அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

This entry is part 13 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

 

ஜோதிர்லதா கிரிஜா

     புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி அய்யங்கார் மறைந்தது ஆகஸ்டு 1951இல். 1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார்-பொன்னம்மாளின் மகனாய்ப்  பிறந்தவர். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1910 இலிருந்து இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். 1930-இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு அலிப்பூர்ச் சிறையில் 6 மாதச் சிறைத்தண்டனைக்கு உள்ளானார்.

கேதரின் மேயோ எனும் ஆங்கிலப் பெண்மணி இந்தியர்களை மிகக் கேவலமாய்ச் சித்திரித்து எழுதிய நூலுக்கு ”மேயோவுக்குச் சவுக்கடி” எனும் மறுப்பு நூலை எழுதி ஆங்கிலேயரின் சினத்துக்கு ஆட்பட்டார். சுதந்திரன், வீரகேசரி, பிரபஞ்ச மித்திரன், தமிழ் நாடு, சுயராஜ்யா, மணிக்கொடி என்று பல பத்திரிகைகளிலும் பணியாற்றினார். மணிக்கொடியில் பேராசிரியர் கல்கியின் முதல் நாவல் “விமலா”வை வெளியிட்டார். புதுமைப்பித்தனுக்கு மணிக்கொடியில் ஆதரவு தந்தார்.

இந்தியர்களின் முன்னேற்றத்துக்குக் காரணம் அவர்களின் மூடப்பழக்க வழக்கங்களே எனும் எண்ணத்தால் அவர் அவற்றைச் சாடி, தாம் பணிபுரிந்த பத்திரிகைகளில் எழுதலானார். தீண்டாமை ஒழிப்பு, பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் முதலியவை பற்றி நிறைய நாவல்களை எழுதினார். இவரது முற்போக்கு எழுத்துகளால் கவரப்பட்ட அறிஞர் அண்ணா தமது திராவிட நாடு இதழில் அவரை “அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று போற்றியுள்ளார்..

      அரவிந்த ஆசிரமத்துக்கு ஒரு முறை வந்த மகா கவி பாரதி, அங்கு தங்கியிருந்த வ.ராவின் உரைநடையைப் படித்து வியந்து, அரவிந்தரிடம், “நம் ராமசாமி அய்யங்கார் என்னமாய் உரைநடை எழுதுகிறார்! இனி எனக்கு உரைநடையில் வேலை இல்லை. இனிக் கவிதைகளை மட்டுமே நான் கவனித்துக்கொள்ளப் போகிறேன்,” என்று சொன்னாராம்.

      மேயோவுக்குச் சவுக்கடி, சுவர்கத்தில் சம்பாஷணை, வசந்தகாலம், வாழ்க்கை விநோதங்கள், கற்றது குற்றமா, சின்ன சாம்பு, சுந்தரி, கலையும் கலை வளர்ச்சியும், வ.ரா. வாசகம், ஞானவல்லி, மகாகவி பாரதியார், கோதைத்தீவு என்று பல நூல்களைப் படைத்துள்ளார். இவையனைத்தும் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளவையாம்.

      இவற்றில் “கோதைத் தீவு” எனும் புதினத்துக்கு வ.ரா. எழுதியுள்ள முன்னுரை ஆண்-பெண்களின் கவனத்துக்கு உரியது: அது பின்வருமாறு:

 

       “கோதைத் தீவு எனது நீண்ட கால முயற்சி. நான் இளைஞனாக இருக்கையில்  ஆண்கள் நடத்தும் குடும்ப தர்பாரைக் கண்டு மனம் புழுங்குவேன். இந்த தர்பாரைப் பார்க்கின்ற யாவரும் பெண்களுக்குப் பரிந்து பேசுவது இயற்கை. ’இதே ஆத்திர உணர்ச்சி உன் உள்ளத்தில் இருபது வருஷத்திற்கு மேல் குறையாமல் தங்கி இருக்குமானால் நீ ஆண்களைப் பற்றி இழிவாக எழுதலாம்’ என்று ஒரு நண்பர் யோசானை சொன்னார்.

      அவர் சொன்னது ஒரு வகையில் உண்மையெனக் கொண்டு இருபது வருஷம் பொறுத்திருந்தேன். என் ஆத்திரம் தணிந்தபாடில்லை. நம்மவர்களின் வாழ்க்கை எல்லாத் துறைகளிலும் பாழாகிக்கொண்டு வருவதைப் பார்க்க என் மனம் பொருந்தவில்லை. வீட்டை நரகமாக்கி வருவது ஆண்பிள்ளை என்பது நான் கண்ணால் பார்த்துவரும் உண்மையாகும்.

      நம் நாட்டில் பெண் அடிமையாகப் பிறக்கிறாள், வளர்கிறாள், வாழ்கிறாள், இறக்கிறாள். வாய்விட்டுச் சொல்லச் சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமானால், பெண்கள் என்ன சொல்லுவார்களென்பதையும், என்ன செய்வார்களென்பதையும் “கோதைத் தீவு’ என்ற கற்பனையின் மூலம் என் சகோதர ஆண்களுக்கு எடுத்துக் காண்பிக்க முயன்றிருக்கிறேன் …”

…….

Series Navigationநீங்க ரொம்ப நல்லவர்லத்தி     
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

5 Comments

  1. Avatar
    ஜோதிர்லதாகிரிஜா says:

    கட்டுரையின் 3 ஆம் பாராவின் தொடக்கத்தில் ஓர் அபத்தமான தவறு நேர்ந்துள்ளது.
    இந்தியர்கள் “முன்னேறாததற்குக் காரணம்” என்று இருக்க வேண்டும்.
    “முன்னேற்றத்துக்குக் காரணம்” என்றிருப்பதை மன்னிக்க வேண்டுகிறேன்.
    ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    Jyothirllata Girija says:

    மூன்றாம் பாராவின் தொடக்கத்தில் உள்ள “முன்னேற்றத்துக்கு” என்பதை அன்பு கூர்ந்து “முன்னேறாததற்கு” என்று வாசிக்க வேண்டுகிறேன். தவற்றுக்கு மன்னிக்கவும். நன்றி
    ஜோதிர்லதா கிரிஜா

  3. Avatar
    BSV says:

    இவரின் ‘மகாகவி பாரதியார்’ (கட்டுரையும் குறிப்பிடுகிறது) என்ற நூல் கண்டிப்பாக பாரதியாரின் வாழ்க்கையைத் தெரிய விழைவோர் வாசிக்க வேண்டிய ஒன்று. எப்படி தான் பாரதியாரைக் காண வேண்டுமென்ற தணியாக தாகத்தால் புதுச்சேரி சென்றேன் என்று தொடங்கி சந்தித்தது வரை சொல்கிறார். இன்னும் பல சுவாரசியான வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கியது அந்நூல். வ ராவைப் பற்றியும் கவிஞரைப்பற்றியும் சேர்த்தே சொல்கிறது. ‘வ ராவின் பார்வையில் பாரதியார்’ என்ற தலைப்பே பொருத்தமானது. தவற விடாதீர்கள்.
    கட்டுரை பாரதியார் இவரின் உரை நடையை புகழ்ந்தது பற்றி குறிப்பிடுகிறது. வ ரா முதன்முதலாக பாரதியாரைச் சந்தித்தபோது வ ராவுக்கு டீன் ஏஜ். அதாவது வெளியுலகுக்குத் தெரியா சின்னப் பையன். அம்முதல் சந்திப்புக்குப் பிறகு வ ரா எழுதத்தொடங்கி அவை கவிஞரால் வாசிக்கப்பட்டு ‘பொறாமை’ உணர்ச்சியையும் உருவாக்கி இருக்க வேண்டும்.

    அண்ணா ‘அக்ரஹாரத்து அதிசய மனிதர்’ என்று விழித்தது குறும்புத்தனமானது. கட்டுரையின் கடைசிப் பத்தியில் வ ராவின் செயல்பாடுகளும் எண்ணங்களும் குறிப்பிடப்ப‌ட்டிருக்கின்றன. நல்ல எண்ணங்கள். அக்ரஹாரத்தில் வசிப்போருக்கு அவை இருக்கா என்று சாடையாக அண்ணா காட்டுகிறார். வெறும் ‘மனிதருள் அதிசயமானவர்’ என்று சொல்லியிருக்கலாம். அல்லது a progressive thinker என்று சொல்லியிருக்கலாம்.

    அண்ணா சொல்லப்போய் வ ராவைப்பற்றி எழுதும் எல்லாருமே அண்ணா சொன்னதையே அழுத்தமாக குறிப்பிட்டு விடுகிறார்கள். மனதுக்குள்ளே அக்ரஹாரத்து ‘அதிசயமில்லா மனிதர்கள்’ புழங்குவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? உண்மை என்னவென்றால், வ ராவிடன் ஒப்பிடும்போது நாமெல்லாரும் ‘அதிசயமில்லா மனிதர்களே’!

  4. Avatar
    ஜோதிர்லதாகிரிஜா says:

    B.S.V. அவர்களின் கருத்துகளுக்கு நன்றி.
    அந்தக் காலத்தில் கைம்பெண்களுக்கு மொட்டை அடித்தவர்கள் பிராமணர்கள். வ.ரா. கிராப்பு வைத்துக்கொண்டதற்காகக் குடும்பத்தினரின் ஆத்திரத்துக்கு ஆளானவர். ஏன்? எனக்குத் தெரிந்த ஒருவர் குடுமி வைத்துக்கொள்ளவில்லையாம். ஆனால் அவர் கழுத்தில் புரளும் சுருட்டையான “பாகவதர்” முடி வைத்துக்கொண்டிருந்தாராம். அதற்கு அவ்வளவாக அவருடைய தமையன் – அவருடைய காப்பாளர் (guardian) – மறுப்புச் சொல்லவில்லையாம். ( முடி நன்றாக வளர்ந்த பிறகு அதைக் குடுமியாக முடிந்துகொள்ளுவார் என்று நினைத்தாரோ என்னவோ! ) பின்னர் அவர் கிராப்பாக அதை மாற்றிக்கொண்ட போது, ‘அவன் கையால் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டேன்” என்று கூறி அவரைக் குடும்பத்திலிருந்து ஒதுக்கினாராம். ஆனால் பின்னாளில் அவர் மகன்கள் கிராப்பு வைத்துக்கொண்டார்கள். அவர்கள் தயவில்தான் அவர் வாழ நேர்ந்தது! இதை அந்தப் பெரியவர் கூறிச் சிரித்தார். ஏன்? நம் மகாகவி பாரதியாரையே அக்கிரகாரத்து மனிதர்கள் என்ன பாடு படுத்தியுள்ளார்கள்! எனவேதான், அறிஞர் அண்ணதுரைக்கு அப்படி அவரை அழைக்கத் தோன்றியுள்ளது. கேரளத்தில் நம்பூதிரிகளின் அட்டுழியங்களால், “Kerala is the lunatic asylum of India” என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது. .
    ஜோதிர்லதா கிரிஜா

  5. Avatar
    jyothirllata Girija says:

    BSV அவர்களே! வ.ரா. அவர்களின் கோதைத் தீவு எங்கே கிடைக்கும்? தெரியுமா? முன்னுரை மட்டுமே எனக்குக் கிடைத்தது. அந்த நறுக்கைப் பயன்படுத்திக்கொண்டேன். கதையைப் படித்ததில்லை. படிக்க அவா. நன்றி
    ஜோதிர்லதா கிரிஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *