– கு. அழகர்சாமி
(1)
குளம்
(1)
குளத்திற்குள்
சொற்களை
வீசி எறிந்தேன்.
சொற்களின்
அர்த்தங்களைக் கொறிக்க
துள்ளி
மீன்கள்
மேலெழும்பின.
அலையலையாய்
விரிந்தது
என்
நீர்க் கவிதை
குளத்தில்-
கரை நோக்கி
என்னைத்
தேடி.
(2)
குளத்தில்
நீந்தும் மீன்கள்
என் விழிகளில்
நீந்தி
குளத்தின் விளிம்பைத் தொட்டு
திரும்பும் போது
என் விழிகளின் விளிம்பில்
திரும்புகிறது
குளம்.
(3)
தொபுக்-
குதித்தது சட்டென்று
தவளை
குளத்திற்குள்-
குதிக்க சதா
தயாராகிக் கொண்டே
இருக்கும்
குளத்தோர மரம்
குளத்திற்குள்
தலைகீழாய்த் தெரியும்
அதன் மீது
தான் குதிப்பதைப்
பார்க்க
அது.
(4)
யாரும்
தூண்டில் போடாது
நிறைந்திருக்கும்
மீன்களால்
நிறைந்திருக்கும்
நீரால்
நிறைந்திருக்கும்
தாமரைகளில்
முகம் மலர்த்தி
நிறைந்திருக்கிறது
தாமரைக்
குளம்
நிறைந்திருக்கும்
நிலவொளியில்- அதை
மேலும்
குளிர்த்தி.
(2)
ஒரு துளிக் கடல்
அலை
கடலின்
ஒரு
சிறு
நீர்த்துளி
என் மீது
தெறித்த போது-
அதில்
ஒரு மீன் மட்டுமல்ல
கடலின்
எல்லா மீன்களும்
சுவாசித்திருக்கும்
சுவாசம் மொத்தமும்
என் மீது
தெறித்ததாய்ச்
சிலிர்த்து
மூழ்கினேன்
நான்
ஒரு
சிறு
நீர்த் துளிக்குள் அல்ல-
ஒரு
துளிக் கடலுக்குள்.
கு.அழகர்சாமி