தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

காத்திருப்பு

சபீர்

Spread the love

குறிக்கப்பட்ட
ஒரு நாளை நோக்கிய பயணத்தில்
காலத்தின் சுமையில்
கனம் கூடிப் போவதும்

இருப்பது போலவும்
கிடைக்காமல் போகாதெனவும்
இல்லாமல் இருக்காதெனவும்
கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில்
காலத்தின் இருப்பில்
கவனம் கூடிப் போவதுவும்

இதுவும்
கடந்து போகுமென
இதயம்
கிடந்து துடித்தாலும்
காலத்தின் கடப்பில்
பிடி நழுவிப் போவதுவும்

இதோ
இந்த நொடியில்
தீர்ந்துவிடப் போகிறது
அடுத்தது நாம்தான்
என்கிற
அனுமானங்கள்
அடுத்தடுத்த நிமிடங்களில்
சுமையேற்றி வதைப்பதுவும்

என
நிகழ்காலம்
நிழல்போலத் தெளிவின்றிப் போனதால்
சுவாசிக்கக்கூட
பிரயாசைப் பட வேண்டியிருக்கும்

எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட வியலாதது
காத்திருப்பும் கணங்களும்!
-சபீர் அபுஷாருக்

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 46இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை

One Comment for “காத்திருப்பு”

 • ஒ.நூருல் அமீன் says:

  உன் கவிதையில் கனம் கூடி வருகிறது. அழகான கவிதை.
  /எந்த
  உபகரணம் கொண்டும்
  இயல்பு
  மாற்றிவிட வியலாதது
  காத்திருப்பும் கணங்களும்!/
  என்னால் முழுமையாக உடன் பட முடியா விட்டாலும் சிந்தனையை தூண்டும் வரிகள்.


Leave a Comment

Archives