அதுதான் வழி!  

This entry is part 10 of 22 in the series 18 ஜூலை 2021

 

                      ஜோதிர்லதா கிரிஜா

(குமுதம் சிநேகிதி-இல், 2001 இல் வந்தது. இதழின் தேதி கிடைக்கவில்லை. ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’-இன் ‘அது என்ன நியாயம்?’ தொகுப்பில் உள்ளது.)

      ராஜாத்தி அவசரம் அவசரமாய்ச் சமையற்கட்டுக்குள் நுழைந்த போது கெடியாரம் ஒரு முறை “டங்” என்றது. மணி ஆறரை. அவள் என்றுமே இவ்வளவு தாமதமாக எழுந்ததில்லையாதலால் அவளுக்கு உறுத்தலாக இருந்தது. மாமியார் பங்கஜம் காப்பி கலந்து கொண்டிருந்தது அவளது உறுத்தலை அதிகப்படுத்திற்று.

       “ராத்திரி முழுக்க ஒரே கொசுக்கடி. அதான் எழுந்திருக்க லேட்டாயிடிச்சு,” என்ற அவளது குரலின் குற்ற உணர்ச்சியைச் சற்றும் கவனியாதவள் போல், “கொசு உன்னய மட்டும் கடிச்சிச்சாக்கும்!” என்று நக்கலாய் வினவியவாறு, “இந்தா. காப்பி எடுத்துக்க,” என்று கூறிவிட்டு, மகனுக்குத் தானே காப்பியை எடுத்துக்கொண்டு கூடத்துக்குப் போன பங்கஜம் காய்கறிக்காரரின் குரலுக்குப் பதில் சொல்ல வாசலுக்குப் போனாள்.

       காப்பியை எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வந்து பாபுவுக்கு முன்னால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே, ராஜாத்தி, “உங்கம்மா சொன்னதைக் கேட்டிங்கல்ல?” என்றவாறு காப்பியை உறிஞ்சினாள்.

       அவர்களது உரையாடலைக் கவனித்ததாய்க் காட்டிக்கொள்ள விரும்பாத பாபு, “என்ன சொன்னாங்க அம்மா?” என்றான் விழிகளை மலர்த்தி.

       ‘உங்களை நான் நம்பவில்லை’ என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்த ராஜாத்தி, “ராத்திரி முழுக்க ஒரே கொசுக்கடி, அதான் எழுந்திருக்க லேட்டாயிடிச்சுன்னேன். அதுக்கு, கொசு உன்னய மட்டுந்தான் கடிச்சிச்சாக்கும்ங்கறாங்க. கொழுப்பைப் பாத்தீங்களா?” என்றாள்.                        

“ஏய்! கொழுப்பு, கிழுப்புங்காதே. அம்மா காதுல விழுந்து வைக்கப் போகுது. அப்பால இன்னிக்கி ரணகளம் ஆயிறும் வீடு. நீ மாத்தி அவங்க, அவங்க மாத்தி நீன்னு ரெண்டு பேரும் வக்கீலுங்க மாதிரி வழக்காட ஆரம்பிச்சீங்க, நான் செத்தேன்,” என்ற பாபு காப்பியைக் குடிக்கலானான்.

      “கொழுப்பு இல்லாம பின்ன என்னவாம்? நாம படுக்குற ரூம் ஒரே அடைச்சலாயிருக்கு. தவிர வெளியே பக்கத்து வீட்டுச் சாக்கடை வேற. உங்கம்மாவும் அப்பாவும் நல்ல வசதியான ரூம்ல படுக்கறாங்க. ஏதுடா, ரெண்டும் ஆஃபீசுக்குப் போய் உழைச்சிட்டு வருதுங்களே, அதுங்களுக்குக் காத்தோட்டமான ரூமைக் குடுப்போம்கிறதைக் காணல்லே. அறுபது வயசு ஆகுது ரெண்டு பேத்துக்கும். வெளியே படுத்தா என்ன? ரூம் கேக்குது, ரூம். கொஞ்சங்கூட நல்லால்லே.”

       பாபுவுக்கு முகம் சிவந்தது: “ஏய்! ஓவராப் பேசாதே. … அம்மா வராங்க. வாயை மூடிக்க.”

       “ஆ…மா. உங்கம்மா வாயை அடக்க மாட்டீங்க. என்னயப் பாத்து வாயை மூடும்பீங்க! நல்ல நியாயம்!”

       அவன் கைநீட்டி அவள் தொடையில் தட்டி, ’ஏய்! சும்மாருன்றேனில்ல?” என்று பல்லைக் கடித்தபடி சொன்னது பங்கஜத்தின் செவிகளைச் சென்றடைந்துவிட, அவள், “என்னடா ஓதரா ஒம் பொஞ்சாதி? எதுவானாலும் தகிரியமாப் பேசச்சொல்லு!” என்றாள்.

       “ஒண்ணுமில்லேம்மா.”

       “ஒண்ணுமில்லாததுக்கா அவ தொடையில தட்டி சும்மாருன்னு எச்சரிக்கை செஞ்சே?”

       “அது வேற விசயம்மா. உங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல.”

       காப்பிக் கோப்பைகளை எடுத்துக்கொண்டு, ராஜாத்தி,  “சரியான தொடைநடுங்கி! …” என்று வாய்க்குள் முனகிய பின், “கொசு உன்னய மட்டுந்தான் கடிச்சிச்சான்னு நீங்க கேட்டதைப் பத்திச் சொன்னேன். எங்க ரூம் இருக்குற லச்சணந்தெரியுமில்ல? நாலு, பீரோ, ஒரு மேஜை, மூணு நாற்காலிங்க! பீத்தப் பாயிங்க வேற மூலையில சுருட்டி வெச்சிருக்குது. சன்னலைத் தொறந்தா, பக்கத்து வீட்டுச் சாக்கடை நாத்தம். உங்க ரூம் மாதிரியா இருக்கு எங்களது?” என்றாள். அவளது கூரிய பார்வை மாமியாரின் மீது கத்தி மாதிரிப் பாய்ந்தது.

       “முப்பது வருசமா அதே ரூம்புல படுக்கறேன். எடம் மாறினாத் தூக்கமே வர மாட்டேங்குது. இல்லாட்டி என்ன?”

                      “அது  சரி, அதுக்காக, கொசு உன்னய மட்டுந்தான் கடிச்சிச்சான்னு கேக்குறதா? உங்க ரூமை எங்களுக்குக் குடுங்க. அப்பால பாருங்க. நான் நாலரை அஞ்சுக்கெலலாம் எழுந்திருக்கிறேனா இல்லையான்றதை.”

       “என்னடா, இடிச்ச புளி மாதிரி உக்காந்துக்கிட்டிருக்குறே? நறுக்னு நாலு வார்த்தை கேளேண்டா. பழகின எடத்தை விட்டு மாறினா தூக்கம் வருமா? ராத்திரி நான் சரியாத் தூங்காம இருந்து, பகலெல்லாம் தூங்கி வழிஞ்சா, அப்பால உங்க கொழந்தையை யாரு பாத்துக்குறது?”                                                   ராஜாத்திக்கு வாய் அடைத்துப் போனது. இரண்டு வயசுத் துருதுருக் குழந்தை. ஓடிக்கொண்டே இருப்பவன். சரியான வால். அவனை வைத்துக்கொண்டு சோறு கூடத் தின்ன முடியாதுதான்.                                                            “என்ன, பேச்சு மூச்சைக் காணோம்?”                                            “அதெல்லாம் யாரு இல்லேன்னாங்க? ஆனா அதுக்காக ராவெல்லாம் நான் தூங்காம இருந்தா நான் ஆஃபீஸ்ல ஒழுங்கா வேலை பண்ண முடியுமா? அதையும் யோசிச்சுப் பாருங்க.”

       “ஏன்? எம்மவனுந்தான் ஆபீசுக்குப் போயி வேலை பண்றான். உனக்கென்ன இம்புட்டு அலட்டல்?”

        “உங்க மகன் ஆஃபீஸ்ல மட்டுந்தான் வேலை பண்றாரு. வீட்டுல ஒரு துரும்பையாச்சும் எடுத்துப் போடுறதுண்டா? நான் ரெண்டு எடத்துலயும் உழைக்கிறேனில்ல?”

        “பாத்தியாடா? உன்னையும் சமையல் பண்ணச் சொல்றா உம் பொஞ்சாதி!”

        “இத பாருங்க, அத்தை! ஏடாகூடமாப் பேசாதீங்க! அவரும் வீட்டு வேலை செய்யணும்னா நான் சொன்னேன்? அவரை விட எனக்கு வேலை அதிகம்னு சொன்னா, எங்க ரெண்டு பேத்துகும் நடுவிலெ வத்தி வெக்கிறீங்களே?”

        “ஆமாண்டி. வத்தி வெச்சுப் புருசன் பொஞ்சாதியைப் பிரிக்கிறதுதான் எனக்கு வேலை! என்ன பேச்சுப் பேசறா, பாருடா.”

        “அய்யோ, அய்யோ! ஒண்ணுமில்லாததை யெல்லாம் ஏந்தான் இப்படி ரெண்டு பேரும் பெரிசு படுத்தறீங்களோ, தெரியல்ல. உப்புப் பெறாத விசயம்.”

        “எது உப்புப் பெறாத விசயம்?”

        அப்போது அடுப்பில் ரசம் பொங்கி வழிகிற வாசனை வர, “ரசம் பொங்கிடிச்சு. நாந்தான் காய் வாங்கப் போனேனில்ல? அடுப்பைக் கொஞ்சம் கவனிச்சா என்ன? வாய் மட்டும் கிழியுது!” என்வாறு பங்கஜம் சமையற்கட்டுக்கு விரைந்தாள்.

        “முதல்ல ரசத்துக்கு உப்புப் போட்டீங்களான்னு பாருங்க,” என்று பாபு முனகியது காதில் விழுந்து விட, “ஓகோ! உப்புப் பெறாத விசயம்னதுக்காகக் கிண்டலடிக்கிறியா? பேசுவேடா. ஏன் பேசமாட்டே?” என்றவாறு பங்கஜம் அடுப்பைத்  தணித்து ரசப் பாத்திரத்தை இறக்கி “ணங்”கென்று மேடையில் வைத்தாள்.

        “பரவால்ல. முதமுத அம்மாவைக் கிண்டலா ஒரு வார்த்தை – அதுலயும் எங்க சண்டையைப் பத்தி – பேசிட்டீங்க. இன்னிக்கு மழை  வரும். நான் குடையை எடுத்துக்கிட்டே ஆகணும் …”

        நாக்கின் அதிகப் பிரசங்கித்தனத்தால் உதிர்ந்து விட்ட சொல்லுக்காகத் தனக்குள் வருந்தி நாக்கைக் கடித்துக்கொண்டிருந்த பாபு, “சீ! இதென்ன வீடோ! எப்பப் பாரு ரகளை ….” என்றவாறு குளிக்கப் புறப்பட்டான்.  

       … “நகருங்க, அத்தை. மீதிச் சமையலை நான் செய்யிறேன் …,” என்றபடி சமையற்கட்டுக்குள் ராஜாத்தி நுழைந்தாள்.

       “குளிச்சாச்சா?”

       “குளிக்காம என்னைக்காச்சும் சமையல் செய்ய வந்திருக்கேனா?”

       “குளிச்சாச்சான்னு கேட்டா, குளிச்சாச்சுன்னு மட்டும் பதில் சொல்லு. எதிர்க் கேள்வி கேக்காதே. அதனாலதான் சண்டை வருது.”

       “குளிச்சாச்சான்னு கேக்க வேண்டிய அவசியமே இல்லியே! தவிர நான் புடவை மாத்திக்கிட்டு வந்திருக்கேனில்ல? குளிச்சவளுக்கும் குளிக்காதவளுக்கும் வித்தியாசம் தெரியாதவங்களா நீங்க?”

       “இன்னைக்குச் சண்டை போட்டு ரணகளப் படுத்தறதுன்னு ஏதாச்சும் சங்கல்பமா?”

        ‘எனக்கா, உங்களுக்கா?’ என்று எதிர்த்துக் கேட்க நினைத்து, அந்நினைப்பைப் பெரும் பாடு பட்ட பின்னர் விழுங்கிக்கொண்ட ராஜாத்தி, “சரி, அத்தே. தப்பெல்லாம் என்னோடதாவே இருக்கட்டும். இன்னைக்கு என்ன சமையல் பண்ணணும்?” என்றாள். அவள் அடக்கிக்கொண்ட சினம் குரலில் சன்னமான நடுக்கமாய் வெளிப்பட்டது.

       மருமகள் தணிந்து போனதில் மகிழ்ச்சியுற்ற பங்கஜம், “பாபுவுக்குத்தான் அவியல்னா உசிராச்சே! அதனால அவியல் பண்ணிடு. நான் ரசமும் சாதமும் செய்தாச்சு. அவியல் மட்டும் பண்ணினாப் போதும். சாம்பாரெல்லாம் வேணாம். அதையே கொஞ்சம் காரசாரமாப் பண்ணிடு, என்ன?” என்றாள். சொல்லிக்கொண்டே தான் வாங்கிய காய்களை எடுத்துப் பாயில் பரப்பலானாள்.

       “அவியல்னா எனக்கும்தான் உசிரு. ஆனா இன்னிக்கு வேணாமே?”

       “ஏன/ அவியல் பண்ணக் கூடாத கெட்ட நாள்னு பஞ்சாங்கத்துல போட்டிருக்குதா?”

       “நான் எழுந்ததே லேட்டு. மாமாவுக்கும் அவியல்னா உசிரு. எல்லாக் காயையும் அரிஞ்சாத்தான் ராத்திரிக்குக் கொஞ்சமாச்சும் மிஞ்சும். அதனால நாளைக்குப் பாத்துக்கலாம், அத்தே.”

       “நான் ஒண்ணு சொன்னாக் கேட்டுடக் கூடாதே!”

       “ஏன் அத்தே ஏடாகூடமாவே பேசறீங்க? எனக்கு இன்னைக்கு ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன். பெரிய அதிகாரி கான்பூர்லேர்ந்து வர்றார். ஒம்பதரைக்கு முன்னாடி எல்லாரும் ஆஜராயிடணும்னு ஹெட் கிளார்க் படிச்சுப் படிச்சுச் சொல்லி யிருக்காரு. இன்னைக்குப் பாத்து நான் லேட்டாப் போனா நல்லாவா இருக்கும்?”

       “அப்ப அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சிருக்கணும்.”

       “நீங்க அவியலுக்குக் காய் வாங்குவீங்கன்னு எனக்கு ஜோசியமா தெரியும்?”

       “இத பாரு. கூடக் கூடப் பேசிக்கிட்டிருக்காதே. சட்டுப்புட்டுனு காயை வெட்ட உக்காரு.”

       “இன்னிக்கு முடியாது, அத்தே. சாரி. உருளைக்கிழங்குக் கறி பண்ணிடறேன்.”

       “நோகாம நோம்பு கும்பிடுவியே! என்னமோ செய்யி. உருளைக்கிழங்கு எனக்கு ஆவாதுன்னு உனக்குத் தெரியுமில்லே?”

        “ரெண்டு கேரட் இருக்கில்ல? அதைத் துருவிக்குங்க.”

        “ஓ! நான் திங்கிற கேரட்டை நாந்தான் துருவிக்கணுமாக்கும்! நீ துருவ மாட்டியாக்கும்?”

       “அப்படி யாரும் சொல்லல்லே. கறி பண்ணிட்டு நேரம் இருந்தா நானே துருவுவேன். இல்லாட்டி நீங்க துருவிக்குங்க.”

       “உன்னோட வாக்குவதம் பண்ணிப் பண்ணியே என் திராணியெல்லாம் போயிடுது.”

       “நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க.”

       காலை நடைக்காக வெளியே போய்விட்டு அப்போதுதான் திரும்பிய நமச்சிவாயம், “அடாடாடா! என்ன சத்தம்? ஆரம்பிச்சுட்டீங்களா ரெண்டு பேரும்? … சரி,சரி…. காப்பி குடு, பங்கஜம். … ஏம்மா, ராஜாத்தி!  நீ படிச்ச பொண்ணில்ல? நீதான் கொஞ்சம் விட்டுக்குடுத்துத் தணிஞ்சு போகக்கூடாதா?” என்றவாறு நாற்காலியில் அமர்ந்து முகத்து வேர்வையைத் துடைத்துக்கொண்டார்.

        ”தணிஞ்சு போகுற சுபாவம் இருக்கிறதுனால்தான் நான் தனிக்குடித்தனம் போகாம இருக்கேன், மாமா! எது பேசினாலும், எது சொன்னாலும் தப்புன்னா நான் என்னதான் செய்யிறது, மாமா?”

       ராஜாத்தியின் சொற்கள் பங்கஜத்தின் முகதுக்குச் சிவப்பு வண்ணம் பூசின: “என்னது! என்ன சொன்னே! தனிக்குடித்தனமா? என் மகன் என்ன உன் முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு உடனே கெளம்பிறுவான்கிற நெனப்பா உனக்கு? அவன் பெத்தவங்க மேல மரியாதை உள்ளவன். தெரியுமா? மத்தவங்க மாதிரி இல்லே!”

      தலையைத் துவட்டியவாறு அங்கு வந்த பாபு, ”அட, கடவுளே! உங்க யுத்தம் இன்னுமா முடியல்லே?” என்றான் ஆயாசமாக.                                          நமச்சிவாயத்துக்குக் காப்பியை ஆற்றியவாறே, ”உம் பொஞ்சாதி ரொம்பப் பொறுமையா யிருக்குறதுனாலதான் தனிக்குடித்தனம் போகாம இங்கிட்டே இருக்குறாளாண்டா! கேட்டுக்க. இல்ல, தெரியாமதான் கேக்குறேன், அவ கூப்பிட்டா நீ கெளம்பிறுவியா?” என்ற பங்கஜம், “ஆனாலும் இம்புட்டு வாய் ஆகாதுப்பா!” என்றாள், சன்னமாக.

       “அவ ஏதோ பேச்சுக்குச் சொல்றாம்மா. தனிக்குடித்தனம்குற வார்த்தையையே அவ இது வரையில எங்கிட்ட சொன்னதில்ல. சொல்லவும் மாட்டா. அப்பால, கொழந்தையை யாரு பாத்துப்பாங்க?”

       “நல்லாச் சொன்னேடா!”

        நச்சென்று பதிலிறுக்கத் தயாரான ராஜாத்தியைப் பார்த்து விழிகளை மலர்த்தி ஒன்றும் சொல்ல வேண்டாமென்று ஜாடை செய்த பாபு வாசற்பக்கம் நகர்ந்தான்…

      … சுமார் ஒரு மாதம் கழித்து ஒரு நாள், “அம்மா! அம்மா! ஒரு அதிசயமான செய்திம்மா!” என்று கூடியபடி வீட்டுக்குள் நுழைந்த பாபு சிரிப்பு வழிந்த கண்களால் தன் தாயை ஏறிட்டான்.

“நேத்து ஒரு தொலைக்காட்சிப் பேட்டி உங்களைப் பத்தி ஐரோப்பாவில இருக்குற நாடுகள்லேயெல்லாம் ஒளிபரப்பாச்சுன்னு இன்னைக்கு என்னோட நண்பன் ஒருத்தன் பாரீஸ்லேருந்து ஃபோன் பண்ணிச் சொன்னான்மா!”

       “பாரீஸ்ஸா?”

       “ஆமாம்மா. நம்ம மெட்ராஸ் பாரீஸ்கார்னர் இல்லே. ஃப்ரான்ஸ் நாட்டுல இருக்குற பாரீஸ்.”

       “சரி, சொல்லு. புரியும்படியாச் சொல்லுடா. என்னயப் பத்தின்னு சொல்றே. என்னய யாருமே வந்து பாக்கலியே?”

       “உங்களைப் பத்தி உங்க மருமக விலாவாரியாப் பேட்டி குடுத்துப் பேசி யிருக்குறாம்மா!.”

       “அடிப் பாவி! இங்க தூத்திக்கிட்டிருக்குறது பத்தாதுன்னு அங்கிட்டு வேற தூத்தினாளா?”

       “ஏம்மா அலர்றீங்க? அப்படி யெல்லாம் எதுவும் உங்களைப் பத்திப் பேசல்லேம்மா ராஜாத்தி!.”

       “பின்ன என்னதான் சொல்லிச்சாம்? அதுசரி, எப்ப பேட்டி எடுத்தாங்களாம்? அவ சொல்லவே இல்லியே?”                                                “எனக்கும் தெரியாதும்மா. ரகசியமா வெச்சிருக்குறா. அந்த நண்பன் சொல்லல்லேன்னா, இப்ப கூட தெரிஞ்சிருக்காதும்மா.”

       “நேத்து டி.வி.யில வந்திச்சுன்னா, நாம கூட அதப் பாத்திருக்கலாம்ல?”

       “அது இந்த நாட்டுல தெரியாதும்மா. ஐரோப்பிய நாடுகள்ல மட்டுந்தான் தெரியும்.

       “சரி, சொல்லுடா. என்ன சொல்லிச்சாம்?”

       “உங்களப் பத்தி ரொம்ப ஒசத்தியாத்தான் சொல்லியிருக்குதாம். அந்த நண்பன் வீடியோ கேசட் எடுத்து வச்சிருக்குறான். நேத்தே அனுப்பிட்டானாம். இன்னைக்கு ஃபோன்ல சொன்னான். ஸ்பீட் போஸ்ட்ல வருதாம். அதனால சீக்கிரமே நம்ம கைக்கு வந்துடும். வந்ததும் போட்டுப் பாக்கலாம். ஆனா, அது வரையில ராஜாத்தி கிட்ட எதுவும் தெரிஞ்சதாக் காட்டிக்காதீங்க. என்ன?”

       “சரிப்பா.”

       … பதினைந்து நாள்கள் கழித்து அந்த ஒலிப்பேழையைத் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுப் பார்த்த போது பங்கஜத்தின் முகத்தில் விரவிய உணர்ச்சியை விவரிக்கச் சொற்கள் இல்லை.

       “உங்க மாமியார் எப்படிப்பட்டவங்க? நல்லவங்களா, குத்தம் சொல்ற ரகமா?”

       “சேச்சே. எங்க மாமியார் தங்கம்னா தங்கம். தன்னோட சொந்த மகள் மாதிரிதான் என்னய நடத்தறாங்க. மகள் தப்புச் செய்தா தாய் கண்டிக்கிறதில்லியா? அது மாதிரிதான் நானும் அதை எடுத்துக்குறேன்.”

       “அப்படின்னா உங்களுக்குள்ள சண்டையே வராதா?”

       “அதெப்படிங்க வராம இருக்கும்? வரத்தான் வரும். ஆனா, எல்லாமே சின்னச் சின்னச் சண்டைங்க. பெரிசா ஒண்ணுமில்ல. எனக்குக் கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி. படபடன்னு  எதுனாச்சும் யோசிக்காம பேசிறுவேன். ஆனா எங்க மாமியார் பெரியவங்க இல்லியா? அதனாலயோ என்னமோ பொறுத்துப் போயிறுவாங்க. அவங்க பெத்த பொண்ணு தப்பாப் பேசினா பொறுத்துக்க மாட்டாங்களா? அது மாதிரின்னு வச்சுக்குங்களேன்.”

       “அப்படின்னா, நீங்க என்ன பேசினாலும் அவங்க பதிலே பேச மாட்டாங்களா?’

 “அப்படின்னு இல்லேங்க. பேசுவாங்க. ஆனா அமைதியாப் பேசுவாங்க. கடுகடுன்னெல்லாம் பேச மாட்டாங்க. அப்ப எனக்கே வெக்கமாய்டும்.”

 “வீட்டு வேலையில எல்லாம் உதவியா யிருப்பாங்களா உங்க மாமியார்?”         “நான் காலையில மெதுவாத்தான் எந்திரிப்பேன். அதுக்குள்ளாற அவங்க பாதிச் சமையலை முடிச்சிறுவாங்க. மீதியத்தான் நான் செய்வேன். நான் மசக்கயாய் இருந்தப்ப எனக்கு வாய்க்கு ருசியாப் பல அயிட்டங்கள் செய்து போட்டாங்க. அவங்க செய்யிற பலகாரங்களை இன்னிக்கெல்லாம் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்.”

  “இன்னிக்கெல்லாம் சாப்பிட்டுக்கிட்டே இருந்தா வயித்து வலி வருமே!”

 (சிரிப்பு) “அப்படி வயித்து வலி வந்தா அவங்களே அதுக்கு இஞ்சி லேகியம் செஞ்சு வச்சிருப்பாங்க. அவங்க செஞ்சதைச் சாப்பிட்டா வயிறு வலிக்கும்னு நான் சொல்லல்லே. நான் செஞ்சு சாப்பிட்டாதான் வயிறு வலிக்கும். அப்ப இஞ்சி லேகியம் ரெடியா வச்சிருப்பாங்கன்னு சொல்றேன்.”

 “பரவால்லே. மாமியாருக்கு இந்த அளவுக்குப் பரிஞ்சு பேசறீங்களே!”

 “நல்லவங்களாயிருந்தா பரிஞ்சு பேசறதுக்கு வலிக்குமாங்க?”

 “உங்களுக்கு முன் கோபம்னு சொன்னீங்க. நீங்க எதாச்சும் தப்புப் பண்ணிட்டு அவங்க கிட்ட மன்னிப்புக் கேட்டதுண்டா?”

       “கேக்கணும்னு நெனப்பேன்தான். ஆனா சுய கௌரவம் அதுக்கு இடம் குடுக்காது. ஆனா அவங்களே நான் வருத்தப் பட்றதைப் புரிஞ்சுக்கிட்டு, என்னோட மௌனத்தைப் பொருள்படுத்தாம தானே முந்திகிட்டு சரிக்கட்டிடுவாங்க.”

       இவை தவிர, மேலும் சில சாதாரண வினாக்களும் கேட்கப்பட்டன. எப்போது திருமணம் ஆயிற்று, எத்தனை குழந்தைகள், வேலை செய்கிறாளா போன்றவை. அவற்றில் பங்கஜம் அவ்வளவாக ஈடுபாடு கொள்ளவில்லை. தன் மருமகள் தன்னைப் பற்றி உயர்வாகச் சொன்ன விஷயங்கள் ஐரோப்பாக் கண்டம் முழுவதும் ஒளிபரப்பாயின என்கிற பரவச பிரமிப்பில் அவள் தன்னையே மறந்து போய் முகமெல்லாம் சிரிப்பு வழிய உட்கார்ந்து போனாள்.

       “அம்மா! பாத்தீங்களா? உங்களை விட்டுக்குடுக்காம எப்படிப் பேசியிருக்குறா ராஜாத்தி!” என்ற மகனை ஆர்வத்துடன் பார்த்த பங்கஜம் மவுனமாக இருந்தாள்.

       ராஜாத்தியை வெளியே அனுப்பிவிட்டுத் தான் பாபு அந்த ஒளிப்பேழையைத் தொலைக்காட்சிப் பெட்டியில் இயக்கினான்.

       “ஏண்டா,  ராஜாத்தி இல்லாத நேரமாப் பாத்து அதை டி.வியில போட்டே?”

       “அதுக்கு வெக்கமாயிருக்குமில்ல? கேசட் கிடைச்ச விஷயத்தை நானும் அவ கிட்ட சொல்லல்லே. நாளைக்கு, இல்லாட்டி இன்னிக்கு ராத்திரி அவளும் பாக்கட்டும்.”

      ….அப்படி ஏதும் பேட்டி எடுக்கப்படவில்லை என்பதும், ஒளிப்பேழை ஒரு வீடியோ கடையில் தயாரிக்கப்பட்டது என்பதும் அவனும் ராஜாத்தியும் மட்டுமே அறிந்த ரகசியங்கள். மறு நாளிலிருந்து சமையற்கட்டிலிருந்து சத்தங்கள் கிளம்பாவென்கிற எதிர்பார்த்தலுடன் பாபு தனக்குள் சிரித்துக்கொண்டான்                                                          

                                  ……

Series Navigationதி பேர்ட் கேஜ்(அனுபவக் கட்டுரை) – கெட்டகனவு தொழிற்சாலை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *