புதிய ஆரோக்கியநாதர் ஆலயத்தை சிறப்புடன் திறந்துவிட்டோம். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஆராதனைக்கு உற்சாகத்துடன் சென்று வந்தேன். இனிமேல் நான் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தவறாமல் ஆலயம் செல்லவேண்டும். உண்டியல் எடுப்பதோடு ஆராதனை முடிந்தபின்பு உண்டியலை எண்ணி வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
பீடத்தின் இடது பக்கத்தில் பாடகர் குழுவிற்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மங்களராஜ் தலைமையில் பாடகர் குழுவினர் பயிற்சி பெற்று இனிமையான இசையுடன் பாடினார்கள்.
ஆலயம் மதுரை செல்லும் பிரதான வீதியில் இருந்ததால் வெளியில் உள்ளவர்களும் ஆராதனையில் பங்கு கொண்டனர். உண்டியல் காசும் அதிகரித்தது . ஆராதனை முடிந்ததும் அங்கேயே அமர்ந்து உண்டியலை எண்ணுவோம். அப்போது பால்ராஜும் கிறிஸ்டோபரும் உதவுவார்கள். உண்டியல் நோட்டில் அப்போதே மொத்த எண்ணிக்கையை எழுதிவிடுவோம். அதன் பின்பு மூவரும் வீடு செல்வோம்.என் வீட்டில் அமர்ந்து பேசிவிட்டுதான் அவர்கள இருவரும் வீடு திரும்புவார்கள். என்னுடைய வீட்டைத் தாண்டித்தான் அவர்கள் இருவரும் செல்லவேண்டும்.
நான் முன்பு குடியிருந்த வீட்டில் புதிதாக ஒரு பெண் டாக்டர் குடி வந்தார்.அவர் டாக்டர் சுலதா. அவருடைய தந்தை மறைதிரு மினோசன் என்பவரை காரம் டியோ சிற்றாலயத்தில் பணியாற்ற மருத்துவமனை போதகராக புதிய பேராயர் அமர்த்தினார். அவர் தினமும் காலை வழிபாடு நடத்தினார்.
டாக்டர் சுலதா வேலூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். எனக்கு இரண்டு வருடங்கள் ஜுனியர். கல்லூரி நாட்களில் அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை. அவரை இங்கு பெண்கள் வார்டில் பணியில் அமர்த்தினார் தலைமை மருத்துவர் டாக்டர் ஜான். முன்பு இங்கு வேலை செய்த டாக்டர் மூர்த்தியும் ரோகிணியும் ராஜினாமா செய்துவிட்ட்னர்.காலை ரவுண்ட்ஸ் சமயத்தில் சுலதாவும் நானும் ஒன்றாக எல்லா நோயாளிகளையும் பார்ப்போம். இரவில் அவரவர் வார்டை பார்த்துக்கொள்வோம். சுலதா சாம்பல் நிறமுடையவர். முகத்தில் பருக்கள் அதிகம். காணப்படும். ஆங்கிலமும் தமிழும் நன்றாகப் பேசுவார்.
டாக்டர் மூர்த்தி இருந்த வீட்டில் புதிதாக டாகடர் ஜெகதீசனும் அவரின் மனைவி டாகடர் சியாமளசுந்தரியும் குடி வந்தனர். ஜெகதீசன் கண் மருத்துவர். சியாமளா மகப்பேறு மருத்துவர். தலைமை மருத்துவரின் மனைவி டாக்டர் இந்திரா ஜான் கூடிய விரைவில் ராஜினாமா செய்துவிட்டு காரைக்குடியில் சொந்தமாக நர்சிங் ஹாம் ஆரம்பிக்கப்போவவதாக ஒரு வதந்தி நிலவியது. அது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அவர் மலையாளி. காரைக்குடியைச் சேர்ந்தவர்தான். அவருடைய பெற்றோர் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் குடியுள்ளார்கள். அவர்கள் காரைக்குடியில் இந்திரா பார்மஸி என்ற பெயரில் பெரிய மருந்து வியாபாரம் செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மருத்துவமனைக்கு கூட அங்கிருந்து சில மருந்துகள் வாங்கப்படுவதாக கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.
டாக்டர் காந்தாமணி காரைக்குடி சென்றபின்பு கண் மருத்துவர் இல்லாமல் அந்தப் பகுதி வெறிச்சோடி கிடந்தது. நான்தான் அவ்வப்போது அங்கு சென்று கண் மருத்துவமும் பார்த்தேன். இப்போது டாகடர் ஜெகதீசன் வந்தது நிறைவைத் தந்தது. ஒரு காலத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கியது திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை. டாக்டர் ஜெகதீசன் வந்த பின்பு மீண்டும் கண் பகுதி பிரகாசமாக விளங்கும். அவர் இங்கு வேலை செய்ய வேண்டும் என்பதால் அவருடைய மனைவிக்கும் வேலை தந்தாக வேண்டியிருந்தது. உண்மையில் டாக்டர் இந்திரா ஜான் ஒருவரே போதுமானது. அவர் கொஞ்ச நாட்கள் இங்கு இருந்துவிட்டு தனியாக திருப்பத்தூரிலேயே சொந்த நர்சிங் ஆரம்பிக்கப்போவதாகவும் ஒரு வதந்தி நிலவியது.
மிஷன் மருத்துவமனை மேல் நாட்டவரின் நன்கொடையில் இயங்கினாலும் சொந்தத்திலும் வருமானம் வருவது நல்லது. பின்னாட்களில் வெளிநாட்டு பணம் தடைபட்டால் சுயமாக இயங்கவேண்டும் அல்லவா. முன்பு டாக்டர் செல்லையா தலைமை மருத்துவராக இருந்தபோது இதைத்தான் சொல்லி வந்தார். இன்னும் சொல்லப் போனால் அவர் அப்போதே வெளிநாட்டவரின் பணம் வேண்டாம் என்றவர். அவருக்கு மிஷனரிகளைப் பிடிக்காது. ஆனால் அப்படிச் சொன்ன அவர் மிஷன் மருத்துவமனையை விட்டுவிட்டு சொந்தத்தில் காரைக்குடியில் நர்சிங் ஹாம் ஆரம்பித்துவிட்டார்.
இப்படி தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பிப்பது தவறில்லைதான்.இங்கு மாதச் சம்பளம்தான் கிடைக்கும்.அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. கொஞ்சம் வசதியாக வாழலாம். அவ்வளவுதான். மிச்சப்படுத்தி சொத்துக்கள் வாங்குவது சிரமம். வாகனம் ,வீடு வாங்குவதை நினைத்தும் பார்க்க இயலாது. ஒரேயொரு திருப்தி சேவை செய்கிறோம் என்பதுதான். அனால் காரைக்குடியில் சொந்தமாக ஆரம்பித்தால் நிறைய சம்பாதிக்கலாம். டாக்டர் செல்லையா அதற்கு நல்ல உதாரணம். இப்போது அவர் சொந்தத்தில் வீடும் காரும் வாங்கிவிடடார்! டாக்டர் ஜானுக்கும் இந்திரா ஜானுக்கு இத்தகைய ஆசை வருவது இயல்புதான்.
தற்போது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இருந்தனர். டாக்டர் செல்லப்பாவும் டாக்டர் ஆலிஸும் இன்னும் வேலூரில் மேல்படிப்பில் இருந்தனர். டாக்டர் ராமசாமி அறுவைச் சிகிச்சைப் பிரிவில் டாக்டர் ஜானுக்கு உதவினார். சுலதாவும் நானும் மருத்துவப் பிரிவில் பணியாற்றினோம். இந்திரா ஜானும் சியாமளாவும் மகப்பேறு பிரிவில் இயங்கினர்.மருத்துவப் பிரிவிற்கு மட்டும் ஒரு எம்.டி. படித்த நிபுணர் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
நான்கூட இங்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்துவிட்டேன்.நானும் வேலூருக்கு மேல்படிப்புக்குச் செல்லலாம். அதற்கு தலைமை மருத்துவ அதிகாரியின் பரிந்துரையில் மருத்துவக் கழகம் அங்கீகாரம் தேவை. எனக்கு சமூக மருத்துவம் பயில ஆவல். அது இத்தகைய மிஷன் மருத்துவமனைக்கு மிகவும் பயன்படும். அதை மூன்று வருடங்கள் படித்தபின்பு எம்.டி. பட் டம் கிடைக்கும். ஆனால் இப்போது இருக்கும் நிலையில் தலைமை மருத்துவர் நிச்சயம் பரிந்துரை செய்யமாட்டார். முதலில் இங்கு மருத்துவப் பகுதியில் டாக்டர் வேண்டும். அடுத்தது நான் இங்கு குழப்பம் விளைவிக்கும் ஓர் அரசியல்வாதி என்றே அவர் நம்புகிறார். அதனால் எனக்கு அந்த நன்மையை நிச்சயமாகத் தரமாட்டார். அதோடு எனக்கும் இப்போது ஆலயத்தில் பொருளாளர் பதவி கிடைத்துள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் நானே ஆலயத்தின் செயலராக ஆவேன். இந்த நிலையில் நான் திருப்பத்தூரை விட்டுவிட்டு வேலூர் செல்லமுடியுமா? இப்போது நிச்சயமாக முடியாது. ஒரு வேளை டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸும் திரும்பியபின்பு நான் என்னுடைய உரிமையாக வேலூர் செல்லக் கேட்கலாம்.
நான் வேலூர் செல்வதும் செல்லாததும் டாக்டர் ஜான் கையில்தான் உள்ளது.அவர் பரிந்துரை செய்தால்தான் மருத்துவக் கழகம் பரிசீலனை செய்யும். அனால் அதற்காக நான் அவரிடம் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை.நான் என்னுடைய கொள்கையில் உறுதியுடனே இருப்பேன்.
என்னை நம்பி மருத்துவமனை ஊழியர்கள் ஏராளமானோர் உள்ளனர்.நான் திடீரென்று அவர்களை நட்டாற்றில் விட்டுச் செல்வது சரியில்லை. நான் இல்லையேல் பலர் பழிவாங்கப்படலாம்.குறிப்பாக பால்ராஜும் கிறிஸ்டோபரும் வேலையைக்கூட இழக்க நேரிடலாம்! இதைத் தடைசெய்ய ஒரே வழி. தற்போது இங்கேயே இருப்பது. ஆலயத்தின் செயலர் ஆவது. மதுரை மறைமாவடட செயலர் ஆவது. அதோடு முடிந்தால் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலோசனை சங்கத்தின் உறுப்பினர் ஆவது.
இத்தகைய முடிவுடன் நான் திருப்பத்தூரில் என் பணிகளைத் தொடரலானேன்!
( தொடுவானம் தொடரும் )