தமிழ்மணவாளன் கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 13 நவம்பர் 2016

30-1

1
துயரத்தையப் பறவையின்
காலில் கட்டிப் பறக்க விட்டேன்
கண் மறையும் தூரம் கடந்தவுடன்
ஆசுவாமாகிறேன் அனிச்சையாய்
எனக்குத் தெரியும் உயரப் பறக்கையில்
உதறிவிடும் அதை
துயரத்தைப் பறக்க விடக்கூடாதென
இப்போது தான் புரிகிறது
நம் காலடியில் புதைத்து விட வேண்டும்
பறவை சுமந்து போய் போட்ட இடத்தில்
நாகவிருட்சமாகி
கண்காணா இடமிருந்து காவு கேட்கிறது
யாவற்றையும்

2
நேற்றைய
திரைக்கதை கலந்துரையாடலில்
கம்பன் ஏனோ அதிகம் இருந்தான்
முடிந்த முன்னிரவில்
குளத்தூர் தாண்டி வேகமாய் வந்தபோது
மெல்லிய இருட்டில் இருந்து என் முன்னே
கையொன்று நீள

‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’

அய்யோ…. யாரது கம்பனா..?

கட்டுத் தறியே கவிபாடும்
கம்பன் பாட மாட்டானாவென
ஒற்றைக் காலில் நான் நிற்க
பக்கத்தில் வந்தபின்னும் பாடவில்லை …

கையில் சிறிய கறுப்புப் பெட்டி
அடடடா..
.ஹார்டு டிஸ்க்கிலேயே
கம்ப ராமாயணமா….?

அப்புறம்…

ஊது என்றதும் தான் கவனித்தேன்
கம்பன் காஸ்ட்யூம் வேறாக
இருந்ததை

3
கோவிலாம்பட்டு கிராமத்திலிருக்கும்
அவளைச் சந்திக்கும் வாய்ப்புள்ளதா?
எழும்பூரிலிருந்து தி.நகர் செல்லும் பேருந்தின்
மூன்றாம் இருக்கையில் அமர்ந்திருக்கும்
பயணியைச் சந்திப்பேனா?
வண்ணத்துப் பூச்சியின் சிறகில் கிறங்கிக் கிடக்கும்
மன ஓவியனோடு உரையாடுவேனா?
அர்ச்சனைத் தட்டோடு கண்மூடி நிற்க தரிசனம் தரும்
கடவுளுக்கு கைகுலுக்கி குசலம்
விசாரிக்கும் சாத்தியமுண்டா?
இப்படி இடையறாது விலகிப் போகும்
பட்டியலில் ஒன்று தானா
நாம் சந்திக்காமலிருப்பதும்..

4
திரையரங்கில்,
இடைவேளையின் போது
சினிமாவுக்காவெனக்
கேட்கும்
பொருளற்றதாய் இருக்கும்
உரையாடலை…
எத்தனைக் காலம்
நிகழ்த்துவது….

பொருளற்ற சொற்களில் தான்
அன்பு புதைந்து
கிடக்கிறதோ என்னவோ..?

Series Navigationதொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.A Lecture in Remembrance of MSS Pandian 10th November 2016
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *