நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “

This entry is part 20 of 35 in the series 29 ஜூலை 2012

ஒரு பனிரெண்டு நிமிடக் குறும்படம் இதயத்தைக் கனக்க வைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நி.நெ. தினேஷ். என்னை மட்டுமல்ல.. இன்னமும் ஆயிரம் சொச்சம் ஆட்களை. முகநூலில் நான் பார்த்த இந்தக் குறும்படம், இப்படி ஒரு அனுபவத்தை எனக்கு தந்தது.

இப்படத்தின் முக்கிய பாத்திரம், இன்னும் சொல்லப்போனால் ஒரே பாத்திரம், ஒரு வயசாளி. களம் கேரளத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில், காணக்கிடைக்கும் தனித்த ஒரு அடையாளமில்லாத, சராசரி டீக்கடை மற்றும் உணவு விடுதி. காலம்: மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரையிலான மொட்டை வெயில் நேரம்.

டீக்கடை முதலாளி மேடையைக் கழுவிக் கொண்டிருக்கிறார். வெள்ளை வேட்டி, சட்டையுடன், காலில் செருப்பில்லாமல், பஞ்சடைந்த கண்களுடன், ஒரு பெரியவர் உள்ளே வருகிறார். முதலாளி கடிகாரத்தைப் பார்க்கிறார். மணி காலை 11.40. அடுத்த காட்சியில் பெரியவர், தார் ரோடில் சிகப்பு சட்டை, கருப்பு பேண்டுடன், கையில் ஒரு அட்டையுடன் நிற்கிறார். அட்டையில் பெரிய எழுத்துகளில் MEALS READY என்று எழுதியிருக்கிறது. கார்களும், இரு சக்கர வாகனங்களூம் விரையும் சாலை. வரும் போகும் வாகனங்களுக்கெல்லாம், அட்டையைத் தூக்கிப் பிடித்து காட்டிக் கொண்டிருக்கிறார் பெரியவர்.

ஒரு டாடா சுமோ வருகிறது. முன்சீட்டிலிருந்து ஒரு இளைஞன் கையில் ஒரு அலுமினிய வாக்கருடன் இறங்குகிறான். பின் கதவின் அருகில் வைத்துவிட்டு கதவைத் திறக்கிறான். அங்கிருந்து ஒரு வயதானவர் இறங்க, அவரைக் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு, வாக்கர் உதவியுடன் உள்ளே அழைத்துப் போகிறார்கள். துணைக்கு ஒரு இளம் பெண்ணும் உண்டு. சாலையில் நிற்கும் பெரியவர் அவர்களை ஏக்கத்துடன் பார்க்கிறார். அவர் கண்களில் உறவுக்கும் பாசத்திற்கும் அவர் ஏங்குவது வெளிப்படுகிறது.

அடுத்த கும்பல் இரண்டு பைக்குகளில் வருகிறது. மூன்று இளைஞர்கள். உள்ளே போய் சாப்பிடுகிறார்கள். பெரியவருக்கு வெயிலில் நாக்கு வரள்கிறது. தொண்டைக் குழி ஏறி இறங்குகிறது. இளைஞர்கள் சாப்பிட்டு விட்டு, ஆளுக்கொரு மினரல் வாட்டர் பாட்டில்களுடன் வெளியே வருகிறார்கள். மினரல் வாட்டரிலேயே கை கழுவுகிறார்கள், முகம் கழுவுகிறார்கள், வாய் கொப்பளிக்கிறார்கள். பாட்டிலை இருவர் மட்டும் வீசி எறிந்து விடுகிறார்கள். ஒருவன் மட்டும் தண்ணீர் குடித்துக் கொண்டே பைக்கில் பின்னால் ஏறுகிறான். சொற்ப நீர் இருக்கும் பாட்டிலை பெரியவர் காலடியில் வீசி விட்டு போய் விடுகிறார்கள். தண்ணீருக்கு ஏங்கும் வறண்ட தொண்டையுடன் பாட்டிலைப் பார்க்கிறார் பெரியவர். சொற்ப நீரும் மண்ணில் வழிந்தோடுகிறது. குனிந்து எடுத்து வாய்க்குள் கவிழ்க்கிறார். ஒரு சொட்டு நீர் விழுகிறது. திரும்பி கடிகாரம் பார்க்கிறார். மணி மதியம் மூன்று.

அடுத்து ஒரு மகிழுந்தில் ஒரு இளம் தம்பதியும் இரண்டு வயது பெண் குழந்தையும்.

குழந்தையின் காலைப் பார்க்கிறார் பெரியவர். புத்தம்புது ஷ¥. வெயில் சூடு தாங்க முடியாமல் இவர் கால் மாற்றி நின்று தவிக்கிறார். குழந்தை இவரைப் பார்த்து சினேகமாகச் சிரிக்கிறது. கிழவர் முகத்தில் புன்னகை அரும்புகிறது. சாப்பிட்டு கிளம்பும்போது கார் கிழவர் அருகே நிற்கிறது. குழந்தை கையை நீட்டி அவர் கையில் ஒரு சாக்லேட்டைக் கொடுத்து விட்டு ‘டாட்டா’ சொல்கிறது.

மதியம் 3.40. பெரியவர் கடைக்குள் வருகிறார். முதலாளி கடிகாரத்தைப் பார்க்கிறார். கிழவர் உடை மாற்றி பழைய வேட்டி சட்டையில்! அவர் கையில் ஒரு பொட்டலம் கொடுக்கிறார் முதலாளி. பெரியவர் செருப்பில்லாமல் தார் ரோடில் நடந்து போகிறார்.

பொட்டலத்தைப் பிரித்து பெரியவரும் அவரது வயதான மனைவியும் சாப்பிடுகிறார்கள். பெரியவர் மூன்று உருண்டைகளே சாப்பிடுகிறார். அவர்கள் வளர்க்கும் பூனைக்கும் கொஞ்சம் போடுகிறார்கள். வறுத்த மீனில் மிச்சமாகிப்போன துண்டுகளில் ஒன்றைப் பொறுக்கி பூனைக்கும் வைக்கிறார்கள்.

கை கழுவிய பிறகு, பெரியவர் இடது கையைப் பிரித்து, குழந்தை தந்த சாக்லேட்டை மனைவியிடம் தருகிறார். அவள் பாதி காணாமல் போன மேல் வரிசைப் பற்களால் அதைக் கடித்து, பாதியைக் கணவனுக்கு ஊட்டுகிறாள். பெரியவர் முகத்தில் மெல்லப் புன்னகை அரும்புகிறது.

உணர்ச்சிக் குவியல்களாக இருக்கிறது படம். மொழி மலையாளம் என்று போடுகிறார்கள். ஆனால் எந்தக் கதாபாத்திரமும் பேசுவதில்லை. தூரத்தில் கேட்கும் ஓரிரு மலையாள வார்த்தைகளோடு சரி. தினேஷ¤க்கு கதை சொல்லத் தெரிகிறது. அனாவசியச் செருகல்கள் இல்லாமல் திரைக்கதை அமைக்கத் தெரிந்திருக்கிறது. மலையாளக் கரையோரம் எடுத்ததால், பார்க்கும் முகங்களெல்லாம், புதுமுகங்களாகவே தெரிகிறது. அதனால் படத்தோடு ஒன்ற முடிகிறது. பாராட்டுக்கள்.

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -19பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-12)
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    சுகம் எங்கேடா இருக்கிறது என்றானாம், சொறியிற இடத்தில் என்றார்களாம்…. கார் போவனும், மகிழுந்தில் மகிழ்பவன் , என எல்லோரும் வில்லன்கள். கடைக்காரர் மிகப் பெரிய வில்லன்… இவர்கள் மட்டும் செண்டிமெண்ட் கிடங்கு…. மாறாத புலம்பல் இலக்கியங்கள் சினிமாக்கள்… வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை… நரகலை தின்னவனை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்த்தற்கே சுவிஸ் வேலை விட்டு சேவகராய் மாறிய மனிதர்கள் நிறைந்த நாடு. உரிமைகளை கேட்ட முகநூலில் சொறிந்து கொள்ளும் நிலை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *