‘‘ஔவை’’ யார்?

This entry is part 8 of 19 in the series 30 மே 2021

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை.

மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

       சங்ககாலப் பெண்பாற் புலவர்களுள் ஒவராகத் திகழ்ந்தவர் ஔவையார். அதியனின் வீரத்தையும், கொடையையும் பொருளாகக் கொண்டு பாடியது அவர் பெரும்புகழ் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது எனலாம். ஔவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருவரா? அல்லது பலரா? ஒருவராக இருந்தால் அவர் எங்ஙனம் பல்லாண்டு காலம் உயிர் வாழ்ந்திருந்தார்? என்ற பற்பல வினாக்கள் நம் உள்ளத்தே எழுகின்றன. ஔவை என்ற பெண்பாற் புலவரின் ஆளுமை காலங்கடந்தும் நிற்பதற்கு அவரின் படைப்புகளும் அவரின் வாழ்க்கையுமே காரணமாகும்.

ஔவையார் ஒருவரா? பலரா?

       சங்க கால ஔவையாரையும் கி.பி. 17,18-ஆவது நூற்றாண்டுகளில் பந்தனன்தாதி என்னும் வணிகக் குலப் புகழ் பாடும் நூலாசிரியராகிய ஔவையாரையும் தமிழ் இலக்கிய வரலாற்றில் காண்கிறோம். இடைப்பட்ட காலத்திலும் ஔவையார் பலர் வாழ்ந்திருக்கின்றனர்.

       இந்த நல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைத் திருப்பெயர் இத்தமிழ் நாட்டின்கண் அறிவுக்கே பரியாய நாமம்போலச் சிறந்து தொன்றுதொட்டே ஆண், பெண், இளையோர், முதியர் என எல்லோராலும் வழங்கப்படுவதொன்று என்று அறிஞர் ரா. ராகவையங்கார் ஔயைார் பற்றி மொழிகின்றார்.

       பல்கலைச் செல்வர் தெ. பொ.மீ. அவர்கள் ஔவை மரவைக் குறித்து,

‘‘பண்பாடு, சமயம், கவிதை யாவற்றிலும் சிறந்ததைக் குறிக்கும் மரபாகத் தமிழ்நாட்டில் ‘ஔவை’ வழஙக்குகிறது என்று குறிப்பிடுகிறார்.

       பிள்ளைகள் முதலிற் படித்து நெட்டுருப் பண்ணும் வாக்கியங்கள் பெரும்பாலும் அவ்வையார் வாக்கியங்கள் என்று சொல்லப் படுவதால் உலகத்தார், ஔவையார் வாக்கியங்களல்லாத பழஞ்சொற்களையும் அவர் வாக்கியங்கள் என்றே வழங்குவர். அவ்வையார் வாக்கிற்கு ஏற்பட்ட கவுரவத்தினால் மற்றை வாக்கியங்களென வழங்குவர் போலும் என ஔவையார் வரலாற்றைச் செம்மையாக ஆய்ந்த அறிஞர் அனவரதநாயகம் பிள்ளை அவர்களும் ஔவை மரபு தோன்றியதன் காரணத்தைக் குறிப்பிடுகின்றார்.

       சங்கத் தமிழ் வளர்த்த ஔவையார் பெயரைக் கொண்டே ‘‘சங்கத் தமிழ் மூன்றும் தா’’ என்பது போன்ற புராணக் கதையெல்லாம் வரலாற்றில் புகுந்துவிட்டன.

       தமிழிலக்கிய வரலாற்றில் ஔவையார் பலர் வாழ்ந்திருக்கின்றனர். ஔவையாரைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறிப் போந்துள்ளனர். ஔவையார் பெயருடன் இயைத்து எழுதப்பட்டும், கர்ண பரம்பரையாகவும் வழங்குகின்ற கதைகள் அளவில்லாதன. புலவர் புராணமுடையாரே ஔயைார் இருவர் எனத் துணிந்து,

       ‘‘முன்னௌவை கலிவருட மூன்றாவதாயிரத்தாள்

       பின்னௌவை நான்காவதாயிரத்திற் பிறந்திட்டாள்’’

என்று ஔவையார் பலர் என்பதை உறுதிப்படுத்துவார்.

       1901-இல் முருகதாச சுவாமிகள் அவர்களால் இயற்றப்பட்ட புலவர்புராணக் கருத்தை அடியொற்றி, ‘‘அவ்வையார் இருவர் இருந்தனர் என்பதற்கே ஆதாரம் ஏற்பட்டுள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் அவ்வையார் பாட்டுக்களென்று காணும் பாட்டுக்கள் இயற்றியவர் ஒருவர்….. மற்றைப் பிற்காலத்துப் பாட்டுக்களையும் அவ்வையார் பெயரால் வழங்கும் நூல்களையும் இயற்றியவர் அவர் பெயரைக் கொண்ட வேறொரு புலவராதல் வேண்டும்’’ என திரு.எஸ்அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் மொழிவர்.

            நான்கு ஔவையார்கள் நந்தமிழ் நாட்டில் உலா வந்திருக்கின்றனர். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் ஒருவர். சமய காலத்தில் வாழ்ந்த ஔவையார் ஒருவர். கம்பர் – ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த ஔவையார் ஒருவர். அதன் பின்னர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலான அற நூல்களை அள்ளி வழங்கிய ஔவையார் ஒருவர் என்று பேராசிரயிர் மு.கோவிந்தாரசன் குறிப்பிடுகிறார்.

       ஔயைார் என்பது புலவரின் இயற்பெயரல்ல. ஔவை என்றால் மூதாட்டி என்பது பொருள். இன்றும் கன்னட மொழியில் பாட்டியை ஔவா(அவ்வா) என்றே அழைக்கின்றனர் என்ற ம.ந.ராமசாமி அவர்களின் கருத்து ஏற்றுக் கொள்வதாக அமையவில்லை.

       ஔவை என்னும் சொல்லிற்குத் தாய், தவம் செய்யும் பெண், கிழவி எனச் சென்னைக் கழகத் தமிழ்க் கையகராதி பொருள் கூறுகின்றது.

       அவ்வா என்னும் சொல் கன்னடத்தில் ‘அம்மை’  என்னும் பொருளில் நாம் அம்மா எனப் பெண்களை அழைத்தற் பொருளில் வருகிறது. அதே சொல் தெலுங்கில் இன்று ‘பாட்டி’ என்னும் பொருளைத் தருகிறது. எனவே ஔவையாரைப் பாட்டியாக்கி ஒருவித குழப்ப நிலையைத் தோற்றுவித்துவிட்டார்கள் என்ற பேராசிரியர் மு. கோவிந்தராசனின் கருத்துப் பொருந்துவதாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையிலும் அமைந்துள்ளது.

       இதேபோல், ‘‘அதியமான் நெடுமானஞ்சி, பாரி, மலையமான், பொகுட்டெழினி, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவென்கோ, கிள்ளிவளவன், தொண்டைமான், முடியன், கொண்கானத்து நன்னனன் இப்படிப் பல மன்னர்களையும் குறுநில மன்னர்களையும் பாடியவர் ஒருவராக இருக்க முடியாது. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகிய ஆஸ்தானக் கவிஞர்களிடையிலும் சுந்தரமூர்த்தி நாயன்மார் காலத்திலும் இருந்த ஔயைார் ஒருவராக இருத்திருக்க வாய்ப்பில்லை. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி மற்றும் தனிப்பாடல்கள் பாடிய ஔயைாவர் நாடோடிப் புலவர் என்ற தினமணி தமிழ்மணியில் இடம்பெற்றுள்ள கட்டுரையில் காணப்படும் கருத்தும் சிந்தனைக்கு உரியதாக அமைந்துள்ளது எனலாம்.

       ஆய்வாளர்களால் ஆய்ந்துரைக்கப்பட்ட கருத்துக்களைத் தொகுத்த அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் ஒரு பட்டியலாக்குவர்.

பெயர்

காலம்

தனிப்பாடல்

நூல்

பாடப்பெற்றோர்

வரலாறு

1.சங்கா கால ஔவை

சங்ககாலம் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கு முன்

சங்க நூற்பாடல்கள்

அகம்-2 குறுந்.-15 நற்.-7 புற.-33 ஆக 59 பாடல்கள்

சேர, சோழ, பாண்டியன், அதியமான், அவன் மகன், நாஞ்சில் வள்ளுவன் முதலான பலர்

அதியமான் நெல்லிக்கனி

2.இடைக்கால ஔவை

10-ஆம் நூற்றாண்டுக்கு முன்

பல

வேந்தர் மூவர்

அங்கவை சங்கவை திருமணம்

3.சோழர் கால ஔவை

12-ஆம்
நூற்றாண்டு

பல

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை

சோழன் அசதி

அசதி விக்கிரம சோழன்

4.சமயப் புலவர் ஔவை

14-ஆம் நூற்றாண்டு

சில

அவ்வைக் குறள், விநாயகர் அகவல்

விநாயகர்

அகவல் பாடியது

5.பிற்கால ஔவை I

16-ஆம் நூற்றாண்டு

சில

தமிழறியும் பெருமாள் பந்தன்

6.பிற்கால ஒள்வை II

17-18-ஆம் நூற்றாண்டு

பந்தனந்தாதி

பந்தன் என்ற வணிகன்

செய்த சிறப்புகள்

       அதியமான் அளித்த அற்புத நெல்லிக்கனி ஆயுளை நீட்டிக்கும் என்ற சங்க பாடற்குறிப்பு(புறம்., பாடல் எண், 91) கட்டுக்கதைகளுக்கும் விந்தைமிகு கற்பனைகளுக்கும் வாய்ப்பளிக்கிறது.

       சங்கால ஔவையார் பாணர் குலத்தைச் சார்ந்தவர் என செந்நாப்புலவர் ஆ. கார்மேகக் கோன், திருக்குறள் மணி அ.க.நவநீதகிருட்டிணன் ஆகியோர் குறிப்பிடுவர். ‘தம்முடைய கூற்றாகவன்றிப் பாடியிரத்தற்குரிய விறலி முதலியவர்களின் கூற்றுக்களாகவும் இவர் பாடிய பாடல்கள் இந்நூிலும் பிற நூல்களிலும் காணப்படும். ஆராய்வோர், அதனைக் கொண்டு இவரை விறலி முதலியவர்களாக நினைந்து விரைந்து முடிவு செய்து விடுதல் மரபன்று. அங்ஙனம் பாடுதல் கவி மதமெனக் கொள்ளுதல் முறை. பிற புலவர் பாடல்களிலும் இம்முறை காணப்படும் என்ற டாக்டர் உ.வே.சா. அவர்களின் கருத்து ஈண்டு குறிப்பிடத்தக்கது.

       கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி முதலிய புலவர்கள் காலத்தும் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தும் ஔவையார் வாழ்ந்திருந்தார் என்பதனைக் கொண்டு இவர் பெயரால் பல வரலாறுகளும் பாட்டுக்களும் வழங்குவது உலகவியற்கைக்கு மாறானதாகும்.

       மேற்கூறியவற்றையெ்லாம் ஒருங்கிணைந்து ஆராய்ந்தால் சங்க காலத்தில் பெண்பாற் புலவர்களுள் ஔவையார் என்பவர் சிறந்த புலவராக விளங்கினார் எனவும் பிற்காலத்தேயும் அப்பெயர் கொண்ட புலவர் பலர் இருந்தனர் எனவும், இவ்வாறு பலர் ஒரே பெயரில் விளங்கியதால் பிற்காலத்தே அவர்களைப் பற்றிய வரலாற்றில் குழப்பங்கள் காரணமாகப் பல்வேறு கதைகள் வழங்கலாயின எனவும் கூறலாம்.

ஔவையாரின் காலம்

       ஔவையாரால் பாடப்பட்ட அதியமான் அஞ்சியைப் பரணரும் பாடியிருப்பதிலிருந்து பரணர் இவர் காலத்தவர் என்பதும் தெளிவு. பரணர் கி. பி. 55-60க்கு முன்னிருந்த உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியையும், பல அரசர்களையும் பாடியுள்ளார். ‘‘ஔவையார் 2-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலிருந்த உக்கிரப் பெருவழுதியைப் பாடியுள்ளார். இவன் கடைச்சங்கத்து இறுதியிலிருந்தவன் என்பது இறையனார் களவியலுரைப் பாயிரமட் முதலியவற்றால் தெளியப்பட்டது. இவைகளை ஆராயின் ஔவையார் பரணருக்குச் சிறிது இளைஞராய் கி.பி. 65-70 முதல் கி.பி.190 வரை நீண்ட ஆயுடையவரய் வாழ்ந்திருந்தவர் என்பது பொருந்தும் என்ற கார்மேகக்கோன் அவர்களின் கருத்துப் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது.

பாட்டுடைத் தலைவர்

       ஔவையாரால் பாடப்பட்டோர் அதியமான் நெடுமானஞ்சி, தொண்டைமான், அதியமான் மகன் பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாவென்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்போராவர்.

பாடல்கள்

       ஔவையாருடைய பாடல்கள் எட்டுத்தொகையுள் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களுள்ளும் காணப்படுகின்றன.

       புறநானூற்றில் 87-104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390, 392, ஆகிய எண்களைக் கொண்ட 33 பாடல்கள் ஔவையார் பாடியன.

       87 – 95, 97 – 101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390 என 22 பாடல்களும் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியைப் பாடியவையாகும். 96, 102, 392 என்ற 3 பாடல்களும் பொகுட்டெழினியைப் பற்றியவை. நாஞ்சில் வள்ளுவனைப் பாடியது 140-ஆம் பாடல் மட்டுமே. இராசசூய வேள்வியில் பெருநற்கிள்ளி, சேரமான் மாவெண்கோ, கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி இம்மூவரையும் வாழ்த்தியது 367-ஆம் பாடலாகும். ஏழைனய பாடல்களின் பாட்டுடைத் தலைவர்கள் இனை்னாரைப் பாடியன என அறிய இயலவில்லை.

       ஔவையாரின் புறப்பாட்டுக்களில் போரில் இறந்தோர்க்கு வீரக்கல் நட்டு, அதற்கு மயிற்பீலி அணிந்து மது படைத்தல், வேலுக்குப் பீலி அணிந்து வைத்தல், கழற் கனியால் பெண்டிர் உச்சி வகிர்தல், போரில் இறவாது நோய் முதலியவற்றால் இறந்த அரசர்களின் உடம்மை வாளால் பிளந்து அடக்கம் செய்தல், உப்பு வணிகர் உப்பேற்றிச் செல்லுங்கால் சேம அச்சு உடன் கட்டிச் செல்லுதல் முதலிய வழக்குகள் குறிக்கப்பெற்றுள்ளன.

       அகநானூற்றில் 11, 147, 273, 303 என்ற எண்ணமைந்த 4 பாடல்களும் ஔவையார் பாடியன. தலைவன் தலைவியரின் அன்பின் திறத்தை வெளிப்படுத்தும் அகப்பொருட் கருத்துக்கள் அடங்கியவை. 147-ஆம் பாடலில், புலமை மிக்க வெள்யிவீதியார் தம் கணவனைத் தேடிக் காடும், மலையும் சுரமும் அலைந்து வருந்திய செய்தியும், 303-ஆம் பாடலில் பாரி பறம்பை மூவேந்தர் முற்றுகையிட்ட வரலாறும் வந்துள்ளன.

       நற்றிணையில் 129, 187, 295, 371, 381, 390, 394 எனும் 7 பாடல்களும் அகப்பொருட் துறையில் அமைந்த பாடல்களாகும்.

       குறுந்தொகையில் 15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183,200, 364, 388 என்ற 15 பாடல்களும் ஔவையார் பாடியனவாகும். தோழி கட்டுவிச்சியை நோக்கிக் கூறுவதாயுள்ள 23-ஆம் பாடல் மிக்க சுவை பயப்பது. ஔவையாரின் அகப்பாடல்களுள் வரலாற்றுச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

       ஆகவே ஔவையார் புறப்பாடல்களையும், அகப்பாடல்களையும் பாடியுள்ளார். புறப்பாடல்களுள் எழுவரைப் பற்றிய பாடியிருப்பினும் அதியமானைப் பற்றியே பெரிதும் பாடியுள்ளார். புறநானூற்றில் தான் அவர் பாடல்கள் பெரிதும்இடம் பெற்றுள்ளன எனலாம்.

ஔயைாரும் அதிமானும்

       பாரியைப் பாடிய கபிலரைப் போலவும், ஆயைப் பாடிய மோசியைப் போலவும் அதியமான் புகழொளி எங்கும் பெருகிப் பரவுமாறு விரிவாகப் பாடியவர் ஔவையார் ஒருவரே. ஔவைக்கும் அதியமானுக்கும் இடையே மிக மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. தொடர்பின் நெருக்கத்தை ஔயைாரே,

       ‘‘சிறிய கட்பெறினே உமக்கீயு மன்னே!

       பெரிய கட் பெறினே

       யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணும் மன்னே!’’

            ‘‘என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே!’’

            ‘‘நரந்த நாறுந் தன்கையாற்

       புலவு நாறு மென்றலைத் தைவரு மன்னே!’’

எனத் தம் பாடலில் விளக்குவார். இம்மூன்று வரிகளே சிலரின் ஐயப்பாட்டிற்கு இடமளிக்னிறன. மேலும்,

       ‘‘…….தொன்னிலைப்

       பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட

       சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா

       தாதனின் கைத் தடக்கிச்

       சாதனீங்க எமக்கீத் தனையே!’’

எனும்  பாடல் உணர்த்தும் கருத்தாகிய அரிதில் கிட்டிய அருநெல்லிக் கனியை அருந்தமிழ் கவிஞருக்கு அளித்திலும் ஐயப்பாடு சிலரிடையே ஏற்பட்டுள்ளது. ஔவையின் காதலன் அதியமான் ஆகையால் அவ்வாறு செய்தான் எனவும் மு. கோவிந்தசாமி என்ற அறிஞர் கூறமுயல்வார். அதியனின் மகன் பொகுட்டெழினி மாய்ந்தபின்,

       ‘‘வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்

       தன்னோரன்ன விளையரி ருப்பப்

       பலர் மீது நீட்டிய மண்டை யென்சிறுவனைக்

       கால் கழிகட்டிலிற் கிடப்பித்

       தூவெள்ளைறுவைப் போர்ப்பித்திலதே’’

என நெஞ்சங் கொதித்துக் கண் கலங்கிப் பாடும்பொழுது, ‘என் சிறுவனை’ எனக் கூறியதனாலும் அதியனின் காதலி ஔவையார் எனக் கூறுகின்றனர்.

       ஔவையார் அஞ்சியின் அருங்குணங்களை எந்நேரமும் நினைந்து நினைந்து தம் உள்ளத்தினின்று ஊறி எழுகின்ற செந்தமிழ் பாக்களால் செம்மையுற எடுத்துப் பாடும் தொழிலையே மேற்கொண்டிருந்தார். அந்த அஞ்சியை விட்டுச் செல்ல அவர் மனம் இடந்தருவில்லை. அம்மையாரை விட்டுப் பிரிய அஞ்சியும் உடன்பட்டானில்லை. அவரில்லாத அவகை்களம் தாமரையற்ற தடாகம் போலும் கண்ணில்லா முகம் போலும் பொலிவற்று விளங்கும் என்று அஞ்சி எண்ணினான். ஔவையாரும் தம் புலமையாலும் ஒழுக்கத்தாலும் அஞ்சியின் அன்பைக் கவர்ந்தார்.  அவனுக்கு உயிர்க்குயிரே போன்ற அமைச்சராயும் விளங்கினார் என டாக்டர் மா. இராசமாணிக்கனார் கூறுவார்.

       நட்பின் உயர் எல்லைக்குச் சென்றவர்களுக்கு நஞ்சும் அமுதமாகும் என்பதனை,

       ‘‘முந்தையிருந்து நட்டோர்க் கொடுப்பின்

       நஞ்சு முண்பர் நனி நாகரிகர்’’

            ‘‘பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயதக்க

       நாகரிகம் வேண்டு பவர்’’

எனும் பாடல்கள் தெளிவுறுத்தும். இத்தகு நட்பினையே ஔவையாரும் அஞ்சியும் பெற்றிருக்க வேண்டும். தாயினும் சால ஔவையை அதியன் மதித்ததால் ஔவை அளித்ததை எச்சிலெனக் கொள்ளாது அச்சயன் அளித்த அரும் பொருளாகவே எண்ணியிருக்க வேண்டும். உவப்பத் தலைகூடி உள்ளப் பிரியும் புலவர்களைப் போன்றே ஔவைியிடத்து அதியன் கொண்ட நட்பு அமைந்திருந்தது.

       அருந்தமிழ் ஔவையும் அதியமானை விட்டுப் பிரிந்து செல்ல எண்ணங் கொண்ட போதோ, வேற்றூர் சென்று அரண்மனை அடைந்த பொழுதோ உயர் தமிழுக்கும் நட்பிற்கும் இலக்கான ஔவையின் தலையை அருளுடன் தடவிக் கொடுத்திருக்க வேண்டும். உண்டாரை நெடிது வாழச் செய்யும் நெல்லிக் கனியைத் தானுண்ணாது ஔவைக் களித்த செய்தியும் நட்பின் மிகையே.

       தான் வாழ்வதைக் காட்டிலும் ஔவை நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீள் தமிழும் நிலைத்து நிற்கும் என்னும் அதியனின் உள்ளன்பு நெல்லிக் கனியால் மலர்ந்தது. அதுவன்றி காதலிக்காக ஈந்தான் என்பது பொருளற்ற ஒன்றாகும். இது அதியனின் நற்றமிழ் உணர்வைக் காட்டுகின்றது எனலாம்

       ஔவையார் ‘என் சிறுவனை’ எனக் குறிப்பிட்டுள்ளது. சிந்தனைக்குரியது. இந்திர விழாவில் ஆடுதற்கு மாதவியும் மணிமேகலையும் வாரா நின்றபொழுது வயந்தமாலை வருகென அழைத்தபோது,

       ‘‘மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை

       அருந்தவப் படுத்த லல்லதியாவதும்

       திருந்தாச் செய்கைத் தீத் தொழிற் படாஅள்’’

எனக் கூறி மறுத்து விடுகின்றாள் மாதவி. பாரி மகளிரை இருங்கோவேளிடத்து அறிமுகப் படுத்துகின்ற பொழுது, இவர்கள் பாரி மகளிர்,

       ‘‘….யானே

       தந்தை தோழனிவரென் மகளிர்’’

எனக் கபிலர் கூறுகின்றார். இதைப் போன்று ஔயைாரும் நட்பு நிலையிலேயே என்மகன் எனப் பொகுட்டெழினியைக் கூறியுள்ளார் எனலாம். இவற்றிலிருந்து ஔவையார், அதியன் இருவரிடையே, ‘பாசம் – அன்பு – நட்பின் உயர் எல்லை – தெய்வத்திலும் மேலான மதிப்பு’ இவையே ஊடாடியிருந்தன என்பது தெளிவு. அதியமான் புகழினை,

       ‘‘…. …. ஓங்கு செலல்

       கடும் பகட்டு யானை நெடுமான அஞ்சி

       ஈரநெஞ்ச மோடிச் சேண் விளங்கத்

       தேர்வீசு இருக்கை’’

என நற்றிணையிலும்,

       ‘‘ஓவாதீயும் மாரிவண்கைக்

       கடும்பகட்டு யானை நெடுந் தேரஞ்சி

       கொன்முனை இரவூர்…..’’

            ‘‘…. ….. வெம்போர்

       நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி’’

எனக் குறுந்தொகையிலும் அதியனது கொடை, வீரம் பற்றியும் ஔவையார் எடுத்தியம்புகிறார்.

       எனவே, ஔவையார், அதியமான் ஆகியோரிடையே நிலவிய நெருக்கம் புலவர், அரசரிடையே தோன்றும் நட்பின் உயர்வே. அந்நட்புக்குக் காரணமாக விளங்கியது ஔவையின் புலமைச் சிறப்பு. அதியமான் நெல்லிக்கனி கொடுத்ததாக வரும் செய்தி தமிழ்ப்புலவர் நெடிது வாழின் தமிழுக்குத் தொண்டு செய்வார் எனும் அதியமானின் தமிழ் உணர்வை வெளிப்படுத்துவது, இத்தகு சிறப்புக்கு உரியவனாகையால்தான் புறப்பாடல்களில் அன்றி, அகப்பாடல்களிலும் அவனைக் குறிப்பிட்டுள்ளார் எனத் தெளியலாம்.

ஔவையின் மாண்புகள்

       பெண்பாற் புலவர்களுள் புறநானூற்றி் மிகுதியான பாடல்களைப் பாடியவர் ஔவையார். அகமும் புறமும் பாடிய பாடலாக இவர் திகழ்கிறார். மூவேந்தரையும் ஒன்றாக இருக்கக் கண்டு பாடிய சிறப்பும் இவருக்கே உரித்தாகும். மேலைநாட்டிலக்கியப் பயிற்சியில் திளைத்தவர்கள் ஔவையாரைத் திராவிட சாப்போ, தமிழ் சாப்போ என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தூதுவர் ஔவையார்

       ஒருவர் தம்முடைய கருத்தைக் காதலர், நண்பர், பகைவர் இவர்களுள் ஒருவருக்கு மற்றொருவர் வாயிலாகக் கூறிவிடுப்பதே தூதாகும்.

       ‘‘உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்

       சந்தியின் விடுத்தல் முந்துறு தூது’’

எனத் தூதுக்கு இலக்கண விளக்கம் உரைத்துப் போகும். தூது என்னும் சொல்லுக்கு உரை வரைந்த பரிமேலழகர், சந்தி விக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்வாரது தன்மை என்று குறிப்பிடுகிறார். வள்ளுவப் பேராசான்,

       ‘‘நாட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

       ஒட்டாரை ஒட்டிக் கொளல்’’

எனத் தூதர்க்குரிய இலக்கணத்தை வள்ளுவர் வரையறுக்கிறார். மக்களை மட்டுமே தூதாக விடத்தல் இயல்பாயினும் அஃறிணைப் பொருள்களையும் தூதுவிடுக்கும் முறை இலக்கிய வழக்கில் காணப்படுகிறது. பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனிடம் அன்னச் சேவலைத் தூது விடுகிறார். அகத்துறைப் பாடல்களில் அஃறிணைப் பொருட்கள் பெரும்பாலும் தூதுப் பொருளாகின்றன.

       காப்பியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும் ஒரு துறையாக விளங்கிய இத்தூதே பிற்காலத்தில் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகப் பரிணமித்தது. காதல் பற்றிய தூதை அகத்துறைத் தூது எனவும், பகை தணிக்கும் வினை குறித்து அயல் வேந்தர்பால் செல்லும் தூதை புறத்துறைத் தூது எனவும் தூதினை இருவகையாகக் குறிப்பிடுவர்.

       திருவள்ளுவர் தூதரைத் ‘தான் வகுத்துக் கூறுவான்’ ‘கூறியது கூறுவான்’ என இருவகைப்படுத்துகின்றார். பாண்டவர்களுக்காகத் தூதுசென்ற பரந்தாமன் போலவும், இராம தூதனான அனுமன் போலவும், ஔவையார் அதியனுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றார். பெண்பாற் புலவரின் அரசியல் தூதின் மேன்மையைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஔவைக்கு நிகரான ஒரு பெண்பாற் கவி உலக நாடுகளிலும் தோன்றியதில்லை என்பதற்கு அம் மூதாட்டியார் தொண்டைமானிடம் சென்ற தூது வெற்றி பெற்ற நிகழ்ச்சி ஒன்றே போதுமானதாகும்’’ என்பர்.

       அதிமானுடைய படைக்கலத்தைப் புகழ்ந்து கூறும் வாண்மங்கலத் துறைப் பாடல் ஔவையின் அரசியல் தூதில் முகிழ்த்தது. தொண்டைமான் தூதுர் வந்த ஔவையிடம் தன் படைக்கலக் கொட்டிலைக் காட்ட, ஔவையார் அதைப் பார்த்து,

       ‘‘இவ்வே! பீலி அணிந்து மாலை சூட்டி

       கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

       கடியுடை வியன் நகரவ்வே, அவ்வே

       பகைவர் குத்தி கோடுநுதி சிதைந்து

       கொல் துறைக் குற்றில மாதோ’’

எனப் பாடுகிறார். ‘இவ்வே’, ‘அவ்வே’ என்று தொண்டைமான் வேலையும் அதியமான் வேலையும் ஒப்பிடுகிறார் ஔவையார். கவிதையில் அமைந்துள்ள நயம் தூதிற்குரிய ஆராய்ந்த சொல் வன்மைக்குச் சான்றாகும்.

       இத்தூது சென்றமையானும் இவ்வமையத்து எடுத்து மொழைிந்த வீர வார்த்தையானும் இவரது ஆண்மையும் அறிவும் செய்நன்றி மறவாமையும் நன்றறிய தக்கன என்று மூதறிஞர் ரா. இராகவையங்கார் சுட்டிக் காட்டுகின்றார். ஔயைாரின் அரசியல் ஈடுபாட்டையும், ராஜ தந்திர வல்லமையையும் இப்பாடல் எடுத்தியம்புகிறது.

       ஔவையார் வெறுமனனே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர்  காலத்திலேயே அவர் ராஜநீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ்நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார் என்று மகாகவி சி. சுப்பரமணிய பாரதியாரும் பாராட்டுகிறார்.

       ஔவைாயர் என்ற பெயரில் புலவர் பலர் பல்வேறு காலங்களில் வாழ்ந்தமை ஔவை என்ற பெயரின் ஆளுமையின் சிறப்பை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. சங்க கால ஔவையார் அகப்பாடல்களையும் புறப்பாடல்களையும் பாடியுள்ளார் எனினும் புறப்பாடல்களையே பெரிதும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதியமான் புறப்பாடல்களில் எழுவரைப் பாடியிருப்பினும் அதியமானைப் பற்றியே மிகுதியாகப் பாடியுள்ளார். அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்தது அவனுடைய தமிழ் உணர்வையும் தமிழ்ப் புலவராகிய ஔயைாரிடம் கொண்ட நட்பின் சிறப்பையும் விளக்குவதாக அமைந்துள்ளது. ஔவையாரின் பண்பு நலன்களாலும் அவரின் சிறப்பு காரணமாகவும் ஔவை என்ற பெயரின் ஆளுமை காலங்கடந்து நிற்கும் என்பது நோக்கத்தக்கதாகும். (தொடரும்)

 

Series Navigationஇலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?கவிதையும் ரசனையும் – 17
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *