பத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்

This entry is part 2 of 36 in the series 30 செப்டம்பர் 2012

கவிதாவஸ்தை வந்து எழுதும் கவிஞர்கள் மத்தியில் கவிதைகளை சுகமாகப் படிக்க முடிவது பத்மஜாவின் எழுத்துக்களில்தான். வலைப்பதிவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க கவிஞர் பத்மஜா.

தனிமையும் அன்பும் பரிவும் நிரப்ப இயலாத வெற்றிடங்களும் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளில் மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் இப்போதெல்லாம் பாதைகள் இருண்டு கிடப்பது குறித்து பெரும் சோகத்தைக் கிளர்விக்கிறது.

நாய்க்குடைகள் மலர்வது சிறுமியின் பருவமாற்றத்தை சட்டென்று புரிய வைக்கும் கவிதை. ஓவியப் பார்வையை ஓவியக்கண்காட்சிகளில் நாம் யோசித்து யோசித்துப் பார்க்கும் ஒரு ஓவியத்தின் மீதான மனிதர்களின் பார்வையைச் சொல்லிச் சென்றாலும் அதன் ஊடுபொருளாய் வரைந்தவனின் எண்ணப் போக்கிலேயே ஓவியங்களை நாம் புரிந்து கொள்ள முயற்சிப்பதும், அது நம் கண்ணோட்டத்தில் வேறொரு பொருள் தருவதுமான காட்சி .அத்துடன் ஓவியமே கண்கொண்டு பார்ப்பது வித்யாசமான பார்வை.

அன்பு நிரப்பின சோதனைக் கப்பல், ஆடியின் உள்ளேயும் வெளியேயுமான போராட்டம்,தீங்குளிர்,கல்லாட்டம்,வெளிச்சுவர் லவ், எரி நிழல்,பொறியில் சிக்குதல்,கன்பர்ம்ட், ஒற்றைக் காக்கை, ஒற்றை மீன், இல்லாத ராட்டினத்தில் சுற்றும் சிறுமியாய் கொஞ்சம் மனச்சுவர் விரிந்து வரைந்த ஓவியங்கள். சில அன்பாய், சில காதலாய் , சில இயலாமையாய், சில தனிமைத்துயராய்.

உடைந்த பற்களும் கூர் நகங்களும் கொஞ்சம் ட்ராகுலா டைப் கவிதை.துரோகத்தின் வலியை வெறுமே சுமக்காமல் திருப்பித் தாக்கப்படுவோம் எனத் தெரிந்தும் எதிர்பார்த்தே காத்திருக்கும் காட்சியை வரைந்தது. சூரிய வருடல் நாம் அன்றாடம் பஸ் நிலையங்களிலோ, பொது இடங்களிலோ காணும் பிச்சியை இனம் காண்பித்தாலும் சுயத்தையும் காண்பிப்பதாகப் பொருள் படுகிறது. மாடிப்படிப் பூனை, மனமும் புற்றும்,காலோவியம், எண்ணங்களின் உரையாடல்.

காக்கைக்குப் பிண்டமிடும் பாட்டி, ஆஸ்பத்ரியில் இருக்கும் அம்மாவை விட்டுவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் சினிமா பார்த்து வந்தது , ஒரு பெண் தாய்க்குப் பரிசளிக்கும் புடவை,சலன நதி, கதவிலக்கம் மறந்த வீடு எல்லாம் யதார்த்தம்.

எனக்குப் பிடித்த கவிதை எரியும் மௌனம். கண்களில் வார்த்தைகள் சிறகுப் பந்தாய்ப் பறப்பதும், அவை உதடு கிள்ளித்திரும்பச் சேர்வதும் பற்றி எரியும் மௌனமும் அழகு.இருளின் நிறம் கொண்டு இருளின் நிறம் தேடி அலைய வைத்தது ,உடல் பூவினைத் தேடிச் சுவைக்க முதுகில் சிறகு முளைப்பது அற்புதம்.

பத்மஜாவின் கவிதைகளிலேயே சொல்வதானால்

“புரிதலுடன் கூடிய புன்னகையைக் கண்டதும்..
சொல்ல வந்ததெல்லாம் சொன்னாற்போல்..
ஓர் உணர்வில் ,
வார்த்தைகளே இல்லா
வார்த்தைப் பரிமாற்றத்தில் நாம்.

புத்தகம்:- மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்.
ஆசிரியர் :- பத்மஜா நாராயணன்,
வெளியீடு :- டிஸ்கவரி புக் பேலஸ்
விலை – ரூ .70/-

Series Navigationஒரு கூட்டம் புறாக்கள்ஆலமரத்துக்கிளிகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *