(1)
வீட்டின்
வாசலில்-
வெளி
உள் நுழைகிறதா?
அல்லது
வீடு
வெளியேறுகிறதா?
அல்லது
ஒரே சமயத்தில்
வெளி
உள் நுழைந்தும்
வீடு
வெளியேறவும்
செய்கிறதா?
அல்லது
வாசலில்
வீடும் வெளியும்
கைகுலுக்குகின்றனவா?
அல்லது
வாசலில்
வெளியை
சுவாசிக்கிறதா
வீடு?
(2)
பிறகு
கட்டினேனா
வீட்டை
முன்னமேயே
வெளி
வீடு வடிவில்
தன்னைத்
தகவமைத்து
உள்ளொளித்து
வைத்து
பிறகு
அனுமதிக்க?
ஓர் ஐயம்
எனக்கு
(3)
சன்னல்-
சுவருக்கல்ல-
வீட்டுக்கு.
வீட்டுக்கு மட்டுமல்ல-
வீட்டுக்குள்
வசிக்க வெளிக்கு.
வெளிக்கு மட்டுமல்ல-
வசிக்க
வெளியோடு சேர்ந்து நுழையும்
மொத்த உலகமும்-
வசிக்கக் கடைசியாய்
நானும்.
(4)
அமையும்
சுவர்களாலே
வீடு-
ஆனால்
வீட்டின் சுவர்கள்
வெளியினுள்
உள்ளமையானும்
வெளியின் சுவர்கள்
வீட்டினுள்
இல்லமையானும்
அமைய-
(5)
வாசலுக்கு வெளியே
விசாரிக்கிறது
உன்னை
ஒரு மரம்-
உள்ளே
வரச் சொல்-
உள்ளே
வர விடாது
மறுப்பதற்கல்ல
வீடு-
வரவேற்பதற்கு
வீடு.
(6)
வாசலுக்கு வெளியே
கூப்பிடுகிறது
உன்னை
ஒரு மரம்-
கதவு திறந்து
வெளியே செல்-
உன்னைப்
பூட்டி வைத்திருப்பதற்கல்ல
வீடு-
போய்
வீடு திரும்புவதற்கு
வீடு.
(7)
அவரவர்
வசிக்க
அவரவர்
வீட்டுக்குள்
எவரெவருக்குமான
ஆகாயம்
அவரவர்
சுவாசிக்க-
கு. அழகர்சாமி
- கவிதைப் பட்டறை
- சொட்டாத சொரணைகள்
- வீடும் வெளியும்
- 4 கவிதைகள்
- I Am an Atheist
- இருட்டு