நாவல்  தினை              அத்தியாயம்    28

This entry is part 5 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023


பிரதி நீலன் வைத்தியர் கைகளை ஒன்றோடொன்று இறுகப் பற்றி சிக்கிமுக்கிக் கற்களை நெருங்க வைத்துத் தேய்ப்பது போல் ஏழெட்டு முறை தேய்த்தார். விழித்து மூடிய இமைகள் மேல் வெதுவெதுப்பான உடல் சூட்டோடு  அந்தக் கரங்களை விரித்து வைத்து மலர்த்தினார்.  சுற்றுப்புறம் எங்கும் மூக்கைக் குத்தும் மருந்து வாடையும் இருளின் வாடையுமாக எங்கே தொடக்கம், எவ்விடம் முடிவு என்று புதிரானது.

அவர் பெயர் நீலன் தான். யாரோ அவரை பிரதி நீலன் என்று பெயர் சொல்லச் சொல்கிறார்கள். ஆல்ட் எஸ் பிரபஞ்சத்தினர் அவர் என்று நிச்சயமாகத் தெரிந்த உண்மையை மாற்றி, காஸ்மோஸ் பால்வீதி பிரபஞ்சத்தில் சூரியமண்டல கிரகத் தொகுதியில் வரும் பூவுலகு கிரகவாசி என்று அவருக்குள் உறுதியாகச் சொல்கிறார்கள். அவரை அவராக இருக்க விடுவது யாருக்கு உடன்பாடில்லாமல் போனது? ஏன்?

ஏதோ பெட்டிக்குள், அதுவும் வெளியே இருப்பதை உள்ளே இருந்து பார்க்கவும், உள்ளே இருப்பதை வெளியிலிருந்து பார்க்கவுமாக அவ்வுலோகச் சுவர் நடுவில் எழும்பி இருக்க, யாரோ கண்ணில் படாமல் அவரைப் பகடி செய்து களியாக்கிக் கொண்டிருந்தார்கள்.

வீடுதானா அல்லது வீடுபேறு பெற்று நோற்காமலே சுவர்க்கம் புகுந்திருக்கிறாரா? இருளடைந்தா இருக்கும் சுவர்க்கம்? இல்லை இது நரகத்தின் போகங்கள் வரிசையாக நிறுத்தி வைத்துச் சிந்தை கவரத் திட்டமிட்டா?

இது வீடுதானா? வீடென்றால் எப்போதும் கவிந்திருக்கும் மூலிகை வாடை எங்கே போனது? கலுவங்களில் மருந்து இடிக்கும் ஓசை என்னாச்சு? கலுவங்களுக்கு முன் அமர்ந்து ஓடக்காரன் பாட்டும், இறைவன் துதியும், நாடகப் பாட்டும் முணுமுணுத்தபடி மூலிகை வாடையை தீர்க்கமாக முகர்ந்தபடியிருக்கும் கற்றுக்குட்டி மருத்துவர்களெங்கே? மனைவி காவேரி எங்கே?

சட்டென்று ஓஓஓ என்று ஏதோ கொம்பு வாத்தியம் தொடர்ந்து முழங்கும் ஓசை எங்கிருந்து வருகிறது? கூட்டமாக பெரும் தேள்கள் பெட்டிக்கு வெளியே நகர்ந்து கொண்டிருப்பது அச்சமூட்டும் கனவு ஒன்று நிகழும்போது நடுவில் அமர்ந்திருப்பது போல் பிரமையையும் பிரமிப்பையும் ஒருசேர ஏற்படுத்தியது.

பிரதி நீலன் வைத்தியர் இருக்கும் பேழையின் மேல்மூடி திறந்து நூறு தேள்க் கால்கள் உள்ளே நீட்டி பிரதி நீலன் சுவாசிக்கிறாரா என்று உறுதி செய்வதுபோல் அசைந்து பெருஞ் சத்தத்தோடு மூடி திரும்பக் கவிந்து ஒரு வினாடி அதிர்ந்து மேலே கூரையாக அமர்ந்தது.

அந்த ஒலி கேட்ட பிரதி நீலன் இதெல்லாம் உணரப்படுவது தன்னால் தானா அல்லது வேறு யார்க்கோ அனுபவமாகிப் பார்வை மூலமும், வாடை, ஒலி ரூபமாகவும் தனக்குக் கடத்தப்படுகிறதா என்று புரியாமல் குழம்பினார்.

அந்த பெரும் மண்டபத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டதோடு மறுபடி இருள் திட்டுத்திட்டாகக் கவிந்தது. பிரதி நீலன் வைத்தியர் காலை உயர்த்திப் பேழையின் கூரையைத் தொட முயன்றார்.

கால் நீண்டு போனாலும் இன்னும் ஒரு முழம் அதிகமானாலும் கூரை தொட்டுவிடும் தூரமில்லைதான் என்று புலப்பட்டது. அவர் கரங்கள் பக்கவாட்டில் தடவ, அங்கே குமிழ் ஒன்று வார்த்திருப்பதை உணர முடிந்தது.

அந்தக் குமிழைக் கைப்பற்றித் திருக, பேழையின் கூரை மெல்ல உயர்ந்ததைக் காண அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. குமிழியைத் திருகியபடி இருக்க கூரை முழுக்கத் திறந்து அவருக்காகக் காத்திருந்ததைக் கண்டார்.

பக்கத்துப் பேழைகளில் பெருந்துயிலில் ஆணும் பெண்ணுமாக எல்லா வயதினரும் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் பேழையின் ஓரமாக நடக்க நடக்க கூரை வளைந்து கொடுத்தது. அடுத்த சில நொடிகளில் பேழையின் வெளியே வந்துவிட்டார்.

பெருந்துயில். இந்தச் சொல் தான் கருவி. மூடிய மனத்தைச் செதுக்கித் திறந்திருக்கிறது.

இவர் ஒரு நீலன். பிரதி நீலன் என்று சொல்கிறார்கள் இவரை. இன்னொரு நீலன் – அசல் நீலன் என்று விளிக்கப்படுகிறவர் அவர். அசல் நீலன் காஸ்மாஸ் பிரபஞ்சத்தில் வசிக்கும் தூசிக்குத் தூசி. இவர், பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்ச துகளின் துகள்.

சில நாட்களோ, ஒளியாண்டுகளோ, மாதங்களோ முன்னால், இங்கே, காஸ்மாஸ் பிரபஞ்சத்தில், அசல் நீலன் தேள்களின் ஊர்வலத்தில் படுத்துறங்கியபடி வந்ததைக் கூட்டத்தின் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார் பிரதி  நீலன்.

என்ன நடக்கிறது என்று பிரதி நீலனுக்குப் புரியும் முன்பு அவர் படுத்துறங்கியபடி, ஏமத்துயிலில் ஆழ்ந்து ஊர்வலத்தில் போகிறார். அசல் நீலன் ஊர்வலப் பாடையிலிருந்து வெளியே சாடி ஒரே வினாடியில் ஏமப் பெருந்துயில் மண்டபக் கோபுரத்தின் அருகே கொண்டு செலுத்தப்படுகிறார் என்பதைப் பார்த்தபடி பிரதி நீலன் துயிலப் போகிறார்.

ஆக அசல் நீலன் இந்தக் கோலாகலத்திலிருந்து வெளியேற, பிரதி  நீலனாக ஆல்ட் எஸ் பிரபஞ்சம் போக, நகல் நீலன் இதோ காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் ஏமப் பெருந்துயில் கண் விழித்துப் பேழையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.

கனஜோராகப் பசித்தது. ஒரு குன்று புளிக்குழம்பு பிசைந்த சோறுண்டு   ஒரு பெரிய ஊருணியையே பருகித் தாகம் தீர்த்துக் கொள்ள நாவும் வயிறும் ஏக்கம் நிறைந்த ஆர்வம் தெரிவித்தன.

பெரிய சுவர்கள் வளைந்து வளைந்து திரும்பும் ஒழுங்கைகள் மூன்று ஒன்றன்பின் ஒன்றாக எதிர்ப்பட்டு வழிவிட்ட நீடுவழிகள் திறந்திருக்க, வேகம் கூட்டி நடந்தார் பிரதி நீலன்.

அரங்கும் மண்டபமுமாக இந்தப் பகுதிக் கட்டிட அமைப்பு அலங்கரிக்கப்பட்டுமிருக்கிறது ஏன் என்று யோசிக்க, இல்லை, இது அதே கட்டிடமில்லை, அடுத்த மாளிகையைப் பேழைகளில் உறங்குவார் மண்டபத்தோடு இணைக்கும் அமைப்பு எனப் புரிந்தது.

பெரிதிலும் பெரிதான மண்டபத்துக்கு நடுவே ஒரு கிழட்டுத் தேள், உயிர் தவிர மற்ற சகல சௌகர்யங்களும் வாய்க்கப் பெற்று பிண கம்பீரமாகக் கிடந்தது.

நான்கைந்து பேழைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்த காற்று இல்லாத, புழுக்கம் மிகுந்தும் தொடர்ந்து சில்லென்ற அமைப்புமாகத் தெரிய அந்தத் தேட்சவம், என்றால் தேள் சவம், என்றால் செத்த தேள் கிடக்கும் கோலம் கண்டு அருவருத்து மூலைக்கு நடந்தார் பிரதி நீலன்.

பெரிய மேசைமேல் பழங்களும், இனிப்புகளும் அடுக்கிப் பரத்தியிருந்தது கண்டு பரபரப்போடு குவளையுண்டா குவளையில் நீருண்டா எனக் கண்கள் அலைந்திட பெரும் ஜாடியில் நிறைத்திருந்தது திராட்சை ரசம் என்று அதிநின்று எழும்பிய வாசனை சொன்னது.

கூடவே மனதை ஈர்க்கும் அடர்புளிப்புச் சுவையுண்டு என யூகிக்க வைக்கும் வாடையும் ஜாடியிலிருந்து   வந்தது. நாற்காலியைச் சத்தம் வராமல் இழுத்துப் போட்டுக்கொண்டு ஆகாரம் செய்ய உட்கார்ந்தார் பிரதி  நீலன்.

கொக்கு மாதிரி கழுத்து நீண்டிருந்த வெள்ளைப் பீங்கான் ஜாடியைச் சற்றே சாய்த்து கோப்பையில் திராட்சைச் சாற்றை வார்த்துவிட்டு, அடுமனையில் பாகம் செய்த மெல்லிய சிறு சச்சதுரப் படிவங்களான யவனர் உணவைப் பக்கத்தில் இருந்த மூடி போட்ட பீங்கான் பாத்திரத்தில் இருந்து எடுத்து  அருகில் வைத்த தட்டில் இட்டார்.

அடுத்து பழக்கூழில் சீனிச் சக்கரை குழைத்து வண்ணமிட்டுக் காய்ச்சிய இனிய பதார்த்தத்தை விழுதாகத் தட்டில் ஓரமாக இட்டார். உண்ணத் தொடங்கினார்.

பழக் கூழைச் சற்று இங்கே நகர்த்துங்கள்.

கரமுரவென்று மனிதம் கலக்காத ஒரு குரல் அருகில் கேட்க, கை நடுங்க தட்டை ஏறக்குறையத் தவறவிட்டார் பிரதி நீலன் வைத்தியர்.

அடர்த்தியான ரத்தினக் கம்பளங்கள் விரித்திருந்த அந்தத் தரையில் தட்டுகள் உருண்டிருந்தால் கூட  அவை சிதறியிருக்க வாய்ப்பில்லை. அவை எதிரில் இருந்த நீண்ட பெரிய பேழை திறந்து, மணி ஒலிக்க   அந்தரத்தில் நின்றிருந்தன.

 பிரதி நீலன் எழுந்து தட்டைக் கைப்பற்றி தன்னோடு பேசிய குரல் எங்கிருந்து வந்தது என்று சுற்றுமுற்றும் பார்க்க, பேழை உள்ளே சகல அலங்காரங்களோடும், பட்டுத்துணி உடுத்தியும் கிடந்த தேட்சவமான முதுபெரும் தேளரசின் உயிர் நீத்திருந்த உடலில் மறுபடி உயிர் படியும் ஆச்சரியகரமான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மன்னிக்கவும், மன்னிக்கவும். விருந்து புறத்திருக்க தாமுண்டல் சாவாம்; மருந்தெனினும் வேண்டற் பாற்றுண்டு என்கிறார் வள்ளுவரும். பிரதி நீலன் பாதிஇருட்டில் பார்த்துத் திருக்குறள் ஓதினார்.

விழிமின் விழிமின் எழுமின்  எழுமின். முதுபெரும்தேளர் முழங்கினார்.

தன் உயிர்ப் பெரும்பேழையை விட்டகன்று வெளியே வந்தபடி வாசனா திரவியம் மணக்கும் காலொன்றை பிரதி நீலனை நோக்கி நீட்டி அவருக்கு எதிரே வைத்திருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தார். கையைக் கீழே இறக்கி அசைத்து, மணிச் சத்தத்தை நிறுத்தினார்,

வருக வருக தேளரசுப் பெருநாட்டுக்கு நீலன் வைத்தியர் பெருந்தகையே. நான் இங்கே ஆட்சி செய்யும் பெருந்தேளரச பெருமானின் தகப்பனான முதுபெருந்தேளன். மூப்பு காரணமாக பதவி துறந்து உயிரும் துறந்து இங்கே முன்னூறு ஆண்டாக மீளாத் துயிலில் இருக்கிறேன். என்றாவது மறுபடி உயிர் பெறுவேன் என்று தேளுலக நம்பிக்கை காரணமாக அப்படி புத்துயிரோடு திரும்பும்போது அனுபவிக்க உணவு, உடை, அழகுத் தேள்ப் பையன்கள், அழகுமிகு தேள்பெண் கூட்டம், நிர்வாகக் கட்டாயத்தின் பேரில் தனிப் பெட்டியில் அடக்கிய ஆண் கரப்புகள்,  பெண் கரப்புகள் என்று எனக்காக உயிரோடு பேழைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதை இங்கே பார்க்கிறீர்கள். கரப்புகள். பார்க்கவே குமட்டும் பிராணிகள் அவை.

இங்கே கேடுகெட்ட  கரப்புகள் என் ஸ்பரிசத்துக்காக முன்னூறு ஆண்டுகள் காத்திருக்கின்றன. அவை இன்னும் ஐநூறு ஆண்டு கூட  கல்லுக் குண்டாக உயிர்த்திருக்கும்.

மற்ற பல பணியாளர்களும் எப்போதோ உயிர் நீங்கியானது.

கரப்புகளோடு உடல் உறவு யாராவது வைத்துக் கொள்வார்களோ. ஒரு கரப்பே மற்றொன்றை அருவருத்து விலகும் அசிங்கமான பூச்சிகள் அன்றோ அவை.

தன் பகடிக்குத் தானே நகைத்தபடி நாற்காலியிலிருந்து தரைக்கு  வரத் தொடங்கினார் முதுபெருந்தேளர்.

 உடல் தளர்ந்திருப்பதால் பின்னடுக்குக் கால்களில் ஒன்று நடைக்கு ஏற்றபடி முன்னால் ஏகாமல் தனியாகத் தரையில் தங்கிவிட்டது.

பிரதி நீலன் வைத்தியர் பயந்து அய்யப் பெருந்தகையே தங்கள் காலொன்று அங்கே தனியாகக் கிடக்கிறது பொறுக்கி எடுத்து வந்து தரவா எனக் கருணையோடு கேட்டார்.

அதொண்ணும் வேண்டாம் வைத்தியரே, வயோதிகம் காரணமாக உம் பல்லில் ஒன்றிரண்டு ஆடியாடி விழுந்தாலும் மற்றவை சீராக அல்லது பரவாயில்லை தகுதி பெற்று வாயில் வெற்றுவெளியைச் சித்தரித்து இன்னொரு முப்பது ஆண்டு பெருந்தொல்லை தராமல் இருப்பதுபோல் என் கால்கள் கழன்று வீழ்வது நடப்பதுதான்.

கவனித்தீர்களா, கால்கள் கழன்று வீழ்வது நடப்பதுதான். உங்கள் மொழியில் பகடியும் சிலேடையும் எவ்வளவு இயல்பாக அங்கங்கே வந்து விழுகிறது பாருங்கள். சரி அந்த ஆரஞ்சுப் பழக் கூழைச் சற்று இப்படி நகர்த்துங்கள் என்றபடி நாற்காலிக்குத் திரும்பி வந்து தட்டு நிறைய அடுமனைப் பண்டமும், யவனர் இனிப்பும் புளிப்புமாகக் குறுவாள் கொண்டு சிறு துண்டங்களாக வெட்டி, முள்கரண்டியால் குத்தி எடுத்து உண்ணத் தயாராக இருந்ததை வாயிலிட்டு மென்றார்.

 மென்றது முதுபெருந்தேளர். தட்டை ஏந்தி உண்டபடியே அவருக்கு அடிமை செய்ய உயிரோடு பேழையில் இடப்பட்ட பையன்கள் உறங்கிக் கிடந்த பேழைமேல் மையல் மீதூர முத்தமிட்டார். கூட இருந்த அழகுத் தேவதைகள் போன்ற இளம் கன்னியரை அவர் லட்சியம் பண்ணவே இல்லை.

நீங்கள் ஏமப் பெருந் துயில் எப்போதிருந்து ஆட்பட்டீர்கள்? வசதிகளும் சௌகரியங்களும் சிறப்பாக உள்ளன தானே? ஏதும் சுகவீனங்கள் இருந்தாலோ உபசரிப்புக் குறைவு என்றாலோ   உடனே சொல்லுங்கள். நான் உடனே சரியாக்கித் தருகிறேன். உயிர் இல்லாவிட்டாலும் இந்த உடல் இருக்கும்வரை நான் சிறப்பாகப் பணிபுரிய முடியும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. உங்களுக்கு சகசயனம் செய்ய கன்னியர், பையன்கள் வேணுமென்றால் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன்–

என்றபடி பேழைக்கு நெருக்கமாகக் கரப்புகள்  அசைய ஆரம்பித்திருப்பதை நகைப்போடு பார்த்தார் முதுபெருந்தேளர்.

மூன்றடி நீளமாக ஒரு கரப்பு வனப்பு காட்டிச் சிறகு விரிக்க முதுபெருந்தேளர் அந்த ஜந்துவின் தனியுருப்பை தூரத்தில் வைத்துக் காலால் வருடிப் பிணைத்தார்.

கரப்பானது உடல் சிலிர்த்து குறி வெடிக்கச் சுகானுபவத்தில் திளைக்கச் சட்டென்று கொட்டினார் கொடுக்கு உயர்த்தி.

இனிமேல் யார் கிட்டேயும் உன் அசிங்கம் பிடித்த உறுப்பைக் காட்டாதே என்று அந்தக் கரப்பை பேழைக்குள் அனுப்ப முனைந்தார்.  கரப்பு உடலெங்கும் வலியோடு பேழைக்கு வெளியே இருந்து தட்டுத் தடுமாறி உள்ளே போய் இறுதித் துயிலில் ஆழ்ந்தது.

இந்த இழிபிறவியோடு உறவில் ஈடுபட எதிர்பார்ப்பு வெண்டைக்காய். அவர் பிரதி நீலன் வைத்தியரைக் கூர்மையாகப் பார்த்தபடி சொன்னார்.

ஒரே ஒரு தடவை எப்படியோ கரப்பி ஒருத்தியைக் கண்டு காமுற்றேன். அந்த உடல்வாடை அடுத்த இருபத்துநான்கு மணி நேரத்தில் என் குடலை வாயில் சுருட்டி வந்து, உயிரையே பறித்து விட்டது.

சாப்பிடுங்கள். இதுவும் முன்னூறு வருடம் பழைய உணவா என்று சந்தேகமா? அடுமனைப் பண்டம் நிச்சயம் இன்றுகாலை புதிதாக வந்த உணவு. உணவும் பானமும் தினம், அதுவும் மூன்று முறை புதியதாக இங்கே என் மறு உயிர்த்தலை எதிர்பார்த்து படைக்கப்படுகிறது. உடலுக்கு ஏதும் சுகவீனம் தராது.  ஏதேனும் புகார் உண்டா?

பிரதி நீலன் தொண்டையைச் செருமிக் கொண்டார். அரசவையில் அரசன் கேட்டுத் தலையாட்டி ரசிக்க ஆசிரியப்பா என்று அகவல்      ஓசையாகவும், நல்ல வெண்பா இயற்றி உரக்கப் பாட்டுமில்லை  பேச்சுமில்லை என்று   செப்பலோசையாகவும்    ஓதுவதற்கான முன்னேற்பாடாகும் குரல் திருத்துதல் அது.  ஈதென்ன. அவர் அறிவிலும் வாயிலும் சரம்சரமாக வார்த்தையைப் போட்டுப் பேசு என்பார் யார்?

பேசலானார்.

பிரதி நீலன் உரைத்தது –

பெரியோய் கேண்மின். கூறியது கூறல் உண்டெனில் பொறுத்தருள்க.

ஐயா முதுபெருந்தேளரே உணவும்  தண்ணீரும்  இன்சுவை பழச்சாறும் தேறலும் எதுவும் குறை வைக்கவில்லை உங்கள் திருமகனார். எனினும் ஒரே ஒரு கேள்வி. சிற்சில ஆயிரம் ஆண்டுகள் உங்கள் எல்லோருக்கும் முந்தியவன் நான். இங்கே இந்தக் காலத்தில் இந்த இடத்தில் என்னை ஒரேயடியாகப் பிடுங்கி நட்டு இனி நான் மறுதுளிர்ப்பேன் என்றா எதிர்பார்க்கிறீர்கள்?

என்னைக் கவர்ந்து வருவதற்கு மாறாக, நீங்கள் எல்லோரும் நான் இருக்கும் காலத்துக்கு வந்திருக்கலாமே. உங்களுக்கும் நாலு ஊர் நாலு மக்களைப் பார்த்ததாக இருக்கும். எனக்கும் சஞ்சீவனி உண்டாக்க மிகப் பெரும் யத்தனங்களை ஒரே மனத் திட்பத்தோடு, உங்கள் அனைவரின் மாறாத ஒத்துழைப்போடும் மேற்கொள்ள இயலும்.

ஆகவே பெரும் தேளர் அதுவும் முதுபெருந்தேளரான நீர் என்னை எம்முலகம் அனுப்பி வையும். உமக்கே என் வணக்கங்கள். நமஸ்காரங்கள். உம் கால் பிடித்து வலி நீக்குவேன். சயன கிரஹத்தில் நீர் சிறு துயிலில் இணையோடு கண் வளர அருகே முகம் திருப்பி நின்று பனை ஓலை விசிறி கொண்டு வீசுவேன். பின் சுத்தம் செய்து கொள்ள வெதுவெதுப்பான நீர் எடுத்துச் செம்பில் வார்ப்பேன்.

என்றும் இன்னும் பலவாறு பிதற்றி, தன்னோடு உரையாடுவது ஒரு தேள் என்பதையும் மறந்து முதுவர் காலைப் பிடித்து மன்றாடினார் பிரதி நீலன் வைத்தியர்.  

முதுபெருந்தேளர் மொழிந்தது யாதெனில் –

இப்போது என்ன நடந்து போனது நீலன் அவர்களே. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் நீங்கள் இங்கிருந்து புறப்பட்டு விடலாம். இந்த வாரக் கடைசியில் சஞ்சீவனி 500 மூலிகை இலை விடும். அது செழித்து வளர ஒரு வாரம் அப்புறம் மருந்து உண்டாக்க இன்னும் பத்தே பத்து நாட்கள். என்ன பார்க்கிறீர்கள்?

 நீங்கள் வரப்போகிறீர்கள் எனத் தீர்மானிக்கப் பட்டது முதல் உம்மைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேன். ஊழியக்காரிக்குக் கச்சும் இடைதுணியும் துவைத்துக் கொடுத்து ரகசியக் காதல் செய்தது வரை. அவ்விளங்கிழவி மேல் காமமுறுதலெண்ணி வெட்கப்பட வேண்டாம். என்னைப் போல் கரப்போடு கலக்க வேண்டிய அவசியம் இல்லையே.

நீங்கள் தேளினத்தை என்றும் மறக்க முடியாத ஆயுள் அதிகரிப்பு மூலம் உன்னதமாக்கப் போகிறீர்கள். பொன்னும் மணியும் பவிழமும் வைரமுமாக உங்களுக்கு என் மகன் பரிசு கொட்டிக் கொடுக்கப் போகிறான்.

ஐயா எனக்குப் பரிசு எதுவும் வேண்டாம். மருத்துவர் கைகூப்பினார்.

உங்களுக்கு வேண்டாம். எனக்கு வேண்டியிருக்கிறதே. சஞ்சீவினி மருந்து பருகித்தான் நான் சாவிலிருந்து மீளப் போகிறேன்.

நீங்கள் இறக்கவில்லை என்பதற்கு அத்தாட்சி இப்போது நீங்களென்னோடு உரையாடிக் கொண்டிருப்பது.

அது அரைமணி, கால் மணி நேரம் பேழையில் மிதமாகக் கடந்து செல்லும் மின்சாரத்தின் நல்விளைவு. திடமான ஆயுள் நீடிப்பது உங்கள் மருந்து  பருகித்தான் கிட்டுமென இருக்கிறதே.

ஐயா ஒரு உண்மையைச் சொல்கிறேன். நான்.  நான் பிரதிநீ.

திடீரென்று அந்த உரையாடல் நின்றது,

அந்த மண்டபத்தின் மின் தொடர்புகள் மற்றும் ஒலி,ஒளி எல்லாம் நின்றுவிட, முதுபெருந்தேளரை வெளியிலிருந்து வந்த வலிமை வாய்ந்த சக்தி பேழைக்குள் கிடத்தி அசைவு நிறுத்தி வெளியே போனது.

தனியாக இருட்டில் உட்கார்ந்து பிரதி நீலன் வைத்தியர் ரொட்டி தின்று கொண்டிருந்தார்.               

தொடரும்.

Series Navigationபுலித்தோல்திரு.அ.கணேசன் அவர்களுக்கு அஞ்சலி
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *