விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலு

This entry is part 43 of 43 in the series 17 ஜூன் 2012

1938 டிசம்பர் 18 வெகுதான்ய மார்கழி 3 ஞாயிற்றுக்கிழமை

நீலகண்டன் கண் முழித்தபோதே அசதியாக இருந்தது. எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். கொஞ்ச நேரம் அங்கே இருந்து டாக்டர் வார்டு வார்டாக வரும்போது அவரை எதிர்கொள்ள வேண்டும். நாயுடுவின் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்தாலே அது சாத்தியம். வெள்ளைக்கார டாக்டர் என்பதால் அவர் கேட்பதற்கு எல்லாம் இங்கிலீஷில் பதில் சொல்லி, அவரிடமிருந்து நாயுடு தேக நிலை பற்றி புதுசாகத் தகவலும், மருந்து மாத்திரை சம்பந்தமான விஷயங்களும் தெரிந்து கொண்டு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்றால் நாயுடு குடும்பமும் பந்து ஜனமும் அண்டை அயல் பிரதேசத்து குடித்தனக்காரர்களும்.

நாளில் பாதி பாகம் ஜெனரல் ஆஸ்பத்திரி, வால்டாக்ஸ் ரோடு, ஜட்காவிலும் டிராமிலுமாக சவாரி என்றே போய்விடும். நேரத்துக்கு ஆகாரம் கழித்து நேரத்துக்கு.

இல்லை, அதெல்லாம் ஒன்றும் இல்லையென்று ஆகி ரெண்டு வாரமாச்சு.

அவனுக்குச் சட்டென்று நினைவு வந்தது.

நாயுடு போய்ச் சேர்ந்து இன்றோடு பதினாறு நாள் ஆகிவிட்டது. அவன் ஆத்மாவைக் கருமாதியோடு கடைத்தேற்றி அனுப்பி வைத்தது நேற்றைக்குக் காலையில்.

சிநேகிதன் ஒருத்தன் பிராணாவஸ்தையில் துடிக்கிற போது பக்கத்தில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிற விதி நீலகண்டனுக்கு மட்டும் வாய்த்த ஒன்று போல. அவன் மனசை சதா அலைக்கழித்து கஷ்டப் படுத்துகிற சம்பவங்கள் நடந்து முடிந்தவை. நாயுடுவை அவன் பார்க்கப் போன சுபதினத்தில் ஆரம்பமானது அது.

நாயுடுவை அவன் பார்க்கப் போன சாயந்திரத்தில் தொடங்கிய நாள் இன்னும் முடியாமல் நீளுகிற பிரமை.

நாயுடு மகன் பொதபொத என்று நாயுடுவை விட உசரமாக, ஆகிருதியாக, தொந்தியும் தொப்பையுமாக வளர்ந்திருந்தாலும் அடிப்படையில் மனசில் தைரியம் என்பதே கிஞ்சித்தும் இல்லாமல் இருந்தான்.

நாய்னா நாய்னா என்று தரையில் ரத்தப் போக்கு அதிகமாகிக் கிடந்த நாயுடுவின் தோளைப் பிடித்துக் குலுக்குவதைத் தவிர அவன் பிரக்ஞை பூர்வமாக வேறேதும் செய்யவில்லை. வீட்டுக்குள்ளே நிற்கிற அந்நிய மனுஷரான நீலகண்டன் யார் என்று விசாரிக்கக் கூட அவனுக்குத் தோன்றவில்லை.

நீலகண்டன் தான் பதற்றமும் அவசரமுமாகக் கேட்டான்.

நீ நாயுடுவோட பிள்ளையாண்டனாப்பா?

அவன் குரல் நடுங்கியது. நாயுடுவுக்கு நேர்ந்ததுக்கு அவனும் காரணம். அவன் தான் காரணம். எதுக்கு இந்த துரதிருஷ்டம் பிடித்த தினத்தில் அவனைத் தேடி வந்து வாசலில் உட்கார்ந்து அதுவும் இதுவுமாக வம்பு பேசி கேட்டு வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து சாயந்திரம் கரையும் வரைக்கும் பொழுதைப் போக்கினது? போக்கினது தான் போக்கினதாக இருக்கட்டும். மனப் பிரமையை வாய்விட்டு அவன் கிட்டே சொல்லி, அவன் சொம்பை எடுக்கறேன், சருவப் பானையை எடுக்கறேன் என்று வயசையும் பாராமல் ஏணியை நிமிர்த்திப் போட்டு பரணில் ஏற வைத்தது என்னத்துக்கு? சரி அவன் தான் பிடிவாதம் பிடிக்கிறான் என்றால் நமக்கு எங்கே புத்தி போச்சு? கையைக் காலை உடச்சுப்பேடா நாயுடு, சாவகாசமா ஒருநாள் வந்து எல்லாத்தையும் வாங்கிக்கறேன் என்று சொல்லி விட்டு நடையைக் கட்டி இருந்தால் இந்த கதி நாயுடுவுக்கு வந்திருக்குமா?

நீலகண்டன் மனசு ஒரு பக்கம் குமைந்து கொண்டிருக்க, அடுத்த பக்கம் உடனடியாக ஆக வேண்டிய காரியங்களைக் கணக்குப் போட்டது.

கேவிக் கேவி அழும் இந்தப் பிள்ளை கன்னையா நாயுடுவை நம்பி பிரயோஜனம் இல்லை. நீலகண்டன் வெளியே அவசரமாக, வாசல் நிலைப்படி தலையில் இடித்த வலியோடு நடந்து காலில் செருப்பை மாட்டக் கூட நேரமில்லாமல், நாயுடு வீட்டை ஒட்டித் தெருக்கோடியில் இருந்த காப்பிக் கடைக்கு ஓடினான். என்னாச்சு என்று எருமைகள் விசாரித்தபோது அவை பதில் கிடைக்காமல் நாயுடுவைக் கூப்பிட்ட குரல் மட்டும் தெரு இருட்டில் துணையாக நீலகண்டனோடு வந்தது.

அது காப்பி ஓட்டல் இல்லை என்று நுழைந்ததும் தான் தெரிந்தது. அசைவ பதார்த்தங்களின் வாடை மூக்கில் முட்டும் மிலிட்டரி ஓட்டல். தலையில் ஈரிழைத் துண்டு தலைப்பாவும், வியர்த்த உடம்புமாக ஒரு நடு வயதுக்காரன் சாதத்தையோ எதையோ மாமிச பதார்த்தங்களைக் கலந்து அகப்பையால் கிளறிக் கொண்டிருந்தான். உஸ் என்று சதா பெருமூச்சு விடும் பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒன்றும் நாலைந்து லாந்தர்களும் கடைக்கு பிரகாசம் கொடுத்தபடி ஒளிர்ந்தன.

நாயக்கர்னு, ராமானுஜலு நாயுடு சிநேகிதர் நீங்கதானா?

தலைப்பாக் காரன் நிமிர்ந்து பார்த்த பார்வையில் ஒரு ஆச்சரியம் தெரிந்தது. சின்னதாகக் குடுமி வைத்த பிராமணர்கள் வருகிற இடமில்லையே மிலிட்டரி ஓட்டல்? ராமானுஜலு நாயுடு என்றால் யார்? பக்கத்து காரைக் கட்டிடத்தில் எருமை வளர்த்து தினசரி கடைக்குப் பால் தருகிற கோர்ட் காரரா?

எந்த நாயுடுவைச் சொல்றீங்க சாமி? கோர்ட்டுக்கார ஐயா?

அவரே தான். உசிர் போறமாதிரி கிடக்கறார். கொஞ்சம் வாங்கோ. புண்ணியமாப் போகும்.

நீலகண்டன் நிற்க நேரமில்லாமல் சுபாவத்துக்கு கொஞ்சம் இரைந்த குரலில் சொல்லியபடி திரும்ப நாயுடு வீட்டுக்கு ஓடினான். அறுபது கழிந்து ராத்திரியில் திடுதிப்பென்று ஓடிச் சாடி நடந்து மூச்சு முட்டிக் கொண்டிருந்தது அவனுக்கு. வயிறு வேறு சமய சந்தர்ப்பம் தெரியாமல் பசிக்கிறது பசிக்கிறது என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

நீலகண்டனைத் தொடர்ந்து தலைப்பாக்கட்டி நாயக்கரும், கடையில் எடுபிடிகளும், சாப்பிட வந்து ரொட்டியோ வேறே ஏதோ சுடச்சுட இலையில் பரிமாறக் காத்திருந்த ஆனைக்கவுனி பக்கத்து வாடிக்கையாளர்களோ ஓடி வந்தார்கள். அதில் ஜெனரல் ஆஸ்பத்திரி கம்பவுண்டர் ஒருத்தரும் அடக்கம்.

ஜட்கா வண்டி ஏற்பாடு செய்கிறது, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்க்கிறது இப்படி எல்லாக் காரியத்தையும் அவர்கள் கவனித்துக் கொண்டார்கள். நாயுடுவுக்கு முன்பாரா பின்பாராவாக ரெண்டு பேர் வண்டியில் உட்கார அது நகர்ந்தபோது பக்கத்தில் யாரிடமாவது சொல்லிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படலாமா என்று நீலகண்டன் நினைத்தது வாஸ்தவம். போகலாம் என்றது வயிறும். போறதுன்னா போய்யா என்று கொட்டில் எருமைகளும் இரைந்தன.

வேணாம். அது நல்ல நடத்தையாக இருக்காது. இந்த நாயுடு நீலகண்டனுக்கு நல்ல சிநேகிதன். நீலகண்டனுக்கு எதையோ எடுத்துத்தரப் போய் இப்படி உயிர் ஊசலாடுகிற அவஸ்தையில் கிடக்கிறான்.

நாயுடு மகனோடு அவனும் இன்னொரு ஜட்காவில் உட்கார்ந்தான்.

அம்மா எந்த கொட்டாய்க்கு’பா பயாஸ்கோப் போயிருக்கு?

நாயுடு மகன் பேந்தப் பேந்த முழித்தான். நீலகண்டனுக்கு நாயுடு சொன்ன தகவல் அது. அவன் தான் அங்கே போய்ப் பார்க்கச் சொல்லி கேட்டவனை அனுப்பி வைத்தான்.

ரொம்ப ரத்த சேதம். அட்மிட் பண்ணுங்க. பார்க்கலாம். நீங்க யாரு? அவருக்கு தம்பியா?

டாக்டர் துரை நீலகண்டனிடம் விசாரித்தது என்ன என்று புரியாமல் பார்த்தபடி கூடவே நின்ற கன்னையா நாயுடு அடுத்த அழுகைக்கு முஸ்தீபாக மூக்கை உறிஞ்சினான்.

இவங்க எல்லாம் யாரு? கம்பவுண்டர், நீ என்ன பண்றே இங்கே? டியூட்டி போ.

மிலிட்டரி ஓட்டலில் சாப்பாடு கிட்டாத பரோபகாரி கம்பவுண்டர் ஒன்றும் பேசாமல் உள்ளே போனான். போகும்போது தெலுங்கில் ஏதோ கன்னையா நாயுடுவிடம் சொல்ல அவன் நாலு லேதுவும் நாலு நாயனாவுமாக மாறி மாறி உச்ச ஸ்தாயியில் விளித்து அழ ஆரம்பித்தான்.

அந்தப் பையனைக் கொஞ்சம் வெளியே அனுப்புங்க. இங்கே எல்லாம் அழக்கூடாது.

டாக்டர் கண்டிப்பாகச் சொன்னார். அவருடைய தேசத்தில் செத்தால் கூட அழ மாட்டார்கள்.

நீலகண்டன் இடைமறித்து யார் யார் நாயுடுவுக்கு என்ன என்று சுருக்கமாகச் சொல்வதற்குள் நாயுடுவை படுக்கையில் கிடத்தி உள்ளே உருட்டிப் போய்விட்டார்கள்.

மகன் உள்ளே இருக்கட்டும். இங்கிலீஷ் புரியும்தானே?

டாக்டர் விசாரித்தார். நீலகண்டன் இரையும் வயிறோடு கன்னையா நாயுடுவைப் பார்த்தான். வேறே எது புரிந்தது அவனுக்கு இது புரிய?

சிநேகிதனுக்காக நீலகண்டன் செய்ய வேண்டிய கடமையில் இன்னும் பாக்கி இருக்கிறது.

நானும் உள்ளே போகட்டுமா என்று அவன் டாக்டரைக் கேட்க உடனடி அனுமதி கிடைத்தது.

மருந்தும் மற்றதும் நாயுடுவுக்கு எழுதிக் கொடுத்ததை வாங்கி வர அவனே பிராட்வேக்குப் போய் வந்தான். கைக்காசையும் கருதல் இல்லாமல் செலவழித்தான்.

அவன் வந்தபோது உள்ளே டாக்டர்கள் ரெண்டு பேர் நாயுடு படுக்கை பக்கமாகக் காத்துக் கொண்டிருந்தார்கள் அவன் வருவதற்காக. படுத்துக் கிடந்தவனின் தலையில் ஏழெட்டு சுற்றாவது வலைத் துணியைச் சுற்றி முகத்தையும் கிட்டத்தட்ட மூடி மறைத்து கட்டுப் போட்டிருந்தார்கள்.

நீலகண்டன் வாங்கி வந்த ஊசி மருந்தை உடனே வாங்கி இன்சக்ஷன் போட ஆரம்பிக்க அவன் வெளியே வந்தான். வாசலில் பெருங்கூட்டமாகக் கூட வந்தவர்கள் ஏதோ மைதா மாவு பலகாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஓரமாக கன்னையா நாயுடு கையில் பூவரச இலையைப் பிடித்தபடி ஒரு பிடி ஆகாரமும் உடனே அழுகையுமாக குந்தியிருந்தான்.

நம்ம கடை பொரட்டா சார். இது மட்டும் சைவம். கூட முட்டை, மட்டன் சேர்க்காம சாப்பிடறீங்களா? பசி எடுக்குமே பாவம்?

மிலிட்டரிக்கடைக்கார தலப்பா நாயக்கர் நீலகண்டனைக் கேட்டார். அவன் வேண்டாம் என்று மரியாதையோடு சொல்லும்போது செண்ட்ரல் ஸ்டேஷன் வாசல் கடியாரம் அடித்தது பதினோரு மணி.

நீலகண்டனுக்கு விதிர்விதிர்த்தது.

கற்பகம் இன்னேரம் அங்கே என்ன துடித்துக் கொண்டிருக்கிறாளோ?

நாளைக்கு வரேன் என்று சொல்லி விட்டு செலவு அதிகம் என்றாலும் பரவாயில்லை என்று மூணு ஜட்கா வண்டி மாறி அவன் நுங்கம்பாக்கம் வந்து சேர்ந்தபோது ராத்திரி பனிரெண்டு அடித்து கூடவே பதினைந்து நிமிஷம் கழிந்திருந்தது.

கற்பகம் தூணைப் பிடித்துத் துவண்டு போய் உட்கார்ந்தபடி வாசலிலேயே எதிர்ப்பட்டாள். பக்கத்து கிரஹத்து, எதிர் வீட்டு மனுஷர்கள் என்று இங்கேயும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதோ வந்துட்டாரே உங்காத்து மாமா.

யாரோ தென்னோலை விசிறியால் விசிறிக் கொண்டே சொல்ல, அவள் நிமிர்ந்து பார்த்தாள். அழுகையும் ஆத்திரமும் அவசரமுமாக ஓடியே வந்து நீலகண்டன் கன்னத்தில் அறைந்தாள்.

கற்பகம், நான்

அவனை முடிக்க விடாமல் ஜனக் கூட்டத்துக்கு நடுவே நிற்கிறதையும் சட்டை செய்யாமல் அவனை இறுக ஆலிங்கனம் செய்து மார்பில் அப்படியே அடிபட்ட பறவை போல் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். தாரை தாரையாகக் கண்ணில் தண்ணீர்.

நீலகண்டனுக்கும் எதற்கென்று தெரியாமல் அழுகை வந்தது. ஆம்பிளை. கன்னையா நாயுடு மாதிரி அழக் கூடாது. அடக்கு என்றது மனசு. போய்ச் சாப்பிடலாம் என்றது வயிறு.

எப்போது சாப்பிட்டு எப்போது வர்த்தமானம் முழுக்கச் சொல்லி, கேட்டு முடித்து, எப்போது வாசல் விளக்கு அணைத்து கதவு சார்த்தி தூங்கினார்கள் என்பதே தெரியாது. அறுபதுக்கு மேலும் தேக சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம் என்று நீலகண்டனுக்கு நம்பிக்கை கொடுத்த ராத்திரி அது.

அடுத்த பத்து நாள் நாயுடுவே மனசு முழுக்க இருக்க, கற்பகம் விலகி நிற்க வேண்டிப் போனது.

தீவிர சிகிச்சை பலன் இல்லாமல் நாயுடு உயிரை விட்டது பதினைந்து நாளைக்கு முந்தைய புதன்கிழமை சாயந்திரம்.

பேப்பர் சார்

தமிழ்ப் பேப்பரைப் போட்டு விட்டு பையன் கட்டுக் காகிதத்தைச் சுமந்தபடி வெளியே ஓடினான்.

நாயுடு மரண வார்த்தை வந்திருக்கும்.

நீலகண்டன் திண்ணையில் உட்கார்ந்து பேப்பரைப் புரட்டினான். மூக்குக் கண்ணாடி இல்லாமல் எழுத்தெல்லாம் மங்கலாகத் தெரிந்தாலும் படித்து விட முடியும் என்று நம்பிக்கை.

நேற்றைக்கு பத்திரிகை ஆபீசுக்கு அவனே போய் ஐந்து ரூபாய் கட்டணம் கட்டி எழுதிக் கொடுத்து விட்டு வந்தான். நிஜமாவே போய்ட்டாரா என்று நாலைந்து தடவை விசாரித்து வாங்கிக் கொண்டார்கள் அந்த மனுஷர்கள்.

உசிரோட இருக்கறவாளுக்கு வைகுண்ட பதவியும் கைலாச பதவியும் கிடச்சு ப்ரமோட் ஆகிப் போனதா அச்சுப் போட்டுட்டா கஷ்டம் சார். எங்க தலை உருளும். உருண்டிருக்கு.

வெற்றிலையை மென்றபடி ஒரு ஐயங்கார் தன் ஹாஸ்யத்துக்குச் சிரித்தபடி மரண வார்த்தை என்று நீலகண்டன் எழுதிக் கொண்டு வந்த காகிதத்தை வாங்கினார்.

இதோ ராயங்கல ராமானுஜலு நாயுடு.

அவன் படிக்க ஆரம்பித்த போது முன்னால் யாரோ வந்து நிற்கிற சத்தம்.

கண்ணை உயர்த்திப் பார்த்தான். கன்னையா நாயுடு. முதல் தடவையாகச் சிரிக்கிறான். கையில் துணிப் பையில் ஏதோ வைத்து ஜாக்கிரதையாகப் பிடித்திருக்கிறான்.

அதை நீலகண்டனிடம் நீட்டியபடி சொன்னான்.

நாய்னா கொடுத்துட்டு வரச் சொன்னாரு.
(தொடரும்)

Series Navigationஎஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *