(கதை பிரசுரமான ஆண்டு14 juin 1887))
கி தெ மாப்பசான்
தமிழில் நா. கிருஷ்ணா
இரவென்றால் எனக்கு அப்படியொரு தாபம். ஒருவர் தன்னுடைய நாட்டை, அல்லது ஆசைநாயகியை ஆழமாகவும், இயல்பாகவும், தன்னை மீறிய மையலுடனும் நேசிப்பதுபோல எனக்கு இரவின்மீது தணியாத மோகம். மோகமெனில் எப்படி? கண்களைக்கொண்டு அதைக் காண்பது, மூக்கினைக்கொண்டு அதன் வாசத்தை நுகர்வது, காதுகளைக்கொண்டு அதனுடைய நிசப்தத்தைச் செவிமடுப்பது, உடலைக்கொண்டு அதன் அந்தகாரத்தை வருடுவதென்று, எனது புலன்கள் ஐந்தும் இரவை நேசிக்கின்றன. சூரிய ஒளி, நிரமலமான வானம், அனல் காற்று, பிரகாசமான அதிகாலை மென்காற்று என்கிற பேதங்களற்று பகற்பொழுதில் எல்லா நேரங்களிலும் வானம்பாடிகள் பாடும். மாறாக ஆந்தை இரவுப்பொழுதில் கருமைநிறப் புள்ளிபோல இருண்ட வெளியில் பறந்து செல்லும், இரவின் பிரம்மாண்டம் தரும் போதையில், இன்பத்தின் உச்சத்தில் எழுப்பும் அதன் அலறல் அதிர்வும் சோகமும் கொண்டது.
பகற் பொழுது எனக்கு சோர்வை மட்டுமின்றி எரிச்சலையும் அளிக்கிறது. அதன் இரைச்சலும் மூர்க்கமும் ஊரறிந்தவை. காலையில் மிகுந்த சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுகிறேன், ஆடை அணிவது அலுப்புடனேயே நடந்து முடிகிறது, வீட்டை விட்டு வெளியிற் செல்கிறபோது, துளியும் மகிழ்ச்சியில்லை. நாள் முழுக்க எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு அசைவும், பாவமும், வார்த்தைகள், சிந்தனைகளென்று ஒவ்வொன்றும் உடலை அழுத்துகிற பெரும் பாரத்தை அப்புறப்படுத்துவதுபோன்ற ஆயாசத்தை தருகின்றன.
ஆனால் சூரியன் மேற்கில் மறைகிறபோது, எனதுடல் முழுதுக்க விளங்கிக்கொள்ள இயலாததொரு மகிழ்ச்சி. ஒருவகையில் நான் துயில் களையும் நேரம் மட்டுமல்ல உயிர்ப்புடன் எழுந்து நடமாடும் நேரமும் அதுதான். மெள்ள மெள்ள இருட்டத் தொடங்க நான் முற்றிலும் வேறொருவன் என்கிற உணர்வை அடைகிறேன். அதாவது பகற்பொழுதைக் காட்டிலும் இளமையாகவும், வலிமையுடனும், கூடுதல் எச்சரிக்கையுடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். விண்ணிலிருந்து விழுந்த மென்மையும், அளவிற் பெரியதுமான இருளின் கனம் இரவுநேரத்தில் அதிகரிக்கிறது: கைக்குப் பிடிபடாத, ஊடுருவ முடியாத பேரலைபோல, நகரத்தை மூழ்கடிக்கிறது. அனைத்தையும் ஒளித்துவைப்பதோடு, வண்ணங்கள், வடிவங்களைத் துடைத்தழித்து, குடியிருப்புகளையும், உயிர் ஜீவன்களையும் நினைவுச்சின்னங்களையும் தொட்டுத் தழுவுகிறது.
இக்காட்சிகளால் என்னுள்ளும் மகிழ்சியோடு ஆந்தைபோல கூவவும், கூரைகளில் பூனைகள் போல் ஓடவும் ஆசை ; ஒருவித ஆவேசமும், உத்வேகமும் கலந்ததொரு காதல் விருப்பம் எனது நாடிநரம்புகளை முறுக்கேற்ற நடக்கிறேன், இரவு மூடிய புறநகர்பகுதிகள், பாரீஸ் நகரத்தை ஒட்டிய காடுகள் என்று அலைகிறேன், அதிலும் பின்னதில் எனது விலங்குச் சகோதரிகள் அவர்களை கள்ளத்தனமாக வேட்டையாடவந்த மனிதர்களென்று இருதரப்பினரின் நடமாட்டத்தையும் காதில் வாங்கமுடியும்.
ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தாலே மரணம். ஆனால் எனக்கு நேர்ந்ததை எப்படிச் சொல்வது? அப்படியே அதைத் தெரிவிக்க முடிந்தாலும், புரியும்படி கூற வேண்டுமில்லையா? எனக்கு அது போதாது, ஆம் இதற்குமேல் சொல்லப் போதாது, எனக்குத் தெரிந்த தெல்லாம், இப்படி அது இருந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பது. அவ்வளவுதான்.
எனவே நேற்று – நேற்றா? – ஆம், அநேகமாக, அதற்கு முன்பு, வேறொரு நாளில், வேறொரு மாதத்தில், வேறொரு வருடம் அப்படியெதுவும் நிகழவில்லை என்கிறபோது ஐய்யமின்றி நேற்றாகத்தான் இருக்கவேண்டும் – என்னால் உறுதிபடுத்த முடியவில்லை. பொழுது விடியவில்லை. கிழக்கில் உதிக்கவேண்டிய சூரியனும் இல்லை, ஆக நேற்றாகத்தான் இருக்கவேண்டும். எப்போதிலிருந்து இரவு நீடிக்கிறது? எப்போதிலிருந்து? … யார் சொல்வார்கள்? யார் அறிவார்?
அதனால் நேற்றிரவும் வழக்கம்போல இரவு உணவிற்குப் பிறகு வெளியே சென்றேன்.
வானிலை நன்றாக இருந்தது சற்று வெப்பத்துடன் இருந்தபோதிலும் மிகவும் இனிமையான காலநிலை. பெரிய வீதிகளை நோக்கி நடந்தபோது தலைக்குமேல், வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த கருமை நிற ஆறு, வீதிக் கூரைகளால் துண்டாடப் பட்டிருந்தன. ஓரிடத்தில் அந்த வளைந்து, உண்மையான ஆறுபோலவே அலைகளை உண்டாக்கி நட்சத்திரங்களை உருட்டி விளையாடியது.
கோள்கள் முதல் எரிவாயு விளக்குகள் வரை நிர்மலமான வானில் அனைத்தும் தெள்ளத் தெளிவாக இருந்தன. விண்ணிலும் சரி நகரத்திலும் சரி பிரகாசமாக தீ பிழம்புகள் போல் நட்சத்திரங்களும, விளக்குகளும் பிரகாசிக்க, இருளே ஒளிர்வதுபோல இருந்தது. கதிரவன் காயும் பகற்பொழுதுகளைக் காட்டிலும் ஒளிரும் இரவுகள் மகிழ்ச்சிக்குரியவை.
அகன்ற அந்த வீதியில், கஃபேக்களே பற்றி எரிவதுபோல ஜெகஜோதியாய் விளக்குகள்; சிலர் வாய் விட்டு சிரிக்கிறார்கள், வேறு சிலர் நுழைய விருப்பமில்லாதவர்கள்போல கடந்து செல்கிறார்கள், மற்றும் சிலர் மதுபானங்களையும் வேறு பானங்களையும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு நாடக அரங்கு. அதற்குள் சென்று, ஒரு சில நிமிடங்களைக் கழித்திருப்பேன். எந்த நாடக அரங்கு? ஏதோ ஒன்று. ஏன் நுழைந்தோம் என வருந்தும் அளவிற்கு அங்கே அப்படியொரு வெளிச்சம்: பொன்னிற பால்கனியின் வெறுப்பூட்டும் ஒளி, மிகப்பெரிய ஸ்படிக சரவிளக்கின் செயற்கை மின்னொளி, நுழைவாயில் விளக்கொளி, மற்றும் துயரூட்டக்கூடிய செப்பனிடபடாத அங்கிருந்த பிற வெளிச்சங்கள் மனதில் உண்டாக்கிய அதிர்ச்சியில், கசப்புடன் வெளியில் வந்தேன்.
தொடர்ந்து நடந்த நான் ஷாம்ஸ்-எலிஸே(1) பகுதிக்கு வந்து சேர்ந்தேன், அங்கும் இசை, பாடலென்று எப்போதும் கொண்டாட்டமாக இருக்கிற கஃபே-பார்களும் அருகிலிருந்த மரங்களின் இலைகள் தழைகளுங்கூட தீபிடித்தவைபோல் ஒளியூட்டப்பட்டிருந்தன. மஞ்சள் ஒளியில் அமிழ்ந்திருந்த செஸ்ட்நட் மரங்கள் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டவை போல பாஸ்போரெஸ் சாயலில் மினுங்கிக்கொண்டிருந்தன. கோள உருண்டைபோன்ற மின்சார விளக்குகள் சற்று மங்கலாக ஒளிரும் நிலவுகள் போலவும், விண்ணிலிருந்து விழுந்த திங்களின் முட்டைகள் போலவும், ஜீவனுள்ள இராட்சஸ முத்துகள்போலவும், இருந்தன. ஆனால் அவற்றின் உயர்குல தோற்றம், முத்துவெள்ளை நிறமென்கிற பெருமைமிகு அடையாளத்தின் கீழ் அசூயையான அழுக்கான வலைபோல வாயுவை வெளியேற்றுவதாலும், அங்கிருந்த வண்ணக் கண்ணாடிச் சரத்தினாலும் அவ்விடம் சோபையின்றி இருந்தது.
ஆர்க் தெ த்ரியோம்ஃப்(2) கீழ் நின்றேன், அங்கிருந்தபடி இருபக்கமும் தீக்கோடுகள்போல நீளும் தெருவிளக்குகள், நட்சத்திரங்களுடன் பாரீஸின் மையப்பகுதியை நோக்கிச் செல்லும் பிரம்மாண்டமான வீதியை சில நிமிடங்கள் நின்று இரசிக்கவேண்டும். தலைக்கு மேல் வானில் எதற்கென்று விளங்கிக் கொள்ளவியலாத வகையில் ,பெருவெளியில் இறைக்கபட்ட நட்சத்திரங்களால் உருவான வினோத வடிவங்கள் நம்மை கனவுகள், கற்பனைகளென்று அழைத்துச் செல்லும்.
பூலோஞ் காட்டிற்குள்(Bois de Boulogne) நுழைது, வெகுநேரம் எவ்வளவு நேரமென்று தெரியாது ஆனால் நீண்ட நேரம் அங்கிருந்தேன். உடலில் இதுவரை அனுபவித்திராததொரு நடுக்கம், திடீரென மனம் கடுமையான உணர்ச்சிக்கு ஆட்பட, வரம்பு மீறிய கற்பனைகள் கடைசியில் என்னைப் பித்தனாக்கி நிறுத்தின. .
பிறகு வெகுநேரம், ஆம் ! வெகுநேரம் நடந்து களைத்து, புறப்பட்ட இடத்திற்குத் திரும்ப வந்தேன்.
ஆர்க் தெ த்ரியோம்ஃப் பிற்கு திரும்ப வந்தபோது, நேரம் என்ன ? தெரியாது. பெருநகரம் உறங்கிக் கொண்டிருக்க, மேகங்கள், கனத்த பெரிய மேகங்கள் மெல்ல மெல்ல வானில் படர்ந்துகொண்டிருந்தன.
இம்முறை, ஏதோவொரு வித்தியாசமான சம்பவம் நிகழவிருப்பது உறுதியென எனது உள்மனம் எச்சரித்தது. குளிராகவும், காற்று பலமாகவும் வீச, இரவு, பிரியத்திற்குரிய எனது இரவு எனது இதயத்த்திற்குச் சுமையாகப் பட்டது. நீண்ட பெரிய வீதியில் மனிதர் நடமாட்டமில்லை. இரண்டே இரண்டு காவலர்கள், அரசு வாகனங்கள் நிறுத்தத்தின் அருகே உலாத்திக் கொண்டிருந்தனர். சாலையோரங்களில் வாயு விளக்குகுகள், எந்தநேரத்திலும் இறுதி மூச்சை விடாலாம் என்பதுபோல எரிந்துகொண்டிருந்ததால், அதிக வெளிச்சமில்லை. சந்தைக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் வரிசையாக சென்றன.
கேரட்டையும், நூல்கோலையும், முட்டைக்கோசையும் ஏற்றிச்செல்லும் வண்டிகள் மெதுவாகவே சென்றன. வண்டியோட்டிகள், உறங்கிக் கொண்டிருப்பதால், அவர்களைக் காணமுடியவில்லை. குதிரைகள், மரத்தாலான அப்பாதையில் சீராக அடியெடுத்துவைத்து முன்செல்லும் வண்டியைத் பின்தொடர்ந்து போகின்றன. ஒவ்வொரு முறையும் சாலை விளக்குகளைக் கடக்கிறபோதெல்லாம் கேரட்டுகள் சிவப்பு நிறத்திலும், நூல்கோல்கள் வெள்ளைவெளேரென்றும் , முட்டைகோசுகள் பச்சை நிறத்திலும் பிரகாசித்தன ; சிவப்பெனில் தீபோலவும், வெள்ளை யெனில் வெள்ளிபோலவும், பச்சையெனில் மரகதத்தையொத்த நிறத்திலும் அவ்வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன. அவைகளைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். ஆனால் ராயல் வீதிபக்கம் திரும்பி மறுபடியும் பெரியவீதிகளுள்ள பகுதியை வந்தடைந்தேன். அப்பகுதிச் சந்தடியின்றி இருந்தது. கஃபேக்கள் மூடப்பட்டுவிட்டன. தாமதப்பட்டவர்கள் மட்டும் வீடு திரும்பும் அவசரத்தில் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். சவத்தை ஒத்த ஜீவனற்ற இப்படியொரு பாரீஸ் நகரை நான் ஒரு போதும் கண்டதில்லை. சட்டைப் பையிலிருந்து கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை மணி இரண்டு.
ஏதோவொரு சக்தி உந்தித் தள்ள நடக்கவேண்டும் போலிருந்தது. எனவே பஸ்த்தி வரை நடந்தேன். அங்கே, ஜூலை நினைவுத்தூணையோ(3), அதன்மீது அமைக்கபட்ட பொன்ன்னிற தேவதூதன் உருவத்தையும் பிரித்துகாண முடியாதவகையில் இருள் வியாபித்திருந்தது, இதுவரை பார்வை ஊடுறுவ இயலாத அப்படியொரு இரவை நான் கண்டதில்லை. மிகப்பெரிய பருமனுடன் வளைந்த கூரைபோலிருந்த மேகங்கள், நட்சத்திரங்களைச் சூழ்ந்து அவற்றை பூமியில் புதைக்க முனையும் எண்ணத்துடன் கீழிறங்குவதுபோலிருந்தன.
காட்சியிலிருந்து விடுபட்டிருந்தேன். என்னைச் சுற்றி ஒருவரும் இல்லை. ஷத்தோ தோ(Château d’eau) என்கிற இடம். குடிபோதையில் இருந்த ஒருவன் என்மீது ஏறக்குறைய மோதுவதுபோல நெருங்கி பின்னர் மறைந்து போனான். சிறிது நேரம் அவனுடைய சீரற்ற மற்றும் சத்தமான காலடிகளை மட்டும் கேட்க முடிந்தது. ஃபொபூர் – மோன்மார்த்த்ரு( Faubourg -Montmartre) பகுதியை நெருங்கியபோது ஒரு குதிரை வண்டி என்னைக் கடந்து, சேன் (Seine) நதி திசை நோக்கிச் சென்றது. நான் வண்டிக்காரரை அழைத்தேன், பதில் இல்லை. பெண்ணொருத்தி ட்ரூஓ வீதி (rue Drouot)அருகே சுற்றிக்கொண்டிருந்தாள்: “ஐயா, கொஞ்சம் நில்லுங்களேன்”, என்றவளின் கை என் பக்கமாக நீள, அதைத் தவிர்ப்பதற்காக என் நடையை வேகப்படுத்தினேன். பிறகு எதுவுமில்லை. வோட்வீல்(Vaudeville) நாடக அரங்கிற்கு முன்பாக ஒருவர் சாலவத்தைத் துருவிக்கொண்டிருக்க, கையில் பிடித்திருந்த சிறிய விளக்கு தரைமட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தது. அவரிடம் : “ஏங்க மணி என்னன்னு சொல்லமுடியுமா?”, எனக் கேட்டேன்.
“எனக்கு எப்படித் தெரியும், எங்கிட்ட கடிகாரமா இருக்கு? » என உறுமும் தொனியில் அவர் பதிலிருந்தது.
திடீரென எரிவாயு விளக்குகள் அணைந்திருப்பதை கவனித்தேன். இன்னும் விடியவில்லை, இதுபோன்ற பருவகாலத்தில், எரிவாயுவை சிக்கனமாக உபயோகிக்கும் எண்ணத்துடன் முன்கூட்டியே அணைத்திருக்கிறார்கள். ஆனால், பகற்பொழுது வெகு தூரத்தில் இருந்தது, அத்தனைச் சீக்கிரம் விடியுமென்று தோன்றவில்லை.
– நல்லது சந்தை கூடும் இடத்திற்குப் போகலாம், அதாவது, கொஞ்சம் ஜீவனுடன் இருக்கும், என நினைத்தேன்.
தொடர்ந்து நடந்தேன். என்னை வழிநடத்தப் போதாமல், காட்டுக்குள் நடப்பது போல மெதுவாக நடந்தேன், தெருக்களை ஒரு வகையில் அடையாளம் கண்டும், எண்ணிக்கொண்டும் முன்னேறினேன்.
கிரெடி லியொன்னே (Credit Lyonnais) வங்கி முன்பாக நாயொன்று உறுமியது. கிராமோன் வீதி ( rue de Grammont) வழியாகத் திரும்பிய பிறகு எனக்குக் குழப்பம். சில நிமிட அலைச்சலுக்குப்பிறகு சுற்றிலும் இரும்புத் தண்டுகளில் வேலியிட்டிருந்த பங்குச் சந்தையை அடையாளம் கண்டேன். மொத்த பாரிஸ் நகரமும் அச்சுறுத்தும் வகையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆனாலும், வெகு தொலைவில் ஒரு குதிரை வண்டி, ஓடிக் கொண்டிருந்தது. அவ்வண்டி, ஒரு வேளை என்னைக் கடந்து சென்றிருக்கலாம். நான் தான் கவனத்திற்கொள்ளவில்லையென நினைக்கிறேன். அவ்வண்டியை எப்படியாவது பிடிக்கவேண்டுமென நினைத்து அவற்றின் சக்கரங்கள் போடும் சத்தத்தை குறிவைத்து, மனிதரின்றி, மரணத்தை நினைவூட்டும்வகையில் இருளில் மூழ்கியிருந்த தெருக்கள் வழியாக நடந்தேன்.
திரும்பவும் எங்கிருக்கிறேன் என்கிற குழப்பம். எரிவாயு விளக்குகளை அணைக்கவேண்டிய வேளையில் அணைக்காமல், முன்கூட்டியே அணைப்பதென்பது எவ்வளவு முட்டாள்தனம்! அவ்விடத்தில் நான் வேறொரு வழிப்போக்கரைச் சந்திக்கவில்லை, தங்கள் அலுவல் முடித்து தாமதாமாக வீடு திரும்புகிற மனிதர்களுமில்லை.வீதி வீதியாய் அலையும் மனிதருமில்லை, காதல்வயப்பட்ட பூனையின் சிணுங்கலுமில்லை. மொத்தத்தில் ஒன்றுமில்லை.
இரவு ரோந்து வரும் காவலர்கள் எங்குபோய்த் தொலைந்தார்கள்? “நான் உரத்தக்குரலில் கத்தினால் அவர்கள் வரக்கூடும்”, என எனக்குள் கூறிக்கொண்டேன். நான் கத்தி அழைத்தேன், எவ்விதப் பதிலுமில்லை. மறுபடியும் சத்தம் போட்டேன். அசாத்தியமான இரவு பலவீனமான என்குரலை நெரிக்க, எதிரொலிகள் ஏதுமின்றி ஜீவனை விட்ட என்குரல் காற்றில் கலந்தது. வேறுவழியின்றி “உதவி! உதவி ! உதவி ! எனக் கூவினேன்
கதியற்ற என் அழைப்பு கேட்பாரின்றி முடிந்தது. சரி நேரம் என்ன ? சட்டைப்பயிலிருந்த கடிகாரத்தைக் கையிலெடுத்தேன். மணிபார்க்க தீப்பெட்டி வேண்டும், என்னிடமில்லை. அதன் சிறிய விசைப்பொறியின் டிக்-டிக் ஓசையை இதற்கு முன் அறிந்திராத வினோதமான மகிழ்ச்சியுடன் காதில் வாங்கினேன், ஆக. நான் தனி மனிதனில்லை, உண்மையில் எல்லாமே புதிரானவைதான் ! இம்முறை ஒரு குருடனைபோல கையிலிருக்கிற பிரம்பைக்கொண்டு சுவர்களைத் தட்டியும் தடவியும், பொழுது புலர்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கடைசியில் தெரிகிறதா என்பதை அறிவதற்கு தலையை உயர்த்தி ஆகாயத்தைப் அவ்வப்போது பார்த்தவண்ணமும் நடக்கத் தொடங்கினேன். ஆனால் வான்வெளியோ இருண்டிருந்தது, கீழேயுள்ள நகரத்தைக் காட்டிலும் கூடுதலாக இருண்டிருந்தது.
தற்போது என்ன நேரமிருக்கும் ? நடந்து கொண்டிருந்தேன், எனக்கென்னவோ வெகுநேரமாக முடிவின்றி நான் நடந்துகொண்டிருப்பதாகப் பட்டது, அதை உறுதிபடுத்துவதுபோல எனது இடுப்பிற்கு கீழ் கால்கள் பலவீனப்பட்டிருந்தன, மூச்சுவாங்கியது, பசி, பசி அகோரப்பசி.
கண்ணிற்படும் முதல் கதவின் மணியை அழுத்துவதென முடிவெடுத்து, அதுபோலவே ஒருவீட்டின் பித்தளைக் குமிழை இழுத்தேன். உள்ளே மணியொலித்தது, ஆனால் அவ்வொலியைத்தவிர அந்த வீட்டில் வேறு ஜீவன்கள் இல்லாததுபோல ஓருணர்வு.
காத்திருந்தேன், பதிலில்லை. கதவும் திறக்கப்படவில்லை. திரும்பவும் பித்தளைக் குமிழை இழுத்தேன், காத்திருந்தேன்…ம் பதிலில்லை.
பயத்தில் அங்கு நிற்காமல் அடுத்த வீட்டைத் தேடி ஓடினேன். இருபது முறை தொடர்ச்சியாக அக்குடியிருப்பின் மணியை இழுத்து பாதுகாவலர் உறங்கும் இருள் நிறைந்த கூடத்தில் ஒலிக்கச் செய்தேன். அம்மனிதர் எழுந்திருக்கவில்லை. அங்கிருந்து வேறு குடியிருப்புக்குச் சென்றேன். எனது பலத்தைப் பிரயோகித்து அழைப்பு மணியின் குமிழ்களை அல்லது சிறு வளையங்களை இழுப்பது, பிடிவாதமாக அக்கதவுகள் திறக்கப்படாமலிருக்க கால்களால் கதவை உதைப்பது அல்லது கையிலிருக்கும் பிரம்பால கதவை அடிப்பதென்று ஒவ்வொரு வீட்டிலும் தொடர, சந்தைகூடும் இடத்தை அடைந்திருந்தேன். சந்தைகூடுமிடமும் நிசப்தமாக, நடமாட்டமின்றி, வண்டிகளின்றி,காய்கறிகள் அல்லது பூக்களின் குவியலின்றி வெறிசோடிக் கிடந்தது. சந்தைக்கூடம் வெறுமையாக, இயக்கமின்றி, கதியற்று பிணம்போல கிடக்கக் கண்டேன்.
ஒருவுத பயங்கரம் என்னைப் பீடித்திருப்பதைபோன்ற உணர்வு. என்ன நடந்தது ?கடவுளே என்னதான் நேர்ந்தது ?
நான் திரும்ப நடந்தேன். சரி நேரமென்ன ?ஆமாம், மணி என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில் எனக்கு அதை யார் சொல்லக்கூடும் ? என்ற கேள்வியும் மனதில் இருந்தது. நினைவுக் கூடங்களில் அல்லது மணிகூண்டுகளில் உள்ள எந்தவொரு கடிகாரமும் அதைத் தெரிவிப்பதாக இல்லை.
« கைக்கடிகாரத்தின் மேலிருக்கும் கண்ணாடியை எடுத்துவிட்டு முட்களை எனது விரல்களால் வருடிப் பார்க்கவேண்டும் », என நினைத்தேன். சட்டைப்பயிலிருந்து கடிகாரத்தை எடுத்துப்பார்க்க, அது ஓடவில்லை, நின்றிருந்த து. இல்லை,ஒன்றுமில்லை. நகரத்தில் எவித அதிர்வுமில்லை, எங்காவது சிறிது வெளிச்சம்.. ம் இல்லை, வெகுதொலைவில் எங்கேனும் குதிரை வாகனங்கள் ஓடும் சத்தம், ம் அதுவுமில்லை.
நதியோரம் நடந்தேன், பனிக்குரிய குளிர்ச்சி நீரிலிருந்து வெளிப்பட்டது. சேன் நதி ஓடுகிறதா, என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
எனக்குக் காரணம் தெரியவேண்டும். படிகட்டுகள் கண்ணிற்பட, இறங்கினேன். பாலத்தின் வளைவுகளின் கீழ், நதியின் நீரோட்டத்தில் நுரைத்துக்கொண்டு குமிழ்கள் …. மறுபடியும் படிகள்…மணல்…சேறு சகதியோடு பிறகு தண்ணீர் ….கையை நீரில் நனைத்தேன்…நதி ஓடுகிறது…ஆம் தேங்கிநிற்கவில்லை…சில்லென்று இருக்கிறது சிலுசிலுப்புடன் இருக்கிறது, சீதளம், குளிர்ச்சி….கிட்டத்தட்ட உறைந்த நிலையில்…வீரியத்தைத் தொலைத்து… பிணம்போல சேன் நதி.
திரும்பவும், பழைய நிலைக்குத்திரும்பப் போதுமான பலம் எனக்கு ஒருபோதும் கிடைக்காதென்பது உறுதி. நானும் சாகப்போகிறேன், பசி, களைப்பு, கடுங்குளிரென உயிரைத் துறக்கக் காரணங்கள் இருக்கின்றன.
——————————————————————————————————————
- அவென்யூ தெ ஷாம்ஸ் – எலிஸே(Avenue des Champs-Élysées) அல்லது சுருக்கமாக Champs-Élysées, என்பது பாரிஸில் உள்ள உலகின் மிகவும் அழகான, ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நீளமுடைய சாலையாகும்.
- Arc de Triomphe என அழைக்கபட்ட போதிலும் அத முழுப்பெயர் ஆர்க் தெ த்ரியோம்ஃப் தெ எத்துவால்(Arc de Triomphe de l’Étoile). முதலாம் நெப்போலியன் I, Austerlitz யுத்தத்திற்கு மறுநாள் பிரெஞ்சு வீரர்களிடம் பேசியபோது, : “நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறபோது வெற்றி வளைவொன்றின் கீழ் செல்வீர்கள் ” என அறிவித்து அதன்படி ஆஸ்டர்லிஸ் யுத்தத்தில் ஆஸ்ட்ரியா, ரஷ்ய படைகளைத் தோற்கடித்து 1806 ல் தலைநகர் பாரீசில் கட்டப்பட்ட நினைவுச் சின்னமாகும்.
- ஜூலை நினைவுத்தூண் (La colonne de juillet)என்பது 1830 இல் நிகழ்ந்த ஜூலை புரட்சியின் மூன்று நாட்களின் நினைவாக 1835 மற்றும் 1840 க்கு இடையில் பாரிஸில் உள்ள Place de la Bastille அமைக்கப்பட்ட தூண்..
_____________________________________________________________________________________________________
- இரவு
- காற்றுவெளி புரட்டாதி (2022) மின்னிதழ்
- ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின?
- மாட்டுப் பிரச்சனை
- “ஜெயபாஸ்கரன் கவிதைகள்” -ஆய்வு-அணிந்துரை
- மெல்லச் சிரித்தாள்
- தொலைந்து போன சிரிப்புகள்
- சலனமின்றி அப்படியே….
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்
- சிவப்புச்சட்டை….
- நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022
- மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு
- 2022 ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் கருதுகிறேன் – எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்
- தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்