நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

This entry is part 27 of 35 in the series 29 ஜூலை 2012

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது.

சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் புதிய சிறுகதை தொகுப்புகள் வருவதில்லை அல்லது கவனம் பெறும் அளவிற்கு இல்லை.

வாலிப வயதும், மனதிற்கொஞ்சம் காதலும், தனக்குக் மொழி கொஞ்சம் வளைந்து கொடுக்கிறதென்று கண்மூடித்தனமாக நம்பவும் செய்தால் கவிதை எழுத ஆரம்பித்துவிடலாமென நினைத்து எழுதுபவர்கள் பலரும் தாங்கள் அங்கே இங்கேயென்று நகலெடுத்த எழுத்து உதவத் தயங்குகிறபோது ஓடிவிடுவார்கள். உலகளந்த நாயகிக்கு, கைப்பிடிக்கும் நம்பிக்கு, உயிர் நீத்த உத்தமனுக்கு என்றெல்லாம் கவிதைபடித்தவர்களை அறிவேன். இவர்கள் மற்ற நேரங்களில் எழுதுவதில்லை. எழுத்தை விட்டு இவர்கள் ஓடவில்லை, இவர்களிடமிருந்து தம்மைக்காப்பாற்றிக்கொள்ள எழுத்து ஓடி இருக்கிறது. காதற்கவிதையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு சிறுகதை வடிவத்தைக் கையிலெடுக்கிறவர்களுமுண்டு.

வெகுசன புரிதலில் கவிதை எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் எளிதென்று நம்பப்படுவதே இவற்றுக்கெல்லாம் முதன்மையானக் காரணம். உண்மையில் படைப்புத்துறையில் மிகமிகக் கடினமாதொரு வடிவங்களென்று சொன்னால் அது கவிதைகளும் சிறுகதைகளும். இவற்றில் ஜெயிப்பதற்கு கூடுதலாக திறன்கள் வேண்டப்படுகின்றன. அத்திறன் நிச்சயமாக பெயருக்கு முன்னால் தம்மைத்தாமே வியந்தோதிகொண்டு எழுதுகிறவர்களிடமில்லை என்பதால்தான் பட்டுக்குஞ்சலங்களின் உபயோகத்தை புரிந்து விலக்கவும் அசலான கவிஞனை, எழுத்தாளனை அடையாளப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மனித வாழ்க்கையென்பது கூடிவாழ்தலென்ற புரிந்துணர்வு என்றைக்குப் பிறந்ததோ அன்றே வாய்மொழிகதைகள் தோன்றின. இயல்பிலேயே மனிதன் இட்டுக்கட்டிச் சொல்வதிலும், ஒன்றைப் பலவாக திரித்துக்கூறுவதிலும் தேர்ந்தவன். ஆனால் வரி வடிவில் கதைசொல்வதென்று இடைக்காலத்தில் முயன்றபோது அவற்றில் கட்டாயம் உண்மையும் இருக்கவேண்டுமென நினைத்திருக்கிறார்கள்.

சிறுகதைகள் குறித்து மூத்த படைப்பாளிகள் தெரிவித்திருந்த அபிப்ராயங்கள் பலவும் திரு. வே. சபாநாயகம் தயவால் ‘திண்ணை’யில் நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும்.

எனக்கு, « ஒற்றைக்கருவை மையமாகக்கொண்டு சுருக்கமாகவும், செறிவாகவும்; வாசிக்கத்தொடங்கியவேகத்தில் முடித்து, எல்லைக்கோட்டைத் தொட்டவன் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனையும் மனநிலைக்கு நம்மை ஆளாக்கும் எந்தப்படைப்பும் நல்ல சிறுகதைதான் ». தர்க்கங்கள், விவாதங்கள், நீளமான வர்ணனைகள் நாவல்களுக்கு உகந்தவையாக இருக்கலாம், ஆனால் சிறுகதைகளுக்கு உதவாது. இதுதவிர ஒரு நல்ல சிறுகதைக்கு அடையாளம், நீங்களும் நானும் உண்மையென மனப்பூர்வமாக நம்புவதை நியாயப்படுத்த வேண்டும். பிறகு சொல்லும் உத்தியும் தேர்வு செய்யும் சொற்களும் அவரவர் சாமர்த்தியம்.

‘நீர்மேல் எழுத்து’ ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை தொகுப்பு. தமிழில் படைப்புலகில் எவரையும் குருவாக வரித்துக்கொள்ளாது, பெயருக்காக அல்ல எழுத்துக்காக எனத் தீர்மானித்து வாசிப்பவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர். திண்ணை இணைய இதழை தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்கு தோழமையான பெயர். ஆறேழு வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இராயர் காப்பி கிளப், மரத்தடி போன்ற மடலாடுகுழுக்கள் இருந்தன. இரா.முருகன், பா.ராகவன், மாலன், இராம.கி. ஆர்.வெங்கிடேஷ், நா.கண்ணண், ஹரிஹரன் என்று பலரை அப்போதுதான் அறியவந்தேன். எவர் மனதையும் புண்படுத்தாது எழுதும் மென்மையான ரெ.காவின் எழுத்தோடும், படைப்புகளோடும் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டது அப்போதுதான்.

ரெ.கார்த்திகேசு பினாங்கு (மலேசியா) நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர்.  சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர். கற்றகல்வியையும் பெற்ற அனுபவத்தையும் தங்கள் படைப்புகளில் முறையாக – பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழ்படைப்புலகில் குறைவாகத்தான் இருக்கவேண்டும். சுஜாதா, இரா.முருகனைத் தவிர வேறு பெயர்களை எனக்குத் தெரியாது. எனவே ரெ. கார்த்திகேசு பற்றிய இச்சிறு குறிப்பு அவசியமாகிறது. அறிமுகம் சற்று மிகையாகத்தோன்றினாலும் இச்சிறுகதைதொகுப்பிலுள்ள படைப்புகளை வாசிக்கிறவர்களுக்கு அறிவியல், சமூகமென்ற இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் ரெ.கார்த்திகேசுவின் ஆற்றலை புரிந்துகொள்ள உதவக்கூடும்.

நீர் மேல் எழுத்து என்ற இச்சிறுகதைதொகுப்பில்  நூலின் பெயரிலேயே அமைந்த ஒரு சிறுகதையோடு மேலும் இரண்டு அறிவியல் புனைகதைகள் இருக்கின்றன. பிறவற்றுள் மல்லி என்கிற சிறுமியை மையமாகக்கொண்ட நான்கு கதைகள் உளவியல் சார்ந்தவை, எஞ்சியுள்ள பிறகதைகள் நமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஆய்பவை. எல்லாவற்றிலும் தொடக்கத்தில் நான் கூறியிருப்பதுபோன்று உண்மை இருக்கிறது. கதைகளில் இடம்பெறுகிறவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல: நானும் நீங்களும், அல்லது நமது அண்டை மனிதர்கள். இதுவே ரெ.கார்த்திகேசுவின் கதைகளுக்கு ஒரு கனத்த வாசிப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

ஆக்கலும் அழித்தலும், மல்லியும் மழையும், என் வயிற்றில் ஓர் எலி , அமீருக்கு இரண்டு கேக் என்ற நான்கு கதைகளும் மல்லி என்ற சிறுமியின் உலகத்தைக் கண்டு பிரம்மித்து உடல் சிலிர்க்கும் அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்பவை.

பொதுவாக கதைகளில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு, அன்பு போன்ற சொற்களை விரித்து எழுத கணவன் மனைவி, காதலன் காதலி என்றிருக்கவேண்டுமென்ற விதியை கதை சொல்லி எளிதாக தகர்க்கிறார். இக்கதைகள் நான்கிலும் கதைசொல்லியும், கதை சொல்லியின் பேர்த்தியும் பிரதான பாத்திரங்கள். மல்லி மீதூறும் அன்பும் பரிவும், அவர் நெஞ்சக்குழியிலுள்ள வெறுமையை நிரப்ப உதவுகிறது. மழலைசெல்வத்தின் பெருமைகளை குறள்கள் மூலமாக அறிந்திருக்கிறோம். வள்ளுவன் தெரிவிக்கும் அன்புகூட ஒருவழிபோக்கானதே தவிர இருதரப்பு பரிவர்த்தனைகள்குறித்து பேசுவதில்லை. எனக்கென்னவோ வாசித்தபோது வள்ளுவனைக்காட்டிலும் குமரகுருபரும், மீனாட்சியும் நினைவுக்கு வந்தார்கள்.

‘என்னம்மா இப்படி பண்ணிட்டே’

‘ஆ’ னா எழுதினேன் தாத்தா’

‘ஐயோ மல்லி, என்னம்மா செய்ற?’

‘இது ‘ஆ’வன்னா தாத்தா’
(-ஆக்கலும் அழித்தலும்)

‘மல்லி, நேத்து கோழிதானே சாப்பிட்டீங்க? நல்லா இருக்குன்னு சொன்னீங்களே!”
நேத்து நல்லா இருந்துச்சி தாத்தா, இன்னைக்கு  நல்லா இல்லை!’

(மல்லியும் மழையும்)

குழந்தை மல்லிக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் இருதரப்பிலும் அவரவர் வயதுகேற்ப அன்பின் விசையும், நுட்பமும் மெல்லிய இழைகளாக வெளிப்படுகின்றன. இக்கதைள் புனைவு அற்ற உரையாடலுக்கு நம்மை அழைத்து செல்கின்றன எனலாம்.

மல்லி கட்டமைக்கும் உலகை தம்முடைய வயதும் அனுபவமும் கொண்டு மதிப்பீடுசெய்வதும் அம்மதிப்பீட்டில் தாம் தோற்பதும், அப்படி தோற்பதற்காகவே மல்லியின் அக உலகை அடிக்கடித் தட்டி திறப்பதும், ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோன்று கதை சொல்லி தமக்கு தேவையான அன்பு, உடமை, உணர்வுதேவைகளை மீட்டெடுக்கும் முயற்சி. புனைவிற்கும் அபுனைவுக்குமிடையேயான இந்த உரையாடல் யுத்தத்தில் வழக்கம்போல உண்மையே ஜெயிக்கிறது.

அறிவியல் கதைகள் பட்டியலில்: எதிர்காலம் என்று ஒன்று, நீர்மேல், எழுத்து மண்சமைத்தல் என மூன்றுகதைகள் இருக்கின்றன. ‘எதிர்காலம் என்று ஒன்று’, கதையைக் குறித்து சொல்ல எதுவுமில்லை. ‘சுஜாதா’வை நடுவராகக்கொண்டு ‘திண்ணை’யும் மரத்தடியும் நடத்திய அறிவியல் புனைகதைபோட்டியில், இரண்டாம் பரிசுபெற்ற கதை. தேர்வு செய்தவர் சுஜாதா. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் எல்லோருக்கும் வாய்க்காது. ரெ.கார்த்திகேசுவிற்கு வாய்த்தது. இத்தொகுப்பிலுள்ள பிறகதைகளும் திண்னையில் வந்தவை என்பதால் அவற்றை நண்பர்களின் மதிப்பீட்டிற்கு ஒதுக்கிவிட்டு பிறகதைகள் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.

அன்றாடம் சந்திக்கும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக்கொண்ட கதைகளில் உண்மை அறிந்தவர், கொஞ்சம் மனிதன், மௌனமாய் என்ற மூன்று கதைகளும் வாசகனுக்கு அப்பால் என்னிடத்தில் ஓர் எழுத்தாளனும் இருக்கிறா¡ன் என்பதால் மனதிற் சிறிது பொறாமையுடன் வாசிக்க வைத்தவை.

மௌனமாய் என்கிறை கதையைப்பற்றிய என்கருத்தை பதிவு செய்ய மறந்தாலும், உண்மை அறிந்தவர்.. கொஞ்சம் மனிதன் என்ற இருகதைகளைப்பற்றி எழுதியே ஆகவேண்டும்.  இக்கதைகளுக்கான தலைப்பை எள்ளலோடு ஆசிரியர் தேர்வு செய்திருக்கவேண்டும்.

முதல் கதையின் நாயகன் படித்த நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. இரண்டாவது கதை நாயகன் விளிம்பு மனிதன். முன்னவர் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்கிற பிரக்ஞையற்ற புத்தி ஜீவி யெனில், இரண்டாவது ஆசாமி தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறிவதாலேயே  பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

புத்திஜீவியை அறிமுகப்படுத்தும் முன் ஆசிரியர் அவர் வீட்டைப்பற்றிய முகவரியைக்கொடுக்கிறார்.

“வீட்டின் முன்பக்க இரும்பு கேட்  துருபிடித்துக்கிடந்தது. மெல்ல தள்ளினாள் சிவகாமி. மெதுவாக கிறீச்சிட்டுத் திறந்துகொண்டது. நாதாங்கி பொருத்தப்பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது.”

கணினிமுன் வேர் பிடித்துபோன புத்திஜீவிகள் நம்மிடையே நிறையபேருண்டு. வெளிஉலகில் என்ன நடக்கிறதென்று அறியாமல் கணிணி ஏற்படுத்திய மூளைவிபத்துகளால் முடங்கிப்போனவர்கள்.

இவரை விட்டுப்பிரிந்து இலண்டனில் இன்னொரு கணவருடன் வாழும் சிவகாமி தமது மகளின் திருமனத்திற்கு, அம்மகளின் தகப்பனான கணிணி பைத்தியத்தை அழைக்கவந்திருக்கிறாள். மேற்கத்திய உலகில் சர்வசாதாரணமாக காதில் விழும் உரையாடல்தான். ஆனால் ரெ. கார்த்திகேசுவின் சொற்களைக்கொண்டு வரிவடிவம் பெறுகிறபோது சுடுகிறது.

– இப்ப எல்லாம் ஷேவ் பண்றதே இல்லியா?

– வேஸ்ட் ஓ·ப் டைம்

– அப்படியென்ன கடுமையான நெருக்கடி உங்களுக்கு

– இதோ பாரு சிவா, இவரு ஹைடல்பர்க் யூனிவஸ்ட்டி பேராசிரியர். ஜெர்மனியிலிருந்து எங்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பியிருக்காரு;

– உங்களுக்குத் தெரிஞ்சவரா?

– நோ நோ நெட்லவந்த தொடர்புதான்

அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் தமக்கு Face book எண்ணூறு நண்பர்களுக்குமேல் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் உள்ளூர் நண்பர்களை மறந்துபோனார். அவர் வீடு காலி செய்தபோது உதவி செய்ததென்னவோ அவர் மறந்துபோன அந்த உள்ளூர் நண்பர்கள்தான். விரல் நுனியில் உலக நடப்புகளை அறிந்திருக்கும் நமக்கு சொந்தவீட்டில் என்ன நடக்கிறதென்ற பிரக்ஞையின்றி கணினி முன் உட்கார்ந்திருக்கிறோம்.

‘கொஞ்சம் மனிதன்’ கந்தசாமி வேறு இனம். விளிம்புநிலை மனிதன். படித்தவர்களையே உணர்ச்சி எளிதில் வெல்கிறபோது, படிக்காத கந்தசாமி என்னசெய்வான். ஜெயிலுக்குப்போன நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறான். ஜெயில் ஆசாமி ஒரு நாள் வெளியில் வரத்தானே வேண்டும் வருகிறான். தகவல் கந்தசாமிக்கு கிடைக்கிறது. நேற்றுவரை உணர்ச்சியை மேயவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அறிவு, விடுதலையான ஆசைநாயகியின் கணவனால் ஆபத்தென்றதும் புலம்புகிறது. மனித மனம் விசித்திரமானது. கழுத்தில் கத்தி இறங்கும்போதுகூட ஏதாவது நடந்து கத்தி இரண்டாக உடையுமென்று மனதார நம்பும்.

” ஒருவேளை அவன் மாறியிருக்கக்கூடும்….. ரெண்டுவருஷம் ஜெயிலிருந்து வந்திருக்கிறான். நிறைய உதை வாங்கியிருப்பான். பலவீனமாயிருப்பான். திருந்தியிருப்பான் ஆகவே நான் சொல்லுவதைப் புரிந்துகொள்வான்”

ஜெயிலிருந்து வெளிவந்த ஆசாமி தண்டிப்பதற்கு முன்பாக ஆசிரியர் ‘நெஞ்சோடு கிளத்தல்’ என்கிற உத்தியைக்கொண்டு கந்தசாமியைக் கூடுதலாகவே தண்டிக்கிறார். இவனை தண்டிக்க வரும் நண்பனுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன. இங்கே அதைச் சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஒரு நல்ல சிறுகதைக்கான அத்தனை இலட்சனங்களும் கொண்டகதை.

இத்தொகுப்பில் மௌனமாய்  என்ற சிறுகதையும் முக்கியமானதொன்று. பிறகதைகள் ரெ.கார்த்திகேசு மனம் தோய்ந்து எழுதியகதைகளல்ல என்பதுபோலிருந்தன. குறிப்பாக சுந்தரராமசாமியின் கதையொன்றிர்க்கு  எதிர்பாட்டுபோல எழுதியிருந்த கதையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் கதையில் உணரமுடிந்த இயல்பான கோபமே ரெ. கார்த்திகேசு ஓர் தேர்ந்த படைப்பாளி என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள போதுமானதாக இருந்தது.
——-

நீர்மேல் எழுத்து
விலை RM25.00
ஆசிரியர்: ரெ. கார்த்திகேசு
உமா பதிப்பகம்
85 CP, Jalan Perhention, Sentful,
51100 Kualo Lumpur, Malaysia
Fax 03 4044 0441
e.mail: umapublications@gmail.com
———————————-

Series Navigationபொறுப்பு – சிறுகதைதரிசனம்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *