நட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில் சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது நண்பனைப் ‘பிறன்’ ஆகப் பார்க்கும் மனப்பான்மை காலூன்றுகிறது. நண்பனின் தோல்வியை ஏற்கும் நமக்கு அவன் வெற்றியை சகித்துக்கொள்ள ஆவதில்லை. இது உறவுக்குப்பொருந்தும், ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். பொதுவில் உலகம் இவ்வடிப்படையிலேயே இயங்குகிறது. பாலஸ்தீனியரும், இஸ்ரேலியருக்கும் நடப்பது உண்மையில் ஒருவிதமானப் பங்காளிச் சண்டை. இந்திய இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயும் தொப்புட்கொடி உறவு உண்டு. ஆனாலும் காலம் இன்றைக்கு மற்றுமொரு பாரத யுத்தத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. உலகில் முதல் மனிதன் ஆப்ரிக்கக்கண்டத்துகாரனாக இருப்பான் என்கிறபோது, மனிதர் சமுதாயத்தில் வேரூன்றிப்போன இனம், நிறம் கசப்புகளுக்கு நியாயமே இல்லை. ‘நான்’ ‘எனது’ இவற்றின் நலன்களில் சிரத்தைகொண்டு நீரூற்றி, எருவிட்டு வளர்க்கும் கடமைக்கான மானுட ஜென்மம் எனத் தன்னை வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் மனிதன் நினைத்துக்கொள்கிறான்.
‘ஓ அவரா, தினமும் வேலைக்குச்செல்கிறபோது பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிறேனே எனது நண்பர்தான்! என்கிறோம். அந்த அவருக்கும் இவருக்கும் பேருந்து நிறுத்தத்தில் புன்னகை பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ‘பேஸ்புக்கில்’ என்னோடு இணைந்துகொண்ட 68வது சினேகிதர். என இன்னொரு நண்பருக்கு எழுதுகிறோம். ஆயிரத்தியோரு இரவுகள் கதைகள்போல ஆளுக்கொரு திசையிருந்தாலும் நண்பர்களாக இருக்க முயற்சிக்கிறோம். ‘என்னங்க அவரை உங்களுக்குத் தெரியுமா? தெரியாமல் எப்படி, எனது நண்பர்தான்! என்கிறோம். இரண்டுபேருமே ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர அந்த ‘நண்பர்’ என்ற சொல்லுக்கு வேறுகாரணங்கள் சொல்ல முடியாது. “நான் 1980ல் அண்ணாமலையில் படித்தேன்!” என்பார் ஒருவர். “அப்படியா நான் 1981ல் அண்ணாமலையில் சேர்ந்தேன்”, என்பார் மற்றவர். மூன்றாவது பேர்வழியிடம் இவர்களில் ஒருவர் “நாங்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைகழக நண்பர்கள்” என்பார்: இப்படியும் நண்பர்கள்.
எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்சுக்கு வந்தபோது நடந்தது: ஒரு நண்பர் அவரிடம் புதுச்சேரியில் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம் நினைவிருக்கிறதா? எனக்கேட்டிருக்கிறார். அந்த நண்பருடன் ஒரே வகுப்பில் படித்தது பிரபஞ்சனுக்கு நினைவில்லையென்கிறபோதும் நண்பர் குறிப்பிட்ட தகவல்கள் பொருந்திவந்ததால் ஆமோதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கு நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளில் பாரீஸ் நண்பர் ‘பிரபஞ்சனும் நானும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியிருக்கிறார். பிரபஞ்சன் ஒரு கட்டத்தில் அவரிடம், வானம் வசப்படும் நூலைப்பற்றி ஏதேனும் தெரியுமா? எனது நூல்கள் என்னென்ன உங்களிடமிருக்கின்றன? எனக்கேட்க அந்த நண்பர் அசடு வழிந்தாராம். தங்கர்பச்சான் திரைப்படத்தில் வரும் ஏற்றதாழ்வுகளுக்கிடையேயான நட்புகள் அரவான் திருமணம் போல. அப்துல் கலாம் தம் பள்ளிதொடங்கி கல்லூரி, பல்கலைகழகம் வரை பல ஆசிரியர்களைக் கண்டிருப்பார், அல்லது கடந்து வந்திருப்பார். அவர் வாழ்க்கையில் குறைந்தது நூறு ஆசிரியர்களைப் பார்த்திருக்கக்கூடும். அந்த நூறு ஆசிரியர்களும் ஆளுக்கு ஆயிரம் மாணவர்களையாவது தங்கட் பணியின்போது சந்தித்திருப்பார்கள். தங்கள் வாழ்நாளில் பத்தாயிரம் மானவர்களுக்குக் கல்விபோதித்து சமுதாயத்திடம் ஒப்படைத்திருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டுமே நாட்டின் அதிபராக முடிந்தது. அதற்கு அப்துல்கலாம் காரணமேயன்றி அவர்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் காரணமாக இருக்கமுடியாது. அப்படி ஒன்றிருவர் காரணமாக இருந்தால் அதை அப்துல்கலாமே சொல்லவேண்டும் அல்லது எழுதவேண்டும். அப்போதுதான் அந்த ஆசிரியர்களுக்குப்பெருமை. நட்பும் அப்படிப்பட்டதுதான்.
எழுத்தாளர் காப்காவுக்கும் நண்பர் இருந்தார். பிரபஞ்சனிடம், பதினோராம் வகுப்பில் நீங்கள் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தீர்கள் நான் மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன் எனச் சொல்லிக்கொள்ளும் கொச்சையான நட்பல்ல அது, மனத்தளவில் சீர்மைபெற்ற நட்புவட்டம். காப்காவும் மாக்ஸ் ப்ரோடும் சட்டம் பயிலுகிறபோது நண்பர்களாக இணைந்தவர்கள். அன்றைய செக்கோஸ்லோவோக்யா (இன்றைய செக்) நாட்டில் ஜெர்மன் யூத புத்திஜீவிகள் நட்புவட்டமொன்றிருந்தது. பிராக் நகரில் ஒவ்வொரு நாளும் இந்நண்பர்கள் கூடி அறிவு சார்ந்து தர்கிப்பதுண்டு. காப்காவுக்கும், ப்ரோடுவிற்கு மிடையில் ஒளிவுமறைவில்லை அத்தனை நெருக்கம். ஒன்றாகவேப் பயணம் செய்தனர். குடிக்கச்சென்றாலும் கூத்திவீட்டிற்குப்போனாலும் ஒற்றுமை. ‘உருமாற்றம்’ 1915ல் வெளிவந்திருந்தபோதும் காப்காவை அப்போது பெரிதாக யாரும் கொண்டாட இல்லை, எழுத்தாளருக்குத் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையும் இருந்திருக்கிறது. பழகிய சில நாட்களிலேயே மாக்ஸ் ப்ரோடுவிற்கு தம் நண்பர் காப்காவின் எழுத்தில், ஞானத்தில் அபார நம்பிக்கை. காப்காவிற்கு யூத சமயத்தின்மீது நண்பரால் மிகுந்த பற்றுதலும் உருவாகிறது. ஒருநேரத்தில் டெல்-அவிவ் சென்று ஒரு சிறிய உணவு விடுதியொன்றை திறக்கும் மனப்பான்மையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். 1917ம் ஆண்டு தமக்கு காசநோய் இருக்கும் உண்மை எழுத்தாளருக்குத் தெரியவருகிறது. ‘அன்புள்ள மாக்ஸ்’ எனத் தொடங்கி காப்கா தமக்குப் பீடித்துள்ள நோய்பற்றிய உண்மையைக் கடிதத்தின்மூலம் நண்பருக்குத் தெரிவிக்கிறார். சிகிச்சைக்காக காசநோய் மருந்துவ இல்லமொன்றில் அனுமதிக்கப்பட்டபோதும் காப்கா தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களை நிறுத்தியதில்லை. அவ்வாறு எழுதிய கடிதங்கள் பலவும் மாக்ஸ¤டமிருந்தன. அவற்றைத் தவிர காப்காவின் பிரசுரம் ஆகாத படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளும் ஏராளமாக இருந்தன. காப்கா தமது இறப்பிற்குப்பிறகு அவற்றை எரித்துவிட சொல்லியிருக்கிறார். மாக்ஸ் அவற்றை பிரசுரிக்கத் தீர்மானித்தார். காப்காவின் விருப்பத்தை நிறைவேற்றியிருந்தால் நமக்கு The Castle (novel), Amerika (novel), The Trial (novel) கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மாக்ஸ் தன் நண்பருடைய விருப்பத்திற்கு மாறாக அவற்றைப் பிரசுரம் செய்தது துரோகமில்லையா என்றகேள்விக்கு, இலக்கிய கர்த்தாக்களில் பலர் துரோகமில்லை என்கிறார்கள். காப்காவிற்கு மாக்ஸ் ப்ரோடு என்ன செய்வாரென்று தெரியும் அதனாற்தான் கொடுத்தார் என்கிறார்கள்.
1939 ஆண்டு நாஜிகள் பிராக் நகரைக் கைப்பற்றுகிறார்கள். தமது மனைவி எல்ஸாவுடன் ஒரு ரயிலைப்பிடித்து எங்கெங்கோ அலைந்து இறுதியில் டெல் அவிவ் நகரை அடைந்து மாக்ஸ் ப்ரோடு வாழ்க்கையைத் தொடங்குகிறார். கொண்டுவந்த பெட்டியில் மாக்ஸ் ப்ரோடுவின் எழுத்துக்களன்றி அவர் நண்பருடைய எழுத்துக்களும் கையெழுத்துப் பிரதிகளாக ஆயிரக்கணக்கிலிருந்தன. மூன்றாண்டுகளில் ·ப்ரோடுவின் மனைவி இறக்கிறார். டெல் அவிவ் நகரில் பிராக் நகர இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்திக்கிறார். மீண்டும் இலக்கிய வட்டம் உருவாகிறது. அப்போதுதான் செக் நாட்டிலிருந்து வந்திருந்த ஹோப் தம்பதியினரின் அறிமுகமும் ப்ரோடுவிற்குக் கிடைக்கிறது. திருவாளர் ஹோப்பின் மனைவி எஸ்த்தெர் மாக்ஸ் ப்ரோடுவின் நட்பு வேறுவகையில் திரும்புகிறது. எஸ்த்தெர் தற்போது ப்ரோடுவின் அந்தரங்கக் காரியதரிசி. முழுக்க முழுக்க ப்ரோடுவின் கடிவாளம் இந்த அம்மாளின் கைக்குப்போகிறது. நெருங்கிய நண்பர்கள் சந்திப்பதென்றாலுங்கூட அம்மணியின் தயவு வேண்டும். இறுதிக்காலத்தில் மாக்ஸ் ப்ரோடு தம்கைவசமிருந்த அவ்வளவு கையெழுத்துப் பிரதிகளையும் அரசாங்க நூலகத்திடம் ஒப்படைக்க இருந்ததாக டெல் அவிவ் நகர இலக்கிய வட்ட நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது நடைபெற இல்லை. மாக்ஸ் ப்ரோடு இறந்த உடன் எஸ்த்தெர் ஆவணங்களைத் தாமே வைத்துக்கொள்வதெனத் தீர்மானிக்கிறார். கேட்கிறவர்களிடம் “எங்க முதலாளி கடைசிகாலத்தில் சில ஆவணங்களை என்னிடம் கொடுத்திருக்கிறார்”, என ஒப்புக்கொள்கிறார். 1961 தேதியிட்ட உயிலொன்று ஆவணங்கள் குறித்து பேசுகிறது. இறப்பிற்குப் பிறகு மாக்ஸ் ப்ரோடு வசமிருந்த கையெழுத்து பிரதிகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கோ அல்லது அதுபோன்ற வேறு அமைப்பிற்கோ கொடுக்கப்படவேண்டுமென்று எழுதப்பட்டுள்ள உயிலில் தெளிவில்லை என்கிறார்கள். தவிர அதுபற்றிய இறுதி முடிவு அப்பெண்மணியின் விருப்பம் சார்ந்ததாம். காப்காவும் அவர் நண்பர் மாக்ஸ் ப்ரொடுவும் யூதர்கள் என்பதால் இருவருடைய எழுத்தும் இஸ்ரேலுக்குச் சொந்தமென வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஸ்வெய்க் போன்ற யூத அறிவு ஜீவிகளின் ஆவணங்கள் தங்கள்வசமிருப்பதைக் கூறி தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் தேசிய நூலகம் மேற்கண்ட தர்க்கத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் பின்புலத்துடன் உரிமைகோரி வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 1974ல் இஸ்ரேலிய நீதிமன்றத்தின் முதற்தீர்ப்பு எஸ்த்தெருக்குச் சாதகமாக அமைந்தது. பெண்மணிக்குக் காலப்போக்கில் காப்காவின் எழுத்துக்கள் பொன்முட்டையிடும் வாத்து என்று தெரியவர வேண்டுமென்கிறபோதெல்லாம் விற்க ஆரம்பித்தார். 1970ல் காப்காவின் பல கடிதங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. 1988ம் ஆண்டு The Trial நூலின் மூலப் பிரதி ஜெர்மன் இலக்கிய ஆவணக்காப்பகம் 2 மில்லியன் டாலரைக்கொடுத்து உரிமம் பெற்றது.
எஸ்த்தெர் ஜூரிச்சில் வங்கிப் பெட்டமொன்றிலும், டெல்-அவிவ் நகரில் ஆறு வங்கிப்பெட்டங்களிலும் போக சிலவற்றை வீட்டில் ஒரு பெட்டியில் பூட்டி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். எஸ்த்தெருக்கு இரண்டு பெண்கள் ஒருத்தி பெயர் ரூத் மற்றொருத்தி பெயர் ஏவா. இளைய மகள் ஏவா விமானப்பணிப்பெண், மணம் புரியாமல் தாய்க்குத் துணையாக இருந்துவந்தாள். 2007ல் 101 வயதில் எஸ்த்தெர் இறந்த பிறகு அவருடைய மகள்களுக்கிடையில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்திற்குப்போக, இஸ்ரேலிய தேசிய நூலகமும் தன்பங்கிற்கு முன்புபோலவே உரிமைகோரியது. ரூத் இஸ்ரேல் அரசாங்கத்துடன் சமாதனாமாகப்போக நேர்ந்தாலும் ஏவா விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. 2012 மேமாதத்தில் ரூத் என்பவளும் இறந்துவிட்டாள். இப்போது ஏவா மட்டுமே தனி ஒருவளாக கையெழுத்துப்பிரதிகளைப் பூதம் காப்பது போல காத்துவருகிறாள். கடந்த அக்டோபர் மாதம் (2012) 12ந்தேதி வந்துள்ள தீர்ப்பு இஸ்ரேலிய தேசிய நூலகத்திற்கு ஆதரவாக இருக்கிறது. ஏவா மேல் முறையீடு செய்யவிருப்பதாகக் கூறுகிறார்கள். இம்முறை நீதிமன்றம் ஓர் அதிகாரியை நியமித்து ஜூரிச், டெல் அவிவ் வங்கிப்பெட்டகங்களை சோதனையிட்டு முறையாக அவற்றின் விவரத்தை பதிவுசெய்ய வேண்டுமென கட்டளைபிறப்பித்திருக்கிறது. ஜூரிச் பெட்டகத்தைப்பரிசோதிக்க நான்கு நாட்களும், டெல் அவிவ் பெட்டகத்தைத் சோதனையிட 6 நாட்களும் தேவைபட்டனவாம். ஏவா வீட்டிற்குள் நுழைய மிகவும் தயங்குகிறார் நீதிமன்ற அதிகாரி. அங்கே ஆவணங்களோடு ஏவா வளர்க்கும் ஐப்பதுக்கும் மேற்பட்ட பூனைகள் இருக்கின்றனவாம். உருமாற்றம் எழுதிய காப்காவும் அவர் நண்பரும் ஐம்பதில் இரண்டு பூனைகளாக்கூட இருக்கலாமென்பது எனக்குள்ள ஐயம். ஒரு புறம் இஸ்ரேல் அரசாங்கமும் இன்னொரு புறம் எஸ்த்தெர் குடும்பமும் காப்கா, மாக்ஸ் புரோடுவின் கையெழுத்துப்பிரதிகளுக்கு உரிமைகோரி வழக்காடிக்கொண்டிருக்க, உண்மையில் அவற்றுக்கு உரிமைகோரவேண்டிய செக் நாடு அசாதரண மௌனம் காப்பது இன்னொரு புதிர்.
காப்காவுக்கு நண்பர் மாக்ஸ் புரோடு இழைத்தது நன்மையா? தீமையா? ஒரு பட்டிமன்றத்திற்கான தலைப்பு.
——————-
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36
- க. நா. சுவும் நானும்(2)
- சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
- எங்கள் ஊர்
- ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’
- ரகசியத்தின் நாக்குகள்!!!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2
- தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்
- நினைப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.
- எனது குடும்பம்
- ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்
- கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
- குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
- நன்னயம்
- நம்பிக்கை ஒளி! (7)
- அக்னிப்பிரவேசம் -10
- வதம்
- கவிதைகள்
- மணலும், நுரையும்! (4)
- ஒரு கண்ணீர் அஞ்சலி!
- ரசமோ ரசம்
- மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்
- கையெழுத்து
- வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்
- வெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
- “நீள நாக்கு…!”