விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு

This entry is part 25 of 35 in the series 29 ஜூலை 2012

1939 ஜனவரி 29 வெகுதான்ய தை 16 ஞாயிற்றுக்கிழமை

ஆலப்புழை ரயிலடியே அதிசயித்து நிற்க நடேசன் ரயிலேறினார்.

யாராக்கும் புள்ளிக்காரன், ராஷ்ட்ரியக் காரனோ, மதராஸியிலே வல்ல சம்மேளனம் ஏதும் ஒத்து சேரும் பரிபாடியோ?

அம்பலப்புழ நீலன் வக்கீலோட குமஸ்தன்.

வக்கீல் குமஸ்தன்மாரே, வரூ, நமக்கும் உக்ரனாயிட்டு ஒரு ஹர்த்தால் நடத்தலாம் என்று அஜெண்டா குறிச்சு ஆளனுப்பி வரவழைத்திருப்பார்கள்.

பாண்டிப் பிரதேச ஜனங்களுக்கு இதெல்லாம் சுபாவத்தில் இல்லாத விஷயம். இங்கே இருந்து அங்கே ஒண்ணும் ரெண்டுமாகப் போய்ச் சேர்ந்த குறூப்பும், நாயரும், பிள்ளையும் முன்சீப் கோடதியிலும் ஜில்லா கச்சேரி, ஏன், ஹைகோர்ட்டிலும் பேனா ஓட்டி சுகமாகப் பிழைக்கிறதாகத் தகவல். அவர்கள் வேலையாக இருக்கலாம்.

எல்லோரும் இந்தப்படிக்கே நினைத்து ஆச்சரியப்படட்டும். நடேசனுக்கு மனசுக்கு இதமாக இருக்கும்.

ஓட்டல்கார பட்டரின் தஸ்தாவேஜைத் தேடிக் கொண்டு நடேசன் பயணம் வைக்கிறார் என்று தெரிந்தால் புச்சமாகப் பார்ப்பார்கள். சரி, பார்க்கட்டுமே, அப்பவும் தான். நடேசனுக்கு என்ன போச்சு?

நடேசனுக்கு அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் சார்பாகப் படியளக்கும் வக்கீலே ஹோட்டல்காரப் பட்டரோடு பேச்சு நடத்த அவருடைய சாப்பாட்டுக் கடைக்குப் படியேறிப் போனார்.

ஒரு வாரம் முந்தி கோஷ யாத்திரை, கொடி பிடிப்பு, ஹர்த்தால் என்று முடக்கிப் போட்டிருந்த ஊரும் நாடும் ஒரே ராத்திரியில் காந்தியோ யாரோ கை காட்ட சுபாவமாக இயங்க ஆரம்பித்திருந்தது.

ஒரு ஹர்த்தால் ஜெயம் ஜெயம் என்று முடிந்து அடுத்தது ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதமோ ரெண்டு மாதமோ ஆகும் என்பதால் எல்லாரும் வேலையைப் பார்க்க முடிவு செய்திருந்த அதிசய நேரம் அது. பலா மரத்தை வெட்டின கேஸ், பாகப்பிரிவினை, பகவதி அம்மன் காவில் ஊழியத்துக்கு பரம்பரை உரிமையை ஊர்ஜிதம் செய்யக் கோரி மனு இப்படி ஏழெட்டு பேர்வழிகள் வக்கீல் ஆபீசுக்குப் படையெடுத்து வந்திருக்கிற நேரம். கிராமத்தில் விவசாயத்தைக் கவனிக்கப் போன ஜட்ஜியின் பங்கா இழுவைக்காரன் கூடத் திரும்ப வந்து தூசியும் துப்பட்டையுமாக தெய்வ துல்யர் ஜட்ஜி மகாராஜனுக்கு பங்கா இழுத்து தும்ம வைக்க ஆரம்பித்து விட்டான். ஊரே கச்சேரி காரியம் என்று முஸ்தீபு எடுத்து கொண்டிருக்கும் போது நீலன் வக்கீல் குமஸ்தனை தூர தேசம் போக வைத்து விட்டு நிற்கலாகுமா?

அய்யர்வாள். இந்த நடேசன் போய்த்தான் ஆகணுமா?

வக்கீல் ஓட்டல் இட்டலியை கொத்தமல்லி துவையலில் புரட்டியபடி கேட்டார். எல்லாத்துக்குமே காந்தி தான் காரணம். அடுத்த ஹர்த்தாலை அறிவிப்பு செய்திருந்தால், பட்டரின் டாக்குமெண்டைத் தேடுகிற சாக்கில்  வக்கீலே பட்டணம் போய்விட்டு வர ஒரு திட்டமும் யோசித்து வைத்திருந்தார்.

காந்தி இப்போது வக்கீல் என்ன, குமஸ்தன் கூட எங்கேயும் போய் அலைந்து திரியாமல், இருக்கப்பட்ட இடத்து காரியங்களை அங்கேயே இருந்து கிரமமாகப் பார்க்கச் சொல்லி விட்டு தலையில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு ராட்டையில் மும்முரமாக நூல் நூற்கிறாராம். வடக்குப் பிரதேசத்துத் தகவலை பத்திரிகைகள் மூணாம் பக்கத்தில் சுவாரசியமில்லாமல் அச்சுப் போட்டிருக்கின்றன. அடைச்சால் சேதி. நிறுத்திப் போட்டால் நியூஸ். போகிறது போகிற போக்கில் போனால், மசி புரட்டி நியூஸ்பேப்பர் கொண்டு வர ஒரு காரியமுமில்லை.

வக்கீலே, அது சரி. நீர்தானே நடேசன் போகலாம்னு யோசனை சொன்னது? அவராலே முடியவில்லை என்கிற பட்சத்தில் யாரைப் போய் மதராஸியில் பார்த்தால் சரியாக இருக்கும் என்று சொல்லும். நானே போகிறேன்.

அய்யருக்கு அந்த டாகுமெண்ட் வெகு முக்கியம். நிலத்துக்கான பட்டயம் என்று நடேசன் சொல்லியிருந்தார். நிலத்தை விற்க ஏதும் விலை படிந்து வந்திருக்கோ என்னமோ. என்னத்துக்காக அதை காப்பி செய்து வைக்கணும்? அதுவும் நடேசனைக் கொண்டு? எழுதினவன் மசியில் எந்த யட்சி வசிய மூலிகைச் சாறு கலந்து எழுதித் தொலைத்தானோ? காற்று பட்டதும் கரைந்து போகிற எழுத்தா அது? அப்படியானால் செல்லுபடிதான் ஆகுமா?

நிலத்தை விற்க எல்லாம் உத்தேசமில்லை. எங்க தகப்பனார் காலத்திலே கைக்கு வந்தது. நான் கரிசனமில்லாமல் இத்தனை நாள் எங்கேயோ காணாமல் போக்கினது மட்டுமில்லாம அந்த பூமி எங்கே இருக்குன்னு அக்கறை கூட காட்டலே. ஆலப்பாட்டு ஜோசியனும் தைக்காட்டு மூஸும் சோழி உருட்டிப் பார்த்துட்டு கடமை தவறிட்டியேடான்னு அங்கலாய்க்கறா.

வக்கீல் உள்ளூர் கோர்ட்டிலேயே மனுப்போட்டுப் பார்க்கலாம் என்றார். மனுப்போட்டு என்ன செய்யணும் என்று அவருக்கும் புரிபடவில்லைதான்.

ஆக, ஏற்கனவே முடிவானபடி நடேசனை மதராஸ் பட்டணத்துக்கு இப்போது அனுப்பி வண்டியும் நகர ஆரம்பித்து விட்டது.

நடேசனுக்கு இத்தனை வயசுக்கு மேல் பட்டணப் பிரவேசம் என்று கிருஷ்னன் விதித்திருக்கான். அவனுக்கு என்ன? இஷ்டத்துக்கு விளையாடுகிறதே வேலையாகிப் போச்சு.

கைக்கடியாரத்தில் மணி பார்த்தார் நடேசன். அது வழக்கப்படி ஓடவில்லை.

நடேசா, மணியும் நாளும் என்ன கணக்கு? இன்னிக்குப் போ. நான் வேணுங்கறபோது அங்கே இருந்து இங்கே இழுத்துக்கறேன். நடுவிலே ஒரு யுகம் நீண்டு போனாலும் உனக்கு ஒண்ணும ஆகப் போறதில்லே. புரியறதா?

கிருஷ்ணசாமி ஜன்னல் ஓர ஆசனத்தில் கால் மேல் கால் போட்டு சட்டமாக உட்கார்ந்து வாயில் புகையிலையை அதக்கியபடி சொன்னான்.

கிருஷ்ணா என்னது நீ லாஹிரி வஸ்து எல்லாம் உபயோகிச்சபடி?

மதராசி போய்ச் சேரும் வரைக்கும் எனக்கும் பொழுது போக வேண்டாமா? நீ தூங்கு.

பொழுது விடிந்து தமிழ்ப் பிரதேசம் முழுக்க ஊர்ந்தபடி அந்த ரயில் மதராஸ் ரெயிலடியை சேரும்போது சாயந்திரம் நாலு மணி.

கிருஷ்ணா இறங்கலாமா?

நடேசன் கேட்டார்.

நீ போ. எனக்கு சந்தியாகால பூஜை நேரம். நம்பூதிரி கோயில் குளத்திலே முழுகிட்டு ஈரமான கோணகத்தோட நடை திறக்க வந்துட்டு இருக்கார். அப்பு மாரார் செண்டை கேக்கலியா/

கிருஷ்ணன் போயே போய்விட்டான்.

ஏழுகிணறு எங்கே போறது?

இப்படித்தான் தமிழ் பேச வேண்டும் என்று உத்தேசம் செய்து வைத்திருந்தபடி நடேசன் கை ரிக்ஷாக்காரனைக் கேட்க அவன் தாடையைச் சொறிந்தபடி உதிர்த்தது இது –

கிணறு எங்கேயும் போவாது சாமி. நாமதான் குளிக்க, குண்டி களுவ அதுங்கிட்ட போவணும்.

அரைகுறை தமிழ் எல்லாம் பிரச்சனையில் கொண்டு போய் விடும். நடேசன் நல்ல மலையாளத்துக்குத் தாவினார். ஆச்சரியம், அடுத்த நிமிஷம் கையைப் பிடித்து இழுக்காத குறையாக ரிக்ஷாவைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்.

உக்காரு நாயர். இட்டுக்கினு போய் வுடறேன்.

அங்கே, கோஷி வக்கீல். ரொட்டிக்கடை கூட வச்சிருக்கார்.

நல்லாத் தெரியும் நைனா.

நாயரோ நைனாவோ, அவன் தூக்கிச் சுமந்து இழுக்க வண்டியில் உட்கார்ந்து போக நடேசனுக்கு சங்கடமாக இருந்தது. நர வாகனத்தில் ஏறக் கைகாட்டி விட்டு, அந்தப் பயல் அம்பலத்தில் நடை திறக்கிற நேரம் என்று கிளம்பி விட்டான்.

போனோம் வந்தோம்னு இருடா நடேசா. கோஷி வக்கீல் வீட்டைத் தாண்டிப் போறே.

எய் நிறுத்து.

நடேசன் அவசரமாக நிறுத்த, வண்டிக்காரன் படாரென்று ரிக்ஷாவைக் கவிழ்த்தான். நடேசன் தலை குப்புற விழுந்து விடக்கூடிய அபாயம்.

ஏன் நாயரே உனுக்கு மருவாத கொடுத்தா நீ நம்மளை ஏய்னு நாயைக் கூப்பிடற மாதிரி கூவறே. உங்க ஊர்லே இதான் மருவாதயா?

அவனுக்கு மலையாள எய் வேறே தமிழ் ஏய் வேறே என்று புரிய வைப்பது சிரமம் என்று பட நடேசன் இரண்டு கையையும் தூக்கிக் கும்பிட்டார். கிருஷ்ணா மன்னிச்சுடுப்பா உன்னை பயல்னு சொல்லிட்டேன்.

பரவாயில்லே நாயரே, இந்த வூடுதான். கரீட்டா சொல்லிட்டியே. நான் தான் அன்னாண்ட போயிட்டேன்,

கிருஷ்ணன் நடேசனின் மூட்டை முடிச்சுகளை பத்திரமாக வீட்டு நடையில் கொண்டு வந்து வைத்தான். அவர் தாராளமாக எடுத்துக் கொடுத்த பணத்தை மாற்றுப் பேச்சு ஏதுமின்றி வாங்கிக் கொண்டு வியர்வையைத் துடைத்துக் கொண்டு கிளம்பும்போது சொன்னான் –

நாயரே, மனசிலே ஏதும் வச்சுக்காதே. நீ நல்ல மனுசன். வாய்தான் சமயத்துலே டர்ருனு விட்டுடுது. அடக்கிக்கோ அம்சமா இருக்கும். இன்னா சொல்றே?

நடேசன் தலையை முழுக்க ஆட்டி முடிவதற்குள் கோஷி வக்கீல் வீட்டுக்குள் இருந்து எட்டிப் பார்த்தார்.

சார் நான் வெளியூர்.

நடேசன் தமிழில் ஆரம்பித்தவர், இந்தாள் நம்மளவன் என்று நினைவு வர மலையாளத்துக்குத் தாவினார்.

கோஷி வக்கீல் ஆலப்புழைக்காரர். போனதுக்கு முந்திய தலைமுறையில் மதராஸ் குடிபெயர்ந்த குடும்பம். ரொட்டிக் கடை நடத்த கிளம்பியவர்கள் வீட்டில் ஒரே வக்கீல் இவர்தான். நடேசன் குமாஸ்தா பணியெடுக்கும் நீலன் வக்கீல் லா காலேஜில் படிக்கும்போது சினேகிதம். கடிதாசு கொடுத்து விட்டிருக்கிறார் அவர்.

என் பிரியமான கோஷி, இந்த நடேசன் எனக்கு நெருங்கின உறவு. கொஞ்சம் ஹைகோர்ட் பழைய ரிக்கார்ட் ஆபீஸுக்கு இவரைக் கூட்டிப் போ. என்ன விவரம் என்று கூடவே இருக்கப்பட்ட காகிதத்தில் விவரம் இருக்கு.

சும்மா கடிதாசு மட்டும் அனுப்பவில்லை. கோஷிக்காக சக்க வரட்டி, அடை பிரதமனுக்காக பாலடை, உன்னி மாங்கா அச்சார் போத்தல், கோட்டக்கல் சியவனபிராஷ் இப்படி சகலமானதும் மூட்டை முடிச்சில் உண்டு.

நடேசனை உட்காரச் சொன்னார் கோஷி. உள்ளே இருந்து சாயாவும் கேக்குத் துண்டும் வந்தது. எடுத்து வந்த சின்னப் பெண் – முட்டை போட்டிருக்கு, சாப்பிடுவீங்க இல்லே – என்றபடி நடேசனைப் பார்த்தாள்.

தமிழோ மலையாளமோ. நாட்டுக் கோழி முட்டை தானே. இருந்துட்டுப் போறது.

அவர் மலையாளத்தில் சொன்னது புரியாமல் சிறுமி அவரை தீர்க்கமாக நோக்கினாள்.

நம்ம ஊர் அவசரத்துலே மலையாளம் பேசினால் இந்தக் குட்டிக்கு அர்த்தம் ஆகாது. பதுக்கெ பதுக்கெ.

கேக் அமிர்தமாக இருந்தது நடேசனுக்கு. கிருஷ்ணா முட்டை போட்டா தின்னுவே இல்லியோ?

முட்டைக்குள்ளேயும் நான் தானேடா நடேசா உக்கார்ந்திருக்கேன். பாரு, மாரார் சோபானம் பாட ஆரம்பிச்சுட்டார். இனிமே இருமல் பாதி பாட்டு பாதின்னு நான் தான் கஷ்டப்பட்டுக் கேட்டபடி நின்னுக்கிட்டு இருக்கணும். உனக்கென்ன, பட்டணத்திலே கேக்கு தின்னுட்டு இருக்கே.

கிருஷ்ணனுக்கும் நடேசனை சீண்டாமல் பொழுது போகவில்லை. அம்பலப்புழையானால் என்ன, பட்டணம் ஆனால் என்ன, கூடவே தான் எப்பவும் இருப்பு.

கிருஷ்ணார்ப்பணம்.

நடேசன் சாயாவை மிடறு மிடறாக ரசித்துக் குடித்ததைப் பார்க்க கோஷி வக்கீலுக்கே ஆசை வந்தது போலும்.

மோளே, எனக்கும் ஒரு சாயா எடு.

உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தபடி, அப்புறம் என்றார் நடேசனிடம்.

(தொடரும்)

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 54பொறுப்பு – சிறுகதை
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Comments

  1. Avatar
    துளசி கோபால் says:

    //அம்பலப்புழையானால் என்ன, பட்டணம் ஆனால் என்ன, கூடவே தான் எப்பவும் இருப்பு.

    கிருஷ்ணார்ப்பணம்.//

    இது சத்யம்!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *