கு. அழகர்சாமி
குறுக்கிடும் நியாயம்
(1)
ஒரு வண்ணத்துப் பூச்சி
ரீங்கரிக்கிறது
மலர்களின் முன்
முன்அனுமதி கேட்டு
மலர்களை முத்தமிட-
சிறிது நேரம்
மலர்களைப் பறிக்காமல்
வண்ணத்துப் பூச்சியின் முத்தங்களை
அனுமதிக்க வேண்டுமென்று
தோன்றுகிறது
குறுக்கிடும்
அதன் நியாயத்தில்
எனக்கு.
எப்படி மலர்களை
முத்தமிட்ட
வண்ணத்துப் பூச்சியின்
முத்தங்களையும் சேர்த்துப் பறிக்காமல்
மலர்களை மட்டும்
நான் பறிப்பது
இனி?
(2)
குன்றும் தவளையும்
அலாதியான
குன்றின் சுனையின்
ஒரே ஒரு தவளையின்
தன்னந் தனிமையில்
குன்றின் தன்னந் தனிமையை
உணர முடிந்தது.
தவளை
சுனையில் குதித்த போது
குன்றும்
சேர்ந்து குதித்தது.
தவளை குதித்து
சுனை
கலங்கலில்லாததில்
குன்றின்
நிலைகுலையா உள்ளம்
துலங்கியது.
குன்றின் சுனையில்
தவளை வாழ்ந்திருப்பதில்
குன்று
நீலவானக் குளத்திற்குள்
குதிக்கப் போகும்
ஒரு
பெருந் தவளை போல்
வாழ்ந்திருப்பதாய்த் தெரிந்தது
நின்று தூரத்தில்
குன்றைப் பார்க்க
எனக்கு.
(3)
குழந்தையின் ’ஓடுவதின்’ பின் ஓடிக்கொண்டே
குழந்தை
குடுகுடுவென
வீதியில் ஓட,
ஓடுவாள் குழந்தையின் பின்னால்
பெற்ற அன்னை-
குழந்தை ஓடுமழகில்
பிடிக்கவும் மனமில்லாமல்
குழந்தை தடுக்கி விழுந்து விடுமோவெனப்
பிடிக்காமலிருக்கவும் மனமொப்பாமல்
குழந்தையின்
’ஓடுவதின்’ பின்
ஓடிக் கொண்டே-
குழந்தையின்
’ஓடுவதை’
ஓடிப் பிடிக்க முடியாதது போல்-
ஓடும்
’குழந்தையை’
ஓடிப்
பிடித்து விடுவதற்குள்!
கு.அழகர்சாமி