ஜோதிர்லதா கிரிஜா
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)
11.
தில்லியில் கிஷன் தாசின் பங்களா. முகவாயையும் கன்னங்களையும் தன்னிரு உள்ளங்கைகளிலும் தாங்கியபடி கிஷன் தாஸ் சிந்தனை அப்பிய முகத்துடன் தம் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது பிரகாஷ் அங்கு வருகிறான். கிஷன் தாஸ் அவனைப் பார்த்ததும் கைகளை முகத்திலிருந்து அகற்றிக்கொண்டு புன்னகை புரிகிறார். முகத்தில் புன்னகை தோன்றிய போதிலும் அவரது பார்வை ஒரு கூர்மையுடன் பிரகாஷின் மீது பதிந்திருக்கிறது. ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு பிரகாஷ் அதில் உட்காருகிறான். அவனது முகம் இறுகியும் புன்னகை யற்றும் காணப்படுகிறது.
“என்ன! பழிக்குப் பழியா!” என்று அவர் அவனிடம் வினவுகிறார்.
“அப்படியென்றால்?” என்று அவன் பதிலுக்குக் கேட்கிறான்.
“புரியாத மாதிரி பேசாதே! நான் எதைப் பற்றிக் கேட்கிறேன் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்! முன்கூட்டி உனக்குச் சொல்லாமல் நான் ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டுத் திடீரென்று மதராசுக்குப் போனேன் என்பதற்காக நீயும் அப்படிச் செய்தாயாக்கும்?”
“நான் மட்டும் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டுமா என்ன!”
“நான் சொன்னதை யெல்லாம் நீ நம்பவில்லை என்று நினைக்கிறேன்.”
“அதற்கு அப்படி அர்த்தம் இல்லை. சுமதி என்ன சொல்லுகிறாள் என்பதையும் நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதனால்தான் போனேன். தவிரவும், நீங்கள் அவளுக்குப் பரீட்சை வைத்ததெல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்கவே இல்லை!”
“திடீரென்று நான் போன போது மதராசில் என்ன நடந்தது என்பதை யெல்லாம் நான் விவரித்ததை நீ ஒன்றும் பேசாமல் கேட்டுக்கொண்டாய். நான் போனதும், எனது நோக்கமும் உனக்குப் பிடிக்கவில்லை என்பதை என்னால் அப்போதே ஊகிக்க முடிந்தாலும், நீ இப்படி அங்கே போய் நிற்பாய் என்று நான் நினைக்கவில்லை. நான் பொய்யாக ஏதேனும் சொல்லியிருப்பேனோ என்று உனக்குச் சந்தேகம். அதைக் கண்டு பிடிப்பதற்காகத் தானே போனாய்?”
“இரண்டுக்காகவும்தான்! சரியாகவே ஊகித்திருக்கிறீர்கள்!”
கிஷன் தாஸ் எழுந்து சென்று, கதவைத் திறந்து நகுலை அழைக்கிறார். அவர் வந்து நின்றதும், இரண்டு குளிர்ப் பானங்கள் கொண்டுவரப் பணித்துவிட்டு அறைக்கதவைத் தாளிடுகிறார்.
“எதற்காகக் குளிர்ப்பானம்? இப்போது ஒன்றும் வெயிலாகவோ வெப்பமாகவோ இல்லையே!”
“நீ வெப்பமாக இருக்கிறாயே! அதற்காகத்தான்!” என்று கிண்டலாய்ச் சொல்லிவிட்டு, “உம்… இப்போது சொல்லு. என்ன கேட்டாய், என்ன தெரிந்துகொண்டாய், என்ன சரிபார்த்தாய் என்பதையெல்லம்!” என்கிறார்.
“முதலில் சுமதிக்கு நீங்கள் வைத்த அநாகரிகப் பரீட்சைக்காக மன்னிப்புக் கேட்பதற்காக.. அடுத்து, நீங்கள் மதராசுக்குக் கிளம்பிச் சென்றது, அதன் நோக்கம் இதெல்லாம் எனக்குத் தெரியாது என்பதைச் சொல்லுவதற்காகவும், தெரிந்திருந்தால் நான் உங்களைத் தடுத்திருந்திருப்பேன் என்று அவர்களிடம் சொல்லுவதற்காகவும். மூன்றாவதாக, சுமதி அது பற்றி என்ன சொல்லுகிறாள் என்பதைக் கேட்பதற்காகவும்!”
“ஆக மொத்தம், மதராசுக்குப் போய் அந்தப் பெண்ணைச் சந்தித்ததன் வாயிலாக நீ என்னை இழிவு செய்துவிட்டாய்! தன் வருங்கால மாமனாரின் மீது இனி அவளுக்கு என்ன மரியாதை இருக்கும்?”
“உங்கள் மகனுக்குப் பதிலாகப் பத்து லட்சம் தருவுதாய் நீங்கள் சொன்ன அந்தக் கணமே உங்கள் மீது அவளுக்கு இருந்திருக்கக் கூடிய மரியாதை யெல்லாம் அறவே போயிருந்திருக்கும்!”
நக்கலான இந்தப் பதிலடிக்குக் கிஷன் தாசால் பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போகும் அவர் முகம் இருண்டு போகிறது. அங்கே மவுனம் நிலவுகிறது.
இருப்பினும் தமது சங்கடத்தைச் சமாளிக்கும் முயற்சியில், கிஷன் தாஸ், “நான் சும்மா ஒரு பரீட்சைதானே வைத்தேன்? அதற்குப் போய் அந்தப் பெண்ணுக்கு என் மீதுள்ள மரியாதை போவானேன்?” என்கிறார்
சிரிக்கும் பிரகாஷ், “அப்பா! அவள் ஒன்றும் முட்டாள் இல்லை! அவள் ஒரு புத்திசாலிப் பெண்!” என்று அழுத்தந்திருத்தமாய் அறிவிக்கிறான்.
“அதை நான் மறுக்கவில்லை. உனது தேர்வு பாராட்டுக்குரியது. அதில் ஐயமே இல்லை. ஆனால், அது வெறும் பரீட்சைதான் என்று நான் அதற்கான காரணத்தோடு சொன்னதும், அவள் என் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டாள். …”
“இருக்கட்டும். ஆனால் நீங்கள் ஏன் அவளைச் சோதிக்க வேண்டும்? அன்பு எனும் உணர்வு எதிராளியைச் சோதிப்பதால் ஒருபோதும் வளர்வதில்லை!”
“சரி. ஆனால் நீ அவளைச் சோதித்துப் பார்த்தால்தான் அவள் ஆட்சேபிக்க வெண்டும். ஆனால், நான் உன் தகப்பன், பிரகாஷ்! நீ வாழ்க்கைத் துணையாய்த் தேர்ந்தெடுத்துள்ள பெண் எத்தகையவள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? நீ பெரும் பணக்காரக் குடும்பத்தின் வாரிசு என்பதற்காக அவள் உனக்குச் சம்மதம் சொல்லவில்லை என்று நான் எப்படி நம்புவது? அதற்காகவே அந்தச் சோதனை! அதைப் போய் நீ ஏன் பெரிதுபடுத்துகிறாய்? எல்லாம் சுமுகமாய் முடிந்தாகிவிட்டது. போனதை நாம் கிளற வேண்டாமே! அதை மறக்கப் பார்.”
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரும் நகுல் திராட்சைச் சாறு உள்ள ஜாடியையும் இரண்டு கோப்பைகளையும் வைத்துவிட்டு நகர்கிறார். ஒன்றைக் கிஷன் தாசிடம் கொடுத்த்விட்டுத் தானும் ஒன்றைப் பிரகாஷ் எடுத்துக் கொண்டு பருகுகிறான்.
“எதற்காக இந்த நகுல் ஒரு ஜாடி நிறையக் கொண்டு வந்திருக்கிறார்?”
“நாம் இருவரும் சூடான வாக்குவாதத்தில் இருப்பதை ஒருவேளை அவன் ஊகித்திருக்கக் கூடும்!”
“நிறுத்துங்கள் உங்கள் அசட்டு நகைச்சுவையை!”
“சரி, சரி… அது போகட்டும். என்ன சொன்னாள் உன்னுடைய அந்தப் பெண்? ஒருவேளை அவளது கோபம் இன்னும் தணியவில்லையோ என்னவோ! என்னை மன்னிக்கவில்லையோ என்னவோ!”
“இருக்கும்…. அப்புறம் இன்னொரு விஷயம். அவள் படுத்த படுக்கையாக இருக்கிறாள்!”
கிஷன் தாசின் விழிகள் விரிகின்றன: “என்ன! படுத்த படுக்கையாகவா! அப்படியென்றால்? என்ன வாயிற்று அவளுக்கு?”
“ஒரு விபத்து நேர்ந்துவிட்டது.”
“விபத்தா? அவள் என்ன வேலை செய்கிறாள்? அவள் எங்கே வேலை செய்கிறாள் என்பதை இப்போதாவது கேட்டுத் தெரிந்துகொண்டாயா? அங்கே போயிருந்த போது நானும் கேட்க மறந்து போனேன்.”
சிறிதே வியப்புடன், “அவள் என்ன வேலை செய்கிறாள் என்று ஏன் கேட்கிறீர்கள்? அவள் பார்க்கும் வேலைதான் அந்த விபத்துக்குக் காரணம் என்று ஏன் நினைத்தீர்கள்?” என்று அவன் கேட்கிறான்.
“வேலை செய்யும் அலுவலகத்தில் மின்சாரத்தின் தாக்குதலாலோ அல்லது ஏதேனும் பெரிய இயந்திரத்தை இயக்கும் போதோ விபத்து நேர்ந்திருக்கக் கூடும் எனும் ஊகத்தின் பேரில்தான் கேட்கிறேன்.”
“அப்படி யெல்லாம் இல்லை. அவள் விடிவெள்ளி நாளிதழில் நிருபராக இருக்கிறாள்.”
“என்னது! பத்திரிகை நிருபராகவா! அது பெண்களுக்கான வேலை இல்லையே! ஆனாலும், அவள் எதற்காக அச்சு இயந்திரம் போன்றவற்றை இயக்கவேண்டும்? வெளியே போய்ச் செய்திகளைச் சேகரித்து அவற்றை எழுதிப் பத்திரிகை ஆசிரியரிடம் தருவது மட்டும்தானே ஒரு நிருபரின் வேலை?”
”அவள் அப்படி யெல்லாம் அச்சு இயந்திரத்தை இயக்கி வேலை எதுவும் செய்யவில்லை. சில நாள்களுக்கு முன்னால் இருட்டத் தொடங்கிவிட்ட ஏழு மணியளவில் அவள் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, முகமூடி யணிந்த மூன்று பேர் ஒரு காரில் வந்து அவளைப் பின் புறமாய்த் தாக்கியிருக்கிறார்கள். இரண்டு பேர் அவள் கைகளைப் பிடித்துக்கொள்ள, மூன்றாம் ஆள் அவளைத் தடியால் அடித்திருக்கிறான்.”
கிஷன் தாஸ் துணுக்குற்றவராய் எழுந்து நின்று விடுகிறார்: “கடவுளே! விபரீதமாக ஏதேனும் சேதம் நேர்ந்துவிட்டதா? நாம் பணம் ஏதேனும் அனுப்பலாமா?…”
“உட்காருங்கள், அப்பா. பதறாதீர்கள்!” என்று கூறி அவரை உட்கார்த்தும் பிரகாஷ், “நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை. அவளை மேலும் அவர்கள் அடிப்பதற்கு முன்னால் பக்கத்துச் சந்திலிருந்து திடீரன்று ஒரு கார் வரவே அவர்கள் தங்கள் காரில் ஏறி ஓடிவிட்டார்களாம்… சுமதி அரை மயக்கத்துடன் சாய்ந்திருக்கிறாள். அந்தக் காரில் வந்தவர்கள் அவளை உடனே அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள்….” என்கிறான்.
“அவளது இப்போதைய நிலை என்ன, பிரகாஷ்? ஏதேனும் மோசமான அங்கவீனம் ஏற்பட்டுள்ளதா?”
“அப்படி ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதைச் சாக்கிட்டு எங்கள் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று எண்ணுகிறீர்களா?” என்று அவன் கேலியாய் அவரைக் கேட்கிறான்.
“பிரகாஷ்! பிரகாஷ்! என்ன கேள்வி கேட்கிறாய்! உன் மதிப்பில் நான் எவ்வளவு தாழ்ந்தவனாகி விட்டேன்! ஒரு கையையோ காலையோ அவள் இழந்திருந்தாலும், நீ அதைப் பொருள்படுத்தாவிட்டால், அவளை நீ கல்யாணம் செய்துகொள்ளலாம்…! நான் அதற்குக் குறுக்கே நிற்க மாட்டேன். உங்கள் கல்யாணத்துக்குப் பிறகு அப்படி ஒரு விபத்து நேர்ந்திருந்தால் நான் அவளை மணவிலக்குச் செய் என்றா சொல்லுவேன்! கடவுளே என்ன கணிப்பு இது!”
“உங்கள் அன்புக்கு நன்றி, அப்பா! நான் சொன்னதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.”
“அவளது இப்போதைய நிலை என்னவென்று கேட்டேனே?”
“எலும்பு முறிவுக்காக இடக்கையில் தூளிக் கட்டுப் போட்டிருக்கிறார்கள். முழங்காலிலும் அடி. தலையில் விழுந்த அடி மோசமாக இல்லை. ஒரு பிளாஸ்திரி ஒட்டி இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அவளது கைக்கட்டை எடுத்து விடுவார்களாம். அதன் பின் அவள் சரியாகிவிடுவாள்….”
“கடவுளுக்கு நன்றி! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதற்காக! … ஆனால் அவள் தாக்கப்பட்டதற்கான காரணம் என்ன வென்று சொன்னாளா? அவளுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?”
“தங்கள் கட்டுரைகளில் எந்தச் சமுதாய விரோதிகளின் தகாத செயல்கள் பற்றி நிருபர்கள் எழுதுகிறார்களோ, அவர்கள் எல்லாருமே அந்த நிருபர்களின் எதிரிகள்தானே?… எனினும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் மீது அவளுக்குச் சந்தேகம். தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஊரில் அவன் பங்குதாரனாக இருக்கும் ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலையில் அவன் குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு வைத்திருக்கிறானாம். மிகக் குறைந்த சம்பளமாம். நாள் ஒன்றுக்குப் பதிநான்கு மணி நேர வேலையாம். அந்தத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாம்! அந்தக் கட்டுரை வெளிவந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு அவள் தாக்கப்பட்டிருக்கிறாள். எனவே, அந்தச் சட்டப் பேரவை உறுப்பினர்தான் அடியாள்களை வைத்து அவளைத் தாக்கியிருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படையான ஊகம்…”
“கடவுளே! அப்படியானால், அவளைத் தீர்த்துக்கட்டுவதே அவனது நோக்கமாக இருந்திருக்க வேண்டும்!”
“அதேதான்! ஆனால், கடவுளின் அருளால் சிறு காயங்களுடனும் கையெலும்பு முறிவுடனும் அவள் தப்பிவிட்டாள்!”
“அந்த வேலையை அவள் விட்டுவிடுவது நல்லது. நம்மிடம் இருக்கும் பணத்துக்கும் சொத்துபத்துகளுக்கும் அவள் வேலை செய்து சம்பாதிப்பது வெட்கக்கேடானது! கிஷன் தாசின் மருமகள் வேலைக்குப் போய்க் காசு சம்பாதிப்பதாவது!”
“நானும் அதையேதான் அவளிடம் சொன்னேன்.”
புன்னகையுடன் அவன் கைகளை அன்பாய்ப் பற்றிக்கொள்ளும் கிஷன் தாஸ், “சொன்னாயா! மிக்க மகிழ்ச்சி, பிரகாஷ்! எனக்கு அப்பாடா என்று இருக்கிறது. அன்று இதே பேச்சை நான் எடுத்த போது எப்படி அவளிடம் திருமணத்துக்கு முன்னாலேயே அப்படிச் சொல்லுவது என்று கேட்டாய். ஆணாதிக்கவாதி என்று நினைத்துவிடுவாளோ என்று உனக்கு அச்சம். ஆனால், பார்த்தாயா, இப்போது நடந்தது உன் தயக்கத்தைப் போக்கியிருக்கும். எனினும் அந்த யோசனையை நீ அவளுக்குத் தயக்கமில்லாமல் சொல்லுவதற்கு இப்படி ஒரு விபத்து நிகழ்ந்திருக்க வேண்டாம்!” என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விடுகிறார்.
“உண்மைதான். ஆனால் எதுவும் நம் கையில் இல்லை, அப்பா. விதிப்படிதான் எதுவும் நிகழும். …”
“மிஸ்டர் ஜெயராமனைப் பார்த்தாயா?”
“பார்த்தேன். ஆனால் நான் போன நேரத்தில் அவர் வீட்டில் இல்லை. அலுவலகம் சென்றிருந்தார். அதனால் நான் அங்கே போய் அவரைச் சந்தித்தேன். அவள் அம்மா இருந்தார். நான் கைகளைக் கூப்பி அவரை வணங்கியும், அவர் பதிலுக்குக் கூடக் கும்பிடவில்லை. உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். சுமதி சொல்லாமலே காப்பி எடுத்து வந்தார். ஆனால் காப்பிக் கோப்பையை ‘ணங்’ என்று முக்காலியில் வைத்தார். முகம் கடுகடுவென்று இருந்தது!”
“வைதிகமான பிராமணப் பெண்மணி. அதற்கு மேல் எதிர்பார்ப்பதற்கில்லை!”
“ஆமாமாம்! பெரிய முற்போக்குவாதி போல் காட்டிக்கொள்ளும் மிஸ்டர் கிஷன் தாசே தம் மருமகள் கிறிஸ்துவ மதத்துக்கு மாற வேண்டும் என்று சொல்லும் போது, அவரை யார் குறை சொல்ல முடியும்?”
முகம் தொங்கிப்போன நிலையில், ”அது பற்றித்தான் நாம் பேசி முடித்துவிட்டோமே, பிரகாஷ்! யோசனையின்றி இளைஞர்கள் செய்யும் வயசுக் கோளாறான செயல்கள் பின்னர் அவர்களின் குழந்தைகளைப் பாதிக்கக் கூடாதல்லவா! அதனால்தான் அந்தப் பெண்ணையும் கூட எச்சரிக்க வேண்டியது என் கடமை என்று நினைத்தேன், பிரகாஷ்!” என்று கிஷன் தாஸ் சமாளிக்கிறார்.
“சரி, சரி. போனது பற்றி மறுபடியும் நாம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நல்ல நோக்கத்துடன் அதை நீங்கள் செய்திருந்தால் சரிதான்.”
“அதென்ன ‘செய்திருந்தால்’ என்கிறாய்! அப்படியானால் என்னை நீ நம்பவில்லையா?”
“சேச்சே! ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நான் சொன்னதற்குத் தப்பர்த்தம் செய்துகொள்ளாதீர்கள். இனி அந்தப் பேச்சு வேண்டாம்!”
பிரகாஷ் எழுந்துகொள்ளுகிறான். ஓசையற்ற பெருமூச்சுடன் கிஷன் தாஸ் அவனது முதுகை வெறிக்கிறார். பின்னர், விட்டத்தை வெறித்தபடி படுத்துக்கொள்ளுகிறார்.
- இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் வெள்ளிக்கு விண்ணுளவி அனுப்பத் திட்டமிடுகிறது
- தமிழரல்லாத தமிழ்க்கவிஞர் மேமன் கவி ” குத்தியானா, ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”
- திடீர் மழை
- இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டில் தொல்காப்பிய நூன்மரபு
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
- தொடுவானம் 168.பறந்து சென்ற பைங்கிளி
- காணாமல் போனவர்கள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
- ஈரானியக் கவிதை. வாடகை வீடு.
- Sangam announces an International Drawing and Essay Writing Competition in Tamil
- ஆசி கந்தராஜாவின் படைப்புலகம் – ஓர் இரசனைக் குறிப்பு
- ‘கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும்’ ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 11