காத்திருப்பு

This entry is part 6 of 28 in the series 3 ஜூன் 2012

முத்துராமன்.

வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது.

சுகுணாவை அழைத்து வரவேண்டும். அவளாகவே வந்தாலும் வந்து விடுவாள். பஸ்ஸை எதிர்பார்த்து, காத்திருந்து காத்திருந்து, பொறுமை இழந்து நடந்தே வந்தாலும் வந்து விடுவாள். வீட்டுக்கு வந்து சேர முக்கால் மணி நேரம் ஆகும். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் படுத்துக் கொள்வாள்.  கம்பெனியில் தையல் பவர் மிஷினை அழுத்தி அழுத்திச் சோர்ந்து போன கால் களுடன் முக்கால் மணி நேர நடை வேறு. வெளியே எட்டிப் பார்த்தான். மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது.

நல்ல வேளையாக குழந்தைக்கு ஸ்கூல் இல்லாதது ஒரு வகையில் வசதியாகப் போயிற்று. ஸ்கூல் இருந்தால் மழை பற்றிய கவலையெல்லாம் இல்லாமல் குழந்தை மழையில் நனைந்து கொண்டே வந்து விடுவாள். வழியில் எங்காவது ஒதுங்கி நின்று விட்டு மழை விட்டதும் வரலாம். ஆனால், மழையில் நனைவது ஒரு வகையில் சந்தோஷம்.

மழையில்  நனைந்து கொண்டே மெதுவாக ரசித்து விளையாடியபடி வருவதைப் பார்க்கலாம். அதுவும் நன்றாகத்தான் இருக்கும். காலையிலிருந்து முன் வீட்டில் அவள் வயது பிள்ளையோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கென்று ஏதேதோ விளையாட்டு. அந்த வீட்டுப் பிள்ளையின் மூன்று சக்கர சைக்கிளை எடுத்து ஓட்டிக் கொண்டிருப்பாள். அல்லது இவள் டீச்சராக நின்று கொண்டு கையில் ஒரு குச்சியை வைத்துக் மிரட்டிக் கொண்டிருப்பாள். சுகுணாவைக் கூட்டிக் கொண்டு வரும்போது அந்த வீட்டில்தான் குழந்தையை விட்டு விட்டுப் போகவேண்டும்.

0

தூறல் லேசாக இருந்து கொண்டே இருந்தது. குடையை எடுத்து வாசற்கதவு பக்கமாக வைத்துக் கொண்டான். போகும்போது ஞாபகமாக எடுத்துக் கொண்டு போகவேண்டும். சுகுணா

ஒரு குடை எடுத்துக் கொண்டு போயிருப்பாள். ஆனால் வீட்டுக்குக் கிளம்பும் வேகத்தில் அவளுக்குக் குடையெல்லாம் நினைவுக்கு வராது. கம்பெனியை விட்டு கீழே வந்து விட்டால் மீண்டும் மேலே போக முடியாது. கீழே வந்தபிறகுதான் மழை பெய்து கொண்டிருப்பது தெரியும்.

கம்பெனிக்குள் மழை, வெயில், பகல், இரவு எதுவுமே தெரியாது. காலையில் இருந்து மழை தூறிக்கொண்டுதான் இருக்கிறது. ராத்திரியெல்லாம் மழை இல்லை.  விடியற்காலையில்தான் மழை ஆரம்பித்தது.

இந்த மழைக்கே வீட்டுக்குள் குளிர் அதிகமாகி இருந்தது. விடியற்காலை வீட்டுக்குள் நுழைந்து விளக்கைப் போட்டபோது சின்னக் குட்டி ஓர் ஓரமாக சுருண்டு கிடந்தாள். போர்வை ஒருபக்கம்; தலையணை ஒரு பக்கம். சுகுணா வேலை பார்த்துவிட்டு வந்த களைப்பில் வாய் பிளந்து ஒரு பக்கம் தூங்கிக் கொண்டிருந்தாள். ராத்திரி அவள் படுக்க பதினொரு மணி ஆகியிருக்கும். அவனே குழந்தையை எடுத்து விரிப்பில் படுக்க வைத்து போர்வை போர்த்திவிட்டுப் படுத்தாள்.

சுகுணா குரல் கேட்டுதான் காலையில் விழித்தான். ஏழு மணி இருக்கும். “என்னங்க, என்னங்க! எவ்வளவு நேரமா எழுப்பறேன். குழந்தை பாருங்க ஈரத்துலயே கிடக்குறா, அவளை கொஞ்சம் தூக்கிட்டு போய் துடைச்சு விடுங்க “

வேகமாக எழுந்து சின்னக்குட்டியைத் தூக்கிக் கொண்டு போனான். “மிஸ் என்னோட பென்சில் மிஸ். நான் அவன் பென்சிலை உடைக்கலை மிஸ். இனிமே அப்படி செய்ய மாட்டேன் மிஸ். இனிமே செய்யா மாட்டேன் மிஸ். “ என்று சின்னக்குட்டி தூக்கத்திலேயே உளற ஆரம்பித்துவிட்டாள்.

“ என்ன ஆச்சு குட்டிப்பொண்ணுக்கு? என்ன செய்ய மாட்டீங்க மிஸ் “ என்று அவன் கேட்கும்போதே விழித்து விட்டாள். என் பென்சிலு. என் பென்சிலு அந்தப் பையன் உடைச்சுட்டான். எனக்கு கலர் பென்சிலு வேணும். அந்த ராஜு எடுத்துக்கிட்டான்பா. எனக்கு கலரு பென்சிலு வேணும். நாளைக்கு டிராயிங் பீரியட் இருக்குப்பா “ என்று அழ ஆரம்பித்து விட்டாள்.

காலையில் அவளை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. பின்னர் ஆறு குடங்களை எடுத்து சைக்கிளில் தொங்க விட்டான். குடங்களை கட்டியிருந்த நைலான் கயிறுகள் நசுங்கிப் போயிருந்தன. புதிதாக ஐந்து மீட்டர் நைலான் கயிறு வாங்கவேண்டும். சைக்கிளை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடித்து வருவதற்காகக் கிளம்பினான். இந்த நேரத்தில் கூட்டம் அவ்வளவாக இருக்காது. சீக்கிரம் வந்து விடலாம்.

தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும்போது சுகுணா சமையலை முடித்துக் கொண்டு வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் வேலைக்கு கிளம்பும்வரை செய்ய முடிந்ததுதான் அன்றைய

சமையல். “ கீரை கூட்டு செய்யணும். பருப்பு வேக வச்சிருக்கேன். முடிஞ்சா கூட்டு மட்டும்

செஞ்சிடுங்க. இல்லேன்னா அப்பளம் பொரிச்சுக்குங்க. சாயங்காலம் நானே வந்து செய்யறேன் “ என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள். அப்போதுதான் சின்னக்குட்டி பல் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

“ அம்மா நானும் வருவேன் இன்னைக்கு கம்பெனிக்கு “ என்று வாயில் பிரஷ்ஷோடு அவள் பின்னால் ஓடினாள்.

“ சுகுணா நீ பத்து நிமிஷம் இரு. நானே உன்னைக் கொண்டு போய் கம்பெனில விட்டுடுறேன் “

“ நீங்க வேணாம். மழை வேற வருது “

“ இருடி, நான் வரேன்னு சொல்றேன்ல; நானும் என் பொண்ணும் உன்னைக் கம்பெனில விட்டுட்டு இந்த மழைல ஒரு ரவுண்டு போயிட்டு வரப் போறோம் “

“ எங்க வெளில சுத்தப் போறீங்க, உங்க மகளோட .. அதுவும் இந்த மழையில “

“மழைதான் நின்னு போச்சேம்மா “என்றாள் சின்னக்குட்டி.

சுகுணா அதற்குள் நடக்க ஆரம்பித்தாள்.

பல் தேய்த்து முடித்து வெறுமனே பாடி பாவாடையோடு ஓடி வந்த மகளுக்கு மேல் சட்டையைப் போட்டு சைக்கிளில் முன்னால் உட்கார வைத்துக் கொண்டு மிதிக்க ஆரம்பித்தான். தெருமுனையில் சைக்கிளை நிறுத்தி மனைவியை பின்னால் ஏற்றிக் கொண்டான். ஐ சி எ·ப் தாண்டும்போது சைக்கிளின் வேகம் குறைந்தது. நியூஸ் பேப்பர் கடையில் தொங்கும் போஸ்டர்களில் தலைப்புச் செய்திகளைப் படித்த பின் சைக்கிளை மீண்டும் வேகமாக்கினான். கம்பெனி ஸ்டிரைக் பற்றி எதுவும் போடவில்லை.

0

ஸ்டிரைக் ஆரம்பித்து ஒரு வாரம் வரை வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு சிவராமனுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தது. அதுவே இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது. விடியற்காலையில் மழை தூறல் போட ஆரம்பித்ததும் ஆட்டோவைக் கொண்டு போய் சிவராமன் வீட்டில் விடும்போது அவன் எப்போதும் போலத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனிடம் ஸ்டிரைக் பற்றி எதுவும் பேச முடியாது. யூனியன் ஆபீசுக்குப் போனால் விஷயம் தெரியும்.

தூறல் இப்போது அதிகமாகியிருந்தது. சுகுணா குடையை விரித்திருந்தாள். குடை காற்றுக்குத் தகுந்த மாதிரி உருமாறி – மழை நீர் சேமிப்பது போல; ஒரு பெரிய புனல் போல; ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் குடிநீர் நிரப்பும் தொட்டியைப் போல – அவளை அலைக்கழித்தது. சுகுணா குடையை மடக்கிக் கையில் வைத்துக் கொண்டாள்.

“ அப்படியென்ன மழை கொட்டுது. குடை பிடிக்கிற இப்ப? “

“ ஆமா லேசா நனைஞ்சாலும் அன்னைக்கு பூரா ஈராமாத்தான் இருக்கணும். அப்படியே மெஷின்ல உக்கார்ந்தா எப்படி இருக்கும்? வேலை செய்யவே தோணாது “

அவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

0

முன்னால் உட்கார்ந்திருந்த குட்டிப்பெண் மெல்லிய குரலில் பாட்டு பாடிக் கொண்டே வந்தாள். தலை மட்டும் பாட்டுக்குத் தகுந்த மாதிரி அசைந்து கொண்டிருந்தது. தலையில் சின்ன சின்னதாகப் போட்டிருந்த இரண்டு குடுமிகளும் அசைவது கார்ட்டூன் பொம்மையை நினைவூட்டின.

சுகுணாவை கம்பெனி வாசலில் இறக்கி விடும்போதே முதல் மணி அடித்து விட்டார்கள். இறங்கிய வேகத்திலேயே ஓடிப்போய் கம்பெனி படியேறினாள்.

சின்னக்குட்டி அதற்குள் “ அம்மா டாட்டா, அம்மா டாட்டாம்மா, ஏன்ப்பா அம்மா டாட்டா சொல்லாமலே போயிடுச்சு “ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டாள். “ இரும்மா வருவாங்க பார், அங்க மாடியேறும்போது சொல்லுவாங்க இரு “ என்று சமாதானப்படுத்தினான்.

ஒரு நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு, “ சரி, நாம போகலாம்ப்பா “ என்று உத்தரவு வந்ததும் சைக்கிளை மிதித்துக் கொண்டு அண்ணா நகர் டவருக்குச் சென்றார்கள். சுகுணா வேலை பார்க்கும் கம்பெனிக்குப் பின்னால் அமைந்திருந்தது டவர். அந்த நேரத்தில் வாட்ச்மேனைத் தவிர வேறு ஒருவரையும் அங்கு பார்க்க முடியவில்லை. செடிகளும் மரங்களும் ஈரமாக இருந்தன.

விளையாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த கிளிக்கூண்டு ஈரமாக இருந்ததால் வாட்ச்மேன் அமர்ந்த இடத்திலிருந்தே குரல் கொடுத்தான். சின்னக்குட்டி அந்த வாட்ச்மேனை திரும்பி ஒரு பார்வை பார்த்துச் சிரித்தாள். சற்று வேகமாக ஓடிப்போய் அங்கிருந்த சின்ன ஓடையின் அருகில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டாள்.

வாட்ச்மேன் மீண்டும் குரல் கொடுத்தான். “ யாருப்பா அது. குழந்தையை கையில பிடிப்பா, இந்த மழைல கூட்டியாந்துட்டு என்ன விளையாட்டு வேண்டியிருக்கு “

மழை நேரத்தில்தான் இந்த மரங்களையும் செடிகளையும் பார்க்க முடியும் என்று தோன்றியது. வெறும் பார்வையிடல் இல்லை. ரசித்து உட்கார்ந்து கொள்ளும் அந்தச் சின்னக்குட்டியை வேறு எப்போதும் அழைத்து வந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் இருக்காது. இப்போது தூறல் கூட இல்லை.

சின்னக்குட்டி கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சுற்றிக் கொண்டே வந்தாள். குச்சியைச் சுற்றில் கொண்டு வரும்போதும் பாட்டு. எந்த விஷயமானாலும் பாட்டு மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் “ மீன் பிடிக்கலாமா ? “ என்று கேட்டாள். ஊஞ்சல் ஆடினாள். மறுபடியும் வாட்ச்மேனின் குரல் கேட்டது. முகம் சுளித்து சிணுங்கிக் கொண்டே “ வாங்கப்பா போகலாம் “ என்றாள்.

0

“ அப்பா, அம்மா இன்னும் வரலையா? “

“ ம், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திருவாங்க “

“ காலைல போய் அம்மாவை விட்டுட்டு வந்த மாதிரி இப்பவும் நாமளே போய் கூட்டிகிட்டு வந்திரலாமா ? “ என்றாள்.

“ மழையாயிருக்கே குட்டி, நான் மட்டும் போய் அம்மாவைக் கூட்டிகிட்டு வந்திருவேன். நீ முன் வீட்டு ரம்யாவோட விளையாடிகிட்டிருக்கணும். சரியா ? “

“ அப்பா, ப்ளீஸ்பா, நானும் வரேன்பா “

அந்தக் குட்டி “ ப்ளீஸ்பா “ என்று கேட்டுக் கொண்டு நின்ற விதம் மீண்டும் ஒரு சைக்கிள் சவாரி கிடைத்தது அந்தக் குட்டிக்கு. போகும் வழியெல்லாம் சுகுணா எதிரில் தென்படுகிறாளா என்று பார்த்துக் கொண்டே போனான். எப்போதும் ஒரே வழியில் வருவதுதான் வழக்கம். பஸ் ஸ்டாப்பில் நிற்கிறாளா என்று பார்ப்பது வழக்கம். அங்கும் இல்லையென்றால் நேராக கம்பெனி வாசல்.

இந்த இரண்டு மாதத்தில் கம்பெனி செக்யூரிட்டிக்கு என்னுடைய முகம் பழகிப் போயிருக்க வேண்டும். கம்பெனி வாசலில் வந்து நின்ர இரண்டாவது நிமிடம் அந்த நேபாளி ஓவர்டைம் இருப்பதாகச் சொன்னான்.

காத்திருப்பது பழகிப் போய்விட்டது.

Series Navigationநாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..சந்தோஷ்சிவனின் “ உருமி “
author

முத்துராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *