இரா முருகன்
பொது யுகம் 5000
புறப்படுங்கள். மூன்றாம் நூற்றாண்டு சென்றடைவீர் இருவரும். நீலன் மருத்துவரை நம் காலத்துக்கு அழைத்து வருக. அன்பால் அழைத்து வருக. வருவார். சென்று வருக.
பெருந்தேளர் குயிலியையும் வானம்பாடியையும் அனுப்பி வைத்தார். நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் பின்னே போகும் காலப் பயணம்.
ஒரு வினாடி நேரத்தில் ஒரு வருடம் பின்னால் போகத் தொழில்நுட்ப வசதி இருந்தாலும் அதை முழுக்கச் சார்ந்து பயணப்படாமல் மெல்ல மெல்லப் பயணப்படுவதை இந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
சடசடவென்று கால வெளியில் அவ்வளவு காலம் உடனடியாகப் பின்னால் போக, உடல் திசுக்கள் மெலிவு கொண்டு உடலை விட்டு உதிரத் தொடங்கும். எலும்புக் கூடும் கொஞ்சம் போல் தசையும் ஒட்டி மாறும் அந்தப் பயணிகள் பார்க்கக் குரூபியாகத் தென்படுவார்கள்.
வாரி எடுத்துப் போய் ஒட்டி, உருக்கிச் சேர்த்து, லேசர் சிகிச்சை சேர்த்து கிட்டத்தட்ட தொண்ணூற்றெட்டு விழுக்காடு பழைய நிலைக்குக் கொண்டு வருவது சாதாரணமாக நடக்கிறதாகும்.
அந்த இடைவேளை நேரத்தில் வேறு எதுவும் செய்ய முடியாமல் கிடந்தே காலம் போக்க வேண்டி வரும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த மறு உரு ஆக்கம் முழுக்கவோ பகுதியோ தோற்று விடலாம்.
இப்படி இடர் ஏற்படாமல் இருக்கவே காலத்து ஊடாகப் பயணம் போகும்போது ஆக மெதுவாக, கால்வாய் நீர் போல், நீர் மேலே மெல்லப் பறக்கும் வெள்ளைப் பறவை போல் நிதானமாகப் பயணப்படலாம்.
அப்புறம் நீர்மை நீர்ச்சத்து உடலில் இருப்பது. மின்னல் வெட்டும் வேகத்தில் காலம் கடந்து பின்னால் போகும்போது அப்படிச் செல்லும் உடல் கிட்டத்தட்ட முழுக்க உலர்ந்து போய் வெளியே பொறுக்கு தட்டி, நீரிலும் நிலத்திலும் அச்சப்படுத்தி நடக்கும் முதலை போல் ஆகிவிடும்.
அந்த தற்காலிக குரூபித் தோற்றம் சரியாகி, திசுக்கள் நீர்கொண்டு ஏற்கனவே இருந்த உடலாவது நடக்க வேண்டும் என்பது காலப் பயணி யாருக்கும் மனதில் படும் சங்கடம்.
இன்னொன்று வயிறு, குடல், பெருங்குடல் எல்லாம் வெற்றிடமாக இருக்க வேண்டும். அவை பகுதியோ முழுவதுமோ நிறைந்திருந்தால் வெடித்து விடக்கூடும்.
இந்த பிரச்சனைக்காகவே ரத்தம் பாயும் தமனிகளில் வழக்கத்தை விடக் குறைந்த ரத்தப் போக்கு இருக்கும்படி தற்காலிகமாக அமைக்கப்படும்.
மெல்லக் காலம் கடத்தலின் போது, ஒரு இருபத்துநான்கு மணிக்குள் ஒரு அல்லது அரை நூற்றாண்டு கடக்கும்போது இந்தத் தொல்லைகள் இல்லாததோடு, ஒவ்வொரு நாளிறுதியிலும் ஒரு நூற்றாண்டு மக்களைச் சந்தித்து இடைகலந்து பழகி, கலை, கலாச்சாரம் அனுபவித்து, முக்கியமாக அந்தக் காலகட்டத்து உணவை ருசித்துப் போகலாம்.
ஒரே ஒரு கஷ்டம், போய் இறங்கிய நூற்றாண்டு இறுதியில் அல்லது தொடக்கத்தில் பெருநோய் ஏதும் தொற்றாகப் பரவியிருந்தால், அவசரமாக முந்திய காலத்துக்குப் போக முடியாது. அந்தக் கால மக்களோடு பெருநோய்த் தொற்றுக்கான மருந்து எடுத்துக் கொண்டு ஜாக்கிரதையாக பயணத்தைத் தொடர வேண்டும். பல நூற்றாண்டுகள் பெரிய அளவில் தொற்றுநோய் இன்றி இறுதியானவை என்பதால் காலப் பயணி நோய் குறித்து அச்சப்பட வேண்டியதில்லை.
இன்னொன்று. இயல்பான வேகத்தில் காலப் பயணம் போனவர்கள் ஓராயிரம் பேராவது இருக்கலாம். இவர்கள் தங்கள் அனுபவத்தை அறிவு வெளியில் விரிவாகப் பதிந்து வைத்திருக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் மதுரையில் சைவ உணவு எங்கே, என்ன கிடைக்கும் என்பது போல். அந்தக் காலகட்டத்தில் தங்கியிருக்க சத்திரங்களின் விவரங்களென்பது கூட.
வேகப் பயணிகள், நூறு மெதுவான பயணிகளுக்கு இரண்டு பேர் என்ற விகிதத்தில் இருப்பதால் அவர்களின் அனுபவப் பகிர்வு குறைவாகவே அறியக் கிடைக்கும்.
மேலும் வேகப் பயணர்களின் தகவல் பகிர்வு அகவயமாக, அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவமாக இருக்கும். அவர்களைச் சுற்றி காந்த மண்டல வேலி எப்போதும் இருப்பதாலும் அவர்கள் மிக அதிகமாக, ஒளியைப் பின் தள்ளும் வினாடிக்கு 98000 மீட்டருக்கு பல மடங்கு அதிக வேகத்தில் சஞ்சரிப்பதாலும் பயணப் படகு செல்லும் வழியில் ஏதும் பழுது ஏற்பட்டால், பழுது நீக்க உடனே உதவி கிட்டாது.
இன்னொன்று, போய்ச் சேர்ந்த இடம் காலத்தின்படி சரியாக இருந்தாலும் போக வேண்டிய இடத்துக்கு நூறு, இருநூறு கிலோமீட்டர் தள்ளி பயணம் முடியலாம். அங்கிருந்து போக வேண்டிய இடம் போவது உடனுக்குடன் திட்டமிட்டு நடத்த வேண்டிய தனியான பயணமாக இருக்கும். பயணிகளின் நிலவியல் தேர்ச்சி இதற்கு உறுதுணையாகும்.
அரசு உத்தரவுப்படி, நாளை சனிக்கிழமை காலை எட்டு மணிக்குப் பயணம் என்று அறிவித்திருந்தார்கள்.
இரண்டு பெண்களும் பயணத்துக்கான உள்ளாடை, மேலாடைகள், கூந்தலுக்குப் பூசத் தைலம் முதற்கொண்டு வாங்கியதோடு ஹூமனாய்டுகள் மூலம் அவற்றை நேர்த்தியாக பெட்டியில் அடைத்தும் பெற்றுக்கொண்டார்கள். காலப் பயணி மற்றோர் கவனத்தைக் கவராமல் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று காலப் பயணக் கையேடு சொல்கிறது.
அரசு மருத்துவத் துறையில் இருந்து ஒரு மாதம் பயன்படுத்த மனிதர்களுக்கு வரும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற சிறு நோவுகளுக்கான மருந்துகள் உடன் உடல்நலம் என்ற தலைப்பு கட்டிய காக்கி நிற அரசுப் பொதியாக வந்து சேர்ந்தன.
குயிலிக்கு இடது உள்ளங்கை அரித்தது, காணொளி அழைப்பு.
”பாதுகாப்பான உடல் உறவுகொள்ள சிறப்பு உறைகள் காலையில் அனுப்பி வைக்கிறோம்”
மருத்துவத் துறைப்பெண் நகரும் பிம்பமாக பளிச்சென்று குயிலியின் உள்ளங்கையில் வந்து பேசினாள்.
அவை எங்களுக்கு வேணாம். இருவரும் பெண்கள் என்று வானம்பாடி சொல்ல, உள்ளங்கை உருவப் பெண் அதற்கும் உடலுறவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுச் சிரித்தபடி மறைந்தாள்.
இந்தப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்ததும் வானம்பாடி அதுவரை தங்கி இருந்த அரசு குடியிருப்பில் இருந்து குயிலியின் பெரிய இருப்பிடத்துக்கு வந்து விட்டாள். அரசுக் குடியிருப்பில் கரப்புத் தொல்லை அதிகம் என்று ஒரு தடவை அவசரமாகச் சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டாள் வானம்பாடி.
இரண்டு விதமாகப் பெரிய கரப்புகள் மானுடப் பெண்டிரைத் தொந்தரவு செய்வதுண்டு. அவர்கள் வீதியில் போகும்போது உருவம் சுருக்கி பறந்து அந்த பெண்ணின் மார்பகத்தின் மேல் அமரவும் உள்ளே ஓடவுமாக அவை விளையாடும். கால்களுக்கு நடுவே ஊரவும் அவை முனையும். கரப்புத் தொல்லை குறித்து பயப்பட்டு அலறி அழுவதும் உயிர் அபாயம் என்பதுபோல் ஓடுவதும் பண்பாட்டுக்கு எதிரான செயல்கள். ஆகவே அந்தப் பெண்கள் ஒன்றும் பேசாமல் தொல்லை பொறுக்க வேண்டும்.
இன்னொரு தொல்லை ஆகச் சிறுத்த உடலோடு அவை மானுட வீட்டு சமையலறை வாஷ் பேசினில் உறங்கி ஓய்வெடுக்க வருவது. வந்தால் விரட்டக் கூடாது என்பதும் எதிர் பண்பாடு தொடர்பான சமூக நாகரிகமாகும்.
தேளர் சமுதாயம் வலிமை மிக்கது என்று வரையறுக்கப் பட்டதால், வலிமை கொண்டு பிற இனங்களைப் பாதுகாப்பது அவர்களின் பொறுப்பாகும்.
போர்ச் சூழல் தவிர மற்ற சூழ்நிலைகளில் பிற இனங்கள், குறிப்பாக மனிதர்கள் வசிக்கும் இடங்களில் தேளர் இனம் தலைகாட்டக் கூடாது, தவறி வந்தால், மானுடர் யாரும் சொன்னால் உடனே அங்கிருந்து திரும்ப வேண்டும்.
கரப்பர்கள் தேளர்களை உபசரிப்பது அந்த இரு இனங்களுக்குப் பொதுவான விழுமியங்களைப் போற்றுவதில் தொடங்குவது.
”வானி.. அடி உன்னைத் தானடி வானம்பாடி. வாங்கினது போதும். நாம் காலத்தில் பின்னால் தான் போகிறோம். முந்திய ஜன்மத்துக்குப் போகலை”.
குயிலி சொல்ல அவள் கையைப் பற்றி விரல்களை நெரித்தாள் வானம்பாடி.
மார்க்கச்சு மட்டும் வாங்கணும். நாமும்தான் நாலு கடை போயாச்சு கிடைக்கலே ரொம்ப மோசம் என்றாள் அவள்.
இந்த மாணப்பெரிய அளவுக்குக் கச்சு தைத்து அடுக்கினால், கடையில் அபூர்வமாகத் தான் விற்கும் என்று குயிலி சிரிக்காமல் சொன்னாள்.
எப்படியும் நாம் போக வேண்டிய காலத்தில் இறுகக் கட்டி நடமாட கச்சு ஏராளமாகக் கிடைக்குமே என்ன கவலை என்று வானம்பாடி உற்சாகமாகச் சொன்னாள்.
அவர்கள் காலத்துக்குப் பொருந்தாமல் 1600களுடைய உணவும், உபசரிப்புமாக, பகுதி நிகர்-மெய், மிகுதி தற்காலம் என்றும் செயல்பட்ட அரசு உணவு விடுதிக்குள் படி ஏறினார்கள்.
எல்லா அலுவலக, சமூக இடையாடலுக்கான நுகர்வோர் பொருள் விற்கும் கடைகள், உணவு விடுதிகள் என்று பல நிறுவனங்களில் தேளர், கரப்பர், மானுடர் என்ற இந்த மூன்று இனங்களின் தனிவெளியில் அவரவர் இனம் தாண்டாமல் வேண்டிய அளவு மட்டும் ஊடாடி வாழ்கிறார்கள்.
உணவைப் பொறுத்து மானுட இன உணவின் சுவைகளை மற்றவர்களும் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் அழுகிக் கெட்டுப்போன உணவை பாகம் செய்து கரப்பர்களுக்கு மனதுக்கு உகந்த உணவாக உண்ணத் தருவது நீடிக்கிறது.
அந்த உணவு உருவாக்குமிடங்கள் மனுஷர்களுக்கான உணவு விடுதிகளிலிருந்து வெகுவாக அகன்றே அமைகின்றன. உணவு விஷயத்தில் கரப்பர்களோடு தேளர்களும் ஒரே நேர்கோட்டில் வருகின்றனர்.
புதுச்சிறப்பு கரப்பர் உணவு விடுதி ஒன்றை அரசு தொடங்கியபோது தேளர்கள் அங்கே அதிகமாகத் தட்டுப்பட்டார்கள். பன்றிகளுக்கு தவிட்டில் கலந்த மனிதக் கழிவை உண்ணத் தந்து பன்றிக் கழிச்சலை அவ்வப்போது கழியக் கழியக் கரப்பர்களுக்கு உண்ணத் தரும் உணவகம் அது.
கரப்பர்களைவிடத் தேளர்கள் அதிகம் உணவுண்டு வரும் விடுதி அது. இந்த இனங்கள் இரண்டும் எதை வேண்டுமானாலும் உண்ணட்டும், உண்ட பிறகு வாய் வாடை இன்றி இருக்க கிருமிநாசனி கொண்டு கொப்பளித்து பொது வெளியில் வரவேண்டும் என்று கட்டுப்பாடு உண்டு.
எனில், மனிதர்கள் வாய் கழுவாமல் வந்து எழுப்பும் வாய் துர்நாற்றம் கரப்பர்களை மயக்கும் நல்ல வாடை என்பதால் மற்றோர்க்கு இன்பம் கருதி மனித இனத்தின் வாய் நறுமணம் பேணுதல் கட்டாயம் இல்லை.
சிறப்பு உணவுக் கூடங்கள் ஊருக்கு வெளியே எந்த அறிவிப்புப் பலகையோ மின்னணுச் சுவர் அறிவிப்புகளோ இன்றிக் காணப்படும். பன்றிகள் உண்ணத் தவிடும் மனிதக் கழிவும் கலந்து தர சிப்பந்திகள் மற்றும் அதிகாரிகள் நல்ல ஊதியத்தில் நியமிக்கப் பட்டவர்கள். நாள் முழுக்க உணவு மணம் முகர்ந்தும் நுகர்ந்தும் உடல் உப்பிய கரப்புகள் இவை.
மாற்றுப் பிரபஞ்சங்களில் கரப்பர் பங்கு பெறும் அரசு அமைந்த வெளியில் கரப்பர்கள் உண்டு மகிழ இங்கிருந்தே தரமான கழிவு ஏற்றுமதி ஆகிறது.
ஊரின் சிறப்பு விடுதி குயிலியின் பார்வையில் பட்டது . வாயில் துணிக் கவசம் அணிந்து கரப்பு ஊழியர்கள் அங்கே ஒன்றிருவராக வெளியே வந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
ஊருக்கு வெளியே சிறப்பு உணவு தயாரிக்கும் இடத்தில் உண்டாக்கப்பட்ட சிறப்பு உணவை தரக் கட்டுபாடு சோதனை செய்து உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் அளிக்கும் அரசு துறை தகுதி நிர்ணய ஊழியர்கள், மற்றும் அதிகாரிகள் கரப்பினமாகவே அமைவது தற்செயலானதில்லை.
ஒரு முறை மனித அதிகாரியைச் சிறப்புணவு ருசி பார்க்கும் பணிக்கு பதவி மாற்றம் செய்தபோது இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் சற்றே சரிந்தது.
நாசிக்கு மேல் துணி முகமூடியை உயர்த்தி கண்கள் கூடுதல் ஒளிர்ந்து அழகான செவிகள் மடலோரம் எண்ணெய் மினுக்க, மூடிய செவ்விதழ்கள் மொக்குப்போல் விடர்த்திக் கண்டவர் மனதில் காமம் உருவாக்க நடந்து போனார்கள் குயிலியும் வானம்பாடியும்.
குயிலியின் வீடு நிற்கும் திருப்பத்தில் அசுர வேகத்தில் வந்த ஊர்தி ஒன்று அவர்கள் மேலே மோதுவது போல் உரசிப் போக ஊர்தி உள்ளே விடலைகள் கைதட்டி ஊவென்று ஊளையிட்டுப் போகும் சத்தம். முன்னூறு வருடம் நமக்கு அடுத்து இங்கே சுவாசிக்க வந்தவர்கள். மது அருந்த அனுமதி கிட்டிய நூற்றாண்டு அது என்றாள் குயிலி உடுப்பில் அந்த வாகனம் உதிர்த்துப்போன தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு. இந்த நூற்றாண்டு தேளரசு செய்யும் காலம் என்பதால் மது போன்ற போதை தரும் பானங்கள் மனிதர்கள் பருக தடை உள்ள காலம்.
சோற்றைப் புதைத்துப் பத்து நாள் சென்று எடுத்து அந்த போதை தரும் பொருளை உண்டு கரப்பர்கள் போல் ஒரே உணவை வேறுவேறு காரணங்களுக்காகப் பாகம் பண்ணி உண்ணத் தருவது தங்கள் அதிகார வெளியைக் குறைத்து விட்டதாக கரப்பர்கள் கருதினர்.
புளித்து அழுகிய சோறு உண்டாக்குதல் மானுடர்களுக்கு அனுமதிக்கப்படாத செயல். அதை உண்டு போதை மேலேறிக் கிறங்கி இருத்தல் ஆகப் பெரும் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டது.
புளித்த அழுகிய சோற்றை மாந்தி கரப்பு இனப் பெண்களை வன்புணர்வு செய்யவும் மானுடர்களைத் தடுக்கத் தேவையே இல்லாமல் ஒரு புதுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதே போல்அண்மையில் தேளர்ப் பெண்களைப் பற்றி இனக்கவர்ச்சி கோணத்தில் நினைக்கவோ, அவர்களோடு உடல் உறவு கொள்வதாகக் கற்பனை செய்யவோ, கனவு காணவோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வானி, என்ன கற்பனையில் நடக்கறே? உன் காமுகன் நினைவா?
படி ஏறி வாசல் கதவைத் திறந்து உள்ளே போகும்போது குயிலி கேட்டாள். மனித இனத்தினர் காதலிக்கவும் காமுறவும் அரசு அனுமதி வேண்டியதில்லை. எனில் உடல் கலந்து கலவியின்பம் துய்த்து பொழுதும் இரவும் போக்க அனுமதி தேவை. மனிதப் பெண்ணும் மனித ஆணும் உடல் கலக்க எடுக்க வேண்டிய அனுமதி இது. இனங்களுக்கு இடையே காமுற்று கலவி நடத்த அனுமதி இல்லை தான். இது மானுட இனத்துக்கான சிறப்பு புணரனுமதி. ஆண்டில் நான்கு முறை கிடைக்கும். இது தவிர மே மாதம் இறுதி ஞாயிறன்று மட்டற்ற கூடல் இன்பம் அனுபவிக்க பொது விடுமுறையும் அனுமதியும் உண்டு.
குயிலியும் வானியும் நான்கு மாதம் முன் மே மாதம் அந்தப் பொது விழாவுக்கு வந்த பெருங்கூட்டத்தில் சந்தித்தபோது அவர்கள் இப்படி ஒரு கூட்டுப் பயணத்தில் பங்கெடுக்கப் போவதைப் பற்றித் தெரியாது.
இரவு உணவுக்கு சொல்லியிருந்த இட்டலிகள் கதவு தட்டி பலநூறுஆண்டுகள் முற்பட்ட பழைய உணவகத்தில் இருந்து மல்லன் ஒருவனால் கொண்டு வந்து தரப்பட்டன.
வேறேதும் வேண்டுமா என்று அவன் கேட்டபடி நின்றிருந்தான். வானம்பாடி அவனிடம் சொன்னாள் –
”உம்மோடு தேக சம்பந்தம் வேண்டுமா எனக் கேட்கிறீரா? நீர் 1971ம் ஆண்டிலிருந்து வந்ததாக உம் ஈஒட்டு தெரிவிக்கிறது. மூவாயிரம் வருடம் முந்திய வங்கிழவரோடு இன்பம் அனுபவிக்க, அதுவும் தடைக் காலத்தில் அனுபவிக்க எங்களுக்கென்ன பிராந்தா? நீர் செல்லலாம்”
கண்டிப்பாகச் சொல்ல அவன் மறைந்து போனான்.
ஆளுக்கு ஒரு இட்டலியும் பத்து மடக்கு காப்பியும் அருந்தி அலுவலக எழுப்பும் அழைப்பு செயல்படுகிறதா என சோதித்து திருப்தியோடு உடனே துயில் கொண்டார்கள்.
அவர்கள் அதிகாலை நான்கு மணிக்குத் துயிலெழுந்தார்கள். எழுந்ததும் குயிலி கவனித்தது வீட்டுக் கதவுகள் திறந்திருந்ததைத்தான். எப்படி அவை திறந்தன, ராத்திரி பூட்டாமல் உறங்கி விட்டேனா என்று குழம்பினாள்.
வானம்பாடி ஒருவேளை கழிப்பறைக்குச் செல்ல எழுந்தபோது தவறுதலாக வாசல் கதவைத் திறந்து வைத்து விட்டாளா? ராத்திரி படுத்தால் விடிகாலையில் கூட எழுப்பாமல் எழுந்திருக்க மாட்டேன் என்றாள் வானி. எனினும் இடம் பழகாததால் முழு உறக்கம் இல்லாமல் கலைந்த நித்திரையில் இருந்ததால் வாசலுக்குத் தவறுதலாக நடந்திருக்கலாம்.
அரைத் திருப்தியோடு குயிலி நீராடி உடுத்தி காலைப் பயணத்துக்குத் தயாரானாள்.வானம்பாடி கண்ணில் உறக்கம் தீராமலேயே அவளைத் தொடர்ந்தாள்.
காலை சரியாக ஏழு மணிக்கு அரசு ஊர்தி வீட்டுக்கு வந்து அழைத்துப் போகும் என்று நேற்றே சொல்லப்பட்டிருந்தது. பயணத்துக்கான உடுப்பு. ஒரு வேளைக்கான உணவு, தண்ணீர், பற்பசை, பிரஷ் என்று ஒரு பொதி. அரசுத்துறை அளித்தபடி அப்படியே பொதியோடு மருந்துகள். நேற்று மூன்று ஜோடி உள்ளாடைகளும் மேலாடைகளும் வாங்கியது அத்தனையும் வேண்டாம் என்று தீர்மானித்து இரண்டு இரண்டு ஜோடியும் இரு ஜதை காலணிகளும் எடுத்து வைத்து மீண்டும் கட்டிவைக்கப்பட்டது பயணத்துக்குத் தயாராக.
இன்னும் ஒரு காரியம் செய்யப்பட வேண்டி இருக்கிறது. பயணத்தில் அங்கே இங்கே ஏதும் வாங்க சிறு செலவாகக் கொடுக்க பணம் வேண்டும். இந்தக்காலப் பணம் பயன்படாது. போகும் காலத்தின் பணத்தை சிரத்தை எடுத்துத் தயாரித்திருப்பார்கள். அதுவும் ஏதாவது மிக்க அவசரமான பெரும் செலவுக்கு நாணய வடிவில் வார்க்கப்பட்ட தங்கம் நான்கு சவரனும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட உள்ளது.
சென்று வாருங்கள்.
பெருந்தேளர் உள்ளங்கையில் பளிச்சிட்ட உருவாக வாழ்த்திப் போனார்.
குயிலி பின்னால் ஒப்பனைகள் அறைக்குப் போய்விட்டு வந்தாள். வானம்பாடியும் தொடர்ந்தாள். புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பயணங்கள் பகுதி என்று அறிவித்திருக்கும் பகுதிக்கு அவர்கள் நடந்தார்கள். கைப்பையைக் கொடுத்து விட்டுப் போகலாமே என்று அவர்களிடம் யோசனை தெரிவிக்கப்பட்டது.
நீங்கள் திரும்பி வரும்போது பத்திரமாகத் திருப்பித் தரப்படும் என்றார் அதிகாரி. எடுக்காமல் வைத்திருக்கும் கைப்பையில் பிஸ்கட் வாடையும், சாக்லெட் வாசனையும் ஆகர்ஷிக்க கரப்பர்கள் உள்ளே நுழைந்து கைப்பையை உருத்தெரியாமல் ஆக்கி விடலாம் என்றுபட குயிலி பொதி திறந்து பையை உள்ளே வைத்தாள்.
வானி என்ற வானம்பாடி கைப்பையோடு வரவில்லை. ஒரு நிமிடம் சிவப்பு விளக்கு எரிந்தது. பொதிகளை சுமப்பானில் வைத்து உருட்டியபடி இரண்டு பெண்களும் நடக்க, இயந்திரக் குரல் அவர்களை வரவேற்றது. கரகரவென்ற ஆண் குரல்.
சற்றுப் பொறுங்கள். பொற்காசுகள் இன்னும் வார்த்து முடியவில்லை. மேலும் இறுதிக்கட்ட சோதனைகள் இன்னும் சில நடத்தப்பட வேண்டியுள்ளன. மிகப் பெரிய பயணமல்லவா, எல்லாம் சரியாக இருந்தாலே அனுமதி தரவேண்டும் என அரசுத் தரப்பில் கண்டிப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. நம் நல்லதுக்குத்தானே.
நம் என்பது யாரெல்லாம்? வானம்பாடி குயிலியின் மனதுக்குள் பேசினாள்.
இன்னும் அரை மணி நேரத்தில் புறப்படலாம் என்றது இயந்திரக் குரல். அது இப்போது பெண் குரலாக இருந்தது.
தொடரும்
- குழந்தையாகி நல்கி
- அகழ்நானூறு 19
- இது இவன் அனுபவம்
- படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் என். செல்வராஜா ஆவணப்படுத்தியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம்
- எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
- க…… விதைகள்
- குவிகம் ஒலிச்சித்திரம்
- உறவு
- கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11
- கா. சு வேலாயுதன் எழுதிய சாட்சரதா நாவல் குறித்து
- சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023
- நாவல் தினை – அத்தியாயம் ஆறு- CE பொ.யு 5000