தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஏப்ரல் 2020

யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான்

ஹெச்.ஜி.ரசூல்

Spread the love

 

இந்திரன் மொழிபெயர்ப்பில் 2002ல் வெளிவந்த கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் சில கவிதைகளும் இந்தியப் பழங்குடிகளின் வாழ்தலுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு நெருக்கத்தையும் முரணையும் பேசுகின்றன. ஜார்கண்ட் பகுதியில் வாய்மொழி மரபாக பேசப்படும் கவிதை ஒன்று யூகலிப்டஸ் மரத்திற்கும் உயிரினங்களுக்குமான உறவின்மையைக் மிக நுட்பமாக சித்திரப்படுத்திக் காட்டுகிறது.

 

யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான் -ஆனால்

ஆடுகள் மேயும் புற்களுக்கான

நிலத்தடி நீரை குடித்துவிடுகின்றன.

குளத்துக்குப் பக்கத்தில் பாறையில் கூட

அவை செழித்து வளர்கின்றன -ஆனால்

அவை உதிர்க்கும் இலைகள்

குளத்திலுள்ள நிறைய மீன்களை

சாகடித்துவிடுகின்றன.

 

ஒரிசாவின் சடுமொகன் பகுதியின் படைப்பாளி அல்சென்சஸ் எக்கா கவிஞரின் படைப்பு ஒன்று விலங்கினத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான முரணையும், இயற்கை உயிர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் மனித நடத்தையின் வன்முறையையும் எடுத்துப்பேசுகிறது. மான்குட்டியை சாகடிப்பதும், யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்துவதும் காட்டுபன்றியின் வயிற்றில் அம்பை பாய்ச்சி கொல்வதும், புறாவின் சிறகுகளை பிடுங்கி மெதுவாக சாகடிப்பதையும் மரணத்தின் மீதான பாடலாக எழுதிச் செல்கிறார். இதில் உடனடி மரணம், தள்ளிப்போடப்பட்ட மரணம் என்பதான இரண்டு கூறுகள் செயல்படுகின்றன. இந்த தள்ளிப் போடப்பட்ட மரணத்தின் அம்சமாக ஒரு உயிர் துடிதுடித்து மரணமடைவதை ஒரு நீண்ட காலவெளியில் பார்த்து ரசிக்கிற மனத்தின் குரூரத்தையும் வெளிப்படுத்திச் காட்டுவதாக இது அமைகிறது.

 

அவர்கள் மான்குட்டியின் காலைப்பிடுங்கிவிட்டு

அதைச் சாகவிடுகின்றனர்

யானையின் துதிக்கையை வெட்டி

சாகும் வரையில் ரத்தம் சொரிய விடுகின்றனர்

காட்டுப் பன்றியின் வயிற்றில் பாய்ந்து அம்பை

அப்படியே விட்டுவிட்டு

சூரியன் மறையும்வரை அதை கத்தி சாகவிடுகின்றனர் அது

மெதுவாகச் சாவதை கவனித்து கொண்டுள்ளனர்.

இது நீதியா?

Series Navigationஅக்னிப்பிரவேசம் – 4அம்மாவின் மோதிரம்

Leave a Comment

Archives