21.
கிஷன் தாஸ் பங்களாவின் நடுக்கூடம். சுமதியும் சுந்தரியும் வந்து சேர்ந்தாகிவிட்டது. கிஷன் தாஸ், பிரகாஷ், சுமதி, சுந்தரி, பீமண்ணா ஆகியோர் காப்பி குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கிஷன் தாஸ், “பிரகாஷ்! நான் சுமதியோடு கொஞ்ச நேரம் தனிமையில் பேச வேண்டிய திருக்கிறது.… ” என்கிறார்.
குறிப்பறிந்து எழுந்து கொள்ளும் பிரகாஷ், தன்னோடு வருமாறு சுந்தரிக்கும் பீமண்ணாவுக்கும் சைகை செய்த பின், “அப்பா! விமானதளத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது நான் சுமதிக்கு உங்கள் குழந்தைப் பருவத்துக் கதை முழுவதையும் சொல்லியாகிவிட்டது. எனவே நீங்கள் மறுபடியும் அதையெல்லாம் அவளுக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பீமண்ணாவின் அம்மாவைக் கண்டுபிடித்து இங்கே அழைத்து வருவதற்கும் நான் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காவல்துறை அதில் மும்முரமாய் முனைந்திருக்கிறார்கள்,” என்று கூறுகிறான்.
“சரி, பிரகாஷ்! நல்ல வேலை செய்தாய்!” என்னும் கிஷன் தாஸ் அவர்கள் அங்கிருந்து சென்ற பின், “சுமதி! என்னை மன்னிப்பாயா?” என்கிறார்.
“பிரகாஷின் முகவரி அட்டையை அனுமதி யில்லாமல் பயன்படுத்தியதற்காக நீங்கள்தான் முதலில் என்னை மன்னிக்க வேண்டும், அப்பா!”
“என்னது! என்ன சொல்லி என்னை அழைத்தாய்? அப்பா என்றா சொன்னாய்?” என்று கேட்கும் கிஷன் தாசின் குரல் தழுதழுக்கிறது.
“தமிழ்நாட்டில் மாமனாரை அப்பா என்றும் மாமியாரை அம்மா என்றும் பெண்கள் அழைப்பது மரபு!”
“ஓ! அப்படியா! நல்ல, போற்றத்தகுந்த மரபு! … அப்புறம் இன்னொரு விஷயத்துக்காகவும் நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும், சுமதி! துளியும் நம்பவே முடியாத ஒரு கொடுஞ்செயலை நான் செய்துள்ளதற்காக! அது பற்றிப் பிரகாஷுக்குத் தெரியாது…. எனினும், அவனிடமும் அது பற்றி ஒரு நாள் நான் கட்டாயம் சொல்லத்தான் போகிறேன்… உன்னைக் கொல்லுவதற்கு முயற்சி செய்தது யார் என்று உனக்குத் தெரியுமா, சுமதி?”
“தெரியும்! உங்கள் தொழில் சார்ந்த ஒப்பந்தக்காரர் – சென்னையில் உள்ள – ரகுவீர் இரண்டு நாள்களுக்கு முன்னால் இதயத் தாக்குதலுக்கு ஆட்பட்டு இறந்து போனார். அது பற்றிய செய்தி உங்களுக்கும் விரைவில் வரும். ஒரு மருத்துவ மனையில், மரணப்படுக்கையில் இருந்த அவர் தம் கடைசி நேரத்தில் மனச்சாட்சியின் உறுத்தலுக்கு ஆளாகி என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். போனேன். எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன அவர் தம்மை மன்னிக்கும்படி என்னிடம் வேண்டினார். ‘என் முதலாளி டில்லி கிஷன் தாஸ் அவர்கள் உத்தரவின்படி நான் ஆள்கள் வைத்து உங்களைத் தாக்க ஏற்பாடு பண்ணினேன், அம்மா. நீங்கள் அவர் வீட்டு மருமகள் ஆன பிறகும் கூட அவர் உங்கள் உயிரைப் பறிக்க ஏற்பாடு செய்ய மாட்டார் என்று சொல்ல முடியாது. எனவே அவர் மகனை மணக்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள்’ என்று அவர் எனக்கு அறிவுரை சொன்னார். ‘என் வருங்கால மாமனார் நிச்சயம் விரைவில் மனமாற்றம் அடைவார். ஏனெனில், அடிப்படையில் அவர் மிக நல்லவர்’ என்று நான் அவருக்குப் பதிலளித்தேன். இது பற்றி நான் என் அப்பாவுக்குக் கூடச் சொல்லவில்லை. பிரகாஷுக்கும் இது பற்றித் தெரியவே கூடாது. தெரிவிக்க மாட்டேன் என்று எனக்கு வாக்குக்கொடுங்கள், அப்பா! தயவு செய்து வாக்குக் கொடுங்கள்!”
திடுக்கிட்டும் அதிர்ந்தும் போகும் கிஷன் தாஸ் வயடைத்துப் போய்ச் சிலையாய்ச் சமைந்தவர் போல் அசைவற்றுப் போகிறார்.
தடுமாறித் தழுதழுக்கும் குரலில், “சரி, சுமதி. அவனுக்குச் சொல்ல மாட்டேன். இது சத்தியம். பிரகாஷின் மேல் நீ வைத்திருக்கும் அன்பு எவ்வளவு உயர்ந்தது, சுமதி! உன் இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்திருந்தாலும் அவள் எதற்கு வம்பு என்று பின் வாங்கி யிருந்திருப்பாள்…. தவறான நோக்கங்கள் இந்த முட்டாள் கிஷன் தாசின் அரக்கத்தனமான மூளைக்குள் எப்படியோ புகுந்து கொண்டு விட்டன. அவனை நீ மன்னிப்பாயா, சுமதி? நான் இப்போது ஒரு மாறிய மனிதன். என்னை நம்புகிறாயா?” என்கிறார்.
“கண்டிப்பாக நம்புகிறேன், அப்பா! உங்கள் சொத்தில் பாதியை எனக்கு நீங்கள் கொடுக்கப் போவதாய்ப் பிரகாஷ் சொன்னான். அது நியாயமற்றது. சட்டப்படியான வாரிசு பிரகாஷ் மட்டுமே. அதில் ஒரு காசு கூட நான் எடுத்துக்கொள்ள மாட்டேன்! என்னை மன்னியுங்கள், அப்பா! தயவு செய்து மன்னியுங்கள்!”
“இப்படித்தான் நீ சொல்லுவாய் என்று ஏற்கெனவே நான் ஊகித்திருந்தேன். ஆனால் நான் உயிலை எழுதிவிட்டேன். …”
“அதனால் என்ன? மாற்ற முடியுமே! உடனே அதை மாற்றுங்கள்.”
“முடியாது. நீ அதை ஏற்கத்தான் வேண்டும். இல்லையென்றால், நீ என்னை மன்னிக்கவில்லை என்பதாகவே நான் எடுத்துக்கொள்ளுவேன். … அப்புறம் … இன்னொரு விஷயம்…. உங்கள் கல்யாணத்துக்குப் பிறகு கொஞ்ச நாள் உங்களுடன் இருப்பேன். பீமண்ணாவும், இங்கு விரைவில் வந்து சேர இருக்கும் அவன் தங்கை பானுவும் கூட இங்குதான் இருப்பார்கள். எல்லாருடனும் நான் சேர்ந்து இருக்கப் போகும் நாள்கள் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த காலமாக இருக்கும்…. கொஞ்ச காலம் நான் உங்களுடன் இருப்பேன். அதன் பிறகு….” – சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்காமல் கிஷன் தாஸ் மவுனமாகிறார். ஆனால் அவர் உதடுகள் துடிக்கின்றன.
“அதன் பிறகு?” என்று வினவும் சுமதியின் குரலில் ஓர் அச்சம் தெரிகிறது. அவள் அதிர்ந்து போய் அவரைப் பார்க்கிறாள்.
கிஷன் தாஸ் பெரிதாய்ச் சிரிக்கிறார். ஆனால், அவர் கண்ணிமைகள் நனைந்திருக்கின்றன.
“வேறு எதையோ கற்பனை செய்து பயந்து போய்விட்டாயா என்ன! அப்படியெல்லம் நான் செய்ய மாட்டேன். நான் கோழையா என்ன? எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல ஏற்பாட்டையும் செய்த பிறகு, நான் குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தியிருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதிச் சரணடைந்து மன்னிப்புக் கேட்பேன். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை யெனில், சட்டப்படியான தண்டனையை ஏற்றுச் சிறை செல்லுவேன்….”
“உங்கள் முடிவு போற்றத்தக்கதுதான். ஆனால் அப்படி எதையும் செய்யாதீர்கள். உங்கள் தவற்றை நீங்களே உணர்ந்து விட்டீர்கள். அதைச் சரிசெய்து ஈடுகட்டவும் போகிறீர்கள். எனவே இது தேவையில்லாதது. வேண்டாம்.”
“இல்லை, சுமதி. நான் அப்படித்தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உன்னைப்போன்ற ஒரு நல்ல பெண்ணை மருமகளாய் அடையும் தகுதி எனக்குக் கிடையாது என்றே ஆகும்!”
அப்போது பானுவுடன் பத்ரிநாத் அங்கு வந்து சேர்கிறான். பானு பேரழகியாக இருக்கிறாள். ஆனால் இளைத்து ஆரோக்கியமற்றுத் தெரிகிறாள்.
கிஷன் தாஸ் உற்சாகக் குரலில், “ஓ! வாருங்கள், வாருங்கள் உட்காருங்கள்…. பிரகாஷ்! உன் கூட்டாளிகளுடன் இங்கே வா…. உன் பெயர் பானுதானே?” என்கிறார்.
“ஆமாம், சார்!” என்று கூச்சத்துடன் பானு பதில் அளிக்கிறாள்.
“சார் என்று சொல்ல வேண்டாம். மாமா என்று கூப்பிடு… உனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது… அங்கே பார் – வருவது யார் என்று தெரிகிறதா?”
சுந்தரியும் பீமண்ணாவும் பின் தொடர, பிரகாஷ் அங்கே வருகிறான். பீமண்ணாவின் பார்வையும் பானுவின் பார்வையும் சந்தித்துக் கொள்ளும் அந்தக் கணத்தில், நம்ப முடியாத வியப்புடன் பானு எழுந்து நிற்கிறாள்.
குரல் அடைக்க, “பீமண்ணா! நீயா!” என்று கூடியபடி அவனை நோக்கி விரைகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் கைபற்றிக் கண்கலங்குகிறார்கள். இரட்டையர் இருவரும் ஒன்று சேர்ந்த உணர்ச்சி மயமான நிகழ்வால் பாதிக்கப்பட்டு அங்கிருக்கும் எல்லாருமே மகிழ்ச்சி யடைந்து அவர்களைப் பார்த்தவண்ணம் இருக்கிறார்கள்.
கிஷன் தாஸ் சைகை செய்து பத்ரிநாத்தை அழைத்துக்கொண்டு தம் அறைக்குப் போகிறார். பின்னர் அவன் கையில் மிகப் பெருந்தொகை யொன்றைக் கொடுக்கிறார்.
“உனக்குத் திருப்திதானே, பத்ரிநாத்?”
“ரொம்பவே அதிகம், சார்!” என்று அவன் பல்லைக் காட்டுகிறான்.
“பரவாயில்லை. இருக்கட்டும். அந்தக் குழந்தைகள் இருவரும் எவ்வளவு மகிழ்ச்சி யடைந்துள்ளார்கள், பார்த்தாயல்லவா! அவர்களுடைய அம்மாவையும் காவல் துறை விரையில் கண்டுபிடித்துவிடும். நீயும் கண்டு பிடிக்கப் பார். இவ்வளவு பெரிய தொகையை நான் உனக்கு என் முட்டாள்தனத்தினால் கொடுப்பதாய் நினைக்காதே. உன் அருவருப்பான தொழிலை விட்டு விட்டு நேர்மையான வேறு ஏதேனும் நல்ல தொழிலை நீ செய்ய வேண்டும் என்பதற்காகவே இதைத் தருகிறேன். இந்த முதலீட்டுடன் அப்படிச் செய்தால் விரைவிலேயே நல்ல நிலைக்கு வருவாய்…. சரி. போய்வா!…”
அவனை அனுப்பிய பின் கிஷன் தாஸ் கூடத்துக்குத் திரும்பி வந்து உட்காருகிறார்.
“மகிழ்ச்சியான இந்த நேரத்தை நாம் கொண்டாட வேண்டாமா? … நகுல்… இங்கே வா!” என்று அவர் கூவுகிறார்.
நகுல் வந்து நிற்கிறார்: “சொல்லுங்கள், அய்யா!”
”நகுல்! பிரமாதமான விருந்துக்கு ஏற்பாடு செய். மறக்கவே முடியாத அளவுக்கு நீ செய்யும் அயிட்டங்கள் இருக்க வேண்டும். தெரிந்ததா?”
“அப்பா! இன்றைக்கு நாம் நகுலுக்கு ஓய்வு தரலாமே! நாம் எல்லாரும் ஒரு நல்ல ஓட்டலுக்குப் போய் ஒரு வெட்டு வெட்டலாமே! … அது ஒரு மகிழ்வுலா மாதிரியும் இருக்கும்… நகுலும் ஒரு மாற்றத்துக்கு நம்மோடு வந்து விருந்து உண்ணட்டும்!”
“நல்ல யோசனை!”
“நான் ஒத்துக்கொள்ள மாட்டேன், அய்யா! உங்கள் எல்லாருக்கும் விருந்து தயாரிக்கிற மகிழ்ச்சியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்! உங்களில் சிலர் நீண்ட தொலைவு பயணம் செய்து வந்துள்ளதால் களைத்துப் போயிருப்பீர்கள். மறுபடியும் காரில் வெளியே போவது களைப்பை உண்டாக்கும். எனவே சின்னய்யாவின் ஓட்டல் விருந்து யோசனையை இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம். இன்று வேண்டாம்!”
இவ்வாறு பெருங்குரலில் கட்டளை யிடும் தொனியில் அறிவித்துவிட்டு நகுல் ஒரு பட்டாளத்துச் சிப்பாயைப் போல் – முகத்திலும் ஒரு கோமாளியைப் போன்ற கோணல்களைத் தோற்றுவித்துக்கொண்டு – டாக் டாக் என்று ஒலிக்கும் தப்படிகளுடன் இருபுறங்களிலும் கைகளை அசைத்தபடி சமையலறை நோக்கி நடை போடுகிறார். அதைப் பார்க்கும் எல்லாருக்கும் சிரிப்பு வருகிறது.
பின்னர் கிஷன் தாஸ், “சுமதி, சுந்தரி! இப்போது உங்களுடன் நான் தனிமையில் பேசவேண்டும். பிரகாஷ்! நீ பீமண்ணாவையும் பானுவையும் அந்த டி.வி. அறைக்கு அழைத்துக்கொண்டு போ!..” என்கிறார்.
போலியாய் எரிச்சல் காட்டியபடி, “என்ன ஆச்சு உங்களுக்கு இன்று? மாற்றி மாற்றி ரகசியப் பேசசு நடத்துகிறீர்களே! … சரி…. பீமண்ணா! பானு! நாம் டி.வி. அறைக்குப் போகலாம், வாருங்கள்!” என்னும் பிரகாஷ் இருவருடனும் அங்கிருந்து அகல்கிறான்.
அவர்கள் மறைந்த பின், “பெண்களே! நான் இப்போது பேசப் போகும் விஷயம் கொஞ்சம் நெருடலானது. … இந்தப் பெண் பானுவை அந்த அயோக்கியன் ஒரு விலைமாதர் விடுதிக்கு விற்றிருக்கிறான்… சில நாள் முன்னர் தான் இது எனக்குத் தெரிய வந்து நான் ஒரு விலை கொடுத்து அவளை இங்கே கொண்டுவர ஏற்பாடு செய்தேன். …” என்று தொடங்கும் கிஷன் தாசின் குரல் கம்முகிறது.
சமாளித்துக்கொண்டு அவர் தொடர்கிறார்: “நீங்கள் இருவரும் அந்தப் பெண்ணிடம் நாசூக்காய்ப் பேசி, அவளை ஒரு டாக்டரிடம் அழைத்துப் போகவேண்டும். எய்ட்ஸ் போல் ஏதேனும் நோய்வாய்ப் பட்டிருக்கிறாளா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்….” – “எய்ட்ஸ்” எனும் சொல்லை உச்சரிக்கும் போதே அவர், குரல் தடுமாறி, தம்மிரு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொண்டு விம்முகிறார்.
சுமதி எழுந்து அவரை அணுகி நின்று, “அப்பா! அமைதி! அமைதி! கடவுள் நம் எல்லாரிடமும் அன்போடுதான் நடந்துகொண்டுள்ளார். அப்படி இருந்திராவிட்டால், இந்தக் குழந்தைகளை நாம் சந்திக்கவே வாய்த்திருந்திருக்காது. பிராயச்சித்தம் செய்யும் வாய்ப்பும் கிட்டியிருந்திராது. நீங்கள் அந்த பத்ரிநாத் என்பவருடன் உங்கள் அறைக்குப் போயிருந்த நேரத்தில் நாங்கள் நாசூக்காக அவளிடம் அது பற்றி விசாரித்து விட்டோம். அது ஒரு துப்புரவான விடுதி என்றும் தடுப்புமுறைகள் பயன்படுத்தப் பட்டதாகவும் தெரிவித்தாள். அவ்வப்போது எல்லாருக்கும் மருத்துவப் பரிசோதனைகளும் நடக்கும் என்றும் கூறினாள். தனக்கு எய்ட்ஸ் இல்லை என்றும் சொன்னாள். ஆனால் சொல்லிவிட்டு வேதனையுடன் அழுதாள்… பாவம்!” என்கிறாள்.
கண்களைத் துடைத்துக்கொள்ளும் கிஷன் தாஸ், “எப்படி யானாலும் நாம் அவளை ஒரு நல்ல டாக்டரிடம் அழைத்துச் சென்று மீண்டும் சோதித்து விடலாம்…. நீ சொன்னதும் சரிதான், சுமதி. துளியும் தகுதியே இல்லாத என்னிடம் கடவுள் கருணையோடுதான் நடந்திருக்கிறார்….” என்கிறார்.
“இல்லை, இல்லை! அப்படிச் சொல்லாதீர்கள். தங்கள் தப்பை உணர்ந்து திருந்தி அதற்குக் கழுவாயும் தேடும் நல்ல இதயம் படைத்த உங்களைப் போன்றவர்களே கடவுளுக்குப் பிடித்தமானவர்கள்…. எனவே முகவாட்டத்தைக் கைவிடுங்கள், அப்பா! மகிழ்ச்சியாக இருங்கள்!”
“அந்தப் பெண்ணுக்கு எய்ட்ஸ் இல்லை என்று திட்டவட்டமாய்த் தெரிந்த பிறகுதான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும், சுமதி! அப்படி இல்லாது போனால், என்னை நானே கொன்று கொள்ளுவேன்!”
“அப்படி யெல்லாம் சொல்லாதீர்கள், அப்பா!…”
அந்த நேரத்தில் தொலைபேசி ஒலிக்கிறது. கிஷன் தாஸ் ஒலிவாங்கியை எடுத்துப் பேசுகிறார்: “நன்றி, கமிஷனர் சர்! அந்தப் பெண் விஜயவாடாவில் இருக்கிறாரா? இவ்வளவு விரைவாய்க் கண்டுபிடித்திருக்கிறீர்களே! மிக்க மகிழ்ச்சியும் பாராட்டுகளும், சர்! அவரை இங்கே அழைத்து வர நான் ஏற்பாடு செய்கிறேன். அவரது முகவரியைச் சொல்லுகிறீர்களா?”
காவல்துறை ஆணையர் சொல்லும் முகவரியை அவர் எழுதிக்கொள்ளுகிறார்.
“அட! அதற்குள் கண்டுபிடித்து விட்டார்களா! மனம் வைத்தால் நம் காவல் துறையினர் எதையும் சாதிப்பார்கள்! … இப்[போது பிரகாஷும் மற்றவர்களும் இங்கே வரலாம்தானே?” என்று சுமதி கேட்கிறாள்.
“வரட்டும். வரட்டும். இந்த நல்ல செய்தியை அவர்களுக்கும் சொல்லலாம்…”
சுமதி இரைந்த குரலில் எல்லாரையும் கூப்பிடுகிறாள். எல்லாரும் புன்சிரிப்புடன் ஓடி வருகிறார்கள். அவர்களின் மலர்ந்த முகங்களை நோக்கும் கிஷன் தாசின் முகமும் மலர்கிறது.
கிஷன் தாசைப் பார்த்தபடி, சுமதி, “ஆங்! அப்படித்தான்! இனி எல்லார் முகங்களிலும் புன்னகைதான் தவழ வேண்டும். இனி கண்ணீரே கூடாது. வாய்ச் சண்டையும் கூடாது!” என்று சொன்ன பிறகு, குறும்பாய் அவரிடம் “பரீட்சைகளும்தான்!” என்று முடிக்கிறாள்.
முகம் அசடுதட்டிப் போனாலும் சமாளித்தபடி, சுமதியைப் போன்றே குறும்புப் புன்னகையுடன், “அதே போல், பிரகாஷுடையவோ கிஷன் தாசுடையவோ முகவரி அட்டையையும் யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது!” என்கிறார்.
இப்போது சுமதி தன் முகத்தில் அசடு வழிவது போல் வைத்துக்கொள்ளுகிறாள். எல்லாரும் சிரிப்புடன் அதை ரசிக்கிறார்கள். சொல்லிவைத்தார்ப்போல் ஒருசேரக் கைகளையும் தட்டுகிறார்கள். நகுலும் தன் பங்குக்குச் சமையலறையை விட்டு வெளியே வந்து அவர்களுடன் சேர்ந்து ஒரு தட்டில் கரண்டியால் தாளத்துடன் தட்டுகிறான்!
/ முற்றும் /
jothigirija@live.com
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதை
- ஆல்டஸ் ஹக்ஸ்லியும் அருவக் கைக் கூர் ஊசியும்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20 (முற்றும் )
- உறவின் திரிபு !
- குறிவைக்கப்படும் தலித் செயல்பாட்டாளர்கள்..
- தொடுவானம் 178. காதலே தெய்வீகக் காதலே
- காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில்
- உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கல சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.
- நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்
- சங்க இலக்கியத்தில் மறவர்
- கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]