சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு

This entry is part 13 of 13 in the series 8 நவம்பர் 2020

 


திருச்சி வாசகர் அரங்கின் முதல் கூட்டம் தொடங்கி இன்று வரை தொடரும் நட்பின் இழை. சாம் மறைவு மனதைக் கடக்க வைக்கிறது. வாழ்வைக் கொண்டாட்டமாய் எடுத்துக் கொண்டு உரையாடுவத அவருக்குக் கைவந்த கலை.  திருச்சி வாசகர் அரங்கு, திருச்சி நாடகச் சங்கம் என்று அவர் இணைந்திராத கலாசார நிகழ்வு திருச்சியில் இல்லை. அவர் சென்ற இடமெல்லாம் இலக்கியம், நாடகம், சினிமா என்று பிறரை ஈடுபடுத்தி இயக்குவதில் அவருக்கு நிகர் அவரே. அதன் காரணமாக அவர் பெற்ற நட்புறவுகள் அனேகம். 


நான் கல்கத்தா சென்றபின்னும் நட்பு தொடர்ந்தது. கல்கத்தாவில் நடந்த திரைப்பட விழாவிற்கு வந்திருந்தார். சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலுடன் வந்திருந்தார். அது பற்றியும் விவாதித்துக் கொண்டே திரைப்பட விழாவிற்குச் சென்றோம். கோடார்டின் A Letter to Fonda என்ற படம் வியத்நாம் போருக்கு எதிர்ப்புத்தெரிவித்த நடிகை ஜேன் ஃபோண்டாவின் வியதநாம் பயணமும்  அங்கு அந்த நடிகை வியத்நாமியர்களுடன் கொள்ளும் நடபுறவிலும் கூட மேலாணமைப்போக்கு தொடரும் நிலையை நுணுக்கமாய்க் காட்சிப் படுத்தியது பற்றி விவாதித்தோம். 
பாதல் சர்க்கார் நாடகத்தின் மொழி பெயர்ப்பின் பின்பு பாதல் சர்க்கார் நாடகப் பட்டறையில் அவருடைய பங்கு பெற்றது பற்றிய பல பதிவுகளை நண்பர்கள் அளித்துள்ளனர். அந்தப்பட்டறையின் பதிவாக அவர் எழுதிய மனசில் பதிஞ்ச காலடிச்சுவடுகள் மிக முக்கியமான புத்தகம். 


சென்னை செல்லும் போதெல்லாம் அவர் வீட்டில் தங்குவேன். திருமதி ராஜலக்ஷ்மியின் விருந்தோம்பல் என்றும் நினைவில் இருக்கும் ஒன்று. 


அமெரிக்கா வந்தவுடன் அவருடன் கொண்டிருந்த தொடர்பு அதே அளவில் தொடராவிடினும் அவ்வப்போது பேசிக் கொண்டிருப்போம். அவர் அமெரிக்கா வந்திருந்தபோது அவருடன் நியூயார்க் பயணம் மறக்கமுடியாத ஒன்று. கலாசார வேறுபாடுகளை ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கவனித்து, குறித்துக் கொண்டு இருந்தார். அமெரிக்க மைய நூலகத்தில் அவருடைய நூல்கள் இடம் பெற்றிருந்தன. நூலகம் சென்று பார்வையிட்ட பிரமிப்பை என்னுடன் பகிர்நது கொண்டார். அந்தப் பயணத்தின் போது அவர் பெற்ற அனுபவங்கள் புத்தகமாக உருப் பெற்று வெளிவந்தது. 


நியூயார்க்கில் வெறுமே சுற்றுலாத்தலங்களைப் பார்ப்பதில் அவருக்கு அவ்வளவாய் விருப்பமில்லை. ப்ரூக்ளினில் ஹெரால்ட் பின்டரின் கேர்டேக்கர் நாடகம் நடப்பதை அறிந்த அவர் அதைப் பார்க்க விரும்பினார். இருவரும் சென்று வெகுவாக ரசித்தோம். 


கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த புது இலக்கியப் போக்குகள், நாடக முயற்சிகள், சினிமா முயற்சிகள் என கலாசார வரலாற்றுப் போக்கை மாற்றிய எல்லா புதிய ஆக்கத்திலும் அவர் பங்கு இருந்தது. 

Series Navigationநல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை
author

கோபால் ராஜாராம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *