ஆல்ஃபா’ என். யு – 91

This entry is part 4 of 8 in the series 19 ஜனவரி 2025

சோம. அழகு

தேநீர் கடைக்கும் நகல் எடுக்கும் கடைக்கும் பொதுவான இடத்தில் நின்று இனிப்பு தூக்கலான ஒரு கோப்பை பாலை ஆதினி மிடறுகளாய் மாற்றிக் கொண்டிருந்த வேளையில், வெகு நாட்களாகக் கேட்டிராத ஆனால் மனதிற்கு மிகவும் நெருக்கமான, கேட்டவுடன் மொத்தமாக உருகச் செய்கிற பாடல் ஒன்றை ஒலித்தவாறே பேருந்து ஒன்று சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தது, இல்லை! இல்லை! ஆதினிக்காகக் காத்துக் கொண்டிருந்தது. பிடித்த பாடலை நினைத்தபொழுதெல்லாம் கேட்கக் கிடைப்பதை விட இவ்வாறு அரிதாக ஒரு அற்புதமாக போகிற போக்கில் வழியில் தானாக வந்து செவிக்கு இன்பம் பயக்கும் பாடல்கள் தாம் ஒவ்வொரு நொடியையும் வெகுவாக ரசிக்க வைக்கும் உவளுக்கு. 

            ஆதினிக்கு அப்பேருந்து செல்லும் திசையில் வேலை எதுவும் இருந்திருக்கவில்லைதான். ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாள் போலும் – ஜன்னலோர இருக்கை. சுள்ளென்ற வெயிலிலும் பேருந்தின் ஓட்டத்தால் முகத்தில் அறைந்த அனலை அப்பாடல் இதமாக்கித் தந்து கொண்டிருந்தது. நடத்துநர் வந்து நிற்க இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தள்ளி இறங்கிக் கொள்வதாகக் கூறிப் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டாள். இரண்டாம் நிறுத்தத்திற்குக் கொஞ்சம் முன்னாலேயே உவளுக்குப் பிடித்த பாட்டு முடிந்துவிட்டது. பார்த்தால்… அடுத்ததும் விருப்பப்பட்டியலில் உள்ள பாடல். ஏதோ குருட்டுத் தைரியத்தில் கடைசி நிறுத்தம் வரை பயணச்சீட்டை நீட்டித்துக் கொண்டாள். வரிசையாக உவளுக்கு ரொம்பப் பிடித்த பாடல்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகப் பிடித்தமான ஒத்தின்னியங்கள்(symphonies) வேறு. கொஞ்ச நேரம் நிஜ வாழ்வில் மனித உருவில் சுற்றி இருக்கும் முரண்களும் இம்சைகளும் தொந்திரவு செய்ய மறுத்து உவளது நினைவிலிருந்து அகன்றன. அதற்கு முன் பல முறை உவளை ஆட்கொண்ட விந்தை உணர்வு தற்போதும் மேலெழுந்தது. ‘தான் மட்டுமே நிஜம்; பிறரெல்லாம் மாயை’ போலவும் தான் ஒரு பாவனை நிரலில் இருப்பதாகவும் தோன்றியது.

            இப்படியெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லைதானே? அதனால்தான் அந்தக் கற்பனையான பேருந்து பயணத்தினின்று இறங்கிப் பாலைக் குடித்து முடித்துத் தன் இரு சக்கர வாகனத்தை அடைந்தாள் ஆதினி.

‘இப்படியே இப்பேருந்திலேயே எனக்கான இசைக் கோர்வைகளைக் கேட்டு ரசித்துக் கொண்டே வாழ்வின் பயணத்தை மேற்கொள்ள இயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நிதர்சனத்தில் வாழ்வைக் கழித்துக் கொண்டோ அல்லது இழுத்துப் பிடித்து நகர்த்தித் தள்ளிக் கொண்டல்லவோ இருக்கிறோம்?’ – உவளது எண்ணவோட்டங்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்ததுக் கிளம்பிச் சென்றது பேருந்து.

எதார்த்தத்திலும் ஆதினிக்குப் பிடித்தமான பட்டியலை அப்படியே அச்சுப் பிசகாமல் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் சக பயணிகளோடு அப்பேருந்து அவ்வப்போது மிக அரிதாக நட்பின் உருவில் வராமலா போய்விடும்?

வீடு திரும்பியவள் மனதின் வழக்கமற்ற அமைதியும் பல வழக்கமான நாட்களின் அயற்சியும் மொத்தமாக அன்று அழுத்துவதைப் போல் உணர்ந்ததால் கொஞ்சம் சீக்கிரமாகவே படுக்கையில் விழுந்து தூங்கிப் போனாள். மறு நாள் ஓட்டத்திற்குத் தயாராக வேண்டுமே?

                                                                    1

 திடீரென தன்னைச் சுற்றி நிறைய வெளிச்சம் படர்வதையும் மிகப்பெரிய மின்விசிறி சுழல்வதைப் போன்ற ஒரு சத்தத்தையும் உணர்ந்தாலும் அளவற்ற சோர்வு அவற்றையெல்லாம் கண்டு கொள்ளவோ உவளைக் கண் விழித்துப் பார்க்கவோ அனுமதிக்கவில்லை. கழுத்தில் கடித்த கொசுவைக் கூட அடிக்க முடியாதவாறு கைகள் கட்டுண்டு கிடந்ததைப் போல உறக்கத்திலிருந்து நித்திரைக்குச் சென்றிருந்தாள்.

            நெடுநேரம் கழித்து மெல்ல உறக்க நிலைக்குத் திரும்பி ‘இன்னும் கொஞ்ச நேரம்… இன்னும் கொஞ்ச நேரம்’ என்று படுக்கையிலேயே புரண்டு கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்குப் பிறகு யாரும் தன்னை எழுப்ப வராதது கண்டு கண் விழித்துப் பார்த்தாள். பார்த்தால்…. அறையே முற்றிலும் மாறிப்போய் இருந்தது. வெள்ளீயத் தகடுகளால் ஆன அறையில் ஆங்காங்கே நிமிளைப் படிகக்(bismuth cyrstal) கற்கள் பதிக்கப்பெற்று அவ்வளவு அழகாக இருந்தது. ‘தனது அறைதானா?’ என வியந்து கொண்டே சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.

            ஜன்னல் இருந்த இடத்தில் ஒரு பளிங்கு பதிக்கப்பட்டிருந்தது. திரைச்சீலை ஒன்று அதைப் பாதி மூடியிருந்ததைக் கண்டு மெல்ல எழுந்து சென்று அதை விலக்கினாள். இருளின் ஊடே அவ்வப்போது இராட்சதக் கற்கள் பறந்து கொண்டிருந்ததையும் தூரத்தில் நட்சத்திரங்களின் மினுக் மினுக் ஒளியையும் கண்டாள். வெளியே இருள் சூழ்ந்திருப்பதாக நினைத்தவளுக்கு ஒரு கணம் தானே ‘வெளி’யில் இருப்பதாகத் தோன்றியது. அருகில் சுவற்றில் ஏதோ எழுதியிருப்பது போல் தெரியவும் கூர்ந்து நோக்கினாள். “Datsuzoku” என எழுதியிருந்தது கண்டு “ஓஹோ!” என்றவாறு நகைத்துக் கொண்டே திரும்பினாள். அவ்வார்த்தையின் நேரெதிரே “Your Fernweh ends here” என்ற வாசகம் இருந்தது.

‘ஒருவேளை கனவா?’ என ஐயம் தோன்ற தன்னைக் கிள்ளிப் பார்த்தாள். வலித்தது. நம்ப முடியாமல் மருண்டாள். துயில் கலைந்தும் கலக்கம் கலையாதது போல் இருந்தது. ‘விழித்துக் கொண்டால் குழப்பம் மறைந்து விடும்’ என்றெண்ணி மீண்டும் மீண்டும் கண்களை அழுத்தமாக மூடி மூடித் திறந்தாள். எதுவும் மாறவில்லை.

 அறையின் கதவு அடிப்படை நாகரிகம் கருதி இருமுறை தட்டப்பட்டுப் பின் தானே திறந்தது. மிக நேர்த்தியாக புடவை அணிந்திருந்த ஓர் இளம்பெண் உள்ளே வந்தாள். முன் பின் பார்த்திராத முகம். “வணக்கம் ஆதினி!” என்று உவளது பெயர் கொண்டு விளித்தது கொஞ்சம் வியப்பளித்தது. அந்த ஆச்சரியத்திலிருந்து விடுபடும் முன்னரே “உனக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் அந்த அறையினுள் உள்ளது” என்று உவளின் இடதுபுறம் இருந்த ஒரு கதவை நோக்கிக் கை காண்பித்தாள். “குளியலறை உன் வலது புறம் உள்ளது. அரை மணி நேரத்தில் தயாராக இரு. நான் வந்து அழைத்துச் செல்கிறேன். பயப்பட வேண்டாம். நீ பாதுகாப்பாகத்தான் இருக்கிறாய்” என்று சொல்லி கதவை மெதுவாகச் சாத்திச் சென்றாள்.

இப்போதுதான் கொஞ்சம் பதட்டம் பிடிக்கத் துவங்கிற்று உவளுக்கு. ஏராளமான கேள்விகள் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்தன. தாயாராகத் தொடங்கினாள். மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் அந்தப் பெண் வந்தாள்.

“கிளம்பலாமா?” என்ற அப்பெண்ணின் கேள்வியை ஆணையாகக் கருதிப் பின் தொடரத் துவங்கினாள் ஆதினி.

“நான் இப்போ எங்கே..” – ஆதினி கேட்டு முடிப்பதற்குள் குறுக்கிட்ட அப்பெண் “உன் எல்லா கேள்விகளையும் சிறிது நேரம் மட்டும் ஒத்திப் போடு. ஒவ்வொன்றுக்கும் நிச்சயம் பதில் தருவோம்” என்று சிநேகமாகப் புன்னகைத்தாள்.

எப்படி எப்படியெல்லாமோ வளைந்து நெளிந்து சென்றது பாதை. பாதையின் இருபுறச் சுவர்கள், மேற்கூரை, தரை என எல்லாமே முகம் பார்க்கும் கண்ணாடிகள். நிச்சயம் யாரின் உதவியும் இல்லாமல் தன் அறைக்குத் திரும்ப இயலாது என உணர்ந்தாள். ஒரு பெரிய கூடத்தை அடைந்தார்கள். நல்ல வெளிச்சமான கூடம். சிற்சில வண்ணப் பூக்களைக் கொண்ட செடிகள் அவ்விடத்தில் இருக்கும் யாரையும் ஆசுவாசப்படுத்தும்.

ஆங்காங்கு சிலர் நின்று கொண்டும் நிதானமாக அமர்ந்திருந்தும் அளவளாவிக் கொண்டிருந்தனர். ஆதினியின் வருகை அனைவரின் கவனத்தையும் பெற்றதைப் போல் எல்லா கண்களும் உவளை எதிரொளித்துக் கொண்டிருந்தன. மிடுக்கான ஓர் இளைஞன் வந்து ஆதினியைப் பார்த்து ஏதோ கூறினான். உவள் கேள்விப்பட்ட எந்த மொழியும் அல்ல அது. உவளது புருவங்கள் சுருங்குவதைக் கண்டு எதையோ மறந்தவனாய் அழைத்து வந்த பெண்ணைப் பார்த்தான். அவனது ஏவலைப் புரிந்து கொண்டவளாய்த் தன் தலையை மேலிருந்து கீழாக ஒரு முறை அசைத்துப் பின் கையிலிருந்த கருவியில் பச்சை நிறப் பொத்தானை அழுத்தினாள். இப்போது ஆதினி முன் திரை ஏதும் இல்லாமல் காற்றில் “Elysium உன்னை வரவேற்கிறது” என்று தோன்றி மறைந்தது.

“எனது கேள்விகளை எப்போது கேட்கலாம்?” என்று தன் அகச்சூழலுக்குப் பொருந்தாத நிதானத்துடன் கேட்டாள் ஆதினி.

புருவங்களை உயர்த்தியவாறே தலையை ஒரு புறமாகச் சாய்த்து உவளை வித்தியாசமாகப் பார்த்தான். முகபாவனைகளை எவ்வளவு இயற்கையாக வெளிப்படுத்த முற்பட்டானோ அவ்வளவு எந்திரத்தனமாகத் தெரிந்தது. “இன்னும் சிறிது நேரத்தில்….” என்ற அவன் பதில் மீண்டும் ஆதினியின் முன் காற்றில் மிதந்தது. அது மறைந்து “என் அலுவலகத்திற்குச் செல்லலாம்” என்ற அவனது வரவேற்பு மினுங்கியது.

தளத்தின் ஓரிடத்தில் திடீரென மூன்று வட்டத் தகடுகள் முளைத்து மேலெழும்பி வர ஒவ்வொருவரும் ஒரு தகட்டின் மீது ஏறி நிற்க அது பல அடுக்குமாடிகளைக் கீழ் தள்ளி உயரப் பறந்தது. இப்போது நுனி நாக்கைக் கடித்து மீண்டும் ‘இது கனவல்ல’ என்று உறுதிபடுத்திக் கொண்டாள், ஆதினி. அவனது அலுவலகத்தை அடைந்தார்கள்.

                                                               2

நல்ல விசாலமான வெள்ளை நிற அறை. ஒரு பெரிய மேசை, ஒரு சுழல் நாற்காலி, இன்னொரு ஓரத்தில் ஒரு மெத்திருக்கை, அதன் முன் ஒரு சிறிய தேநீர் மேசை… அவ்வளவுதான். கீழ் தளத்தில் பார்த்தது போல் ஒரு சில செடிகளும் போன்சாய் மரங்களும். துடைத்துச் சுத்தப்படுத்தப்பட்டதைப் போல தேவையில்லாத எதுவும் அங்கில்லை. அந்த இளைஞனும் ஆதினியை அழைத்து வந்த பெண்ணும் உவளை அமரச் சொல்லிப் பணித்தனர்.

            மூவரும் அமர்ந்த பின் அந்த இளைஞன் பேசத் துவங்கினான்.

            “நீ இப்போது பேரண்டத்தின் மிக உயரிய விண்கலத்தில் இருக்கிறாய். இங்கு இருப்பதில் நீ மட்டுமே பூலோகவாசி. நாங்கள் வேற்று கிரகவாசிகள். எங்கள் மொழி உனக்கு மட்டும் புரியுமாறு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மொழிபெயர்க்கும் கருவி செயல்படத் துவங்கிவிட்டது. அதைத்தான் வார்த்தைகளாகக் காற்றில் காண்கிறாய். உன் கண்களுக்கு மட்டுமே புலப்படும். அதேபோல் நீ பேசுவதும் எங்களுக்குப் புரிவதற்கு ஏற்பாடுகள் செய்தாயிற்று. இனி நமது கருத்துப் பரிமாற்றங்களுக்குத் தடையேதும் இருக்காது”

            “அப்போ… ‘வேற்று கிரக வாசிகள்’ புனைவல்லாமல் உண்மைதானா?” என ஆச்சரியம் பொங்கச் சிரித்தாள் ஆதினி.

            “ஒன்றல்ல..இரண்டல்ல… நிறைய கிரகங்களில் விதவிதமான உயிரிகள் உங்களை விட மேம்பட்ட அறிவுநிலையில் இருக்கிறார்கள்” – அப்பெண் மட்டும் அழகாகத் தமிழில் கூறினாள்.

            “உங்கள் பூமியில் கூட மனிதர்களோடு மனிதர்களாக எங்களில் நிறைய பேர் தற்காலிகமாக வருவதும் போவதுமாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று அவன் கூற,

            “ஹார்வார்டு பல்கலைக்கழகம் இதைப் பற்றி கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றாள் ஆதினி. சிறிது இடைவெளி விட்டு “உங்களை நான் எவ்வாறு விளிக்க வேண்டும்?” என்று கேட்டவளுக்கு இன்னொரு விந்தை காத்திருந்தது.

            “நமது மொழிகள் வேறென்பதால் எங்களது பெயருக்கு ஏற்ற எழுத்துரு உங்களின் எம்மொழியிலும் கிடையாது. உனக்கு எங்கள் சொற்கள் எல்லாம் அலைவரிசையை எட்டிப் பிடிக்கப் போராடும் ரேடியோ சத்தத்தோடு அலையோசையின் இரைச்சலைக் கலந்த மாதிரிதானே கேட்கிறது? எங்கள் பெயர்களும் அவ்வாறே. உனக்குக் கூட எங்கள் மொழியில் ஒரு பெயரிட்டிருக்கிறோம். உனக்குப் பரிச்சயமான ஒலிகளின் அருகில் சொல்வதாயிருந்தால்  ஆல்ஃபா’ என். யு-91”

             “என்ன ஒரு நூதனமான பெயர்!” என வெடித்துச் சிரித்தாள். பின்னர் அவர்களைப் புண்படுத்திவிட்டோமோ என்றெண்ணி, “மன்னிக்கவும். ஏதோ விண்கலன் பெயர் மாதிரி இருந்துச்சா… அதான்…No offense” என்று தயங்கியபடியே கூறினாள் ஆதினி.

            “None taken” என்று முறுவலித்தான்.

            பேசிக்கொண்டிருக்கும் போதே ஆதினியின் தலையில் வார் இல்லாத தங்க நிற தலைக்கவசம் ஒன்று பொருத்தப்பட்டது.

            “ஐந்து நொடிகள் மட்டும் அசையாதிரு” என்றவன் தன் வசம் இருந்த கையடக்க ஒளி ஊடுருவும்(transparent) எந்திரம் ஒன்றில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தான். “உன் மூளையின் வரியோட்டத்தை ஊடறிந்து பதிவு செய்கிறோம். உங்கள் கோளில் கைரேகை, கருவிழி ஆகியவற்றைக் கொண்டு அடையாளத்தைத் தனித்துவப்படுத்துவதை போலத்தான்… இது எங்கள் வழிமுறை”

            “பூமியிலும் AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது…” என்று அதன் பெருமைகளைக் கூற ஆரம்பித்தவள் “அது மிகவும் பழமையான அடிப்படையான ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்வதாயிருந்தால் எங்கள் குழந்தைகளுக்கே கூட அது சிறுபிள்ளை விளையாட்டு” என்ற அப்பெண்ணின் குறுக்கிடலில் வாயடைத்துப் போனாள்.

            “மனங்களில் வக்கிரத்தையும் குரூரத்தையும் அனுமதிக்கும் மனித இனத்திற்கு எங்கள் அடிப்படை தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான தகுதி கூட கிடையாது. இன்னொரு கோணத்தில் இருந்து சொல்வதாயிருந்தால் ஓர் உயிரிடம் இயல்பாக இருக்க வேண்டிய (அடிப்படை)அறிவு, அபூர்வமாகப் புதையுண்டு கிடக்கும் கலையுணர்வு என எல்லாவற்றையும் உங்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சமன் செய்யப் பார்ப்பீர்கள். மிகச் சாதாரண உதாரணம் – நீங்கள் கற்றுணர்ந்ததாகக் கருதப்படும் ஒரு மொழியில் சேர்ந்தவாக்கில் இரு வாக்கியங்கள் பிழை இல்லாமல் எழுதக் கூட AIதானே உதவுகிறது” – அவன் சற்றே காட்டமாகக் கூறினான்.

இதற்குள் “எல்லாம் பதிவு செய்தாகிவிட்டது” என்றபடி தலைக்கவசம் கழட்டப்பட்டது.

            “எதற்கு இதெல்லாம்?” – குழம்பியவாறே கேட்டாள் ஆதினி.

            “உன் உண்மையான இயல்புதான் எங்களுக்குத் தேவை. இங்கு எச்சூழலிலும் நீ நீயாகத்தான் இருக்கிறாய் என்று எங்களுக்குத் தெரியவேண்டும். மீறினால் உன் உடலில் உண்டாகும் சிறு மாற்றத்தையும் இக்கருவி ஒலி எழுப்பிக் காட்டிக் கொடுத்து விடும்”  

            தான் கண்காணிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே இதயத்துடிப்பைக் கூட்டியது உவளுக்கு. கருவி அதைக் காட்டிக் கொடுக்க,

“நீ நிதானமாகவே இரு…. ஹ்ம்ம்… எல்லோரும் உன்னைச் சந்திக்க ஆவலாய் உள்ளனர். உனக்குச் சம்மதம் என்றால் இந்த அறைக்கு வெளியே கூடியிருக்கும் எல்லோரையும் சந்தித்து வரலாம்” என்று ஆதினியை ஆசுவாசப்படுத்த முயன்றான்.

            “தாராளமாகப் போகலாம். அதற்கு முன் இன்னொரு சந்தேகம். வேற்று கிரகவாசிகள் எல்லோருக்கும் மனித உருவம்தானா? நான் திரைப்படங்களில் அப்படி காணவில்லையே?”

            “எங்கள் உருவம் நிறம் தன்மை எதுவும் இதுவல்ல. திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டவையும் அல்ல. நீ முதன்முறை எங்களைப் பார்க்கையில் அதிர்ந்து விடக் கூடாதில்லையா? நீ எங்களிடம் எவ்வித மனத்தடையும் இன்றி சகஜமாகப் பழகும் வரை எங்களுக்கும் உனக்கும் ஒருவர் மீது ஒருவர் உடைக்க இயலா நம்பிக்கை உருவாகும் வரை நாங்கள் உனக்குப் பழக்கமான இவ்வுருவைத் தேர்வு செய்துள்ளோம்”

“ஹ்ம்ம்… என் ஒருத்திக்காக ஏன் எல்லோரும் இவ்வளவு மெனெக்கெடுகிறீர்கள்?”

            “நீ எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவள்”

            அறையின் கதவு திறக்கப்படவும் மனதை அரித்துக் கொண்டிருந்த வினாக்கள், மிரட்சி தரும் கலக்கம்…. எல்லாவற்றையும் மீறி உவளுள் ஆர்வமும் குதூகலமும் விநோதமாக ஊற்றெடுத்தன.

                                                                        3

            மூவரும் சற்றே அறையை நீங்கி வெளியே வந்தார்கள். நிறைய பேர் அக்கூடத்தில் குழுமியிருந்தார்கள். அவர்களுள் ஏதோ தன்னைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என உணர்ந்தாள் ஆதினி. அவர்களது பேச்சுகள் தன் கண் முன் ‘Ulotrichous’ என்னும் வார்த்தையாகப் பளிச்சிடவும் மென்னகை பூத்தாள்.

            “இவ்வார்த்தை எனக்குத் தெரியும் எனினும் இது என் தாய்மொழி இல்லை” என்று உடன் நின்ற அப்பெண்ணின் காதோரம் மெதுவாகக் கூறினாள்.

            “தெரியும். உன் தாய்மொழியில்தான் எல்லாம் மொழிபெயர்க்கப்படும் என்று நாங்கள் கூறவில்லையே. ஆனால் உனக்குத் தெரிந்த வார்த்தைகளாகத்தான் இருக்கும். உனது logolepsyஐ கருத்தில் கொண்டு தனித்துவமாக இவ்வாறு வடிவமைத்தோம்” என்று மறுமொழிந்தாள் அப்பெண்.

            இதற்குள் பலரும் ஆதினியைச் சூழ்ந்து ஒரு குழந்தையின் ஆச்சரியத்தோடு உவளை அணுகினர். ஒருவள் உவளது கைகளின் மென்மையை உணர்ந்து கொண்டிருக்க இன்னொருவன் உவளது தலைமுடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வளவு இழுத்து நேராக்கினாலும் சுருண்டு கொள்ளும் முடிகள் அவனுக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்ததைப் போல் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.           

அவ்வளவு நேரம் படர்ந்திருந்த லேசான படபடப்பு கொஞ்சம் குறைவது போல இருந்தது.

            யாரோ ஒரு புதிய பெண்மணி அக்கூடத்தினுள் நுழைய அனைவரும் மிகுந்த மரியாதையுடன் வழிவிட்டு நின்றனர். ‘யார் இவர்?’ எனத் தெரியாமல் ஆதினி விழிக்க உடன் இருந்தவள் விளக்கினாள் – “இப்பேரண்டத்தின் கோள்களை நிர்வகிப்பதும் எல்லா உயிரிகளை வழிநடத்திச் செல்வதும் இவர்தான். அளப்பரிய ஞானம் கொண்டவர்”

            “அவிரா” என்று உச்சரித்தாள் ஆதினி. அனைவரின் கண்களுக்கும் அவ்வார்த்தை மொழிபெயர்ந்து புலப்பட, ஒருமித்து ஆர்ப்பரித்தனர்.

            “மிகவும் பொருத்தமான பெயர். நன்றி” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அவிரா.

             “மன்னிக்கவும். எனக்கு வேறு எப்படி உங்களை அடையாளப்படுத்துவது என்று தெரியவில்லை. ஏற்கெனவே இருக்கும் உங்கள் பெயரை அவமதிப்பதாகக் கொள்ள வேண்டாம்” என்று தயங்கியபடியே கூறினாள்.

            “நிச்சயமாக இல்லை. உங்கள் கோளின் ஆதி மொழி அல்லவோ? மாபெரும் கௌரவமாகத்தான் கருதுகிறேன்” என்று பெருந்தன்மையோடு கூறிய அவிராவைத் தொடர்ந்து அனைவரும் தங்களுக்கான பெயர் தேடலில் இறங்கினர். ஒரு சிலர் உவளிடம் வந்து ஆலோசனை பெற்றார்கள்.

             ஆதினியுடன் இருக்கும் பெண் ‘அதிரா’ என்றும் அந்த இளைஞன் ‘வியன்’ என்றும் பெயர் பெற்றார்கள். இப்படியாக Elysium முழுக்க அதியன், சால்பு, இளன், வழுதி, அழிசி, அந்துவன், அவியன், மதி, அயினி, சதிரி, ஐயை, அலரி……… எனத் தமிழ்ப் பெயர்களாக ஒலித்துக் காற்றிற்கு இனிமை சேர்த்தன. அவிரா, அதிராவிடமும் வியனிடமும் ஏதோ கூறிவிட்டு விடை பெற்றுக் கொண்டார். என்னவென்று தெரியாவிட்டாலும் அதன் முக்கியத்துவத்தை அவ்விருவரின் முகங்களிலும் இருந்து அறிந்து கொண்டாள்.

அனைவரும் ஆதினியிடம் கதைப்பதற்கான தருணத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அதைப் புரிந்து கொண்ட அதிரா அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு “உங்கள் ஊரில் இப்பெயர்கள் புழங்குகின்றனவா?” என்னும் கேள்வியால் தொடங்கி வைத்தாள்.

            “ஹ்ம்ம்… பெரிய அளவில் இல்லை. எங்காவது குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இடுவது உண்டு. ஆனால் அதிலும் சிலர் அடைமொழியாக ‘சாய்’ சேர்த்துத் தமிழை மெருகூட்டும்(!) உன்னத நடைமுறையைக் கொண்டவர்கள்” என்று சொல்லிச் சிரித்தாள் உவள். சுற்றி இருந்தவர்கள் புருவங்களைச் சுருக்கித் தலையை இட வலமாக ஆட்டி பின் சிரித்தனர். ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் செய்ததில் மனித பாவனைகளைப் பிரதிபலிக்கும் பயிற்சியில் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

            “நீங்கள் மட்டும் எப்படி தமிழில் கதைக்கிறீர்கள்?” என அதிராவிடம் கேட்டாள்.

            “உங்கள் கோளில் உள்ள மொழிகளிலேயே தமிழ் போல இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியை மேற்கோள் காட்டிய பெருமிதத்தில் கண்களைச் சிமிட்டினாள்.

                                                                        4

அவர்களுடன் பல விஷயங்களைப் பற்றி பேசப் பேச “எனக்கும்தான்”, “நானும்தான்” என அதிகமாகப் புழங்கிய வார்த்தைகளில் ஆழமாக வேரூன்றியது நட்பு. எவ்வளவுதான் பட்டியலிட்டு இவையினால்தான் என அறுதியிட்டுக் கூற முற்பட்டாலும் இன்னும் இன்னும் ஏதோ விடுபட்டதைப் போல விளக்க முடியாத ஒரு பந்தம்… ஒரு பிணைப்பு. சரி… எதற்காக இவ்வளவு மெனக்கெடுவானேன்? இனையர் இவரெமக்கு கின்னம்யாம் என்று வரையறுத்து புனையினும் புல்லென்னும் நட்பாக மாற்ற விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டாள் ஆதினி. இந்த நட்பு உடையவே உடையாது. ஏன்? ஒரு சிறு விரிசலுக்குக் கூட இடமில்லை என அவர்களுக்கு ஆணித்தரமாகத் தோன்றியதன் விளைவாக ஆதினியின் இயல்பை “Eunoia” என வரையறுத்தனர்.  

அந்த நட்பு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையைத் தந்தது உவளுக்கு. அவர்கள் அனைவரும் தனக்குப் பிடித்த பாடல்களாகத் தெரிந்தனர் உவளுக்கு. “Solitude is better than bad company. Right people will eventually find their way to you” – அத்தனை நாள் தான் விரும்பும் தனிமையை நோக்கி எறியப்பட்ட கேள்விக்கணைகளுக்கு பதிலாகக் கிடைத்த அவர்களைப் பார்த்துப் பூரிப்படைந்தாள்.

அங்கு வந்து வெகு நேரம் ஆனது போலும் தான் ஒன்றும் சாப்பிடாமல் இருப்பதும் நினைவுக்கு வர, தனக்குப் பசியோ தாகமோ எடுக்காததும் நினைவிற்கு வந்தது. இயல்பாகவே தனக்குப் பசியே எடுக்காதது குறித்துத் தன் வீட்டினர் தன்னை வேற்றுகிரகவாசி எனக் கிண்டல் செய்வதும் நினைவிற்கு வந்தது.

 “நீங்கள் என்ன மாதிரியான உணவை உட்கொள்கிறீர்கள்?” ஆதினியின் கேள்வி அனைவருக்கும் ஆச்சரியமாகவும் புதிதாகவும் இருந்தது. ‘ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டோமா?’ என விழித்தாள். அவர்கள் சிரித்தனர்.

“நாங்கள் சுவாசிக்கும் காற்றிலேயே தேவையான அனைத்துத் தாதுக்களும் சத்துக்களும் நிரம்பியுள்ளன. அப்படித்தான் வடிவமைத்துள்ளோம். உன் உடலில் ஏதேனும் சத்துக் குறைபாடு ஏற்பட்டால் சுற்றுச்சூழல் தானாக அதை உணர்ந்து உனக்குத் தேவையானவற்றைக் கொஞ்சம் அதிகமாக உன்னுள் செலுத்திச் சரி செய்துவிடும். எனவே உங்கள் அகப்படையியலுக்குரிய(anatomy) பசி இங்கு கிடையாது” என்றாள் அலரி.

ஒரு நொடி பூமியை நினைத்துப் பார்த்தாள். பலருக்கும் வாழ்வின் பெரும் போராட்டமே வயிற்றுக்குத்தானே? பசிப்பிணியை ஒழிக்கும் இவ்வசதி மட்டும் அங்கு வந்துவிட்டால்….? முக்கியமாக இளமையில் வறுமை ஒழிந்துவிட்டால்? விளிம்பு நிலை மனிதர்களுக்கு இது மாபெரும் வரம் அல்லவா?

“உங்களுக்கெல்லாம் தோராயமாக என்ன வயதிருக்கும்?” என்று கேட்டாள் ஆதினி.

            “ அதை உங்கள் அளவையில் அடக்க முடியாதே!” – சிரித்தாள் ஐயை.

            “எனக்குத் தெரிந்த அளவையை வைத்து எவ்வளவு மடங்கு கூட குறைய என்று கூறுங்கள்” என்று விடாப்பிடியாகக் கேட்டாள்.

            “உங்கள் கணக்குப்படி அண்டத்தின் வயது சுமாராக பதிமூன்றரை பில்லியன் ஆண்டுகள். ஆனால் உங்கள் கண்ணில் படாமல் அதனினும் பழைய விண்மீன் மண்டலங்கள் நிறைய உண்டு. அதன் காலத்தை உனக்கு ஓரளவு புரியும்படி சொல்வதாயிருந்தால் Googol^{Googolplex^Centillion^…” என்று சதிரி அடுக்கிக் கொண்டே போக,

            “போதும்… முடிவிலி என்று கொள்வோம்” என்று முடித்து வைக்க முயன்றாள்.

            “அது ஒரு எண்ணே இல்லையே!” – சிரித்தாள் அதிரா.

            “சரி! நெனச்சுப் பார்க்க முடியாத அளவு ரொம்ப ரொம்ப பழசு. அப்போ நீங்கள்லாம்?” என்று வியப்பு கூடிக்கொண்டே சென்றது.

“அண்டம் தோன்றி சில ட்ரில்லியன் ஆண்டுகளிலேயே எங்கள் மூதாதையர்கள் உருவானார்கள். பின்னர் மருத்துவ வசதி பல்மடங்காக வளர்ந்த பின் நாங்கள் சாகாவரம் பெற்றவர்களைப் போல் இருந்து வருகிறோம். பூமியின் வயது வெறும் நாலரை பில்லியன் ஆண்டுகள்தான். அதனால் அதன் உருவாக்கம், உயிர்த்தோன்றல், பரிணாம வளர்ச்சி என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறோம்” என்று அதிரா மேலும் மேலும் அதிர வைத்தாள்.

“உங்களது பெருகி வரும் எண்ணிக்கையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?” – ஆதினியினுள் கேள்விகள் முளைத்துக் கொண்டே இருந்தன.

“எண்ணற்ற கோள்கள் இருக்கின்றனவே? தேவைக்கேற்ப அவ்வப்போது புது புது கோள்களை உறைவிடமாக்குவதற்கு ஏற்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்” – மதி

“உங்களுக்கெல்லாம் உடல்நிலை சரியில்லாமல் போகாதா? வயதாக ஆக உறுப்புகள் பழுதடையாதா?” என்று உவளது கேள்வி அவர்களுக்குக் கண்டிப்பாகப் பாமரத்தனமாகத்தான் இருக்கும் என்பதை ஆதினியும் அறியாமல் இல்லை எனினும் வேறு வழியில்லை.

“முதலில் இறப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. எங்கள் அறிவியலின் வளர்ச்சியால் செயற்கை உறுப்புகளில் துவங்கி பின்னர் அமரத்துவம் வரை வந்துவிட்டோம். ஒருவரது நோயுற்ற உறுப்பை உடலிலிருந்து வெளியே எடுத்து சரி செய்து புத்தம் புதிது போல் மாற்றிவிடுவோம். அதனைப் பழுது பார்க்க எடுக்கும் இடைப்பட்ட காலத்திற்குச் செயற்கை உறுப்புகள் உதவும். சில சமயம் செயற்கை உறுப்புகளையே நிரந்தரமாகப் பயன்படுத்தும் சூழலும் வரலாம். எல்லாப் பிணிகளுக்கும் மருந்து கண்டுபிடித்தாகிவிட்டது. கெடுதல் விளைவிக்கும் நுண்ணுயிரிகள், நோய்க்கிருமிகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டோம். உங்கள் கோளைப் போல் புதிது புதிதாக நோய்களை உருவா(க்)கும் வாய்ப்புகளும் வழிமுறைகளும் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன” – சால்பு சொல்லி முடிக்கும் போது கோபம் கலந்த நக்கல் வெளிப்பட்டது.

“ஒருவருக்குத் தோல் உட்பட ஒவ்வொரு உறுப்பு நலிவுறும் போதும் மாற்றிக் கொள்வீர்கள் எனில், மாற்றப்பட்ட ஒவ்வொரு உறுப்பையும் கொண்டு ஒரு புதிய உயிர் செய்யலாம்தானே? இப்போது அந்த இருவரில் யார் அசல்?” என்று எக்குத்தப்பாகக் கேட்டு வைத்தாள்.

“ஏன் இப்படி உனக்கு மட்டும் கொச கொசனு யோசிக்க வருது?” என்று அதிரா சிரிக்க,

“இது ஒன்றும் புதிதல்ல. Theseus’ Paradox” என்றாள் ஆதினி.

“எட்டாம் பரிமாணத்தில் இருந்து வருபவர்கள் உன் கேள்விக்கு பதில் வைத்திருப்பார்களாயிருக்கும். அவர்கள்தாம் உன்னை முதன்முதலாக இனங்கண்டவர்களும் கூட” என்றாள் அதிரா.

உவளிடம் வியப்பு, ஆச்சரியம், அதிர்ச்சி போன்ற வார்த்தைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுக் கொண்டே வந்தது. வேறெப்படி வெளிப்படுத்துவது அளவு கடந்த பிரமிப்பை?

                                                                        5

            “நீங்கள் எந்தக் கோளைச் சார்ந்தவர்கள்?” – அங்கு கூடியிருந்தவர்கள் குறித்துக் கேட்டாள் ஆதினி.

            “உயிரிகள் புழங்கும் ஒவ்வொரு கோளிலும் இருந்து ஒருவர் வீதம் வந்திருக்கிறோம்” – அழிசி கூறினான்.

            “அண்டத்தின் அனைத்துத் தலைவர்களும் கூடியிருக்கும் அபூர்வ நிகழ்வில் நானா?” என்ற உவள் வியப்பில் ஒரு சிறு திருத்தம் இருப்பதாகக் கூறினான் இளன்.

            “தலைவர்கள் அல்ல. பிரதிநிதிகள்” என்று அழுத்தமாகச் சொன்னான்.

            “என்ன பெரிய வித்தியாசம்? ஒவ்வொரு குழுவின் சார்பாக ஒரு நபர் – முதன்மையானவர் என்று கொள்ளலாமா? இவர்கள் எல்லோருக்கும் தலைமை வகிப்பது அவிரா. அப்படித்தானே?” என்று விளங்க முற்பட்டாள் ஆதினி.

            “இல்லை. மீண்டும் மீண்டும் நீ தவறான பொருள் கொள்கிறாய். நீ பயன்படுத்தும் சொற்கள் அதிகாரத்தைப் பறை சாற்றுகின்றன. எங்களில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. அவிராவின் முடிவுகள் கூட தனிப்பட்ட முறையில் எடுக்கப்படுபவை அல்ல. அவற்றில் தவறுகள் இருப்பின் யார் சுட்டிக் காட்டினாலும் தன்மையாக ஏற்றுக் கொள்வார். இங்குள்ள எல்லோரும் அப்படித்தான். உனக்கு இது புதிதாய் இருக்கலாம். உன் கோளில் உள்ள நடைமுறைக்கேற்றாற்போல் உன் மனதும் தகவமைக்கப்பட்டிருக்கிறது. இது சீக்கிரம் பழகிவிடும் உனக்கு” என்று பொறுமையாக எடுத்துக் கூறினான் அதியன்.

“பெரியோருக்கு மரியாதை தருவது வேறு; குருட்டுத்தனமாக அவர்களுக்கு அடிபணிந்து அடங்கி இருப்பதும் அது எதிர்பார்க்கப்படுவதும் வேறு. Being polite with utmost sincerity is entirely different from being submissive! இதன் வேறுபாட்டுப் புரிதல் வாய்க்கப்பெறாததுதான் உன் இடத்தின் பெரிய பிரச்சனை” – வியன்.

            “கருத்து வேறுபாடுகள் என்பதே கிடையாதா இங்கே?” என ஆச்சர்யம் பொங்கக் கேட்டாள் உவள்.

            “நாங்கள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவர்கள். எனவே சரி தவறின் எல்லைக் கோடுகள் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன” என்ற மதியிடம்,

            “உணர்வுகள் குறுக்கிட்டால்? ஆமாம்…, உங்களுக்கு உணர்வுகள் உண்டா?” எனக் கேட்டாள்.

            “ஏன் இல்லை? எல்லா உணர்வுகளும் உண்டு. ஆனால் உன் தமிழ்ச்சமூகம் பெரிதும் கட்டிக்காத்த ஆனால் இன்று தடுமாற்றத்தோடு அணுகிக் கொண்டிருக்கும் அறம்தான் எங்களுக்குப் பெரிதும் உதவுகிறது. எங்களுக்குக் குழப்பம் வரும்போதெல்லாம் அறத்தையே தராசின் முள்ளாகக் கொள்வோம். உடனடியாக ஒரு பக்கத்தின் கனம் கூடி விடை கிடைத்துவிடும்” என்று பெருமை பொங்கக் கூறினாள் அலரி.     

            “அதையும் மீறி தவறுகள் நடந்தால்?”

“இதுவரை அப்படி ஒன்றும் நிகழ்ந்ததில்லை. அறிந்தே யாரும் தவறு செய்வதில்லை. அபூர்வமாக சிறு புரிதல் பிசகினால் தவறு செய்ய முனைபவர்களுக்கும் சுற்றியிருப்பவர்கள் தராசைக் கொண்டு விளக்கினால் அதை உடனுக்குடன் கைவிட்டுவிடுவர். எங்களது உலகம் ஒரு…..” என்று சால்பு விவரித்துக் கொண்டிருக்க அவரது உணர்வுகளை வைத்து உவள் கண் முன் UTOPIA என்று மிதந்தது.

“பூமியில் பல ஆண்டுகளாக நடந்து வரும் வேற்று கிரக வாசிகளுக்கான தேடலில் ஏன் ஒருவர் கூட எங்கள் கண்களில் அகப்படவில்லை?” என்று கேட்டாள் ஆதினி.

“நேற்று முளைத்த உங்களுக்கே இவ்வளவு ஆர்வம் இருக்கும் போது….” – நையாண்டி தொனியைக் கொஞ்சமாய் வெளிப்படுத்தி பின்னர் தொடர்ந்தான் வழுதி – “நாங்கள் உங்கள் கண்களினின்று மறைந்திருப்பது என முடிவெடுத்ததன் விளைவு அது. எந்தக் கோளையும் அதன் உயிர்களின் நடத்தையைக் கொண்டு எங்களுடன் இணைத்துக் கொள்வதா வேண்டாமா என ஆலோசனை நடைபெறும். அதன்படி தகுதியில்லாதவர்களாக நாங்கள் கண்டடைபவர்களையும் அவர்களின் கோளையும் ஊழிக்காலத்திற்கான பயணத்தில் அப்படியே விட்டுவிடுவோம். இதுவரை எங்கள் கணக்கு தவறியதில்லை. உங்கள் கோள் இந்த அண்டத்தில் ஒரு ….ஒரு…. ஒரு…”

ANAMOLY என்ற சொல் ராட்சத உருவில் உவளுக்குத் தெரிந்தது. “பூலோகவாசிகளையும் அழிந்து போக விடப் போகிறீர்கள். அதானே?”

“இல்லை. எங்களைப் போன்றவர்கள் கொஞ்சம் பூமியில் இருக்கிறீர்கள்” என்று கூறிய வழுதி ஆதினியின் கண்களை ஆழமாக நோக்கினான்.

“ ‘இருக்கிறீர்கள்’? முன்னிலைப் பன்மை! எனில்… நானும்….?; என்னையும்…?” வார்த்தைக்குத் தடுமாறினாள் ஆதினி.

சட்டென இயல்பாக வெளிப்பட்ட வழுதியின் வார்த்தைத் தெரிவை எண்ணி ஒரு நொடி அதிர்ந்தான் வியன். ‘இதற்கு மேல் அனைவரும் உளறி விடுவார்களோ?’ என்றெண்ணி சூழலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முற்பட்டான்.

அதிராவும் பேச்சை திசைதிருப்பும் வகையில் “எங்களின் தலையீடு இல்லாமலேயே உங்களின் கைங்கர்யத்தில் அடுத்த 250 மில்லியன் ஆண்டுகளில் பூமியின் பெரும்பகுதி வாழ்வதற்குத் தகுதியற்றதாக இருக்கும். மிஞ்சிப் போனால் அதிகபட்சம் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளில் உங்கள் இனமே அழிந்துவிடும். பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உங்கள் கோளை தன்னுள்ளே ஆட்கொண்டு உங்கள் விண்மீன் மண்டலத்திலிருந்தும் தன் சுற்றுப்பாதையினின்றும் நீங்கிவிடும். ஏழரை பில்லியன் ஆண்டுகளில் மொத்தமாக எல்லாம் முடிந்துவிடும்…” என்று நீட்டி முழக்கிக் கொண்டிருந்தாள். எதுவுமே உவளது காதைத் தாண்டி மூளையைச் சென்றடையவில்லை. இனியும் காலம் தாழ்த்துவது நல்லதல்ல என்று பேசிக்கொண்டே ஆதினியை அறைக்குள் இட்டுச் சென்றனர் அதிராவும் வியனும்.

“வேறு கோளுக்கு இடம் பெயரும் சாத்தியக் கூறுகளுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Kepler 442b, 452b…” என்று வலுக்கட்டாயமாகப் பேச்சைத் துவக்கிய உவள் அவர்களிடம் இருந்து மேலும் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என எதிர்பார்த்தாள். அதிராவும் வியனும் ஒருவருக்கொருவர் பார்த்து விட்டு அமைதியாக அடுத்த கட்ட பணிகளைத் துவக்கினர். அதிவேக கணினி போன்ற கருவி ஒன்றில் மும்மரமான பணியில் ஈடுபட்டனர். “இன்னும் சிறிது நேரத்தில் முடிவுகள் தெரிந்துவிடும்” என்று அதிரா வியனிடம் கூறினாள். ஆதினி வழக்கம்போல் ‘எதைப் பற்றிப் பேசுகிறார்கள்?’ என்பதை ஊகிக்க முயற்சி செய்துகொண்டிருந்தாள். அவ்விடம் ரொம்பவே அமைதியாகிவிட்டது.

                                                                        6

இறுக்கமான சூழலைத் தளர்த்த எண்ணி “நீ யார்?” எனக் கேட்டது அம்மேசையில் இருந்த ஒரு தொழில்நுட்ப சாதனம். உவளது பெயரைச் சொன்னாள். “அது உன் பெயர்” என்று முதுகுக்குப் பின் இருந்து ஒரு குரல் கேட்டது. அந்துவன். ஏதோ ஒரு விநோதமான கருவியை அதிராவிடம் ஒப்படைப்பதற்காக வந்தவன் உவளைச் சிறிது நேரம் சீண்டிக் கொண்டிருந்தான். அப்பிடி இப்பிடி விழுந்து எழுந்து யோசித்ததில் இயற்கையாகத் தோன்றும் எந்த பதிலைச் சொன்னாலும் ‘அது உன் படிப்பு’, ‘அது உன் முகவரி’, ‘உன் பெற்றோர் குறித்து கேட்கவில்லை’ என முற்றும் துறந்த ஞானிகளைப் போல் புறந்தள்ளி விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தான். உவளும் பதிலுக்கு விளையாட்டாக “அண்டம்…பேரண்டம்…. நான் ஒரு சிறு புள்ளி…” எனப் பினாற்ற, “அய்யே! ரொம்ப அசட்டுத்தனமா இருக்கு இந்த பதில். நான் என்ன உங்க ஊரு கார்ப்பரேட் சாமியாரா, இதையெல்லாம் ரசிக்க?” எனச் சிரித்தான்.

            வேறு எப்படிச் சொல்வது எனப் புரியாமல் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். “Reticence?” என்று கேட்டு உவளது அமைதையைக் குலைத்தது அத்தொழில்நுட்பக்கருவி. “என் ரசனைகள், விருப்பு வெறுப்புகள், கொள்கைகள், ஆசைகள், கனவுகள், என் மனதிற்கு உவப்பானவர்கள், கசப்பானவர்கள், எனக்குக் கிட்டும் நிபந்தனையற்ற அளவற்ற அன்பு, என் மீது பொங்கி வழியும் வெறுப்பு, அக்கறை என்னும் மாறுவேடத்தில் வந்து துரத்தி துரத்தி அடிக்கும் துரோகம்…. இவையெல்லாம்தான் நான்” என்றாள்.

            “இந்தப் பட்டியலின் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒரு பட்டியல் இருக்கிறதே? அதையெல்லாம் எப்போது வாசித்து முடித்து…. எப்போது உன்னைப் புரிந்து கொள்வது?”

            “யாரையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமா என்ன?” என்று கேட்டாள்.

            “ ‘யாரையும்’ அல்ல. உன்னை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்” என்ற அந்துவனின் தொனியில் கிண்டல் இல்லை. 

            அதற்கு மேல் எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் வெறுத்துப் போய் “எந்தவொரு சூழலிலும் எனது நிலைப்பாடு, அச்சூழலில் சம்பந்தப்பட்டவர்களின் தன்மையைப் பொறுத்து வெளிப்படும் என் உணர்வுகள், எதிர்வினைகள், அதன்கண் அமையும் என் முடிவுகள்…… – இவைதான் ‘நான்’” என்ற ஆதினியின் முன் வந்தது Alexithymia என்ற வார்த்தை.

            “ஒவ்வொரு ‘நான்’க்காக வரையறையும் இதுவாகத்தானே இருக்க முடியும்?” என எண்ணியவாறே “மண்டகசாயம் மாதிரி கேள்வி கேட்டால் இப்படித்தான் பதில் வரும். அடப் போங்கடா!” என்று சலித்துக் கொண்டாள்.

            “எனக்கு ஏதோ காஃப்கா தஸ்தயெவ்ஸ்கி ஆகியோரின் மூளைகளுக்குள் வலம் வருவதைப் போல் உள்ளது. நீ இப்போது அப்படித்தான் பேசுகிறாய்” – சிரித்தவாறே கூறிய அந்துவனைப் பார்த்து “போதும். நீ கிளம்பு” என்றான் வியன்.

            ஆழமான உரையாடலுக்கு அந்த அறை தன்னை தயார்படுத்திக் கொண்டது.

            என்னதான் நடக்கிறது? எதற்கு நடக்கிறது? எனப் பல கேள்விகளின் பிடியில் இருந்து மீள முடியாமல் கேட்டாள் ஆதினி – “இயல்பாக இத்தருணத்தில் எழும் கேள்விகள் நிறைய உள்ளன என்னிடம். அதில் ஒன்றை மட்டும் இப்போது கேட்கிறேன். ஏன் நான்?”

            “Sui generis” – அதிரா.

            “எல்லோரையும் போல்” என்று தலையை ஒரு புறமாய்ச் சாய்த்து தோள்களை உயர்த்தியவாறே சொல்லிச் சிரித்தாள் உவள்.

            “உன் சமூகத்துடன் பொருந்தி வாழ முடியாது என்று முதன் முதலாக நீ உணர்ந்த தருணத்தில்தான் உன் அக வேர்கள் கிளை பரப்பிய இடங்களின் வாயிலாக எங்கள் கண்காணிப்பிற்குள் வந்தாய். உனக்குப் பிடித்த நிறங்கள் எங்களுக்கானவை. மேலும் நீ சாதாரணமானவள் அல்ல”

“சிவப்பும் கருப்பும் பிடித்த நிறைய பேர் இருக்கின்றனரே!”

“நாங்கள் வெறும் நிறங்களாக அவற்றைச் சுட்டவில்லை” – அதிரா

“நானும் நிறங்களாக மட்டும் வைத்து அவற்றால் ஈர்க்கப்பட்டவர்களைக் குறிப்பிடவில்லை” – தெளிவாகக் கூறினாள் ஆதினி.

             “உன்னுள் உறைந்துவிட்ட அந்நிறத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கும் பிறருக்கு அக்கருத்தியல்களின்படி நிற்கவும் வாழவும்…. மிக முக்கியமாக, பேசுவதற்கான வெளி இருக்கிறது… அல்லது அவ்வெளியையே தமக்கான புறச்சூழலாக்கிக் கொள்கின்றனர். நீ மட்டும்தான்…உன் சூழல்…ஹ்ம்ம்ம்…” என்று வியன் திணறிக் கொண்டிருக்க உவளுக்குக் கூற விழைந்த பதில் ஒற்றை வார்த்தையாகத் தோன்றியது.

            Monachopsis என்ற வார்த்தையைப் பார்த்ததும் திகைத்தாள். பின்னர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட சூழலில் இயங்கும் என்னைப் போன்றோர் பலர் இருக்கின்றனரே! இன்னும் சொல்லப்போனால் முரணான சூழலில்தான் வேலையே இருக்கிறது. போராட்டங்கள், எதிர்ப்புகள் என களத்தில் இயங்கும் பலர் இருக்கையில், என்னில் என்ன தனித்துவம்?” என்று புரியாமல் கேட்டாள்.

            “உன்னைப் போன்ற கொள்கைகளோடு இருக்கும் பெரும்பான்மையோர் ஒரு குழுவாக இருக்கின்றனர். ஒருவேளை ஒவ்வாத சூழலில் தனித்தே இருக்க நேருமாயின் காலப்போக்கில் அதற்கேற்றாற் போல் மனதளவில் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர் சிலர். எச்சூழலாலும் உன் ஆளுமையை, அதாவது the very essence of you – ‘உன்னை’ மாற்ற இயலவில்லை. அவ்வளவு திண்மை உன்னிடத்தில்” என்று வியன் விளக்கமளிக்க,

            “கருப்பையுடன் பிறந்ததால் நீங்கள் கூறும் வார்த்தைகளைப் பிடிவாதம், திமிர் அல்லது முரண்டு என்றும் கூறுவார்கள்” என்று சிரித்தாள் ஆதினி.

            அதிரா அக்கூற்றை ஆமோதித்தவாறே “ஆம், ஒரு மாபெரும் வேறுபாடு கண்டோம். உனது சிந்தனைகள் ஒரு குறிப்பிட பாலினத்திடம் காணப்படுகையில் கொள்கைப்பிடிப்பு, சிந்தனைத் தெளிவு என்பதாகப் பதிவு செய்யப்படுவதைக் கண்டோம். சூழ்ந்திருப்பவர்கள் கருத்து வேறுபாட்டுடன் இருப்பினும் ஏற்றைகளுக்கு மட்டும் பிரச்சனை வருவதேயில்லை. சரியோ தவறோ அவர்களின் கூற்றுதான் உறையுள்ளில் விதியாகிறது. ஏன் இப்படி?” என்று கேட்டாள்.

            சிறிதும் இடைவெளியின்றி தொடர்ந்து வியனிடம் இருந்து அடுத்த கேள்வி – “உனது ‘சரி’ உண்மையாகவே சரியாக இருக்கும்போது சுற்றியிருக்கும் சிலருக்கு ஏன் அதை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை வருகிறது? ஒருசில சக கருப்பை உயிரினங்களும் கூட புரிதலுடன் உன்னை அணுகுவதில்லையே!”

“தமக்கான கொள்கை, சித்தாந்தம், கருத்தியல் ஆகியவற்றை மனதின் ஓர் ‘இட’த்தில் வைத்துக் கொண்டு தமது அம்மாவின் ஆச்சிகளின் மௌனத்தை மரபுரிமையாக ஏற்க மறுக்கும் சில பெண்களின் நிலைப்பாடு அதிர்ச்சியையும் எரிச்சலையும் தரும்தானே? பெண்கள் முன்னேற வேண்டிய அவசியத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததில் காலங்காலமாக அனைவரின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்ட கற்பிதங்களைக் களைய மறந்துவிட்ட சமூகம் இது. ‘முற்போக்குவாதத்தை’ ஒப்பனையாகப் பாவிக்கும் சிலரது சாயம் இப்படித்தான் வெளுக்கிறது” – ஆதினி.

“அளவற்ற அழுத்தத்திற்கு உட்பட்டாலும் உன்னால் மட்டும் எப்படி அப்படியே இருக்க முடிகிறது?”

“கொண்ட கொள்கையில் உள்ள நியாயம் என்னுள் உறுதியை வலுப்படுத்துகிறது”

“உன் ஆளுமையை ஏன் பலமுறை உன்னுள் புதைத்து வைக்கிறாய்? பிறகு வாழ்க்கையில் என்னதான் மீதமிருக்கும்?”

“உடைந்து நொறுங்கிவிடாமல் வளைந்(த்)து ஒடிந்(த்)துவிடாமல் எனக்கான வரையறையைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வதிலேயே பாதி வாழ்க்கை அநியாயமாகக் கண் முன்னே கரைந்து கொண்டிருக்கிறது” என்று கூறியவாறே வெறுமையை வெறித்துக் கொண்டிருந்ததில் Boketto என்ற வார்த்தை தோன்றியது ஆதினி முன்.

தலையை லேசாகச் சிலுப்பிவாறே நினைவலைகளினின்று மீண்டவளிடம், “பூமியில் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் போது உன்னிலும் ஒரு மிகப்பெரிய மூடநம்பிக்கையைக் கண்டோம்” என்றான் வியன்.

“என்னிடமா? வாய்ப்பே இல்லை. ‘சாமியாவது? சாத்தானவது?’ என்றிருக்கும் நான் போய்…” – உவளை இடைமறித்த வியன், “தரவுகள், ஏரணம், பகுத்தறிவு – இவற்றின் அடிப்படையில் யாருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் புரிய வைத்து விட முடியும் என்ற உனது நம்பிக்கையைச் சொல்கிறோம்” என்றான்.

“ஆங்…. அது…” – அசடு வழிந்தாள்.

“‘யாரிடம் பேசுகிறோம்?’, ‘எப்படிப்பட்டவர்களிடம் பேசுகிறோம்?’ என்கிற பகுத்துணரும் திறனோடு நீ கொஞ்சம் சமரசம் செய்துகொண்ட காலகட்டம் அது. எவ்வித முன்னுணர்வோ தொலைநோக்குப் பார்வையோ இன்றி இருக்கும் சிலரிடம் போய்…” வியன் அவ்வகையினரை வகைப்படுத்த முயன்ற போது கருத்துப் பரிமாற்றத் தொழில்நுட்பம் சிறிய அலைவு மாற்றத்தின் விளைவாக Shmo என்ற வார்த்தை தோன்றியது. “ஆம். இவ்வார்த்தைதான் சரி. இவர்களிடம் எல்லாம் சரியான விஷயங்களைப் புரிய வைக்கப் போராடி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தாய். You were literally casting pearls before swines” என்றான். 

            தன் தவற்றை ஒப்புக் கொண்டபடி அமைதியாக அவர்களது கூற்றை ஆமோதித்துக் கொண்டிருந்தாள்.

            “அதான் அவ்வழக்கத்தை விட்டுவிட்டேனே?” என்று தன் ஆளுமையை தற்காக்கும் தொனியில் கேட்டாள்.

“Pauciloquent à Mauerbauertraurigkeit à Reclusion… இதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது உன்னில். இதன் பிறகுதான் கைவிட்டாய்” என்ற வியனைத் தொடர்ந்து,

“பூமியில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சூழல்களில் தெளிந்த முதிர்வுடன் உன்னுள் உருவாகும் சொற்கள், அவற்றைக் கஷ்டப்பட்டு விழுங்கி மென்சிரிப்புடன் கடந்த தருணங்கள், அவையனைத்தும் உன்னைச் சுற்றிச் சுற்றி வந்து பரிகசிக்கும் இரவுகள், சில சூழல்களையும் அதிலிருந்த மனிதர்களையும் குறித்து ‘அது புல்லவை; அது அங்கணம்…’ என்று ஏதேதோ சமாதானம் கூறி அச்சொற்களைக் காற்றினூடாகத் துரத்தியடித்த நடுநிசிப் பொழுதுகள்…. பின் புழுக்கம் தாங்காமல் அரைகுறை கிறக்கத்தில் கழியும் யாமம்…. எதற்கும் இனி இடமுமில்லை. தேவையுமில்லை” என்று கண்களைச் சிமிட்டினாள் அதிரா.

ஆசை ஆசையாக அவசர அவசரமாக அத்தனை முகமூடிகளையும் கழற்றி எறியப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். என்ன ஒரு ஆசுவாசம்! இப்படி நிம்மதியாக மூச்சு விட்டு எவ்வளவு காலமாயிற்று?

NO MORE SLIPPING INTO EXULANSIS! என்ற வார்த்தைகள் மினுக் மினுக் என மின்னி மறைந்தன.

“அதுக்கு நான் வேற கோள்… இல்லையில்லை… வேற விண்மீன் மண்டலத்துக்குத்தான் போகணும்” என்று சிரித்தாள் ஆதினி.

“ஆருடத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையெனினும் மிகச் சரியாக நன்றாகவே கணிக்கிறாய்” – வியன்.

ஆச்சரியம் தாங்காமல் “யாரெல்லாம்…? எங்கே…? எப்போது?” – எந்தக் கேள்வியை முதலில் கேட்பது எனத் தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்ததில் எல்லா வினாச்சொற்களும் முன்னுக்குப் பின்னாக மாறி மாறி வந்து விழுந்தன. Pochemuchka என்ற சொல் குறுக்காகப் பறந்து சென்றது.

                                                                        7

ஆதினியின் கையில் ஒரு அறிவியல் சாதனத்தைத் தந்தார்கள். அதில் உவளைப் பற்றி நுட்பமாகச் சேகரிக்கப்பட்ட பல தகவல்கள் ‘Minutiae’ என்னும் பெயரிலான கோப்பில் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தாள். ‘கெம்பு’ என்றொரு கோப்பைத் திறந்தால் அதில் முதல் பக்கத்தில் பெரியார், அண்ணா, அம்பேத்கர், மார்க்ஸ், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், சே -குவாரா….. என்று உவளுக்கு உவப்பான ஒரு பெயர் பட்டியல் இருந்தது. பல பக்கங்களைக் கொண்ட கோப்பு அது. சில பக்கங்களுக்குப் பிறகு தோழர் அருள்மொழி, தோழர் மதிவதனி, மதிப்பிற்குரிய சுப. வீரபாண்டியன்….. என்று நீண்டது இன்னொரு பட்டியல்.

உவளை அறியாமலேயே முகத்தில் படர்ந்த குறுநகையைக் கண்ட வியன் கேட்டான், “இவர்களையும்  இவர்களைப் போன்றோரையும் மட்டுமே கொண்ட ஒரு கோள் இருந்தால் எப்படி இருக்கும்?”

சட்டென புனைவுலகில் நுழைந்து விட்டாள். சிறிது நேரம் சுற்றியிருந்தவர்களின் கேள்விகள் கூற்றுகள் எதுவுமே ஆதினியின் காதைத் தாண்டி உள்செல்லவில்லை. “Reverie?” என்று உவள் முன் அசைந்தாடிய சொல்லே மீண்டும் உவளை அவ்வறைக்கு இட்டு வந்தது. “என் கற்பனையை வளர்க்காதீர்கள். அது ஆசையாக மாறி பிறகு ஏமாற்றத்தில் முடியும்” என்று கவனமாகப் பதிலளித்தாள்.

“புனைவு என நீ நினைத்துக் கொண்டிருக்கும் அது நனவானால்?” என கண்களைப் பெரிதாக்கி புருவங்களை உயர்த்தியவாறே கேட்டாள் அதிரா.

ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய், “நிச்சயம் அது சாத்தியமா? ஆனால் பட்டியலில் முதல் பக்கத்தில் உள்ளவர்கள் இப்போது இல்லையே?”

            “ஒருவரது DNA மட்டும் வைத்து அன்னாரை அப்படியே எங்களால் மீட்டெடுக்க இயலும்”

            “Cryonics? Cloning? அது வாய்ப்பில்லையே. இறந்தவர்கள் எல்லோரும் வி(பு)தைக்கப் பட்டுவிட்டார்களே?”

            “கிட்டத்தட்ட அது மாதிரிதான். ஆனால் அவையல்ல. எங்கள் செயல்முறை படியெடுப்பையும்(cloning) தாண்டிய பூரணத்துவம் பெற்றது. எந்த ஒரு உயிரையும் அப்படியே அச்சுப்பிசகாமல் அதே உணர்வுகளுடன் பன்மடங்கு துல்லியமாகக் கச்சிதமாகக் கொண்டு வந்துவிடுவோம். ஆனால் எல்லா உயிர்களுக்கும் நாங்கள் படியெடுப்பைச் செய்வதில்லை. எங்களுடைய விதிகள் நிபந்தனைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் ஆளுமைகளுக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. அதன்படி தயாரிக்கப்பட்ட  பட்டியல்தான் அது. தற்போது அவர்களின் உணர்வுகள் தென்படும் பிற மனிதர்களையும் அதே கோளுக்கு அனுப்பப் போகிறோம்” என்றவன் ஒரு சிறிய அமைதியை நிலவ விட்டுப் பின் நிதானமாகக் கூறினான்,

“அந்தப் பிற மனிதர்களில் எங்களால் பரிசீலிக்கப்பட்டவளில் முதலாமவள் நீ. ‘மனநலம் நன்குடைய ராயினும்’ ‘நல்லினத்தி னூங்குந் துணையில்லை’ அல்லவோ? அதற்கான ஓர் ஏற்பாடுதான் எங்கள் முன்னெடுப்பு”

            எதையும் நம்ப முடியவில்லை. ஆனால் இவர்களின் அசுர வளர்ச்சி நம்பச் சொல்லிப் பணித்தது. பிறகு நினைத்தாள் “நான் என் அறையில் தூங்கிக் கொண்டுதானே இருந்தேன்… இருக்கிறேன். கனவாகவே இருந்தாலும் எவ்வளவு அழகான ஒன்று?” நினைத்துப் பார்க்கவே ஆனந்தமாய் இருந்தது ஆதினிக்கு.

            “மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத இன்னொன்றும் இருக்கிறது. கலை. எழுத்து, ஓவியம், இசை…. எனப் பல துறைகளிலும் அக்கெம்புப் பட்டியலோடு முரண்படாத கலைஞர்களும் சேர்ந்து இருந்தால் அந்தக் கோளுக்கு சொர்க்கம் என்று பெயர் வைத்து விடலாம்” என்று வேண்டுகோள் வைத்தாள்.

            “1618 பக்கங்கள் கொண்ட தனிப்பட்டியல் ஒன்றும் அவ்வாறு தயார் செய்துள்ளோம்” என்று அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தான் வியன்.

            “அந்தப் புதிய கோள் எங்கே இருக்கிறது?” ஆர்வமாய்க் கேட்டாள்.

“சொன்னால் உடனே புரியப்போகிற மாதிரி கேட்கிறாய்?  உன் ஊரிலேயே வழி தெரியாது உனக்கு” என்றபடி பகடி செய்தாள் அதிரா. “உங்கள் மொழியில் உங்கள் அளவுகோலில் சொல்வதாயிருந்தால் 1300 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் TOI 1338bதான் அது”

            “Quarencia Ataraxia….” என்று சொல்லிப் பார்த்தாள் உவள்.

            வியனும் அதிராவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.

            “உங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்….” உவளை முடிக்கவிடாமல், “நியாயப்படி அவர்களை எல்லாம் HD 189733bயில் கொண்டு விடவேண்டும். போனால் போகிறது என்று பூமியில் அப்படியே விட்டுவிட முடிவு செய்திருக்கிறோம்”

                                                                       8

            “என்னில் என்ன மாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப் போகிறீர்கள்? பாவனை நிரல்கள் என்றால்?” என்று கேட்டவாறே ஆயத்தமானாள் ஆதினி.

            “’மேற்கொள்ளப் போகிறீர்கள்?’ அல்ல; ‘மேற்கொள்கிறீர்கள்?’ பாவனை நிரல்கள் தனியாக நடத்தப் போவதில்லை. பூமியில் நீ கடந்து வந்த சில சூழல்களைச் சேகரித்து வைத்துள்ளோம். இப்போது உனது உடலின் இயக்கத்தையும் பதிவு செய்து வைத்திருப்பதால்  அச்சூழல்களில் உன் எதிர்வினை உள்ளுணர்வு எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றின் உண்மைத்தன்மையை மதிப்பிடும் பணிகள் சற்று நேரத்தில் முடிவடைந்துவிடும். உன்னைப் பற்றிய எங்களது கணிப்பு… அதாவது எங்கள் ‘தெரிந்துதெளிதல்’ ‘சரி’ என உறுதிப்படுத்தும் வழிமுறை இது” என்றாள் அதிரா.

            ஒன்றும் புரியாமல் விழித்தவளிடம் “சரி சொல்லு… உனக்கு யாரையெல்லாம் பிடிக்காது?” என்ற கேள்வி வந்தது வியனிடம் இருந்து. பரிசோதனை முடிவுகள் வர இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பதால் சும்மா அளவளாவத் தொடங்கினான்.

            “பொதுவா யாரையெல்லாம் பிடிக்கும்னுதானே கேட்பார்கள்? இதென்ன தொடக்கமே வினோதமாக…?” என்று வினவினாள் உவள்.

            “இதுவல்ல துவக்கப்புள்ளி. எப்போதோ துவங்கியாயிற்று. உனக்குப் பிடித்தவர்களை நாங்கள் அறிவோம். இப்போது நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்”

            “இது ரொம்ப பொதுவான கேள்வியாக இருக்கிறது. பிடித்தவர்களை விடப் பிடிக்காதவர்களின் பட்டியல் ரொம்ப பெரியது”

            “பெயர் பட்டியல் வேண்டாம். அவர்களை அப்பட்டியலில் சேர்த்ததற்கான குணாதிசயக் காரணங்களைக் கூறு” – வியன்.

            “சர்வாதி..” – ஆதினி தொடங்கும் போதே இடைமறித்த அதிரா “சர்வாதிகாரிகள், எதேச்சதிகாரிகள், மதவாதிகள், பிரிவினைவாதிகள், சனாதனவாதிகள், அடிப்படைவாதிகள்…. இந்த வியாதிகள் எல்லோரும் உனக்கு நீ பூசிக்கொண்ட நிறங்களின் விளைவாக விளைந்த இயற்கை எதிரிகள். இவர்கள் தவிர்த்து நீ எதிர்கொள்ளும் வேறு வியாதிகள்(!) பற்றி…?” எனக் கேட்டாள்.

            “ ‘வியாதிகள்’ எல்லாம் ஏதோ ஒரு உயர் பதவியில் இருப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரணர்களிடம் கூட அவ்வகை எண்ணங்கள் வேரூன்றி கிடக்கின்றன. அவை போக இரண்டு முக்கிய வியாதிகள் – கபடம்(Hypocrisy) மற்றும் Dunning-Kruger effect. சமீபமாக என்னை ரொம்பவே எரிச்சலூட்டுபவை இவை” – ஆதினி.

             “இந்த இரண்டும் உங்கள் இனத்தின் சாபக்கேடுகள். எங்களுக்கு முதலில் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இப்போதும்தான்…!” – அதிரா.

“அதை நீங்கள் புரிய முற்படாமல் இருப்பதே நல்லது. எதையும் ஏரணத்திற்கு உட்படுத்தாமல் கண்மூடித்தனமாகச் சில விஷயங்களை ஏற்றுக் கொண்டு பின்பற்றும் போது வெளிப்படும் முரண்போலி, இஷ்டத்திற்கு அடித்து விடும் கபடதாரிகளைத் தோலுரித்துக் காட்டிவிடும். அகத்தினுள் புழங்கும் சாதாரண அன்றாடங்களில் துவங்கி உலகை உலுக்கும் மிகப் பெரிய பிரச்சனைகள் வரை ‘கபடதாரி’ப் புற்றீசல்கள். இன்னொரு சாராருக்குச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருந்தால் கூடப் பரவாயில்லை. தமக்கு எவையெல்லாம் தெரியாது என்பது கூடத் தெரியாமல்……” – அதற்கு மேல் விவரிக்கும் பொறுமை இழந்தாள் ஆதினி.

“பூமியில் நிலவும் மேலே குறிப்பிடப்பட்ட வியாதிகள் பீடித்த வாதிகள் குறித்து எங்கள் அனைவரிடத்திலும் ஒரே கேள்விதான் ‘ஏன்?’  ” – வியன்.

            “நல்ல்ல்ல கேள்வி. அடுத்த கேள்வி?” – சிரித்துக் கடந்தாள் அக்கேள்வியை.

            “அது எப்படி அறமற்றவர்களாக நடந்து கொள்ள முடிகிறது?” – அதிரா.

            உவளது சிரிப்பு Mokita என்னும் வார்த்தையாக அனைவரின் கண்களுக்கும் தெரிந்தது.

            “இவ்வளவிற்கும் தவறு செய்யும் பெரும்பான்மையோர் so called இறை, பாவம், புண்ணியம் என நம்பிக்கை உள்ளவர்கள். வெளியின்(space) குறுக்கும் நெடுக்குமாக ஒரு இடம் விடாமல் அலசி ஆராய்ந்தாலும் உங்கள் கடவுள்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்குதான் ஒளிந்திருக்கிறார்?” என்று எரிச்சலாகக் கேட்டான் வியன்.

            “இருந்தால்தானே ஒளிவதற்கு!” – அலுத்துக் கொண்டாள் ஆதினி.

            “உங்க ஊரு பெரியவர் ஒருவர் பல காலம் முன்பே இதை எடுத்துச் சொன்னார்தானே?”

            “அவர் தந்த பகுத்தறிவுச் சிந்தனைகள் இன்றும் எங்கள் சமூகத்திற்கான ஒரு சர்வரோக நிவாரணி. இவ்வளவு காலத்திற்குப் பின்பு அகத்தில் இன்றும் ‘பகுத்தறிவு’ என்னும் சொல்லைப் ‘பெண்’ணுடன் சேர்த்தலை முரண்தொடையாகப் பாவிக்கும் பொதுசனம்தான் அதிகம்” – ஆதங்கப்பட்டாள் ஆதினி.

            “பகுத்தறிவாதத்தைக் கடைபிடிக்கும் ஆண்களுக்கும் இதே நிலைதானே?”

            “இல்லை. இறை நம்பிக்கை உள்ள ஒருவன் பெரும்பாலான நாட்களில் சாமியே கும்பிடுவதில்லை என்றாலும் கண்டுகொள்ளாத அல்லது அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அதே மனநிலைதான் பகுத்தறிவாதம் பேசும் ஒருவள் தினமும் கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள் பற்றி வெட்கமே இல்லாமல் பாடம் எடுக்கும்”

            “நீ எப்படி நாத்திகவாதி ஆனாய்?” – வியன்.

            “Am too smart for religion” என்று சொல்லிச் சிரித்துவிட்டு தொடர்ந்தாள் “சக மனிதனை அன்போடும் பரிவோடும் நடத்தவும் நல்லது செய்யவும் எனக்குப் பாவ புண்ணியக் கணக்கு, சொர்க்கம் போன்ற வக்கற்ற வாக்குறுதிகள் தேவைப்படவில்லை” – கூறும் போது ஆதினியின் கண்களில் அவ்வளவு தெளிவு.

            “நம்பிக்கை ரீதியாக எதிர்ரெதிர் துருவங்களாக நிற்பவர்கள் ஒரு நடுவிடம்(middle ground) அமைத்துத் கொள்ள இயலாதா?”

            “நம்பிக்கை என்பது ஒரு நேர்மறைச் சொல். இல்லாத ஒன்றின் மீதான நம்பிக்கைக்கு ‘மூடநம்பிக்கை’ என்ற சொல்தானே சரியாக இருக்க முடியும்?” என்று லேசான புன்னகையுடன் கேட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“இப்போது சமூகம் அப்படித்தான் இயங்கி வருகிறது; அல்லது இயங்க முற்படுகிறது. இடது வலது கோட்பாடுகளைப் பொருத்தவரை இயைந்திருத்தல்(coexistence) என்பது சுத்த அபத்தம். சமூகப் பார்வையும் பரந்த கண்ணோட்டமும் இல்லாது Dunning-Kruger effectஆல் பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்விதத்தில் சமரசம் செய்ய இயலும்? அல்லது அதன் அவசியம்தான் என்ன? அதிலும் இடப்பக்கம் புழங்கும் நுண்ணறிவு மிகுந்த நாரிகைகள் அனைவரும் சராசரியான புரையுள் சூழலில் பொருத்தமில்லாதவர்களாக ஒருவித ஒவ்வாமையுடன்தான் அணுகப்படுவர்” என்று சலிப்பாகச் சொன்னாள் ஆதினி.

            “முன்பு உள்ள சூழலை ஒப்பிடுகையில் இப்போது நிறைய சுதந்திரம் கிட்டுகிறதுதானே?”

            “விரும்பியதைச் செய்வதற்கு மட்டுமல்லாமல் வெறுப்பதை நீக்குவதற்கான வெளியும் சேர்ந்து கிடைப்பதுதானே உண்மையான சுதந்திரம்?”

            உவளது சிந்தனைத் தெளிவைக் கண்டு மகிழ்ந்தனர்.

                                                                        9

            “எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஒரே விதி என வகுத்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது இல்லையா?” – பெரிய தீர்வொன்றைக் கூறுவதாய் நினைத்தாள் அதிரா.

“எல்லாவற்றிலுமா?” என ஒரு நொடி யோசித்தவளாய் மேலும் தொடர்ந்தாள் உவள். “கொள்கைகள் சித்தாந்தங்கள் பாகுபாடின்றி பொதுவானவையாக இருத்தல் வேண்டும் என்ற அளவில் பாலின சமத்துவத்திற்கு நீங்கள் சொல்வது சரி. அதையும் தாண்டிய ஒரு பிரச்சனை இருக்கிறது. ‘All are equal, but some are more equal than the others’ (Animal Farm by George Orwell) என நூலைக் கொண்டு வாய்ப்புகளை இழுத்துப் பறிப்போர் இருக்கும் சமூகத்தில் அவ்வாய்ப்புகள் மறுக்கப்பட்டோருக்குக் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கவேண்டும்” – ஆதினி.

 “எல்லோரும் சமம் என்று நடைமுறைப்படுத்திவிட்டால் சரியாகிவிடும் தானே? – வியன் தெளிவுபடுத்தும் பொருட்டு கேட்டான்.

 “எல்லோரும் சமமாக நடத்தபட வேண்டும்தான். எல்லோருக்கும் ஒரே உயரத்திலான ஏணியைத் தருதல் சமத்துவம். ஆனால் உயரம் குறைந்தவர்களுக்குக் கொஞ்சம் உயரமான ஏணியைத் தருதல் சமூக நீதி” – தனக்குத் தெரிந்த வரையில் புரிய வைக்க முற்பட்டாள் ஆதினி.

“விதிகளை எங்ஙனம் முறைப்படுத்துவது?”

“இடத்திற்குத் தகுந்தாற்போல் ஆளுக்குத் தகுந்தாற் போல் சில நியதிகளையும் வரையறைகளையும் மனிதத்தோடு சமரசம் செய்து கொள்ளாமல் மாற்ற வேண்டிய சூழல் வரலாம். நிச்சயம் வரும். எனவே எங்கெல்லாம் ‘ஒரே விதி; பொது விதி’ எடுபடாது, எங்கெங்கு ‘ஒப்பீடு’ செல்லுபடியாகாது, எந்தெந்த ஒப்பீடு சரியாக இருக்கிறது என்பதையெல்லாம் தெளிந்து புரிந்து கொள்ளக் கூட விவேகமும் மதிநுட்பமும்தாம் கைகொடுக்கும்”

“உங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் முட்டாள்தனமானதாக இருக்கின்றன”

“சமூகத்தில் கட்டமைக்கப்படுள்ள அடுக்குகளில் தனக்கு மேலே உள்ளவர்களிடம் சமத்துவம் பேசிவிட்டு கீழே உள்ளவர்களிடம் சனாதனியாக நடந்து கொள்ளும் மனநிலையின் சிக்கல் எனக்கும்தான் புரியவில்லை” என்று அலுப்பு தட்டும் மனநிலையை வெளிப்படுத்தினாள் உவள்.

“பூமியில் ‘இயங்குதல்’ ரொம்பவே தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறது” என வியன் கூறிய போது அழிசி அவசர அவசரமாக உள்ளே வந்து வியனின் காதில் பரபரப்புடன் எதையோ கூறினான். உடனே முக்கியமான ஒன்று ஞாபகம் வந்ததைப் போல் உவளை நோக்கித் திரும்பி, “உன்னுடன் இன்னமும் நிறைய உரையாட வேண்டும். ஆனால் விடியப் போகிறது. நீ ‘உன்’ அறைக்குத் திரும்ப வேண்டும்” என்றான்.

‘விழித்துக்கொண்டுதான் இருக்கிறேனா?’, ‘இது கனவில்லையா?’ எனப் பல கேள்விகள் மீண்டும் வட்டமடிக்கத் துவங்கின. அதிரா ஊசி போன்ற ஒரு சாதனத்துடன் வந்தாள். ஆதினியின் கழுத்தில் அதைச் செலுத்தினாள். மீண்டும் கொசு கடிப்பது போல இருந்தது. கைகள் அனிச்சையாக கழுத்துப் பக்கம் போவதைத் தடுக்க உவளது கைகள் கட்டப்பட்டிருந்தன.

“வீட்டிற்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன்? ஒருவேளை teleportationஓ?” என்று அந்த அவசரப் பொழுதிலும் கேள்விகளாகப் பொழிந்தாள்.

“நீங்கள் இன்னும் km/hourல் தான் அளவை வைத்திருக்கிறீர்கள். நீ இப்போது light years/millisecond போன்றதொரு அதிவிரைவான அளவையை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கப் போகிறாய். இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் அறையில் இருப்பாய்”

“எனில் நீங்கள் கூறிய இன்னொரு கோளுக்கு எப்போது போகப் போகிறேன்?”

“வெகு விரைவில்” என்று கூறியவாறே உவளது தோள்பட்டையில் ஒரு வினோதமான எந்திரத்தை வைத்து அழுத்தினான் வியன். ‘ச்சக்’ என்ற சத்தத்துடன் அது “Successfully implanted” என்றது. “உன் பரிசோதனை முடிவுகள் வந்து விட்டன. நீ தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டாய் என்பதற்கான முத்திரையை உன்னுள் பதித்தாயிற்று. போய் வா. விரைவில் சந்திப்போம்”.

“மீண்டும் சந்திக்கப் போகிறோம் ஆகையால் நான் விடைபெற்றுக் கொள்ளப்போவதில்லை” என்று ஒரு குழந்தையின் குறுகுறுப்புடன் கூறினாள் ஆதினி.

            திடுக்கென விழித்துப் பார்த்தவளுக்கு நம்பவே முடியவில்லை. கனவு மாதிரியே இல்லை. உண்மைதான் என்று திடமாகக் கூறும் அளவிற்கு இருந்தது அந்த அனுபவம். தன்னைச் சுற்றிலும் தேடினாள். ‘என்ன தேடுகிறாள்?’ என்பது உவளுக்கே தெரியாது. இவ்வளவு நேரம் தான் உணர்ந்ததன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக வியன் மற்றும் அதிரா தொடர்பான ஏதேனும் கிடைக்கிறதா எனப் பார்த்தாள். கழுத்தில் கொசு கடித்த இரு புள்ளிகள் தென்பட்டன. தோள்பட்டையைப் பார்த்தாள். புரண்டு படுக்கும் போது கழுத்துச் சங்கிலி உண்டாக்கிய வடு ஒன்று தெரிந்தது. எல்லாமே தெளிவற்ற மனநிலைக்கே இட்டுச் சென்றன.

மனதில் அவ்வளவு குழப்பம் இருந்தாலும் ஓர் அழகிய கனவில் இருந்து மீண்டதாக உவள் உணர்ந்த அந்நொடி “Euneirophrenia” என்ற சொல் உவள் கண் முன் பளிச்சிட்டது. தலையைச் சிலுப்பியவாறே கண்களைச் சிமிட்டியபடி பயம் கலந்த ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் செயற்கையாக நகைத்தாள். “Eccedentesiast” என்று காற்றில் மிதந்தது. தான் கண்டது கனவெனில் அதன் விளைவு அல்லது அதன் எச்சமே இவ்வாறான மாயத்தோன்றல்கள் என நினைக்கத் துவங்கிய பொழுது…. “Magical Realism” என்று தோன்றியது. அன்றைய தேதியையையும் நேரத்தையும் பார்க்க அலைபேசியைத் திறக்கவும் இரண்டும் 11:11 என்று காண்பித்தது. கூடவே Word of the day – “Smultronstalle” என்ற தகவலும் ஒரு செயலியின் மூலம் வந்தது.

            மீண்டும் மென்னகை புரிந்தாள் ஆதினி, இம்முறை உளத் தெளிவுடன்.

  • சோம. அழகு
Series Navigationஇலக்கியம் என்ன செய்யும். எல்லாமே ஒன்றுதான்
author

சோம. அழகு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *