டாக்டர் ஜி. ஜான்சன்
213. நண்பனின் கடிதம்.
நண்பன் சென்ற பின்பு சில நாட்கள் அவன் நினைவாகவே இருந்தது. வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினேன். அவன் பெண் பார்க்கவே தமிழகம் வந்திருந்தான். அத்தை மகளையும் பார்த்துவிட்டான். ஆனால் அவர்களுக்கு முடிவைத் தெரிவிக்காமல் கடிதம் போடுவதாகச் சொல்லியுள்ளார். என்னிடமோ பெண் குண்டாக இருப்பதாகவும் தனக்கு ஒல்லியான பெண் வேண்டும் என்றும் சொன்னான்.
இரண்டு வாரங்கள் கழிந்தன. சிங்கப்பூரிலிருந்து ஓர் ஏர் மெயில் கடிதம் வந்தது. அதை கோவிந்தசாமிதான் எழுதியிருந்தான்.ஆவலோடு அதைப் பிரித்தேன். அதில் அவன் தமிழகம் வந்த நோக்கத்தை மீண்டும் விவரித்திருந்தான்.அதில் புதுக்கோட்டை சென்றதையும் அத்தை மகளைப் பார்த்ததையும் எழுதி, திரும்பி வரும் வழியில் தனக்கு ஒல்லியான பெண் வேண்டும் என்பதைச் சொன்னதையும் நினைவுபடுத்தியிருந்தான்.அதை இன்னும் சுற்றி வளைக்க விரும்பவில்லை என்றும் அவனுக்கு அந்த ஒல்லியான பெண் கலைமகளாகவும் இருக்கலாம் என்றும் எழுதியிருந்தான். கலைமகளை பார்த்த மாத்திரத்தில் அவனுக்குப் பிடித்துவிட்டதாகவும் எழுதியிருந்தான். நெருங்கிய நண்பனான என்னிடம் இப்படி நேரிடையாக எழுதியதில் தவறு இருந்தால் தன்னை மன்னிக்கும்படியும் கேட்டிருந்தான். அப்படி அவனுடைய கோரிக்கைக்குச் சம்மதமெனில் உடன் கலைமகளுக்கு கடப்பிதழ் எடுக்குமாறும் கூறியிருந்தான்.
அதோடு இன்னொரு முக்கிய பொருள் பற்றியும் எழுதியிருந்தான். அது சிங்கப்பூர் மருத்துவக் கழகம் பற்றியதாகும். வெளி நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு அவர்கள் தேர்வு வைக்கப்போவதாகவும் அதில் நான் கலந்து கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தான்.ஒரு வேளை கலைமகளை சிங்கப்பூருக்கு அழைத்து வர நேர்ந்தால் நான் அந்த தேர்வையும் எழுதிவிடலாம் என்றும் தெரிவித்திருந்தான்.
கடிதத்தைப் படித்து முடித்தபின்பு ஒரு கணம் நான் திக்குமுக்காடிப்போனேன். அது கவலையா அல்லது மகிழ்ச்சியா என்று தெரியவில்லை. ஒருவிதமான குழப்பம் எனலாம். ஆனால் இது போன்ற ஒரு சந்தேகம் எனக்கு இருந்தது. அவன் ஒல்லியான பெண் வேண்டும் என்று சொன்னதும், அன்று பழங்களும் மல்லிகைச் சரத்தையும் கலைமகளிடம் தந்ததும் அந்த சந்தேகத்தை உண்டுபண்ணியது. ஆனால் நானும் அவனிடம் அதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவனும் பட்டும் படாமல்கூட ஏதும் சொல்லவில்லை. ஒருவேளை எப்படி அதைச் சொல்வது என்று தயங்கியிருக்கலாம்.
நான் கலைமகளிடம் கடிதம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மனதுக்குள் நான்றாக யோசித்தேன். நான் இங்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. திருச்சபைக்கு ஆற்றவேண்டிய சேவை காலமும் முடிந்துவிட்டது. நான் இனி சிங்கப்பூர் திரும்புவதில் தவறில்லை. அனால் அங்கே மருத்துவனாக வேலை கிடைக்கவேண்டும். இல்லையேல் திரும்பவும் திருப்பத்தூருக்குதான் வரவேண்டும். முன்பே இனி வாழ்நாள் முழுதும் தமிழகமே கதி என்ற நிலையில்தான் வந்திருந்தேன். இப்போது தேர்வு எழுத ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. அதற்கான ஏற்பாட்டை கோவிந்தசாமி செய்யப்போகிறான். இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அடுத்தது கலைமகளை அவன் பெண் கேட்பது. அவனுக்குத் தருவதில் தவறில்லை. அவன் பாவம். சிறு வயதிலிருந்து தாய் அன்பு இல்லாமல் வாழ்ந்தவன். இப்போது தந்தையும் இல்லை. தனியாகவே வாழ்ந்து வருகிறான். கடையில்தான் மூன்று வேலையும் சாப்பிடுகிறான். தீய பழக்கக்கங்கள் இல்லாதவன்.கடினமாக உழைக்கும் நல்ல உழைப்பாளி. எல்லாவற்றுக்கும் மேலாக என்னுடன் பால்யப் பருவத்திலிருந்து ஒன்றாக வளர்ந்தவன்.நண்பன் மைத்துனன் ஆவதில் தவறில்லைதான். ஆனால் இதுபற்றி நான் முதலில் கலைமகளிடம் பேசியாகவேண்டும். நல்ல வேளையாக கலைமகளும் கோவிந்தைப் பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டுவிட்டது. வீட்டில் மூன்று நாட்கள் தங்கியுள்ளான்.இருவரும் பேசியும் இருப்பார்கள்.
கலைமகள் சம்மதம் தெரிவித்தால் பிரச்னை இல்லை. அநேகமாக என்னுடைய அபிப்பிராயத்தையும் கேட்கலாம். நானும் சிங்கப்பூரில் வேலையில் இருப்பேன் என்றால் சம்மதிக்கலாம்.
கலைமகள் சம்மதித்துவிட்டால் உடன் நான் ஊர் சென்று அப்பாவிடமும் அம்மாவிடமும் சம்மதம் பெற வேண்டும். அண்ணனிடமும் அண்ணியிடமும் அப்படியே தெரிவித்துவிட்டு திரும்பலாம்.
கலைமகளுக்கு இரண்டு முறை மாப்பிள்ளைகள் உள்ளனர். ஒருவன் அத்தை மகன் பாஸ்கரன். அவன் தாம்பரத்தில் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரிகிறேன். உருவத்தில் அவன் என்னைப்போலவே இருப்பான். பாசமிக்கவன். அவனுடன் நேரத்தைக் கழிப்பது மகிழ்ச்சியாக இருக்கும். நான் தாம்பரம் செல்லும்போதெல்லாம் மிலிட்டரி ரம் வாங்கிவருவான்.என்னைக் காணும்போதெல்லாம் தாம்பரத்தில் ஒரு வீடு கட்ட வற்புறுத்துவான். அடுத்தவன் செல்லக்கண்ணு மாமன் மகன் செல்வராஜ். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. முடித்துவிட்டு ஃபூட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் குமாஸ்தாவாக பணிபுரிகிறான். மிகவும் சாதுவானவன், மரியாதையானவன். செல்லக்கண்ணு மாமாவின் மூத்த மகன். மாமாவுக்கு கலைமகளை அவனுக்குக் கட்டி வைக்க ஆசைதான். அவர் இன்னும் கேட்கவில்லை. இந்த இரண்டு இடங்களிலும் நான் எதையாவது சொல்லி சமாதானப்படுத்தவேண்டும்.
ஒரு வேளை நான் எண்ணியபடி எல்லாம் நடந்தால் நான் கலைமகளைக் கூட்டிக்கொன்டு சிங்கப்பூர் சென்றுவிடுவேன். அங்கு தேர்வு எழுதி வெற்றி பெற்று அங்கேயே வேலைக்கு சேர்ந்துவிடுவேன். மலேசியாவில் மனைவியும் மகனும் இருப்பதால் அவர்களையும் சிங்கப்பூருக்குக் கூட்டி வந்துவிடலாம்.
அப்படி நான் சிங்கப்பூர் சென்றுவிட்டால் என் இளைய தங்கை கலைசுந்தரியை கிராமத்தில் விட்டுச் செல்லவேண்டி வரும். அப்பாவின் முன்கோபத்துக்குமுன் கலைசுந்தரியால் இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அந்த காரணத்தினால்தான் நான் கலைமகளை என்னுடன் திருப்பத்தூருக்குக் கொண்டுசென்றேன். இப்போது கலைசுந்தரிக்கும் ஒரு வழி செய்தாக வேண்டும்.
கலைசுந்தரி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளாள்.. இனி தெம்மூரில்தான் இருக்கவேண்டும். நான் சிங்கப்பூர் செல்லுமுன் கலைசுந்தரிக்கும் திருமணம் செய்து வைத்துவிடடால் நல்லது என்று மனதில் தோன்றியது. முன்கோபக்காரரான அப்பாவிடம் என் தங்கையை விட்டுச் செல்ல எனக்கு மனம் இல்லை.
இந்த எல்லா ஏற்பாடுகளும் கலைமகள் என்ன பதில் சொல்வாள் என்பதிலேதான் உள்ளது. இனியும் தாமதிக்காமல் கலைமகளிடம் கேட்டுவிட வேண்டும்.
( தொடுவானம் தொடரும் )
- கடல் வந்தவன்
- ஒன்றுமில்லை
- மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….
- சொல்லத்தான் நினைக்கிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :
- நெஞ்சு வலி
- தொடுவானம் 213. நண்பனின் கடிதம்.
- தப்புக் கணக்கு
- கவனம் பெறுபவள்
- மறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்
- பாலின சமத்துவம்
- அக்கா !
- “பிரபல” என்றோர் அடைமொழி
- அந்தரங்கம்
- கடலைக் கொழுக்கட்டையாக்கிய கவிராசன்