பத்தினி மாதா

This entry is part 6 of 13 in the series 30 அக்டோபர் 2022

 

 

                                        கி தெ மொப்பசான்

                                        தமிழில் நா. கிருஷ்ணா

அவள் இறப்பு வேதனையின்றி, அமைதியாக, எவ்வித பழிச்சொல்லுக்கும் ஆகாத பெண்மணி ஒருவரின் இறுதிக் கணம்போல முடிந்திருந்தது. இதுவரை காணாத பெரும் அமைதியை முகத்தில் தேக்கி, இறப்பதற்கு பத்து நிமிடங்களுக்குமுன்புதான் மறுபடியும் நீராடி, தலைவாரியதைப்போல, நீண்ட நரைத்த தலைமுடியும், மூடியக் கண்களுமாக, முதுகுப்பக்கம் ஓய்வெடுப்பதுபோல கட்டிலில் படுத்திருந்தாள். பெண்மணியின் ஒட்டுமொத்த வெளிரிய உடலில்  அனைத்திற்கும் அடைக்கலம் தந்ததைப்போலவே, துறக்கவும் முடிந்ததின் அமைதியான சாயல். அதைக்கண்ணுற்றதும்: எத்தகைய இனிய உயிர் பெண்மணியின் உடலில் குடியிருந்திருக்கும், எத்தகைய  சிக்கலற்ற ‘ இருத்தல்’ மூதாட்டியை இதுபோன்றதொரு அமைதிக்கு வழிநடத்தி இருக்கவேண்டும், அறிவில் முதிர்ந்த இப்பெண்மணி எத்தகைய குறைகளும் சஞ்சலங்களுமற்ற வாழ்க்கையைப் பெற்றிருக்கவேண்டும் என்பதுபோன்ற எண்ணங்கள் வரிசையாக மனதில் எழுந்தன.

இறந்த உடலின் அருகே  மண்டியிட்டவண்ணம் இருப்பவர்களில் முதலாவது நபர்,  நெறிமுறைகளை கடைபிடிப்பதில் உருதியாக இருக்கிற மாஜிஸ்ட்ரேட்டான மகன், அடுத்தது கிறித்துவ சமயத்தில் « சகோதரி ஏலாலி » என பாசமுடன் அழைக்கப்படுகிற மகள் மார்கெரித். மகன் மகள் -இருவருமே உரத்தகுரலில் அழுதுக் கொண்டிருந்தனர்.  குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகள் இருவரையும் கடுமையான ஒழுக்கநெறிகளின் கீழ் இறந்தப் பெண்மணி வளர்த்திருந்தாள். எவ்வித பலவீனத்திற்கும் இடம்தராதவகையில் சமயநெறிகளையும் அதுபோலவே  சமரசத்திற்கும் இடமளிக்காத கடமையுணர்வையும் தன் பிள்ளைகளுக்கு இறந்தவர் அளித்திருந்தார். விளைவாகப் இறந்த பெண்மணியின் மகன், மாஜிஸ்ட்ரேட்டாக எப்போது  பதவியேற்றாரோ, அக்கணமே சட்டத்த்தின் பேரால் நலிந்தவர்களையும் எளியவர்களையும் இம்மியும் கருணையின்றி  தண்டித்திருக்கிறார்; மகளோ,  எளிமை இறைநம்பிக்கை என்கிற குடும்பச்சூழலில் வளர்ந்து நற்பண்பில் தோய்ந்தவள்,  எனவே ஒட்டுமொத்த ஆணினத்தையும் வெறுத்து இறைதூதரையே மணாளனாக வரித்துக்கொண்டவள்.

தந்தையைக்  குறித்து பிள்ளைகளிடம் போதுமான தகவல்களில்லை.   தந்தையால் தங்கள் தாய்க்கு சங்கடங்களன்றி சந்தோஷமில்லை என்பதுமட்டும் அரசல் புரசலாகத் தெரியும். ஆனால் அதுகுறித்த கூடுதல் விபரங்கள்  அவர்களிடமில்லை.

கன்னியாஸ்திரியான மகள், இறந்த மூதாட்டியின் கட்டிலருகே தொங்கிக்கொண்டிருந்தக் கையை வெறித்தனமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். பிணத்தின் மறுபக்கம் இன்னமும் கசங்கிய படுக்கை விரிப்பினைக் கோர்த்து பிடித்த பாவனையில் இறந்த தாயின் மற்றொரு கை. அதன் பிடியில், பெண்மணியின் உடல் நிரந்தரமாக செயலிழப்பதற்கு முந்தைய இறுதிஅசைவுகளின் சாட்சியம்போல கட்டில் விரிப்பின் மடிப்புகள் இருந்தன. எனவே விரிப்பில் கண்ட மடிப்புகளை மரணத்தறுவாயின் மடிப்புகள் என நாம் கருதமுடியும்.

கதவை மெல்லத் தட்டும் சத்தம்கேட்டு, விம்மிக்கொண்டிருந்த இருவர் தலைகளும் நிமிர்ந்தன. இரவு உணவை முடித்திருந்த பங்குத் தந்தை திரும்ப வந்திருந்தார். குடியும் செரிமானக் களைப்பும் சேர்ந்துகொள்ள முகமும் சிவந்து அவருக்கு மூச்சிரைத்தது, காரணம் கடந்த சில இரவுகளின் களைப்பிலிருந்து மீளவும், நித்திரையின்றி கழியவிருக்கும் அன்றைய இரவை எதிர்கொள்ளவும் காப்பியுடன் பிராந்தியைக் கலந்து குடித்திருந்தார். 

அவர் முகத்தில் சோகம் தெரிந்தது, அதாவது பொய்யான சோகம். உண்மையில் மனிதர் மரணம் திருச்சபை பிரதிநிதிக்கு ஒருவகையில் ஜீவனப் பிழைப்பு. வழக்கம்போல சிலுவைக்குறியைப் போட்டபடி, தொழில் முறை சமிக்கைகளுடன் இறந்த பெண்மணியின் பிள்ளைகளை நெருங்கி: « தாயை இழந்து, நிர்கதியிலிருக்கும் என் குழந்தைகளே! இத்தருணம் மிகவும் கடினமானது, இதனை நீங்கள் கடந்துசெல்ல வேண்டும், அதற்கு உதவவே நான் வந்துள்ளேன். » எனத் தெரிவித்தார். கன்னியாஸ்த்ரீயான சகோதரி ஏலாலி மறுநொடி எழுந்து நின்று: « நன்றி, தந்தையே ! நானும் என் சகோதரனும், எங்கள் தாய் அருகில் சற்றுத்  தனியாக இருக்க விரும்புகிறோம். இப்படியொரு தருணம் எங்களுக்கு இனி வாய்க்கவும் வாய்க்காது. முன்பு போல, மூவருமாக மீண்டும் நாங்கள் சேர்ந்திருக்க வேண்டும், அதாவது  நாங்கள்.. நாங்கள்..சிறுவயதில் கூடியிருந்தைப்போல. எங்கள் தாய் ஒர் அப்பிராணி பெண்மணி..  ». சொல்லவந்ததை அருட்சகோதரியான மகள் முடிக்கவில்லை, கண்ணீர் பெருகெடுத்து வழிந்தது, வேதனையின் பாரம் இதயத்தை அழுத்த மூச்சுவாங்கினாள்.

போதகருக்கு, தானும் உறங்கச் செல்ல ஒருவாய்ப்பு என்பதை உணர்ந்தவர்போல பிள்ளைகள் திசையில் குனிந்து : « உங்கள்  விருப்பப்படி ஆகட்டும்  குழந்தைகளே! » என்றார். பின்னர் மண்டியிட்டு சிலுவைக் குறியைப் சமிக்கையாகப் போட்டுக்கொண்டார், பிரார்த்தனை செய்தார், எழுந்து அமைதியாக வெளியேறியபோது: « அவள் ஒரு புனிதமான பெண்மணி » என அவர் வாய் முணுமுணுத்தது.

இறந்த பெண்ணும் அவளது இரு பிள்ளைகளும் தனித்து விடப்பட்டனர். எங்கிருந்தோ ஒரு கடிகாரத்திலிருந்து பெண்டுலத்தின் வழக்கமான சிறிய ஒலி இருளில் வந்துவிழுந்தது; திறந்த ஜன்னல் வழியாக வைக்கோல் மற்றும் மரத்தின் மென்மையான மணம் தளர்ந்த நிலவொளியோடு கலந்திருந்தது. தவளைகளிடும் சத்தமும் சிற்சில சமயங்களில் நள்ளிரவு  வண்டுகள் எழுப்பும் ஒலியும் பந்துபோல உள்ளே நுழைந்து சுவரில் எப்போதாவது மோதும், அதுவன்றி அக்கிராமப்புறத்தில் வேறு ஒலிகளில்லை.  எல்லையற்ற அமைதியும், இறைநம்பிக்கையுடன் கூடிய துயரமும், தெய்வீகமானதொரு சாந்தமும் இறந்த பெண்மணியைச் சூழ்வதும் பின்னர் அவளிடமிருந்து வெளியேறி எங்கும் பரவி ஆறுதலை இயற்கைக்கும் தெரிவித்துக் கொண்டிருந்தன.

மாஜிஸ்ட்ரேட் மகனோ முழந்தாளிட்டவாறு, முகத்தை இறந்த பெண்மணியின் படுக்கை விரிப்பில் புதைத்து, இதயத்தை பிளக்கும் வகையில் அதே வேளை உயிர்ப்பற்ற குரலில் போர்வையிலும் கட்டில் விரிப்பிலுமாக : “அம்மா, அம்மா.. !” எனக் கதறி அழுதார். அவருடைய சகோதரியோ தரையில் விழுந்து, தரையை அலங்கரித்திருந்த மரப்பலகைளில் நெற்றியை வெறித்தனமாக மோதிக்கொண்டு, வலிப்பு கண்டவள்போல துடித்தும், மயங்கியும், விழித்தும், வெடவெடத்தும்:” கர்த்தரே!… சேசுவே! அம்மா! » எனப் புலம்பிக் கொண்டிருந்தார்.

வேதனைச்  சூறாவளியால் இருவர் உடலும் நடுங்க, மூச்சிரைத்தது. புயலுக்குபின் கடல், மழையுடன் அமைதிகாண்பதுபோல நெருக்கடி தணிந்து, இருவர் அழுகையும் நிதானத்திற்கு வந்தது, 

வெகுநேரமாக கண்ணீரில் மூழ்கியிருந்த மகனும் மகளும் எழுந்து நிற்க அவர்கள் பார்வைத் தங்கள் பிரியத்திற்குரிய சடலத்தின் மீது சென்றது. பின்னர் ஏதேதோ நினைவுகள், பழைய தொலைதூர நினைவுகள், நன்கு பரிச்சயமான, அந்தரங்கமான சின்ன சின்ன மறக்கப்பட்ட உண்மைபற்றிய நினைவுகள். எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்க ஜீவனுடன் திரும்பியவை, நேற்றுவரை மிகவும் இனித்து, இன்று வாட்டிவதைப்பவை. இனி ஒருபோதும் தங்களுடன் அவள் பேசப்போவதில்லை என்பதாலோ என்னவோ,  விதவிதமான தொனிகளுடன் கூடிய தாயின்  பேச்சையும், சிரிப்பையும், அவற்றின் சூழல்களையும் அவர்களால் ஞாபகப்படுத்த முடிந்தது. இறந்த பெண்மணியின் சாந்தமான சொரூபமும், மகிழ்ச்சியும் மட்டுமின்றி அவள் உபயோகித்த சொற்றொடர்களுங்கூட  நினைவுக்கு வந்தன. குறிப்பாக முக்கியமான பிரச்சனைகள் குறித்த உரைகளின்போது காலப்பிரமாணத்தை அளவிடுவதைப்போல சிலசமயங்களில் பெண்மணியின் கை மெல்ல அசைவதுண்டு, அதைக்கூட அவர்களால் நினைவுகூர முடிந்தது.

தங்களுடைய பரிதவிப்பை பிள்ளைகள் இருவரும் அளவிட முடிந்தது, எனவே தாங்கள் எந்த அளவிற்கு தங்கள் அன்னையை  நேசித்திருக்க வேண்டும் என்பதைப் விளங்கிக்கொண்டார்கள். அதுவன்றி  அவளுடைய மரணம் தங்களை அநாதைகளாக நிறுத்திவிடடதைப் போன்ற எண்ணமும் அவர்களிடம் ஏற்பட்டது. அனைத்தும் சேர்ந்துகொள்ள ஒருபோதும் தங்கள் தாயை இப்படி நேசித்தவர்களில்லை என்பதுபோன்ற உணர்வுக்கு அவர்கள் ஆளானார்கள்.  

அவள் அவர்களின் ஊன்றுகோலாவும், வழிகாட்டியாகவும் இருந்ததோடு அவர்களின் ஒட்டுமொத்த இளமைக்காலத்திற்கும், இருப்புமையின்  மகிழ்ச்சிக்குரிய அத்தியாயத்திற்கும் காரண்மானவள். அன்றியும் அவள் அவர்களுடைய உயிவாழ்க்கையின் பந்தம், மாதா,  அம்மா, அவர்களைப் படைத்த உடலுக்குச் சொந்தக்காரி, அவர்களை அவர்களுடைய முன்னோர்களுடன் பிணைக்கின்ற கண்ணி. அவள் மறைவால் அவைகளெல்லாம் இனியில்லை என்றாகிவிட்டன. தற்போது கதியற்றவர்கள், தனிமையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கடந்தவற்றைத் திரும்பிப்பார்க்கும் எண்ணம் அவர்களுக்குத் துளியுமில்லை.

கன்னியாஸ்திரீ திடீரென தன் சகோதரனிடம்: « அம்மா, எந்நேரமும் பழைய கடிதங்களை வாசித்துக் கொண்டிருப்பாள் என்பது உனக்குத் தெரியுமில்லையா; அவை அனைத்தும் அங்கே இழுப்பறையில்தான்  உள்ளன. தற்போது அவற்றை வாசித்துப் பார்க்க நல்லதொரு சந்தர்ப்பம், அதன்மூலம், அவள் வாழ்க்கையைத் திரும்பக் காணமுடியும்? அதனால் அவளுடைய தாயைப் பற்றிய தகவல்கள் தெரியவரலாம். தவிர அக்கடிதங்களில் சில நம்முடைய பாட்டன் பாட்டி எழுதியவையென்றும்  தெரிவித்திருக்கிறாள்,  ஞாபகம் இருக்கிறதா, வாசிதோமெனில் அவர்களைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ளமுடியும், என்ன சொல்கிறாய்? » எனக் கேட்டாள்.

இழுப்பறையில்  மஞ்சள்நிற பத்து காகிதக் கட்டுகள், கவனமுடன் நூல்கயிற்றால் கட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  கடந்தகால அச்சாட்சியங்களை இருவருமாக கட்டிலில் கொண்டுவந்து போட்டனர். அக்கட்டுகளில் ஒன்றில்  ” தந்தை” எனக் எழுதியிருக்க அதனைப் பிரித்து  படித்தார்கள். அக்கால குடும்ப மேசை இழுப்பறைகளில் காண்கிற பழைய லிகித வகைகள் அவை, சென்ற நூற்றாண்டின் வாசனை அக்கடிதங்களில்  இருந்தது. முதல் கடிதம் : “என் அன்பே”;  எனத் தொடங்கிற்று. மற்றொன்று: “சௌந்தர்யம் மிக்க இளம் பெண்ணே”  என்றது, வேறொன்று: ” என்னருமைக் குழந்தாய்” என அழைக்க;  இன்னொன்று: “ஆருயிர் பெண்ணே” என்றது.  திடீரென்று கன்னியாஸ்திரி இறந்தவளின் கதையை, இனிமையான அவளுடைய  நினைவுகளை அவளிடம் சொல்வதுபோல சத்தமாக வாசிக்க ஆரம்பித்தாள். அவளுடைய சகோதரரான  மாஜிஸ்ட்ரேட்டோ படுக்கையில்  முழங்கையை ஊன்றி, தங்கை  வாசிப்பதை காதில் வாங்கினார், கண்களிரண்டும் தாய் மீதிருந்தன. அசைவின்றிக் கட்டிலில் கிடந்த  சடலம் மகிழ்ச்சியில் திளைப்பது போலிருந்தது.

 

வாசித்துக்கொண்டிருந்த சகோதரி இடையில் அதை நிறுத்தினாள், தன்னுடைய சகோதரரான மாஜிஸ்ட்ரேட்டிடம் : ” இக்கடிதங்களையும் அவளோடு சேர்த்து அடக்கம் செய்யவேண்டும் என நினைக்கிறேன். அதாவது இவற்றை சவப்போர்வைபோல உபயோகித்து உடலை மூடி கல்லறையில் வைக்க வேண்டும்” என்றாள்.  பிறகு மற்றொரு காகிதக் கட்டை எடுத்தாள், அதில் வெளிப்படையான குறியீடாக  எதுவும் எழுதியிருக்கவில்லை. குரலை உரத்தி மீண்டும் வாசிக்கத் தொடங்கினாள்: “என் போற்றுதலுக்கு உரியவளே!  உன்னை வெறித்தனமாக நேசிக்கிறேன்.  நேற்றிலிருந்து உன் ஞாபகம் காரணமாக நரகத்தில் தள்ளப்பட்ட ஜீவனாக வாடுகிறேன். என் உதடுகளின் கீழ் உன் உதடுகளும், என் கண்களின் கீழ் உன் விழிகளும், என் உடலின்  கீழ் உன் உடலும் இருப்பதைபோல  உணர்வு. அன்பே உன்னை நான் நேசிக்கிறேன்!  உன்னைக்  காதலிக்கிறேன் ! என்னை நீ பைத்தியமாக்கி விட்டாய். உன்னைத் தழுவும் ஆவலில் என் கைகள் காத்திருக்கின்றன. உன்னைத் திரும்ப என்னுடையவளாக காணும்  அபரிமிதமான ஆசையில் நெடுமூச்செறிகிறேன். எனது மொத்த உடலும்  உன்னை விரும்புகிறது, உன்னை வேண்டுகிறது. என் இதழ்களில் உன்னுடைய முத்தங்களின் சுவையை தக்கவைத்திருக்கிறேன்…”

கட்டிலில் முழங்கையை மடித்து சாய்ந்திருந்த மாஜிஸ்திரேட் நிமிர்ந்து உட்கார்ந்தார். கன்னியாஸ்திரி வாசிப்பதை நிறுத்தினார்.  வாசித்துக்கொண்டிருந்த கடிதத்தை தன் சகோதரியிடமிருந்துப் பறித்து கையொப்பம் இட்டிருப்பது யாரென்று பார்த்தார், அப்படி  எதுவும் இல்லை, பதிலாக.  “உன்னை ஆராதிப்பவன்” என்கிற வார்த்தைகளின் கீழ் ,  “ஹாரி” என்றிருந்தது. இவர்களின் தந்தை பெயர் “ரெனே”. எனவே கடிதம் அவருடையது  இல்லை. புரிந்துகொண்ட மகன் அக்கடிதக் கட்டிலிருந்து சட்டென்று வேறொன்றை எடுத்து வாசித்தார்: ” உன்னுடைய தழுவல்களின்றி என்னால் ஒரு கணம் உயிர் வாழ முடியாது”  என்றிருந்தது. மகன் எழுந்துகொண்டார். நீதிமன்றத்தில் இருப்பதைபோன்ற உணர்வுடன் எதிரே கட்டிலில் அமைதியாகக் கிடத்த சவத்தைப் பார்த்தார். கன்னியாஸ்த்ரீயோ நீர் கோர்த்த விழிகளுடன், தனது சகோதரனின் அடுத்தக் கட்ட செயலுக்கென காத்திருந்தாள். அவர் மெதுவாக அறையைக் கடந்து, ஜன்னலை நெருங்கினார். பார்வையை இரளில் தொலைத்து யோசனையில் ஆழ்ந்தார்.

அவன் திரும்பிப் பார்த்தபோது, ​​ சகோதரி ஏலாலியின் விழிகளில் கண்ணீரின் சுவடுகளில்லை, தாயின் கட்டிலருகே தலை குனிந்து நின்றிருந்தாள்.

மகன் தாயுடல் இருந்த படுக்கையை நெருங்கி அக்கடிதங்களைத் திரட்டி  மேசையின் இழுப்பறையில் எறிந்துவிட்டுத் திரும்பினார், பின்னர், கட்டிலின் திரைத் துணிகளை இழுத்து மூடினார்.

பொழுது புலர்ந்திருந்தது, பகல் மேசையின் மீது காத்திருந்த மெழுகுவர்த்திகளின் வீரியத்தைக் குறைத்திருக்க, ​​​​மகன் மெதுவாக தமது நாற்காலியிலிருந்து எழுந்தார், அவரால் குற்றவாளியெனத் தீர்மானித்து தண்டிக்கப்பட்ட,  தன்னையும் தன் சகோதரியையும் பிரிந்து சென்ற, தாயின் உடலை திரும்ப ஒருமுறை காண விரும்பாமல்,  சகோதரியிடம் அமைதியாக: ”  அவளை நினைப்பில் உறக்கமின்றி இரவெல்லாம் விழித்திருந்தது அதிகம்னு தோணுது, சற்று நிம்மதியா ஓய்வெடுப்போம், வெளியில் வா! ”  எஎன்றார்.

———————————————————————————————–

Series Navigationகாலம் மாறலாம்..கவிதைத் தொகுப்பு நூல்கள்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *