மருத்துவ வார்டில் நான் தனியாகவே பணியாற்றினேன். வார்டில் இருந்த நோயாளிகளை இரவு பகலாகப் பார்த்தேன். அவர்களைக் காப்பாற்றி மீண்டும் சுகத்துடன் வீடு திரும்ப ஆவன செய்தேன். அவர்கள் பெரும்பாலும் திருப்பத்தூரின் சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள். திருப்பத்தூரில் ஓர் அரசு மருத்துவமனை இருந்தாலும் அங்கு அவர்கள் செல்லாமல் இங்கு வருவது ஒரு நம்பிக்கையில்தான். மிஷன் மருத்துவமனையில் நல்ல கவனிப்பும் சிறந்த சிகிச்சையும் பெறலாம் என்றுதான் இங்கு வந்தனர். அரசு மருத்துவமனையில் அனைத்துமே இலவசம். அனால் இங்கே அவர்கள் பணம் கட்டவேண்டும். இருந்தபோதிலும் அதைக் கட்டிச் சென்றனர். அவர்கள் வீடு திரும்பும்போது மருத்துவமனை ” காரம் டியோ ” சிற்றாலயம் சென்று குணப்படுத்திய கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போவதை நான் பார்த்துள்ளேன். அங்கு அவர்கள் அவ்வளவு பயபக்தியுடன் தியானம் செய்துவிட்டு இல்லம் திரும்புவார்கள்.
இத்தகைய மிஷன் மருத்துவமனை மீது பாமர மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் அவர்களைக் கண்காணித்து மருத்துவத்துடன் கிறிஸ்துவ அன்பையும் காட்ட வேண்டும் என்பதுதான் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி எங்களுக்கு போதித்த அடிப்படை யான மருத்துவத் தத்துவம். நானும் அதை உணர்ந்தவனாக செயல்படலானேன்.
தமிழகத்தில் இது போன்ற மிஷன் மருத்துவமனைகள் மருத்துவச் சேவையில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றன. வேலூர், சென்னை, இராணிப்பேட்டை, ஆம்பூர், ஓட்டன்சத்திரம், மதுரை, இராமநாதபுரம், திருச்சி, கோவை, திருக்கோவிலூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் மிஷன் மருத்துவமனைகள் சிறப்பான மருத்துவச் சேவையை ஏழை எளியோருக்குச் செய்து வருகின்றன. திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையும் அது போன்றதாகும்.
டாக்டர் செல்லையாவுக்குப் பின்பு டாக்டர் ஃபிரெடரிக் ஜான் அறுவை சிகிச்சைகளைச் செய்தார். அவரிடம் நான் தொழுநோயாளிகளுக்கு மடங்கிய விரல்களை மீண்டும் நீட்டச் செய்யும் அறுவை சிகிச்சை ( Reconstructive Surgery ) முறையைக் கற்றுக்கொள்ள அறுவைக் கூடம் சென்று வந்தேன். ஆனால் அவர் என்னை உதவிக்கு மட்டுமே பயன்படுத்தினார். எனக்கு தனியாக செய்ய வாய்ப்பு தரவில்லை. விரல்கள் கெட்டுப் போனால் அதைப் பயன்படுத்த முடியாது என்றார். முன்பே அவர்களுக்கு விரல்கள் அனைத்துமே மடங்கிப் போய் பயனற்ற நிலையில்தான் இருந்தன. என்னால் அவை மீண்டும் பயனற்றுப் போகும் வாய்ப்பு இல்லைதான். நான் அதனால் மனம் உடைத்த நிலையில் அவரிடமே அதை விட்டுவிட்டேன். அவரிடம் சண்டை போடுவதில் பயனில்லை. அவர் எம்.எஸ். படித்தவர். நான் எம்.பி.பி. எஸ்.தான்.அதோடு நான் மருத்துவ வார்டின் பொறுப்பாளன். தொழுநோய் பிரிவையும் பார்த்துக்கொள்கிறேன்.
மருத்துவ வார்டுகளில் சில சிறு சிறு அறுவை சிகிச்சைகளுக்கு வாய்ப்புகள் இருந்தன. அறுவைச் சிகிச்சை என்பதை விட அவற்றை சிறு அறுவை நடைமுறை ( minor surgical procedures ) எனலாம். அவற்றை நான் வார்டுகளில் செயவதில் திருப்தி அடைந்தேன்.
அவற்றில் முக்கியமானது சிரைப்பிளப்பு ( cut down ) என்பது. இரத்தக் குழாய் வழியாகத் திரவங்களை அல்லது மருந்துகளைச் செலுத்தும் குழாயைச் செலுத்துவதற்கு ஒரு சிரையை பிளத்தல் இந்த முறை எனலாம்.இதை குழந்தைகள் வார்டில் செய்யவேண்டும். வயிற்றுப்போக்கு வாந்தியுடன் சில குழநதைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களுக்கு சாதாரணமாக இரத்தக்குழாய் மூலம் சேலைன் ( Saline ) நீர் ஏற்றவேண்டிவரும். சிறு ஊசியால் குத்தினாலும் அந்த இரத்தக்குழாய் கிடைக்காது.அப்போது காலில் அந்த இரத்தக்குழாய் இருக்கும் இடத்தில் குறுக்கே வெட்டி இரத்தக் குழாயைத் தேடி எடுக்க வேண்டும். அதை வெளியில் இழுத்து கீழ்ப் பகுதியைக் கட்டிவிட்டு அதன் மேல் பகுதியில் குறுக்கே மெல்லியதாக வெட்டி அதனுள் சிறு பிளாஸ்ட்டிக் குழாயைச் சொருகி அதன் வழியாக சேலைன் ட்ரிப் விட வேண்டும். இதற்குதான் ‘ கட் டவுன் ‘ என்று பெயர். இதை மிகவும் நுணுக்கமாகச் செய்யவேண்டும். கொஞ்சம் தவறினாலும் அந்த இரத்தக்குழாய் முதுதுமாக அறுபட்டு இரத்தம் வெளியேறும். அப்படி ஆனால் அதை நரம்பால் கட்டி இரத்த ஒடடத்தை நிறுத்திவிட்டு அடுத்த காலில் புதிய இரத்தக் குழாயைத் தேட வேண்டும்.வயிற்றுப போக்கும் வாந்தியும் உள்ள குழந்தைக்கு இது மிகவும் முக்கியமான சிகிச்சை முறை. காரணம் உடனடியாக சேலைன் நீர் ஏற்றியாக வேண்டும். இல்லையேல் குழந்தை நீர் பற்றாக்குறையால் ( dehydration ) இறந்துவிடும். அது மனதுக்கு பெரும் சோகத்தை உண்டுபண்ணும். ஆனால் அதைச் செய்து குழந்தையைக் காப்பாற்றிவிட்டால் அதன் பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சியின் பரவசம் தாண்டவமாடக் காணலாம். அது மனதில் பெருமிதத்தை உண்டுபண்ணும். சில இரவுகளில் இரண்டு மணி மூன்று மணி நான்கு மணி என்று விடியற்காலையில்கூட அதைச் செய்யவேண்டும். அது ஒரு மருத்துவ நெருக்கடி நிலையாகும் ( Medical Emergency )..
வார்டில் செய்யும் இன்னொரு சிறு அறுவை நடைமுறை உள்ளது. அது வடிதுளையிடல் ( Paracentesis ) என்பது. அதாவது உடலிலிருந்து நீரை வெளியேற்றுதல்.இது இரண்டு வகைப் படும்.
முதல் வகை வயிற்றிலிருந்து நீர் வெளியேற்றுதல். தமிழகத்தில் அப்போது மது தாராளமாக கிடைக்கும்.உயர்தர மதுவுடன் கள்ள சாராயமும் கிடைத்தது. மதுவுக்கு அடிமையான பலருக்கு கல்லீரல் சுருக்க நோய் உண்டானது. இதை லிவர் சிரோசிஸ் ( Liver Cirrhosis ) என்போம்.இது உண்டானவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் கோத்துக்கொண்டு வயிறு பெரிதாக உப்பி இருக்கும். வயிற்றினுள் நீர் இருப்பது நோயாளிக்கும் தெரியும். அதனால் அவர்களால் சரிவர சாப்பிடவும், படுத்துத் தூங்கவும், மூச்சு விடவும் முடியாமல் சிரமப்படுவார்கள். இது போன்ற வயிறு வீக்கம் இருதய செயலிழப்பிலும் கூட தோன்றும். ஒரு பெரிய ஊசியை அடி வயிற்றின் இடது அல்லது வலது பக்கத்தில் செலுத்தி, அதன் மூலம் குழாய் வழியாக நீரை வெளியேற்றலாம். ஒரு முறை அரை அல்லது ஒரு லிட்டர் நீரை வெளியேற்றலாம். இதை நான் தனியாகச் செய்யலானேன். அது எனக்கு சுலபமாக செய்யமுடிந்தது. நீர் வெளியேறியதும் நோயாளி உடன் நிவாரணம் பெற்று மகிழ்வார் . எனக்கும் நன்றி சொல்வார்கள். அனால் ஒரு முறை செய்தபின்பு சுமார் மூன்று மாதத்தில் மீண்டும் வயிறு வீங்கி வருவார்கள். மீண்டும் நீர் வெளியேற்றவேண்டும். கல்லிரல் சுருக்கத்தால் இப்படி திரும்பவும் நீர் சுரந்துவிடும்.கல்லிரல் குணம் பெற்றால்தான் இது குறையும். அதற்கு அவர்கள் முதலில் மது அருந்துவதை உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.
இரண்டாம் வகையில் நெஞ்சிலிருந்து நீர் வெளியேற்றுவது. சிலருக்கு காசநோய் உள்ளதால் நெஞ்சுக் கூட்டினுள் நீர் தேக்கமுற்றிருக்கும். இவர்களுக்கு கடுமையான இருமலும், மூச்சுத் திணறலும், நெஞ்சு வலியும் உண்டாகும். நெஞ்சு எக்ஸ்ரே படத்தில் நீர் தேக்கமுற்றுள்ளதைக் காணலாம். இதையும் முதுகு வழியாக பெரிய ஊசி குத்தி நீரை வெளியேற்றுவேன்.காச நோயில் அந்த நீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவர்களுக்கு காச நோய் சிகிச்சை உடன் தருவேன். ஒரு வேளை வெளியேறும் அந்த நீர் இரத்தம் கலந்த நீராக இருந்தால் நுரையீரலில் புற்று நோய் என்று பொருள்.
இந்த வகையான சிகிச்சை முறைகளில் சிஸ்டர் பாலின் எனக்கு பெரிதும் உதவுவார். அப்போது பயிற்சி பெறும் தாதியர் மாணவிகள் புடைசூழ நின்று கவனிப்பார்கள். சிஸ்டர் பாலின் சீனியர் நர்ஸ். ஆண்கள் மருத்துவ வார்டில் பல வருடங்கள் பணி புரிபவர். என்னிடம் மிகவும் அன்பாகப் பழகுவார். மற்ற தாதியர் அவரை பாசத்துடன் அக்கா என்றே அழைப்பார்கள். அவருடைய கணவர் இம்மானுவேல் மத்திய அரசு குடிநுழைவுத் துறையில் வாகனம் ஓட்டுபவர்.அவர் நாகப்பட்டினத்தில் துறைமுகத்தில் பணியாற்றுகிறார். வார இறுதியில் வந்து போவார்.அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் பள்ளி செல்கின்றனர்.
( தொடுவானம் தொடரும் )
- 52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)
- சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்
- ’இனிய உளவாக’வும் INSENSITIVITYகளும்
- தொடுவானம் – 230. சிறு அறுவை நடைமுறை
- மருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS )
- நான் என்பது
- 2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்
- பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் – எல்லாம் உருண்டை