குருட்ஷேத்திரம் 26 (தருமனின் வாயிலிருந்து வசைச் சொல் வந்து விழுந்தது)

 

 

இயற்கை வம்சவிருத்திக்காகவே ஆணுக்கு பெண் மேல் மோகத்தை விதைத்தது. அரசன் காம வேட்கையிலிருந்து விடுதலையானவனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனுக்கு பதினாயிரம் மனைவிமார்கள் இருந்தனர். பெண் இச்சைக்காகத்தான் உலகில் பல பாபகாரியங்கள் நடந்தேறுகிறது. நவநாகரிகம் என்ற பெயரில் சமூகம் சுயஒழுக்கத்தையும் பண்பாட்டையும் அடகு வைத்து விட்டது. ஆணாக பிறப்பதே பெண் போகத்திற்காகத்தான் என்றாகிவிட்டது. நீதி பரிபாலனம் வழங்குபவர்கள் கூட பெண் மாயையில் சிக்கிக் கொள்கிறார்கள். பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மனம், கறந்த இடத்தை நாடுதே கண் என்றார் பட்டினத்தார். ராமனைத் தவிர யாரும் ஏகபத்தினிவிரதன் இல்லை என்றே தெரிகிறது. வாய்ப்பு கிடைத்தால் எல்லை மீறத் தயங்காதது தான் ஆண்கள் வர்க்கம். பெண்கள் வகுக்கும் பத்ம வியூகத்திலிருந்து வெளியேறத் தெரியாத அபிமன்யூவாகவே ஆண்கள் இருக்கின்றனர். தவ வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் கூட பெண்கள் விஷயத்தில் பலகீனமாகத்தான் இருந்திருக்கின்றனர்.

 

சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன் மட்டும் தான் சிட்டுக்குருவிகளைப் போன்று அதே நினைப்பில் இருக்கிறான். ஒருவனது வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறந்துவிடுகிறான். பேரழகிகளால் சாம்ராஜ்யங்கள் மண்மேடாகி இருக்கின்றன. வெறும் தோல் விவகாரத்துக்காக ஏற்கனவே பல பேருடைய இரத்தம் இந்தப் பூமியில் சிந்தப்பட்டுவிட்டது. அண்ணாந்து வியக்கும் நிலவில் கூட களங்கம் இருக்கவே செய்கிறது. பெண் மீது கொண்ட மோகம் அறிவுக்கண்ணை மறைத்துவிடுகிறது. வாழ்க்கை யாருக்கும் சிவப்புக்கம்பளம் விரித்ததில்லை. எவருக்கும் எந்த விதிவிலக்கும் இங்கு கிடையாது. இருந்தும் விட்டில் பூச்சி காம அக்னியில் வீழ்ந்து தன் முடிவைத் தேடிக் கொள்கிறது. கரி வைரமாக ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படுகிறது. முத்து வெளிப்பட சிப்பி தவமிருக்க வேண்டியிருக்கிறது. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் இந்த உலகம் இன்னொரு நரகமாகத்தான் இருக்கும்.

 

அவதாரங்களில் கிருஷ்ணணைத்தான் தவறு செய்பவன் துணைக்கு அழைக்கிறான். இந்த உலகில் எல்லாப் பெண்களும் கண்ணனின் கண்களுக்கு கோபிகைகளாகத்தான் தெரிந்தார்கள். காதல் அழிந்த பிறகு தான் காமம் முளைக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இந்த உடலோடு நம்மை தொடர்புப்படுத்திக் கொள்ளும்போது தான் காமம் பிறக்கிறது. மனிதன் மனதினால் வானில் பறக்க வேண்டியவன், காமம் தான் அவனை மண்ணைக் கிளறி தலையைப் புதைதத்துக் கொள்ளச் செய்கிறது. புழுவுக்கு ஆசைப்பட்டால் தூண்டிலில் மாட்டித்தானே ஆகவேண்டும். சத்தியத்துக்காக பெண்ணின் நிழலைக்கூட தீண்டாதவன் என்பதாலேயே பீஷ்மரை நாம் பிதாமகர் என்கிறோம். காமத்தை வேர்விடச் செய்பவர்கள் தேனை அருந்தும் வண்டாக மலருக்கு மலர் தாவுகிறார்கள். காமம் அனுபவிக்க தீராது வேள்வியில் இடப்படும் நெய் போல மனம் இன்னும் இன்னும் எங்கும். உடலின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டே இருந்தோமானால் நாம் மனித நிலையிலிருந்து வழுவிவிடுவோம். எதை நாம் விதைத்தோமோ அதையே அறுவடை செய்கிறோம். பெண்ணாசை பிறவிக்கு வழிவகுக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

 

சதையை விற்பவர்கள் உள்ளத்தில்காசு தான் இருக்கும் காதல் இருக்காது. வெறும் உடல் சேருவது மிருகக் காதல். மோட்சம் பெண்களின் காலடியில் இல்லை. பெண்ணாசையினால் தான் மனிதன் உயர்ந்த நிலையிலிருந்து வழுவினான் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஈக்களுக்குத்தான் தெய்வத்தின் மாலைக்கும் மலத்துக்கும் வித்தியாசம் தெரியாது. பொன்னிற மேனியானாலும் முதுமை வந்தவுடன் தோலில் சுருக்கம் வரத்தானே செய்யும். மனம் வேண்டும் வேண்டும் என்று ஆசைப்படும் போது உடல் தளர்ந்தால். வாழ்வின் மையம் சத்தியத்தோடு சம்பந்தப்பட்டிருந்தால் நீ புத்தன். சாக்கடையோடு சம்பந்தப்பட்டிருந்தால் நீ இந்தப் பூமிக்கு பிறவி சுழற்சியால் திரும்பத் திரும்ப வந்து போய்க் கொண்டிருப்பாய். நதியென்பது ஜலம் மட்டுமல்ல மணலும் தான். மனிதனின் தரம் அவனுடைய செயல்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது. புலன்களை வெற்றி கொண்டால் காமனை தகனம் செய்த சிவனாகலாம். வாழ்வின் கோர முகம் தான் மனிதனை ஏதோவொரு போதையை நாட வைக்கிறது. மனிதன் தெய்வமாகலாம் தான் ஆனால் மனிதன் முதலில் மனிதனாகட்டும்.

 

அரக்கு மாளிகை சதியிலிருந்து தப்பித்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் பிச்சை ஏற்று வாழ்ந்து வந்தனர். அர்ச்சுனன் திரெளபதி சுயம்வரத்தில் மாறுவேடமணிந்து பிராமணர் வடிவில் சென்று திரெளபதியை வெற்றி கொண்டு குந்தியிடம் அழைத்து வருகிறான். அர்ச்சுனன் பரிசில் பெற்று வந்துள்ளேன் எனச் சொல்ல சமையல் வேலையில் மும்முரமாக இருந்த குந்தியோ ஐவரும் சமமாக பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறாள். இப்படித்தான் பாஞ்சாலி சகோதரர்கள் ஐவருக்கும் மனைவியானாள். இந்தப் பாஞ்சாலி தான் தங்களை பாரதப் போருக்கு இட்டுச் செல்ல போகிறாள் என்று அன்று பாண்டவர்கள் அறிந்திருக்கவில்லை. சகோதரர்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாஞ்சாலி ஒவ்வொருவருடன் இருப்பது என்று முடிவானது. தனது முறை வரும் சமயத்தில் அவர்கள் அரண்மனையில் இல்லையென்றால் யார் திரெளபதியின் அறைக்குள் செல்கிறார்களோ அவர்கள் உள்ளே சென்றதை மற்றவருக்கு தெரியப்படுத்த தனது காலணியை அறை வாயிலில் விட்டுச் செல்வது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

 

அன்று பீமன் வேட்டையாடிவிட்டு களைத்துப்போய் மாளிகைக்கு வந்தான். முறுக்கேறிய உடல் திரெளபதியை நினைத்து காமவயப்பட்டது. மூர்க்கமான பீமன் காமத்தால் உந்தப்பட்டு திரெளபதியை நாடிச் சென்றான். கதவு தாழிடப்பட்டிருந்தது ஆனால் கதவிடுக்கில் இடைவெளி இருந்தது. பீமன் காமத்தால் அறிவுக் கண்ணை இழந்திருந்தான். இடுக்கில் கைவிட்டு தாழ்ப்பாளை திறந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தருமனையும் திரெளபதியையும் யாரும் காணக்கூடாத கோலத்தில் கண்டான். ஆவேசமடைந்த தருமன் பீமனிடம் கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற இங்கிதம் கூடவா தெரியாது என்றான். பீமனோ எனக்கு புத்தி சொன்னது போதும் ஒப்பந்தத்தை மறந்துவிட்டீர்களா என்றான். தருமனோ நான் உள்ளே இருக்கும்போது நீ எப்படி நுழையலாம் என்றான். நீங்கள் உள்ளே இருக்கின்றீர்கள் என்று எனக்கெப்படி தெரியும் என்றான் பதிலுக்கு பீமன்.

 

காலணியைத்தான் வெளியே விட்டிருந்தேனே நீ பார்க்கவில்லையா என்றான் தருமன். பீமனோ விட்டிருந்தால் தானே இருக்கும் போய்ப் பாருங்கள் என்றான் ஏளனமாக. தருமன் சீற்றத்துடன் அறைக்கு வெளியே வந்து பார்த்தான் அவன் விட்டுச் சென்ற காலணியைக் காணவில்லை. தருமன் குழப்பமடைந்தான் காலணியைப் போய் யார் களவாடுவார்கள். மற்றவர்களின் காலணியை அணிவதும் சனியனை வாவென்றழைப்பதும் ஒன்றல்லவா, அப்படியிருக்க எப்படி நடந்தது என யோசித்தான். சுற்றும் முற்றும் கண்களைச் சுழற்றி பார்க்க தெருவில் ஒரு நாய் காலணியை வாயில் கவ்வியபடி ஓடி வந்தது. அதன் வளவளப்புத்தன்மை அந்நாயின் கண்களை உறுத்தியதால் வந்த விளைவு இது. தருமனுக்கு கோபம் தலைக்கேறியது எச்ச நாயே உன்னால் தானே நான் அவமானப்பட நேர்ந்தது. உன் எச்ச புத்தியால் தானே நான் இணை கூடியதை பீமன் பார்க்க நேர்ந்தது என கொதித்தான். என் ஆயுள் வரை இதை என்னால் மறக்க முடியுமா? இதற்கு தண்டனையாக உன இனமே வானக்கூரையின் கீழே மனிதர்கள் கல்லெறிய நடுத்தெருவில் பெட்டையுடன் இணை சேர்ந்து திரியும் எனச் சாபமிட்டான். நாயின் லீலைகளுக்கு தருமனே காரணம் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?

            

கதைகள் ஒரு கருத்தை நிலைநிறுத்துவதற்கே சொல்லப்படுகிறது. உனது கோணத்தில் இருந்து நீ அதைப் புரிந்து கொள்ள முற்பட வேண்டும். அவரவர் பார்வையில் அவரவர் உலகங்கள் வெவ்வேறு. கதைக்கு இதுதான் கருத்தென கல்வெட்டிலா பதிய முடியும். கருத்து உனது மனச்சிறகை விரித்து கற்பனை உலகில் உன்னை பயணப்பட வைத்தால் போதும். இறைவனைக் கூட யாரும் இருக்கு இல்லை என்று சொல்வதில்லை நீயே அறி என்பதுதான் அவர்கள்வாதம். நான் கண்டடைந்ததால் உனக்கென்ன பயன் நீயே கதவைத் தட்டிப்பார், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது தானே தேவ வாக்கு. உனக்கு விதி இருந்தால் அவன் வெளிப்பட்டேத் தீருவான். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா? இங்கு எல்லோரும் மறைந்து விடுகிறோம் வரலாறு சிலரை மட்டுமே வாழ்விக்கிறது.

 

ப.மதியழகன்

115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
cell:9597332952

Whatsapp: 9384251845

 

 

 

Series Navigationகுருட்ஷேத்திரம் 25 (யட்சனுடன் சம்வாதம் செய்த தருமன்)அ. முத்துலிங்கம் எழுதிய  “ ஐந்து கால் மனிதன்  “  வாசிப்பு அனுபவம்