மருத்துவப் பணியில் முழு கவனம் செலுத்தினேன். மாலையிலும் இரவிலும் ஆலயப் பணியில் ஈடுபட்டேன். அதோடு மனமகிழ் மன்றத்தையும் கவனித்தேன்.
மனமகிழ் மன்றத்துக்கு தனியாக ஒரு கொட்டகை உள்ளது.அது தங்ககராஜ் வாகன ஓட்டுனரின் வீட்டின் எதிரே இருந்தது. அதை சுத்தம் செய்து கேரம் விளையாட்டுக்கும், டேபிள் டென்னிஸ் விளையாட்டு மேசையும் வைத்தேன்.அதில் ஆர்வம் உள்ளவர்கள் மலையில் விளையாடுவார்கள்.
அந்தக் கொட்டகையின் எதிரே டென்னிஸ் விளையாடும் இடம் இருந்தது. அதில் புல் மண்டி கிடந்தது. பொசலானை அழைத்து அதைச் சுத்தம் செய்யச் சொன்னேன்.விக்லீஸ் உதவியுடன் அதில் மீண்டும் டென்னிஸ் விளையாடும் மைதானத்தை செப்பனிட்டேன். எனக்கு டென்னிஸ் விளையாடி பழக்கமில்லை. டாக்டர் ஜான், டாகடர் செல்லப்பா ஆகியோர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரியின் அருகில் இருந்த ஆறும் ஒய்வு இல்லம் வளாகத்தில் டென்னிஸ் ஆடுவார்கள். அங்கு மாலையில் திரு.நாகராஜனும், திரு தங்கவேலுவும் சில கல்லூரி பேராசியர்களும் டென்னிஸ் ஆடி வந்தனர்.நான் இங்கேயே புது டென்னிஸ் மைதானம் அமைத்து அதில் விளையாட முடிவு செய்தேன்.இது மண் மைதானம்தான்..அதில் தண்ணீர் தெளித்து உருளை உருட்டி பொசலான் செப்பனிடுவான்.அதற்கு அவனுக்கு ஒரு சிறு தொகையை மாதச் சம்பளமாகத் தந்தேன்.
அந்த டென்னிஸ் மைதானம் மண் தரையால் ஆனது. அதில் நீர் தெளித்து அதன்மேல் கான்கிரீட் உருளையை உருட்டி சமப்படுத்துவான். அதன்பின்பு சுண்ணாம்பு மாவால் சுற்றிலும் கோடுகள் விடுவான். மாலையில் நடுவில் வலை கட்டி தயார் நிலையில் வைத்திருப்பான்.
அன்றாடம் டாக்டர் ராமசாமி, விக்லீஸ் ,ஃராங்க்ளின் ஆகியோர் வந்துவிடுவார்கள்.நான் காரைக்குடி சென்று ஒரு புது டென்னிஸ் ரேக்கட் வாங்கினேன். எனக்கு டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடித்தது. ஆடிய முதல் சில நாட்களில் கை கால்கள் கடுமையாக வலித்தன. போகப்போக வலி குறைந்தது. டென்னிஸ் விளையாட்டு நல்ல உடற்பயிற்சி.அதன் பின்புதான் நண்பர்கள் பால்ராஜ், கிறிஷ்டோபர், தேவையிரக்கம் ஆகியோருடன் ஆலய வளாகம் சென்று மண் தரையில் அமர்ந்து புதிய திட்ட்ங்களைத் தீட்டுவோம்.நாங்கள் இப்போது மருத்துவமனையுடன் ஆலயத்தின் செயல்பாடுகள் பற்றியும் தீவிரமாகச் செயல்பட்டோம். இந்த இரண்டு நிறுவனங்களும் என்னுடைய கைகளில் வந்துவிட்ட்து போன்ற உணர்வு எனக்கு அப்போதே உண்டானது.காரணம் பெரும்பாலான மருத்துவமனையின் ஊழியர்கள் என் பக்கம் இருந்தனர். இவர்கள்தான் ஆலயத்தின் சபை மக்களாகவும் இருந்தனர். ஆதலால் நான் மருத்துவமனையையும் ஆலயத்தையும் கண்காணிப்பதை உணரலானேன். இதுவே கடவுளின் அழைப்பாக நான் கருதினேன்.
எஸ்.சி.சி. கூட்டத்திற்குச் செல்ல ஐவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை ஒரு ஞாயிறு காலை ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நடத்தினோம். அதில் நாங்கள் முன்பே சொன்ன ஐவரும் தேர்வு பெற்றனர். அவர்களில் ன் நானும் ஒருவன்.
குறிப்பிடட நாளில் நாங்கள் ஐவரும் பேருந்து மூலம் திருச்சி சென்றோம் அங்கு லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தினர் என்னைச் சந்தித்து ஐந்து சீட்டுகள் தந்தனர். அதில் அன்று நாங்கள் வாக்களிக்க வேண்டிய எட்டு பேர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களில் நாங்கள் மினித் தேர்தலில் தேர்ந்தெடுத்த ஐவரின் பெயர்களுடன் மற்ற தோழமை இயக்கத்தினரின் உறுப்பினர்களைச் சேர்த்து மொத்தம் எட்டு பேர்கள் இருந்தனர். சற்று நேரத்தில் வேறொரு பிரிவினரும் என்னை அணுகி இன்னொரு சீடடைத் தந்தனர். அதைப் பார்த்தேன். அதில் வேறு எட்டு பேர்களின் பெயர்கள் இருந்தன..அது எதிர் அணியினரின் சீட்டு.
ஆலயத்தின் வெளியில் தேர்தல் வேட்டை மும்முரமாக நடந்தது.தேர்தலில் நிற்கும் வேட்ப்பாளர்கள் தனித்தனியாக வாக்கு சேகரித்தனர்.லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தினர் தாங்கள் தந்துள்ள சீட்டின்படிதான் வாக்களிக்கவேண்டும் என்பது கட்டுப்பாடு. இருந்தாலும் எதிர் அணியின் வேட்பாளர்களும் என்னிடம் வாக்கு கேட்டனர்.அவர்களில் சிலர் தெரிந்தவர்களும் இருந்தனர்.
ஆலயத்தில் அனைவரும் கூடினோம். பேராயர் மாமறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் ஜெபம் செய்து தியானம் செய்தார். அதையடுத்து பதவிக்காலம் முடியும் செயலர் விக்டர் அனைவரையும் வரவேற்றார். ” ரோல் ” கால் எடுத்தார்.அப்போது வாக்காளர்கள் எழுந்து நின்று தங்களின் வரவை உறுதி செய்தனர். வாக்குகள் ஒவ்வொன்றாகத் தரப்படடன. அதை வாங்கியவர்கள் மறைவான ஒரு மூலைக்குச் சென்று எட்டு பெயர்களை எழுதி வாக்குப் பெட்டியில் சேர்த்தனர். எனக்குத் தரப்படட சீட்டில் நான் கொண்டுசென்ற சீட்டில் உள்ள பெயர்களை எழுதினேன்.
வாக்களிப்பு முடிந்ததும் இடைவேளை. வெளியில் தேநீரும் வடையும் வழங்கினர். உள்ளே வாக்குகள் எண்ணப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஆலயத்தினுள் கூடினோம்.முடிவுகளை பேராயர் அறிவித்தார். லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் கூட்டணி அமோக வெற்றி பெற்றது!
அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, அருமைநாயகம், எட்வர்ட் தங்கம், மறைதிரு பிச்சாநந்தம் , மறைதிரு ஏ.ஜே.தேவராஜ் ஆகியோர் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் சார்பில் ஆலோசனைச் சங்கத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செல்லி என்னும் செல்வராஜும், மறைதிரு ஜார்ஜ் பீட்டரும் லுத்தரன் நலச் சங்கத்தின் சார்பில் தேர்வு பெற்றனர். , டாக்டர் நோயால் தாஸ் ,முன்னேற்ற லுத்தரன் இயக்கத்தின் சார்பில் தேர்வு பெற்றார். ஆக மொத்தம் எட்டு புதியவர்கள் ஆலோசனைச் சங்க உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட்னர். அவர்களை பீடத்துக்கு முன்பு அழைத்து பிரதிஷடை செய்து வைத்தார். பேராயர்.
தேர்தல் முடிந்து ஆலயத்தை விட்டு வெளியேறியதும் அனைவரும் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி கை குலுக்கினார்கள். மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்பின்பு தேர்ந்தெடுக்கப்படட புதிய உறுப்பினர்கள் மட்டும் மீண்டும் ஆலயத்தில் கூடி ஒரு செயலாளரைத் தேர்ந்தெடுத்தனர். முன்பே அந்த கூட்டணியில் முடிவு செய்திருந்தபடி அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை புதிய செயலாராகத் தேர்ந்தெடுக்கப்படடார். அதன் வழியாக லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் ஆதிக்கமும் நிச்சயமானது! தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் திருச்சபையின் செயலராகி சரித்திரம் படைத்தாயிற்று!
அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை துவக்கப்பள்ளி ஆசிரியர். அவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாது. அது பற்றியெல்லாம் அவர் கவலை கொள்ளவில்லை.எப்படியாவது ஆங்கிலத்தில் பேசி பழகிக்கொண்டு சமாளித்துவிடலாம் என்று நம்பினார். அவருக்கு முன் செயலராக இருந்த விக்டர் கல்லூரி பேராசிரியர். ஆங்கிலப் பிரச்னை அவருக்கு இல்லை. ஆலோசனைச் சங்கக் கூட்டங்களின் குறிப்புகளையும் சுற்றறிக்கைகளும் ஆங்கிலத்தில்தான் எழுதப்படவேண்டும். இதில்தான் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை சிரமத்தை எதிர் நோக்க வேண்டும். இதை வெகு சாமர்த்தியமாக அவர் சமாளித்துவிட்டார். அது ஒரு வகையில் பெரிய ராஜ தந்திரம்!
செயலர் அலுவலகத்தை அவர் மயிலாடுதுறையில் அவருடைய பள்ளியில் வைத்துக்கொண்டார். அவருக்கு மேனேஜராக மறை திரு ஐ.பி. சத்யசீலனை அமர்த்திக்கொண்டார்! ஐ.பி. சத்தியசீலனுக்கு நல்ல ஆங்கில ஞானம் இருந்தது. அதன் மூலம் அவர் தேர்தலில் நிற்காமலேயே செயலருடன் ஆலோசனைச் சங்கக் கூட்டங்களில் பங்கெடுத்து சபை நடவடிக்கைகளைக் குறிப்பெடுத்துக்கொண்டார்.
அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை அண்ணனுக்கு நெருங்கிய நண்பர். என்னுடைய திருமண வரவேற்பின்போது தெம்மூர் வந்து எங்களை வாழ்த்தியவர். அது போன்றே மறைதிரு ஏ.ஜெ.தேவராஜும் அண்ணனின் நண்பர்தான்.அவரும் என் திருமணத்தில் வாழ்த்து கூறியவர். அவர்கள் மூலம் எனக்கு பல நன்மைகள் கிடைப்பது உறுதி. இனிமேல் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜான் என்னை அதிகம் தொந்தரவு செய்யும் வாய்ப்பில்லை. திருச்சபையின் செயலர் என் பக்கம் என்பது அவருக்குத் தெரிந்தபின்பு என்னை எதிர்க்க நிச்சயம் யோசிப்பார். அதற்கு மாறாக செயலரின் ஆதரவுக்காக என்னிடம் உதவியும் கேட்கலாம். மருத்துவமனையின் முன்னேற்ற காரியங்கள் பலவற்றுக்கு செயலரின் சம்மதம் தேவைப்படும்.
( தொடுவானம் தொடரும் )
- மகாகவியின் மந்திரம் – பொய் அகல்
- மனுஷங்கடா – டிரயிலர்
- முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2
- தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்
- நீ என்னைப் புறக்கணித்தால் !
- வால்மீன் நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி இரண்டும் வால்மீன்கள் நீண்ட காலம் இயங்கி வரக் காரணம் ஆகலாம்
- தர்மம் தடம் புரண்டது
- அம்ம வாழிப் பத்து—1
- மருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்