தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

சந்தோஷ்சிவனின் “ உருமி “

சிறகு இரவிச்சந்திரன்

Spread the love

சிறகு இரவிச்சந்திரன்.

பசியோடு, மலையாளக்கரையோரம் ஒதுங்கும், தமிழ் பாடும் குருவிக்கு, புட்டும் கடலைக் கறியும் வைத்தால் எப்படியிருக்கும்? பசிக்கு கொஞ்சம் உள்ளே போகும். அடங்கியவுடன் புறந்தள்ளும். இட்லி வடை கிடைக்காதா என்று ஏங்கும். அப்படி இருக்கிறது படம்.

சந்தோஷ் சிவன், பிரபு தேவா, ப்ருத்விராஜ், ஜெனலியா, வித்யா பாலன். பெத்த பெயர்கள். சிறந்த ஒளிப்பதிவு, சோடை போகாத நடிப்பு. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் தமிழ் மணம்.

கேரளக் கரை. பதினைந்தாம் நூற்றாண்டுக் கதை. ஆனாலும் கர்ணனையும் கட்ட பொம்மனையும் ரசித்த அளவிற்கு ரசிக்க முடியவில்லை. படத்தோடு ஒன்ற முடியவில்லை என்பது கசப்பான நிஜம்.

நிகழ்காலத்தில் ஆரம்பித்து, பின் நோக்குக் காட்சிகளாகப் பயணிக்கிறது படம். அதே கதாபாத்திரங்கள், கால மாற்றத்தால் எப்படி மாறி விடுகிறார்கள் என்பது ஒரு சுவையான கற்பனை. மண்ணுக்காக போராடிய கேலு ராயனார் ( ப்ருத்விராஜ்) நிகழ் காலத்தில் ஒரு எதிர்காலம் பற்றிக் கவலையில்லாத நவீன இளைஞன். அவனோடு தோள் கொடுக்கும் வவ்வாலி ( பிரபுதேவா) கிடைத்ததைத் தேட்டை போடும் சந்தர்ப்ப வாதி, ஆணுக்கு இணையாக போர் புரிய வல்ல அரக்கல் ஆயிஷா ( ஜெனிலியா) அறிவு பிறழ்ந்த பெண், சூழ்ச்சி மந்திரி தற்கால அரசியல்வாதி. மோகினி ( வித்யா பாலன் ) என்.ஜி.ஓ. காலமாற்றம் புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. எல்லோரும் சுத்தமான தமிழில் தெளிவாகப் பேசுகிறார்கள். ஆனாலும் மனம் இது தமிழில்லை மலையாளம் என்று ஓரத்தில் குறளி போல் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

வாஸ்கோடகாமாவின் கப்பலும், அதில் பயணிக்கும் டச் ஆட்களும் சரியான தேர்வு. கடலில் கப்பல் மிதக்கும் காட்சிகள், கண்களை விட்டு அகலா போஸ்ட்கார்ட் படங்கள். பிரபுதேவா சண்டைக் காட்சிகளில்கூட நடன அசைவுகள். ( ‘சண்டை போட்டாய் சரி! அதற்கு ஏன் நாட்டியம் ஆடுகிறாய்?’) ப்ருத்விராஜுக்கு ராவணனிற்குப் பிறகு ஒரு நல்ல படம். முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜெனிலியா வில்லாக வளைந்து, கண்களால் பேசி மயக்குகிறார். வித்யாபாலன் கௌரவத்தோற்றத்திற்கு கவுரவம் சேர்க்கிறார்.

நமக்குத் தெரிந்த உருமி, மேளம். இசைக்கருவி. அங்கே அது சுருள்கத்தி. சுருண்டதைச் சுழற்றினால், இரண்டு ஆள் நீளத்திற்கு பாய்கிறது. மனம் பிறழ்ந்த ஜெனிலியா உருமியைத் தொட்டவுடனேயே தெளிவது சினிமா லாஜிக். உருமி வரும் காட்சிகள் எல்லாம் சூப்பர். சரித்திரம் காமாவைத்தான் நினைவில் வைத்திருக்கிறது, கேலு ராயனாரை அல்ல என முடிகிறது படம்.

அவ்விட தேசத்துச் சரித்திரத்தை உலக மக்களுக்குக் கொண்டு செல்லும் நாட்டுப்பாசம் படம் முழுக்க துல்லியமாகத் தெரிகிறது. ஆனாலும் கயத்தாறு கட்டபொம்மனை, கண் முன்னே கொண்டு நிறுத்திய, சிவாஜி என்கிற நடிப்பு மேதை போல், இப்போது யாரும் இல்லை என்பதால், படம் மனதில் பதிய மறுக்கிறது.

படத்தை யாரும் பொறுமையாக பார்க்க முடியவில்லை. இடைவேளையில் பாதி கூட்டம் தப்பித்தது. மீதி கூட்டம் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தது. ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் காட்சிகளில் மட்டும் நிமிர்ந்து உட்கார்ந்தது.

கலைப்புலி தாணு, சல்லிசாக வாங்கி, காசு பார்க்க எண்ணியிருப்பார் என்பது உறுதி ஆகிறது. ஆனாலும் காசு தேறுமா என்பது சந்தேகமே. என்னதான் வைரமுத்து வரிகள் என்றாலும் தீபக் தேவின் மெட்டுகளில் அநியாயத்துக்கு மலையாள வாடை. ஆனாலும் பின்னணி இசையில் சரக்கு இருப்பதை உணர்த்துகிறார். பல குதிரைக் காட்சிகள். ஆனாலும் ஒரு குதிரை கூட கால் தடுக்கி கீழே விழவில்லை. வாழ்க.

இரண்டரை மணிநேரப் படம். அரை மணிநேரம் குறைத்து இருந்தால் சீக்கிரமாக வாவது வீட்டுக்குப் போயிருக்கலாம். இடைவேளையில் தப்பித்த பத்து இருபது பேர் அதிர்ஷ்டசாலிகள்!

#

கொசுறு

சாலிக்கிராமம் எஸ் எஸ் ஆர் பங்கஜத்தில் ஏசி ஓடவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்விசிறிகள் மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தன. நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்ததில் பாதி நேரம் படம் தொடர்பற்றுப் போனது.

வடபழனி அருணாச்சலம் சாலையில் புதிதாக திறந்திருக்கும் கடை “ கருணாஸ் இட்லிக்கடை “ பெரிய சைஸ் இட்லிகளை வாழையிலையில் பறிமாறுகிறார்கள். இரண்டு வகைச் சட்னி, மிளாகாய்ப்பொடி எண்ணை, சின்ன வெங்காயம் சாம்பார் என்று அசத்துகிறார்கள். விலையும் சல்லிசுதான். ஒரு இட்லி 7 ரூபாய். விலைப்பட்டியலில் பார்த்தேன், புதினா தோசையும் உண்டாம்!

#

Series Navigationகாத்திருப்புவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15

3 Comments for “சந்தோஷ்சிவனின் “ உருமி “”

 • Madhiyalagan Subbiah says:

  இனியத் தோழருக்கு,

  ஒரு மலையாளப் படத்தில் மலையாள வாசனையைத்தான் உணர முடியும். அதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு திரையறங்குக்கு போய் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. எதாவதொரு பத்திரிக்கையில் வாரம் இருமுறை வரும் சினிமாச் செய்திகளை வாசித்திருந்தாலே போதும்.
  இந்தப் படம் ஒரு மலையாளப் படம். இதனை தமிழில் டப் செய்து ( மொழிமாற்றம் செய்து) வெளியிட்டிருக்கிறார்கள். அதனால் இந்தப் படம் கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்க வாய்ப்பே இல்லை.

  உங்களுடைய திரைப்பட விமர்சனங்களை/ மதிப்புரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். நீங்கள் திரைப்படங்கள் குறித்து இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

  ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அரங்கை விட்டு வெளியேறும் ஒரு சாதாரண மனிதன் அப்படம் குறித்து சொல்லும் மிகச் சாதாரண முறையிலான கருத்தாகவே உங்கள் மதிப்பீடுகள் இருக்கின்றன.

  தொடர்ந்து எழுதுங்கள்….

  வாழ்த்துகள்.

  அன்புடன்,

  மதியழகன் சுப்பயா,
  மும்பை

 • punai peyaril says:

  மதியழகன், இதில் வேதனை என்னவென்றால் இவர் மாதிரி இதுவரை திண்ணையில் எந்தவொரு எழுத்தாளரும் பின்னூட்டங்களில் இவரின் தவறுகளும், மிக மிகச் சாதாரண கோணத்திலான விமர்சனங்களும் சுட்டிக்காட்டப்படும் போது இவர் அது பற்றி கவலையேபடாமல் மிகமிகச் சாதாரண விமர்சன முறையில் தவறுகளுடன் தொடர்ந்து விமர்சனம் எழுதுகிறார். இதில் வேறு காமெடி என்ற பெயரில் இதில் கூட நோ பீஸ் ஆப் தமிழ்மணமாம்… இவருக்கு வெண்பா பாட வேண்டியது தான். சந்தோஷ் சிவனின் அரிதான முயற்சி இது. இதிலான குறைகள் , கோணங்கள் அறிவு பூர்வ தளத்தில் அலசப்பட வேண்டியது தவறில்லை.. அது விடுத்து இந்த மாதிரி… என்பது வருந்தத்தக்கது. சந்தோஷ்சிவனுக்கு கலாட்டா மசாலா என இந்த மாதிரி பெரிய ஸ்டார்களை வைத்து எடுக்கத்தோணாமல் முயற்சித்ததற்கே சபாஷ் போடலாம் – அவரின் இயக்கத்தில் எனக்கு சிந்தனை உடன்பாடு கிடையாது.. ஆனாலும் அவரின் தளராத முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியதே…

 • paandiyan says:

  இந்த படத்தை தான் தயாரித்தது உத்பட பல விசயங்களை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ப்ருத்விராஜ் சொன்னதை குறைந்தபட்சம் பார்திருக்கலம். வாஸ்கோடகாமாவின் கப்பலும், அதில் பயணிக்கும் டச் ஆட்களும் எப்படி சுத்த தமிழ் வருவார்கள் . கோவா அல்லது கேரளாவில்தான் வருவார்கள். யாரு தமிழ் என்று ஒரு செர்டிபிகடேயை கழகம் வைத்து உள்ளது போல , யாரு மதசார்பின்மை என்று கம்யூனிஸ்ட் ஒரு செர்டிபிகடேயை வைத்து உள்ளது போல இந்த விமர்சனம் பண்ணுபவர்கள் எது தமிழ்படம் என்று ஒரு செர்டிபிகடேயை வைத்து உள்ளார்கள் போல. நல்லவேளை கே டிவி இல வரும் ஒரு ஆங்கில மொழிமாற்று படத்திற்கு இப்படி ஒரு விமர்சனம் வராமல் இருந்த்த ….


Leave a Comment

Archives