படைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)

This entry is part 37 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

(‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)

– வே.சபாநாயகம்.

திரு.பழமன் அவர்களுக்கு,

2008ல் ‘இலக்கிய பீடம்’ பரிசு பெற்ற உங்களது ‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் படித்தேன். கொங்கு நாட்டுப் பின்னணியில் நாவல்கள் எழுதிய திரு. ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்குப் பிறகு, அப்பகுதி கிராமத்து மக்களின் வாழ்க்கையை அசலாகவும் எளிய நடையிலும் பதிவு செய்திருப்பது நீங்கள்தான் என நினைக்கிறேன். போட்டிப் பரிசுக்கான நவீன நாவல் உக்திகள், சாமர்த்தியம் காட்டும் சொல் சிலம்பங்கள், திடீர்த் திருப்பங்கள், வாசகனை மிரட்டும் கற்பனைப் புனைவுகள் ஏதுமின்றி கிராமத்து சாதரணர்களின் இயல்பான நடைமுறை வாழ்க்கையை, வாசிப்பு சுகத்துடன் இந்த நாவலைப் படைத்திருப்பதற்கு முதலில் என் பாராட்டுகள்.
ஆர்.சண்முகசுந்தரம் அவர்களைப்போலவே கொங்குநாட்டு கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை கதைக்களனாகக் கொண்டு, ஆரவாரம் இன்றி வாசிக்க இலகுவாக உணரும் நடையில் எழுதி இருப்பது இன்றைய அப்பிரதேசப் படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

சந்திரன் என்கிற கதாபாத்திரம் பிள்ளைப்பருவம் முதல், வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஈடு கொடுத்து நகரத்துக்குப் பெயர்ந்து உழைப்பால் உயர்ந்து முன்னேறி முடிவில் சரிந்து, திரும்பவும் கிராமத்துக்கே வந்து சேரும்
ஆற்றாமையைக் காண, காட்சி காட்சியாக வாசகனை நீங்கள் கைப்பிடித்து அலுப்புத் தெரியாமல் அழைத்துப் போவது, எழுதி எழுதி மெருகேறிய உங்கள் எழுத்து வளத்தைக் காட்டுகிறது. முன்னுரையில் நீங்கள் எழுதியுள்ள உங்களுடைய வலி மிகுந்த இளமைப்பருவ வாழ்வனுபவங்கள், சந்திரனின் வாழ்க்கையை சித்தரிப்பதில் வெற்றிகாண வைத்திருக்கின்றன. அதன் காரணமாகவே பாசாங்கற்ற, அச்சுஅசலாக உள்ளது உள்ளபடியேயான கற்பன கலப்பற்ற படைப்பை உங்களால் தர முடிந்திருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் உங்களது இந்த நாவலில் அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட கோவை நகரத்தையும் அதன் சுற்றவட்டக் கிராமங்களயும் தரிசிக்க முடியும். இன்று அவை அடைந்திருக்கும் அதீத
மாற்றங்களை எண்ணி வியக்கவும் அவர்களை வைக்கும். அதையெல்லாம் காட்சிப்படுத்த உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளருக்கே சாத்தியம்.

அதோடு கோவை வட்டார கிராமத்து சாதாரணரது ஆசைகள்,வெறுப்புகள், லட்சியங்கள், விவசாயத்தில் காணும் ஏமாற்றங்கள், பொழுது போக்குகள், சடங்குகள் அனைத்தையும் முழுமையாக நாவலில் பதிவு செய்திருப்பது நீங்கள் எவ்வளவு அக்கறையோடு, மனித நேயத்தோடு உங்கள் மக்களின் வாழ்வைக் கூர்ந்து கவனித்து வந்துள்ளீர்கள் எனபதையும் காட்டுகிறது.

மேலும் கதை நிகழ்வுகளினூடே அன்றைய காலகட்டத்தில் மக்களிடையே இருந்த திராவிட கழகங்களின் தாக்கம் பற்றியும், சினிமா பார்க்கும் மோகம் மக்களிடையே அதிகம் இருந்தது பற்றியும் எல்லாம் பதிவு செய்திருப்பது ஐம்பதுகளின் கோவைப்பகுதியின் ஆவணமாக அமைந்துள்ளது. கோவை போன்ற பெருநகரங்களையும், அவற்றை ஒட்டி உள்ள சிற்றூர்களையும் இவை இரண்டுக்கும் இடையே அலைப்புறும் வறிய மனிதர்களின் அவல வாழ்வின் சோகத்தையும் படிக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது.

கதையின் நாயகனான சந்திரனின் பாத்திரப் படைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அவனது வாழ்க்கைதான் எத்தனை சோகமயமானது! 50 வயதுக்குள் எத்தனை மலையேற்றங்கள்! பள்ளி செல்லும் பருவத்திலேயே தந்தையை இழந்ததால் படிப்பைத் தொடரமுடியாமல் அவன் பலவேலைகளில் – சாராயம் காய்ச்சுவோருக்கு உதவியாளாக, பண்ணையார் ஒருவரது மாடுகளை மேய்ப்பவனாக, மாட்டுத்தரகனாக இருந்து, பின்னர் கோவை நகருக்குப் பெயர்ந்து சைக்கிள் கடையில் வேலைக்கமர்ந்து, அதையும் இழந்து பஸ் கண்டக்டராகி, பிறகு சொந்தமாய் லாரி வாங்கி அதையும் இழந்து நகர வாழ்வில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடுவதும், இடையில் காதல் திருமணம் செய்து கொண்டு பிறந்த மகளை அருமையாய் வளர்த்தும் அவள் அவனுக்கு சொல்லாமல் அலட்சியப்படுத்தி தன் வாழ்வைத் தானே தீர்மானித்துக் கொண்டதால் மனம் ஒடிந்து வாழ்க்கைப் போராட்டத்தில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, பரமபதபடத்தில் சிரமப்பட்டு உயரத்தில் ஏறிய சுருக்கில் பெரும் பாம்பின் தலையை அடைந்ததும் அதலபாதாளத்தில் சரிந்து விழுவது போல் மீண்டும் தொடங்கிய இடத்துக்கே கிராமத்து விவசாயத்துக்கே திரும்பும் அவனது பரிதாப வாழ்க்கை – ‘தாமஸ்ஹார்டி’ யின் ‘வெசக்ஸ் நாவல்’களில் விதியின் கையில் சிக்கிச் சீரழியும் பாத்திரங்களை நினைவூட்டுதாய் இருக்கிறது. கதையின் கட்டமைப்பும், கையில் எடுத்தால் வைத்துவிட முடியாத சுவாரஸ்யத்துடன் ஓடும் நடையும் பாராட்டுக்குரியவை.கொங்குவட்டார நாவல்கள் மேலும் பல வெளிவர உங்களது இந்த நாவல் தூண்டுதலாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 0

– வே.சபாநாயகம்.
நூல்: கள்ளிக்கென்ன வேலி
ஆசிரியர்: பழமன்.
வெளயீடு: தகிதா பதிப்பகம், கோயம்புத்தூர்.
விலை: 50-00

 

Series Navigationபழமொழிகளில் ‘வெட்கம்’பெரியம்மா
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *