அம்மாவுக்கு ஓய்வு

This entry is part 1 of 8 in the series 7 பெப்ருவரி 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

(டிசம்பர் 1973 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)

      வழக்கம் போலவே லெட்சுமிக்குக் காலை நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்துவிட்டது. அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு குளிரில் விறைத்துவிட்ட கைகால்களை இரத்தம் ஊறத் தேய்த்துவிட்டுக்கொண்டு சோம்பல் முறித்து ஒரு நீண்ட கொட்டாவியும் விட்டதன் பின் தன்னையும் அறியாமல் திண்ணைப் பக்கம் பார்வையை ஓடவிட்டாள். பழைய பாணியில் வெகு நாள்களுக்கு முன்னர் கட்டப்பெற்ற அந்தச் செங்கற்சுவர் வீட்டின் சிறிய திண்ணையில் தலைக்கு ஒரு தலையணையும் காலுக்கு ஒரு தலையணையும் வைத்துக்கொண்டது போதாதென்று பக்கவாட்டிலும் ஒரு திண்டைப் போட்டுக்கொண்டு அதன் மேல் கையை வைத்து அணைத்தவாறு அரை வாய் திறந்த நிலையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த கணவரைக் கண்டதும் ஒரு கண நேரத்துக்கு அவள் தன்னையும் அறியாது அவர் மேல் ஆற்றாமைப்பட்டாள். ‘என்ன கவலையத்த ஒறக்கம்’ என்று அவள் மனம் முனகியது.

      இன்று என்னவோ தெரியவில்லை. லெட்சுமிக்கு உடம்பு எப்போதும் போல் தெம்பாக இல்லை. கால் மணி நேரம் உடம்பைத் தேய்த்துவிட்டுக் கொண்டதன் பிறகும் கைகால்களின் மரத்த நிலையில் இரத்த ஓட்டம் வழக்கம் போல் கணிசமாக ஏற்படவில்லை. சொறசொறவென்று இருந்த கால்களைத் தேய்த்து விட்டுக்கொண்டே இருந்தாலும் அவற்றில் சொரணை ஏற்படாதோ என்று அவளுக்குத் தோன்றியது. இடுப்பில் கூட ஏதோ பிடித்துக் கொண்டிருந்தாற் போல் வலித்தது. அவள் காற்றிலசைந்தாடும் வண்ண மரப் பொம்மையைப் போல் இடுப்பை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக வளைத்து ஆட்டி வலியைப் போக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டாள். இடுப்பை நெளித்து ஆட்டியதில் முதுகுத்தண்டின் கீழே ஏதோ மளுக்கென்று முறிந்தாற்போல் சின்ன ஓசை ஏற்பட்டதை அவள் உணர்ந்தாள். வலி மிகுதியாகி விட்டாற்போல் இருந்தது. எனவே இடுப்பை அசைத்து அதன் விறைப்பைப் போக்கிக்கொள்ளும் முயற்சியை நிறுத்திவிட்டு அவள் சும்மா இருந்தாள்.

      சில விநாடிகளுக்குப் பிறகு வலக்கையை ஊன்றியபடி மெதுவாக எழுந்து கூடத்துச் சுவரில் மாட்டப் பெற்றிருந்த இரேடியம் கெடியாரத்துக்கு அருகே சென்று மணி பார்த்தாள். மணி நான்கு-பத்து. லெட்சுமிக்கு மணி பார்க்க வேண்டிய தேவையே இல்லைதான். காலையில் அவளுக்கு விழிப்பு வந்ததும் கெடியாரத்தில் ஒரு நாளைப்போல் மணி சரியாக நான்குதான். இருந்தாலும் அவள் மணி பார்க்காமல் எழுந்து பல் விளக்கப் போவதில்லை.

      அவள் திரும்பவும் கணவனின் கவலையற்ற உறக்கத்தை எண்ணிப் பொருமிவிட்டுக் குழாயடிக்குப் போனாள். காலைக்கடன்களை ஒரு வழியாக முடித்துவிட்டு வந்து சமையலறை விளக்கைப் போட்டாள். விளக்கின் வெளிச்சம் கூடத்துப் பக்கம் பரவியதும் அங்கே படுத்துக்கொண்டிருந்த தன் மக்களின் மேல் அவள் பார்வை பதிந்தது. கடைக்குட்டி ஜெயராமன் தலையணைகளை உதைத்து அப்பால் தள்ளிவிட்டு, போர்வையையும் தள்ளிவிட்டுக் குளிர் தாங்காமல் நத்தை மாதிரி சுருண்டு படுத்திருந்தான். லெட்சுமி அவனைப் படுக்கையில் ஒழுங்காக விட்டுவிட்டு வாசற்பக்கம் வந்தாள். இரவின் அமைதியைக் கலைத்தவாறு லாரிகள் இராட்சதர்களைப் போல் தெருவில் ஓடத் தொடங்கிவிட்டிருந்தன. அவற்றின் சத்தம் செவிகளைப் பிளந்த நிலையில் கூடத் திண்ணையில் தூக்கம் கலையாமல் உறங்கிக்கொண்டிருந்த – அல்லது தூக்கம் கலைந்தும் எழுந்துகொள்ள மனசு வராமல் படுத்துக் கொண்டிருந்த –  கணவரின் மேல் அவளது பார்வை என்றுமில்லாத எரிச்சலோடு பதிந்தது. ‘எனக்கும்தான் வயசாகுது. நான் மட்டும் என்ன பாலியமா? எப்பவும்  நாலுக்கெல்லாம் எளுந்திரிச்சு ஓடியாடி வேலை செய்யிறதுக்கு? அவரைவிட ரெண்டு வயசு சின்னவ. அம்புட்டுத்தான். எட்டுப் பிள்ளெ பெத்த உடம்பு வேற. என்ன இருந்தாலும் பொம்பிளை ஜென்மம் எளவெடுத்த ஜென்மந்தான். …  ‘என்னடா, அவளுக்குந்தானே வயசாயிக்கிட்டே இருக்குது? பக்கத்துத் தெருவுக்குப் போயி பாட்டில் பாலை வாங்கியாருவம்னு இல்லே… மார்களி மாசக் குளிரானாலும் மளையானாலும்  நாந்தான் எளுந்திரிச்சுப் போக வேண்டி யிருக்குது. கொஞ்சம் எளுந்திரிச்சுப் பாலை வாங்கியாந்தாத்தான் என்ன?’ என்று லெட்சுமி என்றுமில்லாத வழக்கமாக இன்று முணுமுணுத்துக்கொண்டாள்.

      இடுப்பே முறிந்துவிடும் போல் வலித்த வலிதான் அவளை அப்படியெல்லாம் சலிப்புறச் செய்தது போலும்.  வாயிற்கதவை வெளிப்பக்கம் பூட்டிக்கொண்டு அவள் ஒவ்வொரு படியாகக் கால்களை ஊன்றித் தெருவில் இறங்கினாள். ‘எருமைக் கடா கணக்கா’ முப்பது வயசில் உள்ள மணமான தன் மகனையும் மனசுக்குள் அவள் திட்டத் தவறவில்லை.  ‘ஆம்பிளையா லெச்சணமாப் போய்ப் பாலை வாங்கியாரக் கூடாது? எல்லா எளவுக்கும் நாந்தான். ஆறடிச்சதும் காப்பி ரெடியாயிருக்கல்லேன்னா எல்லாத்துக்கும் மூக்குக்கு மேல கோவம் மட்டும் வந்திடுது. மகன் எளுந்திரிச்சு வந்த பெறகுதான் மருமக ஆடி அசஞ்சுக்கிட்டு வருவா…. அவளைக் கேக்க முடியுமா? கேட்டா மாமியார் கொடுமை, தனிக்குடித்தனம் அப்படி இப்படின்னு ஆரம்பிக்கும். … இருபத்தஞ்சு வயசு மக கூடத்தான் ஆறரை மணிக்கு மேல ஆடி அசஞ்சுக்கிட்டு வருவா. அவளைக் கேக்க முடியுமா? மகளைக் கேட்டாலுந்தான் தப்பாயிடுது. ‘மருமகளைக் கேக்கத் துப்பு இல்லே. என்னெயக் கேக்க வந்துட்டியாக்கும்?’னு மக பாரதி வெடிக்குது. ‘உனக்கு மருமக கிட்ட பயம். அவளைக் கேக்க முடியாமெ என்னெயக் கேக்குறியாக்கும்?’னு சத்தம் போடுது. மகளைக் கண்டிக்கிறது மருமக காதுல விளுந்திரிச்சுன்னா நான் தொலைஞ்சேன். … நான் ஏதோ ஜாடையாப் பேசறதா மருமக் கண்ணைக் கசக்கும். அந்த எளவுக்குத்தான் நான் நமுட்டையே அசைக்கிறதில்லே. …’

      தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியதன் பிறகு சிறிது நேரம் வரையில் லெட்சுமிக்குக் கால்கள் விளங்காமல் மரத்துத்தான் கிடந்தன. அவள் சுதாரித்துக்கொண்டு ஒவ்வோர் எட்டாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இடுப்பின் முறிவு வேறு அவளை வாட்டி எடுத்தது.  ‘யார்தான் எளுந்திரிச்சுக் காப்பி போடுறாங்கன்னு படுக்கையிலேயே இருந்துக்கிட்டுப் பார்த்திருக்கலாம். யாருமே எளுந்திருக்காம இருந்தா தமாசாயிருந்திருக்கும். …’

      வரிசையில் நின்று பாட்டில்களை வாங்கிக்கொண்டு அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி நாலேமுக்கால் ஆகிவிட்டிருந்தது. காப்பிக்குத்      தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு அவள் காய் நறுக்கலானாள். மூத்தவனுக்குக் கத்திரிக்காய் பிடிக்காது. அதனால் அவனுக்கு மட்டும் நான்கு பெரிய உருளைக் கிழங்குகளை எடுத்துக் கறிக்கு நறுக்கினாள். மற்றவர்களுக்கெல்லாம் கத்திரிக்காய். ஃபில்டரில் காப்பித் தூளைப் போட்டுக் கொதிநீரைக்கொட்டி மூடிய பிறகு அவள் குளிக்க வெந்நீர் போட்டுவிட்டுச் சமையலறை முற்றத்தில் கிடந்த பால் தம்ப்ளர்களையெல்லாம் சாம்பல் போட்டுத் தேய்த்துக் கழுவத் தொடங்கினாள்.

       ‘பால் குடிச்ச தம்ப்ளர்களைக் கூடக் களுவி வைக்கிறதில்லே. ஆளுக்கொண்ணா எடுத்து முத்தத்துலே போட்டுட்டுப் போயிடறாங்க. மறு நாள் கருக்கல்லே காப்பி சாப்பிட வேணுமே, அம்மாதானே தேச்சுக் களுவணும்கிற எண்ணம் தோணிச்சுன்னா அப்படி அப்படியே விட்டெறிஞ்சுட்டுப் போகுமுங்களா! … சை… என்ன புள்ளைங்களோ…’ – இதுகாறும் அவள் யாரையும் மனத்துள் திட்டியதில்லை. உடம்பில் இன்று என்னவோ தெம்பு குறைந்தாற்போல் இருக்கவே, முணுமுணுப்பு வந்துவிட்டது.

      முற்றத்துக்கருகே உட்கார்ந்துவிட்டு எழுந்த போது இடுப்பு அப்படியே முறிந்துவிடும் போல் வலித்தது. ‘இந்தச் சித்திரை வந்தா எனக்கும் அம்பத்தெட்டு ஆகப் போகுதே …’

      பாத்திரங்களை அடுப்பருகே வைத்ததன் பிறகு அவள் சமையலறையைப் பெருக்கிவிட்டு வெந்நீர்த் தவலையை எடுத்துக்கொண்டு குளிக்கப் போனாள். வெந்நீர் உடம்பில் பட்டதும் இதமாக இருந்தது. பத்தே நிமிடங்களில் குளித்து விட்டுப் புடைவையைச் சுற்றிக்கொண்டு அவள் காப்பியடுப்பு அருகே வந்து கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை இரண்டாம் தடவையாக ஃபில்டரில் ஊற்றிவிட்டுப் பாலை அடுப்பில் வைத்தாள். பின்னர் இன்னோர் அடுப்பைப் பற்ற வைத்து அதில் சமையலுக்கு உலை நீர் வைத்தாள்.

      சரியாக ஆறு மணிக்குக் கணவர் எழுந்து வந்ததும் அவருக்குக் காப்பியைக் கொடுத்துவிட்டுத் தானும் சாப்பிட்டாள். காப்பியைக் குடித்து முடித்ததும், “லெட்சுமி! ரொம்ப மெதுவாப் படி எறங்கிப் போனியே, கால்ல ஏதாச்சும் சுளுக்கா?” என்று சிவசைலம் கேட்டதும், அவள் தலை நிமிர்ந்து கணவரை ஏறிட்டுப் பார்த்தாள்.  ‘அப்படின்னா எனக்கு உடம்பு சுகமில்லேன்னு தெரிஞ்சுக்கிட்டேதான் ஒரு வார்த்தை கூடக் கேக்காம வேடிக்கை பார்த்துக்கிட்டே படுக்கையில கெடந்தீங்களா?’ என்று கேட்க வேண்டும் போல் துருதுருத்த நாவை உள்ளிழுத்துக்கொண்டே, லெட்சுமி, தன் கசப்பை விழுங்க முயன்றவண்ணம், “ஆமாம். இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு இருந்திச்சு. காலு வேற மரத்துப் போயிடிச்சு. உங்களெ எளுப்பலாமான்னு கூடப் பார்த்தேன். … பால் வாங்கியாரதுக்கு. …பெறகு நானே சமாளிச்சுக்கிட்டு நடந்துட்டேன். …” என்றாள்.

      சிவசைலம் பதில் ஒன்றும் சொல்லவில்லை. சற்றுப் பொறுத்து., “அந்தக் களுதைங்கள்ளே ஏதாச்சும்  எளுந்திரிச்சு உனக்குக் கூடமாட ஒத்தாசை செய்யக் கூடாது?” என்று பொருமினார்.

      கணவரின் மேல் ஏற்பட்ட கசப்பை ஒரு கணத்துக்கு மறந்து போன லெட்சுமி, “அதுங்க எனக்கு ஒபத்திரவம் குடுக்காம இருந்தா, அதுவே பெரிய ஒத்தாசைதான். …இப்ப பாருங்க… பெரியவனுக்குக் கத்திரிக்கா பிடிக்காது. அதுக்காக, அவனுக்குப் பெசலா உருளைக் கிளங்குக் கறி பண்ண வேண்டியிருக்குது.  பால் தம்ளருங்களெக் கூடக் களுவாம அப்படி அப்படியே முத்தத்துல விசிறியடிச்சுட்டுப் போகுதுங்க. காலையில காப்பிகுடிக்க வேணுமே, இந்தக் கெளவிதானே கஸ்டப்படணும்கிற ஞாபகம் இருந்தா அப்பிடிச் செய்வாங்களா? சொல்லுங்க. எனக்கும் வயசாகுதில்ல? என்னிக்கும் ஒரே மாருதியாவா இருக்கும் ஒடம்பு? இதுங்களுக்கு முப்பது வயசானாலேயே தலை நரைச்சு மூப்பு வந்திடுது. நான் மட்டும் என்னிக்கும்  கொமரிப் பொண்ணாட்டமா வேலை செய்ய முடியுமா?” என்று படபடத்தாள்.       சிவசைலம் ஒன்றுமே பேசாமல் எழுந்து அப்பால் நகர்ந்தார். லெட்சுமி சாடையாகத் தம்மையும் சேர்த்துத்தான் சாடினாள் என்பது அவருக்குப் புரிந்த போது, அவர் அதற்காக வருத்தப்படவில்லை. ‘காலையில அவ ஒவ்வொரு காலா எடுத்து வெச்சு மெதுவா நடந்ததைப் பாத்த பெறகும், பால் வாங்கிவந்து நாமே குடுக்கலாம்னு ஏன் தோணாமப் போயிறுச்சு?’ என்று அவர் தமக்குள் அங்கலாய்த்துக்கொண்டார். அடுத்தாற்போல் தாம் அவள் இடத்தில் இருந்திருப்பின், அவள் அப்படி அசட்டையாக நடந்திருப்பாளா என்று எண்ணிப் பார்த்த போது, தாம் ஒரு மாற்றுக் கம்மிதான் என்பது அவருக்கு விளங்கிற்று. அவர் தமக்குள் சிறுமையுற்றார்.

      தாம் மனைவியைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பால் வாங்கிவரச் செல்லாமைக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்த போது, தமக்கு அலுப்பு ஒன்றும் இல்லை என்பதும் வெறும் சோம்பலே என்பதும் புரிந்தன. அவர் குற்ற உணர்வுடன் வாசலுக்குச் சென்று உட்கார்ந்தார்.

      சோறு கொதித்துக் கொண்டிருந்த போது, மருமகள், மகன், மகள்கள்,

கடைக்குட்டி ஜெயராமன் எல்லாருமே ஒவ்வொருவராக எழுந்து வரலுற்றார்கள். அவர்கள் எல்லாருக்கும்  ஒன்றாகக் காப்பி கலந்து கொடுக்க அவளை விடாமல், ஒவ்வொருவராக எழுந்து வந்தது லெட்சுமிக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. ‘எத்தனை தடவைதான் காப்பி கலந்து கலந்து கொடுத்துக்கிட்டே இருக்குறது? எல்லாருமாச் சேந்து வந்தா என்ன?’ என்று அவள் தனக்குள் முனகினாள்.

      மருமகள் வந்ததன் பிறகு தனக்கு விடியும் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள்தான். வீட்டு வேலைகள் எல்லாவற்றிலிருந்தும் முழு விடுதலையை அவள் எதிர்பாராவிடினும், ஓரளவுக்கேனும்  தன் சுமைகள் குறையும் என்று அவள் எண்ணி மருமகளின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். ஆனால், மகனோ வேலை பார்க்கும் பெண்டாட்டிதான் வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். காலத்தின் நிலையை உத்தேசித்து அதுவும் சரிதான் என்று அவளுக்குப் பட்டது. மகளும் வேலைக்குப் போகிறாள். கடைக்குட்டி ஜெயராமனும் மற்ற பெண்களும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மகனின் குடும்பமும் இனிப் பெருகும் என்கிற நிலையிலும், எத்தனை பேர் சம்பாதித்தாலும் பற்றாக்குறையிலேயே நாள்களைத் தள்ளும்படியான கால மாறுதலை எண்ணியும் அவள் மகனின் விருப்பத்தை ஏற்றாள். அலுவலகம் போகிற பெண்கள் வீட்டிலும் உழைக்க வேண்டும் என்பது என்ன நியாயம் என்றுதான் லெட்சுமிக்குத் தோன்றியது. அதனால் அவள், ‘கொளந்தைங்க, பாவம். அபீசுலே வேலை செய்துப்போட்டு அலுத்துச் சலித்து வருதுங்க. அதுகளை நாமவேற வேலை வாங்கக் கூடாது’ என்கிற நல்லேண்ணத்துடன் இதுகாறும் பொறுமையாகத்தான் இருந்து வந்திருக்கிறாள். ஆனால் கடந்த ஓராண்டுக் காலமாக அவளால் முன்பு போல் முக்காமல் முனகாமல் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்ய முடியவில்லை. குனிந்தால் நிமிர முடியவில்லை, நிமிர்ந்தால் குனியமுடியவில்லை என்கிற நிலை கொஞ்ச நாள்களாக அவளை வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது. ஆயினும் அவள் பல்லைக் கடித்துக்கொண்டு எப்போதும் போலவே எல்லா வேலைகளையும் ஒண்டியாகச் செய்துகொண்டு வந்தாள். இன்று என்னவோ தெரியவில்லை. அவளால் தனக்கு ஏற்பட்ட தள்ளாமைக்கு  ஈடுகொடுக்க முடியவில்லை.

      எட்டேமுக்காலுக்கு வழக்கம் போல் எல்லாரையும் சாப்பிட அழைத்தாள் லெட்சுமி. சாப்பிடுவதற்கு மட்டும் சரியாக எட்டே முக்காலுக்கெல்லாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக உட்கார்ந்துவிட வேண்டும் என்பது அவளது கட்டளை. அதை மட்டும் ஒழுங்காக நிறைவேற்றி வந்தார்கள். மருமகள் இன்று சாப்பிட வரவில்லை. தனக்கு அலுவலகத்துக்குச் சீக்கிரம் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு ஒரு குவளை மோரை மட்டும் குடித்துவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள். டிஃபன் ஆகியிருக்கவில்லை. அதை மகன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பான்.

      எல்லாரும் சாப்பிட வந்து அமர்ந்தார்கள்.

      குழம்புச் சோறு சாப்பிடுகையில், “அம்மா, அம்மா! குடிக்கக் கொஞ்சம் தண்ணி

குடுங்களேன்” என்றான் சின்னவன்,  ஜெயராமன்.

       “பக்கத்துல தண்ணி இல்லாம உன்னாலதான் சோறு தின்ன முடியாதே. அப்படியிருக்கையிலே, தண்ணி எடுத்துப் பக்கத்துல வெச்சுக்கிட்றதுக்கென்ன? எங்களுத்தையறு!” என்ற லெட்சுமி ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

      மருமகள் அங்கே இல்லை என்கிற நிலையில், துணிவுற்று, “கூடமாட ஏதாச்சும் ஒத்தாசை செஞ்சோம், காய்கறி அரிஞ்சு குடுப்போம், தண்ணி எடுத்தாருவோம்னு இல்லே. எட்டேமுக்காலுக்குச் சோத்துக்கு மட்டும் வந்து உக்காந்திடுங்க. … மார்களி மாசக் குளிர்ல கூட பால் வாங்கியாரதுக்கு நான் தான் போக வேண்டியிருக்கு. தடித்தடியாப் பசங்களெ வெச்சுக்கிட்டு நான் போய் நிக்கிறதைப் பாத்து எல்லாரும் சிரிக்கிறாங்க!” என்று கத்தினாள் லெட்சுமி.

       “அண்ணி இருக்கும் போது வாயெத் தொறக்க மாட்டே. அவங்களெக் கேக்குறதுதானே? உனக்கு மருமகதான் ஒசத்தி. … ஏன்? அவங்க மட்டும் வேலை செய்யக் கூடாதா?” என்று பதிலுக்குக் கத்தினாள் பாரதி.

       “அம்மா தனியாத் திண்டாடுதேங்கிற எரக்கம் பெத்த மகளுக்கே இல்லியாம். எல்லாம் கெடக்க, மருமகளுக்கு என்னடி வந்திச்சு? கூடமாட நீ வேலை செய்யிறதைப் பாத்தாத் தானும் செய்யணும்னு அதுக்குத் தோணும்.”

       “அண்ணிதான் ஒரு நாளெப்போல ஆறரை மணிக்கு எளுந்திருச்சு வருதே? அது எங்கிட்டுப் பாக்கப் போகுது நான் செய்யிற ஒத்தாசையெ?”

       பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த மூத்த மகனின் முகம் இந்த உரையாடலால் சிவந்தது. எனினும் அவன் பேசாமல் இருந்தான்.

       பாரதி தொடர்ந்தாள் : “ஏனாம்? நான் சாயந்தரம் வந்ததும் உனக்கு எவ்வளவு வேலை செய்யிறேன்? ராததிரி சமையலுக்குக் காய் அரிஞ்சு தர்றேனே? ரவைக்குப் பால் காய்ச்சி எல்லாருக்கும் விநியோகம் செய்யிறேனே? குடிக்க வெந்நீர் போட்டு வெக்கிறேனே? இதொண்ணையும் அண்ணி என்னிக்காச்சும் செய்திருக்குதா? என்னமோ பேசறியே? சாயங்காலம் வந்ததும் ரூமுக்குள்ளே போய்ப் படுத்துக்குது. இல்லேன்னா அண்ணனோட வாக்கிங் போயிடுது. … அதைக் கேக்க உனக்குத் துணிச்சல் இல்லே.”

      அண்ணனின் முகம் இரத்தமாய்ச் சிவந்தது. ஆனாலும் அவனால் மறுத்துப் பேச முடியவில்லை.

       “மகளைக் கண்டிக்கிற மாருதி மருமகளைக் கண்டிக்க முடியுமா? மருமக செய்யிற தப்பையெல்லாம் கண்டுங்காணாம இருந்தாத்தான் மாமியார் நல்லவ. இல்லேன்னா, மாமியார் பொல்லாதவ! மருமகளை விட்டுடு. உங்க கடமைகளை நீங்க சரியாச் செய்யுங்க. ஒருத்தன் பால் வாங்கிட்டு வாங்க. ஒருத்தி காய் அரிஞ்சு குடுங்க. ஒருத்தன் தண்ணி அடிச்சுக் குடுங்க. இப்படி ஆளுக்கு ஒரு வேலையாச் செய்தா என் செரமம் கொறையும். எனக்கும் வயசு ஆகுதில்லே? எத்தினி நாளைக்கு வண்டி ஓடிக்கிட்டே இருக்கும்?”

      மூத்தவன் மோர்ச் சாதம் சாப்பிடாமல் கையை உதறிக்கொண்டு எழுந்தான். “ஏண்டா எளுந்திரிச்சுட்டே? மோரு ஊத்திக்கல்லையா?” என்று பதறினாள் லெட்சுமி.

       “வேண்டாம்மா. வயிறு நெறஞ்சு போயிறுச்சு!” என்று அமைதியாகப் பதில் சொல்லிவிட்டு அவன் போனான்.

       “அண்ணியை நான் குத்தம் சொல்லிப்போட்டேனில்ல? அது அண்ணனுக்குச் சுர்ர்..னு இருக்குது …அதுக்கு நானென்ன செய்ய?” என்று அவன் போனதன் பிறகு பாரதி முணுமுணுத்தாள். “உள்ளதெச் சொன்னா எல்லாத்துக்கும் ஒடம்பெரிச்சல்தான்!” என்றாள், தொடர்ந்து.

       இதையெல்லாம் கவனித்தவாறு செய்தித்தாள் படித்துக்கொண்டு கூடத்தில் உட்கார்ந்திருந்த சிவசைலம். “ஒரு ஆள் போட்டுக்கயேன், லெட்சுமி,” என்றபடி அங்கே வந்து நின்றார்.

       “ஆ…மா. அதுதான் போன வருசம் ஒரு ஆளைப் போட்டுப் பாத்தமே. ரெண்டு நாளைக்கி ஒரு வாட்டி ரெண்டு லிட்டர் எண்ணெயெ வாங்கி வீட்டையே தொடச்சுட்டுப் போனாளே மகராசி! அதெல்லாம் நமக்குச் சரிப்படாதுங்க. கல்யாணம்  கட்றதுக்குப் பொண்ணுங்களெ வெச்சுக்கிட்டு சமையல்காரிக்கு அம்பது அறுபதும் அளுவறது சரிங்களா? வெட்டி தண்டம் … ஆளுக்கொரு வேலையாச் செய்தா சுளுவாப் பொகுது!” என்றாள் லெட்சுமி.

      தொடர்ந்து, “நீங்க சம்பாரிச்சுக்கிட்டு இருந்தாலும் ஆளு வச்சுக்கலாம். நீங்கதான் ரிடைராயிப் போட்டீங்களே?  … இத்தினி நாள்ளே என்னிக்காச்சும் நான் வாயெத் தொறந்து சலிச்சுக்கிட்டிருக்கேனா? பாத்திருக்கீங்களா? இப்ப கொஞ்ச நாளா ஒடம்பு தள்ளல்லே. பலவீனமா இருக்குது. நானும் மனுசிதானே? எனக்கு மட்டும் நோவு நொடிப்புன்னு வராதா? முப்பது வயசுலேயே எல்லாத்துக்கு தொந்தி தொப்பை விளுது இப்பல்லாம் …” என்றாள்.

       அப்போது தட்டத்தை மாடத்தில் வைப்பதற்காக அங்கே வந்த மூத்தவன், “அம்மா! இதோ பாருங்க. உங்க மருமகளுக்கு ஆஃபீசிலே வேலை அதிகம். அவளாலே ஒண்ணும் வீட்டு வேலை செய்ய முடியாது.  சும்மாப் பேசி லாபங் கெடையாது.  எங்க ரெண்டு பேத்துக்கும் சமைச்சுக் கொட்றதுக்கு உங்களுக்குச் சங்கட்டமா இருந்திச்சுன்னா நாங்க தனியாப் போயிடறோம் …” என்றான் ரோசமாக.

      சிவசைலம் திடுக்கிட்டுப் போய் மகனை வெறித்துப் பார்த்தார். லெட்சுமி வெலவெலத்துப் போனாள்: “ஏண்டா! இப்பம் நான் என்னத்தெச் சொல்லிப்போட்டேன்? உடம்பு தள்ளாமையா இருக்குது, கூட மாடக் கொஞ்சம் ஒத்தாசை  செய்தீங்கன்னாத் தேவலைன்னு கூடச் சொல்லப்படாதா? அது ஒரு குத்தமாப் போயிறுச்சா? இத்தினிக்கும் மருமவளெப் பத்தி நான் நமுட்டையாச்சும் அசைச்சேனா? பாரதியைக் கொறை சொன்னதும் அது ஏதோ ஒரு வார்த்தை தொசுக்னு சொல்லிடுச்சு. அதுக்கு உனக்கு இம்மாங் கோவமா! ரொம்ப நல்லாருக்குதுடா, ரொம்ப நல்லாருக்குது! …” என்று அரற்றியவள் துயரம் தாள மாட்டாமற் போய்க் கண்களைக் கசக்கலானாள்.

      மனைவி கண் கலங்கியதைப் பார்த்ததும், சிவசைலம் பதறிப் போனார். “ஏண்டா, டேய்! நில்லுடா. விருட்னு போயிராதே. இப்ப. அம்மா என்ன சொல்லிருச்சு? தனியாப் போறதானாப் போய்க்க. தனியாப் போனாத்தாண்டா உங்களுக்கெல்லாம் பெத்தவங்க பெருமை தெரியும். .. அது சரி, தனியாப் போறேன்னு ஒண்ணுமில்லாததெப் பெரிசு படுத்தறியே, உன் ஒருத்தன் சம்பாத்தியம் வீட்டு வாடகைக்குத்தானேடா பத்தும்? பொஞ்சாதி சம்பாத்தியத்துல ரெண்டு பேரும் சாப்பிடுவீங்க. பெறகு எங்களுக்கு ஒரு தம்பிடி குடுப்பியாடா நீ? உன் தங்கச்சிங்களுக் கெல்லாம் யாரு கண்ணாலங் கட்டி வைக்கிறதுன்னு நெனப்பு? செறகு மொளைச்சதும் பறந்து போறதுக்கு நாம் குருவிங்க இல்லேடா. மனுசங்க. … ஒண்ணுமில்லாததெப் பெரிசாக்குறியே? உனக்கே நல்லருக்குதா?”

       “இப்ப நான் என்ன சொல்லிப்போட்டேன்? பாரதியெக் கோவிச்சுக்கிட்டேன். அது திருப்பி என்னெயெக் கேட்டிச்சு – நீ மருமவளெ மட்டும் ஒண்ணும் சொல்ல மாட்டே, உனக்கு அவகிட்ட பயம்னு. … அம்புட்டுத்தான். என்ன இருந்தாலும் மகளைக் கோவிக்கிற மாருதி மருமவளெக் கோவிக்க முடியுதா? மக கேட்டுக்கும். மருமவ மாமியார் கொடுமைன்னு கண்ணைக் கசக்கிக்கிட்டுல்லே நிக்கும்?  … இனிமே நீங்க பால் வாங்கியாந்திருங்க. நாம ரெண்டு பேருமா எல்லா வேலையையும் பங்கு போட்டுக்கிருவம். இதுங்களெக் கெஞ்சிக்கிட்டிருக்க வாணாம். …” என்றாள் லெட்சுமி.

       “ஏண்டி? உனக்குப் பயித்தியமா பிடிச்சிருச்சு? தடித்தடியாப் பசங்களெ வச்சுக்கிட்டு நீயும் நானும் மார்களிக் குளிர்ல பாலுக்குப் போய் நிக்கிறதோ? அளகாருக்குது உன் பேச்சு! …” என்று கத்திய சிவசைலம், “நான் ஒரு டயம் டேபிள் போட்டுத் தாரேன்.  அதும்படி எல்லாருமா ஆளுக்கு ஒரு வேலைன்னு செய்துருங்க. அப்பதான் அம்மாவுக்குக் கொஞ்சமாச்சும் ஓய்வு கெடைக்கும். .. ரங்கா! நீ பால் வாங்கியாந்துடு. … பாரதி தண்ணியடிச்சு வைக்கும். … டேய், ராமு! நீ கறிகாய்க் கடைக்குப் போய்வா. நானும் எனக்குத் தெரியற ஒண்ணு அரை வேலை செய்யிறேன்…. பால் வேணும்னாலும் காய்ச்சுறேன். மருமவ அவளுக்கு இஸ்டப்பட்டதைச் செய்யட்டும். இல்லே, செய்யாமியே வேணும்னாலும் இருக்கட்டும். …” என்று மெல்லிய குரலில் முடித்தார்.

      சட்டையை மாட்டிக்கொண்டிருந்த மகனுக்குப் பக்கத்தில் போய் நின்று, “டேய்! கோவிக்காதேடா. அம்மாவுக்கும் வயசாகுதில்லே? … இத்தினி நாளுலே என்னிக்காச்சும் வாயெத் தொறந்து ஏதாச்சும் அலுத்துக்கிட்டது உண்டா? சொல்லு … அம்மாவுக்கு இனிமே நாம ஓய்வு கொடுக்கணும்டா. கெடியாரம்  ‘கீ’ இருக்குற வரையிலேதானேடா ஓடும்? …” என்றார் உருக்கமாக. அவ்வாறு சொன்னபோது, அவர் கண்ணிமைகள் ஈரம் கண்டன.

      மகன் பதில் ஒன்றும் சொல்லாமல் கால்களில் செருப்புகளைத் திணித்துக்கொண்டு நகர்ந்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் எல்லாரும் அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் சென்ற பிறகு அந்த வீட்டில் அமைதி நிலவிற்று. என்றுமில்லாதபடி மகன் கொஞ்சம் காரமாகப் பேசுவதற்கும் தனிக்குடித்தனம் பற்றிப் பேச்செடுப்பதற்கும் காரணமாகிவிட்ட அன்றையக் காலைப் பொழுதை மனத்துள் திட்டித் தீர்த்தவண்ணம் லெட்சுமி கண்ணீர் விடலானாள். ஒருகால் மகன் தனிக்குடித்தனம் வைத்துவிடுவானோ என்று அவள் உள்ளூர அச்சமுற்றாள். மகனைப் பிரிகிற வருத்தம் மட்டுமின்றி அவனால் கிடைக்ககூடிய பொருளுதவியும் அதனால் கணிசமான அளவுக்குக் குறைந்து போகலாம் – அல்லது நின்றே கூடப் போகலாம் – என்கிற எண்ணம் அவள் கவலையை அதிகரிக்கச் செய்தது.

      அவளுக்குச் சோறே இறங்கவில்லை. சிவசைலத்துக்குச் சாப்பாடு பரிமாறிவிட்டு அவள் கலத்தின் முன் உட்கார்ந்து சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு எழுந்துவிட்டாள். தலை விண்விண் என்று தெறிக்கிறாற்போல் வலித்தது. சற்று நேரத்துக் கெல்லாம் தலைவலி நின்றது. ஆனால் நெஞ்சு வலி அதைத் தொடர்ந்தது. இடுப்பின் முறிவும் நெஞ்சு வலியும் சேர்ந்து அவளைப் பொறுக்க முடியாத வாதனையில் வாட்டி எடுத்தன. பிற்பகல் தன் உடம்பைப் பாராட்டாமல் எழுந்து காப்பி போட்டுக் கணவருக்குக் கொடுத்துவிட்டுத் தானும் குடித்தாள். காப்பியைக் குடித்ததும் நன்றாக வேர்த்துக் கொட்டிற்று. ஆனால், இடுப்பின் முறிவும் நெஞ்சுவலியும் மட்டும் இம்மியளவும குறையவில்லை.

      லட்சுமி டாக்டரிடம் சென்றதே இல்லை. ஒரே ஒரு தடவை சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவள் டாக்டரிம் சென்று மருந்துகள் வாங்கிச் சாப்பிட்டாள்தான். ஆனால், அந்த மருந்துகள் தன் நோயைத் தீர்ப்பதற்குப் பதில் அதை இழுத்து அடித்ததாகவே அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அன்றிலிருந்து அவள் சின்னச் சின்ன நோய்களுக்கு வீட்டு மருத்துவமே செய்து கொண்டாள். ஆனால் இப்போது வந்துள்ளது வீட்டு வைத்தியத்துக்குக் கேட்காது என்று அவளுக்கே பட்டது. மறு நாள் காலை எழுந்த பிறகும் வலி நீடித்தால் டாக்டரிம் போய்க் கேட்கலாம் என்று அவள் நினைத்துக் கொண்டாள். ஆனால் சிவசைலம் அன்று பிற்பகலே அவளை அழைத்துப் போவதாகச் சொன்ன போது அவள் செல்ல மறுத்துவிட்டாள்.

       “இன்னிக்கு ஒரு நாளு ரெஸ்டு எடுத்துக்க, லெட்சுமி. அந்தக் களுதைங்க வந்து சமையல் பண்ணட்டும். இல்லாட்டி ஓட்டல்லேருந்து வாங்கியாந்து தின்னட்டும். நீ பேசாம படுத்துக் கெட…” என்று சிவசைலம் மனைவிக்குப் புத்திசொல்லிவிட்டுத் தம் ஓய்வுப் பணத்தைப் பெற்று வருவதற்காக அலுவலகம் சென்றார்.      

      அவர் திரும்பி வருவதற்குள் லெட்சுமி வலியைச் சகித்துக்கொண்டு எழுந்து மெதுவாகச் சமையல் வேலையைத் தொடங்கினாள். வெண்டைக்காயைக் கூட அரிய முடியாமல் அவள் தோள்கள் இற்றுத் தொய்ந்தன. குனிந்த போதெல்லாம் மார்பு தெறித்தது. நிமிர்ந்த போதெல்லாம் இடுப்பு முறிந்தது. எல்லாரும் மாலை வீடு வந்து சேர எப்படியும் ஆறிலிருந்து தொடங்கி ஆறேமுக்கால் வரையிலும் ஆகும் என்பதை எண்ணி அவர்கள் வரும் வரையில் சமையலை ஒத்தி வைப்பது சரியன்று என்று நினைத்த லெட்சுமி உலையில் அரிசியைக் களைந்து போட்டாள்.

      மூச்சைப் பிடித்துக்கொண்டு வெண்டைக்காய்க் கறியும் மிளகு ரசமும் வைத்துவிட்டு அவள் கூடத்துக்கு வந்து துணியை விரித்து மல்லாந்து படுத்துவிட்டாள். முதுகு இரணமாக நொந்தது. இப்படியும் அப்படியுமாக உடம்பைப் புரட்டிக்கொண்டே இருந்தால் தேவலை போல் இருந்தது. அவ்வளவு வலி.

      மகனும் மருமகளும் முதலில் வந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் எழுந்து காப்பி கலந்து கொடுத்துவிட்டு மறுபடியும் கூடத்துக்கு வந்து படுத்தாள். அதற்குப் பிறகு மகள் பாரதி வந்தாள். ‘நீயே காப்பியைக் கலந்து குடி’ என்று அவளுக்குச் சொல்லிவிட்டாள் லெட்சுமி. மற்றவர்கள் எல்லாரும் வீடு திரும்பியதும் அவர்களுக்கும் காப்பி கலந்து கொடுக்குமாறு பணித்துவிட்டு லெட்சுமி கண்களை மூடிப் படுத்துக் கொண்டாள்.

      கணவன் வீட்டுக்கு வந்ததிலிருந்து ஒரு நாள் ஓய்வு கூட இல்லாது தான் அதுகாறும் உழைத்து வந்திருப்பதை அவள் எண்ணிப் பார்த்தாள். ஆண்களுக்கு இருக்கும் ‘ரிடைர்மென்ட்’ பெண்களுக்கு மட்டும் கிடையாதா என்று அவள் முதன் முறையாக எண்ணிப் பார்த்தாள். ‘கீ இருக்கிற வரைக்கும்தானே கெடிகாரம் ஓடும்’ என்ற கணவரின் சொற்கள் அவளுக்கு ஞாபகம் வந்தன.

      பாரதி அலுவலகத்தில் பென்சில் சீவுகையில் கைவிரலில் காயம் பட்டுவிட்டதால் தன்னால் இரவுச் சாப்பாட்டைப் பரிமாற முடியாது என்று அண்ணியின் எதிரில் அறிவித்தாள். அண்ணி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், சாப்பாட்டு நேரத்துக்கு அவள் எழுந்து பரிமாற வரவில்லை. அறைக்குள் நுழைந்து தலைவலி என்று படுத்துவிட்டாள். ‘பாரதி தன்னை மாட்டிவைப்பதாக அவளுக்கு எண்ணம்’ என்பது லெட்சுமிக்கு நன்றாக விளங்கிற்று. எனவே, அவள் தானே எழுந்து  எல்லாரையும் உட்காரவைத்துப் பரிமாறினாள். பசிக்கவில்லை என்று தட்டிக் கழிக்கப் பார்த்த மருமகளையும் வலுக்கட்டாமாகக் கூப்பிட்டுச் சாப்பிட வைத்தாள்.

      ஒன்பது மணி வாக்கில் ஏதோ இரண்டு பருக்கை கொறித்துவிட்டு அவள் படுத்தாள். உடல் அசதியால் அவளுக்கு நல்ல தூக்கம் வந்தாலும் அவ்வப்போது திடுக் திடுக்கென்று விழித்துக்கொண்டாள். அப்படி விழித்துக்கொண்ட போதெல்லாம் அவள் நெஞ்சு வலியால் துடித்தாள். தண்ணீர் குடித்தால் தேவலை போல் இருந்தது. ஆனால் மூச்சு அடைத்ததால் குரல் எழும்பவில்லை. ஆயினும் சமாளித்துக்கொண்டு, “என்னங்க, என்னங்க!  கொஞ்சம் தண்ணி குடுக்கிறீங்களா?” என்று அவள் இரண்டு தடவைகள் குரல் கொடுத்தாள். அவளது குரலுக்குப் பதிலாய்க் கிடைத்தது சிவசைலத்தின் குறட்டை ஒலிதான். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மற்றவர்களை எழுப்ப அவளுக்கு மனமில்லை. தவிர, அவர்கள் இரண்டாங் கட்டில் படுத்திருந்ததால், அவளால் அவர்கள் காதுக்கு எட்டுமளவுக்குக் குரல் எழுப்ப முடியாது. எனவே அவள் இரண்டு மூன்று முறைகள் கணவரை அழைத்துவிட்டு அலுத்துப் போய்க் கண்களை மூடிப் படுத்தாள். தானே எழுந்து போய்க் கணவருக்காகத் தான் இரவில் எடுத்துவைத்திருந்த தண்ணீரை அவருக்குப் பக்கத்தில் இருந்த செம்பிலிருந்து எடுத்துப் பருகலாமென்றாலோ கையைக் காலை அசைக்க முடியவில்லை. அவள் சிறிது நேரம் தாகத்துடன் போராடிவிட்டுக் கண்களை மூடினாள்.

      மனைவி கண்களை மூடியதன் பிறகு சிறிது பொழுதுக்கெல்லாம் கண் விழித்த சிவசைலம் லெட்சுமி தனக்காக எடுத்து வைத்திருந்த தண்ணீரைப் பருகிக் கொல்லைப்புறமும் போய்விட்டு வந்து படுத்தார். படுக்கும் முன் மனைவியின் தலைமாட்டில் நின்று சற்று நேரம் அவளையே கண் கொட்டாமல் பார்த்தார். ‘என்ன அலுப்பு! பொணம் மாதிரி தூங்குதே?’ என்று தமக்குள் நினைத்து அவளுக்காக இரக்கப்பட்ட அவர் இமையோரங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு வந்து படுத்தார். வெகு நேரம் தூங்காமல் இருந்துவிட்டுப் பாட்டில் பால் வாங்கி வருவதற்குரிய நேரத்தில் அவர் கண்ணயர்ந்தார்.

      சுமார் ஆறு மணிக்கு அவர் கண்விழித்த போது, வீட்டில் விளக்கு எரியவில்லை என்பதையும், சமையற்கட்டில் பாத்திரங்களின் ஓசை கேட்கவில்லை என்பதையும் கண்டார். அவருள் ஓர் அச்சம் புகுந்து உடம்பிலும் ஆட்டம் கண்டது.

      அவர் பதற்றத்துடன் எழுந்து கூடத்துக்கு வந்தார். லெட்சுமி தூங்கிக் கொண்டிருந்தாள். அது வெறுந் தூக்கமாக இராது என்று எதனாலோ அவருக்குப் பட்டுவிட்டதால், “ஏய், பாரதி! டேய், ரங்கா! … எல்லாரும் எளுந்திரிச்சு வாங்கடா. அம்மாவெ வந்து பாருங்க…” என்று சின்னப் பிள்ளையைப் போல் கூக்குரலிட்டார். லெட்சுமியின் இதயம் இயங்கவில்லை என்பதையும்,  கை, கால்கள் சில்லிட்டு விட்டதையும் கண்டு அவள் முடிவற்ற ஓய்வைப் பெற்றுவிட்டாள்  என்பதை உணர்ந்து சிறு குழந்தை மாதிரி அழுதார். அந்தத் தள்ளாமையிலும் கணவருக்கு வழக்கம் போல் செம்பில் குடிநீர் எடுத்து வைத்த லெட்சுமி தன் இறுதி மூச்சுப் பிரியும் வேளையில் குடிக்க ஒரு வாய்த் தண்ணீர் கொடுப்பதற்குக் கூட யாரும் இல்லாமல் தாகத்துடன் போராடிச் செத்தாள் என்பதையறியாத சிவசைலம் கேவிக் கேவி அழுதார்.

…….

…….

Series Navigationமுழைஞ்சில்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *