1927 மார்ச் 2 அக்ஷய மாசி 18 புதன்
மதராஸ். மதராஸ். மதராஸ்.
குழாய் மூலம் வெகு தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த மாலுமிகளில் ஒருத்தன் சொன்னான். கூட நின்ற கூட்டாளிகள் நாலைந்து பேர் உரக்கக் கைதட்டினார்கள். அந்தக் கைதட்டல் கீழே எஞ்சின் ரூமுக்குக் கடக்க, அங்கே இருந்து அவசரமாக வெளியே வந்து இன்னும் நாலு கப்பலோட்டிகள் ஓ என்று ஹூங்காரம் செய்து வானத்தைப் பார்த்து ரெண்டு கையையும் பரக்க நீட்டிக் கும்பிட்டார்கள். குசினியில் அண்டா குண்டா பாத்திரங்களை கையில் அகப்பட்ட கரண்டியாலும் கட்டையாலும் தட்டி சத்தம் எழுப்பி சமையல்காரர்களும் அவர்களோடு சுற்றுக் காரியம் செய்கிற எடுபிடிகளும் ஆனந்தப் பட்டதை பட்டவர்த்தனமாக்கினார்கள். இந்த பிரகிருதிகள் எல்லோரையும் தொடர்ந்தபடிக்கு டெக்கில் தரை மெழுகிக் கொண்டிருந்த நானும், கூட இருந்த காப்பிரிப் பிள்ளை, பாரசீக துருக்கப் பிள்ளை, இந்துஸ்தானி உச்சுக் குடுமி மனுஷன் என்று எல்லோரும் துடைப்பத்தையும் வாளிகளையும் கீழே வைத்துவிட்டுக் குதூகலமாகக் கை தட்டினோம்.
இருபது வருஷம் தேசாந்தரம் போய்விட்டு சொந்த பூமிக்குப் போகிறதற்காக நான் வேண்டுமானல் இந்தத் தரத்தில் சந்தோஷப் படலாம். ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கும்மாளம் போடலாம். இவன்களுக்கு என்ன ஆச்சு?
சாமி, கப்பல் கட்டிப் பயணம் வச்சு முதல் தடவையாக மெட்ராஸ் வந்திருக்கு. இந்த விஜயத்தைக் கொண்டாட வேணாமா?
எனக்கு ஒரு பவுண்ட் சன்மானம் கொடுத்து மெட்ராஸில் சீமைச் சரக்கு பலதையும் விற்க பிரயத்தனப் படுகிற மாலுமி சொன்னான்.
சாமி, காப்டன் துரை உன்னைத் தேடிட்டு இருந்தார்.
சமையல்கார இந்திக் காரன் மேலே உலர்த்தி இருந்த மீனில் ரெண்டு குத்து கையில் எடுத்துக் கொண்டு குசினிக்குத் திரும்பும்போது தகவல் அறிவித்தான்.
நான் குச்சியில் கட்டிய ஈரத் துணி சகிதம் காப்டன் இருக்கப்பட்ட சவரச் சாலைக்குள் நுழைந்தேன். துப்புரவுக் கழி வாசல் நிலையில் தட்டிய சத்தம் கேட்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்த காப்டன் துரை திரும்பிப் பார்த்தார்.
அவர் விரதம் இருக்கிற மாதிரி நாள் கணக்காக மழிக்காமல் விட்ட தாடியை ஒரு சிப்பந்தி மழிக்க முகத்தை அப்படியும் இப்படியும் காட்டி ஆனந்தித்தார். இன்னொருத்தன் படிகாரத்தை பனிக் கட்டி மாதிரி கையில் பற்றி அவர் முகத்தில் தடவ, சுகமான எரிச்சலில் சிணுங்கிச் சிணுங்கிச் சிரித்து போதும் போதும் என்றார். அது சுகிக்கும் போது ஸ்திரி போதுமெனச் சொல்வது மாதிரி என்று புரிந்து கொண்ட சிப்பந்தி தொடர்ந்து படிகாரத்தை அவர் முகத்தில் இழைய விட்டான்.
சாமி, கக்கூஸ் துடைத்த துணியை எல்லாம் என் முகத்துக்கு நேரே நீட்டாதே. உங்க பூமிதான். உன் ராஜ்ஜியம்தான். ஆனாலும் காப்டனுக்கு ஒரு மரியாதை தர வேணாமா நீ?
அவர் சிரித்துக் கொண்டே கேட்டார். இன்று இந்தக் கப்பலில் இருக்கும் மிச்ச நேரம் எல்லாம் யாரையும் யாரும் எதற்காகவும் கண்டிக்கவோ, நாக்கூச வையவோ எத்தனிக்க மாட்டார்கள் என்று திடமாகத் தோன்றியது. கரைக்கு வந்து கொண்டிருக்கோம். புத்தம் புதுக் கப்பலை கை மாற்றி விருந்து சாப்பிட்டு சம்பாவனை வாங்கிக் கொண்டு இவர்கள் எல்லோரும் நல்லபடியாக ஊரைப் பார்க்கப் போய்ச் சேரட்டும்.
நாடகத்தில் ராஜபார்ட் வேஷம் போட்டது மாதிரி வெள்ளைத் துணியைக் கழுத்தைச் சுற்றித் தழையப் தழையப் போர்த்திக் கொண்டு கேப்டன் துரை நாற்காலியை விட்டு இறங்கினார். அந்த கந்தர்கோளத்துக்கு உள்ளே கையை நுழைத்துத் துளாவி நாலைஞ்சு துட்டை சிரைத்து விட்ட சிப்பந்திக்கு விட்டெறிந்தார். ஆடி அலைபாயும் கப்பல் தரையில் விழுந்த அந்தக் காசு ஓரமாக ஒதுங்குவதே குறியாக நகர, நம்ம கறுப்பன் குந்தி உட்கார்ந்து ஒண்ணு விடாமல் பொறுக்கிக் குப்பாயத்தில் திணித்துக் கொண்டான்.
நடக்க ஆரம்பித்த துரை என் பக்கத்தில் வந்ததும் குரலை தாழ்த்தி கேட்டது இந்தப்படிக்கு இருந்தது.
சாமி, நீ உள்ளூர்க்காரன் தானே. பட்டணம் முழுக்க ஒரு இண்டு இடுக்கு விடாமல் பரிச்சயம் உண்டல்லவா.
ஏதோ தெரியும் சார். நான் இங்கே இருந்து வெளியே போய் வெகு நாள் ஆச்சு. ஆனாலும் சமுத்திரமும் கோட்டை கொத்தளம் கோவிலும் வீதியும் எல்லாம் மனசில் அச்சு வெல்லமாப் பதிஞ்சு இருக்கே. அதுவும் ஜன்ம ஸ்தலம் ஆச்சே.
அப்போ நல்லதாப் போச்சு சாமி. இங்கே வெள்ளைக்காரங்க பேட்டை, அது வேணாம், அதுவும் இல்லாம இதுவும் இல்லாம அதான் சாமி அப்பன் வெள்ளை ஆத்தா கறுப்புன்னு இருக்கப்பட்ட ஜனங்கள்.
என்னோடு மிஷின் பள்ளிக்கூடத்தில் படித்த ஹென்றி ஞாபகம் வந்தான். ஆப்பம்னு அவனையும் ஈர்க்குச்சிக்கு பாவாடை சுத்தின மாதிரி இருந்த அவன் அக்காளையும் சொல்றது. அவா எல்லாரையுமே அப்படித்தான் சொல்றதுன்னு அப்புறம் தான் தெரியும். ஆப்பமோ சாப்பமோ பாதி படிக்கற போதே அட்சரம் மூளையிலே ஏறாதே ஹென்றியும் சகுடும்பமும் வெள்ளைக்கார தேசத்துக்கு சவாரி விட்டுட்டதா ஞாபகம். அமெரிக்காவுலே ஏதாவது தெருவிலே அவனும் கூட்டிப் பெருக்கிண்டு இருப்பான் இப்போ வங்கிழவனா, என்னைப் போல.
ஹென்றி பெரம்பூர்லே இருந்த ஞாபகம். அவன் மாதிரிப் பட்டவங்க தான் குடும்பம் குடும்பமா அங்கே தங்கியிருந்தது. புதுசா வந்த நீராவி ரயில் வண்டி ஓட்டப் படிச்சுட்டு உத்தியோகத்துக்குப் போனதும் இந்தக் குடும்பத்து மனுஷாள் தான்.
நான் காப்டன் துரைகிட்டே பிரம்பூர் பற்றிச் சொன்னேன்.
சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டு தாடையில் சொரிந்தபடி மேலும் விசாரிக்கலானார்.
ரெண்டு மூணு வாரம் கூட வந்து சமைச்சுப் போட்டு படுக்கையிலே கைகால் பிடிச்சு விட்டு, கூடவே தூங்கிட்டுப் போற மாதிரி அங்கே அகப்படுமில்லே.
சரியாப் போச்சு. ஒரு துரை சாமான் சீமைச் சரக்கு செட்டை வித்துத்தர தரகு வேலை பாக்கறியாங்கறான். இன்னொருத்தன் பாவாடைப் பொண்ணா பிடிச்சுண்டு வாடா வக்காளிங்கறான். பட்டணத்து மண்ணுலே காலை வைக்கற மிந்தி என்ன மாதிரி உத்தியோகங்களுக்கான சந்தர்ப்பம் வந்து நிக்கறது நமக்கு.
துரையே அதொண்ணும் எனக்குத் தெரியாது. வேணுமானால் விசாரிச்சு சொல்றேன். ஆனா விசாரிச்சதைச் சொல்ல நான் கரையிலே இருந்து நங்கூரம் பாய்ச்சி நிக்கற கப்பலுக்கு எப்படி வர்றதாம்?
சோப்பும் சீப்பும் பெடல் சைக்கிளும் விற்றுத்தர தரகு பண்றதுக்கும் இப்படி புகுந்து புறப்பட அனுமதி அவசியம். அந்த இக்கிணியூண்டு உத்தியோக துரையை விட, பொம்மனாட்டி சுகம் தேடி நாக்கைத் தொங்கப் போட்டுண்டு நிக்கற நம்ம காப்டன் துரைவாள் சிரேஷ்டமானவராச்சே. இவர் பெர்மிஷன் கொடுத்தா சர்வேஸ்வரனே கொடுத்த மாதிரி.
இங்கே வர்றது எல்லாம் ஒரு கஷ்டமும் இல்லே. நீ மூட்டை முடிச்சோட கப்பலை விட்டு புறப்படற முந்தி கடுதாசி தரேன். அதைக் காட்டினா நான் படுத்து இருக்கற இடத்துக்குக் கூட ரைட் ராயலா வந்துடலாம். ஆனா கப்பல் கிளம்பின அப்புறம் முடியாது, கேட்டுக்கோ.
தன் ஹாஸ்யத்துக்கு தானே சிரித்த துரை கடாட்சம் புரிந்து முன்னால் போறார். இன்னும் ஒரே வினாடி நின்று கூடுதல் தகவலாகச் சொன்னார் – கொஞ்சம் புஷ்டியா, அஞ்சரை அடிக்கு மேலே உசரம் இல்லாம, என்ன நான் சொல்றது புரியறதா?
பெருமாள் மாடாத் தலையை ஆட்டினேன். அஞ்சரை அடி என்ன கணக்கு? உன் உசரத்துக்குச் சரியா இருக்கணுமா? நிக்க வச்சா சேவை சாதிக்கப் போறே?
வெளியே வந்து வாளியை குசினிக்கு முன்னால் கவிழ்த்தி வைத்தேன். இனிமேல் ஆயுசுக்கும் கப்பல் கழுவி வயிறு கழுவ வேண்டியிருக்காது. ஊர்லே, அடுத்தவன் பிருஷ்டத்தை அலம்ப வேண்டி இருந்தாலும் சரிதான். அது எதுக்கு வரணும்?
எல்லா கப்பல் வேலைக் காரன்களும், மாலுமி, எஞ்சின் ரூம் சிப்பந்திகள் உட்பட நல்ல உடுப்பாக எடுத்து வெளியே வைப்பது, சுய சவரம் செய்து மூஞ்சி முகமெல்லாம் குரங்கு பிராண்டின மாதிரி ரத்தக்காயத்துலே படிகாரத்தை வச்சு இன்னும் சிவக்க வச்சுக்கிறது, அவசர அவசரமா தலை முடியை வெட்டி விடச் சொல்லி, வட்டக் கிண்ணியை சதுரமாக்கி தலையிலே ஒட்டின மாதிரி கோண்டு வேஷத்துலே நிக்கறது இப்படி இல்லாத கொனஷ்டை எல்லாம் காமிச்சுண்டு இருந்தாங்கள். சில பேர் எஞ்சின் கரியைக் குழைச்சு நரைச்ச தலைமுடியை கருக்க வச்சுண்டு இருந்தான். ஒருத்தன் அக்குளில் கூட இந்த சிகிச்சையை கர்ம சிரத்தையா நடத்திண்டு இருந்தான். படை பட்டாளமா ஸ்திரி வாசனை பிடிக்கப் போற முஸ்தீபு இது எல்லாம்.
உசரம் தூக்குற யந்திரம் மேலே கீழே போய் வர சக்கரம் சுத்தற ரூம்லே சத்தம். என்னடான்னு பார்த்தா, அபிசீனியப் பையனுக்கு கட்டக் கடோசி முத்தம் கொடுத்து குசினிக்காரன் திரும்பிண்டு இருந்தான். இவன் பட்டணத்துலே எறங்கி, எந்த ஸ்திரியையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான். சொந்த பூமின்னு பம்பாய் போனாலும் கல்கத்தா போனாலும் டில்லிப் பட்டணம் போனாமும் அதே கதை தான்.
சாமி.
உசரம் தூக்குற யந்திரத்தில் ஏறிக் கொண்டிருந்த துரை கூப்பிட்டான். சாதாரணமா சிப்பந்திகள் அதுலே போக அனுமதி இல்லே. இப்போ அதெல்லாம் இல்லாத நேரம்.
அவனோடு சேர்ந்து நின்னபடிக்கு மேலே வந்தேன். கொஞ்சம் கீழே இறங்கினா முதல் கிளாஸ் கேபின். அவன் தங்கி இருந்த இடம். இன்னும் கொஞ்சம் நாள்லே கப்பல்லே காசு கொடுத்து பிரயாணம் பண்ற கூட்டம் வர்ற போது அங்கே தங்கி இருந்து சுகமா பிரயாணம் செய்ய ஏகத்துக்கு பணம் அழ வேண்டி இருக்குமாம். அபிசீனியப் பையன் குசினிக்காரனோடு கூட இருந்து உலக விஷயம் சர்ச்சை செய்யாத நேரங்கள்லே எப்பவோ சொல்லி இருக்கான்.
சாமி, இதைப் பாரு,
துரை பெரிய தோல்பெட்டி நாலைஞ்சு அடுக்கி வச்சிருந்ததிலே ஒண்ணைத் திறந்து காட்டினான். உள்ளே நிறைய பியர்ஸ் சோப்பு, முகத்துலே போட்டுக்கற சுண்ணாம்பு மாவு, வாசனாதி செண்ட், நானாவிதமான பிஸ்கோத்து, அழுத்தமான மல்லுத் துணி, முழம் முழமா உருளையிலே சுத்தி வெல்வெட் துணி, பெல்ஜியம் கண்ணாடி, சீப்பு, லாந்தர் விளக்கு, பல தரத்திலே கத்திகள் சமையல்கட்டுலே பிரயோஜனமாகறதுக்கு, ஆப்பிள் பழ ஜாம் இன்னும் என்னென்னமோ.
சகலமும் விக்கற ஒரு கடையையே சுருட்டி எடுத்து தோல்பை தோல்பையா அடச்சுக் கொண்டு வந்திருக்கான் போல.
சாம்பிள் காட்ட, முதல்லே வியாபாரம் படிஞ்சு வந்தா முடிக்கன்னு இதுலே கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கோ. இந்தப் பையிலே எல்லாத்தையும் அடச்சுக்கலாம்.
நான் அவன் சொன்னபடிக்கு செய்தேன். கத்தி கபடா மட்டும் வேணாம்னு வச்சேன், பீட்டர் மெக்கன்ஸி துரையைக் கொன்ற சங்கதி. நான் செய்யலே. ஆனாலும் கத்தியே ஆயுசுக்கும் எனக்கு வேணாம்.
பெடல் சைக்கிள்?
அதை எப்படி இறக்கி எடுத்துப் போறது? அதுலே ஆரோகணிச்சு செலுத்தவும் எனக்குப் பரிச்சயமில்லை. சக்கரம் உருள உருள உருட்டிண்டு போனா கல்ப கோடி காலம் அதுமட்டும் தான் செய்ய வேண்டி இருக்கும்.
சைக்கிளை எடுக்க வேண்டாம். சுங்கத்திலேயும் விட மாட்டான். இந்தப் படத்தைக் காட்டிப் பேசறது சிலாக்கியம். படிஞ்சு வந்த மனுஷ்யர்களை கப்பலுக்கு கூட்டிண்டு வந்து சேர். தோலான் துருத்தி எல்லாம் இங்கே படி ஏத்திடாதே. உன்னையும் அவனையும் சமுத்திரத்திலே தள்ளி விட்டுடுவேன்.
அவன் சிரித்தான்.
தள்ளினா என்ன ஓய்? எங்க ஊர் எங்க சமுத்திரம். நடந்தே திரும்பிட மாட்டோம்?
நானும் பரிகாச வார்த்தை சொன்னேன். அவன் சின்னதாகச் சிரித்து விட்டு என் காதுப் பக்கம் குனிந்தான். என்ன சமாசாரம்? பெரம்பூரா? இல்லை கொண்டித்தோப்பு தாசி போதுமா?
சொல்லு துரை என்று சகஜ பாவத்தோடு சொன்னேன். எப்போ நம்மோட ஒத்தாசை தேவைப்படறதோ அப்பவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை எல்லாம் பெருக்கித் தள்ளி மெழுகி ஓரமாத் தள்ளிடலாம்.
அப்படியும் இப்படியும் ரெண்டு தடவை வாசலைப் பார்த்து விட்டு, கொஞ்சம் இரு என்று எனக்குக் கைகாட்டி மெல்ல அந்தப் பக்கம் நடந்தான், வெளியே எட்டிப் பார்த்து விட்டுக் கதவை அடைத்துச் சார்த்தி விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தான்.
இது என்ன விபரீதம்? கொண்டித் தோப்புத் தாசி, பெரம்பூர் மிஸ்ஸி, அபிசீனியாப் பையன். இப்படித்தான் அவனவன் மோகாவேசப்பட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறான். கரையில் உடம்புக்குச் சுகம் தேட இப்பவே முஸ்தீபு செய்கிறான். இவன் என்னடா போயும் போயும் இந்தக் கிழவனை.
அவன் உள் அலமாரியில் ஒரு தடுப்பை விலக்கித் திறந்து அதன் அடிப் பாகத்தில் இருந்து கிழங்கு மாதிரி, திண்டுக்கல் பூட்டுக்குக் குழந்தை பிறந்த தோதில் இருந்த ஒரு சின்ன பூட்டு மாட்டிய மரப் பேழையை வெளியே எடுத்தான். குனிந்து நின்று கழுத்தில் மாட்டியிருந்த சிலுவைச் சங்கிலியில் கோர்த்த சாவியால் பெட்டகத்தைத் திறந்தான்.
உள்ளே எக்கிப் பார்த்தேன். மூக்குத் தூள் மாதிரி வாசனை வந்தது. பொட்டலம் பொட்டலமாக ஏதோ அடைத்து வைத்திருந்தது.
ஓப்பியம் சாமி. இருநூறு பவுன் பெறுமானத்துக்கு வச்சிருக்கேன். கையிலே எடுத்து மோந்து பாரு.
எனக்கெதுக்கு இந்த இழவெல்லாம்? என்னோட ஒரே லாகிரி பெருத்த முலையும் கனத்த தொடையுமா படுத்துக்க சித்தமா பல் தேச்சுட்டு வந்து காத்திருக்கிற ஸ்திரிதான்.
பழிகாரன் சொன்னானே என்று சிட்டிகையிலும் அரைக்கால் பாகம் ஒரு பொட்டலத்தைப் பிரித்து எடுத்து மூக்குப் பொடி மாதிரி உறிஞ்சினேன். ரெண்டு நிமிஷம் இருக்கப்பட்ட இடமும் நேரம் காலமும் ஒண்ணும் தெரியாமல் கப்பலும் கடலும் உலகமும் சூரிய சந்திராதிகளும் சுழண்டு சுழண்டு என்னைச் சுத்தி வெள்ளம் வந்த மாதிரி முழுகிப் போகற அளவு பெருகி கண்ணைக் கட்டினது.
ஒஸத்தியான சரக்கு சாமி.
அவன் என் முதுகில் தட்டிச் சிரித்தான்.
அயன் பார்ட்டி மிட்டா மிராசுன்னு கிடச்சா சொல்லும். இது ரொம்ப ஜாக்கிரதையான வேலை. பத்து நாள்லே முடியாதுன்னா, நான் சிங்கப்பூர்லே இருந்து திரும்பும்போது பார்க்கலாம். அங்கேயே இது முழுக்க வித்துப் போயிடும்.
ஆள் சின்னவனா இருந்தாலும் என்னமா காசு விஷயத்துலே கண்ணு வச்சு ஆரியக் கூத்து ஆடறான் வெளுத்த தோல்காரன். கூட நின்னு ஜால்ரா அடிக்கறதுலே நமக்கும் நாலு காசு வருமானம் வரும்.
இது ஏடாகூடமாnனா திரும்ப பட்டணத்திலே ஆயுசு முடியற வரை காராக்ருஹம் தான்னு ஒரு மனசு பயம் காட்டினது.
இந்தா சாமி பிடி, சாம்பிள் காட்ட ரெண்டே ரெண்டு பொட்டலம். ஜாக்கிரதையா வச்சுக்கோ. அஞ்சு பவுண்ட் பெறும் ரெண்டும். ஆள் பார்த்து மூக்கிலோயோ பின்னஞ் சந்திலேயோ திணிச்சு விட்டு மூஞ்சி போற லக்ஷணத்தைப் பாரு. நிச்சயம் வாங்கற பேர்வழின்னா அப்படியே உன்னோடு கூட இங்கே வந்துடுவான்.
நான் அவன் கொடுத்த சஞ்சியையும் எடுத்துக் கொண்டு டெக்கில் என் இருப்பிடம் வந்தேன். குசினிக்குள் போய் ஸ்டோர் ரூமில் பத்திரமாகப் பூட்டி வைத்திருந்த மர அலமாரிக்குள் திணித்திருந்த என் மூட்டைகளையும் எடுத்துக் கொண்டேன். மொத்தம் மூணு மூட்டை. ரெண்டு கையில். தோல் பை தோளில் மாட்ட.
பூட்ஸைக் களைந்து ஒரு சஞ்சியில் திணித்துக் கொண்டு பாபாஸ் ஜோடு பழசு வச்சிருந்ததைத் தேடிக் காலில் போட்டுக் கொண்டேன்.
நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பலில் இருந்து கடைசியாக மகாலிங்க அய்யன் இறங்கினான்.
(தொடரும்)
- முள்வெளி- அத்தியாயம் -4
- நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்
- அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு
- சுனாமி யில் – கடைசி காட்சி.
- இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
- ஆணுக்கும் அடி சறுக்கும்…!
- தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)
- கருணாகரன் கவிதைகள்
- சம்பத் நந்தியின் “ ரகளை “
- குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு
- பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு
- ஈக்கள் மொய்க்கும்
- தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்
- வரங்கள்
- சட்டென தாழும் வலி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8
- ‘பிரளயகாலம்’
- நூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000
- பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்
- காலப் பயணம்
- மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19
- பின்னூட்டம் – ஒரு பார்வை
- நீர் சொட்டும் கவிதை
- கவிதை!
- இறந்தும் கற்பித்தாள்
- பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )
- பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘
- நானும் ஷோபா சக்தியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்
- தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்
- “ பி சி று…”
- தீபாவளியும் கந்தசாமியும்
- புதுமனை
- அன்பெனும் தோணி
- என் சுற்றுப்பயணங்கள்
- சருகாய் இரு
- கவிதை
- வந்தவர்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10
- இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56