பொன்மலை ரயில்வே ஸ்டேஷனின் மேற்குப் புறத்தில் குறுக்கில் கிடக்கும் தண்டவாளங்களைத் தாண்டி வகிடெடுத்த மாதிரி போகும் ஒத்தையடிப் பாதையில் நடந்தால், கால் மணி நேரத்தில் சங்கிலியாண்டபுரம் போய்விடலாம். அந்தச் சங்கிலியாண்டபுரத்தில்தான், என்னோடு கொஞ்ச நாள் ஸ்கூலிலும் பின் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருக்கும் இருதயராஜ் மார்க்கின் வீடு இருக்கிறது. நான் இதுவரை அவன் வீட்டிற்குப் போனதில்லை. அவன் அப்பா ஒரு முசுடு என்றும் வீட்டில் இருப்பவர்களும் எப்போதும் தொணதொணப்புதான் என்று அவன் ஏற்கனவே சொல்லியிருந்ததால் நான் அங்கு போனதில்லை. மேலும், ரயில்வே லைனைத் தாண்டிப் போவதற்கும் எனக்குப் பயம். காரணம், என் சின்ன வயதில் நாங்கள் வளர்த்த லக்ஷ்மி என்ற மாடுகளுக்கே உரித்தான வழக்கமான பேருடைய ஒரு ஜீவனை இப்படி லைனைத் தாண்டிப் போகும்போது திருவாரூரிலிருந்து படுவேகமாய் முப்பது கிகிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஜப்பான் வண்டி நாங்கள் வாஞ்சையாய் அழைத்துவந்த பாசஞ்சர் அடித்துக் காலை ஒடித்துப் போட்டதுதான். இருந்தாலும், நான் இப்போது ரயில்வே லைனைத் தாண்டியாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
என்னுடைய நோட்டு ஒன்று என் நண்பன் மார்க்கிடம் மாட்டிக்கொண்டிருந்தது. அவன் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு, சினிமாவிற்குப் போன நாளில் எங்கள் கணக்கு லெக்சரர் சொல்லிக்கொடுத்தக் கணக்குக் கட்டாயம் பரீட்சைக்கு வரும் என்று எல்லோரும் யூகித்துச் சொன்னதால் அவன் நோட்டை வாங்கிக்கொண்டு போய் ஏறத்தாழ இருபது நாளாகியும் கொடுக்காததால், அதை வாங்கிவரத்தான் நான் போயாக வேண்டியிருந்தது. இவனுக்கு யார் ‘ மார்க் ‘ என்ர பெயரை வைத்தார்கள் என்று தெரியவில்லை. கறுப்பாக மழமழவென்று இருக்கும் இவனுக்கு எஸ்.எஸ்.எல்.சி புக்கில் குறிக்க உடம்பில் ஒரு ஐடெண்டிஃபிகேஷன் மார்க் கூட இல்லாமலிருந்ததால், அந்தப் பணியைச் செய்துகொண்டிருந்த பி.டி. ஆசிரியர் நெல்சன், இவன் ஏதோ உடம்பிற்கு சந்தனம் தடவிக்கொடுக்கும் காட்டு அழகிகளிடம் கவுண்டமணி தன் உடம்பை ‘ இங்கே அங்கே ‘ என்று கோணலாக்கிக் காட்டிக்கொண்டிருந்தது போல வளைந்து நின்றபோது, ” எலேய் ! சப்ஜெக்ட்ல மார்க் வாங்கத்தான் ஒனக்குத் துப்பு இல்ல ! ஒடம்புல கூடவா இப்படி ஒரு மார்க்கும் இல்லாம இருப்பே ” என்று சலித்துக்கொள்ளும் அளவிற்கு இருந்தவன்.
ஒரு வழியாக அவன் வீட்டைக் கண்டுபிடித்து கதவை மெதுவாகத் தட்டிவிட்டுக் காத்திருந்தேன். அது ஒரு மத்யான நேரம் என்பதால் கொஞ்சம் அசதியாகப் படுத்திருந்தால் எழுந்துவர நேரம் ஆகும் என்பதால் ஒரு நிமிடம் காத்திருந்தேன். யாரும் வராததால், மீண்டும் கதவைக் கொஞ்சம் அழுத்தித் தட்டிவிட்டுக் காத்திருந்தேன். அப்போதும் யாரும் வராததால், மீண்டும் ” மார்க்..” என்று முதலில் மெதுவாகவும் பின் கொஞ்சம் சத்தமாகவும் கூப்பிட்டுக்கொண்டே கதவைத் தட்டினேன். யாரும் வர வாய்ப்பில்லை, சரி கிளம்பலாம் என்று திரும்பும்போது கதவின் தாழ்ப்பாளைத் திறக்கும் சப்தம்கேட்டு நின்றேன். கதவைத் திறந்த பெண்மணி, முகத்தில் கலைந்து விழுந்திருந்த தலைமுடியை தன் ஈரக்கையால் ஒதுக்கிவிட்டுக் கொண்டே கண்களில் கேள்விக்குறியோடு, ” யார் வேணும் ? ” என்றாள்.
” மார்க் இருக்கானா?” என்று கேட்டேன்.
” இல்லை. நீங்க யாரு ?” என்றாள்.
நான் கேட்டிருக்க வேண்டிய கேள்வி.
” நான் அவருடைய ஃப்ரெண்ட். எங்க போயிருக்காரு ?” என்றேன்.
அவள் , ” தெரியலயே ” என்று சொல்லி முடிக்கும் முன்னரே, உள்ளிருந்து , ” யாரது ? உள்ளே வரச்சொல்லு ” என்று இன்னொரு பெண் குரல் கேட்டது.
இது முதிர்ந்த குரலாயிருந்தது. குரலில் வயதானதின் நடுக்கம் இருந்தாலும் அதிகாரம் இருந்தது.
வாசலில் நின்று என்னை விசாரித்துக்கொண்டிருந்த பெண் எனக்கு வழிவிடுவதாகவும் உள்ளே சென்று விட்டுவிட்டு வந்த வேலையைத் தொடர்வதற்காகவும் செல்லும்போது, தேவையில்லாமல் மாடெலிங்க் செய்பவள்போல் இடுப்பையும் பின்புறத்தையும் அளவிற்கதிகமாக அசைத்துச் சென்றாள்.
நான் வாசலிலேயே என் செருப்பைக் காலிலிருந்து விடுவித்து விட்டுத் தயங்கித் தயங்கி வராண்டாவைத் தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தேன். பெரிய ஹால். உள்ளே யாருமே இல்லாதிருப்பதுபோல் பட்டது. மெர்ரி பிங்கில் டிஸ்டெம்பர் அடிக்கப்பட்டு ஒரு பக்கத்துச் சுவரில் பெரிதும் சிறிதுமாய் நிறைய ஃபோட்டோக்கள் மாட்டப் பட்டிருந்தன. எல்லாம் பழைய ஃபோட்டோக்கள். நிறைய படங்கள் கல்யாணம் முடிந்தவுடன் எடுக்கப்பட்ட படங்கள் என்பது படத்திலிருந்தவர்களின் புதுக்கருக்கிலிருந்து தெரிந்தது. இரண்டு மூன்று குழந்தைகளின் ஃபோட்டோக்களும் இருந்தன. ஜட்டி போட்டுக்கொண்டும், ஜட்டி போடாமலும் இருந்த படங்களில் குழந்தைகள் ஒரேவிதமான நகைகள் போட்டுக்கொண்டிருந்தன. சிரித்துக்கொண்டோ அல்லது அழ ஆரம்பிக்க இருக்கும்போதோ எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள். என் நண்பன் மார்க்கின் ஃபோட்டோவும் அதில் இருக்கும் எனவும் ஜட்டி போடாமல் இருக்கும் குழந்தை அவனாகத்தான் இருக்கும் எனக்குத் தோன்றியது.
அதற்கு எதிர்த்தாற்போல் இருந்த சுவற்றின் நடுவில் கொஞ்சம் பெரிய சைஸ் ஏசு நாதர் படம் ஒன்று தங்க ஃப்ரேம் போட்டு மாட்டியிருந்தது. சோகமும் இல்லாமல் ஆனந்தமும் இல்லாமல் ஒருவிதமான நடு நிலையில் பளீர்க் கண்களுடன் அவர் மேலிருந்து கீழ் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் மேல், துளசி மாலை போன்ற ஒரு மாலையின் கடைசியில் சிலுவை தொங்கிக் கொண்டிருக்க , படத்தின் கீழ் நன்றாகப் பாலிஷ் செய்யப்பட்ட தேக்கு மரத்தினாலான தட்டின் மேல் பளபளக்கும் பித்தளையில் ஒரு மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் கடவுளின் கருணையைத் தாங்கி உருகி உறைந்திருந்தது.
ஹாலின் இடது ஓரத்தைப் பிளந்துகொண்டு ஓடிய தாழ்வாரம் போன்ற அமைப்பிலிருந்த பாய்ந்துகொண்டிருந்த வெளிச்சத்தில் கால்களை அரக்கி அரக்கி நடந்து சென்ற பெண்மணி என்னை இங்கு விட்டுவிட்டு எங்கு சென்றிருப்பாள் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே கண்களை இடதுபுறம் திருப்பியபோது யாரோ ஒரு கட்டிலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அந்தப் பெண்ணை எங்கே என்று நான் தேடியதை கட்டிலில் உட்கார்ந்திருந்தவர் பார்த்திருப்பாரோ எனப் பயந்து என் குரல் எனக்கே கேட்காவண்ணம் ” மார்க் இல்லையா ? ” என்று கேட்டதை ” என்னது ? ” என்ற பெண்மை தடவிய தடித்த அதட்டலுக்குப்பின் இன்னொருமுறை கேட்டேன்.
” நீ யார் ? ” என்று முன்கேட்ட அதிகாரக்குரல் மீண்டும் பதில் கேள்வியாக அந்த மெலிந்த தேகத்திலிருந்து எழுந்தது.
” நான் மார்க்கின் க்ளாஸ்மேட். ரெண்டு பேரும் பிஷப் ஹீபர் காலேஜில பியூசி ஒரே க்ளாஸ் ” என்றேன்.
” எப்பப் பாரு பணம் வேணும்னு வாங்கிக்கிட்டுப் போறானே, என்ன பண்றான் பணத்தை. நீயும் அவனும்தான் சேர்ந்து சுத்தறீங்களா?” என்று கேட்டாள் அந்த முதியவள்.
முதன்முதலில் வீட்டுக்கு வருபவனிடம் , அதுவும் எந்த அறிமுகமும் இல்லாதவனிடம் எப்படி இந்த மாதிரிக் கேள்வியை கேட்கமுடிகிறது இந்த முதியவளால் ? இதற்கு என்ன பதில் சொல்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே,
” என்ன அவங்கிட்ட பணம் வாங்கிட்டுப்போக வந்திருக்கியா ? ” என்று கேட்டாள் அந்த முதியவள்.
” இல்ல. நோட்டு வாங்கிட்டுப் போக வந்திருக்கேன். ” என்று சொன்னபின் ‘ யார் நோட்டு ‘ என்று கேட்டுவிடுவாளோ என் எண்ணி, ” என்னோட நோட்டுதான் ” என்றேன்.
” இதுவா பாரு ” என்று என்று தன்னைச் சுற்றிப் போர்த்தியிருந்த மெல்லிய போர்வையை விலக்கி, இடது கையால் பக்கத்திலிருந்த மேஜையில் இருந்து ஒரு நோட்டை எடுத்து என்னிடம் நீட்டினாள். அவள் அதை எடுக்கும்போதே தெரிந்துவிட்டது அது என்னுடைய நோட்டுதான் என்று. நான் அதை நடுங்கியவாறு வாங்கிகொண்டே ,
” ஆமாம் ! இது என்னோடதுதான் ” என்றேன்.
பின் என்னை மிக ஆழமாகப் பார்த்துவிட்டு, வீட்டின் பின்பக்கம் பார்வையைச் செலுத்தி,
” மேரி! இவனுக்கு டீ போட்டுக்கொண்டு வா” என்று ஆணையிட்டாள்.
நான் எனக்கு டீ வேண்டாம் ; கிளம்புகிறேன் என்று சொன்னதைப் பொருட்படுத்தாது,
” சீக்கிரம் டீ போட்டுக்கொண்டு வா, மேரி ” என்றாள்.
பின் என்னைப் பார்த்து , ” இது என்ன கையெழுத்தா ” என்று நான் நோட்டைத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தபோது கேட்டாள்.
எனக்கு அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என் கையெழுத்து மோசம்தான். தொடக்கப் பள்ளியிலிருந்து என் கையெழுத்தைத் திருத்த என் ஆசிரியைகள் மேற்கொண்ட முயற்சி பெரும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. நான் எழுதும் பதில் சுமாராகச் சரியாய் இருந்ததாலேயே எனக்கு மதிப்பெண் அளித்து கௌரவமாய் மேல்வகுப்பிற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஆங்கில டீச்சர் என்றழைக்கப்பட்ட ஃப்ளோரா டீச்சர் மாத்திரம் கையெழுத்திற்காக என்னைத் திட்டாத நாளே இல்லை எனலாம். ” நாளையிலிருந்து ஒழுங்கா ஹேண்ட் ரைட்டிங்க் நோட் புக்ல பத்துபக்கம் எளுதிட்டு வராட்டி க்ளாசுக்கு வெளியில முட்டிபோட வேண்டியதுதான் ” என்று தினமும் மிரட்டுவார்களேயே அன்றி வேறு ஒன்றும் செய்தது கிடையாது. ஆனால் என்ன, அந்த டீச்சர் வீட்டில் மளிகை சாமான் மற்றும் ரேஷன் கடைக்குப் போய் சக்கரை வாங்குதல் எல்லாம் நான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.
” என்ன கேட்டதுக்குப் பதில் சொல்லாம என்னமோ யோசிச்சிக்கிட்டு இருக்கே ?” என்றாள் அந்த மூதாட்டி.
என்னடா இது இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று இருந்தது. இந்த மார்க் எங்கு தொலைந்து போனான்? எப்போது வந்து என்னைக் காப்பாற்றுவான்? இந்த கிழவி என்ன ஸ்கூல்ல டீச்சரா ஏதாவது இருந்திருக்குமோ எனச் சந்தேகமாய் அவளைப் பார்க்கும்போது அவள் என்னிடம்,
” என்னோட க்ளாசில யாருக்காவது இப்படி கோழி கிறுக்கற மாதிரி கையெழுத்து இருந்துதுன்னா என்ன செய்வேன் தெரியுமில்லே ? ” என்று பதிலுக்காக என்னைப் பார்த்தாள்.
” கையைப் பின்னாடித் திருப்பி, முட்டியிலயே பெரம்பாலப் போடுவேன் ” என்றாள்.
நான் கைகளைப் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டுக்கொண்டேன். கிழவி இந்த வயசிலேயே இவ்வளவு சவுண்டு விட்டால் வயசுக்காலத்தில் என்ன செய்திருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே,
” எத்தன பேரோட கை முட்டிய பேத்துருக்கேன் தெரியுமில்லே ? ” என்று கண்களை இடுக்கிக்கொண்டு கேட்டாள். இதுக்கெல்லாம் யாராவது ஸ்டாட்டிஸ்டிக் வைத்திருப்பார்களா என்று தோன்றியது. ” பத்து நாள்ல கையெழுத்த சரி பண்ணிக்காட்டி பசங்க என்னதான் சரியா பதில் எழுதினாலும் முட்டை மார்க்தான் போடுவேன் . அதோட மாத்திரம் இல்ல. ஒரோரு நாளைக்கும் ஒரோரு விரல்ல மொளகாப் பொடியைத் தடவி உருண்டைப் பெரம்பால அடிப்பேன். எல்லாம் ஒரு மாசத்தில சரியாயிடும் என்று உடம்பு வியாதிக்கு மருந்து கொடுக்கிற டாக்டர் மாதிரி சொல்லி என்னைக் குலை நடுங்க வைத்தாள்.
அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே மேரி அவளது ரேம்ப் வாக்கிங்க் ஸ்டைலில் என்ட்ரி கொடுத்து டீயை வைத்துவிட்டுப் போனாள். எனக்கு உட்ம்பு முழுக்க இப்போது எரிவதுபோல இருந்தது. டீயை குடிப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை. அதிலும் மிளகாய்ப் பொடியைப் போடச்சொல்லியிருப்பாளோ என்னவோ என்று சந்தேகமாய் இருந்தது.
” டீயை குடி! ஆறிடப் போவுது ” என்றபின் டீயை ஒரே மடக்கில் குடித்து முடித்தேன். என்னுடைய நோட்டை எடுத்துக்கொண்டு ” நான் போய்ட்டு.. ” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் நண்பன் மார்க் வந்துவிட்டான்.
” வாடா! எப்ப வந்தே ? ” என்று கேட்டுக்கொண்டே நான் குடித்துவிட்டு வைத்திருந்த டீ டம்ப்ளரைப் பார்த்துவிட்டு, ” ரொம்ப நேரம் ஆச்சா? ” என்றான் . நான் கட்டிலில் இதுவரை உட்கார்ந்திருந்த கிழவி இப்போது சாய்ந்துகொள்வதைப் பார்த்தேன்.
” என்ன , பாட்டி ரொம்ப போட்டுத் தள்ளிட்டாங்களா ? ” என்று கேட்டான். நான் ஒன்றும் சொல்லாது அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்.
சரி வா ! போகலாம் ” என்று என்னுடன் கிளம்பினான்.
உடனேயே அந்த மூதாட்டி, ” அப்பா மார்க்! இந்த மாசம் பென்ஷன் வாங்கறதுக்கு லைஃப் செர்டிஃபிகேட் கொடுக்கணும்டா! கொஞ்சம் இந்த ஃபார்ம்ல டீடைல்ஸ்லாம் எழுதிக்கொடுடா ” என்று கெஞ்சுகிற மாதிரி கேட்டாள். அவள் குரலே இப்போது வித்தியாசமாய் இருந்தது.
” சரி சரி , ஃபார்ம் எங்க வச்சிருக்க ? ” என்று கேட்ட போது அந்தக் கிழவி இடது கையால் மேஜை மீதிருந்த ஒரு தாளை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
மார்க் , அவளின் பென்ஷன் புக்கைப் பார்த்து வேண்டிய தகவல்களை எழுதிக்கொண்ட பின், அந்தக் கிழவியின் மேல் போர்த்தியிருந்த மெல்லிய துணியை விலக்கி, தளர்ந்து தொங்கிக் கொண்டிருந்த வலது கையை இழுத்துக் கட்டை விரலை ஸ்டாம்ப் அட்டையில் அழுத்தி, கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில் இருந்த புள்ளிகளுக்கு மேல் அந்த மூதாட்டியின் ரேகையை வைத்தான்.
— ரமணி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36
- க. நா. சுவும் நானும்(2)
- சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
- எங்கள் ஊர்
- ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’
- ரகசியத்தின் நாக்குகள்!!!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2
- தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்
- நினைப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.
- எனது குடும்பம்
- ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்
- கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
- குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
- நன்னயம்
- நம்பிக்கை ஒளி! (7)
- அக்னிப்பிரவேசம் -10
- வதம்
- கவிதைகள்
- மணலும், நுரையும்! (4)
- ஒரு கண்ணீர் அஞ்சலி!
- ரசமோ ரசம்
- மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்
- கையெழுத்து
- வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்
- வெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
- “நீள நாக்கு…!”