சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்

This entry is part 8 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

 

எனக்கு மிக மிக பிடித்த சுஜாதா நாவல்களில் ஒன்று…நிலாநிழல் !  இருபது வருடத்துக்கு முன் வாசித்து இந்த நாவல். தின மணி கதிரில் தொடராய்  வந்த நினைவு. எங்கள் ஊர் நூலகத்திற்கு வாரா வாரம் தவறாமல் இந்த கதை வாசிக்கவே சென்று விடுவேன்.

 

கதையின் நாயகன் வயது தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கும் (19 அல்லது 20 ). மேலும் அவனை போல கிரிக்கெட் வெறி அந்த வயதில் இருந்தது. இதுவே கூட புத்தகம் மீது ஈர்ப்பை தந்தது எனலாம். ஆனால் அதையும் தாண்டி கிரிக்கெட் ஆட்டங்களை ஒரு நாவலில் இவ்வளவு சுவாரஸ்யமாய் யாரும் தந்ததே இல்லை. அது தான் இந்த நாவல் இன்று வரை பலராலும் நினைவு கூறப்பட காரணம் !

 

கதையின் முதல் வரியும் பாராவும் இன்னும் கூட எனக்கு அப்படியே நினைவு இருக்கிறது

 

அதிகாலை முகுந்தன் கனவு கண்டான். இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. 18 ரன் அடிக்க வேண்டும். இம்ரான் கான் பந்து வீச வருகிறார். ” அதெப்படி ஸ்ரீரங்கம் மேட்சில் இம்ரான்கான் பந்து வீசலாம்?” என முகுந்தன் கேட்க, “கடைசி ஓவர் யார் வேணும்னா போடலாம்னு இப்போ ரூல் வந்திடுச்சு என்கிறார்கள். முதல் மூன்று பந்து முகுந்தால் தொட முடியலை. மூணு பந்து. 18 ரன். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தை முகுந்த் சிக்சர் அடிக்கிறான். ஆறாவது பந்தை வீச இம்ரான் ஓடிவரும்போது வேலைக்காரியால் தூக்கத்தில் இருந்து எழுப்ப படுகிறான் முகுந்தன்.

 

முதல் வரியிலே கனவு என்று சொல்லப்பட்ட போதும், அந்த கடைசி பந்து முடியாமல் கனவு கலைந்ததே என நாமும் வருந்துகிறோம். இங்கு துவங்கிறது முகுந்துடன் சேர்ந்த நம் பயணம்.

 

பதின்ம வயது பையனுக்கு இருக்கும் அதே ஆர்வங்கள், பிரச்சனைகள் முகுந்தனுக்கும் உண்டு. அவன் கிரிக்கெட், கிரிக்கெட் என சுற்றுகிறானே என திட்டுகிறார் அப்பா. (எந்த அப்பாவுக்கு தான் மகன் கிரிக்கெட் பார்ப்பது பிடித்திருக்கிறது?) அப்பாவை ஏமாற்றி விட்டு மாநில அளவில் கிரிக்கெட் ஆட பம்பாய் பயணமாகிறான் முகுந்த். துவக்கத்தில் டீம் பாலிடிக்சால் அணியில் இடம் கிடைக்கா விட்டாலும், ஒரு முறை substitute ஆக இறங்கி பீல்டிங்கில் கலக்குகிறான். பின் தொடர்ந்து ஆட ஆரம்பிக்கிறான். அதன் பின் அவனது ஆட்டம் அசத்துகிறது. தனது ஆட்டத்தால் அந்த டோர்னமெண்டை கலக்கி விட்டு ஸ்ரீரங்கம் வருகிறான் முகுந்த். அப்பாவுக்கு இவன் ஏமாற்றி விட்டு பம்பாய் போனது தெரிந்து விடுகிறது. அவர் என்ன செய்தார், முகுந்த் இறுதியில் என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதையின் இறுதி பகுதி!

 

சுஜாதா இந்த புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி :

 

“உன்னிப்பாகப் படித்தால், இந்தக் கதையின் மையக் கருத்து கிரிக்கெட் அல்ல என்பது தெரியும். நாம் எல்லோருமே வாழ்வில் பட்டென்று ஒரு கணத்தில் அறியாமை என்பது முடிந்து போய் ஒருவித அதிர்ச்சியுடன் பெரியவர்கள் உலகுக்குள் உதிர்க்கப்படுகிறோம். அந்தக் கணம் எப்போது வரும் என்பது சொல்ல இயலாது. இந்தக் கதையில் முகுந்தனின் அந்தக் கணம் என்ன என்பதை வாசகர்கள் யோசித்துப் பார்க்கலாம். அதைச் சிலர் தரிசனம் என்பார்கள், நிதரிசனம் என்பர், ஒரு விதமான அனுபவம் என்பர். ஏதாயினும் நான் முன்பு சொன்ன ‘இழப்பு‘ எப்படியும் இருந்தே தீரும். உங்கள் வாழ்க்கையையே யோசித்துப் பாருங்கள்.

 

எப்பொழுது நீங்கள் அறியாமையை இழந்தீர்கள், எப்போது நிஜமெனும் பூதத்தைச் சந்து மூலையில் சந்தித்தீர்கள், எப்போது கவிதைகளும், சினிமாப் பாடல்களும் அர்த்தமற்றுப் போய் போஸ்டல் ஆர்டரும், ஜெராக்ஸ் பிரதிகளும் முக்கியமாய்ப் போயின ? எப்போது உறவுகள் கொச்சைப்படுத்தப்பட்டு, வியர்வை வீச்சமும், பொதுக் கழிப்பிடங்களையும் ஒப்புக் கொள்ளத் துவங்கினீர்கள் ? எப்போது பொய், துரோகம், அன்பிழப்பு, பிறர் வாய்ப்பைப் பறித்தல் போன்ற அத்தியாவசியப் பாவங்களில் ஒன்றை முதலில் செய்தீர்கள் ?

 

அப்போதுதான் அந்த இழப்பு ஏற்பட்டது.

***

முகுந்தனுக்கு லவ் இண்டரெஸ்ட் ஆக லல்லி என ஒரு சொந்த கார பெண்ணும் உண்டு ! டீன் ஏஜில் வரும் காதல், மற்றும் தடுமாற்றம் இந்த பாத்திரம் ஊடாக வெளிப்படும்.

 

முதலிலேயே சொன்ன மாதிரி இந்த அளவு கிரிக்கெட் மேட்சை விரிவாய் சொன்ன நாவல் இதுவரை கிடையாது. மேட்சில் முகுந்தின் ஒரு ஓவரை சுஜாதாவின் வரிகளில் படியுங்கள்

 

புது பாட்ஸ்மன் கார்டு வாங்கிக்கொண்டு இங்குமங்கும் பார்த்துவிட்டு முகுந்தன் போட்ட நான்காவது பந்தை லெக் சைடில் ஹீக் பண்ண எண்ணிக் கோட்டை விட ஸெட்ரிக் ஓரத்தில் டைவ் அடித்து பை போகாமல் பிடித்தான். முகுந்த் நம்பிக்கையில்லாமல் ஸ்டெப் எடுத்து கர்ச்சீப்பை அடையாளம் வைத்து ஓடிவந்து கொஞ்சம் பேஸை அடக்கிப் போட்டுப்பார்த்தான். உடனே லெங்த் கிடைத்து முதல் பந்து அரைக்கால் இன்ச்சில் ஆப் ஸ்டம்பை தொடாமல் விட்டது. இரண்டாவது ஷார்ட் பிட்சாகிவிட் அதை உடனே அந்த பாட்ஸ்மேன் விளிம்புக்கு வெளியே அனுப்பிவிட்டான். அடுத்தது லெக் அண்ட் மிடிலில் பிட்சி ஆகி வில்லாக வளைந்து மட்டை விளிம்பைச் சந்தேகத்துக்கு இடமின்றித் தொட்டுவிட்டு முதல் ஸ்லிப்பில் ஷாவின் பத்திரமான கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது.

***

அப்பப்பா ! நம்மை அந்த கிரவுண்டுக்கே அழைத்து போய் விடுகிறார் ! என்னா டீட்டைளிங் !

 

கிரிக்கெட் பற்றி மட்டுமல்ல, மும்பையின் பரபர வாழ்க்கை, அங்குள்ள பயணம் எல்லாமே இந்த நாவலில் மிக அழகாய் சொல்லப்பட்டிருக்கும் !

 

தலைவரின் மிக சிறந்த நாவல்களில் ஒன்றான இந்த புத்தகத்தை அவசியம் வாசியுங்கள்…குறிப்பாய் கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்டோருக்கு இந்த நாவல் மிக இனிக்கும் !

 

Series Navigationபிராணன்கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
author

மோகன் குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *