ஏப்ரல் மாதம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஓர் இலக்கிய விழா இது. அமைப்பு தொடங்கி 42 ஆண்டுகள் ஆகிவிட்டன எனச் சொல்லும்போதே நிறுவனர் லட்சுமணனுக்கு குரல் கம்மி விட்டது. பாரதி என்பவர் தன் உடல்நிலையைக்கூடப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை அன்று மாலை சென்னையில் நடத்தி வருகிறார். விழா அவரை முதன்மைப்படுத்துவதில்லை என்பது ஒரு குறை.
இந்த வருடம் மேடையில் முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன், அவரைப் பற்றிக் குறும்படம் எடுத்த பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் வெண்ணிலா, எழுத்தாளர் அய்க்கண், சித்ராலயா ஸ்ரீராம், சிறப்புப் பேச்சாளராக தமிழருவி மணியன். ஒய் ஜி மகேந்திரன் நாடகம் இருந்ததால் வரவில்லை. அரங்கம் நிறைந்து, ஒரு சிலர் நின்று கொண்டோ, கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டோ விழாவை ரசித்தது, இலக்கியம் இன்னமும் சாகவில்லை என்பதை நினைவூட்டியது.
பாரதி கிருஷ்ணகுமார் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். நல்ல இலக்கியங் களைத் தேடிப்போகாதவர்களைப் பன்றியுடன் ஒப்பிட்டுப் பேசினார். “ தான் தின்னுவது மலம் என்று தெரியாமல்தான் பன்றி அதைத் தின்னுகிறது. “
ர.சு.நல்லபெருமாளின் மொத்த படைப்புகளையும் ( 37 நூல்கள் ) படித்து, ஆய்வுநூல் (கல்லுக்குள் சிற்பங்கள்) எழுதிய அய்க்கண், விலாவாரியாக அவர் கதைகளை விவரித்தார். ர.சு.ந.வின் துணைவியார் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். ர.சு. நல்லபெருமாளின் நூற்றாண்டு இது.
சிறுகதைகளைப் பற்றிப் பேச வந்த அ. வெண்ணிலா, தற்கால எழுத்தாளர்கள் இமையம், பாஸ்கர் சக்தி இவர்களைப் பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை. அவர் பேச்சு ஒன்றுதான் தற்காலத்தை ஒட்டி இருந்தது.
ஹை லைட் தமிழருவி மணியனின் பேச்சு. கையில் குறிப்பு இருந்தாலும், மடை திறந்தாற்போல் பேச்சு.
“ அகம் புறம் இரண்டும் தூய்மையானவர்களோடு மட்டும்தான் பழகுவது, பேசுவது என்கிற கோட்பாட்டில் என் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறேன். இங்கே அப்படிப்பட்டவர்கள் தான் இருக்கிறீர்கள். அதனால் இங்கே பேச வந்தேன். எழுதுபவர்கள் எழுத்தில் கூர்மையோடு எழுத வேண்டும் என்பதில்லை. நேர்மையோடு எழுத வேண்டும். படைப்புகள் நல்ல விசயங்களை அறிவுறுத்துவதாக இருக்க வேண்டும். நா. பா. எழுதிய காலத்தில், அவர் படைப்புகள் தீண்டாமை போல் ஒதுக்கப் பட்டன. என் சிறு வயதில் குறிஞ்சி மலர் படித்து, அதன் நாயகன் அரவிந்தனைப் போல வாழ வேண்டும் என்று கொள்கை வகுத்துக் கொண்டேன். நா. பா. எழுதிய காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்றே பெயர் வைத்தார்கள். அவருடைய தாக்கம் அப்படி. பின்னே சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகளையோ, ஒரு புளிய மரத்தின் கதையையோ படித்து வாழ்வினை அமைத்துக் கொள்ள முடியுமா? பொன்னியின் செல்வனை இப்போது படிக்கப் பிடிக்கவில்லையா? ஜெயகாந்தனைப் படியுங்கள். நா.பாவைப் படியுங்கள். அந்தக் காலத்தில் நல்ல இலக்கிய இதழ்கள் வந்து கொண்டிருந்தன. கசடதபர, ழ, நடை, தீபம்.. ஆனால் இப்போது நமக்கு ‘கொலவெறி’தானே வேண்டியிருக்கிறது.
எனக்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு: “ நீயே கல், நீயே உளி, நீயே சிற்பி” சில வார்த்தைகளில் சொன்னால் கவிதை. வார்த்தைகளைக் கூட்டிக் கொண்டே போனால் உரைநடை, இசையோடு சொன்னால் பாட்டு. கூட்டலில்தான் இருக்கிறது எல்லாக் கலைகளும். ஆனால் கழித்தலில் மட்டுமே உள்ளது சிற்பக் கலை. கோவிலின் கர்பக்கிரகத்தில் இருக்கும் சாமி சிலையைப் பார்த்தவுடன் நாம் கண்களை மூடிக் கொண்டு விடுகிறோம். நான் சொல்லுவேன். கண்களை மூடாதீர்கள். அகல விழித்துப் பாருங்கள். அங்கே அந்தச் சிலை ஒரு செய்தி சொல்லுகிறது. ‘ நான் கல்லாக இருந்தேன். ஒரு சிற்பி என்னில் உள்ள வேண்டாததைக் கழித்துவிட்டு என்னை கடவுள் ஆக்கியிருக்கிறான். உன்னிடம் உள்ள வேண்டாததைக் கழித்து விடு. நீயும் கடவுள் ஆகிவிடுவாய். அஹம் பிரம்மாஸ்மி “ ஒரு வாழ்வின் மூன்று நிலைகள்: விலங்கு, மனிதன், கடவுள். எனது இருபத்தியாறு வயது வரை நான் விலங்காக இருந்தேன். என் சுகம், என் தேவை, என் வாழ்வு என விலங்காகத்தான் இருந்தேன். எந்த விலங்கோ, பறவையோ தன்னைத் தாண்டிச் சிந்திப்பதில்லை. எனக்குத் திருமணமானவுடன், நான் என் மனைவிக்காகவும் சிந்திக்க ஆரம்பித்தேன். அப்போது நான் மனிதனானேன். எனது இரண்டு குழந்தைகளுக்காக வாழ ஆரம்பித்து, என்னைத் துறக்க முற்பட்டதில், நான் கடவுளை நோக்கி போக ஆரம்பித்தேன். ஆனால் முழுமையாகக் கடவுள் ஆகவில்லை. எப்போது ஒரு மனிதன் கடவுளாகிறான்? தன் உறவுகளைத் துறந்து, சமுகத்தின் பால் அக்கறை கொண்டு, வாழ ஆரம்பிக்கும்போது அவன் கடவுளாகிறான்.
யார் உண்மையான வைஷ்ணவன்? ராமானுஜர் சொல்கிறார். தினமும் பெருமாள் கோவிலுக்குப் போகிறவனா? இல்லை! மாத வருமானத்தில் பத்து விழுக்காடை திருப்பதி உண்டியலில் போடுபவனா? இல்லை! பின் யார் உண்மையான வைணவன்? ராமானுஜர் சொல்கிறார்: அடிபட்டுக் கீழே விழுந்திருப்பவனைப் பார்த்து விழுந்தது எவனோ இல்லை, நானே! அவன் உடம்பிலிருந்து வழியும் குருதி எனதே! என்று எவன் நினைக்கிறானோ அவனே உண்மையான வைணவன்.
நகுலனின் ஒரு கவிதை அற்புதமாகச் சொல்கிறது.
வந்தவன் என்னைத் தெரியுமா என்றான்
தெரியவில்லை என்றேன்
உன்னைத் தெரியுமா என்றான்.
தெரியவில்லை என்றேன்
வேறு என்ன தெரியும் என்றான்
உன்னையும் என்னையும் தவிர
எல்லாம் தெரியும் என்றேன்.
தமிழருவி மணியனின் பேச்சு, கேட்டவர்களைக் கட்டிப்போட்டது உண்மை. அவரது கருத்துக்களுக்கு நிறைய கைத்தட்டல்கள். இலக்கிய சிந்தனை விழாவில் பல பரிச்சயமான இலக்கிய முகங்கள். திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் ஜெயபாஸ்கரன், புதிய தலைமுறை அருண்மொழி, பாரவி, தேவக்கோட்டை வா. மூர்த்தி, தீபம் திருமலை, இலக்கிய வீதி இனியவன், கவிஞர் மலர்மகன், பரிசல் செந்தில்நாதன். திலீப்குமார்.. மாதக்கூட்டங்களுக்கு நான்கைந்து பேர் வந்தால் அதிகம்.
#
- முள்வெளி- அத்தியாயம் -4
- நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்
- அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு
- சுனாமி யில் – கடைசி காட்சி.
- இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
- ஆணுக்கும் அடி சறுக்கும்…!
- தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)
- கருணாகரன் கவிதைகள்
- சம்பத் நந்தியின் “ ரகளை “
- குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு
- பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு
- ஈக்கள் மொய்க்கும்
- தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்
- வரங்கள்
- சட்டென தாழும் வலி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8
- ‘பிரளயகாலம்’
- நூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000
- பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்
- காலப் பயணம்
- மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19
- பின்னூட்டம் – ஒரு பார்வை
- நீர் சொட்டும் கவிதை
- கவிதை!
- இறந்தும் கற்பித்தாள்
- பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )
- பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘
- நானும் ஷோபா சக்தியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்
- தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்
- “ பி சி று…”
- தீபாவளியும் கந்தசாமியும்
- புதுமனை
- அன்பெனும் தோணி
- என் சுற்றுப்பயணங்கள்
- சருகாய் இரு
- கவிதை
- வந்தவர்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10
- இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56