மாதிரி மலர்கள்

This entry is part 14 of 16 in the series 24 அக்டோபர் 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

 

(20.2.1983 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் ”ஞானம் பிறந்தது” எனும்  சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஜெயா டி.வி.யில் அதன் தொடக்கத்தின் போது திரைப்படக் கல்லூரி இளைஞர்கள் சிலரால் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது.)

      மீனாட்சியம்மாள் முந்திய இரவு முழுவதும் கண்ணைக் கொட்டவில்லை. உள்ளத்தில் உறைந்திருந்த பரபரப்பின் விளைவாக என்ன முயன்றும் அவளால் தூங்கமுடியவில்லை. இவ்வளவுக்கும் மறு நாளுக்கு எக்கச்சக்கமான வேலைகள் காத்திருந்தன. இருந்தும், முந்திய இரவு உறங்காத களைப்பு ஒரு சிறிதுமின்றி அவள் உற்சாகத்துடன் எழுந்து தன் அலுவல்களில் சுறுசுறுப்பாக ஆழ்ந்தாள்.

       ‘கலா கூடத்தான் தூங்கியிருக்க மாட்டா’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.  இத்துடன் எத்தனையயோ பேர் வந்து அவளைப் பார்த்துப் போயாயிற்று!  ஒன்றும் திகையவில்லை. எப்படியோ, கிட்ட முட்ட வரும் நேரத்தில். அவளைப் பார்த்துச் சம்மதித்துச் சென்றவர்களுக்கு அவளைப் பற்றிய ரகசியம் தெரிந்து போய்த் திகைந்துவிடும் போல் தோன்றிய திருமணம் நின்று போய்விடுகிறது …

      இதற்கு முன்னாலெல்லாம் அடிக்கடி ரவா கேசரியும், பஜ்ஜியும் செய்து மகளைப் பார்க்க வந்த பிள்ளைகளை உபசரித்தது ராசியாக இல்லையோ என்கிற மூட நம்பிக்கையில் இந்தத் தடவை திரட்டுப்பாலும் மிக்ஸ்சரும் செய்ய அவள் திட்டமிட்டிருந்தாள். 

      அடுக்களையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்துக் கலா வருத்தமுற்றாள்.  தன் சொந்த வருத்தத்தைக் காட்டிலும் அம்மாவின் ஏமாற்றத்தைப் பற்றிய உணர்வு அவளை அதிகமாக வருத்தியது. தன் கடந்த காலம் பற்றிய விவரங்கள் தன்னைப் பெண் பார்க்க வருகிறவர்களுக்கெல்லாம் எப்படியோ தெரிந்து போய்விடுவதை எண்ணி அவள் வியப்படைந்து போனாள்.

      ஒரு பெண்ணின் கடந்த காலத்தை உரசிப் பார்க்காமல்   அவளது நிகழ்காலத்துக்காக மட்டுமே    அவளை ஏற்க முன்வருகிற பக்குவம் மனிதர்களுக்கு எப்போதுதான் வருமோ என்று நினைத்து அவள் பெருமூச்சு விட்டாள்.  இன்று அவளைப் பார்க்க வர இருப்பவன் மசிலாமணி என்கிற இளைஞன்.  அவளுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாசிலாமணியைத் தெரிந்திருந்தது.  கதைகளில் வருவது மாதிரி இந்த மாசிலாமணி அந்த மாசிலாமணியாய்க் கூட இருக்கலாமோ என்கிற எண்ணம் வந்து அதன் சாத்தியமின்மையை எண்ணித் தனக்குள் அவள் நகைத்துக் கொண்டாள். சென்னையில் லட்சக் கணக்கில் மாசிலாமணிகள் இருப்பார்கள். இவன் எந்த மாசிலாமணியோ? பெயருக்கேற்ப உண்மையாகவே மாசில்லாத மனிதனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். தான் இப்போது மாசற்றவளாக இருப்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு தன்னை ஏற்க வருகிற அளவுக்கு மாசற்றவனாக இருந்தால் தன் பிரச்சினை தீர்ந்து போகும் என்று எண்ணிச் சிரித்துக்கொள்ளவும் செய்தாள். இவனுக்கும் யாராவது தன்னைப் பற்றிய கடந்த காலத்து மாசு படிந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக்கொடுத்து விடுவார்களோ என்றும் அவநம்பிக்கைப்பட்டுக் கசப்படைந்தாள்.

       “அடியே, கலா! எப்பவும் கட்ற அந்தச் செவப்புப் பொடவை வாணாம். அதுலதான் நீ ரொம்ப நல்லா இருக்குறே. ஆனாலும் அது ராசி இல்லே. அந்தப் பச்சைப் பொடவை இருக்குதே, அத்தக் கட்டிக்க,” என்றவாறு அவள் அம்மா அவள் எதிரில் வந்து நின்று காபியை நீட்டிக்கொண்டே அவளது சிந்தனையைத் தடுத்தாள்.

       “ஆவட்டும்மா!” என்று அவள் பதில் சொல்லிவிட்டுக் காபியை வாங்கிக்கொண்டாள்.

       ஒவ்வொரு தடவையும் பரபரப்படைந்து பழக்கப்பட்டுப் போய்விட்டதில் முந்தின தடவையும் சரி, இப்போதும் சரி, அவள் பரபரப்படையாமல் அமைதியாகவும் படபடப்பு அற்றும் இருந்தாள்.  பிற்பகல் மூன்று மணிக்கு அந்தப் பையனும் அவள் அக்காவும் வந்தார்கள்.  சமையலறையில் இருந்த அவளுக்கு அவள் அம்மா அவர்களை உபசரித்து நாற்காலிகளில் அமரச் செய்தது அரையாகத் தெரிந்தது. இருவரும்  நாற்காலிகளில் அமர்ந்ததும் கதவிடுக்கின் வழியாகப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் போய்விட்டது.  நெஞ்சு படபடவென்றது.  ‘இது திகைந்துவிடக்கூடும். இவருடைய அக்காவுக்குத் தெரிந்து போய்  அவள் ரகளை செய்தாலல்லாது மாசிலாமணி தன்னை நிராகரிக்க வாய்ப்பில்லை’ என்கிற அனுமானத்தில் அவள் விரல் நுனிகள் முதற்கொண்டு ஆடின.

       கனவுகளில்தான் நடக்கும் என்று எண்ணித் தான் சிரித்தது பொய்த்துப் போனதில் அவள் அளவற்ற வியப்புக்கு உட்பட்டு அசல் வாழ்க்கையும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்ததாகச் சமயங்களில் இருந்து விடும் என்பதை அறிந்து பரவசப்பட்டுப்  போனாள்.  கைகால்கள் நிமிடமாய்ச் சில்லிட்டுப் போயின.

       … இருவருக்கும் முதலில்சிற்றுண்டி, காபி வழங்கப்பட்டன. தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் வியப்பும் மாசிலாமணிக்கும் ஏற்படும் என்பதை எண்ணி அவள் புன்னகை செய்துகொண்டாள்.

       கூடத்துக்கு வந்து அவள் அவர்களுக்கு முன்னால் நின்ற போது மாசிலாமணி வெளிப்படையாகவே நாற்காலியில் நெளிந்ததை அவள் கவனித்தாள். தனக்குத் தெரிந்தவன் என்பதால், அவன் அக்கா பக்கத்தில் இருந்ததை மறந்து அவள் சின்னதாக ஒரு புன்னகை கூடச் செய்துவிட்டாள்.  ஆனால், மாசிலாமணியின் முகத்தில் சிரிப்பு ஏற்படவில்லை. அவன் கண்கள் மட்டும் அகன்றிருந்தன.  அதிர்ச்சியும் வியப்பும் மட்டுமே அந்தக் கண்களில் தெறித்ததையும் அவற்றில் துளியும் மகிழ்ச்சி விளைந்திருக்கவில்லை என்பதையும் அவள் துல்லியமாய்த் தெரிந்து கொண்டதில், இந்தப் பெண் பார்த்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பாதிக்கு மேல் புரிந்த அதிர்ச்சியில், புன்னகையை உள்வாங்கிக்கொண்டு நிதானமடைந்து உணர்ச்சியற்ற முகத்தினளானாள்.

                மாசிலாமணியின் முகம் இருண்டிருந்ததையும் அவன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்ததையும் பார்த்த போது, அவளைச் சொல்லி மாளாத ஏமாற்றம் பற்றிக்கொண்டது.  ‘இவனே தன்னைப் புறக்கணித்தால், வேறு யார் ஏற்பார்கள்?’ என்கிற கேள்வியால் வருங்காலமே இருளடைந்து தெரிந்தது. ‘ஒருவேளை தன் அக்காவுக்கு எதுவும் தெரிந்து போய்விடக்கூடாது என்பதால் இவன் தன்னைத் தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளாதிருக்கிறானோ?’ என்கிற வினாவும் தோன்றிய போது, ‘அப்படியும்தான் இருக்கலாம். நான் ஏன் கெட்டதையே எண்ணிக் கலங்க வேண்டும்?’ என்றும் அவள் தன்னைக் கேட்டுக்கொண்டாள். தன்னை ஏற்கெனவே தெரியும் என்பதை இவள் வெளிப்படுத்தித் தன்னைச் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டால் எப்படித் தெரியும், ஏதாய்த் தெரியும் என்கிற கேள்விகளுக்கெல்லாம் தான் தன் அக்காவுக்குப் பதில் கூற வேண்டியது வந்து, அதனால் இந்த உறவு ஏற்படாது போகலாம் என்கிற முற்கவனத்தால்  கூட அவன் அப்படி இருக்கக்கூடும் என்கிற சாத்தியக்கூற்றையும் அவள் மனம் நினைத்துப் பார்த்தது.

      அவள் அம்மா, அவள் அப்பா காலமானதிலிருந்து தானே அவளை வளர்த்து ஆளாக்கியது, எட்டாம் வகுப்பு வரையில் மட்டும் படிக்க வைக்க முடிந்தது, வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருப்பது ஆகியவற்றையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாள். தன்னிடம் பணம் அவ்வளவாக இல்லை என்கிற பாட்டை வழக்கம் போல் பாடினாள். அவர்களின் கால்களில் விழாத குறையாகப் பேசினாள்.

      அவள் அக்கா நெகிழ்ந்து போன குரலில், கலா பேரழகியாக இருந்ததால் அழகை ஆராதிக்கும் தன்மையுள்ள தம்பிக்கு அவளைப் பிடித்திருக்க வேண்டும் என்கிற நிச்சயத்துடன், “என்ன தம்பி சொல்றே?” என்று வாய்விட்டுக் கேட்டுவிட்டாள்.

      இருவர் முன்னிலையிலும் சற்று உட்கார்ந்துவிட்டு அடுக்களைக்குத் திரும்பி வந்து தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவியின் படபடப்புடன் உட்கார்ந்துகொண்டிருந்த கலா எழுந்து கதவருகே சென்றாள். காதுகளை விறைத்துக்கொண்டு கவனித்தாள்.

       “நாங்க போய்த் தெரிவிக்கிறோம்மா. அதான் விலாசம் இருக்கே?” என்று மாசிலாமணி வெடுக்கென்று பதில் சொன்னதும் அவன் மனத்தில் என்ன இருந்தது என்பது தெற்றெனத் தெரிந்து விட்டதில் அவளுக்குச் சப்பென்று போய்விட்டது. மனத்தில் சொல்லி மாளாத ஆத்திரம் மூண்டது.

      அப்பா செத்துப்போய்க் குடும்பம் சொல்ல முடியாத வறுமையில் சிக்கிக்கொண்ட போதே யாரோ தெரிந்தவர் வாயிலாக அவள் ‘அந்த வேலை’ க்குப் போகும்படி ஆயிற்று. அவள் ‘அந்த வேலை’ செய்த அலுவலகத்தில்தான் மாசிலாமணி பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தான்.  வேலையில் சேர்ந்த முதல் நாளே அவள் அவனை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இன்னும் சொல்லப் போனால் அவன் தான் அவளைத் தேடி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவள் முகம் வெளிறி வெட்கமும் வேதனையுமாக நின்றதைப் புரிந்துகொண்டு அக்கறையுடனும் அனுதாபத்துடனும் அவளுக்கு ஆறுதல் சொன்ன ஒரே ஆத்மா அவன்தான். மற்றவர்கள் எல்லாரும் வெறும் தொழில் முறை இயக்கம் கொண்டவர்களாக மட்டுமே இருந்த நிலையில் அவன் தனிப்பட்ட புரிந்துணர்வுடன் தன்னை அணுகிப் பேசியதில் அவள் நெகிழ்ச்சியடைந்தாள்.

      ’அந்தத் தொழிலில்’ தப்பே இல்லை’ என்றான். அங்கு வந்து பயிற்சி பெறுகிறவர்கள் எல்லாருமே கலைப்பார்வை மட்டுமே கொண்டவர்கள் என்று அடித்துப் பேசினான். யாருக்கும் வக்கிர புத்தியோ கோணல் எண்ணங்களோ இல்லை என்றான். கலைஞர்கள் வெறும் மனிதனின் வெறிப்பார்வை துளியும் இல்லாதவர்கள் என்றும் தங்கள் முன் நிற்பவள் ஒரு பெண் என்கிற ஞாபகமே அவர்களுக்கு வராது என்றும் உறுதி சொன்னான். இப்படியெல்லாம் அவன் பேசப்பேச அவளுக்கு மனத்தெம்பு ஏற்பட்டது.

      ’மாதிரி மங்கையர்’ பற்றி யாரோ தரக்குறைவாகப் பத்திரிகை ஒன்றில் எழுதியபோது, அம்மங்கையர்க்கு வக்காலத்து வாங்கி அதே பத்திரிகையில் கலைப்பார்வை இல்லாத அந்த வாசகருக்குப் பதிலடி கொடுத்துக் கட்டுரை எழுதி முன்னர் தான் கொடுத்த பதிலடியை எடுத்து வந்து  இவளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். ஓவியப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் எல்லாரும் கள்ளமற்ற பார்வையுடையவர்கள் என்று அதில் அவன் வாதாடி இருந்தான். ஆடைகள் அற்று நிற்கும் ஒரு பெண்ணைச் சுற்றிப் பல இளைஞர்கள் அமர்ந்து அவளின் பல கோணங்களை வரையும்போது அவர்கள் துளியும் விகாரமடைவதில்லை என்றும், அவர்களின் கலைப்பார்வை வெறும் மனிதர்களுக்கு எப்படிப் புரியும் என்றும் கேலி செய்திருந்தான்.

      இவள் ‘மாடல்’ ஆகத் தொழில் செய்தது இவள் அம்மாவுக்கே தெரியாது.  ஏதோ ஓவியப் பள்ளியில் சின்னச் சின்னக் கணக்கெழுதும் வேலை என்று தான் பொய் சொல்லி முதலில் ஏமாற்றிக் கொண்டிருந்தாள். பிறகு ஒரு நாள் அம்மாவுக்குத் தெரிய வந்துவிட்ட போது அவள்தான் எப்படித் துடித்துப் போனாள்! ‘அடி பாவிப் பெண்ணே! என்னதான் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு மேல் சாப்பிட முடியவில்லை என்றாலும் அதற்காக இப்படியா ஒரு வேலை செய்வது?’ என்று அழுது, திட்டியும், புலம்பியும், அவளது வருங்காலம் பற்றி அஞ்சியும் தீர்த்தாளே! …

      அடுக்களையை விட்டு வெளியே ஓடிவந்து, தன்னைப் பிடிக்கிறதா இல்லையா என்பதை வெளிப்படையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் போலவும், பிடிக்கவிட்டாலோ அல்லது பிடிக்கவில்லை என்பதை முற்றாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவன் மழுப்பினாலோ கூட ஏன் என்று கேட்டுவிட வேண்டும் போலவும் அவளுள் ஒரு படபடப்பு மிகுந்த ஆத்திரம் காலோடு தலை பரவிற்று. அவள் அடக்கிக்கொண்டு அப்படியே நின்றாள்.

      … அவர்கள் போன பிறகு, “ஏண்டி, கலா! பையன் முகம் சரியாக இல்லையே? இதுவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது…” என்று அம்மா அங்கலாய்த்த போது அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

      … அம்மாவின் பிடுங்கல் பொறுக்க மாட்டாமல்தான் அவள் அந்த வேலையை விட்டாள். விட்ட சில நாள்களுக்கெல்லாம் நல்ல வேளையாக வேறொரு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது.

      … இவள் வெளியேறுவதற்கு முன்னாலேயே மாசிலாமணி தான் பெற்ற பயிற்சி போதுமென்று கருதி  விலகிக்கொண்டு விட்டான். ஓவியக் கலையை ஒரு பக்கத்தொழிலாக மட்டுமே வைத்துக்கொள்ள எண்ணி இருப்பதாகவும் தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டதென்றும் அவளிடம் கூறி விடைபெற்றுச் சென்றான்.

      நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அவனை அவள் சந்தித்தாள். அவன் எந்த அலுவலகத்தில் வேலை செய்தான் என்பது தெரிந்திருந்ததால் அவனைச் சந்தித்துத் தான் மாதிரி மங்கையாக வேலை செய்ததுதான் அவனது நிராகரிப்புக்குக் காரணமாயின், மனத்தில் தைக்கிற முறையில் சுடச்சுட நாலு கேள்விகள் கேட்டுவிட்டு வரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

      … அவர்கள் போன பிறகு அவள் அம்மாவிடம் சேதியைச் சொன்ன போது அவள் அதிர்ந்து போனாள். ஓவியப்பள்ளி மாணவர்களுக்கு வக்காலத்து வாங்கியும், கலைப்பார்வை பற்றி விளக்கியும் அவன் எழுதிய கட்டுரையைப் பற்றியும், அதைத் தானே எடுத்து வந்து அவளிடம் காட்டி அவன் பெருமைப்பட்டதையும் கூட அவள் அம்மாவிடம் தெரிவித்த போது, அந்த அம்மாள் பற்கள் தெரியக் கசந்து சிரித்தாள்.

       ‘இதென்ன இங்கிலாந்தா, இல்லை அமெரிக்காவா? இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெண்கள் தாராளமாக நடந்து கொள்ளுவது போல் நம் நாட்டுப் பெண்களும் பால்பேதம் பார்க்காமல் நடந்துகொள்ள வேண்டும் என்று தங்களை முற்போக்கானவர்கள் என்று பீற்றிக்கொள்ளுகிற இந்திய ஆண்கள் சிலர் இப்போதெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கி இருக்கிறார்கள். எதற்கு? அது மாதிரிப் பெண்களுடன் பழகுவதற்கு மட்டுமே! அமெரிக்க ஆண்களைப் போல் உண்மையிலேயே பரந்த புத்தி தங்களுக்கு இருக்கிறதா என்று இவர்கள் சோதித்துப் பார்த்துக் கொள்ளுவதே இல்லை. அதைப் பற்றிப் பேசுவதோ எழுதுவதோ இல்லை. இவர்களின் நரித்தனத்தைப் புரிந்துகொண்டு பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் பிழைப்பார்கள். இல்லாவிட்டால், சங்கடம்தான். பெண்களின் இறந்த காலம் பற்றிப் பொருட்படுத்தாத – அல்லது கேள்வி கேட்காத – ஆண்களின் தொகை அதிகமான பிறகுதான் பெண்கள் இது போன்ற இறந்த காலங்களைக் கொள்ளும் வேலையில் ஈடுபடவோ, ஆண்களுடன் தாராளமாக – சிநேகிதர்களாக – பால்பேதம் பார்க்காமல் முற்போக்கான முறையில் பழகவோ செய்ய வேண்டும். அதற்கு முன்னால் இல்லை …’ – இப்படியெல்லாம் அந்தச் சிரிப்பு உணர்த்தியதாகக் கலா நினைத்தாள்.

      அவனைச் சந்தித்துப் பேசியே ஆகவேண்டும் என்கிற முடிவை மட்டும் அவள் மாற்றிக்கொள்ளவில்லை.

       …வரவேற்பாளர் சொல்லியனுப்பியதன் பேரில் மாடியிலிருந்து இறங்கிவந்த மாசிலாமணியின் முகத்து அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.

       “வெளியே போய்ப் பேசலாமா?” என்று அவன் மெதுவாகக் கேட்டான். அவள் தலையசைத்ததும் இருவரும் வெளியே வந்தார்கள். மவுனமாக நடந்து சற்றுத் தொலைவில் இருந்த பூங்காவை அடைந்து ஒரு பெஞ்சின் மீது நிறைய இடைவெளிவிட்டு உட்கார்ந்தார்கள்.

       உட்கார்ந்த பிறகும் சில நொடிகள் பேசாமையில் கழிந்தன. கடைசியில் கலாதான் அதைக் கலைக்கும்படி ஆயிற்று.

       “உங்கள் முடிவு என்ன, மாசிலாமணி? எத்தனை வருஷங்களுக்கு அப்புறம் நிகழ்ந்த சந்திப்பு! நீங்கள் என்னைப் பெண் பார்க்க வருவீர்கள் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்?” என்று அவள்தான் பேச்சைத் துவக்கினாள்.

       “ஐ’ம் சாரி, கலா! என்னால் உங்களை ஏற்க முடியாது.”

       “காரணம் சொல்லுவீர்களா?”

       “ …….”

       “நீங்கள் போனதுமே எனக்கும் வேறு வேலை கிடைத்துவிட்டது. நான் இப்போது மாடலாக இல்லை.”

       “…….”

       “என்ன, ஒன்றுமே சொல்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

       “ …. ஓவியப் பள்ளியில் நீங்கள் மாடலாக இருந்தது என்னோடு பயின்ற எல்லா மாணவர்களுக்கும் தெரியும். அவர்களெல்லாம் திருமணத்துக்கு வருவார்களே? அழைக்காவிட்டாலும் கூட, எப்போதாவது நீங்கள்தான் என் மனைவி என்பது தெரிய வந்தால் அசிங்கமாக இருக்குமே?” என்று மெதுவாகத் தலை உயர்த்திப் பதில் சொன்னவன் அவள் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையின் கனலைத் தாங்க மாட்டாதவன் போன்று உடனே கண்களைத் தாழ்த்தினான்.

       “உங்கள் சக மாணவர்கள் எல்லாரும் கலைப்பார்வை கொண்டவர்கள் என்று அன்று கட்டுரை எழுதினீர்களே!”

       “வேறு என்ன எழுதுவது? நான் கலைப் பார்வை கொண்டவன் என்பது உண்மை. ஆனால், மற்றவர்க்கெல்லம் அந்தப் பார்வை இருந்திருக்கும் என்பது என்ன நிச்சயம்?”

       அவள் கேலியும் ஆத்திரமும் மிக்க புன்னகையுடன் எழுந்துவிட்டாள்.

       “அப்படியானால், நீங்கள் மட்டும் யோக்கியன், மற்றவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படி இல்லை. தருமபுத்திரர் கண்களுக்கு எல்லாரும் நல்லவர்களாகவும், துரியோதனனுக்கு எல்லாரும் கெட்டவர்களாகவும் தெரிந்தார்களே, அந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. இதற்கு மேல் நான் உங்களை விமர்சிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்!” – இவ்வாறு வெடித்து விட்டு எழுந்த அவள் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

…….

Series Navigationப.தனஞ்ஜெயன் கவிதைகள்தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *