அன்று இரவும் நண்பர்கள் நாங்கள் மூவரும் சீன உணவகத்தில் கூடினோம். நான் சென்றுவந்தது பற்றி ஆவலுடன் இருவரும் கேட்டனர்.நான் நடந்தவற்றைக் .கூறினேன்.
அவர்கள் இருவரும் சிங்கப்பூரில்தான் இருந்தனர். ஆனால் அவர்களுக்கே அது தெரியவில்லை.
” அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் உனக்கு அதிர்ச்சியாக இருந்ததா? ” கோவிந்த் கேட்ட முதல் கேள்வி. அவன் இதையே கருவாக வைத்து ஒரு கதை எழுதலாம் என்று எண்ணியிருப்பான். எழுத்தாளராக விரும்புபவர்கள் சிறு சிறு துரும்பிலும் பல் குத்தவே விரும்பவர்.
ஆனால் பன்னீர் இதை வேறு விதத்தில் அணுகினான்.
” நீ அவளைக் காதலித்தபோது அந்த காதலுக்காக உன் அப்பாவிடம் எவ்வளவோ அடியும் உதையும் வாங்கியுள்ளாய். இப்போது அவள் வேறு ஒருவனுக்கு மனைவியாகிவிட்டாளே? நீ அவளுக்காக செய்த தியாகம் எல்லாம் இப்படி வீணாய்ப்போனதே. அதுதான் எனக்கு கவலை தருகிறது. ” இது பன்னீரின் கூற்று.
” இல்லை பன்னீர். இவர்கள் பிரிந்து ஆறு ஏழு வருடங்கள் ஆகிறது. இன்னும் எத்தனை நாட்கள் அவள் இவனுக்காக நம்பிக்கை இல்லாமல் காத்திருப்பாள்? அவள் செய்தது சரிதான் என்று எனக்குப் படுகிறது. இவர்களுடைய காதல் இவன் தமிழகம் சென்றபின்பு ஆட்டம் கண்டுவிட்டது என்றே நான் கருதுகிறேன். அதுவே இவனின் அப்பாவின் திட்டமும்கூட. ” கோவிந்த் விளக்க முற்பட்டான்.
” எனக்கு என்னவோ எல்லாமே வீண் என்றே தெரிகிறது. காத்திருப்பாள் என்றுதான் இவன் வேண்டாவெறுப்பாக தமிழகம் சென்றான். அவளும் இவன் டாக்டராகத் திரும்புவான் என்றுதான் ஆவலுடன் காத்திருந்திருப்பாள். ஆனால் அதுபோல் உன்னால் அவளுக்காகவே காத்திருக்க முடிந்ததா? நீ அங்கு வேறு பெண்களைப் பார்க்காமல்தான் இங்கே லதாவுக்காகத் திரும்பியுள்ளாயா? நீ உன் அப்பா சொன்ன பெண்ணை அல்லவா பார்க்க வந்துள்ளாய்? ” பன்னீர் என்னை மடக்கினான்.
நடந்தது நடந்துவிட்டது. இனி அது பற்றியெல்லாம் ஆராய்வதால் எந்த பயனும் இல்லை. நான் இன்னும் அவர்களிடம் அங்கு நடந்தவற்றையெல்லாம் விவரிக்கத் தொடங்கினேன். கோவிந்த் தன் கதைக்கு தக்க பொருள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ஆர்வத்துடன் கேட்கலானான். பன்னீர் இன்னும் இரண்டு ” அங்கர் பீர் ” வரவழைத்தான். கோவிந்த் இன்னொரு தேநீர் வாங்கிக்கொண்டான்.
நான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் காதலித்த அழகு மயில் வெரோனிக்கா பற்றி விவரித்தேன். வேலூரில் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது கிராமத்துக் குயில் கோகிலம் பற்றிய சோகக் கதையைக் கூறினேன். கேரளத்துப் பைங்கிளி கிறிஸ்ட்டில்டா மேரி பற்றியும் கூறினேன். இருவரும் ஆவதுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
” நீ சொல்வதைப் பார்த்தால் இன்னும் நிறைய பெண்கள் இருப்பார்கள் போல் தெரிகிறதே? ” பன்னீர் இடைமறித்தான்.
” ஆமாம். ஹவுஸ் சர்ஜனாக இருந்தபோது ஆந்திரா நகரி புத்தூரில் சுந்தர தெலுங்கு சுந்தரி கஸ்தூரி என்பவளையும் சந்தித்தேன். ” ..
” நீ பெரிய காதல் மன்னனாகத்தான் அங்கு இருந்துள்ளாய். அந்தச் சூழலில் நீ லதாவுக்காக காத்திருப்பது எப்படி? அவளும் உனக்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்றுதான் முடிவு செய்துவிட்டாள். இதில் நீங்கள் இருவருமே வருந்துவதில் பயன் இல்லை. ” கோவிந்த் தீர்ப்பு கூறினான்.
” உன் காதலிகள் இவ்வளவுதானா? இல்லை இன்னும் இருக்கிறார்களா? ” பன்னீர்தான் கேட்டான்.
” அதை இன்னொரு நாள் வைத்துக்கொள்வோம். ” என்றேன் தடுமாறியவாறு.
” உனக்கு சுவையான காதல் அனுபவங்கள் உள்ளன. முன்பே நீ காதல் கதைகள் ஏராளமாக எழுதியுள்ளாய். இப்போது இன்னும் தத்ரூபமாக நீ எழுதலாம். நீ இனி நாவல்களே எழுதலாம். ” கோவிந்த் காரியத்தில் கண்ணாய் இருந்தான்.
” கோவிந்த். இவன் தன்னுடைய காதலிகளைப் பற்றி சோகமாக சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் நீயோ கதை எழுத்துவதிலேயே இருக்கிறாயே? ” பன்னீர் அவனைக் .கடிந்துகொண்டான்.
” சோகமாகச் சொல்வதுபோல் தெரியலையே? சுவாரசியமாகத்தானே சொல்கிறான். இது போன்ற அனுபவம் எல்லாருக்கும் கிடைக்காது. அதனால்தான் இவற்றை கதையாக எழுதலாம் என்றேன். … ஆனால் ஒன்று. நீ இங்கு லதாவைக் காதலித்தபோது காதல் தெய்வீகமானது, புனிதமானது என்றெல்லாம் சொல்வாயே? அது என்னவாயிற்று? இத்தனைப் பெண்களைக் காதலிக்கும்போது அது எப்படி சாத்தியமாகும்? ” கோவிந்த் அருமையான கேள்வி கேட்டான்.
” இது நல்ல கேள்விதான். நான்கூட இது பற்றி எண்ணியதுண்டு. நான் இங்கிருந்தபோது சிறு வயது முதல் லதாவுடன் சேர்ந்து வளர்ந்து பின்பு அவள் மீது காதல் கொண்டதை நீங்கள் அறிவீர்கள். அப்போது நான் காதல் பற்றி தமிழ் இலக்கியங்களில் படித்ததை எண்ணியவாறு அதை புனிதமாகவும் தெய்வீகமாகவும் கருதினேன். அப்போது நான் வேறு பெண்களுடன் பழகும் வாய்ப்பும் இல்லாமல் இருந்தேன். ஆகவே லதாதான் எனக்கு எல்லாமாகத் தெரிந்தாள். அதனால்தான் அப்பா எவ்வளவோ தடுத்தும் அவளை என்னால் விட முடியவில்லை. அவர் தடுக்க தடுக்க என் காதல் மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரியவே செய்தது. அப்போது அவளுக்காக எந்த தியாகத்தையும் ஏற்க முடிந்தது.அவளைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் நான் தமிழகம் சென்றது உங்களுக்கும் தெரியும். அந்தக் காதலை ஒருவேளை சிலர் பால்ய வயதில் உண்டான பாலியல் கவர்ச்சி என்று கூறலாம். ஆனால் என்னைப்பொருத்தவரை நாங்கள் இருவருமே உண்மையாகக் காதலித்தோம்.அதனால்தான் அந்த பிரிவு அவ்வளவு சோகத்தை உண்டுபண்ணியது. அனால் நான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் வெரோனிக்காவைப் பார்த்ததும் ஆவலுடன் பேசியதும் அவள் மீதும் ஓர் இனம்தெரியாத ஈர்ப்பு உண்டானது. அப்போது நான் லதா பற்றி எண்ணாமல் இல்லை.அவளிடம் எனக்காக காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்துள்ளதையும் எண்ணிப்பார்த் ததும் உண்மை. ஆனால் வெரோனிக்காவிடம் பழகப் பழக அது காதலாக மாறுவது தெரிந்தது. அப்போது லதா மீது கொண்டுள்ள ஆர்வம் குறையாவிட்டாலும், வெரோனிக்காவின் நினைவே அதிகமானது. எங்கே லதாவை நான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடுவேனோ என்ற நிலையும் உண்டானது.. ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணை மறக்கவைக்க முடியும் என்ற உண்மை அப்போதுதான் தெரிந்தது. “
” நீ அனுபவப்பூர்வமாகப் பேசுவது தெரியுது. அப்போதே நீ லதாவுக்கு கடிதம் எழுதுவதை நிறுத்திக்கொண்டாயா? ” கோவிந்த் குறிக்கிட்டான்.
” இல்லை. நான் தமிழகம் வந்த புதிதில் . கடிதங்கள் வழக்கமாக எழுதிக்கொண்டிருந்தோம். அதற்கு பதில் வர இரண்டு மூன்று வாரங்ககளாகும். அதைக் கண்டதும் அப்போது மகிழ்வேன். ஆனால் வெரோனிக்காவை அன்றாடம் கண்டு மகிழ்ந்தேன். “
” வெரோனிக்காவையும் லதாவையும் ஒரே நேரத்தில் காதலித்தாயா? ” கோவிந்த்.
” என்னப்பா இது? ஒரே நேரத்தில் இரண்டு காதலா? இது சாத்தியமா? ” பன்னீர் வியப்புடன் கேட்டான்.
” ஒரே நேரத்தில் இரண்டு காதல் என்று சொல்ல முடியாது. ஒருத்தி கடலுக்கப்பால் தொலைதூரத்தில் உள்ளாள்.இன்னொருத்தி அருகிலேயே உள்ளாள்.அருகில் உள்ளவள்மீதுதானே ஆர்வம் உண்டாகும்? ” நான் விளக்க முயன்றேன்.
” வெரோனிக்க அருகில் இருந்ததால் அவள் மீது காதல் வளர்ந்தது. லதா தொலைவில் இருந்ததால் அவள் மீது காதல் தேய்ந்தது. இப்படி சொல்வது சரியா? ” கோவிந்த் கேள்வி எழுப்பினான் என்னை இடைமறித்து.
” அப்போ இந்தக் காதல் என்பது எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் தோன்றலாம் என்கிறாயா காதல் மன்னா? ” பன்னீர் கிண்டலடித்தான்.
” என்னுடைய அனுபவத்தில் காதல் அப்படிதான் தெரியுது. அது ஓர் உணர்வு. அது உள்ளம் தொடர்புடையது. அது எ ந்தச் சூழ்நிலையிலும் தோன்றலாம். நான் லதாவைக் காதலித்தபோது அவளிடம் உண்மையாக இருந்தேன். வெரோனிக்காவைக் காதலித்தபோது அவளிடமும் உண்மையாகவே இருந்தேன். நான் அப்போது லதாவை ஏமாற்றுவதாகத் தெரியவில்லை. இரண்டுமே காதல்தான். ” நான் முடிவாகக் கூறினேன்.
” இது காதலுக்கு நீ தரும் புது விளக்கம்.இது நவீனத்துவக் காதல் ” கோவிந்த் சிரித்தவாறு கூறினான்.
பன்னீர் சொல்வதறியாது திகைத்தான். நான் இதோடு காதல் பற்றி சொல்வதை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
” சரி. நான் என் காதலிகள் பற்றி சொன்னேன். நீங்கள் இருவரும் எப்படி? உங்களின் காதல் அனுபவம் எப்படி? ” நான் அவர்களைப் பார்த்து கேட்டேன்.
” எனக்கு இது பற்றியெல்லாம் ஏதும் தெரியாது. ” கோவிந்த் தப்பிக்க முயன்றான்.
” உனக்கு காதல் அனுபவம் இன்னும் இல்லை என்கிறாய். பின் எப்படி காதல் உணர்வுகள் பற்றி உன்னால் யதார்த்தமாக எழுத முடியும்? கொஞ்சமாவது காதலை அனுபவத்திருந்தால்தானே நீ எழுதும் காதல் கதைகள் தத்ரூபமாக இருக்கும்? ” நான் அவனை மடக்கினேன்.
” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் கற்பனையிலேயே காதலை எழுதிவிடுவேன் ” சமாளித்தான் கோவிந்த்.
” நான் இப்போதுதான் ஒருத்தியைக் காதலிக்கிறேன். ” பன்னீர் கூறலானான்.
” வாழ்த்துகள். யார் அவள்? என்ன செய்கிறாள்? “நான் குறுக்கிட்டேன்.
” அவள் பிரபா. பஞ்சாபி. ஃப்ரேசர் அண்ட் நீவில் வேலை செய்கிறாள். ” பன்னீர் பெருமையுடன் சொன்னான்.
” ஆமாம். நல்ல அழகி. மிகவும் அன்பாகப் பழகுபவன்> ” கோவிந்த் சான்றிதழ் வழங்கினான்.
” நான் பார்க்கவேண்டுமே ? “நான் ஆர்வம் காட்டினேன்.
( தொடுவானம் தொடரும் )
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதை
- ஆல்டஸ் ஹக்ஸ்லியும் அருவக் கைக் கூர் ஊசியும்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20 (முற்றும் )
- உறவின் திரிபு !
- குறிவைக்கப்படும் தலித் செயல்பாட்டாளர்கள்..
- தொடுவானம் 178. காதலே தெய்வீகக் காதலே
- காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில்
- உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கல சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.
- நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்
- சங்க இலக்கியத்தில் மறவர்
- கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]