தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு

This entry is part 15 of 22 in the series 4 டிசம்பர் 2016
 

நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.

தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது என்று வாழ்நாளைக் கழித்தவர்கள் எங்கள் முன்னோர்கள்.

இந்த நிலை எங்களுக்கு மட்டுமல்ல. சங்க காலத்திற்குப் பின் தமிழக கிராம மக்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்திருக்கவேண்டும். சொந்த நிலங்கள்  வைத்திருந்தவர்கள் அவற்றில் சாகுபடி செய்தனர். நிலம் இல்லாதவர்கள் அடுத்தவர் நிலங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தினர். தமிழ் நாட்டு கிராமங்களில் விவசாயம் சிறப்பாக இருந்துள்ளது என்பதற்கு வள்ளுவரின் உழவு அதிகாரம் சான்று பகர்கின்றது.அப்போதெல்லாம் வற்றாத ஜீவநதிகளும் மாறாத பருவ மழையும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அமைந்தன.
சங்க காலத்தில் தமிழ்க் கல்வியும்  சிறப்பாக இருந்திருக்கவேண்டும். அப்போது தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்டுள்ள சங்க இலக்கியங்களே இதற்குச் சான்று. ஆனான் அதன்பிறகு திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம்போல் தமிழ்ப் புலவர்களால் படைக்கமுடியவில்லை. தமிழகத்தைக் கைப்பற்றி ஆடசி நடத்திய பிற இனத்தவர்களின் இருண்ட  காலமாகவே அது இருந்துள்ளது. சங்க இலக்கியங்களும் ஓலைக் சுவடிகளில் ஆலயங்களிலும் தேவஸ்தானங்களிலும் முடங்கி தூசு படிந்து கிடந்துள்ளன.
பல நூற்றாண்டுகளாக விவசாயிகளையும்  உழைக்கும் மக்களையும் கொத்தடிமைகளாகவே வைத்திருந்துள்ளனர்  நாட்டை ஆண்ட அரசர்கள். அவர்களிடம் வரி வசூலித்து  தங்களுடைய கஜானாவை நிரப்பி ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர் சில மேட்டுக் குடியினர். இதில் சாதி வேற்றுமையும் பெரும் பங்கு ஆற்றியுள்ளது. இந்த சமுதாய ஏற்றத் தாழ்வால் பயனடைந்தவர்கள் அரசர்களும் அவர்களை ஆட்டிப்படைத்த பிராமண ராஜகுருக்களும்.  பிராமணர்கள்தான்  அரச சபைகளில் முக்கிய ஆலோசகர்களாகவும் ஆருடம் சொல்பவர்களாகவும் திகழ்ந்துள்ளார். அவர்கள் சமஸ்கிருதத்தை தமிழகத்தில் பரவ பெரும் பங்காற்றியுள்ளனர். சம்ஸ்கிருதம் தேவபாஷை , தமிழ் நீசபாஷை என்று கூறினார்கள் ஆரியக்குலப் பார்ப்பனர்கள். அவர்களின் தூண்டுதலின் பேரில் தமிழக மன்னர்கள் சமஸ்கிருதப் பள்ளிகளையே தொடங்கி மானியம் வழங்கியுள்ளனர். தமிழ்ப் பள்ளிகள் உருவாக்கி மக்களுக்கு தமிழ் சொல்லித்தரவேண்டும் என்ற எண்ணம் மன்னர்களுக்கு எழவில்லை. அவ்வளவு தூரம் அவர்களுடைய சுய சிந்தனையை மழுங்கடித்துள்ளனர் அவர்களின் பிராமண அரண்மனை மத குருக்களும் மடாதிபதிகளும்.

அந்த சமஸ்கிருதப் பள்ளிகளில் பார்ப்பனர்களின் பிள்ளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வேதம் கற்றனர். மற்ற பிள்ளைகளுக்கு படிப்பு என்பதே தேவையில்லை என்று அவர்கள் தமிழ் மன்னர்களை நம்பவைத்துள்ளனர். அவர்களின் பிள்ளைகள் வயல்களில் வேலை செய்யும் கூலி விவசாயிகளாகவும் இதர வேலைகள் செய்யும் உழைப்பாளிகளாக இருந்தால் போதுமானது என்று மக்களை நம்ப வைத்தனர். ஒரு சாரார் தீண்டத் தகாதவர்கள் என்றும் போதித்தனர். அதுவே ஆண்டவனின் கட்டளை என்றும் கூறிவந்தனர். அவர்கள் கூறுவதற்கெல்லாம் தமிழ் மன்னர்கள் தலையாட்டும் பொம்மைகளாகவே இருந்துள்ளது வியப்புக்கு உரியது.

இந்த நிலை இராஜராஜன் காலம் முதல் பல்லவர் காலம் வரை நீடித்துள்ளது. இவர்கள் காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டு தமிழ் மக்களுக்கு கல்வி அறிவு வழங்கப்பட்டதாக சரித்திரம் இல்லை.

ஆதலால் நம் முப்பாட்டன்கள் கல்வி அறிவு சிறிதும் இல்லாமலேயே காலத்தைக் கழித்துள்ளனர். அதோடு பிராமணர்களுக்கு கீழ்படிந்தே பழக்கப்பட்டுவிட்டனர். இன்னும் சொல்லவேண்டுமெனில் அவர்களுக்கு அடிமைகளாகவே இருந்துள்ளனர். பிராமணர்கள் போதித்த சாதி வேற்றுமையை நம்பி அதையே தங்களின் தலை எழுத்தாக நம்பி வாழ்ந்தனர்.

இராஜராஜன் காலத்தில் பிராமணர்களுக்கு சில கிராமங்களும் ஏராளமான நிலங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. அதோடு கோவில்களுக்கும் நிலங்கள் வழங்கப்பட்டன. அவற்றை நிர்வகித்து அவற்றின் பலன்களையம் பிராமணர்களே அனுபவித்து வந்துள்ளனர். பின்னாட்களில் இந்த நிலங்கள் சில உயர் சாதி பிரிவினருக்கு கைமாறியுள்ளன. அவர்கள் மிராசுதாரர்களாக பல நூறு ஏக்கர் நிலங்களுகளுக்குச் சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளார். அவர்கள் வைத்திருந்ததை பண்ணை என்று அழைத்தனர்.அவர்களிடம் கூலி வேலை செய்து பிழைத்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். இவர்கள் பண்ணை ஆட்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த மிராசுதார்கள் சிற்றரசர் போலவே செயல்பட்டனர். அவர்களுடைய சொத்தும், பணபலமும் ஏழை மக்களை அச்சுறுத்தியது. அதனால் அவர்களுக்கு அடங்கி நடக்கும் அடிமைகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஜமீன் வீட்டு பிள்ளைகள் பட்டணங்களுக்குச் சென்று கல்வி கற்றனர். தாழ்த்தப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி தேவையில்லை என்று கூறினார்கள். அவர்கள் படித்துவிட்டால் பண்ணையில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்காது என்ற ” நியாயமான ” வகையில் காரணம் கூறப்பட்டது. அதோடு பாமர மக்களுக்கு தங்கள் பிள்ளைகளை கல்விச் சாலைகளுக்கு அனுப்பும் அளவுக்கு பொது அறிவு இல்லாததோடு அதற்கான பணமும் அவர்களிடம் இல்லை. இதானால் பல நூற்றாண்டுகளாக ஏழை எளிய தமிழ் மக்களுக்கு கல்வி என்பது எட்டாத கனியாகவே கருதப்பட்டுள்ளது. எப்போது முதல் தமிழ்ப் பள்ளி தமிழகத்தில் உருவானது என்பது ஆராயப்படவேண்டியுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் 1947க்குப் பிறகு நில சீர்திருத்தச் சட்டம் படிப்படியாகக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னோடியாக மேற்கு வங்காளமும் கேரளாவும் விளங்கியுள்ளன. இந்த இரு மாநிலங்களில் கம்யூனிட்ஸ்டுகள் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு  எதிராக பொது உடைமைக் கொளகைகளைப்  பரப்பினர்.. உழுபவர்க்கே நிலம் சொந்தம் என்று போராட்டங்கள் நடத்தினர். இதை வைத்து பிரச்சாரம் செய்ததால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றினர். அதன் பின்பு இந்த இரு மாநிலங்களும் பல வருடங்கள் கம்யுனிஷ்டுகளின் கைகளிலேயே இருந்தன. அதன் பிறகுதான் இந்தியா முழுவதும் இந்திய நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜமீன்களுக்கு சொந்தமான நிலங்கள்  வரையறை செய்யப்பட்டது. அதன்படி நிலம் இல்லாத ஏழைகளுக்கு ஜமீன்களின் நிலங்கள் பிரித்து தரப்பட்டன. ஜாமீன் நிலத்தை தொடர்ந்து பனிரெண்டு வருடங்கள் ஒரு விவசாயி உழுது வந்தால் நிலம் அவனுக்கே சொந்தம் என்ற சட்டம் வந்தது. அதன்வழியாகவே பல ஏழை கிராம விவசாயிகளுக்கு நிலங்கள் கிடைத்திருக்கலாம். அவர்கள் கூலி வேலை செய்து சம்பாதித்ததில் சேர்த்துவைத்து நிலங்களை வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை.

எங்கள் கிராமத்திலும் இந்த வகையில்தான் முன்னோர்களுக்கு நிலங்கள் கிடைத்திருக்கும். எங்கள் வட்டாரத்திலுள்ள நிலங்கள் அனைத்தும் பிராமணர்களுக்குச் சொந்தமானவை அல்ல. அவர்களின் செல்வாக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுடன் சரி.  ஆனால் சாதியில் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பிள்ளைகள் சமூகத்தினருக்கு ஏராளமான காணிகள் இருந்துள்ளன. அவர்களுக்கு எப்படி அவை கிடைத்தன என்பது தெரியவில்லை. எங்கள் ஊரில் உள்ள   பண்ணைத் தெருவிலுள்ள பிள்ளை சாதியினர் பண்ணைகள் வைத்து `செல்வாக்குடன் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சிதம்பரம் செல்ல சொந்தமாக குதிரை வண்டிகள்கூட வைத்திருந்தனர். அந்த பண்ணைகளைச் சுற்றிலும் இருந்த கிராமங்களில் பண்ணையில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களே அதிகம் இருந்தனர். அவர்களின்  பண்ணைத் தெருவில்  தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து செல்லக்கூட அஞ்சுவர். அப்படியே சென்றாலும் காலணிகளை கையில்தான் தூக்கிச் செல்லவேண்டும்!

இவ்வளவு சாதிக் கொடுமையிலும், பொருளாதார ஏற்றத்தாழ்விலும், கொத்தடிமையிலும், தன்மானமற்ற நிலையிலும், பஞ்சத்திலும் பசியிலும், வெயிலிலும் மழையிலும் உழைத்து பாடுபட்டு பெற்றவை நம் முன்னோர்களின் நிலங்கள். பரம்பரையாக வந்தவை என்று சொல்லி அவற்றை விற்றுவிடுவது எந்த வகையில் நியாயம்?

இன்று நம் மக்களிடையே காணிகள் குறைந்துபோனதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அதுதான் பாகப் பிரிவினை. தாத்தாவிடம் நான்கு காணிகள் இருந்தால் அவருடைய இரண்டு மகன்களும் ஆளுக்கு இரண்டு காணிகள் எடுத்துக்கொள்கின்றனர். அவர்களின் இரு மகன்களும் ஆளுக்கு ஒரு காணி எடுத்துக்கொள்கின்றனர். அவர்களில் பிள்ளைகள் ஆளுக்கு அரை காணி எடுத்துக்கொள்கின்றனர். அவர்களின் பிள்ளைகளுக்கோ ஆளுக்கு கால் காணிதான் கிடைக்கிறது. இந்த கணக்கு ஒருவருக்கு இரண்டு மகன்கள் என்று வைத்துக்கொள்ளும்போது. ஆனால் நான்கு மகன்கள் இருந்தால் நிலைமையே வேறுதான். அவன் நிலம் இல்லாமல் கூலி வேலை செய்துதான் பிழைக்க நேரிடும். நமது கிராமங்களில் வறுமை தொடர்கதையானது இந்த பாகப் பிரிவினையால்தான். ஆனால் என்ன செய்வது? திருமணமானபின் சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வாழமுடியுமா?

என்னைப் பொருத்தவரையில் அப்பா ஒரு காலத்தில் நிலங்களைப் பிரித்துக்  கொடுத்தாலும், நானும் அண்ணனும் அவற்றை தனித்தனியாக நடாமல் ஒன்றாகவே வைத்து விவசாயம் செய்ய வேண்டும். இருக்கும் நிலத்தை விற்காமல் மேற்கொண்டு நிலங்கள் வாங்கி சேர்க்கவேண்டும் என்ற எண்ணமும் எனக்கு உள்ளது.

அண்ணண் தரங்கம்பாடியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றுகிறார். அண்ணியும் ஆரம்பப்பள்ளி ஆசிரியையாக உள்ளார். அவர்களுக்கு மாத வருமானம் போதுமானது. நானும் மருத்துவம் பயின்றபின்பு சிங்கப்பூருக்குச் சென்றுவிடுவேன். எங்கள் இருவருக்கும் நிலங்கள் தேவை இல்லைதான். நாங்கள் கிராமத்தில் இருந்து விவசாயம் பார்க்கப்போவதில்லை. இருந்தாலும் முன்னோர் பாதுகாத்து விட்டுச் சென்றுள்ள நிலங்களை விற்றுவிடாமல் பாதுகாப்பது எங்களுடைய கடமையாக நான் கருதுகிறேன். இந்த ஆசை நிறைவேறுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதைஇன்குலாபுக்கு அஞ்சலிகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *