துபாய் முருங்கை

This entry is part 14 of 14 in the series 20 நவம்பர் 2022

சுப்ரபாரதி மணியன்


கை நிறைய தீபா முருங்கைக்கீரையைப் பறித்துக் கொண்டு நின்றது அவளும் அதனுடன் ஒன்றி போய் விட்டது போல் இருந்தது .ஒரு சிறு இலையாகி விட்டாள். ஒல்லியாக உருவம் சிறுத்திருந்தது.
“என்ன இவ்வளவு ‘
“ இன்னைக்கு பொறியில் இதுதான். தினமும் மட்டன் ,மீன் போட்டு அலுத்துப் போச்சு .அதுதான “
“தேவையான அளவு எல்லாம் கிடைச்சதா “
பூங்காவில் நடைபயிற்சியை முடித்திருந்தார்கள் .நடை பயணப் பாதையில் ஸ்டார்ட் என்று எழுதப்பட்டு ஓர் இடம் இருந்தது. அப்படி என்றால் பினிஷ் என்ற ஓர் இடமும் இருக்கும் அல்லவா
“ அதுவும் இருக்கும் பெரியம்மா.”
“ அது ரெணடுக்கும் இடையில எவ்வளவு தூரம் ”
“முக்கால் கிலோமீட்டர் ”
“அப்போ நீ காலையில தினமும் மூணு கிலோமீட்டர் .நடக்கிறியா”
“நாலு .சுத்து சுத்தறேன். ஆமா…. ஆமா மூணு கிலோ மீட்டர் இருக்கும் “ மல்லிக்கு மார்பின் மீது துணி ஒன்றை கூட போட்டுக் கொள்ளாமல் இப்படி நடப்பது சிரமமாகத்தான் இருந்தது அப்படித்தான் பெண்கள் அந்தப் பூங்காவில் நடந்து கொண்டிருந்தார்கள். மேல் மாராப்பு எதுவும் போடவில்லை. முழங்கையில் முக கவசத்தை மாற்றியிருந்தார்கள். மார்பை மூடாதத் துணிகள் முழங்கையை மூடியது போல் அது இருந்தது. வெளிநாட்டுக்காரப் பெண்கள் மார்பு பிளவுத் தெரியத்தான் நடந்து கொண்டிருந்தார்கள் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் என்று.சிலர் காதுகளில் மின் இணைப்பிலான சாதனங்களைச் செருகி இருந்தார்கள் அவர்களில் பருத்த தொடைகள் வேகத்திற்கு ஈடு கொடுத்து கால்கள் இயங்கிக்.கொண்டிருந்தன .கராத்தே பயிற்சி போல் கை கால்களை வீசி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணும் மார்புப் பிளவு வெளித்தெரிவது பற்றி அக்கறை படாமல் தான் இருந்தாள். அவளின் பயிற்சியாளர். நடுத்தர வயது வெள்ளைத்தோல் ஆள் .தலை.மயிர் கருத்து தான் இருந்தது . அவர் மார்பு பிளவில் அக்கறை கொள்ளவில்லை
மல்லிக்கு பெரிய வட்டத்தில் நான்கு முறை தீபாவைப் போல் சுற்றுவது சிரமமாகத்தான் இருந்தது .அவள் வயது அப்படி. ஒரு வெளி சுற்று அப்புறம் இன்னொரு முறை சுற்றி இன்னொரு சிறு வட்டம் என்று சுற்றிக் கொள்கிறாள். இந்தியாவிலிருந்து .இங்கு வந்து பத்து நாட்களாய் அப்படித்தான்.
“ மூன்று கிலோமீட்டர் .நமக்கு சிரமம் ”
தீபாவளியை முன்னிட்டு இந்தியர் வீடுகள் என்று தெரிகிறமாதிரி .இருந்தவைகளில் விளக்கு அலங்காரங்கள் பளிச்சென்றுத் தெரிந்தன .
கடந்து போன சிறு குழந்தையை பார்த்துக் கையசைத்தாள். எந்த நாட்டுக்காரியோ.அக்குழந்தையை சக்கர வண்டியில் வைத்து நடத்திக் கொண்டிருந்த வயதான பெண்ணின் நடை அவ்வளவு பரிச்சயமில்லை .அவளின் பருத்த தொடைகள் ஒன்றுடன் ஒன்று உரசி நடக்க சிரமம் தந்தது போல் நடந்து கொண்டிருந்தாள். மல்லி கை அசைப்பதைப் பார்த்து முதியவள் வண்டியை நிறுத்தினாள். அவர்களுக்கான இடைவெளி இரண்டடி தான் இருந்தது முதியவள் குழந்தையின் வலது கையை பிடித்து அசைக்க செய்தாள் மல்லி முகம் மலர்ந்து சிரித்தாள். அவளின் முகத்தில் இருந்த சிறு கோடுகள் அந்த சிரிப்பில் மறைந்து போயின ,அவளின் மார்பில் இருந்து எழுந்த வலது கை அசைந்து மகிழ்ச்சியைக் காட்டியது
நேற்றைக்கு அப்படி சக்கர வண்டியில் குழந்தையை தள்ளிப் போய்க்கொண்டிருந்த இளம்பெண் வசம் இருந்த குழந்தையைப் பார்த்து கையசைத்தாள் குழந்தையும் எங்கோ பார்த்தபடி இருந்தது அந்தப் பெண்ணும் கண்டு கொள்ளவில்லை
“ அந்தப் பொண்ணு இந்தியரா இருக்கணும்”
“ எப்படி சொல்றீங்க பெரியம்மா ”
“ மரியாதை தந்து சிரிக்கணும். அது கூட அந்தப் பொண்ணுக்குத் தோணலே. பேபி சிட்டிங்க்காக வந்தவளாக இருப்பா “
”சரியா அடையாளம் கண்டுட்டே பெரியம்மா .ஆமா எனக்கு அறிமுகம் இருக்கு ”
மல்லி துபாய் வந்து பத்து நாட்கள் ஆகிறது . நேரம் என்றக் கணக்கில் ஒன்றரை மணிநேர இடைவெளி அவளுக்கு சிரமம் தருவதாக இருந்தது . எல்லா அட்டவணையையும் மாற்ற வேண்டியிருந்தது. காலையில் பத்து மணிக்கு டிபன் தருவாள் தீபா. இந்திய நேரம் பதினொன்றரை. பதினொன்றரை மணிக்கு எந்த காலத்தில் சாப்பிட்டிருக்கிறாள் சாப்பாடெல்லாம் ஒன்பது மணிக்கு முடித்து விடுவாள், இங்கு வந்த பின் நேரம் தெரியவில்லை. துபாய் நேரத்தினை வீட்டில் இருக்கும் சுவர்க்கடிகாரம் எப்போதும் காட்டிக்கொண்டிருந்தது.. அவளின் கைபேசியில் இந்திய நேரமே இருந்து கொண்டிருந்தது.
எப்போதும் இரவில் பத்து மணிக்கே தீபா கணவர் சாப்பிடும் பழக்கம். அப்படி என்றால் இந்திய இரவு நேரம் பதினொன்றரை மணி நேரம்..அல்லது ஒன்பது மணியா ; இதுவே பத்து நாளைக்கு பிறகு இந்தியா சென்றபின் பழக்கம் ஆகி விட்டால் என்னவாகும். நினைக்க பயமாகத்தான் இருந்தது. எல்லாம் தாறுமாறாகப் போகும். திசை மாற்றும் மாற்றங்கள்.
மல்லிக்கு கிளைகளை இழந்துவிட்டு மூளியாக பூங்காவில் இருக்கும் பேரீச்ச மரங்களைப் பார்க்கவும் பயம் ஏற்படுவது உண்டு.. துபாய் என்றால் பேரிச்சை மரங்கள் சாலைகளிலும் பேரிச்சம்பழம் கொட்டிக்கிடக்கும் என்று அவள் நினைத்திருந்தாள் அப்படி எதுவும் காணோம் .பாலைவனத்தில் அப்படி கொட்டிக்கிடக்கலாம் , அங்கு தண்ணீர் இல்லை அங்கு நன்றாக வளர்ந்தது இங்கு ஏன் இந்த சொட்டு நீரை உள்வாங்கி கொண்டு வந்து பேரீச்சம் பழங்களைக் கொட்டவில்லை. ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு ;பேரிச்சம்பழங்கள் அவள் இங்கு பார்த்த சூப்பர் மார்க்கெட்டுகளில் கொட்டிக் கிடக்கின்றன . விதவிதமானப் பாக்கெட்டுகளில். அவையெல்லாம் இந்த மரங்களின் அடியில் ஏன் கொட்டிக் கிடக்கவில்லை மல்லிக்கு ஆச்சரியமாக இருந்தது .தீபாவிடம் அவள் கேட்கவில்லை அவள் கேட்டு தெரிந்து கொள்ள நூற்றுக்கணக்கானவை இருந்தது. அதில் இதுவும் ஒன்று அந்த பேரிச்சை மரங்களையெல்லாம் வளர்கையில் கிளைகளை வெட்டி தள்ளி இருப்பார்களாம் .பக்கவாட்டில் அவை வளரவிடாமல் தடுத்து ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது போல் இருக்கிறதே அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள நூற்றுக்கணக்கான கேள்விகள் இன்னும் இருந்தன. பல கேள்விகளைக் கேட்கவும் செய்திருந்தாள்.
சிட்டுக்குருவிகள் அதிகமாகத்தான் அவள் நடைபயிற்சி போகும் பூங்காவில் காணப்படும். இந்தியாவில் இந்த சிட்டுக்குருவிகள் அதிகம் காணப்படுவதில்லை இப்போதெல்லாம்.. அவை எல்லாம் இங்கு வந்து விட்டதா.அக்குருவிகள் சற்றுப் பருத்து தான் காணப்படுகின்றன .புறாக்களும் காக்கைகளும் கூட அதிகமாக இருக்கின்றன பூங்காவில் எந்தக் குறையும் இல்லை அவை பறக்க, நடமாட என த் தனி காலி இடங்களும் இருந்தன அவை உட்கார்ந்து இளைப்பாற தனிமரங்களும் இருப்பது போல் நடனாடின. மரங்கள் தனி அழகுடன் இருந்தன.
இப்பகுதியில் நிறையப் பூங்காக்கள் இருந்தது ஆச்சரியமாக இருந்தது மல்லிக்கு .வெளிநாட்டினர் அதிகம் அங்கு இருப்பதால் அதிகப் பூங்காக்கள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள்.
தீபா திருமணம் செய்து கொண்டு வந்தபின் இந்த இரண்டு ஆண்டுகளில் பெரியம்மாவை வரச்சொல்லி பல முறை கேட்டுவிட்டாள் அதனால் மல்லி தனியாகத்தான் விமானம் ஏறி வந்தாள்
கொரானா சடங்குத் தளர்வு வந்தபின் கிளம்பிவிட்டாள். இரண்டாம் அலை ஓய்ந்தது. மூன்றாம் அலை பற்றிய பயங்களைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.பயணத்திற்கு நாற்பத்தெட்டு மணி நேரம் முன்பு ம் அவ்வப்போதுக் கிளப்பிக்கொண்டேயிருந்தார்கள் .
விமானப் பயணத்திற்கு முன் கொரானா பரிசோதனை எடுக்க வேண்டும் என்றார்கள் . நாற்பத்தெட்டு மணி மணி நேரத்தில் தீபாவளி வந்துவிடும் .பரிசோதனை செய்யும் சோதனைச் சாலைகளின் பட்டியலில் அரசு மருத்துவமனை இருந்தது ஆனால் அங்கு பரிசோதனை முடிவு சொல்ல குறைந்தது மூன்று நாட்களாகும் என்றார்கள்.அங்கும் பரிசோதனை முடிவுகள் பெற காசு கொடுத்துதான் ஆகவேண்டும் . அரசுப் பட்டியலில் இருந்த தனியார் பரிசோதனை நிலையம் ஒன்றுக்குச் சென்று விசாரித்தாள். தீபாவளியை முன்னிட்டு விடுமுறை என்றார்கள்.முடியாவிட்டால் கோவைக்கு தான் செல்ல வேண்டும் .தனியார் மருத்துவமனைகளில் பனிரெண்டு மணி நேரத்தில் தருகிறார்கள் அரசாங்க மருத்துவமனைக்கு சென்றால் மூன்று நாட்கள் என்பது எப்படி,, அங்கு விசேஷமான கருவிகள் இல்லையா ஏன் தாமதம் செய்கிறார்கள் என்பது அவளுக்குச் சங்கடமாக இருந்தது. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் அவளுக்கு பரிசோதனை முடிவு தெரியவில்லை என்றால் அவள் தவித்துப் போய் விடுவாள் என்பது தெரிந்தது இந்த த் தனியார் மருத்துவமனைகள் ,பரிசோதனை நிலையங்கள் பெரும் பணத்தைக் கறந்து விடுவார்கள் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அவள் வற்றிப் போன கறவை மாடுதான்.

வேறுவழியில்லாமல் வெங்கடாசலம் சொல்லி கருப்புப் பிள்ளையார் கோயிலில் விசாரித்தாள். எனக்கு வேற யார் இருக்காங்க நீ தான் கேட்டு சொல்லனும் என்றாள் மல்லி தனிக்கட்டை தான். .கணவன் நாற்பத்தைந்து
வயதில் குடித்து இறந்த பின்னால் அவளுக்கு வருகிற
இரண்டு வீடுகளின் வாடகை த் தொகையில் ஜீவித்து வந்தாள். வெங்கடாசலம் தான் எல்லாவற்றுக்கும் உதவி செய்வான். அப்படித்தான் பரிசோதனை குறித்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனிடம் சொன்னதால் அவனும் கோவையில் கேட்டு விட்டு சொன்னான்
” தீபாவளி அன்னைக்கு லேப் இருக்குமாமா… லீவ் நாள்னாலே… ஆனா டைமிங் இன்னும் முடிவு பண்ணல. பண்டிகை நாள். அதனாலே முழுசா இருக்காது. ஆனா இருக்கும் .இன்னும் நேரம் முடிவான முடிவு பண்ண பிறகு கேட்டு தெரிஞ்சுக்கோங்க”
” நாப்பத்தெட்டு மணி நேரத்துக்குள் டெஸ்ட் எடுக்கணும் அதுக்கு மேல போயிருச்சுனா பலசமயங்களில் ரிப்போர்ட் பிரயோஜனம் இல்லாம போயிடும் அதனால நாப்பத்தெட்டு மணி நேரத்துக்குள்ள எடுக்கிறது நல்லது ”
கோவை செல்ல வேண்டும் என்றால் தீபாவளியன்று மறுபடியும் வெங்கடாசலத்தை தொல்லை செய்ய வேண்டும் இல்லை என்றால் வேறு யாரையாவது கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் . தீபாவளி அன்றைக்கு அப்படி பயணம் வர யார்தான் விரும்புவார்கள். பலகாரமும் வெடியுமாய் பொழுதைக்கழிப்பார்கள். உள்ளூரிலும் தீபாவளி விடுமுறை குறித்து தீர்மானம் செய்ய முடியாது .அதனால் எதுவும் சொல்லவில்லை என்றார்கள் . மனசுக்குள் பட்டாசுகள் பயத்தில் வெடித்துக் கொண்டிருந்தன அவளுக்கு.
நல்லவேளை எழுபத்திரெண்டு மணி நேரம் இருக்கிறபோது திருப்பூர் தனியார் பரிசோதனை அலுவலகத்திற்குச் சென்று அவள் கேட்டாள். தீபாவளி அன்றைக்கு .லீவு ..இல்ல வாங்க எடுத்துக்கலாம் என்றார்கள் .ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்பது பெரிய தொகையாகத் தான் இருந்தது அப்படித்தான் தீபாவளிக்கு பெயருக்கு கொஞ்சம் தலையில் கொஞ்சம் எண்ணை வைத்துக் குளித்துவிட்டு பரிசோதனைக்காகப் போய் நின்றாள் . மூக்கில் குச்சியை விட்டு நோண்டி சாம்பிள் எடுத்துக் கொண்டார்கள் . அது மட்டும் போதவில்லை என்று வாயில் கூட உமிழ் நீர் சாம்பிள் எடுத்துக் கொண்டார்கள் மூக்கில் விட்டு நோண்டும் போது தான் அழுது விடுவாள். உடம்பு பதறிப்போய் விடும் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ..இரவு பனிரெண்டு மணிக்கு ரிப்போர்ட் கிடைக்கும் என்றார்கள். முதலில் கைபேசியில் வாட்ஸ் அப்பில் தகவல் வரும் என்றார்கள். வெங்கடாசலம் எண்ணைத்தான் அவள் கொடுத்திருந்தாள்
இரவு ஏழு மணிக்கு பிறகு அவளுக்கு பதட்டம் ஆகிவிட்டது. கொஞ்சம் எண்ணையை தலையில் வைத்து குளித்தது அப்புறம் காலை முதல் இதே நினைப்பாய் அலைச்சல் இருந்தது எல்லாம் சேர்ந்து தூக்கத்தைக் கொண்டு வந்துவிடும் என்பது போல் இருந்தது. ஆனால் தூக்கத்தை கட்டுப் படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் எட்டு மணிக்கு எதிர்த்த வீட்டில் இருந்து வெங்கடாசலம் பரபரப்பாக வந்தான்
“ ரிப்போர்ட் வந்து இருக்கு.. என்ன சொல்லுதுன்னு தெரியல. .கடைசியில பாசிட்டிவ் நெகட்டிவ் இரண்டு போட்டிருக்கிறார்கள் நமக்கு எது கரெக்ட்டுன்னு தெரியல ..பதட்டமா இருக்கு ”
“போன் பண்ணிப் பாருடா வெங்கடேசா .அந்த பெருமாள் காப்பாற்றட்டும். டிக்கெட் எடுத்தாச்சு விசா வந்துருச்சு. இத்தனை செலவு பண்ணியாச்சு இனிமேல ஏதாவது ஏடாகூடமா இருந்தா இந்த பணம் எல்லாம் வீண் தானா ஆனா அப்படி எதுவும் ஆயிடக்கூடாது அந்தப் பெருமாள் காப்பாற்றுவார்”
வெங்கடாசலம் பதட்டத்துடன் பரிசோதனை சாலைக்கு தொலைபேசி செய்தான் . பதிலில்லை. காலை வரைக்காத்திருக்க வேண்டும். ராத்திரி .முழுக்க மல்லிக்குத் தூக்கமில்லை.
காலையில் பத்துமணி எப்போது ஆகும் என்று காத்திருந்து கேட்டுக் கொண்டான்
“ நேத்துக் காலையில் வந்து டெஸ்ட் எடுத்தாங்க. மல்லி அந்த அம்மா டெஸ்ட் என்ன ன்னு புரியல. நல்லதுதானே”
“ நல்லதுதான் நெகட்டிவ் தான்.. ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை பாசிட்டிவ் அப்படின்னு சொன்னா தான் சிரமம்.. ஓகே உங்களுக்கு .ரிப்போர்ட் வேணும்ன்னா காலையில ஆபீஸ் வந்து பிரிண்ட் அவுட் வாங்கிக்கங்க” நல்ல வழியாக அவன் புலனத்தில் இருந்து அதை மின்னஞ்சலுக்கு அனுப்பி வீட்டிலேயே அந்த பரிசோதனை முடிவைப்பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடிந்தது என்பது ஆறுதலாக இருந்தது.
அவன் தான் டாக்சி பிடித்து கொண்டு வந்து விமானநிலையத்தில் இறக்கி விட்டுப் போனான் .அங்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னால் இருக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு முன்னால் கொரானா பரிசோதனை எடுக்கவேண்டும் என்றார்கள் எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி அங்கே போய்விட்டாள் மல்லி
அப்ப்டியென்றால் விடியற்காலையில் மறுபடியும் கொரானா பரிசோதனை எடுக்கவேண்டும். அதிகாலை நான்கு மணிக்கு விமானம் என்றால் அதற்கு முன் ஆறு மணிநேரம் முன் என்றால் இரவு பத்து மணி வருகிறது ..இரவு எட்டு மணிக்கே விமானநிலையம் சென்றுவிட்டாள். வெங்கடாசலம் நான் திரும்பி போக டாக்ஸி வெயிட்டிங் சார்ஜ் வேறு ஆயிடும் கிளம்புகிறேன் என்றான்
முகப்புப் பகுதியில் உட்கார்ந்திருந்த நாலைந்து பேர் சேலம் சுற்றுலா ஏஜென்சியில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள் அவர்களிடம் வெங்கடாசலம் பேச்சு கொடுத்த போது அவர்களும் சார்ஜா விமானத்திற்கு செல்வதாக சொன்னார்கள் .அந்த ஏஜென்ட் கோபியை அவன் தேடிப்பிடித்து மல்லி பற்றி சொல்லி கொஞ்சம் கவனித்துக் கொள்ளச் சொன்னான். தொண்ணுறாயிரம் ரூபாய் கொடுத்து ஐந்து நாள் துபாய் சுற்றுலா செல்கிறார்கள் .அதற்கு அவர்களும் சார்ஜா விமானத்தை பிடிக்க வேண்டும் நாங்க பாத்துக்குறோம் நீங்க கிளம்புங்க என்றார்கள் .சேலத்துக்காரர்கள் அருகில் இருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது
அவள் 32 கிலோ பொருட்கள் கொண்டு போகலாம் என்று நினைத்து இருந்தாள் ஆனால் அது 30 கிலோதான் என்றார்கள். எடை போட்டுப் பார்த்தபோது இரண்டு கிலோ அதிகமாக இருந்தது அதற்கு இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள். பதட்டம் ஆகி விட்டது அவளுக்கு .மறுபடியும் ஸ்கேன் செய்யும் இடத்திற்கு அருகில் வந்து கத்தி ஒன்றை வாங்கி ஸ்கேன் செய்ததில் இருந்த லேபிளை வெட்டி எடுத்துவிட்டு பெரிய பையைப் பிரித்தாள் . 2 கிலோ சிறுதானியத்தை தனியே வைத்துக்கொண்டாள் இப்போது போய் பார்த்தபோது 30 கிலோ இருந்தது. ஆனால் மறுபடியும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் .மறுபடியும் ஸ்கேன் செய்து விட்டு இரண்டு கிலோ அதிகமாக இருப்பதை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். காரணம் அவளின் கைப்பை முன்பே 10 கிலோ வரை எட்டியிருந்தது சேலத்துக்காரர் ஒருவரிடம் 2 கிலோ விவகாரத்தை சொன்னாள். அதுககு என்ன நாங்க கையில வச்சிக்கிறோம் என்றார்கள். அவளுக்கு ஆறுதலாக இருந்தது அவளின் துணிமணி எல்லாம் 10 கிலோ தனியே கைப்பையில் இருந்தது. ஆனால் தீபாவுக்கு தரவேண்டிய பொருட்களின் பட்டியலில் எண்ணெய், சிறு தானியங்கள் எல்லாம் 30 கிலோ ஆகிவிட்டது. அவளுக்கு எல்லாம் கொண்டுபோய் கொடுத்தாக வேண்டும் .பத்திரமாக போய் சேர்ந்தால் போதும் என்று அவள் நினைத்துக் கொண்டாள் . எல்லாவற்றிலும் பதட்டம். பயம் ஒட்டிக்கொண்டது.
போர்டிங் பாஸ் தருகிற போது மல்லி அங்கே போய் தங்கிக் கொள்ள மாட்டார் பணிப்பெண்ணாக எங்கும் வேலையில் சேர மாட்டார் என்று உத்திரவாதம் தந்து தீபா அனுப்பியிருந்த கடிதத்தை திரும்பத் திரும்ப கேட்டார்கள்..
“ நான் எதுக்கு அங்க போய் இருக்க போறேன் எனக்கு சொந்த வீடு, சொந்தக்காரங்க எல்லாம் இங்கே இருக்காங்க நான் ஏன் போயி வேலைக்காரியாக இருக்கவேண்டும் “ என்று கண்களை கசக்கியபடி மல்லி விசாரித்த பெண்ணிடம் சொன்னாள் ஆனாலும் அவளுக்கு போர்டிங் பாஸ் தரப்படவில்லை சேலத்துகாரர்கள் எல்லாம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு வேறு இடத்திற்குப் போய் விட்டார்கள் ஆனால் இன்னும் விமானம் கிளம்ப மூன்று மணி நேரம் உள்ளது .எந்த பிரச்சனையானாலும் சமாளிக்க வேண்டும் கியூ ஆர் ஸ்கேனிங் செய்யும்படி முதல் வரிசைக்கு போகச் சொன்னார்கள். அவளுக்கு விளங்கவில்லை விசா வாங்கியாகிவிட்டது சரியாகத் திரும்பி விடுவேன் என்று உறுதிமொழி கொடுத்த விஷயம் உறுதிப் படுத்தி விட்டது. இதைத்தாண்டி மறுபடியும் என்ன தொல்லை என்று நினைத்தாள் முதல் வரிசையில் சென்றபோது அவள் தங்கும் இடத்தின் முகவரி,, தொலைபேசி எண் எல்லாம் கேட்டார்கள் .கொடுத்தாள் .கைபேசியில் வருகிற விஷயங்களை பூர்த்தி செய்து கொண்டு வரச் சொன்னார்கள் .பிறகு அவளின் கைபேசியை வாங்கி அது 2ஜி அதில் ஒன்றும் செய்யமுடியாது என்று அவர்களே அலுப்புடன் விவரங்களைப் பதிய ஆரம்பித்தார்கள் அவளுக்கு வாட்ஸ்அப் தகவல்களை பார்க்க தெரியாது .ஆனாலும் இருக்கட்டுமே என்று ஒரு நல்ல போனைத் தான் வைத்திருந்தாள் ஆனால் க்யூ ஆர் ஸ்கேனர்க்கு அது பயன்படவில்லை என்பது மறுபடியும் வருத்தம் அளித்தது எப்படியும் அங்கு போய் சேர்ந்தால் போதும் என்று நினைத்தாள்.
ரொம்ப நேரத்திற்கு பிறகு அவளுக்கு போர்டிங் பாஸ் கிடைத்தது போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்ட மற்ற சேலத்து க்கரர்கள் தனியாக ஒரு இடத்தில் போய் உட்கார்ந்திருந்தார்கள்.தேடிப்போய் அங்கு போய் உட்கார்ந்து கொண்டாள். அந்த டிராவல் ஏஜென்ட் கோபி திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கண்களை மூடி கொஞ்ச நேரம் தூங்குகிற முயற்சியில் இருந்தாள். ஆனால் கைப்பை தவறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் முழிப்பிலேயே இருக்கச் செய்தது.
0
சார்ஜா வந்து இறங்கிய போது அரை மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது பரிசோதனைகள் முடிந்து வந்தபோது எல்லாம் சுமூமாக இருந்தது 48 மணி நேரத்திற்கு முன்னால் எடுத்த கொரானா பரிசோதனை பற்றி யாருமே கோவை விமான நிலையத்தில் கேட்கவில்லை.அங்கு ஆறு மணி நேரத்துக்கு முன்னாள் விமான நிலையத்தில் எடுத்த பரிசோதனைக்காக 3400 ரூபாய் கட்ட வேண்டியிருந்தது பெரிய தொகை தான் என்ன இவ்வளவு பெரிய தொகை என்றால் இரவு 12 மணிக்குப் பிறகு இவ்வளவு அதுக்கு முன்னான் என்றால் 1200 ரூபாய்தான் என்றார்கள் வேறுவழியில்லாமல் அங்கு ஒரு கொரானாபரிசோதனை செய்ய வேண்டியிருந்தது விமானம் ஏறுவதற்கு முன்னால் தான் அந்த கொரானா பரிசோதனை முடிவு வருமோ அந்த முடிவு சாதகமாக இல்லாவிட்டால் என்னவாகும் விமானத்தில் ஏற முடியாதா .பதட்டமாக தான் இருந்தது அவளுக்கு இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பதட்டம் இருக்கும் விமானத்தில் ஏறி விட்டால் போதும் அந்த பதட்டம் குறைந்து விடும்
சார்ஜா விமான நிலையத்தில் பல கொரானா பரிசோதனைக் கவுண்டர்கள். உடம்பை முழுக்க மறைத்தபடியான உடையில் வித்யாசமான உடையில் பலர் சோதனையில் இருந்தார்கள். வாயில் உமிழ்நீர் சோதனை எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்கள். இதற்குப் பணம் கேட்கவில்லையே. விசா கட்டணத்திலேயே வந்திருக்கும். அல்லது இன்சூரன்ஸ் …. என்னென்னவோ எழவு . அதில் சேர்ந்திருக்கும்
பசி வேறு இம்சித்தது . கோவை இண்டர்னேசனல் விமானம்.. பயணத்தில் சாப்பாடு இல்லையா என்று சேலத்துக்காரர் ஒருவர் அலுத்துக்கொண்டார். அவர் பையில் வைத்திருந்த பன், பிஸ்கட் அவருக்கு ஆறுதல் தந்தது. அவர் வாங்கிய தேனீருக்கு நூற்று அறுபது ரூபாய் வாங்கிகொண்டார்கள் .மல்லி வேண்டாம் என்றாள். விமான நிலையத்தில் தேனீர் அறுபது ரூபாய் . விமானத்துள் நூற்று அறுபது ரூபாய். துபாய் காசில் குறையுமோ. இங்கு தேனீர் சாப்பிட முடியுமா . பணம் மாற்ற வேண்டுமே. இந்திய ரூபாய்க்கு மதிப்பு இருக்காதே.
தீபா விமான நிலையத்திற்கு வந்திருந்தாள் என்பதால் அவளுடைய பதட்டம் எல்லாம் முடிந்துவிட்டது தீபாவை சிறுவயதில் வளர்த்தவர் என்ற வகையில் மல்லியின் மீது தீபாவுக்குப் பாசமும் மரியாதையும் உண்டு தீபாவின் கணவர் அலுவலகத்துக்கு போய்விட்டார் .தீபா வண்டி எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்
” ஊருக்கு போன் பண்ணி சொல்லணும் சிம்மு வாங்கணும். ”
” அத அப்பறம் பாத்துக்கலாம் பெரியம்மா”
“ கொஞ்சம் பணத்தை மாத்தி வச்சுக்கோன்னு சொன்னார்களே”
”அதையும் அப்புறம் பாத்துக்கலாம். நானே தர்ரன் “
விடிகாலையில் கிளம்பி நான்கு மணி நேரம் பயணம் .வந்து இறங்கிய க் களைப்பு அன்றைக்கு முழுவதும் உடம்பு வலி என்றுத் தூங்கிக்கொண்டிருந்தாள் மல்லி.
அடுத்த நாள் காலையில் நடைபயிற்சிக்கு போகலாம் என்று தீபா அழைத்து வந்துவிட்டாள். தீபாவின் கணவர் கட்டிட சம்பந்தமான வேலையில் இருப்பதால் நேரத்திலேயே கிளம்பிப் போய்விட்டார் .இரவுதான் வருவார் அதுவரைக்கும் சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியது தான்.. அவள் வேலை செய்யும் அரேபியன் ரொம்பவும் கொடூரமாக தான் இருப்பான் என்றாள், அதுவும் கொரானாகாலத்தில் சம்பளத்தில் கொஞ்சம் பிடித்து வட்டார்கள் அது மறுபடியும் சரி செய்யப்படவில்லை உத்தியோக உயர்வு இருக்கும் என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் நீடித்ததால் உத்தியோக உயர்வும் அவனுக்கு கிடைக்கவில்லை. எல்லா கஷ்டப்பட வேண்டியிருக்கு முஸ்லிம்கள் சொன்னா முஸ்லிம் தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யறாங்க. நாம சொன்னா செய்ய மாட்டேங்குறாங்க .பாகிஸ்தான்காரன் இந்தியா சூப்பர்வைசர் சொன்னா கேக்கவில்லை கஷ்டப்பட வேண்டி இருக்கு. வேலை வாங்க சிரமப்பட வேண்டி இருக்கு என்று அவள் கணவன் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார்
சாப்பாட்டைப் பற்றி எந்த கவலையும் இல்லை .நம்மூர் அ.ரிசி விட பாகிஸ்தானிலிருந்து வரும் அரிசி விலை குறைவாகவே இருந்தது. பாதி விலையில் இருந்தது நல்ல அரிசியாகவும் இருந்தது பிரியாணி அரிசி கூட விலை குறைவாக இருக்கிறது என்றார்கள் .தீபாவுடன் மளிகை கடைக்கு போன சமயங்களில் தக்காளியும் கத்தரிக்காய் போன்றவையும் பெரிய அளவில் இருப்பதை பார்த்து பயந்து விட்டாள் மல்லி
“ இதெல்லாம் பீட்டி ரகம், மரபணு மாற்றம் .”
” ருசி இருக்குமா ”
” இருக்கும் அதுக்கும் ஏதாவது பண்ணி இருப்பாங்க” ஒருநாள் வெந்தயகளி செய்யலாம் என்றாள் மல்லி செய்து வைத்திருந்தாள் எதிரில் இருந்த லட்சுமணன் குடும்பத்தினர் அதை வாங்கிப் போய் விரும்பி சாப்பிட்டார்கள் லட்சுமணனின் மனைவி இளம்பெண் சரியாகச் சமைக்கத் தெரியவில்லை என்ன சொன்னாலும் அவள் சமையலை கற்றுக் கொள்ள அக்கறை எடுத்துக் கொண்டுள்ளவில்லையாம். லட்சுமணனின் கஷ்டங்களில் அவள் சரியாக சமைக்க தெரியாமல் இருப்பதும் சேர்ந்துகொண்டது அவள் அடிக்கடி காவலாளியாக இருக்கும் ஒரு பஞ்சாபியியுடன் சொல்லி ஏதாவது வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவாள் அவனுக்கு அதிகபட்சமாக 1000 அரபு பணம் தான் சம்பளமாக இருந்தது அவன் பல சமயங்களில் ஒரு அரபுப் பணத்துக்கு விற்ற ரொட்டியை வாங்கி தேனீர் வைத்து குடித்துவிட்டு சாப்பாட்டு வேலையை முடித்து விடுவான். அப்படி இல்லாவிட்டால் ஊருக்கு பணம் அனுப்ப முடியாது அவனுக்கு தங்க இடம் இருந்தது அது தான் அவனின் மிகப்பெரிய சௌகரியமாக இருந்தது
0
” நான் மூன்று ரவுண்டு நடந்துட்டேன் போதும் தீபா”
” சின்ன ரவுண்ட்தா போனீங்க .நான் இன்னமும் ரெண்டு ரவுண்டு போகணும் பெரியம்மா ”
” சரி நீங்க உட்காருங்க “
குழந்தைகள் விளையாடும் இடத்தில் இருந்தவர்கள் கையில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை மெல்ல குழந்தைகளுக்கு ஊட்டினார்கள் அவர்களுக்கு வேடிக்கை காட்டினார்கள் .நிழலில் ஒரு பெண் நின்று கொண்டு கை கால்களை அசைத்து உடற்பயிற்சி செய்ய அதைப் பார்த்துவிட்டு இரண்டு வயது குழந்தை அவளைப் பார்த்து சிரிக்க முயற்சித்தது .இன்னொரு குழந்தை தூரி இருக்கிற இடத்திற்கு தட்டுத்தடுமாறி சென்றது அவளுக்கு பின்னால் சென்ற முதிய பெண் அவளை தூக்கி உட்காரவைத்து ஊஞ்சலை ஆட்டி விட்டாள் குழந்தை பாதுகாப்பாக உணர்ந்தது போல் சிரித்துக்கொண்டே இருந்தது
பூங்காவிற்கு வந்த ஓர் இந்தியப்பெண் தன் முக கவசத்தை எடுத்து முழங்கையில் சுற்றிக் கொண்டாள் யாராவது காவல்துறையினர் தென்படும்போது அதை எடுத்து முகத்தில் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். வெகு விரைசலாக நடக்க ஆரம்பித்தாள். .அதுவரைக்கும் சுதந்திரம் . முகமூடி போடாத சுதந்திரத்துடன் அதிகபட்சமாய் ஏழெட்டுப் பேர்கள் அந்த காலை நேரத்தில் நடைபயிற்சி இருந்தார்கள் அவர்களில் ஓரிருவர் மட்டுமே முக கவசத்தை அணிந்து இருந்தார்கள் மற்றவர்கள் அதை கைகளில் வைத்துக்கொண்டும், முழங்கையில் மாட்டி வைத்துக் கொண்டும் கழுத்தில் மாட்டிக் கொண்டு இருந்தார்கள் தீபாவுக்கு அவர்களெல்லாம் யார் என்று தெரியவில்லை கொஞ்சம் மாநிறமாக இருந்தார்களை இந்தியர்கள் என்று நினைத்துக்கொண்டாள்
இதுபோன்ற பூங்காக்கள் அந்தப் பகுதியில் ஏழெட்டு இருந்தன அதற்குக் காரணம் அந்தப் பகுதியில் அமெரிக்க காரர்களும் ஐரோப்பியர்களும் அதிகமாக இருந்தார்கள் அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் நல்ல குடியிருப்புகளையும், பூங்காக்களையும் அந்தப் பகுதியில் கட்டி இருக்கிறது .அந்த பகுதியில் வாடகையும் அதிகம் . தீபாவின் கணவர் ஓர் ஆண்டு ஒப்பந்தத்தில் அங்கே ஒரு பிளாட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்திருந்தார்.. கொரான காலம் சம்பளத்தை குறைத்து விட்டார்கள் .பதவி உயர்வு என்பது இல்லை ஆகவே பெரிய செலவை அது கொண்டு வந்திருந்தது என்ன செய்வது என்று தெரியவில்லை .ஓராண்டு வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னால் ஓர் அறையும் ஒரு சமையலறையும் இருக்கிற இடத்திற்கு போய் வாடகை குறைத்துக்கொள்வது என்றுதான் அவரும் முடிவு எடுத்திருந்தால். இப்போ செலவு பண்ற மாதிரி 50,000 எல்லாம் பார்த்து வாடகைக்கு கொடுக்க முடியாது இது பாதியா கிடைக்கிற மாதிரி எங்காவது போகணும் .சார்ஜா போய்விடலாம் என்றுதான் தீபா சொல்லியிருந்தாள சார்ஜாவில் வாடகை குறைவு. துபாய் அலுவலகத்திற்கு.ஒரு மணி நேரம் பயணம் அந்த மன்னர் தாராளவாதி என்றார்கள். நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு 90 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தார்.. அவர் வீடு புத்தகங்களாய் நிரம்பியிருக்குமாம்
பலர் துபாய் அலுவலங்களுக்கு சார்ஜாவில் இருந்து வந்து போய்க்கொண்டிருந்தார்கள் . அதனால் இரவு நேரங்களிலும் மாலை நேரத்திலும் பெரிய அளவில் வாகனம் நெருக்கடிகள் ஏற்படும் .ஆனால் பாதி வாடகைக்கு அங்கு சுலபமாகக் கிடைத்துவிடும் .அப்படி இல்லை என்றால் எதையும் சேமிக்க முடியாது என்பது தீர்மானம் .தீபாவின் அதற்கு உடன்பாட்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
0
இந்தப் பயணம் எல்லாம் அவளுக்கு தேவையா என்று மல்லி பல சமயங்களில் கேட்டுக்கொண்டிருந்தாள் கோவை விமான நிலையத்தில் கழிப்பறை எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டு இருந்தபோது கழிப்பறையை சுத்தம் செய்யும் பெண் அவளுக்கு கழிப்பறையை காட்டினாள் அப்போதுதான் மல்லி அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்.
நீ விமானத்தில் பறந்து இருக்கிறாயா…
இல்லை மெட்ராஸ் வரைக்குமாவது ஒரு தரம் போகணும் .எல்லாரையும் வழி அனுப்புற வேலையில தான் இருக்கேன் ஆமாம் என்னையும் மத்தவங்க வழி அனுப்புற நாள் வரும் என்றாள்
விமானம் பறந்துகொண்டிருந்த போது அவளுக்கு உடம்பு 1சில்லிட்டது. குளிர் அதிகமாகத்தான் இருந்தது அவள் போட்டிருந்த ஸ்வெட்டர் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. பசி வந்துவிட்டது போல இருந்தது. மதியம் பிரியாணி செய்து சாப்பிட்டாள் ஆறு மணிக்கு இரண்டு தோசை வேறு சாப்பிட்டாள் .பிறகு கையில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதம் பொட்டலத்தை விமானநிலையத்தில் தீர்த்து விட்டாள் இப்போது என்ன பசி வேண்டிக்கிடக்கிறது ஆனால் குளிரும் பசியும் சேர்ந்து அவளின் உடம்பை இம்சித்தது .சர்வதேச விமானம் அல்லவா அதனால் சாப்பாடு கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று வெங்கடாசலம் சொல்லியிருந்தான் .ஆனால் அங்குமிங்கும் வந்துபோன விமானப்பணிப் பெண்கள் எதை எதையோ கொண்டுபோனார்கள் சிலருக்கு மட்டும் சில பொட்டலங்கள் கொடுத்தார்கள் அவள் உட்கார்ந்த இருக்கையின் யாருக்கும் எந்த பொட்டலம் தரப்படவில்லை.அது முன்னரே பதிவு செய்யப்பட்ட்தா. பணம் முன்பே தரப்பட்டதா.. இந்த பசியை எப்படி தாங்குவது தேனீர் சாப்பிட வேண்டும் பக்கத்திலிருந்த சேலத்துக்ககாரரிடம் தேனீர் சாப்பிடலாமா என்று கேட்டாள் அவன் இங்கே 150 ரூபா இறங்கி சாப்புட வேண்டியது தான் என்றான் .நம்ம ஊர் ஏர்போர்ட்டில் 1 60 வாங்கினாங்க இங்கே 150 ரூபாய். கீழே போனால் குறையுமா அந்த சார்ஜா நாட்டு காசுக்கு குறைவானதாக இருக்குமா . தெரியல.. ஆனா என்ன பண்றது செலவு பண்ணிதான் ஆகணும்
பணிப்பெண்கள் தின்பண்ட வண்டியை தள்ளிக்கொண்டு இரண்டாவது முறை அவள் பக்கம் வந்த போது அவள் தேனீர என்று கேட்க இந்திய பணமா ,சார்ஜா பணமா என்று அந்த பணிப்பெண் கேட்டாள் .அவளின் நிறம் ஆச்சரியமாக இருந்தது வெள்ளையும் மஞ்சளும் கலந்து செய்த மாதிரி ஒரு நிறம் .சின்னதாக மஞ்சள் சட்டை போட்டு இருந்தாள். ஐந்அவளின் மார்பு மீது இருந்த இரண்டு சட்டை பாக்கெட்டுகள் மல்லிக்கு வினோதமாக தெரிந்தன .மார்பின்மீது இருக்கிற சட்டை பாக்கெட்டு எதற்கு பயன்படும் என்னமோ. நமட்டுத்தனமாக மல்லி கூட சிரித்துக்கொண்டாள்
150 ரூபாய் கொடுத்து தேனீர் சாப்பிட்ட பின்னர் தான் உடம்பு கொஞ்சம் ஒரு நிலைக்கு வந்தது தெரிந்தது தடுமாறிக் கொண்டிருந்த உடம்பு இப்போது உள்ளே கொஞ்சம் சூடு உள்ளே போய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது போல இருந்தது. அது ஞாபகம் வந்து போனது அவ்வப்போது வந்துடு போகிற கோழித்தூக்கம் போல.
0
குட்டிபூங்காவில் இப்போது காணப்பட்ட பனி கொஞ்சம் குளிரைக் கொண்டு வந்து விட்டது
ஐந்து முறை அந்த பூங்காவின் ஓட்டப் பாதையில் நடந்து விட்டு தீபா சற்றே இளைப்பாற மல்லி அமர்ந்திருந்த மர பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்
”கொஞ்ச நேரம் இருங்க”
ஐந்து நிமிடம் கழித்து வந்த தீபாவின் கைகளில் முருங்கைக்கீரை இருந்தது .அந்தப் பகுதியில் இருக்கும் மளிகைக்கடைகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் இட்லி மாவு வாங்கி வருவதை மல்லி அறிந்திருந்தாள்.
”இங்க இருக்குற மத்த எல்லாரும் இது சாப்பிடுவாங்க நம்ம ஊரு இட்லி தோசையை யும் விரும்பி சாப்பிடுவாங்க. பொங்கல் பண்ணி மத்தியில் குழம்பு ஊத்தி நல்ல டேஸ்ட் பண்ணுவாங்க இட்லிண்ணா இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ஐரோப்பிய கார்ர்கள் ரொட்டியை விட நம்மை இட்லிக்கு அடிமைகள்:”
”சரி இந்த முருங்கைக்கீரையை கொண்டு போறியே யாரும் கேக்கலையா”
”அப்பப்ப தேவையுள்ள போது வந்து எடுத்துக்குவன். இங்க தனியா பூங்கா வாட்ச்மேன் யாருமில்லை அப்பப்போ தண்ணி ஊத்துறது. , கிளீன் பண்ணறதுக்கு ஒரு அரை மணி நேரம் யாராவது ஒதுக்கி இருந்து பார்த்துட்டு போயிடுவாங்க. வேற யாரும் இருக்க மாட்டாங்க வேற யாரும் பொறிச்சிட்டு போக மாட்டாங்க.. யார் கேக்க போறேங்க”.
”இங்கதான் எவ்வளவு மருதாணி மரங்கள் இருக்கு ஆமாம் நம்ம ஊர்ல மருதாணி செடியில் தான் சொல்லுவோம் ஆனா இங்கே பார்த்தா மருதாணி மரமா எல்லா இடத்தில மருதாணி மட்டுமா ஆடாதோடை , மல்லிகை எல்லாமே நிற்கிறது”
”ஆமா அதான் ரொம்ப அதிகமா இருக்கும் அப்படித்தான் இந்த கீரையும் நிக்குது அதிலிருந்து பறிசிச்சிட்டு போறோம். எங்க இருக்கிற ஐரோப்பா காரன் அமெரிக்க காரணங்களா இட்லி மாதிரி இந்த முருங்கை பிடிக்குமா .தெரியல .யாரும் கொண்டு போனதாத் தெரியல . இதிலெ பொறுக்கணும். சுத்தம் . பண்ணனும் . குடும்பம் வேணும் இதுக்கெல்லாம் அவனுக்கு பொறுமை இருக்குமா தெரியல எல்லாரும் எல்லாமும் கொண்டு போனது இல்லை .அப்படித்தானே எனக்கு தெரியும் . இதிலிருக்கிற சத்து, ஜீவன் இதெல்லாம் இங்கிருக்கிற வெளிநாட்டுக்காரனுக்குத் தெரியுமா”
அவனுக்கு தெரியாம எங்க இருக்கும். உலகமே அவன் கையில்தன் இருக்கு. இதுக்குக் கூட ஏதாவது பேட்டன் ரைட் வாங்கியிருப்பான் . அமெரிக்காகாரன் என்றால் சும்மாவா . வெளிநாட்டுக்காரன் என்றால் சும்மாவா “
தீபாவின் கையிலிருந்த முருங்கை மல்லியைபார்த்துச் சிரித்தது .

 

Series Navigationமுகவரி
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *