இந்த உலகம் எதற்காக இருக்கிறது. எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது. உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது. எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட எவருக்கும் தெரியவில்லை. துன்பத்திற்கு பரிசாக கனவுகளைத்தான் மதங்கள் அளிக்கிறது. எதைப் பெற யார் தகுதி படைத்தவர்கள் என்று எந்த சக்தி நிர்ணயிக்கிறது. முயற்சிக்காக கூலி பெற மரணம் வரை காத்திருக்க வேண்டுமா? உலகம் அதர்மத்தின் கைகளுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. சத்தியத்தை பின்பற்றி நடப்பவர்களுக்கு இவ்வுலகம் நரகமாகத்தான் தெரிகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் இறைத்தூதர் அனுப்பப்பட்டு இருக்கிறார் ஆனால் அவர் வார்த்தைகளை மக்கள் கேட்பதில்லை அலட்சியம் செய்கின்றனர். அவதாரங்கள் தர்மத்தைக் காக்க பூமியில் அவதரிக்கும் என்று நாம் நம்பிக்கொண்டிருப்பது வீண்வேலை. உண்மை வழியே நடப்பவர் சமூகத்திற்கு எதிரானவராகவே கருதப்படுகிறார். ஒருவன் சாவை பற்றி எண்ணாமல் இருக்கலாம் அதனால் விதியின் கைகளிலிருந்து அவன் தப்பிவிடுவானா?
நீங்கள் நிலைக்கண்ணாடி முன்பு நிற்கின்றீர்கள் பிம்பத்திற்கா தலைவாருகின்றீர்கள் உங்கள் தலையிலிருக்கும் கூந்தலைத்தானே வாரிக்கொள்கிறீர்கள். உங்கள் முன்வு இரண்டு வாய்ப்பு உள்ளது. ஒன்று சுவர்க்கம் இன்னொன்று நரகம். சுவர்க்கத்திற்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் புலன்கள் சாகவேண்டும் கடிவாளத்துடன் செல்லும் குதிரையைப் போலத்தான் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். நரகத்திற்கான பாதையில் கட்டுதிட்டங்களும் இல்லை சட்டவிதிமுறைகளும் இல்லை பயணத்தின் முடிவான எல்லை நரகம். இதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். பூசலாரின் மனக்கோயில் மாதிரி உள்ளத்தை ஆலயமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஈசன் எழுந்தருளுவான். அடியவர்களை தடுத்தாட்கொள்ள வேண்டியே ஈசன் திருவிளையாடல் புரிகிறான். பிட்டுக்கு மண் சுமந்தவனுக்கு விழுந்த பிரம்படி எல்லோருடைய முதுகிலும் விழுந்ததல்லவா? பிறப்பும் இறப்பும் நமது கையில் இல்லை. நாளை என்ன நடக்கும் என்று ஈசனைத் தவிர யாரரிவர். அன்பே சிவம் உலகை ஆளவேண்டுமென்றால் எல்லாவற்றையும் துறந்தாக வேண்டும். வாழ்வு யாருக்கும் ராஜபாட்டை விரிக்காது.
விதி உனது பிறப்பை நிர்ணயித்து இருக்கலாம். தேர்ந்தெடுக்கும் பாதை எத்தகையது என நீதான் தீர்மானிக்க வேண்டும். கடவுள் நாடினான் அதனால் பாபம் செய்தேன் என தவறுகளுக்கு இறைவனை துணைக்கு அழைக்கக் கூடாது. உன் மீது நம்பிக்கை வைத்து உன்னை பூமிக்கு அனுப்பினால் நீ கடவுளுக்கே துரோகம் செய்கிறாய். இறையச்சம் உள்ளவர்களின் எதிர்காலத்தை கடவுளே நிர்ணயிக்கிறான். ஒரு அடி கடவுளை நோக்கி நீ எடுத்து வைத்தால் அவன் நூறு அடிகளை உன்னை நோக்கி முன்னெடுத்து வைப்பான். எல்லா புனித நூல்களிலும் அதிக முறை இடம்பெற்றிருக்கும் வார்த்தை சத்தியம் என்பதாகத்தான் இருக்கும். வாழ்க்கை நெறிகளை நீயே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மழைக்கு யாராவது வாய்க்கால்கள் வெட்டுகிறார்களா? இல்லை பறவைகளுக்கு வழிகாட்டுவதற்காக கலங்கரை விளக்கம் எழுப்புகிறார்களா?
உலகத்தில் நீதியும், அநீதியும் சமபலம் கொண்டதாக இப்போது இல்லை. அதர்மம் தர்மத்தை என்றோ விலைபேசி வாங்கிவிட்டது. ஒட்டுமொத்த உலகமும் நீதிக்கு புறம்பாகவே நிற்கிறது. எல்லாம் நம் விதி தலையெழுத்து என்று போய்விட முடியவில்லை. மதங்கள் கடவுளை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்கின்றன. எங்கோ எப்போதோ ஒருவர் ஞானம் பெற்றார் என புத்தகத்தில் படிப்பதால் நமக்கென்ன பயன். அவரால் முடிந்ததென்றால் உலகுக்கு ஒளி கொடுக்கும் ஞானவானாக உன்னால் முடியாதா? கிணற்றுத் தவளையாக பிற மதங்களை ஏசுகிறோமே பிற மதங்களின் அடிப்படையை நாம் ஆராய்ந்து பார்த்தோமா? மதங்களை ஆராய்ந்தால் தானே கடவுள் உருவமுள்ளவரா உருவமற்றவரா என உணர்ந்து கொள்ள முடியும். கடவுள் மகத்தானவன் என்றால் அவன் படைத்த உலகம் பரிபூரணமாக முழுமையடைந்ததாக ஏன் இல்லை? உலக மக்கள் உலகத்தையே கோயிலாக கருதினார்கள் என்றால் ஏன் பாபம் செய்கிறார்கள். வியாபாரத்திற்கு பொய் அவசியம் என்று ஏன் நினைக்கிறார்கள்?
மனித இனம் பூமியில் ஐம்பதாயிரம் வருடங்களைக் கடந்து வாழ்ந்து வருகிறது. இன்னும் மரணமென்றால் இதுதானென்று ஒரு முற்றுமுடிவுக்கு அவர்களால் வர முடியவில்லை. இதுதான் இயற்கையின் சதுரங்க ஆட்டம் எல்லா ஆட்டத்திலும் வெற்றியை உனக்கு அளித்துவிட்டு கடைசியாக மரணத்தில் கைவைத்துப் பார்க்கிறது. இறுதி வெற்றி எனக்குத்தான் என்று எக்காளமிடுகிறது. உலகை வென்றவனாகக் கூட இருக்கலாம் உயிர் போனால் பிணம் தானே. ஆதாம், ஏதாம் என்று சொல்கிறார்களே இவர்கள் என்ன ஐம்பதாயிரம் ஆண்டுகளாகவா உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வது எத்தனை ஆண்டுகள் என்பது பெரிதல்ல எப்படி வாழ்ந்தாய் என்று தான் பார்க்க வேண்டும். உனது வாழ்க்கை நாளைய வரலாறு ஆனதா ஊரார் உன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களா என்பதே முக்கியம். நாயோ, நரியோ வாழ்வது போல் நாம் வாழ்ந்து மடிவதில் என்ன இருக்கிறது. எதற்காக கடவுள் நமக்கு பகுத்தறிவு அளித்திருக்கிறான் வெறும் காமம் தான் வாழ்வெனில் ஏன் நாம் மனிதனாக உடலெடுக்க வேண்டும்.
உலகிலுள்ள எண்பத்து நான்கு உயிரினங்களில் ஏதோ ஒன்றாக பிறந்திருக்கலாமே. நமது முன்னேற்றம் என்பது அடுத்தும் மனிதனாக பிறப்பதிலோ வேறு உயிரினங்களாக பிறக்க நேர்வதிலோ இல்லை. மனித உயிர் பிறப்பறுக்க வேண்டும் அதுதான் மோட்சம் எல்லா புனித நூல்களும் அதைத்தான் பேசுகிறது. புலனின்பங்களிலேயே காலத்தை கழிப்பவன் அந்திம காலத்தில் புலம்புவதில் ஒரு பயனுமில்லை. விழித்துக்கொள் விழித்துக்கொள் என ஆன்மா சொல்கிறது அதை மனம் கேட்கிறதா? பருவங்கள் ஆறு வருடங்கள் பனிரெண்டு இப்படியாக உலக இயக்கம், உலக நியதி மாறாமல் நடந்து வருகிறது. மனிதனின் எண்ண அலைகள் தான் பூமியின் இயக்கத்தை ஸ்தம்பிக்கச் செய்கிறது. சாட்சிகள் இல்லாமல் எப்படி கொலை செய்யலாம் என்று தான் மனிதன் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். மாந்த்ரீகம் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு அந்தணன் வனத்தில் சிக்கிக்கொண்டான். வெளியேறும் வழி தெரியாமல் அங்குமிங்கும் அலைந்தான். கானகத்தின் நிசப்தம் அவனை பயமுறுத்தியது. எதிரே ஒரு ராட்சசியைக் கண்டான். அடுத்த கணத்தில் அவள் மறைய ஐந்து தலை நாகம் ஊர்ந்து சென்றது. பயத்தில் பின்னோக்கி கால் வைத்தபோது ஒரு குழியில் விழுந்தான். கண்கள் இருட்டுக்கு பழக்கப்பட்ட போது அங்கு மலைப்பாம்பு ஒன்றைக் கண்டான். பயத்தில் அவன் அலற குழியின் மேலே ஆறுதலையும் பன்னிரெண்டு கால்களும் கொண்ட யானை ஒன்று எட்டிப் பார்த்தது. அவன் நடுநடுங்கியபடி மரவேரை இறுகப்பற்றிக் கொண்டான். அம்மரவேரை எலிகள் கடித்துக் கொண்டிருந்தன அவைகள் வெள்ளையும் கருப்புமாக இருந்தன. மரத்தில் தேனடையைச் சுற்றி ஈக்கள் மொய்த்தன. அவன் தொங்கியபடியே நாக்கில் விழுந்த தேன் துளியை ருசித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் இன்னும் இன்னும் என்றது.
பேரரசனே வனம் தான் உலகம், வாழ்க்கையே காடு. நம்மை விரட்டும் நோய் நொடிகளே மிருகங்கள். எவரும் ஒதுக்கித் தள்ளும் முதுமையே அரக்கி. காலம் என்ற குரூபியே குழியில் தென்பட்ட பாம்பு வாஞ்சையே மரம். ஆறு பருவகாலங்கள் தான் யானையின் ஆறு தலைகள். பன்னிரெண்டு மாதங்கள் பன்னிரெண்டு கால்கள். பகலும், இரவும் தான் தான் கறுப்பு, வெள்ளை எலிகள். தேனே மாயையில் சிக்குண்டு புலன் இன்பத்திலேயே ஆழ்ந்திருக்கும் மனம். இதுதான் வாழ்க்கை. மன்னன் எதையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். காமம் தன்னை குரூடனாக்கிவிடக் கூடாது என்ற வைராக்கியம் வேண்டும். அறிவில் சிறந்த ஞானவானாக மன்னன் இருக்க வேண்டும். மக்களுக்கு தர்ம தேவதையாக அவனே விளங்க வேண்டும். இவைகளைக் கடைப்பிடித்தால் பேராசை விலகும். புகழ் சேரும். பேரின்பத்தை மனம் நாடும். இந்தக் கதை திருதராஷ்டிரனுக்கு நீதிதவறாத மகாத்மா விதுரர் சொன்னது.
ப.மதியழகன்
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
cell:9597332952
Whatsapp: 9384251845
- நிழல் பற்றிய சில குறிப்புகள்
- குருட்ஷேத்திரம் மகாபாரத தொடர் தொகுப்பாக அமேசானில்
- ஆண் வாரிசு
- பூமிக்கு அருகே வரும் நிரெஸ் விண்கல்லால் பாதிப்பு ஏற்படுமா?
- உரையாடல்
- ஞானவாபி
- குறும்படம் வெளியீடு
- குருட்ஷேத்திரம் 30(திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்ன சத்திரிய தர்மம்)
- கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்
- ஐந்து கவிதைகள்
- செட்டடக்கம் – ஒரு கடிதம்…ஒரு சொல்…
- குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்
- மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு
- ஹவாயில் நடந்த புரட்சியின் போது அரசகுடும்பத்திற்கு என்ன நடந்தது?