வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 5

This entry is part 5 of 14 in the series 26 மார்ச் 2017

5.

         சுமதியின் வீடு. அந்த வீட்டின் நடுக்கூடம் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரக் குடும்பங்களுக்குரிய சுமாரான பரப்பளவில் இருக்கிறது. அதன் இடப் புறத்தில் குளியலறையும் நான்கு அடிகள் தள்ளி அடுக்களையும் அமைந்துள்ளன.  கூடத்தின் ஓர் ஓரத்தில் மெத்தை விரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது.  அதற்கு எதிர்ப்புற ஓரத்தில் ஒரு சாப்பாட்டு மரமேஜையும் நான்கு நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன.  அதன் அருகே ஒரு முக்காலியும் அதன் மீது ஒரு தொலைபேசியும் உள்ளன. சற்றுத் தள்ளி ஓர் அகன்ற மேஜையின் மீது தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் உள்ளது.  வீடு மிகவும் துப்புரவாகப் பளிச்சென்று வைக்கப்பட்டிருக்கிறது.  அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால், சுமதி செய்தியாளராய்ப் பணிபுரியும் ”விடிவெள்ளி” நாளிதழுக்கு விடுமுறை. கூடத்தின் மற்றுமோர் ஓரத்தில் இருக்கும் அகன்ற மேஜையின் மீது தன் புடைவையை மடித்துப் பரப்பி அதனருகில் நின்றபடி அவள் அதற்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறாள்.  அவள் அப்பா, ஜெயராமன், ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு அன்றைய விடிவெள்ளியைப் படித்துக்கொண்டிருக்கிறார். புடைவைக்குப் பெட்டி போடுவதில் முனைப்பாக இருப்பவள் போல் தென்பட்டாலும், அவள் பார்வை ஆர்வத்துடன் அடிக்கடி ஜெயராமன் மீது பதிந்து மீண்டவாறு இருக்கிறது. அவள் பார்வையில் ஓர் எதிர்பார்த்தல் புலப்படுகிறது. அவள் அம்மா, ஜானகி, அன்றைச் சமையல் வேலையில் ஈடுபட்டவாறு அடுக்களையில் இருக்கிறாள். சுவர்க் கடிகாரத்தில் பத்து மணி அடிக்கிறது. அப்போது வாசலில் சைக்கிள் மணியோசையுடன், “சார்! தந்தி!” என்னும் குரலும் கேட்கிறது. நாளிதழை மடித்துப் பிடித்தவாறு ஜெயராமன் உடனே எழுந்து வாசலுக்குப் போகிறார்.  கையொப்பமிட்டபின், சுமதியின் பெயருக்கு வந்துள்ள அதை எடுத்து வந்து அவளிடம் தருகிறார். அது ஒரு வாழ்த்துத் தந்தி. ஜானகி அடுக்களையிலிருந்து ஆவலுடன் எட்டிப் பார்க்கிறாள். இஸ்திரிபோடுவதை நிறுத்திவிட்டு, சுமதி தந்தி உறையைப் பிரித்துப் படிக்கிறாள். அது பிரகாஷிடமிருந்து அவளுக்கு வந்துள்ள பிறந்த நாள் வாழ்த்துத் தந்தி. அதைப் படிக்கும் போதே வெட்கத்தில் சிவக்கும் அவள் முகத்தைக் கவனிக்கும் ஜெயராமன் அது பிரகாஷிடமிருந்து வந்துள்ளதை ஊகிக்கிறார்.

“யாரிடமிருந்து தந்தி? என்ன சேதி அதில்?” என்று ஜானகி குரல் கொடுக்கிறாள்.

அதே நேரத்தில், “பிரகாஷிடமிருந்துதானே?” என்று ஜெயராமன் கேட்கிறார்.

தலையைத் தாழ்த்திக்கொள்ளும் சுமதி “ஆமாம், அப்பா!” என்கிறாள்.

ஜெயராமன், ஜானகியின் புறம் திரும்பிப் பார்த்து, “அந்த பையன் பிரகாஷிடமிருந்து பிறந்த நாள் வாழ்த்துத் தந்தி வந்திருக்கிறது!” என்கிறார்.

எரிச்சலுடனும் வெறுப்புடனும் முதலில் சுமதியை நோக்கும் ஜானகி, பின்னர் அதே போல் ஜெயராமனையும் நோக்கியவாறு, “அந்தப் பையனோடு கடிதப் போகுவரத்தெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் மகளுக்குச் சொல்லுங்கள்! வாரந்தவறாமல் அவனிடமிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்துவிடுகிறது – நாமென்னவோ அவர்களின் கல்யாணத்துக்குச் சம்மதித்துவிட்டது மாதிரி!” என்கிறாள்.

“ஜானகி! அவளுடைய பிறந்த நாளும் அதுவுமாய் அவளிடம் கடுமையாய்ப் பேசாதே!”

“எனக்குத் தெரியாதா என்ன அவளுக்கு இன்று பிறந்த நாள் என்று? அதனால்தான் இத்தோடு விடுகிறேன் அவளை!”

“எனக்கும் உன்னைத் தெரியாதா என்ன!  விடுமுறை நாள்களில் அவள் வீட்டில் இருந்தால் அந்த நாள்களை யெல்லாம் நீ அவளுக்கு நரகமாக்கி விடுகிறாய்!  அதனால்தான் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அவள் அலுவலகத்துக்குப் போய்விடுகிறாள்!”

“அப்பா! தயவு செய்து  அம்மாவிடம் கடுமையாகப் பேசாதீர்கள்! அவர் அதிகம் படிக்காதவர். என் விஷயத்தில் ஆதரவாய் அவர் பேசுவார் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?” என்று சுமதி அவரை நோக்கிக் கெஞ்சுதலாய் வேண்டுகிறாள்.

மகளை முறைத்துப் பார்க்கும் ஜானகி, “ஆமாண்டி!  நான் படிக்காத முட்டாள் கழுதைதான்! ஆனால் பெற்றவர்களுக்குக் கீழ்ப்படிவது எனும் பெருங்குணம் கொண்டிருந்தேன்.  உன்னைப் போல் நான் அதிகப்பிரசங்கி இல்லை!” என்கிறாள் குத்தலாக.

இதனால் ஆத்திரமடையும் ஜெயராமன் அடுக்களை நோக்கி விரைய முற்படுகிறார். ஆனால், சுமதி அவரது கையைப் பிடித்து நிறுத்துகிறாள்: “அப்பா! வேண்டாம். நீங்கள் இருவரும் இதற்கு முன்னால் சண்டை போட்டுக்கொண்டதே இல்லை. இப்போது எனக்காக நீங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யக் கூடாது.  அம்மாவைப் புரிந்துகொள்ள முயலுங்கள், அப்பா. மிகுந்த நாகரிகச் சமுதாயங்களேயானாலும். அவற்றின் மெத்தப் படித்த மனிதர்களிடையிலும் கூட இத்தகைய திருமணங்கள் இலேசில் அங்கீகரிக்கப்படுவதில்லை.”

இரைந்த பெருமூச்சு ஒன்றை உதிர்க்கும் ஜெயராமன், “நீ சொல்லுவது சரிதான், சுமதி. நாகரிகச் சமுதாயம் என்று போற்றப்படும் மேலை நாடுகளிலும் கூட, இத்தகைய விந்தையான கருத்துகள் நிலவுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் அவை இன்னும் அதிக அளவில் இருக்கும்தான். அங்கே யெல்லாம் நிறவெறி இருந்துவருகிறதே! இங்கே அரிசனங்கள் இருப்பது போல் அங்கே கறுப்பு இனத்தவர்கள்! அண்மையிலேயே கூட, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவள் காதலித்த ஆஃப்ரிக்க இனத்தவனை மணந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை யல்லவா! அமெரிக்காவிலும் கூட, யூத இனத்தினர் கிறிஸ்தவர்களோடு திருமணத் தொடர்பு கொள்ள விரும்புவதில்லையே. இங்கிலாந்தில், ஒரு சாதாரணக் குடும்பத்துப் பெண்ணை மணக்க அனுமதி கிடைக்காததால், இளவரசர் விண்ட்சர் கோமகன் தன் சிங்காதனத்தைத் துறக்க வேண்டி வந்ததே!” என்று அங்கலாய்க்கிறார்.

“ஆமாம், அப்பா. அதனால்தான் அம்மாவிடம் நான் பொறுமையாக இருந்து வருகிறேன்.”

”அந்தப் பையன்  தன் எண்ணத்தைச் சொன்னபோது நானும்தான் அதிர்ந்து போனேன். எனினும், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு நான் அதை ஏற்றுக்கொண்டேன்.  ஆனால் என்னைப் போல் அவ்வளவு விரைவில் தன் எண்ணத்தை உன் அம்மாவால் மாற்றிக்கொள்ள முடியாது.”

“அதனால்தான் அம்மாவோடு சண்டை போடாதீர்கள் என்று நானும் சொன்னேன். காலப்போக்கில் அம்மாவின் மனம் மாறாதா என்ன!”

“ஆனால் அந்தப் பையன் எத்தனை நாள்கள் காத்துக்கொண்டிருப்பானாம்! அவன் ஒரே மகன் என்பதால் அவன் அப்பாவிடமிருந்து விரைவில் மணந்துகொள்ளுமாறு அவனுக்கு நிறைய வற்புறுத்தல் இருக்குமே!”

ஜெயராமனின் சொற்களால் சிந்தனை தூண்டப்படும் நிலையில் சுமதி புடைவைக்கு இஸ்திரி போடுவதைத் தொடர்கிறாள்.  மவுனமாய்ப் பெருமூச்செறியும் அவள் முகம் வாட்டமுறுகிறது.

“நீங்கள் சொல்லுவது சரிதான், அப்பா. அம்மாவின் சம்மதம் பெறுவதற்காக நான் பிரகாஷை மிக நீண்ட நாள்களுக்குக் காத்திருக்கச் சொல்ல முடியாதுதான். ஆனால் அவன் தானாகாவே காத்திருக்க எண்ணினால் அதை நான் தடுக்கவும் மாட்டேன்.”

“நீ சொல்லுவதும் சரிதான். அது சரி, பிரகாஷ் தன் கடிதங்களில் முக்கியமான ஏதேனும் விஷயம் பற்றி எழுதி யிருக்கிறானா?”

“இல்லை, அப்பா. அப்படி எதுவும் இது வரையில் இல்லை. இருந்தால் சொல்லுகிறேன்.  … சரி, அப்பா. நான் என் அலுவலகத்துக்குக் கிளம்புகிறேன்…”

“என்னது! அலுவலகத்துக்குக் கிளம்புகிறாயா! ஒன்றுமே சாப்பிடாமலா! விடுமுறை நாளிலும் கூட ஏன் இப்படி அலுவலகத்துக்குப் போகிறாய், சுமதி?  வாரம் ஒரு நாளாவது நீ ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டாமா? இதைப் பற்றி நான் உன் அம்மாவிடம் பேசியாக வேண்டுமென்று நினைக்கிறேன்.”

“அப்பா! தயவு செய்து வேண்டாம். என்னால் நீங்கள் இருவரும் சண்டை போட வேண்டாம்.”

ஜானகி, அடுக்களையில் இருந்தபடியே, “சமையல் ஆகிவிட்டது. சாப்பிட்டு விட்டு எங்கு வேண்டுமானாலும் போகும்படி உங்கள் மகளிடம் சொல்லுங்கள்!’ என்று இரைந்து குரல் கொடுக்கிறாள்.

அடுக்களையின் நுழைவாயில் வரை விரைந்து செல்லும் ஜெயராமன், “ஜானகி! இந்த ‘உங்கள் மகள்’ எனும் உன் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. அதை முதலில் நிறுத்து!” என்று கத்துகிறார்.

“அப்படி நான் சொல்லக்கூடா தென்றால், எனக்குப் பிடித்த மாதிரி அவளை நடந்துகொள்ளச் சொல்லுங்கள்.அதன் பிறகு அவள் எனக்கும் மகள் என்பதில் நான் பெருமைப்படுவேன்!”

ஆழ்ந்த பெருமூச்சுடன், “கடவுளே! ஏதானும் அற்புதம் நிகழ்ந்தாலொழிய, இவள் மாறப்போவதில்லை!” என்று அவர் ஆற்றாமையுடன் முணுமுணுக்கிறார். பின்னர் தமது நாற்காலிக்குத் திரும்பி, விட்ட இடத்திலிருந்து விடிவெள்ளி நாளிதழைப் படிக்கத் தொடங்குகிறார். சட்டென்று அவரது பார்வை “உழைக்கப் பிறந்தவர்கள்” என்னும் தலைப்பில் விழுகிறது. அதை எழுதியிருப்பது சுமதி என்பதைக் கவனித்ததும் அவர் வியப்புடன், “சுமதி!” என்று கூவுகிறார்.

“உன் இரண்டாம் கட்டுரை ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ என்னும் தலைப்பில் விடிவெள்ளியில் வெளிவந்திருக்கிறது. பார்த்தாயா?”

“தெரியும், அப்பா! நீங்கள் தாமாகவே அதைக் கவனித்துப் படித்துவிட்டு அது பற்றி என்னிடம் பேசுவீர்கள் என்றெண்ணிக் காத்துக்கொண்டிருக்கிறேனாக்கும்!”

“உங்கள் மகளைச் சாப்பிட வரச் சொல்லுங்கள்!” என்னும் இரைந்த அழைப்பு அடுக்களையிலிருந்து கிளம்பி வருகிறது.

இந்த மறைமுக அழைப்பால், தந்தையும் மகளும் வேதனையுடன் ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்ளுகிறார்கள். ஜானகியைக் கண்டிக்கும் நோக்கத்துடன் ஜெயராமன் சினம் பொங்க எழுகிறார்.  ஆனால், இம்முறையும் சுமதி அவர் கையைப் பிடித்துத் தடுத்துவிடுகிறாள். உதடுகளின் குறுக்கே விரல் வைத்து அவர் பேசக்கூடாது என்று சைகையும் செய்கிறாள்.

”அப்பா! முழுக்க முழுக்க இப்போது நான் உங்கள் மகளாகிவிட்டேன் என்பதில் நீங்கள் ஏன் மகிழ்ச்சி யடையக்கூடாது?” – இவ்வாறு புன்சிரிப்புடன் கேட்டுவிட்டு அவர் கையில் உள்ள விடிவெள்ளி நாளிதழைப் பறித்து அருகில் இருந்து குட்டை மேஜை மீது வைக்கிறாள். ஜெயராமன் பெருமூச்சுடன் எழுகிறார். இருவரும் அதன் பின் சாப்பாட்டு மேஜைக்குச் சென்று சாப்பிட அமர்கிறார்கள். ஜானகி பதார்த்தங்களை எடுத்துவந்து அதன் மீது பரப்புகிறாள். மேஜை மீது இரண்டு தட்டுகள் மட்டுமே இருப்பதைக் கவனிக்கும் சுமதி, எழுந்து, ஜானகியின் தட்டையும் எடுத்துவந்து மேஜையில் வைக்கிறாள். ஜானகி உடனேயே அதை எடுத்து நகர்த்தி வைக்கிறாள்.

“நீயும் எங்களோடு உட்காரேன், ஜானகி. அந்தப் பையன் வந்து போன நாளிலிருந்தே நீ எங்களோடு உட்கார்ந்து சாப்பிடும் வழக்கத்தை நிறுத்திவிட்டாய்.  இந்த அளவுக்கு உனக்குக் கோபம் ஆகாது, ஜானகி! வா. வந்து உட்கார்…. சுமதி! அம்மாவின் தட்டை என் அருகில் வை!”

“வேண்டாம். அப்பாவும் பெண்ணும் தனிக்கட்சி யாகிவிட்டீர்கள்! நான் தனி ஆளாகிவிட்டேன். நான் தனியாகவே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொள்ளுகிறேன்!” என்னும் ஜானகி கலங்கும் தன் கண்களைச் சேலைத் தலைப்பால் ஒற்றிக்கொள்ளுகிறாள்.

“அப்பா! தயவு செய்து மேற்கொண்டு எதுவும் பேசாதீர்கள்!”

“சரி” என்று ஜெயராமன் சொன்னதன் பிறகு, இருவரும் சாப்பிடத் தொடங்குகிறார்கள்.

சில நொடிகள் கழித்து மறுபடியும் ஒரு தந்தி வருகிறது. ஜானகி அதை வாங்குகிறாள். அதை ஜெயராமனிடம் தருகிறாள். அவரும் சுமதியும் அதைத் தங்கள் இடக்கைகளால் பிரிக்கிறார்கள். அது சுமதியின் தோழி சுந்தரியிடமிருந்து வந்துள்ளது.

சுமதி, மகிழ்ச்சியுடன் புன்னகை செய்து, “அப்பா! இது ஹைதராபாத் சுந்தரியிடமிருந்து! இரண்டு நாள் கழித்து அவள் ஏதோ நேர்முகத் தேர்வுக்காக இங்கே மதராசுக்கு வருகிறாளாம். நம் வீட்டில் இரண்டொரு நாள் தங்கலாமா என்று கேட்டிருக்கிறாள்!” என்று தெரிவிக்கிறாள்.

“தாராளமாக! உடனே நீ அவளுக்கு ஒரு தந்தி அனுப்பு. இல்லாவிட்டால், அவர்கள் வீட்டில் தொலைபேசி இருந்தால் ட்ரங்க் கால் போட்டுப் பேசிவிடேன்!”

ஜானகி முகத்தில் எவ்வகை உணர்ச்சியும் இன்றி இருக்கிறாள். தந்தையும் மகளும் பார்வைப் பரிமாற்றம் செய்துகொள்ளுகிறார்கள். பின்னர், ஜெயராமன் ஜானகியை நோக்குகிறார்: “ஜானகி! அந்தப் பெண் நம் வீட்டில் தங்கலாமா? உனக்கொன்றும் ஆட்சேபணை இல்லையே?”

“ஒரு விருந்தாளியை வேண்டாம் என்று மறுக்க நான் ஒன்றும் பண்பாடு இல்லாதவள் அல்லேன்!”

“நன்றி, அம்மா!” என்று சொல்லும் மகளின் பக்கம் கூடத் திரும்பாமல் ஜானகி நிற்கிறாள்.

“ஜானகி! அதில் உனக்குத் துளியும் ஆட்சேபணை இல்லையே?”

“நான் எதற்கு ஆட்சேபிக்க வேண்டும்?”

“இங்கு வந்திருந்த போது, சுமதியை ஆதரித்து அவள் பேசியதெல்லாம் உனக்குத் தான் பிடிக்கவே இல்லையே! உனக்கு எரிச்சல் வந்தது. பாடுபட்டு அதை அடக்கிக்கொண்டாய். அதனால்தான் கேட்கிறேன்.”

“இந்தத் தடவையும் அவள் அப்படியெல்லாம் பேசக்கூடும். ஏன்? நிச்சயம் பேசத்தான் செய்வாள்.  இந்தத் தடவையும் நான் பொறுமையாகத்தான் இருப்பேன். எனினும் அந்தப் பெண் தன் எல்லையைப் புரிந்துகொண்டு பேசவேண்டும்! வயதில் மூத்தவளான எனக்கு ஒரு பாட்டி மாதிரி அவள் உபதேசம் செய்யக்கூடாது. அநாவசியமாக இந்த விஷயத்தில் அவள் மூக்கை நுழைக்கக்கூடாது என்பதை அவளுக்குச் சொல்லும்படி உங்கள் மகளிடம் சொல்லி வையுங்கள்!”

“அவள் ஒன்றும் உனக்கு உபதேசம் செய்யவில்லை, ஜானகி! சுமதிக்கு ஆதரவாய் ஏதோ சொன்னாள். அவ்வளவுதான்! அவள் ஒரு வாய்மையான பெண்!”

“ஆனால் வாய்தான் ஜாஸ்தி அவளுக்கு!’

அதன் பின எதுவும் பேசாமல் ஜெயராமனும் சுமதியும் சாப்பிடுகிறார்கள். கரண்டிகளும் தட்டுகளும் உராயும் ஓசையைத் தவிர அங்கே அமைதி நிலவுகிறது.

கைகழுவி எழுந்ததன் பிறகு, சுமதி ஹைதராபாத்துக்குத் தொலையழைப்புக்கு ஏற்பாடு செய்கிறாள்.

சில நிமிடங்களுக்கெல்லாம் சுந்தரியோடு அவளுக்கு இணைப்புக் கிடைக்கிறது.

“ஹாய்! சுந்தரி! உன் தந்தி கிடைத்தது.  இங்கே வந்து தங்குவதற்கு நீ அனுமதி கேட்க வேன்டியதே இல்லை. கேட்காமலே வந்து இறங்கவேண்டியதுதானே? என் அம்மாவா? ஷி இஸ் ஃபைன்! அப்பாவும்தான்.  உன் வீட்டில் எல்லாரும் நலந்தானே? ….எங்கே உனக்கு நேர்முகம்? ஓ… சரி. அப்பா உன்னை அழைத்துக்கொனண்டு போய் விடுவார். கவலைப்படாதே. நீ இங்கு வந்த பிறகு நாம் நிறையப் பேசுவோம்! சரியா?” என்று சொல்லிவிட்டு, அவள் இணைப்பைத் துண்டிக்கிறாள்.

திரும்பி அவள் ஜானகியைப் பார்க்கும் போது, ஜானகி தன் பார்வையை அகற்றிக்கொள்ளுகிறாள்.

“அம்மா! சுமதி உங்களை விசாரித்தாள்!”

“புரிந்தது. ‘ஷி  இஸ் ஃபைன் என்றாயே! நான் ஃபைனாகவா இருக்கிறேன்? என்ன பொய் இது!”

“உனக்கேன் இவ்வளவு கோபம், அம்மா?       தனக்குப் பிடித்தவனை ஒரு பெண் விரும்புவது பெருங்குற்றமா?”

“அதில் தப்பே இல்லை. நீ ஒரு கிறிஸ்தவனைத் தேர்ந்தெடுத்துதான் தப்பு.  அவன் ஒரு ஹிந்துப் பையனாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்!” என்று ஜானகி சற்றே  மென்மையான, தணிந்த குரலில் கூறுகிறாள்.

“ஒரு சின்னத் திருத்தம், ஜானகி! ஹிந்து, பிராமணப் பையன் என்று சொல்லு! பிராமணனை விட்டு விட்டாயே!” என்று ஜெயராமன் கிண்டலாய்க் குறுக்கிடுகிறார்.

தன் சாப்பாட்டுத் தட்டுக்கு முன்னால் அமர்ந்துகொண்டே, ஜானகி, “என்னைத் திருத்தியதற்கு நன்றி. நீங்கள் சொன்னது சரிதான். பிராமணப் பையன் என்று நான் சொல்லியிருந்திருக்க வேண்டும்.  இப்போது நான் சொல்லுவது உங்களுக்குப் புரியாது. பின்னாளில் பிரச்சினைகள் எழும்போது புரிந்துகொள்ளுவீர்கள். … எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பது பற்றிய சண்டை ஏற்பட்டது. அப்பா ஒரு ஹிந்து. அம்மா ஒரு முஸ்லிம். கல்யாணம் செய்துகொள்ளுவதற்கு முன்னால் மதமாற்றம் வேண்டாம் என்று இருவருமே முடிவு செய்து ஒப்புக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு குழந்தை பிறந்ததும் அவர்களது முடிவு தூள்தூளானது…கடைசியில்  சண்டை முற்றிப் போய், இருவரும் மணவிலக்குச் செய்துகொண்டார்கள்!”

என்கிறாள்.

“பிறகு அந்தக் குழந்தை என்ன வாயிற்று, ஜானகி?”

“அது ஒரு மாதம் அம்மாவுடனும், மறு மாதம்  அப்பாவுடனும் மாற்றி மாற்றி இருக்க வேண்டும் என்று தீர்ப்பாயிற்று. அந்தக் குழந்தைக்குத்தான் எத்தகைய மன உளைச்சல்! உங்கள் மகள் என்னவோ தான் குழந்தைகளின் நலனுக்காகச் சேவை செய்பவள் என்று பீற்றிக்கொள்ளுகிறாள்! ஆனால், என்ன பயன்? பின்னாளில் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகள் நலன் பற்றிய கவலை கூட அவளுக்கு இல்லையே!”

“ஜானகி! இதோ பார்.  காலம் மாறிகொண்டிருக்கிறது. சுமதியின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது இத்தகைய முட்டாள்தனமான பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லை!  … சுமதி! நான் ஏற்கெனவே சொன்னபடி, உனது சென்ற கட்டுரை, பிரமாதம்….உண்மையில் உன்னை நினைத்துப் பெருமைப் படுகிறேன்… இன்றைய கட்டுரையை இனிமேல்தான் படிக்கப் போகிறேன்.”

“நன்றி, அப்பா!”

ஜெயராமன் மகிழ்ச்சியுடன் விடிவெள்ளி நாளிதழை முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்துக்கொண்டு அதில் வந்திருந்த அவளது கட்டுரையைப் படிக்க முற்படுகிறார். சுமதி புன்சிரிப்புடன் தன் அறைக்குச் செல்லுகிறாள்.

 

jothigirija@live.com 

 

Series Navigationஉயிரோட்டம்புஜ்ஜிம்மா…….
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *