இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
E. Mail: Malar.sethu@gmail.com
இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர்.
இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்.
பொதுவாக திரைப்படப் பாடல்கள் காலத்தால் வென்று நிலைத்து நிற்கக் கூடிய ஆற்றல் உள்ளவை அல்ல. புதிய பாடல்கள் பிறக்கப் பிறக்கப் பழைய பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மறக்கப்படும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது அனுபவமும், கவிதை நயமும் தான் காரணம் ஆகும். கவியரசர் கண்ணதாசன் தான் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த சம்பவங்களை, காதல், ஏமாற்றத்தை, வேதனையை, சோதனையை, பக்தியை அப்படியே பாட்டாக வடித்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால் தமிழ் மக்களின் மனதில் சட்டென்று பதிந்து விட்டது. காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு.
தனது மொழி ஆளுமையினாலும், கற்பனை நயத்தாலும், கருத்துச் செழுமையாலும், எளிய நடையினாலும் தனது இசைப் பாடல்களை காலத்தால் அழியாத காவியங்களாக்கிவிட்டார் கவியரசர். எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில் செய்துவிட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். கூறவும் மாட்டான். ஆனால் கவியரசரோ ஒழிவு மறைவின்றி தனது திரையிசைப் பாடல்கள் வாயிலாகவும் பிற படைப்புகளின் வாயிலாகவும் தனது தவறுகளையும் உண்மைகளையும் தெரிவித்திருக்கின்றார். மேலும் தமிழக சட்டசபையில் அரசவைக் கவிஞராக இருந்து புகழ் பெற்றவர் கவியரசர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் மனிதரைப் பாடமாட்டேன்” என்ற அவரது கவிதையின் சிலபகுதிகள் அவரது உள்ளக்கிடக்கையைக் காட்டும் சிறப்பான பகுதியாகும்.
‘‘மானிடரைப் பாடிஅவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கை யான பதிகம்
மலையளவு தூக்கிஉடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வ மிருகம்’’
என்று பாடுகின்றார்.
இக்கவிதையின் தலையங்கமே நமக்கு ஒரு கதை சொல்லுகிறது. தான் மனிதரைப் பாடமாட்டேன் என்கிறார். அப்படியானால் என்ன அவர் மனிதரைப் பாடவேயில்லை என்று பொருளா? இல்லை. பாடிய மனிதர்கள் பின்பு அவர் மனதில் சிறப்பினை இழக்கும் சந்தர்ப்பத்தில் விரக்தியின் உச்சிக்குத் தள்ளப்பட்டு அங்கே தன் உள்ளத்தின் ஓலத்தை வெளிப்படுத்துகிறார்.
மனிதரை பாடுகிறாராம். ஆனால் பாடிய மனிதர் மாறிவிடும் போது ஏசுகிறாராம். ஆனால் இதிலிருந்து தான் மறுவதில்லையாம். ஏனெனில் இதுதான் தனது வழக்கமாம். புகழும் போது அவர்களை மலையளவு உயரத்தில் துக்கிக் கொண்டாடி, பின்னர், வலிக்கும்படித் தொப்பெனத் தரையில் போடும் தனது பாங்கை இம்மியளவும் மறைக்காது, தனது வார்த்தை ஜாலங்களில் வடித்திருக்கிறார் கவியரசர். கவிஞரின் தமிழ் அங்கு வலிக்கும்படி விழுவோருக்குக் கூட ஒத்தடம் கொடுக்கிறது.
“காலக்கணிதம்” எனும் கவிதையொன்றிலே
“கவிஞன் யானோர் காலக்கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது,
புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது”
என்று கவியரசர் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல இந்த உலகில் பல செயல்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. அதனால் நாம் கொண்ட கருத்து பிழையென்று உணர்ந்த மாத்திரத்தில் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை,
“மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல!
மாற்றம் என்பது மானிடத் தத்துவம்!
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.”
என்று கூறுகிறார்.
தாலாட்டுப் பாடிக் குழந்தையைத் தூங்க வைக்கிறாள் தாய். அவள் பாடும் தாலாட்டில் தமிழ் மணம் கமழ்ந்து வருகின்றது. தாய்க்குக் குழந்தை எப்படித் தெரிகின்றது தெரியுமா?
‘‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே வளர்
பொதிகை மலைதோன்றி
மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே’’
என தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம். தமிழுடன் குழந்தையை ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் போற்றுதற்குரியதாக உள்ளது. கவிஞரின் இக்கூற்று இளங்கோவடிகள் தமிழைப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடியாகப் போற்றும் தன்மையுடன் ஒப்புநோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
‘தான்’ என்ற சொல்லுக்குத் தமிழில் தனிப் பெருமை உண்டு. இராமச்சந்திர கவிராயர் ‘தான்’ என்ற சொல்லை வைத்து,
‘‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித்தானா?’’
என்று சித்திரம் ஒன்றை அமைத்துக் காட்டுகிறார். இந்தப் பாடலில் மயங்கிய கண்ணதாசன் தானும் ‘தான்’ என்ற சொல்லை வைத்து,
‘‘அத்தான்….என்னத்தான் அவர்
என்னைத் தான்…எப்படிச் சொல்வேனடி – அவர்
கையைத் தான் கொண்டு மெல்லத்தான் வந்து
கண்ணைத்தான் – எப்படிச் சொல்வேனடி!’’
என்ற பாடலைப் பாடுகின்றார்.
காலனைக் காலால் உதைத்த பாரதியார் போல் கண்ணதாசனும் துன்பம் வந்தால் அதைத் தூர எட்டி உதை என்று கூறுகிறார். துவளாத நெஞ்சுரமும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் இறுதியில் வெற்றிதானே. அப்படிப்பட்டவர்களை நெருங்கும் துன்பம் தானே துன்பப்பட்டு ஓடிவிடும். எதிர்காலம் இனிமையாகவும் வளமாகவும் அமைய வேண்டும் என்ற நம்பிக்கையும் நல்லாசையும் கண்ணதாசனுக்கு இருந்தது. வாழ்வை வரவேற்று அவர் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது நல்லெதிர்கால நம்பிக்கையே அவருக்குத் தெம்பும் திறனும் அளித்தன.
ஊக்கமும், உற்சாகமும் ஊட்டின. அதனால் தான் கண்ணதாசன்,
‘‘என்னடா துன்பம் அதை
எட்டி உதை வாழ்ந்துபார்
எப்போதும் உன்னை நம்பி’’(கண்ணதாசன் கவிதைத் தொகுதி4ப.84)
என்று நமக்கு ஆணையிடுகிறார். இதுவெறும் ஆணவத்தின் வெளிப்பாடல்ல. எதிர்காலத்தில் ஏற்றமுற வாழ வேண்டும் என்ற பெருமித நோக்கின் வெளிப்பாடாகும்.
மனித வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு விதமாக விவரித்துச் செல்வர். ஆனால் கவியரசு கண்ணதாசனோ கந்தல் துணியை வைத்து அழகுற விளக்கிச் செல்கிறார்.
மனிதனும் துணியும் ஒன்று. அதன் பிறப்பும் மனிதப் பிறப்பும் ஒத்து வருகின்றது. துணி எவ்வாறு உருவாகிறது என்பதை,
‘‘கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு –சில
கைகள் கனிந்த கனிவு –குடிசை
எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல
இலைகள் இரண்டு வரவு-அதில்
இயற்கை கலந்த அழகு
பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணைப் போலே –அந்தக்
கரிசல் கழனிமேலே –அது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்னக் குழந்தை போலே –அந்த
வண்ணச் செடியின் மேலே!’’
என்று பருத்தி உருவான விதத்தை எடுத்துரைக்கின்றார்.
பருத்தி துணியானது. துணி ஆடையானது. அந்தத் துணி கிழிந்து அடுப்பங்கரைக்கு வந்தது. அவ்வாறு வந்த துணி,
‘‘சலவை செய்து வாசம் போட்டுத்
தங்கம் போல எடுத்து-பின்
அங்கம் பொலிய உடுத்து-தன்
நிலைமை மாறிக் கிழிந்த பின்பு
நிலத்தில் என்னை விடுத்து-சென்றார்
நீண்ட கதை முடித்து’’
என்று தான் வாழ்ந்த வாழ்வை எடுத்துக் கூறுகிறது.
இந்தத் துணியின் நிலைபோன்றதுதான் மனித வாழ்க்கையும். துணி புதிதாக இருக்கும்போது அதனை எவ்வாறு பாதுகாப்போம். எவ்வாறு வைத்துக் கொள்வோம். அது கிழிந்து விட்டால் அதனை நாம் கையாள்கின்ற முறையே வேறு. அதுபோன்று மனிதன் நன்றாக வளமுடன் இருக்கும்போது அவனை அனைவரும் மதித்து வருவர். பொருள் வளம் வீட்டில் குன்றுமாயின் அனைவரும் அவனை விட்டுச் செல்வர். இதுதான் உலக இயல்பு. கவியரசர் கவிதையின் வழி மனித வாழ்வைப் பற்றிய கண்ணோட்டத்தை ,
‘‘சுட்ட சோற்றுப் பானை சட்டி
தூக்கி இறக்க வந்தேன்-என்
தூய உடலைத் தந்தேன்-நிலை
கெட்டுப் போன செல்வர் போலக்
கேள்வியின்றி நின்றேன் –இன்று
கேலி வாழ்க்கை கண்டேன்!
என்று எடுத்துரைக்கின்றார். மனிதர்கள் தம் நிலை தாழ்ந்துவிட்டால் அவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். இதனை உணர்ந்து மக்கள் வாழ வேண்டும் என்ற நீதியை,
‘‘பந்தல் போட்டு மணம் முடித்த
பருவ உடலில் துள்ளி –வாழ்ந்த
பழைய கதையைச் சொல்லி –ஏங்கும்
கந்தல் கதையைக் கேட்ட பின்பும்
காலம் அறிந்து கொள்வீர்! –வாழ்வைக்
காவல் காத்துக் கொள்வீர்!’’
என்று எடுத்துரைக்கின்றார்.
பொருள் இல்லாதவரை உலகம் எப்படியெல்லாம் பார்க்கும்? அவரது நிலை என்ன? அதனை,
‘‘மேனி அழகும் காசு பணமும்
இருக்கும் வரைக்கும் லாபம் – அதை
இழந்துவிட்டால் பாபம்! –பின்
ஞானி போலப் பாடவேண்டும்
நாய்களுக்கும் கோபம் – அதுதான்
நான் படிக்கும் சோகம்’’
என்று நயம்பட எடுத்துரைக்கின்றார் கவிஞர்.
இவ்வுலகில் யாருக்கும் வாழ்வு இல்லையா? என்று எண்ணிவிடுதல் கூடாது. உலகில் பிறந்த ஒவ்வொரு பொருளுக்கும் பயன் உண்டு. அதை மக்கள் உணர்தல் வேண்டும். நிலை தாழ்ந்தாலும், தவறினாலும் தமக்கென்று ஒரு கொள்கையை மக்கள் கைக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கை. கொள்கையின்றி மக்கள் வாழ்தல் வெறுமையான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வியல் தத்துவத்தை,
‘‘கந்தலுக்கும் வாழ்வு வரும்
காலம் என்று உண்டு! –ஒரு
கையளவுத் துண்டு! –மேனிப்
பந்தல் தன்னை மூடிக் கொள்ள
வேண்டும் வேண்டும் என்று –ஏழை
வேண்டி நிற்பான் அன்று
கோவணமாய் ஆன போதும்
கொள்கை எனக்குண்டு – மானக்
கோட்டைக் காப்பதென்று –இன்று
கேவலமாய் ஆன போதும்
கேள்விக்குறி ஒன்று – பதில்
கேட்கிறது நின்று’’
என்று கவிதையாய் வடிக்கின்றார். வாழ்வின் உண்மையை, அதன் உட்பொருளை இவ்வளவு தெளிவுற எவரும் எளிமையாக விளக்கியிருக்க மாட்டார்கள். இது கவியரசு கண்ணதாசனுக்கு மட்டுமே கைவந்த கலையாகும். இதுவே கவியரசரின் கவிதைச் சிறப்புமாகும்.
கண்ணதாசன் தமக்குத் துன்பம் வந்தபோது அழுதார் அரற்றினார். அழுதால் துன்பச் சுமை குறையும் என்பது உளவியலறிஞர்கள் கண்டறிந்த உண்மையாகும். தனக்குள்ளிருக்கும் துயர வெள்ளத்தை வெளியேற்ற இவர் கைக்கெள்ளும் ஒரு நெறி அதைப் பாட்டாக்கி மற்றவர்களையும் அதில் பங்கு கொள்ளச் செயவதுதான் எனலாம். அப்படி மற்றவரோடு துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது இவரது துயர் அழிவது மட்டுமல்லாது, அதன்பின் இவரிடம் பிறக்கும் கவிதைகளில் உற்சாகம் கரை புரள்கிறது.
‘‘என்னை அழவிடு என்னை அழவிடு
அன்னை என்னை அழவே படைத்தாள்
வானம் அழுவது மழையெனும்போது
வையம் அழுவது பனியெனும் போது
கானம் அழுவது கலையெனும் போது
கலைஞன் அழுவது கவிதையாகாதோ?’’
(தொகுதி-3)
என்று தன் அழுகையையே கவிதையாக எண்ணி நம்பிக்கையோடு பாடுகிறார். கண்ணதாசன் அழுவதால் குறை ஏதுமில்லை. மாறாக அழகிய கவிதைகள் பிறக்கின்றன.
கண்ணதாசன் துன்பங்களில் அமிழ்ந்துவிடுகிறார். அழுவது சிறந்த சுகமாக அவருக்குத் தோன்றுகிறது. அவர் பிறப்பிலும் அழுதார். வந்து பிறந்த பின் அழுதார். வாழ்க்கைச் சிறப்பிலும் அழுதார். தன்னிரக்கத்தால் கண்ணீர் சிந்தினார். இந்தக் கண்ணீர்க்கிடையேயும்,
‘‘சாலையில் போவதோ தனிவழிப் பயணம்
சாலையின் முடிவில் சந்திப்பு மரணம்’’(தொகுதி-5)
என்று அழகிய கவிதையைப் படைக்கின்றார். இது கண்ணதாசனின் கவிதையில் மிளிரும் தனிச்சிறப்பாகும்.
துன்பம் அனைவருக்கும் ஏற்படுகிறது. துன்பப்படாத மனிதர்களே இல்லை எனலாம். சராசரி மனிதர்கள் துன்பப்பட்டால் சருகாகக் கசங்கி விடுகிறார்கள். சரித்திரம் படைக்கும் மனிதர்கள் துன்பப்பட்டால் சாதனைகள் படைக்கிறார்கள். கவிஞர்கள் துன்பப்பட்டால் இனிய கவிதைகள் பிறக்கின்றன.
ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் வேதனை வானம்பாடியாகப் பிறந்தது. பாரதியின் வேதனை குயில்பாட்டாகப் பிறந்தது. அதுபோன்றே கவியரசர் கண்ணதாசனின் சோகமும் துன்பமும் சுகமான கவிதைகளை வழங்கியுள்ளன. அவை நம்மை நெகிழ வைப்பதோடு மட்டுமன்றி நினைத்து நினைத்து மகிழவும் வைக்கின்றன.
கண்ணதாசனுடன் அண்ணன் என்று அன்புடன் நெருங்கிப் பழகிய பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம் இளம் வயதில் இறந்துவிடுகிறார். கவியரசருக்குக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவருடன் பழகியதை நினைத்துப் பார்க்கிறார். பட்டுக்கோட்டையாரின் உருவம் கண்முன்னே வந்து நிற்கிறது.
‘‘வெற்றிலையும் வாயும் விளையாடும் வேளையிலே
நெற்றியிலே சிந்தை நிழலோடி நின்றிருக்கும்
கற்றதமிழ் விழியில் கவியாக வந்திருக்கும்
அண்ணே என உரைத்தால் அதிலோர் சுவையிருக்கும்!’’
‘‘கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஓர் பொழுதும்
பொல்லாத காரியங்கள் புரியாத பண்பினனே
வாழும் தமிழ் நாடும் வளர் தமிழும் கலைஞர்களும்
வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்துவரும் நின்பெயரே!’’
என்று பாடுகின்றார்.
கிராமப் புறங்களிலே ஒப்பாரி வைத்தழும் தாய்மார்கள் இறந்தவரின் பெருமைகளை எண்ணி எண்ணிப் பாடுவார்கள். கேட்போரின் நெஞ்சம் இளகி விடும். தன்னையறியாமலேயே கண்ணீர் ஓடி வரும். கவிஞரின் இந்தப் பாடலும் பட்டுக்கோட்டையாரின் வெற்றிலை போடும் பழக்கத்தையும் தம்மை அண்ணே என அழைப்பதையும் நினைவூட்டுகின்றன.
போன உயிர் மீண்டும் வருவதில்லை. தன் உயிரைக் கொடுத்தாலாவது அவர் பிழைப்பார் என்றால் அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார் கவிஞர்.
‘‘தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானோ?
என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்?’’
எங்கினிமேல் காண்போம்? எவர் இனிமேல் புன்னகைப்பார்?
தங்கமகன் போனபின்னர் தமிழுக்கும் கதியிலையே!’’
என்று கண்ணதாசன் கவிதையில் கதறி அழுகின்றார். எளிய சொற்கள் தாம். எல்லார்க்கும் தெரிந்தவைதாம். எனினும் கவிஞரின் கைவண்ணத்தில் அச்சொற்கள் அழகான கவிதையாக உருவெடுக்கின்றன.
பாரதப் பிரதமராயிருந்த ஜவஹர்லால் நேரு இறந்தார். உலகப் பெருந்தலைவர்கள் அனைவரும் உள்ளம் உருகினர். இந்திய மக்கள் என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். தலைவர்கள் தடுமாறினர். நேருவின் பிரிவால் நெஞ்சு பொறுக்காத கவிஞரும்,
‘‘மாதர்கள் அழுத கண்ணீர்
மழைஎனப் பொழிந்த தையா
தூதர்கள் வடித்த கண்ணீர்த்
துளியெல்லாம் வெள்ளம் ஐயா!’’
என்று பாடுகின்றார்.
மாதர்களும் பிறநாட்டுத் தூதர்களும் நேருவின் பிரிவால் அழுத கண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடியதாகக் கவிஞர் கற்பனை செய்திருப்பது நம் உள்ளத்தைத் தொடுகின்றது.
சங்க இலக்கியத்துப் புறநானூற்றுப் பாடலொன்று புலவர் ஒருவரின் சோகத்தைப் பிழிந்து படிப்போரின் இதயத்தைத் தொட்டுவிடுகிறது. ஒல்லையூர் நாட்டினை ஆண்டுவந்த அரசன் சாத்தன். அவன் இறந்ததும் அவனால் பரிசளித்துப் பாராட்டப்பட்ட புலவர் ஒருவர் பாடிய பாடல்அது. எப்போதும் போல் அந்நாட்டிலே முல்லைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. ‘மன்னன் இறந்த சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்த நாட்டு மக்கள் உன்னைச் சூடிக் கொள்ள மாட்டார்களே. முல்லைப்பூவே நீ ஏன் பூத்திருக்கிறாய்? என்னும் பொருள்பட, ‘‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாடே’’ என்று புலவர் பாடினார். அந்தப் புலவரைப் போலவே கவியரசரும்,
‘‘ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் – எங்கள்
ராஜா இல்லையே மார்பினில் சூட’’
என்று நேரு விரும்பி அணிந்த ரோஜாவைப் பார்த்துக் கேட்கிறார். நேருவின் மறைவு கவிஞரின் நெஞ்சை உலுக்கியது. சோகம் ததும்புகிறது. வேகம் பிறக்கிறது. கூற்றுவன் மீது கோபம் கொப்பளிக்க,
‘‘சாவே! உனக்கொருநாள்
சாவு வந்து சேராதோ?’’
என்று கேட்கிறார். அத்துடன் அவர் விட்டுவைக்கவில்லை. நேருவின் பொன்னான உடம்பைச் சுட்டெரித்த நெருப்பை,
‘‘தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ?’’
என்று சாடுகின்றார். மேலும் நம்மையெல்லாம் தேம்பியழ வைத்த தெய்வத்தைப் பார்த்து,
‘‘தெய்வமே உன்னையும் நாம்
தேம்பியழ வையோமோ?’’
என்று கேள்விக் கணை தொடுக்கின்றார். காலனை எட்டி உதைத்த கவிஞரைத்தான் படித்திருக்கிறோம். தீக்கே தீமூட்டவும், தெய்வத்திற்கே சவால் விடவும் நெஞ்சழுத்தம் கொண்ட ஒருவர் உண்டென்றால் உலகிலேயே கவியரசர் கண்ணதாசனாகத்தான் இருக்கமுடியும்.
கவிஞர் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதனால்தான் மிகவும் வேதனையான சூழல்களில் கூட அவரிடமிருந்து அமுதம் போலத் தமிழ்ப் பாடல்கள் பொங்கி வந்திருக்கின்றன. அதைக் கேட்கும் ரசிகர்கள் அவர் நீந்திய அந்த சோக நதியில் தாமும் நீந்துவது போன்ற உணர்வையடைகிறார்கள். “நெஞ்சில் ஓர் ஆலயம்” எனும் படத்திற்காகக் கவிஞர் எழுதிய “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்” எனும் பாடலில் இடம்பெறும்,
“எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது”
என்ற வரிகள் எத்தனை சத்தியமானவை. கவியரசர் பிறந்தது சிறுகூடல்பட்டியில், ஆனால் இந்த உலகை விட்டு மறைந்ததுவோ எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சிக்காகோ நகரில். அவர் எழுதிய வரிகளே அவரது வாழ்விற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ன.
கவிஞரின் இதுபோன்ற எத்தனையோ பாடல்களும் கவித்துவமான கவிதைகளும் ஆண்டுகள் பல ஆனாலும் அனைவருடைய மனதையும் விட்டு அகலாது. என்றென்றும் அவை மக்களின் மனதில் நிலைத்திருக்கும்.
—————
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36
- க. நா. சுவும் நானும்(2)
- சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
- எங்கள் ஊர்
- ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’
- ரகசியத்தின் நாக்குகள்!!!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2
- தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்
- நினைப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.
- எனது குடும்பம்
- ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்
- கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
- குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
- நன்னயம்
- நம்பிக்கை ஒளி! (7)
- அக்னிப்பிரவேசம் -10
- வதம்
- கவிதைகள்
- மணலும், நுரையும்! (4)
- ஒரு கண்ணீர் அஞ்சலி!
- ரசமோ ரசம்
- மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்
- கையெழுத்து
- வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்
- வெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
- “நீள நாக்கு…!”