ஜோதிர்லதா கிரிஜா
(19.2.1978 குங்குமம் இதழில் வெளிவந்த சிறுகதை. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “திருப்பு முனை” )எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)
மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும் நிறைவும், மதர்ப்பும், பொருள் பொதிந்த புன்னகையும் அவன் முகத்திலும் தவழ்ந்துகொண்டிருந்தன. அதற்கு முந்தின நாள் தனக்கும் தன் மனைவிக்குமிடையே நடந்த சிறு பிணக்கும், அதன் பல மணி நேர நீடிப்பும், அது எங்கே ஒரு நாள் முழுவதும் நீடித்துவிடுமோ எனும் அவனது அச்சமும், அது தீர்ந்து போனதன் பிறகு ஏற்பட்ட கரை காணாத மகிழ்ச்சியும் மறுபடி இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்த போது, சிறு கீற்றாக அவன் முகத்தில் பளிச்சிட்ட புன்சிரிப்பு சற்றே அகன்று முகம் முழுவதும் படர்ந்தது. அந்தப் புன்சிரிப்பை அதன் போக்கில் சில விநாடிகளுக்கு விட்டுவைத்திருந்த அவன் தன் அசட்டுப் புன்னகையை யாரேனும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களோ எனும் திடீர்க் கவனத்துடன் பார்வையைச் சுழற்றினான். நல்ல வேளையாக எல்லாரும் வேலையில் ஆழ்ந்திருக்கவே, அவன் வலுக்கட்டாயமாகத் தன் புன்னகையை அகற்றிவிட்டுத் தானும் வேலையில் ஆழ முயன்றான். முயற்சியில் தோற்றும் போனான். அவள் முகம் அவன் மனக்கண் முன் தோன்றிக்கொண்டே இருந்தது.
“என்ன! புது மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?” என்ற குரலைக் கேட்டு அவன் திகைப்புடன் நிமிர்ந்தான். ராஜப்பா எதிரில் நின்றான்.
”வா, ராஜப்பா. இன்றுதான் விடுப்பிலிருந்து திரும்பினாயா?” என்று நண்பனை வரவேற்ற அவன் அவனை உட்காரச் சொல்லிவிட்டுக் காபிக்கு ஆள் அனுப்பினான்.
“உன் கல்யாணத்துக்கு நான் இருக்க முடியாமல் போய்விட்டது. என்ன செய்வது?” என்று மன்னிப்புக் கோரும் குரலில் அங்கலாய்த்துக்கொண்ட அவன், “குடித்தனம் வைத்துவிட்டாயல்லவா?” என்றான்.
“வைத்துவிட்டேன்.”
“ஒருவேளை மாமியார் வீட்டிலேயே இருக்கிறாயோ என்பதற்காக அப்படிக் கேட்டேன்.”
“உனக்கு விஷயமே தெரியாதா? மாமனார்-மாமியார் வராமல்தான் எங்கள் கல்யாணம் நடந்தது.”
“உன்னுடைய அப்பா-அம்மா?”
“அவர்களும் வரவில்லை. அநாதைகளின் கல்யாணம் மாதிரி கோவிலில் நடந்தது.”
“ஆண்டவன் முன்னிலையில் நடந்தது அல்லவா? அது போதும். பதிவு பண்ணிக்கொண்டீர்கள்தானே?”
“ஆமாம், பதிவு பண்ணிக்கொண்டோம். அவள் பதிவு செய்துதானாக வேண்டும் என்றாள். அதனால் …”
“நல்லதுதான். உன் மனைவி கெட்டிக்காரி!” – ராஜப்பா இப்படிப் புகழ்ந்ததை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சூடாகப் பதில் சொல்லவேண்டும் போல் இருந்தது. அடக்கிக்கொண்டான்.
“இரு பக்கத்துப் பெற்றோர்களும் இணங்கி யிருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இத்தனைக்கும் நீங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை… சுத்த மோசம்…”
சில விநாடிகளுக்குப் பேச்சு நின்றது. காபியைக் குடித்துவிட்டு ராஜப்பா கிளம்பிப் போனான். அவன் போனதற்குப் பிறகு, ‘உன் மனைவி கெட்டிக்காரி’ என்று அவன் சொன்னது மறுபடியும் மறுபடியும் அவன் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. ‘நண்பனின் சொற்களுக்கு என்ன பொருள்? ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியும்.’ – பெற்றோரின் இணக்கமின்மையை மீறித் தனக்குப் பிடித்தவனை மணக்கும் ஒரு பெண் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் அவன் சொற்களின் உட்கிடை என்பதைச் செரிக்க மறுத்து அவன் மனம் கிளர்ச்சி செய்தது. ‘அப்படியானால் என்னை முழுவதும் நம்பாமல்தான் திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும் என்று முனைப்பாக இருந்தாளா?’ – இந்த நினைப்பு அவனுள் எழுந்ததும், அது சரிதானா என்பதைத் தெரிந்துகொண்டுவிட அவன் விரும்பினான்.
‘ஒருவேளை இவன் சிலரைப்போல் கொஞ்ச நாள் கழித்துத் தன்னை ஒதுக்கிவிட்டால் இவனைச் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தத் தனக்கு ஒரு பிடி இருக்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது அவ்வாறு அவன் விலகும் சாத்தியக்கூற்றைத் தடுக்குமுகமாகவோதான் அவள் பதிவுத் திருமணத்துக்கு ஒற்றைக்காலில் நின்றிருக்கவேண்டும்’ என்னும் முடிவுக்கு நண்பனின் கூற்று அவனை விரட்டிய போது, அந்த நினைப்பு முன்னாலேயே தனக்கு ஏன் வரவில்லை என்று அவன் சற்றே நொந்துகொண்டான். தன் மகிழ்ச்சி யெல்லாம் அவிந்து விட்டார்ப்போல் அவன் சோர்வுற்றான். ‘அப்படியானால் அவளுக்கு என் மேல் முழு நம்பிக்கை இல்லையா?’ – இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தாலொழிய நிம்மதி இருக்காது என்று அவனுக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது. ‘ நான் மட்டும் அவளை நம்புகையில், அவள் ஏன் என்னை நம்பவில்லை? காதலின் அடிப்படையே நம்பிக்கைதானே?’ என்றெல்லாம் அவன் தன் மனத்தைப் போட்டு உழப்பிக்கொண்டான்.
அது பற்றித் தனக்கும் அவளுக்குமிடையே நடந்த உரையாடல் அவனுக்கு இப்போது ஞாபகம் வந்தது.
‘பதிவுத் திருமணமும் செய்துகொண்டு விடலாம்தான். ஆனால் அது அவ்வளவு அவசியமா?’ என்று அவன் அவளைக் கேட்ட போது, அவள் சொன்ன பதில் அவன் காதுகளில் ஒலித்தது.
‘அவசியமோ, அவசியமில்லையோ – முறைப்படி அப்பா-அம்மா நடத்திவைக்க மறுத்துவிட்ட நிலையில் – நாமாகச் செய்துகொள்ளுகிறதை முறைப்படிச் செய்து கொள்ளலாமே என்று தோன்றுகிறது. முறைப்படித் திருமணம் செய்துகொள்ளாமல், நாம் கணவன்-மனைவியாக வாழத் தொடங்கிவிட்டதாக நாலு பேர் பேச மாட்டார்களில்லையா? அதற்குத்தான் ..’ என்று அவள் கொடுத்த விளக்கத்தை நினைவு கூர்ந்த போது, ‘என்னை இவள் நம்பவில்லையோ?’ என்று தான் நினைப்பதாக எண்ணியே அவள் அவ்வாறு விளக்கியிருக்க வேண்டும் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. ‘உங்களை நம்பாததால் நான் பதிவுத் திருமணத்தை வற்புறுத்துகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள்’ என்று அவள் சொல்லவே இல்லை என்பதும் அவனது கவனத்துக்குத் தப்பவில்லை. ‘ராஜப்பா சொன்னது மாதிரி அவள் கெட்டிக்காரிதான்’ என்றெண்ணி அவன் கசந்தான். தான் அவளைப் புரிந்து கொண்டிருப்பதை விடவும் அவள் தன்னை அதிகம் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறாள்’ எனும் எண்ணம் தோன்றியதும் அவனது கசப்புக் காழ்ப்பாயிற்று. மாலையில் வீட்டுக்குப் போனதும் அதைப்பற்றிப் பேசித் தீர்த்துவிடுவது என்று அவன் முடிவு செய்தான். தன் காதல் மணத்தில் இவ்வளவு விரைவில் ஒரு சச்சரவு தலைகாட்டும் என்று அதுகாறும் நினைத்தே பார்த்திராத அவன், ‘இந்த ராஜப்பா ஏன் வந்து என்னோடு பேசினான்?’ என்று கூட நினைக்கத் தலைப்பட்டான்.
புகழ்பெற்ற காதல் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருந்த அவன் காதலைப் பற்றி ஆழ்ந்த முனைப்புடன் சிந்தித்துச் சில முடிவுகளுக்கு வந்திருந்தான். காதலின் அடிப்படையே ஒருவர்பாலொருவர் காட்டுகின்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும் பற்றுதலுமே என்று அவன் எண்ணியிருந்தான். அவனது காதல் ‘கண்டதும் காதல்’ ரகத்தைச் சேர்ந்ததன்று. அவளை நீண்ட காலம் ஆராய்ந்ததன் பிறகே அவன் அவளைத் தேர்ந்தெடுத்தான். தனது காதல் ஒருகாலும் தோல்வியில் முடியக் கூடாது என்று விரும்பினான். முடியாது என்று நம்பிக்கையும் கொண்டிருந்தான். அந்த நம்பிக்கை நிலைகுலையும் வகையில் இன்று தான் கட்டிய மனைவி தன்னை நம்பவில்லையோ எனும் ஐயத்துக்குத் தான் இரையாகிப் போனதை நினைத்து அவன் உள்ளூற வருத்தமுற்றான். அது குறித்து அவளைக் கேட்காமலே இருந்துவிடுதல் தன் வாழ்க்கை அமைதியாய்க் கழிவதற்கு வழி வகுக்குமே என்றும் கணம் போல் நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வது சிறுகச் சிறுகத் தன் உள்ளத்துள் ஓர் எரிமலையைத் தோற்றுவிக்கும் என்று சிறிது நேரச் சிந்தனைக்குப் பின்னர் அவன் தெளிந்தான். உரிய காரணங்களை ஒருவரிடமிருந்து மற்றவர் மறைத்துக்கொண்டு போலியாய் வாழ்வதால் நாளடைவில் அந்த உரிய காரணங்கள் அல்லாத மற்ற அற்பக் காரணங்கள் மணமுறிவுக்கு அடிக்கல் நாட்டிவிடும் என்பதால், எதையும் ஒளிக்காமல் பேசித் தீர்த்துவிடுவதுதான் நல்லது என்று அவன் முடிவு செய்தான்.
… தெருத் திருப்பத்திலேயே அவன் தன் வீட்டு வாசலில் அவள் நின்றிருந்ததையும், தன் தலையைக் கண்டதும் உள்ளே ஓடியதையும் பார்த்தான். அவளுக்கு அன்று தான் பூ வாங்கிவர மறந்தது நினைவில் எழுந்தது. பக்கத்துத் தெருவில் நுழைந்து பூ வாங்கி வரக் கணம் போல் எண்ணினான். ஆனால் அவ்வாறு தான் செய்வது தனது மனநிலையை உள்ளபடி அவளுக்கு உணர்த்தாது என்றெண்ணிய அவன் பூ வாங்காமலே நடந்தான். வீட்டு வாசற்படியைக் கடந்த போது காபி மணம் அவன் குடலைக் குமட்டியது.
முகம், கை, கால் கழுவிக்கொண்டு அவள் காதுகளில் விழாத பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு, அவன் சாய்வு நாற்காலியில் சரிந்தான். அதற்குப் பக்கத்தில் இருந்த உயரமான முக்காலியில் ஆவி பறக்கக் காபி ஏற்கெனவே காத்துக் கொண்டிருந்தது. அவள் சிரித்த முகத்துடன் தானும் காபியுடன் அடுக்களையிலிருந்து வெளிப்பட்டதை அவன் பார்த்தான். ‘என்ன இளிப்பு வேண்டிக் கிடக்கிறது!’ என்று மனத்துள் முனகிக் கொண்டான். சிரிப்பு அற்ற அவன் முகத்தைப் பார்த்ததும் அவள் முகத்தில் தெரிந்த சிரிப்பு மறைந்து போயிற்று. அவன் வந்ததன் பிறகுதான் அவளும் காபி குடிப்பாள். இன்றும் அவ்வாறே செய்ய அவள் தனக்கு எதிரே உட்கார்ந்ததைப் பார்த்ததும், ‘இந்தக் கரிசனத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்று மனத்துள் சினந்தான். தான் வழக்கம் போல் இல்லை என்பதை அவள் புரிந்துகொண்டது அவனுள் ஒரு குரூரமான மகிழ்ச்சியை உண்டாக்கிற்று.
அடுத்து, அவன் எதிர்பார்த்தது போன்றே, “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? உடம்பு சரியில்லையா?” என்று வினவியவாறு கையில் இருந்த காபியை வைத்துவிட்டு அவள் சட்டென்று பதற்றமடைந்து போய் அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்த போது, “முதலில் காபியைக் குடிப்போம்,” என்று உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு அவன் காபியை எடுத்துக்கொண்டான். அவள் ஒன்றும் சொல்லாமலும், அவன் சொன்னபடி காபியைப் பருகாமலும், அவனது குரலின் வேறுபாட்டை உணர்ந்த கலவரத்துடன் அவனைப் பார்த்தாள்.
“ஏன் ஒரு மாதிரி பேசுகிறீர்கள்? என்ன நடந்தது?” என்று கேட்ட அவள் அவனை நெடுமையாய்ப் பார்த்தாள். அவளது கலக்கம் அவனுக்கு மகிழ்வூட்டியது. இன்னும் சிறிதே நேரத்தில் அவள் சாகசக் கண்ணீர் வடிக்கப் போவதை எண்ணி அவன் தன்னுள் கொடுமையாகச் சிரித்தான். அவள் அழுது தான் பார்த்ததில்லை என்பதையும் உடனே நினைவு கூர்ந்த அவன், ‘இவள் அழும் போது எப்படி இருப்பாள்?’ எனும் கற்பனையில் கூட ஈடுபட்டான். தன் பெற்றோர் திருமணத்துக்கு வராததற்காக அவள் அழுவாள் என்று நினைத்திருந்த அவன் திருமண நாளன்றும் சரி, அதற்குப் பிறகுக் சரி, அவள் அது பற்றித் தான் வருந்தியதாய்க் கூடச் சொன்னதே இல்லை என்பதை நினைத்து, ‘ஒருவேளை நான் இல்லாத போது அழுகிறாளோ?’ என்று கூட எண்ணி, அது பற்றிய வருத்தம் அவளுக்கு இருந்தாலும் அதை அகற்ற வேண்டிய அவசியம் பற்றி அவளுக்கு உற்சாகம் விளையும் வகையில் அவன் தானாகவே அந்தப் பேச்சை எடுத்து அவளுக்கு ஆறுதல்` கூறியிருக்கிறான். அப்போதெல்லாம், ‘உங்கள் அன்பு இருக்கும் போது எனக்கு என்ன குறை? ஒரு பெண்ணுக்குத் தேவையான தெல்லாம் கணவனுடைய அன்பும் நம்பிக்கையும்தான்’ என்று அவள் ஏதோ அவனுக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி பதில் சொல்லியிருக்கிறாள்.
அதை நினைத்துப் பார்த்த போது, ‘இவள்தான் எவ்வளவு கெட்டிக்காரி! என்னுடைய நம்பிக்கையைப் பெரிதாக மதிப்பதாகச் சொல்லுகிற இவள் அந்த நம்பிக்கையை என் மீது கொண்டிருக்கிறாளா?’ என்று அவன் காழ்ப்புடன் மறுகினான்.
“முதலில் காபியைக் குடி. உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்,” என்று அவன் இறுகிய குரலில் சொன்னான்.
அவள் காபியை மடக் மடக்கென்று குடித்துவிட்டு அவன் வாயையே திகிலுடன் பார்த்தாள். அவனோ வழக்கத்துக்கு மாறாக நிதானத்துடன் ஒவ்வொரு வாயாகக் காபியைப் பருகிவிட்டுத் தம்ப்ளரை முக்காலியின் மீது வைத்தான்.
“நானும் நீயும் திருமணத்தைப் பதிவு செய்து கொனடதைப் பற்றி எல்லாரும் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள், தெரியுமா?” என்று கேட்டுவிட்டு அவன் அவள் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தான்.
அவள் பார்வை சற்றே விரிந்தது. கண்கள் விரிந்தனவே தவிர, அவற்றிலிருந்து அவனால் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. வெறும் வியப்பு மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. ‘யாரோ மூன்றாம் மனிதர் என்ன பேசிக்கொண்டால் நமக்கு என்ன வந்தது?’ எனும் பொருட்படுத்தாமை கூட அவள் பார்வையில் தெறித்ததாக அவன் எண்ணினான்.
“உன்னைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போய்விடுவேனோ என்று உனக்கு என் மேல் சந்தேகமாம். அதனால்தான் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டிருக்கிறாயாம்…”
அவள் ஒரு கணம் தன் கண்களைத் தாழ்த்திவிட்டுப் பின்னர் அவற்றை உயர்த்தியது பொருள் நிறைந்த செய்கையாக அவனுக்குப் பட்டது. மறு கணம் அவள் கலீரென்று சிரித்தாள். “ஊரார் என்ன நினைத்தால் என்ன? என்ன பேசினால் என்ன? நாம்தான் நம் அம்மா அப்பாக்களையே பொருட்படுத்த வில்லையே! வம்பு பேசுகிற நாலு பேரை நாம் பொருட்படுத்தக் கூடாது என்று நீங்களே அடிக்கடி சொல்லுவீர்களே? இன்றைக்கு என்ன வந்துவிட்டது உங்களுக்கு?”
அவளது கலீர்ச் சிரிப்பால் சற்றும் பாதிக்கப்படாமல் அவன் உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டிருந்தான். அவளது சிரிப்பிலும் சாகசத்திலும் தான் ஏமாந்துவிடக்கூடாது எனும் விழிப்புடன் அவன் தன் முகத்தை இறுக்கமாக ஆக்கிக்கொண்டான். கேள்வியைக் கேட்டுவிட்டு அவனது இருக்கை நோக்கி நகர்ந்த அவள் விளையாட்டாக அவன் கையைப் பற்றியபோதும் அவனது முகம் இறுகியே இருந்தது.
“சிரிக்காதே. இது சிரிக்கிற விஷயம் இல்லை. மற்றவர் விமர்சனங்கள் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லைதான். ஆனால், உன் கணவன் எனும் முறையில், அந்த நாலு பேர் பேசுவதில் உண்மை இருக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.” – இதை அவன் ஆங்கிலத்தில் பேசினான். அவனது பேச்சு ஆங்கிலத்தில் வெளிப்பட்டதுமே அவளுக்குப் புரிந்து போய்விட்டது – அதை அவன் பெரிதாக நினைத்தான் என்பது. இதனால் அவள் முகத்தில் கொஞ்சம் இருள் படிந்தது.
ஆயினும், அவள் முகத்தில் படிந்த நிழல் நொடிப்பொழுதில் அகன்று அதில் ஒரு புன்னகை தோன்றியது. “உங்கள் கேள்வியே எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விண்டு பேசினால் தேவலை …” என்று மெல்லிய குரலில் அவள் கூறிய போது, ‘உண்மையிலேயே என் மனத்தில் இருப்பது இவளுக்குப் புரியவில்லையா, இன்றேல், புரியாத மாதிரி நடிக்கிறாளா?’ எனும் ஐயம் தோன்ற, சில விநாடிகள் வரை அவன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.
“என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?”
“என் கேள்வி உனக்குப் புரியவில்லை என்பதை நான் நம்ப மாட்டேன். இருந்தாலும் சொல்லுகிறேன் – என் மீது உனக்குள்ள அவநம்பிக்கையால்தான் – அதாவது முறைப்படி திருமணம் செய்து கொள்ளாதவர்கள்தானே எனும் அலட்சியத்தால் சில ஆண்களைப் போல் உன்னைக் கழித்துவிடுவேனோ எனும் பயத்தால்தான் – நீ பதிவுத் திருமணத்துக்கு என்னை வற்புறுத்தினாயாம். அது உண்மைதானா – அதாவது என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா – என்பதை அறிய விரும்புகிறேன். இப்போதாவது புரிந்ததா?” என்று அவன் எகத்தாளமாய்க் கேட்டதும் அவள் ஒரு கணம் வாயடைத்துப் போனாள்.
“அப்படியானால் நீங்கள் கூட அது மாதிரி நினைக்கிறீர்களா?” என்று அழமாட்டாக்குறையாக அவள் கேட்டபோது அவள் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு இரையாகிவிடலாகாது எனும் விழிப்புடன் அவன் தன் முகத்தின் இறுக்கத்தைச் சற்றும் தளர்த்தாது சொன்னான்.
“இதோ பார். உண்டு அல்லது இல்லை எனும் ஒரே வார்த்தையில் எனக்குப் பதில் வேண்டும். நான் கேட்ட கேள்வியைக் கொஞ்சம் மாற்றி நீ என்னையே கேள்வி கேட்டால் என்ன அர்த்தம்?”
“சரி. ஒரே வார்த்தையில் பதில் சொல்லட்டுமா? இ…ல்…லை… போதுமா?” என்று, சொல்லின் ஒவ்வோர் எழுத்தாக அழுத்தி அழுத்திச் சொல்லிவிட்டு அவள் சிரித்த போதும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.
“இந்த மழுப்பல் எல்லாம் எனக்குப் பிடிக்காது. ‘அதற்காக இல்லை’ என்று நீ பட்டுக்கொள்ளாமல் பதில் சொன்னாலும், பின் வேறு எதற்காக என்பதை நீ விளக்கியே ஆக வேண்டும்…”
“நம் கல்யாணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, அவர்களால் நடத்திவைக்கப்படாத நிலையில், அநாகரிகமாய் ஓடிப் போய்ச் சேர்ந்து வாழ்வது போல் இருக்க வேண்டாமே என்றுதான் – ஒரு சீர்மை கருதி – நம் திருமணத்தைப் பதிவு செய்துவிட வேண்டுமென்று சொன்னேன்.”
“முன்பு ஒரு தடவை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளுவதற்கும் தானே தேர்ந்தெடுத்த ஒருவனுடன் அவர்கள் இணக்கம் இல்லாமலே ஓடிப்போய்ச் சேர்ந்து வாழ்வதற்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று ஒரு சர்ச்சையின் போது நீ சொன்னதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.”
ஒரே ஒரு விநாடி திகைத்துவிட்டு அவள் பதில் சொன்னாள்: “தர்க்கமெல்லாம் வாழ்க்கையாகி விடுமா? வெறும் தர்க்கத்துக்காக ஏதேதோ பேசுவதாக இருக்கும். அதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? பெண்கள் ஓடிப்போவதைத் தனிப்பட்ட முறையில் நான் வெறுக்கிறேன். ஓடிப்போன பெண்கள் சுகமாய் வாழ்வதெல்லாம் கதைகளில் மட்டும்தான்! உண்மையில், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை…” – அவளது குரல் சற்றே நடுங்கிற்று. முகம் சிவந்து போயிற்று.
“உனக்கு இவ்வளவு கோபம் வருவானேன்? உன் பதிலே உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. நீயும் நானும் கூட, கிட்டத்தட்ட அப்படித்தான் செய்திருக்கிறோம். பெற்றோருக்குச் சொல்லாமல் ஓடவில்லை. அசலூருக்கு ஓடவில்லை. ஆயினும் நாம் செய்துள்ளது ஒரு வகையில் அதற்குச் சமமானதுதான். ஓடிப்போகிற பெண்கள் சுகமாக வாழ்வதில்லை என்பது உன் வரையில் உண்மையாகிவிடக் கூடாது என்றுதான் நீ பதிவுத் திருமணத்துக்கு என்னைக் கட்டாயப் படுத்தினாய் என்கிறேன் நான்! இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் உன்னால்?”
“உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று அதற்கு அர்த்தமாகாது. உண்மையில் மரபான வழியில் நடக்கும் திருமணமானாலும் சரி, நம்முடையது போன்றதானாலும் சரி, அதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். நான் பதிவுத் திருமணம் பற்றிப் பேசாவிட்டாலும் கூட, நீங்களே அந்த யோசனையைச் சொல்லி யிருக்க வேண்டியதுதான் கண்ணியம்! நானும் பார்த்தேன், பார்த்தேன், அதைப் பற்றிய பிரக்ஞையே உங்களுக்கு இல்லை. எனவேதான், நானாகவே அந்தப் பேச்சை எடுத்தேன். திருமணமும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்தானே? அதன் எல்லாச் சடங்குகளையும் நாம் செயல்படுத்த வேண்டாமா? … நீங்கள் என்னை விட்டுப் போய்விடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். நானே கூட உங்களை விட்டு ஓடுவதற்கு முடியாதபடி – இப்படி யெல்லாம் பேசுவதற்கு என் நாவு கூசுகிறது – பதிவுத் திருமணம் உங்களையும் காப்பாற்றுமல்லவா?” என்று கேட்டுவிட்டு அவனை மடக்கிவிட்ட எக்களிப்பில் அவள் அகலமாய்ப் புன்னகை செய்தாள்.
“ஆக, உனக்கு என் மேல் முழு நம்பிக்கை இல்லை என்பதைக் கெட்டிக்கரத்தனமான வார்த்தைகளால் சொல்லி முடித்துவிட்டாய்! மனங்கள் ஒன்றுபட்ட நிலையில் ஒருவர் மீது ஒருவர்க்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால், இந்தச் சடங்குகள் எல்லாம் அவசியந்தானா?”
“இந்தச் சடங்குகளையும் கூடச் சிலர் மீறுவது உங்களுக்குத் தெரியாதா?”
“அதையேதான் நானும் சொல்லுகிறேன்! சடங்குகள் அனைத்தும் நடத்தப்படும் திருமணத்திலும் கூட, ஆணால் பெண்ணைக் கைவிட முடியும்! வெறும் சடங்குகள் மட்டுமே யாருக்கும் பாதுகாப்பு அளிப்பதில்லை. நம்பிக்கை ஒன்றுதான் திருமனத்துக்குத் தேவை.”
“நான் அப்படி நினைக்கைல்லை. நாலு பேர் முன்னிலையில் மட்டுமின்றிச் சட்டரீதியாகவும் நடக்கும் திருமணங்கள் கூடப் பெண்களைப் பாதுகாப்பதில்லை. அப்படி இருக்கும் போது, பெற்றோர் இல்லாமலே ஒருவரை மணக்கும் பெண் அவசியமான சம்பிரதாயம் கூட இல்லாமல் ஓடிப்போவது மாதிரி எப்படி ஒருவருக்கு வாழ்க்கைப்பட முடியும்?”
“பார்த்தாயா, பார்த்தாயா! உன் வாயாலேயே திரும்பவும் உன் நம்பிக்கைக்குறைவை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாய். என் மீது நம்பிக்கையற்ற ஒரு பெண்ணை மணந்தது தவறு என்று இப்போது நினைக்கிறேன். நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாத நம் உறவு தொடரவேண்டாமென்று நான் கருதுகிறேன்.”
அவள் கன்கள் உடனே கலங்கின: “நீங்களா இப்படி யெல்லாம் பேசுகிறீர்கள்? நீங்களா!”
அவன் பேசாதிருந்தான். அவளது நம்பிக்கைக்குறைவை அவள் வாயிலிருந்தே வரவழைத்துவிட்ட நிறைவில் அவன் திளைத்தாலும், அதன் கனம் அவனை அழுத்தியது. அவளை விட்டுவிட்டுப் போகும் எண்ணம் அவனுக்கு இல்லைதான். அவளது போக்குத் தவறானது என்று தான் கருதியதைக் கொடிய சொற்களின் வாயிலாகத் தான் சொல்ல நேர்ந்தமைக்கு அவன் வருந்தவே செய்தான். இருந்தாலும் அப்படிப் பேசித்தான் அவளது தவற்றை அவளுக்கு உணர்த்தவேண்டும் என்றும் அவன் நினைத்தான்.
அவள் கண் கலங்கி அழுதது அவனை என்னவோ செய்தது. ஆயினும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவன் உட்கார்ந்திருந்தான்.
“நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா உங்களை? இப்போது நடந்தது மாதிரி நமக்குள் வேறொரு மாதிரியான தகராறு வருகிறதென்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது இதே சொற்களை நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? ‘நம் உறவு தொடரவேண்டாம்’ என்று இப்போது நீங்கள் கூறிய சொற்களை அப்போது சொல்லிவிட்டு என்னை விட்டுப் போய்விட மாட்டீர்கள் என்பதுதான் என்ன நிச்சயம்? அவநம்பிக்கை என்று சொல்லுவதை விட, என் மேலேயே தப்பு இருந்தாலும் கூட, நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்துவிடக் கூடாது எனும் ஆவலால் ஒரு பெண்ணுக்குரிய விழிப்புடன் நான் பதிவுத் திருமணத்துக்கு வற்புறுத்தினேனே தவிர, உங்கள் மேல் சந்தேகப்பட்டு அன்று. உங்களை என்னோடு இருத்தி வைத்துக்கொள்ளுவதற்கு – என்றும், எந்த நிலையிலும், உங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் ஆசையில் – நான் செய்துகொண்ட முன்னேற்பாடு என்று நீங்கள் அதை ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?”
அவள் கேட்ட கேள்விகள் – குறிப்பாக, ‘ நம் உறவு தொடர வேண்டாம் என்று இப்போது சொன்ன சொற்களை அப்போது சொல்லிவிட்டு என்னைவிட்டுப் போய்விட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்’ எனும் கேள்வி அவன் மனத்தில் சுருக்கென்று பாயவே, அவன், ‘என்ன பதில் சொல்லி இவளைத் தேற்றுவது’ எனும் குழப்பத்தில் ஆழ்ந்து போய், அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து உயரே பார்த்த போது, சுவரில் தொங்கிய நாள்காட்டியில் அவன் கண்கள் பதிந்தன. அதன் விளைவாக அன்று ஏப்ரல் முதல் தேதி என்பது அவனது மூளையில் உறைக்கவே, அவன் உடனே முகத்தை மாற்றிகொண்டு, ஏமாற்றுச் சாகசத்துடன் பெரிதாய்ச் சிரிக்கத் தொடங்கினான். அவள் விழிகளைத் துடைத்துக்கொண்டு திகைத்து விழித்தாள்.
“நீ சரியான முட்டாள்தான்! இன்றைக்கு என்ன தேதி? சும்மா ஒரு விளையாட்டுக்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். யூ, ஏப்ரல் ஃஃபூல்!” என்று பசப்பியவாறு அவள் கண்களைத் துடைத்தான்.
அவனது சாகசத்தையும், ஏமாற்றுவித்தையையும் அறியாத அந்த “முட்டாள்” அப்பாவித்தனமாகப் புன்னகை செய்துவிட்டு, “சீ! நீங்கள் ரொம்ப மோசம். என்னதான் ஏப்ரல் முதல் தேதி என்றாலும், இப்படியா விபரீதமாக விளையாடுவது?” என்று சினந்தவளாய்த் தானும் அவனது சிரிப்பில் கலந்துகொண்டாள் …
…….
- பெண்ணை மதிப்பழித்தலும் அதுசார்ந்த அரசியலும்
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்.
- பொருத்தம்
- லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்
- அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு
- இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?
- ‘‘ஔவை’’ யார்?
- கவிதையும் ரசனையும் – 17
- முதுமை
- தேனூரும் ஆமூரும்
- நேரு எனும் மகா மேரு !
- நீ ஒரு சரியான முட்டாள் !
- சொல்வனம் 246 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- யாதுமாகியவள்……
- ஊமையின்மனம்
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்
- மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !
- சிற்றிதழ் சிறப்பிதழ்