மகாநதியின் இரு கரையிலும் இருந்த இரண்டு முகாம்களில், முதலில் ஹிராகுட்டிலும் பின்னர் புர்லாவிலும் நான் கழித்த, 1950 முதல் 1956 வரையிலான ஆறு வருடங்களில், நான் பழகி அறிந்த என்னிடம் அன்பு செலுத்திய நண்பர்களில் நான் மிகவும் வியந்த மனிதர் சீனிவாசன். ஹிராகுட் அணைக் கட்டில் இருந்த குத்தகைக் காரர் ஒருவரிடம் அக்கௌண்டண்ட் ஆக வேலை பார்த்து வந்தார். எப்படி அவருடன் பரிச்சயம் ஏற்பட்டது, எப்படி அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது, என்பதெல்லாம் இப்போது என் நினைவில் இல்லை. முதலில் அவருடன் பரிச்சயம் ஏற்பட்ட போது, அவர் வேலை பார்த்து வந்த குத்தகைக் காரர், அணைக்கட்டின் தேக்கத்திலிருந்து தண்ணீரைப் பாசனத்துக்கு எடுத்துச் செல்ல இரு பெரிய கால்வாயகள் தோண்டிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு கால்வாய் குத்தகையை சீனிவாசன் வேலை பார்க்கும் குத்தகைக்கார எஞ்சினீயர் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் புர்லா விலிருந்து இருபது முப்பது மைல் தூரத்திலிருந்த ஒரு கிராமத்தில், சிப்ளிமாவோ அல்லது பர்கரோ தெரியவில்லை, அந்த கிராமத்தில் இருந்து வந்தார். அவ்வப்போது புர்லாவில் இருந்த தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டியிருந்த சமயங்களில் தான் அவர் எனக்கு பரிச்சய மானார். இந்த பரிச்சயத்தால், அவர் புர்லா வருங்காலங்களில் என்னோடு தங்குவது என்ற பழக்கம் ஏற்பட்டது. மிகவும் சுவாரஸ்யமான மனிதராகவும் வித்தியாசமான சிந்தனைகளும் கொண்டவராகவும் என் அறை நண்பர்கள் அவரைக் காணவே, அவர் வரவும் எங்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப் பட்டது. பின்னர் அவர் வேலை பார்த்த குத்தகைக்காரர் புர்லாவிலேயே தன் அலுவலகத்தை மாற்றிக்கொள்ளவே, அவர் நிரந்தரமாக எங்களுடனேயே தங்கத் தொடங்கினார்
ரொம்பவும் கூர்மையான புத்தியும் வாக்கு சாதுர்யமும், வித்தியாசமான பார்வையும் கொண்டவர். அவரது நட்புணர்வைப் புரியாதவர்கள் மனம் புண்படுவதுண்டு ஆனால் சீனிவாசன் அதையெல்லாம் பொருட் படுத்துவதில்லை. அவரை மாற்ற இயலாது. ஒரு முறை அவர் சொன்னது என்னவோ, வேலுவைப் புண்படுத்திவிட்டது. வேலு கோபத்தில் பேசாமல் இருந்தார். சினிவாசன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. “சரி அப்படியே இருந்துக்கோ” என்ற பாவனையில் இருந்து விட்டார். ஒரு சமயம் வேலுவுக்கு எங்கோ நல்ல அடி. வலியால் தவித்தார். ஆலிவ் ஆயில் ஒத்தடம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று அங்கிருந்த ஒரு நாட்டு வைத்தியரிடம் கேட்டு தேவசகாயம், தான் வேலை பார்த்து வந்த Chief Medical Officer-இடமும் அதை உறுதிப்படுத்தி வந்தார். ஆனால் ஆலிவ் ஆயில் எங்கு கிடைக்கும்? அது என்ன ஆலிவ் ஆயில்? யாரும் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. மறுநாள் சீனிவாசன் ஒரு ஆயில் கானைக் கொண்டு வந்து வேலு முன் வைத்தார், நாங்கள் எல்லாம் பார்த்திருக்க. “இந்தாய்யா ஆலிவ் ஆயில். வேண்டியது மசாஜ் பண்ணிக்க.” என்றார். என்னய்யா இது ஒரு கான் முழுக்க ஆலிவ் ஆயில், ” இதை என்ன செய்வது?. மசாஜுக்கு எவ்வளவு வேணும்.? இதை என்ன செய்வது?” என்றோம். அதற்கு சீனிவாசன், “ இனியும் வேலுவுக்கு அடி படாது, வலிக்காது என்று என்ன காரண்டி? இல்லை நாம தான் யாராவது எங்காவது விழ மாட்டோமா?” அப்போ ஒவ்வொரு தடவையும் எங்கேடா ஆலிவ் ஆயில்? என்று தேடிக்கொண்டு போகணுமா? இப்போ கிடைச்சிருக்கு. இருக்கட்டுமே ஸ்டாக்கில்.” என்றார். எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. வேலுவும் வலியை மறந்து சிரித்தார். அவர் கோபம் அடங்கிவிட்டது தெரிந்தது. “ கொஞ்சம் சிரிப்பு அடங்கியபின், மறுபடியும், சீனிவாசன், “மத்தவங்களுக்கும் கொடுக்கலாம். அடுத்த வீட்டு கிழவன் என்னிக்கு கால் தடுக்கித் தான் விழுவானோ, இல்லை, கட்டில்லேர்ந்து தான் விழப்போறானோ, பாவம், அவனுக்கும் கொடுக்கலாம்.” என்றார். அந்த நிமிஷம் வெடித்த சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆயிற்று. பின் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்.
அடுத்த வீட்டில் இருப்பது ராம் சந்த் என்னும் என் அலுவலக சகா. அவ னுடைய 60 சொச்சம் வயதில் அப்பா, 55 சொச்சம் வயதில் அம்மா, பின் ஒரு குட்டித் தங்கை அவளுக்கு 10 வயதிருக்கும். ஒரு நாள், அவன் அம்மா யாரிடமோ முனகிக்கொண்டிருந்தாள். “ ஸாடே வோஹ் ராத்தி படே தங் கர்தேன. மேனு ஸோனே நஹி தேந்தே. மைம் கீ கரான் தஸ்?” (என்னோட அவர் ராத்திரி ரொம்ப தொந்திரவு பண்ணுகிறார். என்னத் தூங்க விடறதில்லே நான் என்ன செய்யட்டும் சொல்?” என்று. கேட்டவளும் அதைச் சாதாரணமாக, ”ஏதோ கத்தரிக்காய் விலை அதிகமாயிட்டது” என்று புகார் சொல்லக் கேட்பது போல வெகு சகஜமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அங்கும் அதே பிரசினையோ என்னவோ. என் காதில் விழுந்த இந்த முனகலை அறை நண்பர்களிடம் ஒரு நாள் சொல்லி யிருக்கிறேன். கிழவன் ரொம்ப தாட்டியானவன். கிழவி தான் ஒடிந்து விழுவது போல் இருப்பாள். அவ்வப்போது நாங்கள் இதைச் சொல்லிச் சொல்லி எங்களைக் உற்சாகப்படுத்திக் கொள்வோம்.
இந்த ஆலிவ் ஆயில் செய்த மாயம், சீனிவாசன் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. வேலுவிடம் கசப்பும் காட்டவில்லை. வேலுதான் சீனுவாசனைப் புரிந்து கொண்டு பழையபடி சினேகத்துடன் பழக ஆரம்பித்தார், பழைய கசப்பை மறந்து.
அவர் வேறு ஒரு காம்பில் வேலை பார்த்தபோது அடிக்கடி புர்லா வரும்போதும் சரி இங்கு நிரந்தரமாக வந்து என்னோடு தங்கி இருந்த போதும் சரி, எல்லோரும் சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போவோம். இரண்டாவது ஆட்டம் தான். எல்லோரும் சைக்கிளில் சம்பல்பூருக்கு போக 10 மைல், இரவு ஒரு மணிக்கு மேல் திரும்பி வர 10 மைல். எல்லோருக்கும் சைக்கிள் கிடைப்பது கஷ்டமாக இருக்கவே, தன் கண்டிராக்டரின் ஜீப் ஒன்றை எடுத்து வந்துவிடுவார். பெட்ரோல் இல்லையென்றால் நாங்கள் போட்டுக் கொள்ளவேண்டும். அவ்வப்போது, சீனிவாசன் போலவே வெளியூர் காம்பில் டிவிஷனல் அக்கௌண்டண்டாக இருந்த ஒரு பெரியவரும் எங்களுடன் சேர்ந்து கொள்வார். சீனிவாசன் போலவே அவரும் தாராள சுபாவம். சீனுவாசன் தன்னிடம் பணம் இருக்கும் வரை செலவழிப்பார். இல்லையென்றால் மற்றவர்கள் தான் கொடுக்கவேண்டும். கொடு என்று சொல்லமாட்டார். ஆனால் அது இயல்பாக நடக்கும். அவர் கொடுப்பதும் தான் அதுபற்றிய பிரக்ஞை யாருக்கும் இல்லாது வெகு இயல்பாக நடக்கும்
சீனுவாசன் நிறைய படித்த மனிதர். விசாலமான அறிவு படைத்தவர். எத்தனையோ பெரிய புகழ் பெற்ற புள்ளிகளைத் தகர்த்தெறிந்து பேசுவார். அதற்கு அவரிடம் ஒரு நியாயம், பார்வை இருக்கும். என் புத்தகங்களை ஆர்வத்துடன் பார்ப்பார். அவற்றில் அவருக்குப் பிடித்தமானவை என்றும் உண்டு. கதை நாவல் என்றால் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் சரி அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. ரஸ்ஸலின் புத்தகங்களைப் பார்த்ததும் அவர் கண்கள் விரியும். ஏதானாலும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் சுபாவம் அவரது. ஏதாவது வேண்டியிருந்தால், அது அவரிடம் இல்லையானால், அங்கு யாரிடமும் இருப்பதாகப் பார்த்தால், அவர் சொல்லாமல் கொள்ளாமல் எடுத்துக்கொண்டு விடுவார். ”அட என்னத்துக்கு இருக்கு, வேண்டிய சமயத்துக்கு எடுத்துக்க வேண்டியது தான். யார்கிட்டே இருந்தா என்னய்யா?
ஒரு சமயம் அறையில் யாருடையதோ ஹேர் ஆயில் பாட்டிலில் எண்ணை இருக்கும் மட்டத்தில் பென்ஸிலால் மெல்லிய கோடு போட்டிருந்தது. அது சீனிவாசன் கண்ணில் பட்டு, சிரித்துக் கொண்டே சொன்னார்: “இது யாருது? கோடுபோட்டு வச்சிருக்கார் பார். அது சரி. வேறே யாராவது இதை எடுத்தா கண்டு பிடிச்சிடலாம்னு கோடு போட்டிருக்கார். ஆனா யார் எடுத்தான்னு இந்த கோடு சொல்லுமோ?” என்பது அவர் கேள்வி. ஆனால் இதற்கும் மேல் சென்று அந்த விஷயத்தைப் பெரிது படுத்தவில்லை. அதோடு போச்சு அது. ஒரு சமயம் நான் துணிக்கடையில் சட்டைக்குத் துணி எடுத்துக்கொண்டிருந்த போது அவர் கண்ணில் அவருக்குப் பிடித்த ஒரு பீஸ் படவே, தனக்கும் ஒரு ஷர்ட் பீஸ் கிழிக்கச் சொல்லி வாங்கிக்கொண்டார். அவரது சுபாவம் தெரிந்தும் மற்றவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.,
அது போலத் தான் தான் படித்ததையும் தான் அறிந்ததையும் பகிர்ந்து கொள்வதில். சாமிநாதன் இந்தப் புத்தகம் எலலாம் படிக்கிறானே, நீங்க யாராவது படிக்கறதுண்டா? என்று கேட்டார் முதல் தடவை அவர் அறைக்கு வந்த புதிதில். தமிழ் புத்தகங்களைத் தான் படிப்பார்கள். மற்றதைத் தொடுவதில்லை. “சரி. இருக்கறதை எல்லாரும் சேந்து படிக்கலாமே” என்றார்.
கோடைகாலம். ஒரிஸ்ஸாவில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். அலுவலகம் காலை 7.30 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். பகல் 1.30 மணி வரை. அலுவலகத்தில் ஜன்னல், கதவுகள் எல்லாம் கஸ்கஸ் தட்டிகள அடைத்துத் தொங்கும். அவை அடிக்கடி தண்ணீர் ஊற்றப்பட்டு ஈரமாக்கப்படும். மின் விசிறிகள். சுற்ற வெப்பம் கொஞ்சம் தணியும். அவ்வளவு தான் 50-களில் சாத்தியம் ஏசி சாதனங்கள் அன்று கிடையாது. பகல் 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்பினால், மின் விசிறிக்கடியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு ஈரத் துணியைப் பரத்தி அதன் அடியில் படுத்துக்கொள்வோம். அது அடிக்கடி காய்ந்து விடும் துணியை திரும்ப நனைத்துப் பரப்பிக்கொள்ள வேண்டும். இது சள்ளை பிடித்த வேலை. ஆகவே, சில சமயங்களில் நான் அலுவலகம் முடிந்ததும் பகக்த்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கே திரும்பிவிடுவேன். மனம் விரும்பியபடி, அல்லது தேக நிலைப்படி, படிப்பதோ அல்லது மேஜைமேல் படுத்துத் தூங்குவதோ நடக்கும். பின் மாலை ஐந்து மணி அளவில் அறைக்குத் திரும்பிவந்து மறுபடியும் ஒரு குளியல்
சீனிவாசன் வந்த பிறகு அவர் அறையில் இருக்கும் இன்னும் சிலரையும் தயார்படுத்தி வைத்திருப்பார். நான் அலுவலகத் திலிருந்து திரும்பி குளித்து முடிந்ததும், எல்லோரும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்புவோம். புர்லாவை விட்டு வெளியே ஒரு மைல் தூரம் நடந்தால் ஒரு பக்கம் மரங்களும் மறுபக்கம் வயல்களுமாகக் காட்சி தரும் நீண்ட சாலையை அடைவோம். வலது பக்கம் நடந்தால் மூன்று மைல் தூரத்தில் அணைகட்டுமிடத்துக்கு அந்த சாலை இட்டுச் செல்லும் இடது பக்கம் திரும்பி நடந்தால் மரங்களும் வயல்களுமான குளிர்ந்த வெளி. ஒரு மதகின் மேல் அல்லது புல்வெளியில் உட்கார்ந்து கொள்வோம். ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்டுக்கொள்வோம். இவை சிறிய புத்தகமாக இருக்கும். பெர்னார்ட் ஷாவின் Androcles and the Lion, Major Barbara, Pygmalion, Doctors Dilemma போன்றவை. ரஸ்ஸலாக இருந்தால், எளிதாகப் படிக்கக் கூடிய கட்டுரைகள் அடங்கிய Unpopular Essays, Sceptical Essays, Portrait from Memory and other Essays இப்படி. ”போய்யா, நான் வரலைய்யா? என்று யாரும் சொன்னதில்லை. முதலில் சும்மா வந்து சேர்ந்து, பின்னர் சுவாரஸ்யத்துடன் பங்கு கொண்டவர்கள் உண்டு. இப்படி பல ரகங்கள். மனித சுபாவத்தை ஒட்டி. ஏழு ஏழரை மணி வரை வெளிச்சமாகத் தான் இருக்கும். பின்னர் திரும்பி வீடு வந்து சாப்பிடக் கிளம்புவோம். பின்னர் சீனுவாசனே தனக்குத் தோன்றியதைச் சொல்வார், அவர் பேச்சைத் தொடங்கியதும் சிலருக்கு தமக்குப் பட்டதைச் சொல்லத் தோன்றும். இது எல்லா நாட்களும் நடக்காது. சினிமாவுக்குப் போகும் நாள் அல்லது டிவிஷனல் அக்கௌண்டண்ட் “சார்” வரும் நாட்கள் விட்டுப் போகும். கோடை காலம் முழுதும் அனேக மாக இது நடக்கும். சீனுவாசன் எங்களுடன் இருந்த வரை. அவர் புர்லாவில் இருந்த வரை. அவர் ஒரு வருடம் தான் ஒரிஸ்ஸாவில் இருந்தார்.
சீனுவாசன் எங்களுடன் இருந்த போதே பாதி என்னும் ஒரு ஒடியாக் காரருடனும் எங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டு அது பின்னர் நாட்கள் செல்லச் செல்ல மிக நெருக்கமான ஒன்றாக மாறியது. முதலில் அவருடன் பரிச்சயம் எப்படி ஏற்பட்டது என்பதே நினைவில் இல்லை. ஹிராகுட்டில் இருந்த வரை சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போகும்போது கடைத் தெருவுக்கும் போய் அங்கு இருந்த ஒரே ஒரு சிறிய புத்தகக் கடையில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கி வருவேன். சிறிது பழக்கம் ஏற்பட்டதும் எனக்கு வேண்டிய புத்தகங்களைச் சொன்னால் கடைக்காரன் வாங்கி வைத்திருப்பான். எல்லாம் புர்லாவில் பாதியின் சினேகம் கிடைக்கும் வரை தான்.
பாதிக்கு 35 அல்லது 40க்குள் இருக்கும் வயது. சம்பல்பூரிலிருந்து சைக்கிளில் வருவார். தூய வெள்ளை நிற ஜிப்பாவும் பஞ்சகச்சம் கட்டிய தோத்தியுமாக வருவார். குறைந்தது தினம் 30 மைல் சைக்கிளில அலைகிறவர் எப்படி இவ்வளவு தூய வெள்ளை உடையுடன் எப்போதும் காட்சி தர முடிகிறது!, எப்படி எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க முடிகிறது! என்பது ஆச்சரிய மான விஷயம். சைக்கிள் ஹாண்டில் பாரின் இருபக்கங்களிலும் புத்தகங்களும் பத்திரிகைகளுமாக பைகள் தொங்கும். அவர் மனைவி சம்பல்பூரில் எங்கோ ஒரு ஹைஸ் கூலில், அது கல்லூரியாகவும் இருக்கலாம், ஆசிரியையாக வேலை பார்க்கிறாராம். இவர் ஹிராகுட்டுக்கும் புர்லாவுக்கும் சைக்கிளில் புத்தகங்களைச் சுமந்து கொண்டு வேண்டுகிறவருக்கு விற்று வருகிறார். நாங்கள் எந்த புத்தகம் சொன்னாலும் 10 அல்லது 15 நாட்களில் அவர் கொண்டு சேர்ப்பார். அவரே பல புத்தகங்களை, ஆசிரியர்களை சிபாரிசு செய்வார். இவரோ மிகவும் படித்தவராகத் தெரிகிறார். கட்டாயம் கல்லூரிப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். மனைவி ஆசிரியையாக வேலை பார்க்கிறார் இவர் ஏன் சௌகரியமான வேறு வேலை பார்க்கக் கூடாது. இவ்வளவு உடல் உழைப்பும் வேண்டாது?. பணமும் மிக அதிகம் கிடைக்கும். புத்தகம் விற்று என்ன சம்பாதித்து விட முடியும்? இதில் இவர் மனைவிக்கு சம்மதம் தானா? இப்படி எத்தனையோ கேள்விகள்.
நாங்கள் அவரைக் கேட்டதில்லை. ஏதோ தவம் போல, வேண்டுதல் போல அல்லவா நடக்கிறது? .புத்த பிக்குகளைப் போல, தியாகப்பிரம்மம் போல, அவர்களுக்கு பிக்ஷை எடுத்து ஜீவன நடந்தது. அப்படி நிர்ப்பந்தம் இல்லை இவருக்கு. தவசிகள் போல தன் பசிக்கு அல்ல, தன் நாட்களை கிடைத்த நேரத்தை தனக்குத் தோன்றிய வழியில், சுற்றியுள்ளோருக்கு பயன் தருவதாக சிரம ஜீவனமாக இருந்தாலும் செலவழிப்பது, என்று சபதமா என்ன? என்ன சம்பாத்தியம்?, தன் உழைப்புக்கான சம்பாத்தியம் தானா? என்ற கவலைகள் ஏதும் இல்லாது என்று தன் வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொண்டவர் போல.
என் பார்வையை, என் தேடலின் உலகை விஸ்தரித்தவர்களில் அவரும் ஒருவர். முதலில் C.E.M. Joad- எனக்கு அறிமுகப் படுத்தியது என் அலுவலக நண்பன் மிருணால் காந்தி சக்கர வர்த்தி. அதிலிருந்து தான் நான் Joad-ன் எளிய மொழியிலான அனைத்து தத்துவ விளக்கப் புத்தகங்களையும், Guide to Philosophy, Guide to Philosophy of Science, Guide to Philosophy of politics, படித்தேன். பின் அதிலிருந்து வில்டூரண்ட், ரஸ்ஸல் வைட் ஹெட் என்று என் எதிர்நின்ற பாதை நீண்டு சென்றது. ஒரு பெயரை, ஒரு புத்தகத்தைச் சொன்னால், அந்த இழையைப் பிடித்துக்கொண்டு நிறைய மற்ற புத்தகங்களையும் தேடிக்கொணர்ந்தவர் பாதி. Encounter என்று சொன்னதும் அவரால் உடனே அது மட்டுமல்லை., Hungarian Quarterly, Russian Literature போன்ற பத்திரிகைகளையும் அவர் எனக்குக் கொண்டு சேர்த்தார். என்கௌண்டரும் சரி, ரஷியன் லிட்டரேச்சரும் சரி விலை ஒரு ரூபாய் தான். என்கௌண்டரில் எனக்கு ஒரு புதிய பரந்த உலகம் விரிந்தது. ஸ்டீஃபன் ஸ்பெண்டர் என்னும் ஆங்கிலக் கவியின் ஆசிரியத்வத்தில், கவிதை மட்டுமல்ல, இலக்கியம் மட்டுமல்ல, ஐரோப்பிய தத்துவம், அரசியல், ஓவியம், என் எல்லாத் துறைகளையும் அது தன் பக்கங்களில் விரித்தது. அது பற்றியெல்லாம் நான் எழுதிய முதல் கட்டுரை, ”பாலையும் வாழையுமில்” எழுதியிருக்கிறேன். ரஷியன் லிட்டரேச்சர் எனக்கு வெகு சீக்கிரம் போரடித்து விட்டது. ஆனால் ஹங்கரியன் க்வார்ட்டர்லியை எனக்கு அறிமுகப் படுத்தி என் வாசற்படியில் கொண்டும் சேர்த்த பாதியை நன்றியுடன் நினவுகொள்ளவேண்டும். ஓரு நாள், மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்னிடம் Albert Schweitzer –ன் On the Edge of the Primeval Forest என்ற சுயசரிதையும் பிரயாண நூலுமான புத்தகத்தைக் கொடுத்து, “இதை இன்று இரவே படித்துவிட்டு காலையில் கட்டாயம் திருப்பித் தரவேண்டும்” என்று சொல்ல நான் அதில் மூழ்கியிருந்தேன். அந்த சமயம் பாதி வந்தார். சீனிவாசன் என்னிடம் சத்தமாக அவர் பாஷையில், Mr Half has come. என்றார்,. திரும்பிப் பார்த்தால் பாதி. சிரித்துக்கொண்டே நிற்கிறார். நான் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்ததால் தான் கவனிக்காததைப் புரிந்து கொண்டு என்ன படிக்கிறேன் என்று பார்த்தார். “அடுத்த தடவை உங்களுக்கு ஷ்வைட்ஸரின் ஒரு நல்ல புத்தகம் கொண்டு தருகிறேன். உங்களுக்குப் பிடிக்கும்,” என்றார். அவர் அடுத்த தடவை கொண்டு வந்த புத்தகம், ஷ்வைட்ஸரின், Indian Thought and its Development. ஷ்வைட்சர், படித்ததும் அறிந்ததும் கிறித்துவ மத போதனை மாத்திரம் அல்ல, தத்துவம், சங்கீதம், (நன்றாக பியானோ வாசிப்பார்), நாகரீகங்களின் க்ஷீணம், இப்படி நிறைய. இதையெல்லாம் மீறி அவர் ஒரு மருத்துவரும் கூட. மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அவர் சென்றது மதப் பிரசாரத்துக்கு அல்ல. மருத்துவ சேவைக்கு. அவர் இந்திய சிந்தனை பற்றிக் கொடுத்த புத்தகத்தில் திருக்குறள் பற்றி அவர் ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். பாதி என் ஆசான்களில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டில் ஆசான்கள் பாதியின் தோற்றத்திலும் இருப்பார்கள். சைக்கிளில் வந்து புத்தகங்கள் விற்பார்கள். மிருணால், சீனிவாசன் போலும் நண்பர்கள் வடிவிலும் வருவார்கள். எனக்கு வந்தார்கள். இதை எழுதும்போது, இந்த கணத்தில், பாதி எளிய தூய வெள்ளை பஞ்சாபி ஜிப்பாவும் தோத்தியும் அணிந்து சிரித்த முகத்துடன் என் முன் காட்சி தருகிறார். காலம் மறக்க விடவில்லை. அவரைக் கடைசியாக நான் பார்த்தது 1956 டிஸம்பர் மாதத்தில் ஏதோ ஒரு நாள்.
அவருக்கும் முன்னால் சீனிவாசன் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார் அவர் வேலை பார்த்த கண்டிராக்டரிடம் இருக்கப் பிடிக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, “அவன் சுத்த மடையன். அவன் கிட்ட எவன் வேலை பார்ப்பான். மெயின் டாமில் குத்தகை எடுத்து வேலை செய்கிறான். அவனுக்கு Hydro statics-ம் தெரியலை. hydro dynamics-ம் தெரியலை. தப்புத் தப்பா உளறான்.” எங்களுக்கு திகைப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது. அவரை இழக்கிறோமே. அவனுக்கு என்ன தெரிஞ்சா என்ன, தெரியாட்டா என்ன? கணக்கு எழுதணும் அவ்வளவு தானே சீனிவாசன்? என்று கேட்டால், ”என்னால் எல்லாம் மூடன் கிட்டே வேலை செய்யமுடியாது” என்றார் தீர்மானமாக..
சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தார். (அப்போது சைக்கிள் ரிக்ஷாதான் இன்னம் ஆட்டோ வரவில்லை) கடைசி வார்த்தையா, “இதோ பாருங்க. எல்லாருக்கும் தான் சொல்றேன். நான் லெட்டர் கிட்டர் எல்லாம் எழுதுவேன்னு நினைக்க வேண்டாம். இங்கே இருந்த வரை சந்தோஷமா இருந்தோம். போற இடத்திலே இன்னம் எத்தனை பேரை சந்திக்கப் போறோமோ. எல்லாருக்கும் லெட்டர் எழுதிண்டு இருக்கறது சாத்தியமில்லே. இப்படியே போனா எத்தனை நூறு, ஆயிரம் பேருக்கு எழுதவேண்டியிருக்கும். அதைத் தவிர வேறே காரியம் செய்ய முடியாது. ஞாபகம் இருக்கற வரைக்கும் இருக்கும். கஷ்டப்பட்டு நாம் ஒத்தரை ஒத்தர் ஞாபகம் வச்சிண்டு இருக்க வேண்டாம். நம்மை அறியாமே தானே நினைவிலே இருக்கறது இருக்கும். என்ன நான் சொல்றது புரியறதா?. வருத்தப்பட வேண்டாம். அதான் லோகத்திலே நடக்கறது.”
அது தான் அவரை நாங்கள் கடைசியாகப் பார்ப்பது என்று தான் நான் நினைத்தேன். மற்றவர்களுக்கு அது தான் கடைசி சந்திப்பு. எனக்கல்ல. 1958-ல், தில்லி சென்று இரண்டு வருஷங்களுக்குப் பிறகு என் கிராமம் உடையாளூரிலிருந்து மெலட்டூருக்கு பாகவத மேளா பார்க்கப் போனேன், நடையாக. கிராமத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில், ஒரு நதியைத் தாண்டினால் சந்திரசேகரபுரம். அங்கிருந்து மூன்று மைல் தூரத்திலோ என்னவோ பஸ் பிடித்தால் திருக்கருகாவூர். அங்கு என் ஒன்றுவிட்ட சின்ன மாமா ஒருத்தர் இருந்தார். அவரைப் பார்த்துவிட்டுப் போகலாம். என்று போனேன் அங்கு அவர் வீட்டு தாழ்வாரத்தில் உடகார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கு நுழைந்தவர் சீனிவாசன். எங்கள் இருவருக்குமே ஆச்சரியம். இருவருமே ஒருத்தரை மற்றவர் எதிர்பார்க்கவில்லை. எங்கள் உற்சாகத்தையும் பேச்சின் அன்னியோன்னியத்தையும் பார்த்த மாமா, என்னடா இது உனக்கு இவரைத் தெரியுமா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.
.
- மரியாதைக்குரிய களவாணிகள்!
- முன் வினையின் பின் வினை
- அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26
- வீணையடி நான் எனக்கு…!
- வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …
- பிராணன்
- சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்
- கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
- கதையே கவிதையாய்! (1) இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான்
- இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை
- முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா
- (98) – நினைவுகளின் சுவட்டில்
- என் இரு ஆரம்ப ஆசான்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம்
- வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!
- நூறு கோடி மக்கள்
- பிணம்
- இருள் மனங்கள்.
- இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி- ஒரு கண்ணோட்டம்
- நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு
- கங்கை சொம்பு
- ஆத்துல இன்னும் தண்ணி வரல….
- தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு
- NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும்
- முள்வெளி அத்தியாயம் -22
- மானுடர்க்கென்று……..
- அசோகன் செருவில்லின் “ டிஜிட்டல் ஸ்டூடியோ “
- பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை
- மலட்டுக் கவி
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39
- கருணைத் தெய்வம் குவான் யின்
- பழமொழிகளில் ‘வெட்கம்’
- படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)
- பெரியம்மா
- இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்