(சர் லட்சுமணசாமி முதலியார்)
மருத்துவப் படிப்பில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில், பொது மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய பாடங்களுடன் இன்னொரு முக்கிய பாடம் மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும் ( Obstetrics and Gynaecology ). இதை சுருக்கமாக O & G என்போம். இதையும் இரண்டு வருடங்கள் படித்தாகவேண்டும். இதுவும் பொது மருத்துவம், அறுவை மருத்துவம் போன்று மூன்று பிரிவுகளில் இயங்கியது. எனக்கு மூன்றாம் பிரிவு ( ஓ ஜி 3 ) கிடைத்தது. இந்தப் பிரிவில் நாங்கள் பத்து பேர்கள் சேர்ந்தோம்.
இதன் வார்டுகள் பிரசவ அறைகளின் மேல் மாடியில் உள்ளன. அலுவலகம் கீழே உள்ளது. அங்கு கலந்துரையாடல் அறையும் சேர்ந்திருந்தது. எங்கள் பிரிவின் தலைமை மருத்துவரின் பெயர் டாக்டர் குண்டர்ஸ். இவர் வேறு யாரும் இல்லை. நாங்கள் முதலாம் ஆண்டில் ஆங்கில வகுப்பில் தூங்கி வழிவோமே, அதன் ஆசிரியர் குண்டர்ஸ் அவர்களின் மனைவிதான். இவர் மங்களூரைச் சேர்ந்தவர். நல்ல சிவந்த நிறத்துடன் உயரமான பெண்மணி. குண்டர்ஸ் போன்று இவர் அவ்வளவு சாது இல்லை. மிகவும் கண்டிப்பானவர். அதனால் அவரைக் காணும்போது எனக்கு பயம் உண்டாகும். ஆனால் அவரோ என்னிடம் கடைசிவரை மிகுந்த அன்பு காட்டினார். அது எனக்கு இந்த வகுப்பில் உற்சாகம் தந்தது. எந்த வகுப்பிலும் அந்தந்த நாள் நடைபெறும் பாடங்களை இரவில் விடுதி அறையில் ஒருமுறை மீண்டும் படித்துவிட்டால் மறுநாள் வகுப்பில் அச்சம் இல்லாமல் நுழையலாம். காரணம் பாடத் துவக்கத்திலேயே முதல் நாள் பாடம் பற்றி கேள்விகள் கேட்பார்கள். அப்போது எழுந்து நின்று பதில் கூறவேண்டும். பதில் தெரியாவிடில் எழுந்து நின்று முழிக்கவேண்டும்.! அதைக் காணும் வகுப்புப் பெண்கள் கேலி செய்வார்கள்.
இந்தப் பிரிவில் மகப்பேறு தனியாகவும், மகளிர் நோய் இயல் தனியாகவும் வகுப்புகள் நடந்தன. இதை வெவ்வேறு துணை விரிவுரையாளர்கள் நடத்தினர். இந்த இரண்டு பிரிவுகளும் கொஞ்சம் கடினமானவைதான். மிகுந்த கவனம் செலுத்தியாகவேண்டும். மகப்பேறு என்பது தாயின் உடல் நலத்துடன் அவருடைய கருப்பையில் வளரும் குழந்தையின் நலத்தையும் பேணுவதாகும். ஆகவே அது இரண்டு உயிர்கள் தொடர்புடையது. பிரசவத்தின்போது தாயின் நலனும் சேயின் நலனும் பாதுகாக்கப்படவேண்டும். கரு தரிப்பதும் குழந்தையைப் பெற்றெடுப்பதும் இயற்கையானதுதான். ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உண்டாகலாம். தமிழகத்தில் பல பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாவது இயல்பு. இவர்கள் கரு தரிக்கும்போது இவர்களும் வளரும் குழந்தையும் பாதிப்புக்கு உள்ளாகலாம். இதனால் அவர்களுக்கு இரத்தப் பரிசோதனைகளின்மூலம் இரத்த சோகை உள்ளதா என்று பார்த்து அவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகளுடன் ஃபோலிக் அமில மாத்திரையும் தொடர்ந்து தர வேண்டும். குறுகிய இடைவெளியில் குழந்தை பெறுவதாலும் தாயின் உடல் நலம் கெடலாம். சில பெண்களுக்கு தானாக கருச் சிதைவு உண்டாகலாம். இது போன்றவர்களுக்கு அதன் காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சைகள் தரவேண்டும்.
வகுப்பில் பாடங்கள் முடித்தபின்பு வார்டுகளிலும் நோயாளிகளைப் பார்ப்போம். வெளிநோயாளிகள் பிரிவிலும் கருவுற்ற பெண்களை பரிசோதனை செய்ய கற்றுக்கொள்வோம்.
மகப்பேறு இயல் பாடத்திற்கு நாங்கள் பயன்படுத்திய நூலை ” முதலியார் ” என்று அழைப்போம். அதை எழுதியவர் டாக்டர் லட்சுமணசாமி முதலியார். இவர் இந்தியாவின் தலைசிறந்த மகப்பேறு இயல் பேராசிரியராவார். உலக ரீதியிலும் புகழ்மிக்கவர்.
இவர் திவான் பகதூர் சர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் என்று அழைக்கப்பட்டவர். சர் ஆற்காடு ராமசாமி முதலியார் என்பவர் இவருடைய சகோதரர். இருவரும் இரட்டைப் பிள்ளைகள்.
சர் லட்சுமணசாமி முதலியார் FRCOG; FACS பட்டம் பெற்றவர். இவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1974 ஆகும். அக்கால கட்டத்தில் மருத்துவத்தில் இவை உயரிய பட்டங்களாகும். 1945 ஆம் வருடத்தில் அன்றைய பிரிட்டிஷ் அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கி கெளரவித்தது. சுதந்திர இந்திய அரசு இவருக்கு பத்ம புருஷன், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கியும் சிறப்பித்துள்ளது.
இவர் படித்த கல்லூரி தாம்பரம் சென்னை கிறித்துவக் கல்லூரி! அங்குதான் நானும் புகுமுக வகுப்பு பயின்றேன் என்பது எனக்கு பெருமையானது!
சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான இவர் பின்பு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 27 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.அதோடு 1949 முதல் 1950 வரை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்!
இவர் எழுதிய மகப்பேறு இயல் நோய் நூலை இந்தியாவின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பயப்படுத்தினார்கள். ஒரு தமிழர் எழுதிய அழகான ஆங்கில நூலைப் படிப்பதில் நான் பெருமை கொண்டேன். இவருடைய சிலை சென்னைப் பல்கலைக்கழக செனட் ஹவுஸ் முன் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது.
பிரசவ வார்டுகளில் எங்களுக்கு சில கருவுற்ற பெண்கள் தரப்படுவார்கள். அவர்கள் பிரசவத்துக்கு காத்திருப்பார்கள். நாங்கள் அவர்களிடம் பேசி அவர்களுடைய பிரசவ வரலாறு பற்றி கேட்டு பதிவு செய்து, அவர்களை மருத்துவர்கள் எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதையெல்லாம் குறிப்பெடுத்துக்கொள்வோம்.காலை
அடுத்த ஆண்டுதான் பிரசவ அறைக்குச் செல்வோம்.அப்போது பிரசவம் பார்ப்போம்.நாங்கள் ஒவ்வொருவரும் 20 பிரசவம் பார்க்க வேண்டும்.
மகளிர் நோய் இயல் வகுப்பில் கருப்பை தொடர்புடைய அனை த்து நோய்களையும் பயில்வோம். மாதவிலக்கு, அது தொடர்புடைய கோளாறுகள், கருப்பையில் உண்டாகும் ஃபைபிராய்ட் கட்டிகள், புற்று நோய்கள், சினைப்பை நோய்கள், கருப்பை வாயிலில் தோன்றும் நோய்கள், பாலியல் தொடர்புடைய நோய்கள் என்று அனைத்து நோய்கள் பற்றியும் நாங்கள் பயிலவேண்டும். மகளிர் பாலியல் நோய்களும் சிக்கலானவைதான்.
வெளிநோயாளிப் பிரிவிலும், வார்டுகளிலும் பெண்களை மருத்துவர் பரிசோதனை செய்யும்போது நாங்களும் உடனிருந்து பார்ப்போம்.மருத்துவப் படிப்பில் நூல்களைப் படிப்பதுடன் , இதுபோன்ற செயல்முறைப் பயிற்சி மிகவும் முக்கிமானது.
நான்காம் ஆண்டில் இதுபோன்ற முக்கிய பாடங்களில் கவனம் செலுத்த வேண்டியதால் மனதை வேறு காரியங்களில் செலுத்தமுடியவில்லை. நான் சிறுகதைகள் எழுதுவதும் குறைந்துபோனது. வார்டு அனுபவங்களை வைத்து ஓரிரு சிறுகதைகள் எழுதி தமிழ் நேசனுக்கு அனுப்பி வைத்தேன். அவை பிரசுரமானது. அப்பா அவற்றை எனக்கு தபாலில் அனுப்பி வைத்தார்.
ஒரு நாள் எதிர்பாராத வகையில் விடுதிக்கு என்னைத் தேடிக்கொண்டு எஸ்.ஏ. நாதன் வந்திருந்தார். அவர் சிங்கப்பூரில் வெளிவரும் சினிமா மாத இதழ் இந்தியன் மூவி நியூஸ் இதழின் வாசகர் சங்கத்தின் தலைவர். அவர் என்னுடைய நண்பன் ஜெயப்பிரகாசத்தின் அண்ணன். அவரைப் பார்த்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.அதோடு அவர் கொண்டுவந்த பொருள் அதைவிட மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. ஆம். அது ஒரு ” ஃபிலிப்ஸ் ” வானொலி! நான் கேட்காமலேயே அப்பா அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்! ஆச்சரியம்!
நாதன் என் அறையில் இரண்டு நாட்கள் தாங்கினார். வார இறுதியில் அவர் மெட்ராஸ் செல்லும்போது என்னையும் உடன் அழைத்தார். அங்கு அவர் விஜயா வாஹினி ஸ்டூடியோவில் படப்பிடிப்புப் பார்க்கச் செல்கிறாராம். நடிகர் இரவிச்சந்திரன் அவருக்கு படப்பிடிப்பின்போது நேரம் ஒதுக்கியுள்ளாராம். காதலிக்க நேரமில்லை, இதயக் கமலம் போன்ற படங்களில் நடித்துள்ள இரவிச்சந்திரன் அப்போது பிரபலமான காதாநாயனாகத் திகழ்ந்தார். அவரை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு அதிக உற்சாகத்தைத் தந்தது.
வெள்ளி மாலையில் நாங்கள் திருவள்ளுவர் துரித பேருந்து மூலம் மெட்ராஸ் புறப்பட்டோம். அங்கு ஹோட்டலில் தங்குவோம். காலையில் ஸ்டூடியோ செல்வோம்!
( தொடுவானம் தொடரும் )
- தொடுவானம் 132. மகப்பேறு இயலும் மகளிர் நோய் இயலும்
- பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு
- ‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு
- அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016
- ‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து
- கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி
- காணாமல் போன கவிதை
- காப்பியக் காட்சிகள் 16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்
- பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்
- “என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”
- கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி
- ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
- ஒரு சிற்றிதழ் அனுபவம் : கனவு 30
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7