தமிழ்நாட்டில் திமுக அணி பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி எதனை காட்டுகிறது?

This entry is part 7 of 7 in the series 26 மே 2019

விடையை ஏற்கெனவே எழுதிவிட்டேன்.

http://puthu.thinnai.com/?p=38590
ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள்

//நாங்க ஊருக்கு போகணும் சார், ராகுல்காந்தி எங்களை மாதிரி ஏழைங்களுக்கெல்லாம் 72000 ரூபாய் தர்ரேன்னு சொல்லியிருக்கார் சார். அவருக்கு ஓட்டு போட ஊருக்கு போகணும் சார் என்று மக்கள் சொல்லும் வீடியோக்கள் பரவலாக இருக்கின்றன. இதனை பார்த்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் காரர்களும், திமுகவினரும் ஸ்டாலினும், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளும் பரவச நிலையை எய்துகிறார்கள். அதிமுக கூட்டணியினர் மனம் வெம்புகிறார்கள். அல்லது இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று திணறுகிறார்கள். இதற்கு மேல் கொடுக்க வேண்டும் என்றால் பயப்படுகிறார்கள். ஒருவேளை வெற்றிபெற்றுவிட்டால் இந்த பணத்தை கேட்பார்களே என்று அஞ்சுகிறார்கள். அந்த பயம் எதுவும் இல்லாமல், தான் வெற்றி பெற மாட்டோம் என்ற மகா தைரியத்தில் ராகுல்காந்தி அடிச்சி விடுகிறார்.

தமிழக மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதை நன்கு அறிந்த நான், முன் கூட்டியே திமுகவின் ஊழல் கூட்டணிக்கு என் பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.//

ஆக நான் நினைத்தது போலவே தமிழக மக்கள் திமுகவின் ஊழல் கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்து, கனிமொழி, கார்த்தி சிதம்பரம், தயாநிதி மாறன், ஆர், ராஜா போன்றவர்களை மகத்தான வெற்றி பெறச்செய்திருக்கிறார்கள்.

இதில் பெரியார் மண், திமுக பாரம்பரியம், இந்தியாவில் தனித்த கருத்து கொண்ட தமிழர்கள் என்றெல்லாம் புல்லரித்துகொண்டிருக்கிறார்கள் தமிழக அறிவுஜீவிகள்.

5 பவுன் வரைக்கும் நகைக்கடன் ரத்து, வருடத்துக்கு 72000 ரூபாய் தருவோம் என்ற வாக்குறுதிகளால் ஜெயித்திருக்கிறது திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணி. ஆனாலும் திமுகவின் வாக்குறுதிகளை விட ராகுல் காந்தியின் வாக்குறுதிக்காகவே மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இதனை சொல்ல பல காரணங்கள் உண்டு.

முதலாவது ஒரே நேரத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களையும், சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல்களையும் எடுத்துகொண்டால், பாராளுமன்ற தேர்தலில் 3 லட்சம், 4 லட்சம் அதிகமாக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த மக்கள், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். 20 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுகவுக்கும் மீத தொகுதிகளில் திமுகவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஏன்? என்னை பொறுத்த மட்டில், பாராளுமன்ற தேர்தலில் வீசிய காற்றால் கொஞ்சம் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது என்றுதான் தோன்றுகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் வந்தால், இந்த வாக்குக்களை கூட திமுக பெறாது என்று கருதவே இடம் இருக்கிறது.

இரண்டாவது, ஒவ்வொரு திமுக பொதுக்கூட்டத்திலும், பிரச்சாரத்திலும் துண்டு சீட்டுகளிலும் 72000 ரூபாய் விஷயம் மக்களிடம் வெகுவாரியாக எடுத்துச் செல்லப்பட்டது தமிழ்நாட்டில். ஆனால் வடக்கு மாநிலங்களில் இந்த அளவுக்கு 72000 விஷயம் மக்களிடம் எடுத்து செல்லப்படவில்லை என்ற விஷயத்தை தி இந்து போன்ற பத்திரிக்கைகள் தேர்தலுக்கு பின் நடந்த ஆய்வுகளில் தெளிவு படுத்தியிருக்கின்றன. அந்த விஷயம் வடக்கில் மக்களிடம் எடுத்து செல்லப்பட்டிருந்தால், தமிழர்கள் அளவுக்கு அவர்கள் காங்கிரஸை நம்பியிருப்பார்களா என்பது ஆய்வுக்குரியது என்றாலும் இந்த அளவுக்கு பாஜக உத்தரபிரதேசம், ஒரிஸ்ஸா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெற்றிபெற்றிருக்காது என்றே கருதுகிறேன்.

மூன்றாவது, பல தொகுதிகளில் டிடிவி தினகரன் அதிமுகவின் வாக்குக்களை பிரித்திருக்கிறார். டிடிவி தினகரன் பிரித்தது அதிமுக வாக்குக்களைத்தான் என்று நிச்சயம் நம்பலாம். ஆனால் சீமான் கமலஹாசன் பெற்ற வாக்குக்களை அப்படி சொல்லமுடியாது. இவை நடுநிலை வாக்குக்கள்.
இந்த டிடிவி வாக்குகளையும் கமலஹாசன் வாக்குக்களையும் சேர்த்தால், பல தொகுதிகளில் திமுக அணி தோற்கிறது.

நான்காவது மக்கள் காசுக்காகவும், காசு பற்றிய வாக்குறுதிகளுக்கும்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆர் கே நகர் இன்னொரு முறை தீர்மானமாக நிரூபிக்கிறது. ஆர், கே நகரில் 89013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக அங்கே 48306 வாக்குகளை மட்டுமே பெற்றது. திமுக டெப்பாஸிட் இழந்தது.

2019 இல் அந்த தொகுதி இருக்கும் சென்னை வடக்கு பாராளுமன்ற தொகுதியில் திமுக 5,90,986 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் ஆர். கே. நகர் இருக்கும் வடசென்னை பாராளுமன்ற தொகுதி முழுவதிலும் அமமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் வெறும் 33232 மட்டுமே. ஏன் டிடிவி தினகரனுக்காக வாக்களித்தவர்கள் ஒரே வருடத்தில் அவரை கை கழுவினார்கள்? காசுதானே?

தமிழ்நாட்டில் திமுகவுக்கு என்று இருக்கும் வாக்காளர்கள் சுமார் 20 அல்லது 25 சதவீதம் மட்டுமே இருப்பார்கள். அதிமுகவுக்கு என்று இருக்கும் வாக்காளர்கள் 27 இலிருந்து 30 சதவீதம் வரைக்கும் இருப்பார்கள். ஆனால் இரண்டிலும் இல்லாத வாக்காளர்கள் சுமார் 40 சதவீதம் இருப்பார்கள்.

ஆகவே காசு கொடுத்து வாக்கு வாங்கும் “திறமை சாலி” வேட்பாளர்கள் குறி வைப்பது இப்படிப்பட்ட நடுநிலை வாக்காளர்களைத்தான். இதில் எல்லாருமே காசுக்காவும், காசு பற்றிய வாக்குறுதிகளுக்காகவும் மட்டுமே வாக்களிக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது.

இந்த பாராளுமன்ற தேர்தலிலும், இந்த இடைப்பட்ட வாக்காளர்களில் பலர் சீமான், கமலஹாசன் போன்றோருக்கு வாக்களித்திருக்கிறார்கள். காசு கொடுத்தாலும் காசு ஆசை காட்டினாலும் இவர்கள் தங்கள் வாக்குக்களை நேர்மையாக செலுத்தியிருக்கிறார்கள். இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

திமுகவுக்கு என்று இருக்கும் வாக்காளர்கள், நிச்சயமாக காசுக்காக வாக்களித்தவர்கள் அல்லர். அவர்கள் காசு கொடுத்திருந்தாலும், 72000 ரூபாய் வருடத்துக்கு கிடைக்கும் என்று ஆசை காட்டப்படாதிருந்தாலும், அவர்கள் நிச்சயமாக திமுகவுக்கு மட்டுமே வாக்களித்திருப்பார்கள்.

அதே போல அதிமுக வாக்காளர்கள் 72000 ரூபாய் ஆசை காட்டப்பட்டாலும், 5 பவுன் நகைக்கடன் ரத்து என்று வாக்களிக்கப்பட்டாலும், அவர்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் அதிமுகவுக்கும் பாஜக தேமுதிக, பாமக கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

ஆனால், நடுநிலை என்று இருக்கும் 40 சதவீதத்தினர் சுத்தமாக நேர்மை அற்றவர்கள். தங்கள் வாக்கை எவன் வந்து காசு கொடுத்தாலும் விற்க கூடியவர்கள்.

இவர்களே சென்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வினியோகித்த பணத்துக்காக ஜெயலலிதாவுக்கு வாக்களித்து அவ்வளவு தொகுதிகளை அதிமுகவுக்கு அளித்தவர்கள். அதே ஆட்களே இன்று 72000 ரூபாய்க்காக திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இதில் பெரியார் மண் என்று பார்ப்பதோ அல்லது திராவிட பாரம்பரியம் என்று பார்ப்பதோ மோடி எதிர்ப்பு அலையை திட்டமிட்டு உருவாக்கினார்கள், அதனால்தான் இப்படி ஆகிவிட்டது என்று சொல்வதோ நம்மை நாமே ஏமாற்றிகொள்வதுதான்.

மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் ஜல்லிக்கட்டு தொடங்கி, நீட் அனிதா, ஸ்டெர்லைட், கூடங்குளம், எட்டுவழிச்சாலை என்று தொடர்ந்து உருவாக்கி ஒரு மோடி எதிர்ப்பை உருவாக்கினார்கள் என்று மறுப்பதற்கில்லை. அதனை திறம்பட அதிமுக தலைமை நேர்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதனை தங்களுக்கு சாதகமாகவும் ஆக்கிகொண்டு, பாஜகவுடன் பேரம்பேச பயன்படுத்திகொண்டார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இடைவிடாத தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகங்கள் மூலம் நடந்த பிரச்சாரம் ஒரு மத்திய அரசு எதிர்ப்பு மனநிலையை பாஜக எதிர்ப்பு மனநிலையை உருவாக்கினார்கள் என்பதை மறுக்கவியலாது.

ஆனால் அதனாலெல்லாம் அதிமுக கூட்டணி தோற்கவில்லை.

உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், மேற்குவங்காளத்தை எடுத்துகொள்ளலாம். வங்காளத்தில் கடந்த 4 வருடங்களாக மம்தா பானர்ஜியின் திருனாமூல் காங்கிரசும், இடதுகம்யூனிஸ்டு கட்சியும் இதே போன்ற ஒரு பாஜக எதிர்ப்புபிரச்சாரத்தையே வங்காளத்தில் மேற்கொண்டு வந்திருக்கின்றன. திருனாமூல் கட்சி ஆதரவு தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும், மேற்கு வங்காள கம்யூனிஸ்டு ஆதரவு தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் கடுமையான பாஜக எதிர்ப்பு பிரச்சாரம் என்பதை தாண்டி, அவதூறு செய்திகளையும் பொய் செய்திகளையும் கொண்டு கடுமையாக பாஜகவையும் அதன் தலைமையையும் தாக்கி வந்திருக்கின்றன. இந்தி பேசும் பாஜக, வங்காளி பேசும் மேற்கு வங்காளத்தில் அன்னியர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் மேற்கொண்டது. அதையும் மீறி, பாஜக சுமார் 22 சதவீத வாக்குக்களை முன்பை விட அதிகமாக பெற்று சுமார் 40 சதவீத வாக்குகளை பெற்று 18 இடங்களை பாஜக பெற்றிருக்கிறது. ஏனெனில் மக்கள் ஓரளவுக்குத்தான் ஊடகங்களை நம்புகிறார்கள். வெறும் ஊடக பொய் பிரச்சாரத்தால் மட்டுமே மக்களை ஒரு கட்சிக்கு எதிராக வாக்களித்துவிட வைக்க முடியாது.

அதனால்தான், தமிழர்கள் எதற்காக வாக்களிக்கிறார்கள் என்று அறிந்த நான், 72000 ரூபாயைவிட நாங்கள் 72500 ரூபாய் தருவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தால் பாஜகவுக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்திருப்பார்கள் இந்த நடுநிலை தமிழர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

அதிமுக தோற்றுவிட்டது, இனி நாமே தமிழகத்தின் முதல்வர் என்று ஸ்டாலின் கருதுவாரே ஆனால், அவரை பார்த்து பரிதாபப்படவே முடியும். இப்படிப்பட்ட மகத்தான வெற்றியை பாராளுமன்ற தேர்தல் தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்த தமிழக மக்கள், வெற்றியை இடைத்தேர்தல்களில் அதே ஸ்டாலினுக்கு மறுத்திருக்கிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, ஒடிஸாவிலும் இதே போல பாஜகவுக்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஒடிசா மக்கள் மாநில தேர்தலில் பட்நாயக் அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள், காங்கிரஸின் 72000த்தை நிராகரித்திருக்கிறார்கள். (அதே போல உத்தரபிரதேசத்தில் பெருவாரியாக பாஜகவுக்கு வாக்களித்த மக்கள், அங்கு எதிர்காலத்தில் வரப்போகும் மாநில தேர்தலில் பாஜகவுக்கு அந்த அளவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன்)

இந்த அலையின் போதே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற முடியாத திமுக அணி, சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறுமா? நிச்சயம் வெற்றி பெறாது என்றே கருதுகிறேன்.

அதற்கு இன்னும் இரண்டுகாரணங்களும் உண்டு.

முதலாவது டிடிவி தினகரன் நினைத்ததுபோல அதிமுக நொறுங்கிவிடவில்லை. இரட்டை இலை சின்னத்துக்கும் அதிமுக கட்சிக்கும் அதிமுக ஆதரவாளர்கள் விசுவாசிகளாகவே இருக்கிறார்கள். இன்று டிடிவி தினகரன், அதிமுகவின் எதிரியான திமுக வெற்றி பெற உதவியிருக்கிறார் என்பதை அதிமுகவினர் உணர்ந்திருக்கிறார்கள். மேலும் நடுநிலை வாக்காளர்களும், திமுக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை. திமுகவுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்களித்த நடுநிலை வாக்காளர்கள் நினைத்தது போல அதிமுக சுத்தமாக காலியாகிவிடவும் இல்லை.

ஆகவே அதிமுக அமைப்பு ரீதியாக வலிமையாக இருக்கும் பட்சத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்றே கருதுகிறேன். அந்த தேர்தலில் இந்த அளவுக்கு கூட டிடிவி தினகரன் வாக்குக்களை பெறமாட்டார் என்றே கருதுகிறேன். ஒரு சில தொகுதிகளில் சாதி வாக்குக்களை பிரிக்க முடியுமே தவிர, தமிழகம் முழுவதும் அவர் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த அவரால் முடியாது.

அடுத்ததாக, திமுக, காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் திமுக அணிக்கு வாக்களித்தது வீண் என்று இன்னேரம் கருதியிருப்பார்கள். அது நிச்சயம் அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தெரியும்.

தமிழகத்தை பொறுத்த மட்டில், பாராளுமன்றதேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் அறியும் முக்கியமான விஷயங்கள் என்று நான் கருதுவது அதிமுகவின் உறுதியான இருப்பு மட்டுமே.

ஜெயலலிதா சென்றதும் நெல்லிக்காய் மூட்டை போல சிதறிவிடும் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இன்று கட்டுகோப்பான கட்சியாக உருமாறியிருக்கிறது. அப்படி ஆவதற்கு நிச்சயமாக பாஜக துணை புரிந்திருக்கிறது. எடப்பாடி ஓபிஎஸ் ஆகிய இருவர் கையில் இருக்கும் இந்த கட்சி ஓரளவுக்கு நவீன அரசியல் கட்சியாக வளர்வதற்கான பல சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் நீங்கியதன் மூலம் தற்காலிக பலவீனமாக இருந்தாலும், நீண்டகாலத்தில் அதிமுக உறுதி அடைவதை உணர்த்துகிறது. அவரது பையன் இவரது பையன் என்பதால் இடங்கள் கொடுக்கப்பட்டாலும் அதனை தாண்டி, திறமைக்கும், உழைப்புக்கும் மதிப்பு கொடுக்கும் கட்சியாக அதிமுக ஆகும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால், ஓபிஎஸ் அவர்களும் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போதையை நிலையை பெற்றிருந்தாலும், அப்படித்தான் பெரும்பாலான அதிகார மாற்றங்கள் நடைபெறுகின்றன.

ஆனால் திமுக இன்று வெறும் வம்சாவளி கட்சியாக குறுகிவிட்டிருக்கிறது. தயாநிதி மாறன், கனிமொழி, ஸ்டாலின், அழகிரி ஆகியோரிடையே நடக்கும் அரச குடும்ப அரசியலாக ஆகிவிட்டிருக்கிறது. இது தற்காலிக பலத்தை தந்தாலும் இறுதியில் காங்கிரஸ் வம்சாவளி அரசியலால் அழிந்தது போலவே அழியும் என்றே கருதுகிறேன். முன்பு திமுகவில் இருந்த பிரதேச தலைவர்கள் குறுநில மன்னர்கள் போல செல்வாக்குடன் இருந்தார்கள். அவர்களை பார்த்து கலைஞரே அஞ்சியிருக்கிறார் அவர்களை சமாதானம் செய்யவும் முயன்றிருக்கிறார். ஆனால் இன்றைய திமுக, அரச குடும்பத்தின் விருப்பு வெறுப்புக்களுக்காக ஆடும் காங்கிரஸ் போல ஆகிவிட்டிருக்கிறது. பிரதேச தலைவர்கள் நாளை திமுக தலைமையால் தூக்கி அடிக்கப்படுவார்கள். மாற்றப்படுவார்கள். அழகிரியின் ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டது போல நாளை கனிமொழி ஆதரவாளர் என்று கருதப்படுபவர் நீக்கப்படலாம். அதனை திமுகவினர் எதிர்பார்த்து நடப்பார்கள். ஆனால் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கும் வரையே திமுக அமைப்பு இருக்கும். அமைப்பு ரீதியான வெற்றியை விட காங்கிரஸின் வாக்குறுதிகளாலேயே வெற்றி அடைந்திருப்பது அப்படிப்பட்ட எதிர்கால தோல்வியையே காட்டுகிறது.

Series Navigationபார்த்துப் போ.
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *