விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு

This entry is part 22 of 28 in the series 3 ஜூன் 2012


 

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை

 

என்ன அய்யரே உக்காந்திட்டு இருக்கும்போதே கண்ணு அசந்திட்டியா? நம்ம கேசு தான் போல இருக்கு அங்கேயும்.

 

எதிர்பாராத சந்தோஷம் கிடைத்த திருப்தியோடு சிரித்தபடி நாயுடு கயிற்றுக் கட்டிலில் உட்காந்தான். இவன் கிட்டே எப்படிச் சொல்ல?

 

பக்கத்திலே யாரும் இருக்காளாடா? பேசின மாதிரி இருந்தது.

 

அவன் எங்கே என்று இலக்கு இல்லாமல் கை காட்டிக் கேட்டான்.

 

குரல் கேட்குதா? கேக்கும் கேக்கும். மாட்டுத் தொழுத்திலே இருந்து கேட்டா ஏசுநாதர் அழைக்கிறார். உள் கட்டுலே இருந்து கேட்டா அன்னலட்சுமி. காம்பவுண்டுக்கு வெளியே கேட்டா பள்ளிவாசல்லே பாங்கு வைக்கறது. கயத்துக் கட்டில்லே இருந்து கேட்டா இந்த ராமானுஜலு நாயுடு. என்ன மாதிரி இருந்துச்சு?

 

பரம திருப்தியாக இருந்தது போல நாயுடுவுக்கு. வழக்கமான மூட்டு வலி, கண் பார்வை குறைச்சல், தலை சுற்றுதல் போன்ற வயோதிகம் எட்டிப் பார்க்கும்போது ஏற்படும் பிரச்சனைகளோடு நீலகண்டனுக்கும் இதெல்லாம் உண்டென்பது தெரிந்த திருப்தி அது.

 

உனக்கு வேடிக்கையா இருக்கும்டா நாயுடு. என்னமோ சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன். அது கிடக்கு. ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் உம் பெயரை நீ முழுசாச் சொல்லிக் கேட்கறேன். மெட்ரிக் எழுதறபோது ராமானுஜடு நாய்லுன்னு ஸ்கூல் அட்டெண்டண்ஸ்லே தப்பா எழுதினாளே ஸ்கூல் கிளார்க் மிஸ்ஸியம்மா,  நினைவு இருக்கா?

 

நீலகண்டன் ஐம்பது வருஷப் பழைய சம்பவத்தைச் சொல்லிச் சிரித்தான்,

 

சட்டென்று நீள ப்ராக் அணிந்து சோனியான மார்புகளோடு சைக்கிளில் வரும் மிஸ்ஸியம்மாவும் அவள் பாவாடையில் சிவப்பும் கருப்புமாக பெரிய கட்டங்களும் நீலகண்டனுக்கு கூடவே நினைவு வந்தது.

 

ஆமா ஆமா, நல்லாத்தான் ஞாபகம் வச்சிருக்கே போ. மாத்தி எழுதி ரகளை பண்ணிட்டா ஆப்பக்காரி. ஏன் கேக்கறே. அந்த மிஸ்ஸியம்மா பாவாடையை உடுத்துக்கிட்டு ஸ்கூல் மாடிப்படி ஏறும்போது கீழ்ப்படியிலே நின்னு ஏதாச்சும் உள்ளாற தெரியுமான்னு உத்து உத்துப் பாப்போமே அதுக்கு தண்டனை போல.

 

அட ராமா, நான் என்னிக்கு தரிசனத்துக்கு நின்னிருக்கேன். நீயும் கண்ணாயிரம் முதலியும், வடகலை அய்யங்கான் ஒருத்தன் இருந்தானே, என்ன பேரு?  வடமலையன் தானே. நீ கூட பெயரை மாத்திக் கூப்பிடுவே.

 

ஆமாமா வடைமுலையன்.

 

உன் நாக்குலே தர்ப்பையை போட்டு பொசுக்க.

 

இடுப்பிலிருந்து நழுவும் வேட்டியை திரும்பக் கட்ட எழுந்து நின்றபடி வெடிச் சிரிப்பு சிரித்தான் நீலகண்டன்.

 

இறுக்கம் தளர்ந்து பழையபடி ஆகியிருந்தது. அவன் எந்தக் குரலையும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் தான் என்ன போச்சு?

 

சரி அய்யரே, ஆயுசு முழுக்க உத்தமமான மனுஷனா இருந்து நீ கைலாசம் போ. நான் கசத்தையும் கண்றாவியையும் கட்டி அழுதுட்டு வைகுண்டம் போறேன். பகவானுக்கு நாத்தம் தான் பிடிக்கும் தெரியுமா? நாற்றத் துழாய்முடி நாராயணன்னு ஆண்டாளம்மா கூடச் சொல்லிட்டுப் போயிருக்கு. தில்லக்கேணி பெருமாள் ஆனைக்கவுனிக்கு வந்து கொழாயிலே குளிச்சா அவருக்கும் கப்பு அடிக்கற மயிர் தான் வாய்க்கும், சொல்லிட்டேன்.

 

நீ திருந்தவே மாட்டேடா. அது வாசனையான நாற்றம்னு தமிழ் வாத்தியார் செங்கல்வராய முதலியார் படிச்சுப் படிச்சுச் சொன்னாரேடா. நீ மிஸ்ஸியம்மா கவட்டய நினச்சுக்கிட்டு கோட்டை விட்டுட்டியா?

 

மனசுக்குப் பிரியமான பால்ய காலத் தோழனோடு கொக்கோக ரசம் தெளிக்கப் பேசும்போது வயசே குறைந்து போய், துக்கமும் கஷ்டமும் நோயும் வாதனையும் எல்லாம் ஓடியே போய் கரைந்து விடும். நீலகண்டனுக்கு அது வேணும்.

 

செங்கல்வராய முதலியாரை பாடையிலே வைக்க. வைக்க என்ன, வச்சாச்சு மூணு வருஷம் முந்தி. மேனகா ரிலீஸ் பண்ணச் சொல்ல. ஞாபகம் இருக்கா?

 

மேனகாவை எப்படி மறக்க முடியும்? உருண்டு திரண்ட தோளோடு அதே ராஜலட்சுமி. கூடவே ஒரு புதுப்பையன்.

 

உடம்பு முழுக்க முத்தம் கொடுத்துட்டே மூஞ்சிக்கு வருவானேப்பா அந்த நாகர்கோவில் பையன். ஷண்முகமோ ஆறுமுகமோ பேர்.

 

நாயுடுவும் அந்த அதியற்புதக் காட்சியில் தான் லயித்திருக்கிறான்.

 

ஏன் கேக்கறே போ. வீட்டுக்காரிக்கு பயாஸ்கோப்பு பாக்கணும்னு ரொம்ப ஆசை. வா, இது ஏதோ புதுப் படமா ஆடுது. பாக்கலாம்னு இட்டுப் போனேன். நேர்லே முத்தம் கொடுத்தாலே சங்கடப்படறவ.

 

அதெல்லாம் வேறே பொண்டாட்டிக்கு இன்னும் சேவை சாதிக்கறியாடா?

 

நீலகண்டன் கேட்டபோது கற்பகத்தை இன்னும் போகத்துக்கு விடாப்பிடியாக எழுப்பி, உடனே உறங்கப் போகச் சொல்வது நினைவில் வந்து போனது. சும்மா என்னத்துக்கு எழுப்பி என் தூக்கத்தையும் கெடுக்கறேள்? அலம்பிண்டு அக்கடான்னு படுங்கோ. தூரம் போனதுக்கு அப்புறம் ராமா கிருஷ்ணான்னு இருக்கறதுதான் எனக்கு அழகு உங்களுக்கும் பதவிசு.

 

திரும்பிப் படுக்கும் முன், அவனுக்கு உதட்டில் ஒரு முத்தம் அழுத்தமாகத் தந்துவிட்டுத் தான் கற்பகம் சொல்வாள்.

 

இதுவும் சேவை சாதிக்கறதா? உன் நாக்குலே தான் அந்த குருக்கள் ஐயர் கைப் புல்லை போட்டு தீ வைக்கணும் அய்யரே. சம்சாரத்துக்கு சாதிச்சா சேவை. எருமைமாடு கறக்க வர்றவளுக்கு சாதிச்சா ஏவையா?

 

நாயுடு விசிறிக்கட்டையால் முதுகு சொறிந்து விட்டு பக்கத்தில் இருந்த ஏதோ பத்திரிகையைப் பிரித்து விசிறிக் கொண்டான். இவ்வளவுக்கும் சமுத்திரக் காற்று சீராகத் தான் அந்தப் பிரதேசம் முழுக்க சுழன்று கொண்டிருந்தது.

 

ஆக, நாயுடு எருமை வளர்க்க பௌதிகமான காரணங்களும் இருக்கக்  கூடும். நினனக்கக் கொஞ்சம் குறுகுறுப்பாக இருந்தது நீலகண்டனுக்கு. இதுக்குக் காதும் மூக்கும் வைத்து இன்னும் கிளுகிளுப்பாக்கி ராத்திரி கற்பகத்திடம் சொல்ல வேண்டும். ரொம்ப நாழி பேசிக் கொண்டிருக்கணும். முன் போல.

 

டீ சொல்லட்டாடா? பக்கத்துலேயே நம்மாளு அதாவது எங்க ஆளு, சூளை நாயக்கரு ஒருத்தரு மிலிட்டரி ஓட்டல் ஆரம்பிச்சு சக்கைப் போடு போடறாரு. தேவாமிர்தம இருக்கும் டீயும் பொரையும். ராட்டு வறுவல் என்னமா இருக்கும்போ.

 

இத்தாலி தேசத்து பட்சணம் எதை எதையோ சொல்கிறான் நாயுடு. வீட்டில் அவன் பெண்டாட்டி பிள்ளைகள் இல்லையா இதையெல்லாம் உண்டாக்கித் தர?

 

செண்ட்ரல்லே நந்தனார் ஆடுதுன்னு ஊட்டுக்காரி போயிருக்கா. என்னத்தை நந்தனார்? சுந்தராம்பாளுக்கு வேட்டியை சுத்தி விட்டுட்டா நந்தனார் ஆயிடமுடியுமா? அதான் பத்திரிகைக்கார பார்ப்பான் எழுதிட்டான். இந்தப் படத்திலே விசிறிக்கட்டை, தென்னை மரம், எருமைக் கன்னுக்குட்டி இதெல்லாம் தான் நல்லா நடிச்சுருக்குன்னு.

 

நாயுடு இன்னொரு தடவை சிரித்தபோது நீலகண்டன் நினைவு படுத்தினான்.

 

வயசானவங்கறது சரியா இருக்குடா. செங்கல்வராய முதலியாரை அம்போன்னு விட்டே. ராஜலட்சுமிக்கு தேகம் முழுக்க சேவை செஞ்ச பையனையும் விட்டே. வேஷ்டி கட்டின சுந்தராம்பாளுக்கு வந்துட்டே பாரு.

 

அட, ஆமா, பேச்சு சுவாரசியம் தான். வேறே என்ன?

 

திரும்ப கொட்டில் எருமை வாடா நாயுடு என்று அதிகாரமாகக் கூப்பிட்டது. போன ஜன்மத்திலோ அல்லது இந்த ஜன்மத்தில் தானோ அது நாயுடுவுக்கு பெண் வழித் தொடர்பில் உறவாக இருக்க வேண்டும்.

 

தோ வந்துடறேண்டா. கழுநீர் எடுத்து வச்சுட்டா இதுங்க பாட்டுக்கு தூங்கப் போயிடும். வாயில்லா சீவனுங்க. பெருமாள் யாதவனா வந்து மேச்சதாச்சே.

 

சரிடா உளறாம போய்ட்டு வா.  பகவான் மேய்ச்சது பசு மாடு.

 

நாயுடு உள்ளே போகும்போது கட்டிலில் பரத்தியிருந்த பத்திரிகையை எடுத்துப் பிரித்துப் பார்த்தான் நீலகண்டன். கம்மவார் மித்ரன். சுதேசமித்திரன் தெரியும். இதென்ன? உள்ளே ஒரே நாயுடு மயமாக இருந்தது. காது குத்து, ருது சாந்தி, கல்யாணம் தொடங்கி கருமாதிவரை நாயுடுக்களும் நாயுடம்மா, நாயுடு கன்யகை, வரன்களும் தெலுங்குத் தமிழ் பேசுகிற பெருமையோடு போட்டோவில் சிரித்தார்கள். ‘ராமானுஜ வைபவம்’ என்று ராமானுஜலு நாயுடு எழுதிய ஒரு பக்க வியாசம் கூட இருந்தது. நாயுடு நாலு பழைய புத்தகத்தை அங்கே இங்கே பீராய்ந்து எழுதி இருக்க வாய்ப்பு உண்டு என்று நீலகண்டனுக்குப் பட்டது.

 

மேனகா பார்க்கப் போனோமா?

 

கேட்டபடி நாயுடு திரும்பவும் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து தெற்கே பார்த்து, பாவா பாவா என்று கூப்பிட்டான். கூப்பிடு தூர ஓட்டல் கடை வாசலில் தலைப்பாக் கட்டிய ஒரு மீசைக்காரக் கிழவர் வந்து இந்தத் திசையில் பார்த்தார்.

 

பாவா, சுக்கு தட்டிப் போட்டு ரெண்டு காப்பியும் முறுக்கும் பையனாண்டை கொடுத்து விடுங்க.

 

சரி மாப்ளே என்று சத்தமாகச் சொல்லியபடி உள்ளே போனார்.

 

கிளாஸில் சுடச்சுட வந்த பிரஷ்டமான சமாசாரம் அந்த டீ. கூடவே இந்துநேசன் பேப்பரில் மடித்து வந்தது ரெண்டு முள்ளுத் தேங்குழல். தேங்குழலை எடுக்கிற சாக்கில் இந்து நேசன் பத்திரிகைத் துண்டைப் படிக்க முயன்றான் நீலகண்டன்.

 

கங்கைகொண்டானின் அம்புலுவின் கொண்டாட்டம். தெரு லோல்படுகிறது.

 

அம்புலுவுக்கும் ராஜலட்சுமி போல் தோளெல்லாம் இருக்குமா?

 

டீ ஆறுது அய்யரே. வேணும்னா முழுப் பேப்பரே வாங்கித்தரேன் பாவா கிட்டே சொல்லி. வீட்டுக்கு எடுத்துப் போனா மாமி உன்னை கூழாக்கிட்டா நான் ஜவாப்தாரி இல்லேப்பா.

 

அட நாயுடு, விஷயத்துக்கே வர மாட்டியா?

 

அதைத்தான் சொல்ல வரேன். மேனகா பார்க்கப் போனோமா ஜதையா. ஜாடையா அங்கே இங்கே ரெண்டு வசனம், பிரேமை அது இதுன்னு பாட்டு எல்லாம் வந்தபோதே இவளுக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. ஏன் இந்தக் கருமாந்திரத்தை எல்லாம் படுதாக்குப் பின்னாடி வச்சுக்காமா முன்னாடியே காட்டியாகணும்னு கேட்டா. அடியே பின்னாடி ஒரு குசுவும் இல்லே, இது பயாஸ்கோப்பு படம், முன்னாலே மட்டும்தான் ஆடும். வாயை மூடிட்டு பாரு இன்னேன். பாத்துட்டே வந்தாளா? ராஜலட்சுமிக்கு முத்த அபிஷேகம் ஆரம்பமாச்சு இல்லே, விலுக்குனு எழுந்துக்கிட்டா’பா. நீங்களே இந்த எளவை முளுக்கப் பாத்துட்டு வந்து தொலையுங்க. நான் ஊட்டுக்குப் போறேன்னு கிளம்பிட்டாளே பாக்கணும்.

 

அப்புறம்?

 

நீலகண்டன் அக்கறையாகக் கேட்டான். டீ ருஜியாக இருந்தது. கற்பகத்துக்குச் சொல்லிக் கொடுத்துப் போட்டுத் தரச் சொன்னால் என்ன? உடம்பு பூரா முத்தம் கொடுத்தால் சரி என்பாளோ? நாலு பக்கமும் சதை போட்டு தூண் மாதிரி உருண்டு மூத்த மாமி களை முகத்தில் பூசிக் கிடந்தாலும், இதெல்லாம் வேணாம் என்றா சொல்லப் போறாள்?

 

அப்புறம் விழுப்புரம். மெயின் கேட்டைத் தொறக்க மாட்டேன். பாதி டாக்கி ஆடற போது ஆளுங்களை வெளியே அனுப்பற வழக்கமில்லேன்னான் தியேட்டர்காரன். ஏன்யா, டிக்கெட் எடுத்துட்டா உள்ளே வந்தவங்க எல்லாரும் செண்ட்ரல் ஜெயில்லே இருக்கற கைதி மாதிரியான்னேன். முறைச்சுக்கிட்டே பின் வாசலைத் தொறந்து துரத்தி விடாத குறையா வெளியே அனுப்பினான். அது ஒரு சின்னச் சந்துப்பா. கொட்டாய்க்குப் பின்னாடி இருந்தது. நேரே நடந்து வலது பக்கம் திரும்பினா ஆனக் கவுனியைப் பிடிக்கலாம். நடந்தா, நம்ம வாத்தியார் முதலியார்.

 

அவர் வீடு அங்கேயா இருக்கு?

 

வாசல்லே பூம் பூம்னு சங்கு வச்சு ஊதிட்டு நின்னாங்க. பாடை கட்டித் தயாரா இருந்துச்சு. ஈர வேட்டியைக் காயப் பிடிச்சுக்கிட்டு நாலைஞ்சு முதலியாருங்க. யாருங்க தவறிப்போனதுன்னு வீட்டு ஓரமா வெத்திலை போட்டுக்கிட்டு உக்காந்திருந்த பெரிசைக் கேட்டேன். அது சொல்லித்தான் தெரியும் வாத்தியார்னு. மனுஷன் தொண்ணூத்து நாலு வயசு கல்லுக் குண்டாட்டம் இருந்துட்டு இப்ப சொல்லத்தான் இறந்து போயிருக்காரு.

 

நீ வீட்டுக்குப் போய் வென்னீர் போட்டு வை. தலை முழுகணும்னு பொண்டாட்டியை அனுப்பிட்டு வாத்தியாரையும் ஓட்டேரி வரைக்கும் போய் பிரிவுபசாரம் நடத்திட்டு வந்தேன். எதோ போ. ஆமா இதை எதுக்கு சொன்னேன்?

 

நீலகண்டனுக்கும் மறந்து விட்டிருந்தது. கங்கைகொண்டான் அம்புலு கற்பகத்துக்கு இளையவளா மூத்தவளா?

 

டீ கிளாஸை தரையில் வைக்கும்போது நாயுடு சொன்னான்.

 

உனக்கு குரல் கேட்டுதுன்னியே. வாஸ்தவம் தான்பா. நம்பு.

 

இருட்டிக் கொண்டு வந்தாலும் அவனுடைய கண்கள்  நீலகண்டனைத் தீர்க்கமாகப் பார்ப்பது நீலகண்டனுக்குத் தெரிந்தது. கொட்டிலில் எருமை மாடுகள் நிறுத்தாமல் கனைக்க ஆரம்பித்திருந்தன. அதுகளுக்கும் தெரிந்த ரகசியமாக இருக்கும் இது.

 

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

Series Navigationசுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *