உலகத்துக்கு காமமே அடித்தளம். மனிதன் தனது வெற்றியை காமத்தின் மூலம் தான் கொண்டாடுகிறான். இரைக்காக தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீனின் நிலைதான் மனிதனுக்கு. நீதியைக் கூட காமத்தின் மூலம் விலைக்கு வாங்கிவிட முடிகிறது. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமேயானால் பெண்ணாசையால் சாம்ராஜ்யங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்த கதையை அது சொல்லும். காமம் விதையாக மனதில் விழுந்து விருட்சமாக வளர்ந்து நிற்கிறது அதை வேரோடு சாய்ப்பது என்பது இயலாத காரியமாகிப் போகிறது. காமமும், கடவுளும் எதிரெதிர் துருவங்கள் என நாம் உணர வேண்டும். உடல் இச்சைகளை திருப்தி செய்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க முடியுமா? முக்கியமாக பாபங்கள் பெண்ணாசையால் தான் விழைகிறது. காமத்தை விலைக்கு வாங்கிவிடலாம் ஆனால் காதலை! ஈக்கள் தான் தெய்வத்தின் மாலையிலும் மலத்திலும் உட்காரும். பெண்ணாசையை ஒழிக்கும் வரை பூமியில் பிறந்துகொண்டே இருக்க வேண்டியது தான்.
காமம் அகக்கண்களை திரைபோட்டு மறைத்துவிடும். காமம் பகுத்தறிவை மழுங்கச் செய்துவிடுகிறது. விலங்குகள் போல் வெறும் உடலாய் நம்மை நாம் உணரக்கூடாது. மனதினால் கட்டுப்படுத்தாமல் ஐம்புலன்களையும் அதனதன் போக்கில் செல்ல அனுமதிப்போமானால் நரகம் தான் நமக்கு பரிசாகக் கிடைக்கும். காமம் துரோகம் செய்ய வைக்கிறது மனிதனை மிருகமாக்குகிறது. காமத்தால் ஆட்கொள்ளப்பட்டு தவறு செய்பவர்கள் ஆயுள் முழுவதும் அந்த பாவச்சிலுவையை சுமக்க வேண்டியிருக்கும். தீக்குச்சியால் விளக்களையும் ஏற்ற முடியும் வீட்டையும் எரிக்க முடியும். சிட்டுக்குருவியைப் போல எந்நாளும் அதையே நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு மரணம் நிம்மதி தராது. மரணித்த பின்பும் வேறு உடலைத்தேடி அலைய வேண்டி வரும். உடலோடு தங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவே அந்தக் காலத்தில் ரிஷிகள் கானகம் சென்று தியானம் புரிந்தனர். பெண்ணைப் பார்க்கும் போதுதானே நாம் நம்மை ஆண் என்று உணருகிறோம். மனிதர்கள் இல்லாத வனம் நம்மை நான் யாரென உணரச்செய்யும்.
யயாதி காமப்புலையன் என்ற சொல்லுக்கு முற்றிலும் தகுதியானவன். கெளரவ, பாண்டவர்கள் யயாதியின் வழித்தோன்றல்களே. கிருஷ்ணரையும், பலராமரையும் பெற்ற யதுவம்சம் யயாதியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. மூன்று உலகங்களையும் யார் ஆள்வது என்ற யுத்தத்தில் பிருகஸ்பதி தேவர்களின் குருவாகவும் சுக்ராச்சாரியார் அசுரர்களின் குருவாகவும் எதிரெதிர் பக்கம் நிற்கின்றனர். பிருகஸ்பதி சுக்ரரைப் போன்று இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி வித்தையை அறிந்தவரல்லர். அதனால்தான் அசுரர்கள் சுக்ராச்சாரியாரை தங்களது குலகுருவாக போற்றி வழிபடுகின்றனர். அசுர மன்னன் விருஷபர்வன் சுக்ரருக்கு தனது நாட்டில் புகலிடம் அளித்திருந்தான். சுக்ரரின் மகளான தேவயானியும் விருஷபர்வன் மகள் சர்மிஷ்டையும் ஆற்றில் நீராட தோழியருடன் சென்றனர். காற்று பலமாக வீச கரையில் வைத்திருந்த உடைகளெல்லாம் பறந்தது. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள எல்லோரும் தங்களது உடைகளை ஓடிச்சென்று எடுத்து அணிந்துகொண்டார்கள். ரிஷிமகள் தேவயானியின் ஆடையை தவறுதலாக மன்னர் மகள் சர்மிஷ்டை அணிந்து கொள்கிறாள்.
கோபம் மேலிட தேவயானி என் தந்தையின் கருணையினால் தான் இந்த தேசம் பிழைத்திருக்கிறது. அப்படியிருக்கையில் நீயும் நானும் சமமா எனச் சீறினாள். பதிலுக்கு சர்மிஷ்டை என் தந்தை உங்களுக்கு அடைக்கலம் மட்டுமே அளித்திருக்கிறாள். சாதாரண காவி உடையுடன் கமண்டலம் சுமந்து செல்லும் ரிஷியின் புதல்விக்கு இவ்வளவு கோபம் ஆகுமா என்றாள். கோபம் கண்களை குருடாக்கிவிடும். கோபமும், காமமும் காட்டுத்தீயைப் போன்றது. சருகுகள் பற்றி முடிவில் காடே சாம்பலாகும். கோபம் தலைக்கேற சர்மிஷ்டை தேவயானியை சாவு என்று கிணற்றில் தள்ளிவிட்டாள். சில நாழிகைக்குப் பின் இளவரசன் யயாதி அங்கு வந்தான். குரல் கேட்டு கிணற்றில் பார்க்க தேவயானி யயாதியைப் பார்த்து நீங்களே எனக்கு தகுதியானவர் உங்களால் நான் காப்பாற்றப்படவே விரும்புகிறேன் என்கிறாள். இக்கட்டான தருணத்திலும் அவளிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் இவை. காப்பாற்றி யயாதியிடம் உங்களை நான் பதியாக வரித்துக்கொண்டேன் உங்கள் தேசத்துக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றாள். நீ பிராமணர் சுக்ரரின் மகள் அவரை உலகறியும் நானோ சத்திரியனான நகுஷன் மகன் அவர் பெண்ணை மணப்பது பாபம் என்கிறான். சரி என் தந்தையின் சம்மதத்துடன் நம் இருவரின் திருமணம் நடைபெறும் என்று கூறி யயாதிக்கு விடை கொடுக்கிறாள்.
சுக்ராச்சாரியார் தன் மகளைத் தேடிவந்தார். தந்தையே இன்று வாழ்வில் மறக்கவே முடியாத அவமானம் எனக்கு நேர்ந்துவிட்டது. என்னை விட்டுத்தள்ளுங்கள் சர்மிஷ்டை உங்களை மன்னனிடம் இரந்து வாழும் பிச்சைக்காரர் என்றாள் என்று சுக்ரரிடம் கூற. அந்த அந்தணர் சினம் கொண்டார். விருஷபர்மன் அவர் காலில் விழுந்தான். நான் உங்களுக்கு அடிமை என்றான். இதை என் மகளிடம் கூறு அவள் மன்னிக்கிறாளா என்று பார்ப்போம் அவள் மன்னிக்க சம்மதித்தால் தான் நான் உன் நாட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன் என்றார். தேவயானி தன்னெதிரே கைகூப்பி நின்று கொண்டிருந்த மன்னரிடம் உன் மகளை எனது அடிமையாக ஒப்புக் கொடுத்துவிடு உன் மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நிபந்தனை விதித்தாள். மன்னர் வேறுவழியின்றி சம்மதிக்க ஆயிரம் அடிமைகளோடு சர்மிஷ்டையும் ஒரு அடிமையாக ரிஷிகுமரிக்கு சேவகம் செய்ய புறப்பட்டுச் சென்றாள். கோபம் தனது உயரத்தை மறக்க வைக்கும். பேயைப் போல ஆட்டுவித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியேறிவிடும். ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பல நூறு ஆண்டுகள் நாம் பதில் சொல்ல வேண்டிவரும்.
சுக்ரரின் ஆசிர்வாதத்தோடு தனது சொல்படியே யயாதியை மணம் செய்து கொண்டாள் தேவயானி. சர்மிஷ்டையையும் சேர்த்து ஆயிரம் அடிமைகளும் யயாதியின் தேசத்துக்கு புறப்பட்டனர். தேவயானி யதுவை பெற்றெடுத்தாள். யாதவ வம்சத்தின் மூலகாரணகர்த்தா அவன்தான். சர்மிஷ்டை பேரழகி மன்னர் மகளும் கூட யயாதி ஸ்த்ரிலோலன் அவள் விரித்த வலையில் எளிதாக வீழ்ந்தான். தேவயானியைப் போல் எனக்கும் மகாராணி பட்டம் வேண்டும் என்றாள். பட்டத்துக்கு வந்த பிறகு யாருக்கு பயப்படுகிறீர்கள் என்றாள். யயாதியின் தயக்கத்திற்கு சுக்ரரின் வார்த்தைகளே காரணம். தேவயானியை மணம் செய்து கொடுக்கும்போதே அவர் சொல்லி இருந்தார். சர்மிஷ்டை விதியால் அடிமையானாலும் மன்னர் மகள். அவளிடம் நீ வரம்பு மீறக்கூடாது. உன் மனதை நான் அறிவேன் எனவே தான் எச்சரிக்கிறேன் என்றார். காமத்திற்கு ஆட்பட்டவன் மனம் பசிகொண்ட வேங்கையைப் போன்றது. வேட்டையை முடித்து பசி அடங்கிய பின்புதான் எதைப் பற்றியும் யோசிக்கும்.
போஜத்திற்காக வனம் செல்லும் தேவயானி அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளைப் பார்க்கிறாள். அக்குழந்தைகளின் அங்க லட்சணங்கள் ராஜவம்சத்துக்கு உரியதாய் இருக்கவே குழந்தைகளை அழைத்து தகப்பன் யார் என்று விசாரிக்கிறாள். குழந்தைகள் ஒரே குரலில் யயாதி என்கின்றன. அப்போது எனக்குத் தெரியாமல் இவ்வளவு நாள் என் வாழ்க்கையை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறாள் என அருவருப்புக் கொண்டாள். ஊர்கூடி மாலை மாற்றிய எனக்கு இரண்டு குழந்தைகள் கள்ளத்தனமாக உள்ளே நுழைந்தவளுக்கு மூன்று குழந்தைகள், இதை இப்படியே விடக்கூடாது என்றவளாய் தந்தை சுக்ரரிடம் விஷயத்தை தெரிவிக்கிறாள். கோபம் கொண்ட சுக்ரரின் சாபத்தால் மன்மதனைப் போன்று தோற்றப் பொலிவு கொண்ட யயாதி முதுமை நிலையை அடைந்தான். உடல் எந்தப் பெண்ணுடனும் கலந்து ஆலிங்கன் செய்ய முடியாதபடி பலவீனப்பட்டது. வாலிபத்திலேயே சாபத்தால் கிழப்பருவம் எய்தினான். தன் தவறை உணர்ந்து யயாதி சாபவிமோசனம் வேண்ட சுக்ரர் மனம் இரங்கி, உனது மகன்களில் ஒருவர் உன் முதுமையை ஏற்றுக் கொண்டு அவர்களின் இளமையை உனக்குத் தானமாக கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு சம்மதம் தெரிவிப்பவனுக்கே உன் ராஜ்யத்தை நீ ஒப்படைக்க வேண்டும் என்றார்.
மூத்தவன் யதுவை அழைத்து பேசினான். ஆயிரம் ஆண்டுகள் மட்டும் பொறுத்திரு இளமையை திருப்பித் தந்துவிடுகிறேன் என்றான் யயாதி. ஆயிரம் ஆண்டுகள் என்னால் பைத்தியமாக இருக்க முடியாது, மற்றவர்களின் கேலி என்னைக் கொன்றுவிடும். இந்த திட்டத்துக்கு என்னால் உடன்பட முடியாது என்று தன் முடிவைத் தெரிவித்தான். மற்றவர்களும் யதுவைப் போல் யயாதியின் கீழ்த்தரமான ஆசைக்கு இணங்க மறுத்தனர். கடைசி மகன் புரூ உதவ முன்வந்தான். ஆயிரம் ஆண்டுகள் இன்ப ஆற்றில் நீந்தி திளைத்த யயாதி புரூவை அழைத்தான். காமம் தீரக்கூடியதல்ல, எத்தனை உடலெடுத்தாலும் பெண்ணாசை என்னைவிடாது. பிறந்த இடத்தையும் கறந்த இடத்தையும் தேடுவது ஒரு வாழ்க்கையா என்றான். உன் இளமையை பெற்றுக்கொள். ராஜ்யத்தையும் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி உன்னிடமே ஒப்படைக்கிறேன் என்றான்.
யதுவுக்கு யயாதி கொடுத்த சாபம் காரணமாகவே யாதவ வம்சத்தில் மூத்தவர் யாரும் அரசாளமுடியவில்லை. புரூவின் வம்சமே கெளரவர்களும், பாண்டவர்களும். யயாதி வனம் சென்று தவவாழ்வில் ஈடுபடலானான். தவப்பலனாக அவனுக்கு சுவர்க்கம் கிடைத்தது. இந்திரன் யயாதியிடம் உனக்கு நிகரானவர் என்று பூலோகத்தில் வாழ்பவர்களில் யாரை மதிக்கிறாய் என்று கேட்க. யயாதி மமதையில் எனக்கு நிகரானவர் இவ்வுலகில் யாருமில்லை என்கிறான். தவம் உனக்கு பக்குவத்தை தரவில்லை உனக்கு சுவர்க்கத்தில் வசிக்கும தகுதியில்லை திரும்ப பூமிக்குச் செல் என கட்டளையிட்டான் இந்திரன். யயாதி மீண்டும் சுவர்க்கம் புக தனது ஒரே மகளான மாதவியின் பிள்ளைகளின் புண்ணியபலன்களை பிச்சையாக கேட்கிறான். இதன் மூலம் அவனுடைய கேவலமான புத்தி வெளிப்படுகிறது. பீஷ்மர் தனது தந்தைக்காக ராஜ்யத்தை துறப்பதற்கு புரூவே முன்னுதாரணமாகத் திகழ்கிறான். எல்லோருடைய உள்ளுக்குள்ளும் ஒரு அக்னி எரிந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஞானத்திலாலான நெய் வார்க்க வேண்டுமே தவிர காமத்தினால் அல்ல. இறப்புக்கு பிறகு ஐம்புலன்களையும் இழந்து மனம் பரிதவிக்கக்கூடாது. பெண்ணாசையால் தனக்கும் குலத்துக்கும் நேர்ந்த பாபத்தைதான் யயாதி கதை சொல்கிறது. மகனிடம் இளமையையும், பேரன்களிடம் புண்ணியத்தையும் தனது சுயநலத்துக்காக பிச்சைக் கேட்கும் யயாதி வேறு யாரோ ஒருவனல்ல நீங்களும் நானும் தான்!
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ்
- பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்
- பொறுப்பு
- சன்னல்
- கவிதையும் ரசனையும் – 22
- விடாது கருப்பு…!
- தீக்காய்வார் போல …
- கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……
- எஸ். சாமிநாதன் விருது
- பூகம்பத்தால் பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறி பூமியின் சூடேற்ற நிலை பேரளவு பாதிப்பாகிறது
- 2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு விரைவில் மிகையாகிறது .
- காணாத கனவுகள்
- குருட்ஷேத்திரம் 23 (சக்கரவியூகத்தில் அகப்பட்டு மாண்ட வீரஅபிமன்யூ)
- குருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)
- எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி. நாகராஜன் தொகுப்பாக – ’மிகையின் தூரிகை’ ஒரு பார்வை