொண்ட தொழிலாளர்கள் மதில்கள், சுருங்கை(சுரங்கம்) வழிகள், அந்தப்புரங்கள், அரண்மனைகள், கோயில்கள் ஆகியவற்றை வலிமை வாய்ந்ததாகவும் அழகோடும் கட்டினர். கட்டடத் தொழிலாளர்கள் நட்டடக்கலை நூல்களைப் படித்தவர்களாக விளங்கினர்(558,1999). கட்டடங்கள் அனைத்தும் நூல் பிடித்தது போன்று ஒரே நேர்கோட்டில் அமைக்கப்பட்டன(1999).
கட்டடத் தொழிலாளர்களுக்குப் பட்டுத்துகிலும், பருத்தியாடையும் வழங்கப்பட்டன. தொழிலுக்குரிய ஊதியமாக அவர்களுக்குப் பொன்னும் பழங்காசுகளும் வழங்கப்பட்டன(591). அவர்கள் நாள்தோறும் உண்ணுவதற்குச் சுவையாகச் சமைத்த பால்சோறும் பருகுவதற்குத் தேனும் கள்ளும் வழங்கப்பட்டன(591,592) என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது.
நகை செய்யும் தொழில்
தங்கம் போன்ற உலோகங்களை உருக்கி நகைகளையும் படைக்கலன்களையும் செய்பவர்களைக் கொல்லர்கள் என்று அழைத்தனர். சீவகசிந்தாமணியில் கொல்லர்களின் தொழில், தொழில் நுட்பம் குறித்து நேரடியாகச் செய்திகள் இடம்பெறவில்லை. மாறாக அவர்கள் தயாரித்த அணிகலன்களைப் பற்றியும் படைக்கலன்களின் வடிவத்தைப் பற்றியும் பல பாடல்களில் திருத்தக்கதேவர் குறிப்பிட்டுச் செல்கிறார். இவற்றிலிருந்து பொற்கொல்லர்களின் தொழில் திறனையும் தொழில் நுட்பத்தையும் அறிந்து கொள்ளலாம்.
பொன்னை உருக்கி கலன்களையும் அணிகலன்களையும் செய்யக்கூடிய பொற்கொல்லர்கள் போர்க்களத்தில் பயன்படும் உடைவாளையும் (2321)தேரினையும் செய்தனர்(809). பொன்னால் மோதிரம், கழல்கள் ஆகிய அணிகலன்களும் செய்யப்பட்டன(833,881,926,983,1021,2167). பொற்கழல்களில் மணிகளை நிறைத்து அதனை ஒலிக்கும் தன்மையுடையதாகச் செய்தனர்(765). பெண்கள் மார்பில் அணிவதற்கு ஏற்ற வகையில் பூண் எனும் அணிகலன் செய்யப்பட்டது(724).
பொன்னால் செய்யப்பட்டதும் கால்களில் அணியக்கூடியதுமாகிய கிண்கிணி எனும் அணிகலன் பற்றியும் சிந்தாமணியில் குறிப்பிடுகிறது(637). முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கும் வீட்டின் கூரைகளுக்கும் பொன்னாலாகிய தகடுகளை வேண்ந்தனர்(629). கால்களில் அணியும் பரியகம் எனும் அணிகலன்கள் பொன்னால் செய்யப்பட்டன(2694). மகரமீனின் வடிவத்தில் உள்ள தொடைகளை இறுக்கிப் பிடிக்கும் குறங்குசெறி எனும் தொடை அணிகலன்களும் பொற்கொல்லர்களால் செய்யப்பட்டது(2445) என்பது குறிப்பிடத்தக்கது.
மகர மணிகளை வரிசையாகப் பதித்துச் செய்யப்பட்ட மகரகண்டிகை எனும் அணிகலன் சிறப்பாகச் செய்யப்பட்டது(2438). இவை மாவிலைத் தோரணத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது. பொன்னாலான மோதிரத்தில் பெயர் பொறிக்கும் கலையையும் பொற்கொல்லர்கள் அறிந்திருந்தனர். ஏனாதி என்ற பெரும் பதிவ்ககரிய சிறப்பு வாய்ந்த மோதிரங்களைச் செய்தனர்(112,1021,1040,2167). வளையல்கள், நெற்றிப் பட்டம், மேகலை, கடகம், பொன்வட்டம், சிற்றால வட்டம், தலைமுடியைக் கட்டும் தங்கக் கயிறு, ஊஞ்சல் கயிறு, தட்டு, தாமரை மலர்கள், பொன் மாலை, பகடைக்காய்கள், சூளாமணி பலகை, பேழை, வெற்றிலைப் பெட்டி, பாம்புரிகள், தூண்கள் ஆகியவையும் பொன்னைக் கொண்டு செய்யப்பட்டன(548, 787,839,880,910,927,977,1007,1010,1027,1085,1300,1299,1303,1444,1452,1486,2731)என்பதை சிந்தாமணி குறிப்பிடுகின்றது. பொன்னைப் பேன்றே வெள்ளியையும் உருக்கித் தட்டு, அடுப்பு, கள்குடங்கள் முதலியவற்றைச் செய்யப் பொற்கொல்லர்கள் கற்றிருந்தனர்(937,3035).
பொன், வெள்ளியைப் போன்றே இரும்பையும் உருக்கிப் பல கருவிகள் செய்யப்பட்டன. இவையனைத்தும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளாக விளங்கின. ஈட்டி எனும் போர்க்கருவி இலைவடிவம் பொண்டதாக விளங்கியது. வேல், சூலம், வில், அம்பு, பிறை போன்ற அம்பு, குந்தளம், முள்தண்டு, பிண்டிபாளம், சக்கரம், வாள், உள்ளிட்ட பலவகையான போர்க்களக் கருவிகளும் கொல்லர்களால் செய்யப்பட்டன (698,1136,1504,2268,2269).
தச்சுத் தொழில்
மரத்தைக் கொண்டு பல பொருள்களைச் செய்யும் தொழிலைத் தச்சுத் தொழில் என்பர். பழங்காலத்தில் தச்சுத் தொழில் சிறப்பான நிலையை அடைந்திருந்தது. இதனை சிந்தாமணிக் காப்பியத்தின் தொடக்கத்திலேயே காணலாம். சச்சந்தன் தன் மனைவி கண்ட கனவில் பொருளை உணர்ந்து, ஊர்திகள் செய்வதில் மயன் எனும் தேவதச்சனுக்கு ஈடான தொழில் வல்ல சிறந்த தச்சனை வரவழைத்து எந்திர ஊர்தி ஒன்று செய்யுமாறு கூறினான். தச்சனும் சச்சந்தனின் உட்கருத்தைக் கேட்டறிந்து அதன்படி எந்திர ஊர்தி செய்து தருவதாக வாக்களித்தான்.
அவன் வாக்களித்தபடி பஞ்சு, துணிமரம், இரும்பு, அரக்கு, மெழுகு மற்றும் பல பொருள்களைக் கொண்டு ஏழு நாட்களில் எந்திரப் பொறி ஒன்றைச் செய்து முடித்தான். இதனை,
“பல்கிழி யும்பயிதுகி னூலொடு
நல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றன
அல்லன வும்மமைத் தாங்கெழு நாளிடைச்
செல்வதொர் மாமயில் செய்தன னன்றே” (236)
என்று திருத்தக்கதேவர் எடுத்துரைக்கின்றார்.
தச்சன் தான் செய்த மயில் பொறியில் ஏறி அமர்ந்து அதன் தலை மீதிருந்த திருகைத் திருகி வானில் பறக்கச் செய்தும் கீழிறங்கிக் கால் குவித்து மணிணில் நிற்கச் செய்தும் காட்டினான் என்பதிலிருந்து தச்சுத் தொழில் வானூர்தி செய்யும் அளவுக்கு உயர்ந்த நிலையில் இருந்ததை தெளியலாம். ஆனால் பறத்தல் தொழிலுக்குரியதைக் குறிப்பிடாமலிருப்பதால் இவ்வூர்தியினைக் கற்பனை என்றும் கருதுவதற்கு இடமுண்டு.
அரண்மனை, வீடு, கடைகள் ஆகியவற்றிற்குப் பாதுக்காப்பாக கதவுகளைத் தச்சர்கள் செய்தனர்(1504). அக்கதவுகளில் பவளத்தால் தாழ் அமைத்துப் பலவகையான மணிகளை அதில் பொருத்தினர். திருமணத்தில் மணமக்கள் தங்கும் அறை பவளப் பலகையால் அடைக்கப்பட்டது. கைமரங்களைக் கொண்டு அறைகளை உருவாக்கினர்(837). திருமண அறையின் விதானத்தைப் பட்டுத்துணியால் அமைத்தனர். மரங்களைப் பயன்படுத்தி மாட்டு வண்டிகள் செய்யப்பட்டன. அவ்வண்டிகளுக்குரிய குடத்துடன் ஆரக்கால்களைப் பொருந்தச் சேர்த்தனர்(1650). தேர், யாழ், பல்லக்கு, ஊஞ்சல், மரக்கலம் முதலிய பொருட்களை மரத்தின் உதவியோடு அழகுறத் தச்சர்கள் செய்தனர்(722, 858,863,928,975,922,1650).
வேட்டைத் தொழில்
மலையும் மலைசார்ந்த இடமாக விளங்கக் கூடிய குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் குறவர்கள், வேடர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இடுப்பில் மரவுரி அணிந்திருந்தனர். கால்களில் மான் தோலால் செய்த காலணிகளை அணிந்திருந்தனர்(1231). வாய்க்கு வெற்றிலை போட இயலாத வறுமையுள்ளவர்களாக விளங்கினர்(1230). இவர்கள் காட்டில் வாழும் உடும்பு முதலிய விலங்குகளை வேட்டையாடி வாழ்வதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர்(1233). கிழங்கு, தேன் ஆகிய உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்டனர்(1231). உயிரனங்களைக் கொல்லும் கொலைத் தொழில் வல்லவர்களாக அவர்கள் விளங்கினர்.
ஆயர்களின் ஆநிரைகளைக் களவு செய்வதில் வல்லவர்களாக வேடர்கள் விளங்கினர்(421). இத்தொழிலைச் செய்யத் தொடங்குவதற்கு நிமித்திகனிடம் குறி கேட்டனர். நிமித்திகன் கூறிய குறியைக் கேட்டு வேட்டைத் தொழிலைச் செய்தனர்(415). துத்தரிக் கொம்பு, சீழ்க்கை ஒலி எழுப்பி ஆநிரைகளைக் கவர்ந்தனர். அவ்வாறு கவர்ந்த ஆநிரைகளைச் சூழ்ந்துகொண்டு அவற்றைப் பாதுகாப்புடன் கொண்டு சேர்த்தனர்(423,447). ஆநிரை கவர்தல் தொழில் வெற்றியாக நிகழ்ந்ததை எண்ணித் தொண்டகப் பறையையும் துடியையும் முழக்கி மகிழ்ச்சியாக ஆடிக் களித்தனர். வெற்றியைத் தேடித் தந்த கொற்றவைக்கு விழா எடுத்து வழிபட்டனர்(418).
மருத்துவத் தொழில்
போர்க்களங்களிலும் செடி, கொடிகளில் வாழும் விடமுள்ள பாம்பு முதலியவற்றினாலும் ஏற்பட்ட துன்பங்களைப் போக்குவதற்குப் பலவிதமான மருத்துவ முறைகளை மக்கள் பயன்படுத்தினர். போர்க்களங்களில் வீரர்கள் விழுப்புண் அடைந்தபொழுது அப்புண்களுக்கு நெய்யை மருந்தாகத் தடவினர்(818). பாம்பு முதலிய விடமுள்ள உயிரினங்களால் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கக் கடிபட்டவரின் வயிறு, மார்பு முதலிய இடங்களில் விளக்கை ஏற்றி வைத்து கைகளிலும் கழுத்திலும் நச்சுமுறி வேர்களைக் கட்டினர். நாடித்துடிப்பினை ஆராய்ந்தும் கடிபட்டவருக்கு மருத்துவம் செய்தனர்(1278).
வாதமும் பித்தமும் சிலேத்துமத்தைவிட அதிகமாக இருந்தால் பாம்பு கடித்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும் என்று கருதினர்(1276). இவ்வலியைக் குறைக்கச் சிருங்கி எனும் மருந்தைக் கடிபட்ட இடத்தில் பூசினர்(1277). விடம் நீங்க அனைத்துத் திசைகளிலிருக்கும் தெய்வங்களை வணங்கி மந்திரம் கூறி வழிபட்டனர்(1278).
ஆநிரை காத்தல் தொழில்
ஆநிரைகளைப் பாதுகாக்கும் தொழிலை ஆயர்கள் மேற்கொண்டனர். இவர்கள் மன்னன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். இவர்கள் மன்னன் இறந்தான் என்ற செய்து கேட்டதும் குலத்தொடு மடிந்த குடியில் பிறந்தவர்கள் ஆவர்(477). ஆயர்களின் தலைவனான நந்தகோன், சச்சந்தன் இறந்ததும் வருந்தி மலையுச்சியில் ஏறிக் கால் இடறி விழுந்தது போல் வீழ்ந்து இறக்க முற்பட்டேன் என்று கூறுவதிலிருந்து இதனை உணரலாம்.
மன்னனின் குலத்தில் உதித்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று எண்ணியே இதுவரை உயிர் வாழ்ந்தேன் என்று கூறுவதிலிருந்து ஆயர்கள் மன்னனின் மீது வைத்திருந்த அன்பு தெளிவாகின்றது(476). மன்னனின் குலத்தில் வந்தவர்களே மீண்டும் மன்னனாக வரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டவர்களாக ஆயர்கள் விளங்கினர்.
ஆயர்கள் ஆநிரைகள் தரும் பால், பாலிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய், நெய் முதலிய பொருட்களை விற்றுத் தம் வாழ்க்கையை நடத்தினர்(488). இவ்வாயர்கள் மார்பில் முத்துமாலை முதலிய உயர்ந்த அணிகலன்களை அணிந்திருந்தனர்(419). ஆயர் குடி இளைஞர்கள் தங்கள் தோளில் வெள்ளியால் ஆன வளையத்தை அணிந்திருந்தனர்(420). இவர்கள் இடையில் வேய்குழலும் கோடரியும் வைத்திருந்தனர்(422). ஆயர்குல மகளிர் தங்கள் மார்பில் பொன்னணிகள் பலவற்றை அணிந்திருந்தனர்(419).
வேடர்கள் தங்கள் ஆநிரைகளைக் கவர்ந்தபொழு அவர்களை எதிர்த்து அழிக்க இயலாது மன்னனின் உதவியை நாட வேண்டியவர்களா அவர்கள் இருந்தனர்(422). மன்னனிடம் அழுதும், வயிற்றில் அடித்துக் கொண்டும் தங்கள் ஆநிரைகள் கவரப்பட்ட செய்தியை ஆயர்கள் முறையிட்டனர்(424). மன்னனும் தம் படைகளை ஆயர்களின் ஆநிரைனளை மீட்டுத்தருவதற்காக அனுப்பினான்(432).
மன்னனின் படைவீரர்கள் வேடர்களிடம் தோல்வியடைந்தனர்(435). இதைக்கண்ட நந்தகோன் தன் மகளான கோவிந்தையைப் பந்தயப் பொருளாக்கி நாட்டு மக்களை நோக்கித் தங்கள் ஆநிரைகளை மீட்டுத் தருமாறு வேண்டினான்(440). ஆநிரைகளை மீட்டுத் தருபவர்களுக்குத் தம் மகளோடு இரண்டாயிரம் பசுக்களையும், பொன்னால் செய்த ஏழு பொற்பதுமைகளையும் வேண்டிய அளவு செவண்ணெய், நெய் முதலிய பொருள்களையும் தருவேன் என்று அறிவிக்கிறான். நந்தகோன் கூறியது போல் ஆநிரைகளை மீட்ட சீவகனுக்கு இவற்றைத் தருவதற்கு முன்வந்தபோது(490), சீவகன் குல வேற்றுமை கருதி மறுக்கின்றான். அப்போது நந்தகோன் அவனை ஏற்றுக் கொள்ளச் செய்யும்பொருட்டு முருகன் வள்ளியை மணந்த வரலாற்றையும் திருமால் நப்பின்னையை மணந்த வரலாற்றையும்,
“குலநினையல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி
நலனுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன்
நிலமகட்குக் கேள்வனு நிணிரைநப் பின்னை
இலவலர்வா யின்னமிர்தம் மெய்தனா னன்றே” (482).
என்று எடுத்துரைக்கின்றான். இப்பகுதியிலிருந்து ஆயர்களின் இயல்பினையும் அவர்தம் உயர் வாழ்க்கையினையும் செல்வ வளத்தினையும் அறியலாம்.
பிற தொழில்கள்
மட்பாண்டங்கள் செய்தல், முடிதிருத்துதல், அரசருக்குக் குற்றேவல் செய்தல், வெண்சாமரம் வீசுதல், காவலிருத்தல், முரசறைதல் முதலிய பல்வேறு தொழில்களை மக்கள் பழங்காலத்தில் செய்துவந்தனர். இத்தொழில்களைச் செய்தவர்களில் நாவிதர்கள் நூல்களைக் கற்றவர்களாகவும், முடிதிருத்தும் கருவியாகிய கத்தி உடலில் தொடுவது தெரியாத வகையில் மயிர்நீக்கம் செய்வதில் வல்லவராகவும் விளங்கினர்(2492, 2497).
உழவுத் தொழில் முதன்மையானதாக விளங்கியதை சிந்தாமணி சறிப்புற எடுத்துரைக்கின்றது. அனைவரும் உழவுத் தொழிலைச் செய்து வந்தனர் என்பது நோக்கத்தக்கது. மருத்துவத்தொழில், கட்டடக்கலைத் தொழில் செய்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதனால் இத்தொழில்களை அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களும் செய்தனர் என்பது தெளிவாகின்றது. வாணிகம், ஆநிரை காத்தல், அணிகலன்கள் செய்தல், மட்பாண்டங்கள் செய்தல், முடி திருத்துதல் முதலிய தொழில்களை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே செய்துவந்தனர் என்பது சிந்தமாணிக்காப்பியத்தால் தெளிவுறுத்தப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.
பல்வேறு தொழில்களை மக்கள் செய்தாலும் அவர்களிடையே உயர்வு தாழ்வி நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் சமுதாய நலன் கருதும் உன்னதமானவர்களாக விளங்கினர். வேடர்கள் மட்டும் சுயநலத்தோடு செயல்பட்டுப் பிற உயிர்களுக்குக் கேடுவிளைவித்ததை அறியமுடிகின்றது. (தொடரும்…………..14)
- நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு
- குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3
- சுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்
- எதுவும் வேண்டாம் சும்மா இரு
- திண்ணை வாசகர்களுக்கு
- கவி நுகர் பொழுது – சொர்ணபாரதி
- கவி நுகர் பொழுது- உமா மோகன்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்
- திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்
- சூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.
- காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு
- சாகும் ஆசை….
- காப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்
- தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை
- எல்லாம் நுகர்வுமயம்
- உற்றுக்கேள்
- எனக்குப் பிடித்த சிறுகதைகள்
- பரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.
- கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்
- சூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்
- ஆண் மரம்
- இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி